Deepa Babu's Yennai Theriyuma 32

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Deepa Babu

Author
Author
Joined
Feb 18, 2021
Messages
1,273
Reaction score
3,340
Points
113
Location
salem
YT Front cover.jpg

அத்தியாயம் 32
ஜெய்சங்கரின் கேள்வியில் நெற்றிச் சுருங்க, ம்... என்று இழுத்த பிரபாகரன், "நீங்கள் சொல்வது மிகச்சரியான வார்த்தைகள், உடல் இல்லாத ஆகாஷின் கட்டுப்பாட்டில் உள்ள திலக்கின் உடல் இப்பொழுது யாருடைய கட்டளையை ஏற்பது என புரியாமல் தடுமாறிக் கொண்டிருக்கிறது.

இதில் மிகவும் கவலைக்குரிய விஷயம் என்னவென்றால், இதை இப்படியே தொடரவிட்டால் வலிமை அதிகமிக்க ஆகாஷின் கட்டளையை ஏற்று செயல்பட பழகியிருக்கும் திலக்கின் உடல் ஒரு கட்டத்தில் அவனுடைய ஆன்மா இந்த உலகை விட்டு நீங்கிச் செல்லும் பொழுது, அதற்கு எத்தனை வருடங்கள் ஆகுமோ தெரியாது...

அந்த நேரத்தில் திலக்கின் கட்டளைகளை ஏற்று செயல்பட முடியாமல் மிகவும் தடுமாறும். உதாரணத்திற்கு சரியாக நிற்பது, நடப்பது, சாப்பிடுவது, உறங்குவது என்ற அடிப்படை விஷயங்களை கூட அந்த வயதில் சுயமாக நடத்த தெரியாமல் மிகவும் திணறிப் போவான் திலக்!" என்றான் சிந்தனையோடு.

"ஓ... நோ..." என்று தவித்த ஜெய், "இதிலிருந்து திலக்கை எவ்வாறு மீட்பது? நீங்கள் இன்றே இப்பொழுதே அதற்கான சிகிச்சையை தொடங்கி அவனை எப்படியாவது இந்தப் பிரச்சினையிலிருந்து காப்பாற்றுங்களேன்!" என்றான் கெஞ்சுதலோடு.

"சாரி ஜெய்... உடல், மன ரீதியான பிரச்சினை என்றால் ஷ்யூரா நான் சரி செய்து விடுகிறேன் என்று என்னால் உறுதியளிக்க முடியும். பட்... இது பிரச்சினையே வேறு, இதில் என்னுடைய சிகிச்சைக்கு சரியான முழுப்பலன் கிடைக்காது.

பெட்டர்... நான் ஓப்பனாகவே சொல்கிறேனே, என்னடா படித்து மருத்துவனாக பணியாற்றிக் கொண்டிருப்பவன் இப்படிப் பேசுகிறானே என்று கூட நீங்கள் நினைக்கலாம்.

ஆனால் இதுதான் இதற்கு இருக்கின்ற ஒரே தீர்வு. ஆகாஷின் ஆன்மாவை கட்டுப்படுத்தவும், திலக்கிடமிருந்து வெளியேற்றவும் நமக்கு வெறும் சைக்காலஜி மட்டும் பற்றாது. அதோடு இணைந்து ஆவியை விரட்டும் நம் பழங்கால முறைகளை பின்பற்றுபவர்களின் சிகிச்சை முறையும் குழந்தைக்கு தேவை!"

"யூ மீன்... பேய் விரட்டுபவர்களிடம் அழைத்துப் போக சொல்கிறீர்களா? என்ன பேசுகிறீர்கள் நீங்கள்... குழந்தை பயந்துவிட மாட்டானா?

இதெல்லாம் சுத்த மூடநம்பிக்கை, அவர்களிடம் அழைத்துச் சென்றால் தேவையில்லாமல் அவனை கஷ்டப்படுத்தி ஆன்மாவை விரட்டியடித்து விட்டோம் என்று கதை அளந்துவிட்டு பணத்தை மட்டும் பிடுங்கிக்கொண்டு நம்மை ஏமாற்றி விடுவார்கள்.

குழந்தையின் உடல்நிலையில் எந்த முன்னேற்றமும் இருக்காது. எனக்கு இதிலெல்லாம் நம்பிக்கையில்லை, நான் வேறு ஏதாவது முயற்சித்துப் பார்க்கிறேன்!" என்றான் ஜெய் படுவேகமாக.

"ஜெய்... கொஞ்சம் நிதானமாக யோசித்துப் பாருங்கள். எந்தவொரு விஷயத்தையும் தெளிவாக விளக்கிச் சொல்லாமல் விட்டுவிட்ட ஒரே காரணத்திற்காக நம் முன்னோர்கள் கண்டுப்பிடித்த விஷயங்களை எல்லாம் மூடநம்பிக்கை என்று நாம் அப்படியே ஒதுக்கிவிட முடியாது.

எல்லாவற்றிற்கும் ஆங்கில மருத்துவத்தில் தான் தீர்வு இருக்கிறது என்பது தான் இப்பொழுது மக்களிடையே பரவியிருக்கும் மூடநம்பிக்கை. நம்மில் பலருக்கு அம்மை வருகிறதே அதற்கு எந்த மருத்துவமனையை நாடுகிறோம்?

வீட்டில் இருக்கின்ற பெரியவர்களே அதற்குரிய சிகிச்சையாக உடல்நிலையை குளிர்விக்க, நோய்க்கிருமிகளை விரட்ட என்று வேப்பிலை படுக்கையில் பாதிக்கப்பட்டவர்களை படுக்க வைத்து மேல்பூச்சாக ஆமணக்கு கொட்டை, மஞ்சள், வேம்பை அரைத்து பூசி, உட்கொள்ள இளநீர், பனங்கற்கண்டு, நுங்கு என்று எல்லாம் தருவது எதற்காக? அனைத்திலும் அந்நோயை குணப்படுத்தும் ஆற்றல் மிக்க மருத்துவம் உள்ளது.

அதுபோன்றே நிறைய விஷயங்களை நம் அறியாமையால் தெரிந்துக் கொள்ளாமல் இருக்கிறோம் அவ்வளவு தான். மற்றபடி அதெல்லாமே வீணானது என நாம் சொல்லிவிட முடியாது. ஏன் பேய், ஆன்மா என்பது எல்லாம் கூட தான் மூடநம்பிக்கை? இப்பொழுது திலக் அதனால் பாதிக்கப்படவில்லையா?

ஸீ... ஒருசில இயற்கை நியதிகள் எத்தனை வருடங்கள் ஆனாலும் மாறாது, அதைப்போல தான் சிகிச்சை முறைகளும். இது இது இப்படித்தான் சரியாகும் என்று இருந்தால் நாம் அதைக் கடைப்பிடித்து தான் ஆக வேண்டும்!" என பிரபு விளக்க, ஜெய்சங்கர் உண்மையிலேயே குழம்பிப் போனான்.

"அப்பொழுது இது தொடர்பான சிகிச்சைக்கு அதுதான் சிறந்த வழி என்கிறீர்களா?"

"ஹன்ரெட் பெர்சென்ட் ஜெய், அதுதான் பெஸ்ட் சொல்யூசன். நீங்கள் இந்த சினிமாவில் வருவதையெல்லாம் வைத்துக் கற்பனை செய்து குழந்தையை துன்புறுத்துவார்களோ என்றெண்ணி பயப்பட வேண்டாம்.

நிஜத்தில் நிறைய இடங்களில் வேறு மாதிரி சிகிச்சைகளும் தருகிறார்கள். ஒருமுறை நான் டெல்லியில் நடந்த எங்கள் துறை மருத்துவ குழுவினரின் மாநாட்டில் பல்வேறு அனுபவம் வாய்ந்த மருத்துவர்களை சந்தித்தேன்.

அதில் மிகவும் முக்கியமானவர் நமக்கு இப்பொழுது தேவைபடுபவரும் கூட மிஸ்டர். நரசிம்மமூர்த்தி, அவர் கேரளாவில் இருக்கிறார். அவருடைய முன்னோர்கள் எல்லாம் நம்பூதிரி வகை மாந்தீரிகம் தெரிந்தவர்கள், வழிவழியாக அதைக் கடைப்பிடித்து நல்வழிக்குப் பயன்படுத்துபவர்கள்.

பெயர் காரணமே தீயவற்றை அழிக்கும் நரசிம்மமூர்த்தி என்ற அர்த்தத்தில் தான் அவருடைய தந்தையாரால் வைக்கப்பட்டதாம். தங்களுடைய தொழிலில் அறிவியலையும் புகுத்த ஆவல் கொண்டு தான் மருத்துவத்தில் சைக்காலாஜியில் பல்வேறு நுட்பமான பிரிவுகளை படித்துள்ளார்.

தன்னிடம் சிகிச்சைக்கு வரும் பல்வேறு கேஸ்களை ஆராய்ந்து தகுந்த முறையில் மருத்துவத்தின் மூலம் குணமாக்கி விடுகிறார். அப்படி மீறி திலக் போன்று வரும் கேஸ்களை மீடியம் மூலமாக... உங்கள் பாஷையில் சொல்லப் போனால் பேய் ஓட்டுவதின் மூலம் குணப்படுத்துகிறார்.

இவருடைய சிகிச்சைகள் எப்பொழுதும் அஹிம்சை வழியில் தான் இருக்கும். உடலற்ற ஆன்மா தான் என்றாலும் அவற்றிற்கும் உணர்வு உண்டு என்பதால் எப்பொழுதுமே அவற்றை துன்புறுத்தி விரட்டி அடிக்க நினைக்க மாட்டார்.

அதேபோல் சிகிச்சை அளிக்கின்ற இடமும் மனோதத்துவ மருத்துவ சூழலில் தான் அமைந்து இருக்கும். சுற்றிலும் அகோரமான சுவாமிப் படங்கள், மண்டை ஓடு, எலும்புக்கூடு என்றெல்லாம் இருக்காது.

அவரின் அறிமுகம் கிடைத்தப்பின் அவரை பற்றி தெரிந்துக்கொள்ள தூண்டிய ஆர்வத்தால் இவற்றையெல்லாம் சேகரித்தேன். நாம் அவரை தொடர்புகொண்டு பேசினால் நமக்கு நல்லதொரு தீர்வு கிடைக்கும் என நான் நம்புகிறேன்!"

"ஓ... ஓகே... நீங்கள் இவ்வளவு தூரம் சொல்வது எனக்கும் நம்பிக்கையை தருகிறது. நாம் அவருடன் பேசி அப்பாயின்ட்மென்ட் வாங்கலாமா?" என்றான் ஆவலுடன்.

"ம்... கண்டிப்பாக, நான் முதலில் அவருடைய அவைலப்ளிட்டியை விசாரித்து அறிந்துக்கொண்டு நேரில் தொடர்புகொள்ள பார்க்கிறேன். பிறகு நாம் இருவரும் அவரிடம் நிலைமையை விளக்கித் தீர்வு கேட்போம்!"

யோசனையுடன் ஜெய் ஆமோதிப்பாக தலையசைக்க, "அப்புறம்... இதைச் சொல்ல மறந்து விட்டேனே, மிகவும் அதிமுக்கியமானது. எந்தச் சூழ்நிலையிலும் ஆகாஷ் உடைய ஆன்மாவின் கட்டுப்பாட்டில் தான் திலக் இருக்கிறான் என்கிற விவரம் உங்களுக்கு தெரிந்துவிட்டதாக ஒருபொழுதும் அவன் முன் நீங்கள் வெளிகாட்டிக் கொள்ளவே கூடாது.

உங்களுக்கு விஷயம் தெரிந்துவிட்டது என அவன் புரிந்துக்கொண்டால் எந்நேரம் என்றாலும் அவனை விரட்டப் பார்ப்பீர்கள் என்ற பயத்தில் தன் நிலையை தக்க வைத்துக்கொள்ள திலக் மூலம் உங்களை கொலை செய்யவும் தயங்க மாட்டான் அவன்.

ஏனென்றால் தன்னுடைய இச்சைகளை தீர்த்துக்கொள்ள அவனுக்கு இருக்கும் சுலபமான வழி திலக் ஒருவன் தான், அவனை விட்டு அவ்வளவு சுலபத்தில் வெளியேற மாட்டான் ஆகாஷ்.

அதனால் நன்றாக நினைவில் வைத்துக்கொள்ளுங்கள், எப்பொழுதும் போல திலக்கிடம் இயல்பாகப் பேசுங்கள் எதிலேயும் தயக்கம் காட்டக்கூடாது. உங்களின் வருத்தத்தையோ, வேதனையையோ மறந்தும் குழந்தை முன் வெளிக்காட்டி விடாதீர்கள்.

சிகிச்சைக்கு அழைத்துச் செல்லும் பொழுது கூட இதுபோன்ற விஷயத்திற்காகவோ என்ற சந்தேகம் அவனுக்கு தோன்றிவிடாமல் ரொம்பவும் கவனமாக இருக்க வேண்டும்!" என்று பலமாக எச்சரித்தான் பிரபாகரன்.

விழிகளை இறுக மூடி இரு கரங்களாலும் தலையை அழுந்தக் கோதிக்கொண்டவன், ம்... என்று ஒற்றை எழுத்தில் பதிலளித்தான்.

"தைரியமாக இருங்கள்... விரைவாக நரசிம்மமூர்த்தியிடம் அப்பாயின்ட்மென்ட் வாங்கப் பார்க்கிறேன். திலக்கை விட்டு ஆகாஷ் வெளியேறும் வரை நாம் சற்று எச்சரிக்கையாக தான் இருந்தாக வேண்டும் வேறுவழியில்லை!" என்று அவன் கரத்தை அழுத்தி ஆறுதல்படுத்தினான் பிரபு.

"ம்... ஓகே. திலக்கை வீட்டிற்கு அழைத்துச் செல்லலாமா?"

"இருங்கள்... அவன் விழித்து விட்டானா என பார்த்து வருகிறேன்!" என்று உள்ளே சென்று வந்த பிரபு, "அவன் இன்னும் எழவில்லை, நாம் அதற்குள் டாக்டரை கான்டாக்ட் செய்ய முடிகிறதா என பார்க்கலாம்!" என்று லேப்டாப்பை ஆன் செய்து அவருடைய செக்ரெட்டரி நம்பர் மற்றும் மருத்துவமனை விலாசம் என சேகரித்து ஜெய்யிடம் விவரங்களை குறிப்பெடுக்கச் சொல்லும் பொழுதே அறையின் உள்ளிருந்து திலக்கின் முனகல் சத்தம் கேட்டது.

"பா... பாட்டி, பாட்... பாட்டி!" என்று அரைகுறை மயக்கத்தில் குழறிக் கொண்டிருந்தான்.

"திலக் எழுகிறான் போலிருக்கிறது, சொன்னதெல்லாம் நினைவிருக்கட்டும். பீ கேர்புல், நான் இன்று இரவு எப்படியாவது டாக்ரிடம் பேசப் பார்க்கிறேன்!" என்று உள்நோக்கி விரைந்துச் சென்றான் பிரபு.

திலக் உறக்கத்தில் இருந்து எழுவதுப் போல் லேசாக புரள ஆரம்பிக்க, "திலக்... திலக்... எழுந்து விட்டாயா? இங்கே பார்!" என்று மெல்ல அவன் கன்னம் தட்டினான்.

"ம்... ம்..." என்று முனகியவன் மெதுவாக கண்களை திறக்க, எதிரே பிரபு புன்னகையுடன் நின்றுக் கொண்டிருந்தான்.

"அப்பா... நல்லவேளை... கண்களை திறந்து விட்டாயா? நான் பயந்தே போய்விட்டேன். என்னடா இது? கேம் விளையாடும் பொழுது திலக்கிற்கு மயக்கம் வந்து விட்டதே என்று. குழந்தைக்கு அப்படியென்ன விளையாட்டுச் சொல்லி தருகிறாய் என உன் சித்தப்பா வேறு வெளியில் என்னை கண்டபடி திட்டுகிறார்!" என்று புலம்பினான்.

"எனக்கு ஒன்றும் இல்லை அங்கிள், ஐ ஆம் பைன். அந்தப் படத்தை பார்க்கவும் தான் கொஞ்சம் தூக்கம் வந்துவிட்டது!" என்று எழுந்து அமர்ந்தான் திலக் என்கிற ஆகாஷ்.

"ம்... ஆமாம்... ஆமாம், இனிமேல் சிறுவர்களிடம் அதையெல்லாம் விளையாடக் கூடாது என முடிவெடுத்து விட்டேன்!" என்றபடி அவனுடைய கரம்பற்றி மெத்தையில் இருந்து கீழிறங்க உதவினான் பிரபாகரன்.

சோர்வாக அறையில் இருந்து வெளியே வந்த சிறுவனை உருவத்தால் திலக் என எதிர்கொள்வதா அல்லது உள்ளத்தால் ஆகாஷ் என்று எதிர்கொள்வதா என ஒரு நிமிடம் தடுமாறிய ஜெய் தன்னை சமாளித்து அவனருகில் வந்தான்.

"திலக் கண்ணா... இப்பொழுது எப்படி இருக்கிறது?" என்று அவன் தலையை வருடினான்.

"நன்றாகத்தான் இருக்கிறேன், கொஞ்சம் தூக்கக் கலக்கமாக இருக்கிறது அவ்வளவுதான். அதற்காக அங்கிளை எல்லாம் திட்டாதீர்கள், சும்மா கேம் தானே!" என்றவனை அணைத்துக் கொண்டவன் பிரபாகரிடம் விழிகளை உயர்த்தினான்.

அவன் கையை தூக்கி தம்ஸ்அப் காண்பிக்க, மெல்ல முறுவலித்தவன் சின்னத் தலையசைப்புடன் அவனிடம் விடைப்பெற்று திலக்கை அழைத்துக்கொண்டு வெளியேறினான்.

பைக்கில் தன்னை பார்த்தவாறு குழந்தையை திருப்பி தன்மேல் சாய்த்து அமர வைத்தவன், மெல்லிய பெருமூச்சோடு கிக்கரை உதைத்தான்.

வீட்டிற்குள் நுழைந்த இருவரையும் ஆச்சரியமாகப் பார்த்த செண்பகம், "ஏன்டா? பிரெண்ட் வீட்டிற்குத்தானே போய்விட்டு வந்தீர்கள். என்னவோ இருவரும் வேலைக்குச் சென்று தொடர்ந்து இரண்டு ஷிப்ட் பார்த்து வந்தவர்கள் போன்று இவ்வளவு டயர்டாக தெரிகிறீர்கள்!" என்று அவர்களை கூர்மையாக அளந்தபடி கேள்வி எழுப்பினார்.

தளர்வாய் சோபாவில் விழுந்த ஜெய், முகத்தை அழுந்த தேய்த்துவிட்டு கொண்டு பின்னால் சாய்ந்தான் என்றால் திலக் செண்பகத்தின் மடியில் தலைசாய்ந்தான்.

"என்னடா ஆயிற்று உங்கள் இரண்டு பேருக்கும்?" என்றவர் குழப்பமாக கேட்கும்பொழுதே அறையில் இருந்து துள்ளலுடன் வெளியே வந்தாள் மணி.

"ஹேய்... வந்து விட்டீர்களா? உள்ளே இன்ட்ரஸ்டாக போன் பேசிக் கொண்டிருந்ததில் சத்தமே கேட்கவில்லை!" என்றபடி தொப்பென்று ஜெய்யின் அருகில் விழுந்தாள்.

"ஏய்... பார்த்து மெதுவாக விழுடி!" என சோர்வுடன் அதட்டினான் அவன்.

அவனை உரசியபடி ம்க்கும்... என்றவள் பழிப்புக் காண்பிக்க, "உனக்கு தான் போன் பேச ஆரம்பித்தாலே சுற்றி என்ன நடக்கிறது என்று ஒன்றும் தெரியாதே!" என கலாய்த்தார் செண்பகம்.

அத்தை... என்றவள் கண்களை இடுக்க, "அம்மா... டிபன் ரெடியா? இருப்பதை எடுத்து வை. எங்களுக்கு டயர்டாக இருக்கிறது, சாப்பிட்டுவிட்டு நாங்கள் தூங்குகிறோம்!" என்றான் ஜெய்.

"ஏன்டா..." என அவர் ஆரம்பிக்கும் பொழுதே, "அம்மா... இவனுக்கு பெயின்டிங்ஸ் பிடிக்குமே என்று அவனுடைய வீட்டிற்கு அழைத்துச் சென்றேன். அங்கே அவனோ ஏதோ ஒரு பெயின்டிங்கை காண்பித்து இவனுடன் ஒரு கேம் விளையாடினான், இவன் மயங்கி விட்டான்.

நான் என்னடா இது என்று சண்டைப் போடவும், இப்படி தான்டா செய்தேன் என்றான் எனக்கும் மயக்கம் வந்து விட்டது. நான் பெரியவன் எனவும் எனக்கு சீக்கிரம் தெளிந்துவிட்டது, இவன் எழுவதற்கு தான் கொஞ்சம் தாமதமாகி விட்டது. தயவுசெய்து இதற்குமேல் எதையும் கேட்காமல் போய் டிபனை எடுத்து வை!" என்றான் சற்றே எரிச்சலுடன்.

"என்ன கேம்மோ... ப்ளூவேல் மாதிரி, மயக்கம் வருகிறதாமே... இப்பொழுது உள்ள பிள்ளைகள் எல்லாம் தேவையில்லாத கண்ட விஷயங்களை தான் பரீட்சித்துப் பார்க்கிறதுகள்!" என்று சலித்தபடி எழுந்து உள்ளே சென்றார் செண்பகம்.

எப்படியோ ஒருவாறு அவரை சமாளித்து விட்டோம் என நீண்டதொரு பெருமூச்சை வெளியேற்றியவனை புருவங்கள் முடிச்சிட ஐயத்துடன் பார்த்தாள் மணிகர்ணிகா.

அடுத்து உங்களை இலகுவாக்க மணியின் கலாட்டக்கள் வர போகிறது.
 
Pashni78

Well-known member
Joined
Aug 13, 2018
Messages
1,006
Reaction score
3,144
Points
113
Location
Chennai
Hey ennaiya dhideernnu pei kadhai aaiduchu..
 
Advertisements

Latest Episodes

Advertisements

Top