Deepa Babu's Yennai Theriyuma 31

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Deepa Babu

Author
Author
Joined
Feb 18, 2021
Messages
1,273
Reaction score
3,340
Points
113
Location
salem
YT Front cover.jpg

அத்தியாயம் 31

திலக்கின் சரீரத்தில் அடுத்தடுத்து பிரபாகரனின் சற்றே அழுத்தம் கூடிய அறைகள் விழவும் அவனுடைய நினைவுகள் மெல்ல மெல்ல கடந்த காலத்தில் இருந்து மீள ஆரம்பித்தது.

"ஆகாஷ்... ரிலாக்ஸ்... மெதுவாக... ஒன்றுமில்லை... ரிலாக்ஸ்... ரிலாக்ஸ்... ஜஸ்ட் நீ தூங்கிக் கொண்டிருக்கிறாய். அவ்வளவு தான்... ரிலாக்ஸ்... ஓகே... நீ அமைதியாக தூங்கு... ரிலாக்ஸ்..." என்று அடுத்து திலக்கின் தலையை மென்மையாக வருடியபடி பிரபாகர் அவனை அமைதிப்படுத்த முயல, அவனுடைய சிந்தையிலும் அது பதிந்து உடல் சீரான உறக்கத்தில் இருப்பது போல் நெஞ்சுக்கூடு மெதுவாக ஏறி இறங்க ஆரம்பித்தது.

திலக் ஆழ்ந்த உறக்கத்தில் தான் இருக்கிறான் என்பதை ஒருமுறை நிச்சயப்படுத்திக் கொண்ட பிரபாகரன் அந்த அறையை விட்டு வெளியே வந்து கதவை தாளிட்டான்.

அதுவரை முன்னறையில் டென்ஷனாக நடைப்பயின்றுக் கொண்டிருந்த ஜெய்சங்கர் வேகமாக அவனிடம் வந்தான்.

"என்ன சார்? என்னவாயிற்று? திலக்கிற்கு என்ன பிரச்சினை... அவன் ஏன் என்னிடம் அவ்வாறு எல்லாம் கோபமாக நடந்துக் கொள்கிறான்? ஏதாவது சொன்னானா இல்லையா... ஆமாம்... அவனை ஏன் உள்ளே வைத்து கதவை தாழிடுகிறீர்கள்?" என்று திகைத்து கதவை திறக்கப் போனவனின் கரம்பற்றி வேறுபக்கம் இழுத்து வந்தான் பிரபு.

"ஷ்... ஜெய்... என்ன செய்கிறீர்கள்? நான் ஒரு மருத்துவன், நீங்கள் அவனை என்னிடம் சிகிச்சைக்கு அழைத்து வந்திருக்கிறீர்கள் என்பது உங்களுக்கு மறந்துவிட்டதா என்ன?" என்று லேசாக அதட்டினான்.

"இல்லை... அது... அவன்... சாரி!" என்றவன் தடுமாற, "ரிலாக்ஸ்... ஒன்றும் பெரிய பிரச்சனை இல்லை, எல்லாம் தீர்க்க கூடிய விஷயம் தான். இப்படி உட்காருங்கள், நாம் கொஞ்சம் நிதானமாகப் பேச வேண்டும். ஏதாவது சூடாக குடிக்கிறீர்களா? கொஞ்சம் டென்ஷன் குறையும்!"

"இல்லை வேண்டாம்... தாங்க்ஸ், நீங்கள் சொல்லுங்கள். திலக்கிற்கு என்ன பிரச்சினை? நீங்கள் சொன்னதுப் போல் பயப்படுவதற்கு ஒன்றுமில்லை தானே!" என்று சோபாவின் நுனிக்கு வந்து முள்ளின் மேல் அமர்ந்து கேள்வியெழுப்புவன் போன்று தன்னெதிரே தவிப்புடன் அமர்ந்திருப்பவனை கண்டு ஒரு நொடி பிரபுவிற்கு பரிதாபமாக இருந்தது.

மெல்லிய பெருமூச்சொன்றை வெளியேற்றியவன், "இன்பேக்ட் ஜெய்... உங்களிடம் பூசிமெழுக வேண்டிய அவசியம் இல்லை என்று நான் நினைக்கிறேன். நீங்கள் துணிவுமிக்கவர், இப்பொழுது உள்ள சூழ்நிலையை தெளிவாக விளக்கிச் சொன்னால் அதை சரியாக புரிந்துக்கொண்டு அடுத்தக்கட்ட நடவடிக்கைகளை துரிதமாக மேற்கொள்வீர்கள் என நம்பி உங்களிடம் விஷயத்தை கூறுகிறேன்!" என்றவன் பீடிகைப் போடவும் ஜெய்யின் முகம் கலவரமாக மாறியது.

'இவர் ஆரம்பத்தில் ஒன்றுமில்லை என சாதாரணமாக சொல்லிவிட்டு இப்பொழுது பலமாக பீடிகை போடுவதை பார்த்தால், திலக்கிற்கு எதுவும் பெரிய பிரச்சினையோ... எதுவாக இருந்தாலும் சரி, நம் முயற்சியால் அதை சரிசெய்து தான் ஆக வேண்டும்!' என்று முதலில் அச்சத்துடன் குழம்பியவன் பின் தெளிவுடன் நேராக நிமிர்ந்து அமர்ந்தான்.

"ம்... சொல்லுங்கள் டாக்டர்!" என்றவனின் குரலில் இருந்த தெளிவு பிரபுவிற்கு நம்பிக்கையை தர, சிகிச்சையின் பொழுது என்ன நடந்தது என்பதை அவனுக்கு எடுத்துரைக்க முயன்றான்.

"ஆக்ட்சுவலி... நாம் எதிர்பார்த்ததை விட மிகப்பெரிய ஆபத்தில் தான் திலக் சிக்கிக் கொண்டிருக்கிறான். ஆபத்து... அவனுடைய குணத்திற்கும், எதிர்காலத்திற்கும் மட்டுமில்லை, அவனுடைய உயிருக்கே கூட அது பாதகமாக முடியும்!"

"அச்சோ... என்ன... என்ன சொல்கிறீர்கள் நீங்கள்? யாராவது அவனை மிரட்டி அவ்வாறு எல்லாம் நடந்துக்கொள்ள சொல்கிறார்களா... அவர்கள் யார், என்ன என்கிற விவரம் எதுவும் அவன் உங்களிடம் சொன்னானா?" என மீண்டும் பதற்றத்துடன் வினவினான் ஜெய்.

ஜெய்யின் இடக்கரத்தை தன் வலக்கரத்தால் மெல்ல அழுத்தி ஆறுதல்படுத்திய பிரபு, "என்னிடம் திலக் எதுவும் சொல்லவில்லை, பிரச்சினையில் சம்பந்தப்பட்டவர்களே நேரடியாகப் பேசினார்கள்!" என்றான் அமைதியாக.

"என்ன?" என்று வியந்தவன், "எப்படி..." என இழுத்துவிட்டு, "சரி, அதை விடுங்கள். அவர்களுக்கு என்ன வேண்டுமாம்? அவர்கள் என்ன சொன்னாலும் நான் கேட்கிறேன், ஆனால் திலக்கை மட்டும் எதுவும் பயமுறுத்தி மிரட்டாமல் உடனே விட்டுவிடச் சொல்லுங்கள்!" என்றான் வேகமாக.

"அதற்கு வாய்ப்புகள் மிகவும் குறைவாக இருக்கிறது ஜெய். அவர் திலக்கை உபயோகப்படுத்துவதே பழிவாங்குவதற்காகவும், தன்னுடைய சுயலாபத்திற்காகவும் தான். அதை என்றும் அவ்வளவு சுலபத்தில் அவர் விட்டுத்தர மாட்டார்!"

ஓ... என்று ஒருகணம் தவிப்புடன் விரல்களை நெறித்தவன், "திலக்கை விடுவிக்க அவர்களின் டிமான்ட் எதுவாக இருந்தாலும் சரி, நான் மறுக்காமல் ஏற்றுக்கொண்டேன் என்றால் அவர்கள்..."

"வெயிட் ஜெய்... நான் கூற வருவதை அவசரப்படாமல் கொஞ்சம் பொறுமையாக கேளுங்கள். திலக்..."

"இன்னும் என்ன சார் கேட்க வேண்டும்? பேடிப்பையன் மாதிரி ஒரு சின்னக் குழந்தையை வைத்து மிரட்டி உறவில் குழப்பத்தை உண்டாக்கப் பார்க்கிறான். அவனுக்கு நாம் பணிந்தாக வேண்டுமா? அவனை நான் சும்மா விட மாட்டேன், நான்..." என்று லேசாக துளிர்விட்ட சினத்துடன் படபடவென்று மேலே பேச முயன்ற ஜெய்யை இடையில் தடுத்தான் பிரபு.

"ஓ... என்ன செய்வீர்கள்?" என்றான் கேலியாக.

"அவனை... அவனை ஆதாரத்துடன் பிடித்து மக்கள் முன் நிறுத்துவேன்!" என்றவனின் வார்த்தைகளில் அனல் தெறித்தது.

"ம்... அப்புறம்?"

"அப்புறம் என்ன? அவன் மேல் கேஸ் பைல் செய்து எங்கள் பக்கம் திரும்ப முடியாதபடி செய்து விடுவேன்!"

"இதை எதையும் உங்களால் செய்ய முடியாது என்று நான் கூறினால்..."

"ஏன்... ஏன் என்னால் முடியாது? ஓ... நீங்களே வக்காலத்து வாங்குவதை பார்த்தால்... அவன் என்ன சமூகத்தில் அவ்வளவு பெரிய மனிதனா?" என்றவன், "அவன் எவ்வளவு வசதிப்படைத்தவனாக, பெரும்புள்ளியாக இருந்தாலும் சரி, நான் நினைத்ததை நடத்தியே காண்பிப்பேன்!" என்றான் வீராவேசமாக.

"சரி... உங்கள் கூற்றுப்படி அது மனிதனாக இருந்தால் ஒருவேளை நீங்கள் கூறுவதை எல்லாம் நடத்திக் காண்பிப்பீர்கள் என்று ஏற்றுக்கொள்ளலாம். மாறாக, பிரச்சினைக்கு காரணமானவன் மனிதனே இல்லையென்றால்... என்ன செய்வீர்கள்?" என அழுத்தமாக வினவினான் பிரபு.

அதுவரை திலக்கை யாரோ பயங்கரமாக மிரட்டுகிறார்கள் என்றெண்ணி வெகுவாக பொருமிக் கொண்டிருந்தவன் மருத்துவரின் கேள்வியில் விழித்தான்.

'மனிதனே இல்லையா? அப்படியென்றால்... மிருகமா? ஆனால்... அவை எப்படி...'
"எனக்கு புரியவில்லை?" என்று நெற்றியை சுருக்கினான்.

"உங்களின் பதற்றத்தை குறைக்கத்தான் நான் அவ்வாறு சுற்றி வளைத்துப் பேசியதே, இனி நேரடியாக விஷயத்திற்கு வருகிறேன்!" என்றவன் கண்களை ஒருமுறை இறுக மூடித் திறக்க, யோசிக்கும் திறனை இழந்து விட்டவன் போல் பிரபுவின் முகத்தையே இமைக்காது பார்த்திருந்தான் ஜெய்.

"கடந்த ஐந்து மாதங்களாக உங்களுடன் பனிப்போர் நடத்திக் கொண்டிருப்பது உண்மையில் திலக்கே அல்ல. உங்களை இந்த அளவிற்கு வெறுப்பது, வண்டியின் டயரை பஞ்சராக்கியது, பெட்ரோல் டியூபை அறுத்தது... உங்களுக்கு பிடிக்காதவற்றை மட்டுமே செய்ய வேண்டும் என கங்கணம் கட்டிக்கொண்டு அலைவது எல்லாம்..." என நிறுத்தி அவன் முகத்தை ஆழ்ந்துப் பார்த்தவன், "ஆகாஷ் தான்!" என்று மொழிந்தான்.

"ஆகாஷ்..." என்று முணுமுணுத்தவன் பிரமிப்புடன் நிமிர்ந்து, "சாரி டாக்டர்... யூ ஆர் மிஸ்டேக்கன். நீங்கள் கூறும் ஆகாஷ் திலக்கின் மூத்த சகோதரன். அவன் இப்பொழுது உயிருடனே இல்லை!" என்றான் வேதனையோடு.

"அதை நானும் மறுக்கவில்லை, அவன் உயிருடன் இல்லை என்பது உங்களை விட எனக்கு நன்றாகத் தெரியும்!"

"அப்புறம் எப்படி நீங்கள் ஆகாஷை குற்றம் சாட்டுகிறீர்கள்?"

"இன்னமும் புரியவில்லையா ஜெய்? பிரச்சினையின் ஆரம்பப் புள்ளியாக வீட்டில் நன்றாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த உங்கள் வண்டி தானாக பஞ்சரானது என்று சொன்னீர்களே... அன்று முதல் இன்று, இந்த நிமிடம் வரை ஆகாஷின் ஆன்மா தான் திலக்கின் உடலில் புகுந்து அத்தனையையும் செய்துக் கொண்டிருக்கிறது!" என்று பிரபு விஷயத்தை போட்டுடைக்க, ஜெய்சங்கர் அரண்டுப் போய் பார்த்தான்.

"என்ன... ஆகாஷ்... ஆகாஷின் ஆன்மா... திலக்... திலக்கின் மீது... நீங்கள் சொல்வது நிஜமா? இப்படியெல்லாம் கூட நடக்குமா?

ஐயோ... இத்தனை மாதங்களாக திலக் எங்களுடன் இல்லையா? அப்பொழுது அவன்... குழந்தை எங்கே? அவனுக்கு என்னவாயிற்று? டாக்டர்... ப்ளீஸ்... கொஞ்சம் தெளிவாக கூறுங்களேன்.

ஒன்றும் பெரிய பிரச்சனை இல்லை என்று சொல்லிவிட்டு குழந்தையை ஆன்மா கட்டுப்படுத்தி வைத்திருக்கிறது என இத்தனை பெரிய பயங்கரத்தை மிகச்சாதாரணமாக சொல்கிறீர்களே...

இதென்ன சினிமாவா? திலக்கிற்கு என்னவாயிற்று... முதலில் அதைச் சொல்லுங்கள், அவனுக்கு பயப்படும்படி... அதாவது... உயிருக்கு எந்த ஆபத்தும் இல்லையே?" என்று கண்களில் கரகரவென்று நீர்வழிய சில்லிட்ட கரங்களால் பிரபுவின் கரத்தை பற்றிக்கொண்டு நடுக்கத்துடன் வினவினான் ஜெய்.

"நீங்கள் இந்தளவிற்கு பயந்து நடுங்கும்படி பிரச்சினை இன்னும் பெரியதாகவில்லை. பட்... உங்களை பயமுறுத்த என்றில்லை, எச்சரிப்பது என் கடமை என்பதால் ஓப்பனாக சொல்கிறேன்.

ஆகாஷ் பற்றிய உண்மையை நீங்கள் அறிந்துக் கொண்டதாக அவனுக்கு தெரிய வந்தால் திலக்கின் உயிருக்கு அது மிகப்பெரிய ஆபத்தாக வந்து முடியும். வெளிப்பார்வைக்கு அவன் தானாக தற்கொலை செய்ததை போல் தோற்றமளிக்க செய்யும்.

ஆனால்... உண்மையில் உள்ளிருக்கும் ஆகாஷின் ஆன்மா தான் குழந்தையை அவ்வாறு செய்யத் தூண்டும் மாடியில் இருந்துக் குதித்தோ, கத்தியை கொண்டு நாடியை அறுத்தோ அல்லது எங்காவது பயணிக்கும் பொழுது ஓடும் வண்டியில் இருந்துக் குதித்தோ... இப்படி ஏதோ ஒரு வகையில் அவனை கொல்லப் பார்க்கும்!"

"ஐயோ... போதும் நிறுத்துங்கள்... இதற்குமேல் எதுவும் சொல்லாதீர்கள்!" என்று பதறி தடுத்தவன், "அது ஆகாஷின் ஆன்மா என்றால் அவன் திலக்கின் அண்ணன் தானே... அவன் ஏன் தன் தம்பியை இவ்வாறு எல்லாம் கஷ்டப்படுத்துகிறான்?" என்றான் ஜெய் குழப்பத்துடன்.

அவனிடம் சிகிச்சையின் பொழுது ஆகாஷ் தெரிவித்ததை எல்லாம் விளக்கமாக எடுத்துரைத்த பிரபாகரன் திலக்கின் நிலையையும் தெளிவாக்கினான்.

"அவனை நீங்கள் காப்பாற்ற முயலவில்லையே என ஆகாஷின் கோபம் முழுவதும் உங்கள் மீது தான் உள்ளது ஜெய். உங்களை கொன்றுப் பழிதீர்க்க தான் நிண்ணியூரில் திலக் உடலினுள் புகுந்து அவனை கட்டுப்படுத்தியுள்ளான்.

ஆனால் இங்கு வந்தவுடன் திலக்கின் மீது நீங்களும், உங்கள் அம்மாவும் வைத்திருக்கும் அன்பும், அவனுக்கு சகலவசதிகள் செய்துக் கொடுத்து நல்ல உயர்ந்தப் பள்ளியில் படிக்க வைப்பதும் அவனுள் ஆசையை தூண்டியிருக்கிறது.

ஏற்கனவே அவன் குடும்பத்தை பற்றி நீங்கள் கூறியதை வைத்துப் பார்த்தால் அவனுடைய தந்தையின் சுமாரான சம்பாத்தியம் முழுவதும் தாயின் சிகிச்சைக்கு என்றே நிறைய செலவாகியிருக்கும் போலிருக்கிறது. நல்ல உணவு, உடை, படிப்பு என எதுவுமின்றி வறுமையில் வாழ்ந்து வந்திருக்கிறான்.

அடுத்தடுத்த கொடுமைகளாக அவனுடைய தாய் அவன் கண் முன்னாலேயே கழுத்தறுத்து இறந்தது, தந்தையின் கை, காலை அந்த முரடர்கள் வெட்டி அங்கிருந்து வெளியேற முடியாதபடி முடக்கியது, ஈவு இரக்கமில்லாமல் அவனை பட்டினி போட்டு அடித்து வேலை வாங்கியது.

கொடுமைகளின் உச்சக்கட்டமாக தப்பிக்க முயன்று அவர்களிடம் மாட்டிக் கொடூரமாக இறந்தது. எல்லாம் சேர்ந்து அவனை பச்சாதாபமற்ற கொடூர ஆத்மாவாக மாற்றி இருக்கிறது!" என்று பெருமூச்சு விட்டான்.

ஒருபுறம் ஆகாஷின் நிலையை எண்ணி மனம் வருந்தினாலும் மறுபுறம் திலக்கை எவ்வாறு அவனிடமிருந்து மீட்பது என கவலையில் உழன்றுக் கொண்டிருந்தான் ஜெய்.

"நீங்கள் சொன்னீர்களே திலக்கிடம் ஏற்பட்ட திடீர் மாற்றங்களுக்கு எல்லாம் இவன் தான் காரணம்.

சுமாராகப் படித்துக் கொண்டிருந்த ஆறு வயது குழந்தையின் உடல் பத்து வயது ஆன்மாவின் கட்டுப்பாட்டில் இருக்க, அவனுடைய அபரிதமான அறிவு வளர்ச்சி எல்லாம் மற்ற ஆறு வயது குழந்தைகளிடம் சுலபமாக போட்டியிட்டு வென்றது.

தான் ஏங்கிய, தனக்கு கிடைக்காத அத்தனை விஷயங்களையும் தன் தம்பியின் மூலமாக அடையப் பார்க்கிறான் ஆகாஷ். உதாரணமாக அன்று அளவிற்கு அதிகமாக பூரியை சாப்பிட்டு ஜீரணிக்க முடியாமல் அவஸ்தைப்பட்டதற்கு காரணம் அந்த இடத்தில் உடலும், ஆன்மாவும் ஒரே புள்ளியில் கைக்கோர்க்க முடியாமல் போனது தான்.

இரண்டும் வெவ்வேறு அல்லவா? தீம் பார்க்கில் நடந்ததும் அதுதான். முதல் முறை சென்றிருந்தப் பொழுது திலக் பார்த்துப் பயந்த ரைட்களிலெல்லாம் இவன் பெரியவன் என்பதால் தைரியமாக சுற்ற எண்ணியிருக்கிறான்.

அதை நீங்கள் தடுக்கவும் துடுக்காக எதிர்த்துப் பேசியிருக்கிறான். ஆகமொத்தம்... திலக்கின் மூலம் தான் வாழாத வாழ்க்கையை எல்லாம் வாழ வேண்டும் என்கிற ஆசை... ம்ஹும்... ஆசை என்பதை விட வெறிக்கொண்டு அலைகிறான் ஆகாஷ்!"

பிரபு கூறுவதையெல்லாம் தனக்குள் தீவிரமாக கிரஹித்துக் கொண்டிருந்த ஜெய், அவன் முடிக்கவும் நிமிர்ந்தான்.

"அப்பொழுது இதற்கு எப்படி தீர்வு காண்பது? உயிருடன் இருக்கின்ற ஒரு குழந்தையின் வாழ்க்கையை உடல் இல்லாத ஒரு ஆன்மா வாழ நினைப்பது என்பது எவ்வளவு பெரிய கொடுமையான விஷயம்?" என்று வேதனையோடு கேள்வியெழுப்பினான்.
 
Advertisements

Latest Episodes

Advertisements

Top