Deepa Babu's Yennai Theriyuma 7

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Deepa Babu

Author
Author
Joined
Feb 18, 2021
Messages
1,044
Reaction score
2,430
Points
113
Location
salem
YT Front cover.jpg

அத்தியாயம் 7

சிரமப்பட்டு தன் உணர்வுகளை ஜீரணித்து மனதை கல்லாக்கிக் கொண்ட ஜெய்சங்கர், அச்சிறுவனின் உடலை தன் மொபைலில் படம் பிடித்தான்.

அவன் அருகிலிருந்த கோபி, சிறுவனையும் சுற்றியுள்ளவர்களையும் கேமராவில் படம் எடுத்துக் கொண்டிருக்க ஜெய் தன் பார்வையாலும், செவியாலும் விசாரிக்கின்ற கான்ஸ்டபிளை பின்தொடர்ந்தான்.

கூட்டத்திலிருந்த ஒருவர் முன்னே வந்து, “எனக்கு தெரியும், இந்தப் பையனுடைய குடும்பம் முன்பு பக்கத்து ஊரில் தான் குடியிருந்தது. ஆனால் இப்பொழுது அவர்கள் அங்கே இல்லையே…” என்றார் யோசனையுடன்.

“இப்பொழுது இல்லையா... அவர்கள் எங்கே சென்றார்கள் என்கிற விவரம் எதுவும் உங்களுக்கு தெரியுமா?”

“தெரியாது சார்!”

“உங்கள் பெயர் என்ன? வீடு எங்கே?”

“என் பெயர் மாரிமுத்து, பக்கத்து ஊரில் குடியிருக்கிறேன். இங்கே என் சகலை வீட்டிற்கு விசேஷத்திற்கு வந்திருக்கிறேன்!”

“ஆஹான்… அப்பொழுது உங்களுக்கு அவர்களை பற்றி வேறு எதுவும் தெரியாது!”

“இல்லை சார்!” என்றதும் நெற்றியை சுருக்கியவர் எஸ்.ஐ-யிடம் விவரம் சொல்லிவிட்டு வந்து மாரிமுத்துவின் பெயர், போன் நம்பர் மற்றும் வீட்டு விலாசம் கேட்டுக் குறித்துக் கொண்டார்.

சிறுவனின் உடலை போஸ்ட்மார்ட்டம் செய்வதற்காக அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸில் ஏற்றிவிட்டு அதன் கூடவே போலீஸ் ஜீப்பும் கிளம்பிச் சென்றது.

“சார்! நியூஸ் எப்படி கொடுக்கலாம்? ஏரியில் குளிக்கச் சென்ற சிறுவன் தண்ணீரில் மூழ்கி மரணம் என்றா... இல்லை, மர்மமான முறையில் ஒரு சிறுவனின் உடல் ஏரியில் கண்டுப்பிடிப்பு என்றா...” என ஜெய்யிடம் அபிப்பிராயம் கேட்டான் கோபி.

உள்ளம் கொந்தளித்துக் கொண்டிருக்க, “இரண்டாவதையே அனுப்பி விடு!” என்றவன், “கோபி… எனக்கு உன்னுடைய உதவி வேண்டும். என்ன தேவை என்பதை மாலையில் சொல்கிறேன். இப்பொழுது எனக்கு ஒரு முக்கியமான வேலை இருக்கிறது பிறகு சந்திக்கலாம்!” என்று அவன் தோளை தட்டிவிட்டு விறுவிறுவென்று வண்டியை நோக்கிச் சென்றான்.

சற்று தூரத்தில் மாரிமுத்து உறவினர் ஒருவருடன் பேசிக்கொண்டு செல்வது தெரிய, அவர்களை நெருங்கி ஹாரன் அடித்துவிட்டு வண்டியை ஓரமாக நிறுத்தி இறங்கினான்.

தன்னை யோசனையோடு பார்த்தவனிடம், “நீங்கள் தானே மாரிமுத்து... இறந்துப் போன அந்தப் பையனை தெரியும் என்று சொன்னீர்களே!” என விசாரித்தான்.

புருவம் சுருக்கியவன், “ஆமாம்!” என்றான்.

“அவனுடைய அப்பா, அம்மா எங்கே இருக்கிறார்கள்?”

“நீங்கள் யார்? அவர்கள் இப்பொழுது எங்கே இருக்கிறார்கள் என்று எனக்கு தெரியாது என போலீஸிடம் சொல்லி விட்டேனே!”

“கரெக்ட் சார்… எனக்கு இன்னும் கொஞ்சம் விவரங்கள் தேவைப்படுகிறது. என் பெயர் ஜெய்சங்கர், நான் ஒரு தனியார் சேனலில் நிருபராக இருக்கிறேன்!”

“ஓ... சரி. என்ன விவரம் வேண்டும்?”

“அந்தச் சிறுவனுடைய அப்பா, அம்மா யார்? என்ன செய்கிறார்கள்? அவர்கள் ஊரை காலி செய்துக்கொண்டு போய் எத்தனை நாட்கள் ஆகிறது?”

“நாட்களா? ஒன்றரை வருடமாகி விட்டது. அவன் அப்பா ஒரு தனியார் ஆலையில் ஏதோ கிளார்க்காக வேலை பார்த்துக் கொண்டிருந்தார், அம்மா வீட்டில் தான் சும்மா இருந்தது. வீட்டை காலி செய்வதற்கு சில மாதங்களுக்கு முன்னால் அந்தப் பெண்ணுக்கு ஏதோ ரொம்ப உடம்பு முடியாமல் அடிக்கடி ஆஸ்பத்திரிக்கு அலைந்துக் கொண்டிருந்தனர். அப்புறம் திடீரென்று பார்த்தால் காலி செய்துவிட்டு போய் விட்டனர்!”

“ஆஹான்… யாரிடமும் எதுவும் சொல்லிக் கொள்ளாமல் போய் விட்டார்களா?”

“அப்படித்தான் போலிருக்கிறது… எனக்கும் ரொம்ப தெரியாதுப்பா. ஒரே ஊர் அவ்வளவு தான், மற்றபடி அவர்கள் குடியிருந்தது இரண்டு தெரு தள்ளி இருந்தார்கள் அவ்வளவாக எனக்கு பழக்கமில்லை!”

“சரி... அவர்களுடைய பெயர், குடியிருந்த வீட்டின் விலாசம் மட்டும் சொல்ல முடியுமா?”

“இல்லை தம்பி... அதெல்லாம் எதுவும் தெரியாது. தெரு பெயர் தெரியும், வள்ளுவர் தெரு!”

“ஓகே தாங்க்ஸ் சார்... நான் விசாரித்துக் கொள்கிறேன்!” என விடைப்பெற்றான் ஜெய்.

“பாருப்பா… டிவியில் வெறும் ஒரு நிமிடம் காட்டுகிற நியுஸுக்கு இத்தனை விவரங்கள் சேகரிப்பார்கள் போலிருக்கிறது!” என அவர்களுக்குள் பேசிக்கொண்டு சென்றனர்.

“கோபி… நான் ஜெய் பேசுகிறேன். நீ எனக்கு ஒரு உதவி பண்ண வேண்டுமே. அந்தப் பையனுடைய உடலை ஜி.ஹெச்சுக்கு எடுத்துச் சென்றார்களே... போஸ்மார்ட்டம் முடிந்தவுடன் ரிப்போர்ட் என்னவென்று யாரிடமாவது ரகசியமாக கலெக்ட் செய்துக் கூற முடியுமா?”

“ஓ… கண்டிப்பாக முடியும் சார், எனக்கு தெரிந்தவர்கள் அங்கே வேலையில் இருக்கிறார்கள். நான் விவரம் கேட்டுச் சொல்கிறேன்!”

“ரொம்ப தாங்க்ஸ்… ஆனால் கவனம், நாம் விசாரிப்பது யாருக்கும் தெரியக்கூடாது!” என்று எச்சரித்தான் ஜெய்.

“சரி சார்... ஏன் எதுவும் பிரச்சினையா?”

“ம்… ஒரு சந்தேகம், நீ விசாரித்துச் சொல் பார்க்கலாம்!” என்று மேலே பேச இடம் கொடாமல் வைத்து விட்டான்.

அந்தச் சிறுவனின் குடும்பம் வசித்ததாக மாரிமுத்து குறிப்பிட்ட தெருவை அடைந்த ஜெய்சங்கர், வண்டியை எங்கும் நிறுத்தாமல் அந்தத் தெருவை பார்வையால் அளந்தபடி இரண்டு முறை சுற்றி வந்தான்.

பின் ஒரு வீட்டுத் திண்ணையில் இரண்டு முதியப் பெண்மணிகள் சிறிது நேரமாக ஒரே இடத்தில் அமர்ந்து வம்பளந்துக் கொண்டிருப்பதை கண்டு அங்கே சென்று இறங்கினான்.

கண்களைச் சுருக்கி ஏறிட்டவர்களிடம், “வணக்கம் பாட்டி!” என புன்னகையுடன் கரம் குவித்து அவர்களின் அருகே அமர்ந்தான்.

“யாருப்பா நீ புதிதாக தெரிகிறாய்? உன்னை இதற்கு முன்னே இங்கே பார்த்ததில்லையே…” என்று இழுத்தார் ஒருவர்.

“இல்லை பாட்டி… நான் வெளியூர் ஆள் இங்கே ஒரு வேலையாக வந்தேன். என் சிநேகிதர் ஒருவர் அவர்களுடைய உறவினர் இங்கே இந்த தெருவில் வசிப்பதாக கூறி அவர்களை பார்த்து நலம் விசாரித்து வரச் சொன்னார்!”

“ஓ… அப்படியா... யார்? எந்த வீடு?”

“அதுதான் பாட்டி சிக்கலாகி விட்டது, அவர் குறித்துக் கொடுத்த பெயரையும், முகவரியையும் வரும் வழியில் தொலைத்து விட்டேன். இப்பொழுது எப்படி கண்டுப்பிடிப்பது என்றே தெரியவில்லை!” என்றான் ஜெய் கவலையோடு.

“அடடா… போன் நம்பர் கூட இல்லையா?”

“இல்லையே…”

“வேறு ஏதாவது அடையாளம் சொல்லத் தெரியுமா?”

“அடையாளம்… ஆங்… அவர் ஏதோ ஒரு தனியார் ஆலையில் வேலை பார்த்தாராம், அவர் மனைவிக்கு கூட உடம்பு முடியவில்லையாம். பையனுக்கு ஒரு பத்து வயது இருக்கும்!”

“ஏன்டி? இந்தப் பையன் சொல்கின்ற அடையாளத்தையெல்லாம் வைத்துப் பார்த்தால்… அந்த கஸ்தூரியோட வீடு மாதிரி தெரியவில்லை?”

“அட ஆமாம்… ஆனால் அவர்கள் தான் ஊரை காலிப் பண்ணிட்டு போய் விட்டார்களே!”

‘நாம் தேடி வந்தவர்களை பற்றித்தான் இவர்கள் இருவரும் பேசிக் கொள்கிறார்கள். அப்பொழுது அந்த சிறுவனுடைய அம்மா பெயர் கஸ்தூரியா?’

“ஏன் தம்பி? அவர்கள் இப்பொழுது இங்கே குடியில்லையேப்பா!”

“அப்படியா பாட்டி... அவர்கள் இங்கிருந்து எங்கே போனார்கள் என்று தெரியுமா?”

“தெரியவில்லையேப்பா… ஒன்றரை வருடம் ஆகிவிட்டது. யாரிடமும் ஒரு வார்த்தை சொல்லவில்லை, அந்தப் பெண் கஸ்தூரி அனைவரிடமும் ஓரளவுக்கு நன்றாக தான் பேசிப் பழகுவாள். அப்படியிருந்தும் சொல்லாமல் கொள்ளாமல் போய் விட்டார்கள்!” என்றார் பாட்டி அங்கலாய்ப்புடன்.

“ஏன்? ஏதாவது பிரச்சினையா...”

“பிரச்சினையெல்லாம் பெரிதாக இல்லை… ஆமாம், நீ உறவினர் அனுப்பி வந்ததாக தானே சொன்னாய். அவர்கள் வீட்டில் இவர்களை ஏற்றுக் கொண்டார்களா?”

‘ஏற்றுக் கொண்டார்களாவா… அப்படியென்றால்?’

“என்ன பாட்டி?” என்று அவர் சொன்னது காதில் விழாதப் பாவனையில் கேள்வி எழுப்பினான்.

“அது தான்பா… கஸ்தூரியும் அவள் புருஷனும் காதலித்து தானே கல்யாணம் பண்ணிக்கிட்டாங்க. அவர்கள் வீட்டில் சம்மதிக்கவில்லை என்று ஓடி வந்து விட்டார்களே. இப்பொழுது ஏற்றுக் கொண்டார்களா?”

“ஆங்… அது விஷயமாக தான் என்னை அனுப்பி வைத்தார்கள்!” என்றான் இவன் பட்டென்று.

“பாவம்பா… இரண்டு பேருமே நல்லப் பிள்ளைகள். அந்தப் பையன் ரொம்ப தங்கமான குணம். அது பாட்டுக்கு தான் உண்டு தன் வேலையுண்டுன்னு மில்லுக்கு வேலைக்கு போய்ட்டு வந்திட்டிருக்கும், எந்த வம்பு தும்புக்கும் போகாது!” என்றார் ஒரு மூதாட்டி.

“அந்தப் புள்ளை கஸ்தூரி மட்டும் என்ன? ரொம்ப பொறுமையான பிள்ளை. லட்டுகளாட்டும் இரண்டுமே ஆண் சிங்கக் குட்டிங்களா பெற்றெடுத்தா, மூத்தப்பிள்ளை வயிற்றில் மாசமாக இருக்கும் பொழுது தான் இங்கே குடி வந்தாங்க!” என்று வேகமாக அந்தப் பெண்ணிற்கு பரிந்து வந்தார் மற்றொருவர்.

‘லட்டாட்டம் இரண்டு ஆண் சிங்கங்கள்!’

அந்த வார்த்தைகள் அவன் இதயத்தை கத்திக்கொண்டு கீறியது. தொண்டையில் அடைத்த துக்கத்தை விழுங்கியவன் மேலும் விவரம் கேட்டான்.

“பெரிய பையனுக்கு வயது என்ன இருக்கும்?” என்று கமறிய குரலில் கேட்டான் ஜெய்.

“அதுதான் நீ சொன்னியே... பத்து வயது இருக்கும்!”

அந்தப் பாட்டி கூறிய பதிலில் துவண்ட ஜெய்சங்கர், “ம்ஹும்…” என்று மட்டும் பதிலளித்தான்.

“என்னப்பா ஒரு மாதிரி ஆகி விட்டாய்? எதுவும் பிரச்சினையா...” என்று வினவினார் அம்மூதாட்டி.

“இல்லை பாட்டி... அவர்களை பற்றி விவரம் எதுவும் தெரிந்துக்கொள்ள முடியவில்லையே என்ற வருத்தம் தான் வேறொன்றுமில்லை!” என்றான் சோர்வாக.

“அச்சச்சோ… பாவம் எங்கே இருக்கிறார்களோ என்னவோ? அந்தப் பிள்ளை கஸ்தூரிக்கும் உடம்பு சரியாகி விட்டதா என்னவென்றும் தெரியவில்லை!” என்றார் அவர் தன் பங்குக்கு ஆயாசமாக.

“அவங்க உடம்புக்கு என்ன பிரச்சினை?”

“ஏதோ சிறுநீரகத்தில் கோளாறு என்று தான் ஆஸ்பத்திரிக்கு அலைந்துக் கொண்டிருந்தார்கள். சின்னப் பையனை என்னிடம் தான் பார்த்துக்க சொல்லி விட்டுச் செல்வார்கள். அப்பா, அம்மா விட்டுப் போகிறார்கள் என சோகமாக இருப்பவன் தன் அண்ணன் பள்ளியிலிருந்து வந்தவுடனே சந்தோசமாக விளையாட ஆரம்பித்து விடுவான்!” என்று தன் பழைய நினைவுகளை நினைவுக் கூர்ந்தார் மூதாட்டி.

அதற்குமேல் மனபாரம் தாங்க முடியாமல் சட்டென்று எழுந்தவன், “சரி பாட்டி நான் கிளம்புகிறேன், அவர்களை பற்றி ஏதேனும் விவரம் தெரிந்தால் எனக்கு இந்த நம்பருக்கு கால் பண்ணி தகவல் சொல்லுங்கள்!” என்று தன் நம்பரை அவர்களிடம் குறித்துக் கொடுத்துவிட்டு அங்கிருந்து வருத்தத்துடன் கிளம்பினான் ஜெய்சங்கர்.

திடீரென்று அக்கம்பக்கம் சொல்லிக் கொள்ளாமல் கிளம்பிச் சென்ற அக்குடும்பத்தை பற்றிய விவரம் மர்மமாகவே இருந்தது.
 
ப்ரியசகி

Author
Author
Joined
May 11, 2020
Messages
7,110
Reaction score
18,603
Points
113
Location
India
Yen sollama kollama kelambitanga oora vittu
 
banumathi jayaraman

Well-known member
Joined
Jan 17, 2018
Messages
28,763
Reaction score
68,700
Points
113
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
தீபா பாபு டியர்
 
Advertisements

Latest Episodes

Advertisements

Top