Deepa Babu's Yennai Theriyuma 8

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Deepa Babu

Author
Author
Joined
Feb 18, 2021
Messages
1,044
Reaction score
2,430
Points
113
Location
salem
YT Front cover.jpg

அத்தியாயம் 8

ஜெய் நிண்ணியூரை நெருங்கும் வேளையில் வானம் இருளைப் பூச ஆரம்பித்திருக்க, மொபைல் தன் நினைவை அவனுக்கு ஊட்டும் விதமாக அழைப்பை விடுத்தது.

ப்ளுடூத்தில் பிக்கப் செய்தவன், “ஹலோ!” என்க, எதிர்புறம் கோபி பேசினான்.

“சார்! நீங்கள் சந்தேகப்பட்டது சரி தான், போஸ்மார்ட்டம் ரிப்போர்ட் வந்து விட்டது. அந்தப் பையனை முதலில் யாரோ நன்றாக அடித்திருக்கிறார்கள், பிறகு வலுக்கட்டாயமாக தண்ணீரில் மூழ்கடித்து கொன்றுவிட்டு உடலை ஏரியில் வீசிச் சென்றிருப்பார்கள் போலிருக்கிறது!”

அவன் அனுமதியில்லாமல் விழிகள் நீரைச் சுரக்க, பைக்கின் பிடியை விரல்களால் இறுக்கியவன் சில நொடிகள் எவ்விதப் பேச்சுமின்றி இதழ் கடித்தபடி அமைதியானான்.

“ஹலோ… சார்… சார் லைனில் இருக்கிறீர்களா?”

லேசாக தொண்டையை செறுமிய ஜெய், “ம்… இந்தக் கேஸில் அடுத்து போலீஸ் என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறார்கள்?” என்று சோர்வாக கேட்டான்.

“ப்ச்… எங்கே சார்? பையனுடைய குடும்பத்தை பற்றி ஒரு விவரமும் தெரியவில்லை. இதுவரை அவனை தேடியோ, உடலை வாங்கவோ யாரும் முன்வரவில்லை. அதனால் ஒரு வாரம் வரை மார்ச்சுவரியில் வைத்திருந்து பார்த்துவிட்டு யாரும் வரவில்லை என்றால் ஏரியில் குளிக்கச் சென்ற அனாதை சிறுவன் நீரில் மூழ்கி சாவு என்று கேஸை க்ளோஸ் செய்து விடலாம் என பேசிக் கொள்கிறார்கள்!” என்றான் கோபி வேதனையுடன்.

இரத்தம் கொதிக்க பல்லைக் கடித்தவன் உடனே தீவிரமானான்.

“கோபி… எனக்கு வண்டியில் கட்டி எடுத்துச் செல்வது போல் ஸ்போர்ட்ஸ் சைக்கிள் ஒன்று வேண்டுமே, நன்றாக வேகமாக ஓட்டுவதற்கு ஏற்றார் போல் கண்டிஷனாக இருக்க வேண்டும்!”

“எதற்கு சார்? நீங்கள் மாலையிலிருந்தே சரியில்லையே ஒரு மாதிரி இருக்கிறீர்கள்… அந்தச் சிறுவனை உங்களுக்கு தெரியுமா?”

“கோபி… தயவுசெய்து என்னிடம் எதுவும் கேள்வி கேட்காதே, எதையும் சொல்லும் மனநிலையில் நான் இல்லை. உன்னால் எனக்கு உதவ முடியுமா முடியாதா?” என்று அதிகாரமாக வினவினான் ஜெய்.

தன்னை விட சீனியரான அவனிடம் அதற்குமேல் கேள்விகளை கேட்டுத் துளைத்தெடுக்க விரும்பாமல், “நிச்சயமாக சார்… நீங்கள் கேட்பது போன்ற சைக்கிள் என் பிரெண்ட் ஒருவனிடம் இருக்கிறது. நான் அவனிடம் பேசிவிட்டு உங்களை தொடர்பு கொள்கிறேன்!” என்றான் வேகமாக.

“ம்… ஓகே!” என்று இணைப்பை துண்டித்து கைபேசியை பாக்கெட்டில் போட்டவன், வண்டியை கடைத்தெரு பக்கம் திருப்பினான்.

தன் திட்டத்திற்கு தேவையான பொருட்களை எல்லாம் வாங்கிக்கொண்டு விஸ்வநாதன் வீட்டிற்கு திரும்பினான் ஜெய்.

அவன் புல்லட் சத்தம் கேட்டு வேகமாக வெளியே வந்த மணியை ஏறிட்டவன், “ஒரு நிமிஷம் அம்மாவை கூப்பிடு!” என்றான் வாயிலில் நின்றுக்கொண்டு.

புருவம் சுருக்கியவள், “ஏன் நீங்கள் உள்ளே வர மாட்டீர்களா?” என்றாள்.

“எதைச் சொன்னாலும் எதிர்கேள்வி கேட்காமல் செய்ய மாட்டேன் என்று கங்கணம் கட்டிக் கொண்டுள்ளாயா?” என்றான் அவளிடம் கடுப்புடன்.

ஹும்… சிடுமூஞ்சி… சிடுமூஞ்சி என பழிப்புக் காண்பித்தவள் பெரியம்மா என அழைத்தபடி உள்ளே சென்றாள்.

அதற்குள் ஜெய்யின் குரல் கேட்டு விஸ்வா வெளியே வந்தார். அன்று நடந்தச் சம்பவங்கள் முழுவதையும் மனைவியும், சிறிய மகளும் அவரிடம் ஏற்கனவே ஒப்பித்திருந்தனர்.

“என்னப்பா?”

“சார் ஒரு டெத்துக்கு போய் வந்தேன். அதுதான் எங்கே குளிப்பது…” என்றவன் இழுக்க விரைவாக பதிலளித்தார் அவர்.

“அதோ… அந்தப் பக்கம் தோட்டத்தின் ஓரத்தில் ஒரு பைப் போட்டிருக்கிறது பாருப்பா, அதிலேயே குளித்துவிடு. நான் மாடியிலிருந்து உன்னுடைய பேக்கை எடுத்துவர சொல்கிறேன்!”

“தாங்க்ஸ் சார்!” என்றவன் அருகிலிருந்த செம்பருத்தியின் கிளைகளை ஒதுக்கிக்கொண்டு பின்பக்கம் சென்றான்.

அதுவரை தன் பெரியப்பாவின் பின்புறமிருந்து அவர்கள் பேசுவதை எல்லாம் ஒட்டுக்கேட்டு கொண்டிருந்தவள், நான் போய் எடுத்து வருகிறேன் என்று மாடிக்கு ஓடினாள்.

“இவள் ஏதோ சரியில்லை என்று நான் தான் அப்பொழுதே சொன்னேனே!” என கணவனிடம் ரகசியக் குரலில் முணுமுணுத்தார் லட்சுமி.

“ம்… ம்… சரி நீ எதுவும் கேட்காதே, அவளிடம் நிதானமாக நான் பேசிக் கொள்கிறேன்!” என்றார்.

குளித்து முடித்து உடைமாற்றி உள்ளே வந்த ஜெய்யிடம், “வாப்பா… முதலில் சாப்பிடலாம்!” என்று அவனை உணவருந்த அழைத்துச் சென்றார் விஸ்வா.

சொல்லாமல் எந்த ஒரு வேலையையும் உடல் வளைந்து செய்ய விரும்பாத நம் வாழைப்பழ சோம்பேறி மணி, வேகமாக அவர்கள் சாப்பிடுவதற்கு தட்டு, தண்ணீர் என தேவையானதை விறுவிறுவென எடுத்து வைத்தாள்.

தங்கள் பெண்ணின் மனம் அலைபாய்வதை எண்ணி லேசாக துணுக்குற்றிருந்த பெரியவர்களுக்கு அவளது செயலில் அவர்களையும் மீறி புன்னகை அரும்பியது.

உணவில் கவனமாக இருந்த ஜெய்யின் பார்வை மறந்தும் அவள் புறம் திரும்பாதது அவனிடம் அவர்களுக்கு நன்மதிப்பை ஏற்படுத்தியது.

சிந்தனையுடன் அமர்ந்திருந்தவனை கலைத்தார் விஸ்வா, “என்னப்பா நடந்தது? ஏதோ டெத்துக்கு சென்று வந்ததாக சொன்னாயே!” என விசாரித்தார்.

சட்டென்று முகம் கசங்கியவன் நம்பிக்கைக்குரியவர் என்பதால் அவரிடம் நேற்று முதல் நடந்ததை எல்லாம் விரிவாக எடுத்துரைத்தான்.

பெண்கள் இருவரும் அதிர்ந்து விழிகள் கலங்க நின்றிருக்க, அவருக்குமே அவன் கூறிய விஷயத்தை ஜீரணிக்க சற்று சிரமமாக தான் இருந்தது என்றாலும் அவனை சமாதானப்படுத்தினார்.

“சரி விடுப்பா… உன் பிரொபஷனில் தினம் தினம் இதை நீ சந்தித்து தான் ஆக வேண்டும்!”

“அது எனக்கும் தெரியும் சார். ஆனால் என் உதவியை நாடி அருகில் வந்துச் சென்ற சிறுவனின் உயிரை என்னால் காப்பாற்ற இயலாமல் போனதே என்பது தான் வேதனையாக இருக்கிறது!” என்றான் கன்னங்களில் வழிந்த நீரை துடைத்தபடி.

“ம்… என்ன செய்வது? நீ வேண்டுமென்றா பொறுப்பில்லாமல் இருந்தாய், இன்று இரவு செல்வதற்குள் இப்படி நடக்க வேண்டுமென்று விதி இருந்திருக்கிறது!” என்று அவனை ஆறுதல்படுத்தினார்.

“நானும் என் பங்கிற்கு காலையில் உங்கள் வேலைக்கு இடையூறாக இருந்து விட்டேன்!” என்றாள் மணி கவலைக் குரலில்.

“ப்ச்… நீ என்ன செய்தாய்? நேற்று இரவே கொன்று விட்டார்கள் போலிருக்கிறது!” என்றவனின் விழிகள் ஆத்திரத்தில் இரத்த நிறம் கொண்டது.

சிறிது நேரம் அங்கே பேச்சின்றி அமைதியில் கழிய, கோபியிடமிருந்து அவனுக்கு போன் வந்தது.

“ஒரு நிமிடம்…” என அவர்களிடம் தெரிவித்துவிட்டு, “சொல் கோபி!” என்று மாடிக்குச் சென்றான்.

அடுத்த அரை மணியில் வெளியே செல்லக் கிளம்பி வந்தவனை கண்டு லட்சுமி திகைத்தார். இதை எதிர்பார்த்திருந்த விஸ்வா எவ்வித குறுக்கீடும் இன்றி அவனை அமைதியாகப் பார்த்தார்.

“சார்… நான் ராம்குமார் சாரிடம் அனைத்து விவரங்களையும் கூறி விட்டேன்!” என்றவன் தன் திட்டத்தை அவர்களிடம் தெரிவித்துவிட்டு,

“நான் கிளம்புகிறேன், மொபைல் வைப்ரேஷனில் தான் இருக்கும் அங்கிருந்து எதுவும் பேச முடியாது. அங்கே உள்ள சூழ்நிலையை அலசி ஆராய்ந்த பின்பு எதுவும் எமெர்ஜென்சி என்றால் உங்களுக்கு டெக்ஸ்ட் செய்கிறேன். அப்பொழுது அதற்கேற்ப நீங்கள் எனக்கு உதவுங்கள்!” என்று தோள்களில் பேக்கை மாட்டி பெல்ட் மாட்டினான்.

“ஏன்பா நடந்ததை போலீஸில் சொன்னால் என்ன? அது எப்படிப்பட்ட இடம் என்று நேற்றே சொன்னேனே… எதற்காக நீ ஆபத்தை தேடிச் செல்கிறாய்?” என கவலையுடன் வினவினார் லட்சுமி.

“இல்லைம்மா… இதுபோன்ற விஷயங்களில் போலீஸை மட்டும் முழுமையாக நம்பி நாம் கையை கட்டிக்கொண்டிருக்க முடியாது. எல்லா துறைகளிலுமே நல்லவர்களும் இருக்கிறார்கள், கெட்டவர்களும் இருக்கிறார்கள்.

நம் நேரம் நாம் உதவியை நாடும் பொழுது யாரிடம் மாட்டுவோமோ… எதற்கு விஷப் பரீட்சை? தானாக கிடைத்த வாய்ப்பை ஒரு முறை தான் தவற விட்டு விட்டேன், இனி அதற்கு நான் தயாராக இல்லை.

மேலும் அச்சிறுவனை சுற்றி நிறைய குழப்பங்கள் பின்னிக் கிடக்கின்றது. அதை நான் நேரில் சென்று என்னவென்று தெரிந்துக்கொண்டு அதற்கேற்ப நடவடிக்கை எடுக்க வேண்டும்!” என்று கிளம்பினான் ஜெய்.

“சரி பார்த்து ஜாக்கிரதையாக சென்று வாருங்கள், எந்த ஒரு ஆபத்து என்றாலும் உடனடியாக பெரியப்பாவிற்கும், உங்கள் பாஸிற்கும் தெரியப்படுத்தி விடுங்கள்!” என்றாள் மணி லேசான தவிப்போடு.

நெற்றிச் சுருங்க அவளை கூர்ந்தவன் பின் என்ன நினைத்தானோ சரி என்ற ஒற்றை வார்த்தையை மட்டும் அவளிடம் பிரசவித்துவிட்டு வெளியே சென்று விட்டான்.

அவனுக்காக கோபி காத்திருந்த இடத்தை அடைந்தவன் அவன் கொண்டு வந்திருந்த சைக்கிளை வாங்கி தன் வண்டியில் இறுகக் கட்டினான்.

“சார்... நீங்கள் நடந்துக் கொள்வதையெல்லாம் வைத்துப் பார்த்தால் அந்தச் சிறுவன் தொடர்பான ஏதோ ஒரு விஷயம் உங்களுக்கு தெரிந்திருக்கிறது என்று நினைக்கிறேன். நானும் வருகிறேனே உங்களுக்கு உதவியாக இருக்கும்!”

“இல்லை கோபி வேண்டாம், பிரச்சினையின் தீவிரமோ அதன் தொடர்பான விவரமோ எதுவுமே எனக்கு தெரியாது. ஒருவேளை நான் போகுமிடத்தில் பெரிதாக எந்த ஒரு விஷயமோ பிரச்சினையோ இல்லாமல் கூட இருக்கலாம், எதற்கு நீ வீணாக அலைந்துக்கொண்டு. முதலில் நான் சென்றுப் பார்த்து வருகிறேன், பிறகு தேவைப்பட்டால் உன்னை அழைக்கிறேன்!”

“ஆனால் ஏதாவது ஆபத்து என்றால் ஒற்றை ஆளாக…” என்ற கோபியை தடுத்து மெல்லிய புன்னகையை வீசினான் ஜெய்.

“இதுபோன்ற பனங்காட்டு நரிகள் உலகில் நிறைய இருக்கிறது. அவர்களில் குறிப்பிட்ட சதவீதத்தையாவது இந்த உலகிற்கு முன் வெளிப்படுத்தாமல் அவ்வளவு விரைவில் நான் மாட்டிக்கொள்ள மாட்டேன். அதுவும் இந்தச் சிறுவனின் விஷயத்தில் நான் மிகுந்த எச்சரிக்கையுடன் தான் இருப்பேன். டோன்ட் வொர்ரி!” என்று அவனுக்கும் சில குறிப்புகளை கொடுத்துவிட்டு வண்டியை எடுத்தான்.

முதல் நாள் அந்தச் சிறுவனை தான் கண்ட இடம் வரைக்கும் வண்டியில் சென்றவன் அங்கே மறைவாக சிறு பாறைக்குன்றின் பின் தன்னுடைய பைக்கை நிறுத்தி லாக் செய்துவிட்டு, சைக்கிளை சுற்றியுள்ள கயிற்றை மளமளவென்று பிரித்து வண்டியிலேயே அதை லேசாக சுற்றி வைத்தான்.

பின்புறம் மாட்டியிருந்த பேக்கை எடுத்து அத்தியாவசியமாக தேவைப்படும் பொருட்களை மட்டும் பான்ட் பாக்கெட்களில் தனித்தனியாக பிரித்து திணித்துக்கொண்டு, அந்த மலையடிவாரத்தை நோக்கி சைக்கிளை வேகமாக மிதிக்க ஆரம்பித்தான் ஜெய்சங்கர்.

ஒரே சீரான வேகத்தில் மலையடிவாரத்தை அணுகிய ஜெய், தூரத்தில் தெரிந்த அம்மாந்தோப்பை கைகளிலிருந்த பைனாகுலரில் ஜும் செய்து ஆராய்ந்துப் பார்த்தான்.

தோப்பில் மெலிதான வெளிச்சம் கசிந்துக் கொண்டிருக்க ஆள் நடமாட்டம் இல்லாமல் அமைதியாக இருந்தது அந்த இடம். அருகில் இரண்டு சிறிய ஓட்டு வீடுகளும், பண்ணை வீடு போல் பெரிய மாடி வீடு ஒன்றும் சற்றுத்தள்ளி இருந்தது.
 
ப்ரியசகி

Author
Author
Joined
May 11, 2020
Messages
7,110
Reaction score
18,603
Points
113
Location
India
Acho thaniya porane yethum prachana varama irukanum.
 
Advertisements

Latest Episodes

Advertisements

Top