• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Latest Episode en kaathal kannalagi 7

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

umadeepak25

அமைச்சர்
SM Exclusive
Joined
Jan 17, 2018
Messages
1,547
Reaction score
7,648
அத்தியாயம் – 7

அன்று காலை சம்யுக்தா, அந்த பள்ளியின் வெளியே என்ன நடக்கிறது என்று கண்காணிக்க செல்ல வேண்டும் என்று தீர்மானித்து கிளம்பிக் கொண்டு இருந்தாள். அப்பொழுது அவளை தேடி, அவளின் அறைக்கு வந்த அவளின் அன்னை, இன்று எங்கும் போக வேண்டாம் என்று கூறவும், ஏன் என்று கேட்டாள்.

“இன்னைக்கு நாள் நல்லா இருக்கு, அதனால உன்னை அங்க உன் புருஷன் வீட்டுக்கு கூட்டிட்டு போக எல்லோரும் வராங்க சம்யு” என்று அன்னை கூறிவிட்டு செல்லவும், பல்லை கடித்தாள் மனதிற்குள்.

செல்லை எடுத்து, அவளின் கணவருக்கு அழைப்பு விடுத்தாள். ரிங் போய்க்கொண்டிருக்கிறதே தவிர, அதை எடுக்கும் வழியை காணோம்.

“டேய் ராசுகுட்டி! பிளான் பண்ணி என்னை போக விடாம பண்ணுற ல. இரு டா நீ செத்த இன்னைக்கு, கைல சிக்கின கைமா போட்ருவேன் உன்னை” என்று மனதிற்குள் அவனை வறுத்து எடுத்தாள்.

அவனை இதுவரை இப்படி மரியாதை குறைவாக எண்ணியதும் இல்லை, பேசியதும் இல்லை. ஆனால் நேற்று அங்கு நடந்த பேச்சுவார்த்தைக்கு பிறகு, இருவரும் அடிதடியில் இறங்காத குறை தான்.

அவளுக்கு உடுத்த சேலையும், நகையும் கொண்டு வந்து வைத்தார் அவளின் அன்னை. இனி ஒன்றும் செய்ய முடியாது என்ற நிலையில் அன்னை கொடுத்த புடவையை அணிந்து கொண்டு தயாரானாள்.

“ஹ்ம்ம்.. எங்க அண்ணனுக்கு கடைசி, அத்தை மக தான் கிடைச்சு இருக்காப்ல. ஏன் கோதை அக்கா, அண்ணன் ஏன் இப்படி யாருக்கும் தெரியாம கல்யாணம் பண்ணிகிச்சு” என்று ராசப்பனின் தங்கை ரோஜா, அவளின் அக்கா கோதையிடம் கதை அளந்துக் கொண்டே, சம்யுக்தா அறைக்கு வந்து சேர்ந்தாள்.

“நமக்கு இப்போ எதுக்கு இந்த ஆராய்ச்சி, நமக்கு கொடுத்த வேலையை இப்போ பார்க்கலாம் வா” என்று கூறிவிட்டு, தம்பி மனைவி சம்யுக்தாவிடம் சென்றாள்.

இருவரின் சம்பாஷனையும் கேட்டுக் கொண்டு இருந்த சம்யுக்தாவிற்கு, இனி தான் அங்கே சென்ற பிறகு அவர்களின் தந்தையின் மறு பக்கத்தை போட்டு உடைத்தால் என்ன செய்வார்கள் இவர்கள் என்ற எண்ணம் எழுந்து, மனதை வலிக்க செய்தது.

“சம்யு! பூ வைக்கணும் ஹேர்பின் இருக்கா?” என்று கோதை அவளிடம் கேட்ட உடன் தான் சுய உனர்வுக்கு வந்தாள்.

“சாரி அண்ணி! நீங்க வந்ததை கவனிக்கல, வாங்க. வா ரோஜா, எப்படி இருக்க?” என்று அவர்களை வரவேற்று, நலம் விசாரித்துக் கொண்டு இருந்தாள்.

கையோடு ஹேர்பின் எடுத்துக் கொடுத்து, ரோஜாவிடம் பேசிக் கொண்டு இருந்த சம்யுக்தாவை பார்க்க கோதைக்கு ஆச்சர்யமாக இருந்தது. அன்றைக்கு, தந்தையை கேள்வி கேட்ட சம்யுக்தா இவள் தானா என்று சந்தேகம் வந்தது.

அந்த அளவிற்கு, புகுந்த வீட்டு ஆட்களுக்கு அவள் இப்பொழுது கொடுக்கும் மரியாதையும், பணிவும் அவளை வியப்பில் ஆழ்த்தியது. அவளை அழைத்துக் கொண்டு இருவரும் கீழே இறங்கி வர, அங்கே நடு கூடத்தில் அவள் அமர மனை போட்டு இருந்தனர்.

அதில் அவளை அமர வைத்து, நலங்கு செய்தனர் அங்கு கூடி இருந்த உறவு பெண்கள். அவளுக்கு நலங்கு செய்து முடித்த கையோடு, பக்கத்தில் இன்னொரு மனையை போட்டு அதில் ராசப்பனை அமர வைத்தனர்.

அதுவரை லேசான மனநிலையில் இருந்த சம்யுக்தா, அவன் அருகில் வந்து உட்காரவும், அவனை பார்த்து யாருமறியாமல் முறைக்க தொடங்கினாள் அவனை.

“ஹே ஐ பியுட்டி! மாமனை பார்த்து ரொமாண்டிக் லுக் விடனும் பேபி, இப்படி முறைக்க கூடாது” என்று அவளை பார்த்து கண்ணடித்து சிரிக்கவும், இவள் பல்லை கடித்தாள்.

“நீ தனியா மாட்டுவ ல, உன்னை அப்போ கவனிச்சுக்குறேன் டா ராசுகுட்டி” என்று கூறியவளை பார்த்து இப்பொழுது, இவன் முறைத்தான்.

“எனக்கு பிரித்விராஜ்ன்னு இன்னொரு பேர் இருக்கு, அழகா மாமனை ப்ரித்வின்னு கூப்பிடு பியுட்டி” எனவும், அவள் வேண்டும் என்றே அவனை ராசுகுட்டி, ராசுகுட்டி என்று அழைத்து சீண்டிக் கொண்டு இருந்தாள்.

“நீ தனியா மாட்டுவ என் கிட்ட, அப்போ உன்னை கவனிச்சுக்குறேன் யுக்தா” என்று கூறியவனை பார்த்து, இவள் பழிப்பு காட்டினாள்.

அதற்குள் பெரியவர்கள், இவர்களுக்கு நலங்கு வைத்து முடித்துவிட்டு மணமக்களை அழைத்துக் கொண்டு, அவர்களின் குல தெய்வ கோவிலுக்கு அழைத்து சென்றனர்.

அங்கே பூஜை ஏற்பாடு செய்து இருந்ததால், எல்லோரும் அங்கே குழுமி இருந்தனர். சம்யுக்தாவை பொங்கல் வைக்க சொல்ல, அவள் திருதிருவென்று முழித்தாள்.

வேலை, வேலை என்று ஓடிக் கொண்டு இருந்ததால், அன்னை சொல்லியும் கூட கிட்சன் பக்கம் எட்டி பார்க்கவில்லை அவள். சுடு தண்ணீர் வைக்கவே திணறும் அவளை, பொங்கல் வைக்க கூறினால் பாவம் என்ன செய்வாள் அவளும்.

ராசப்பனோ, அவள் முழித்தது அதன் பிறகு அவள் அன்னையிடமும், தன் தாயிடம் கேட்டு அவள் பொங்கல் வைக்கும் அழகை எல்லாம் வளைத்து வளைத்து போட்டோ எடுத்தும், வீடியோ எடுத்தும் கொண்டு இருந்தான்.

ஒரு வழியாக பொங்கல் வைத்து முடிக்கவும், மணமக்கள் இருவரும் சேர்ந்து அதை எடுத்துக் கொண்டு சாமிக்கு படையல் போட்டனர். அங்கே பூஜை முடிந்து தீபாராதனை காட்டும் பொழுது, இருவரும் மனதிற்குள் இனி எப்பொழுதும் பிரியாமலும், குடும்பத்தில் ஒற்றுமையும் நிலைத்து இருக்க வேண்டினர்.

அவர்களின் வேண்டுதலை கேட்ட கடவுளோ, அதற்க்கு இன்னும் சில சோதனைகளை கடக்க வேண்டும் என்பது போல் மனதில் கூறிக் கொண்டார். அதன் பிறகு, அங்கே சம்யுக்தா தன் பெற்றவர்களிடம் பிரியா விடை பெற்றுக் கொண்டு சிறிது கண் கலங்கி, ராசப்பனுடன் புகுந்த வீடு சென்றாள்.

வீட்டிற்கு வெளியே இருவரையும் நிற்க வைத்து, அவளின் நாத்தனார் இருவரும் ஆலம் சுற்றி அவர்களை வரவேற்றனர். வலது காலை எடுத்து வைத்து, அந்த வீட்டிற்குள் இப்பொழுது உரிமையாக உள்ளே நுழைந்தாள்.

எந்த வீடு, அவளின் அன்னையை விரட்டியதோ அதே வீட்டிற்குள் இப்பொழுது உரிமையாக, அந்த வீட்டு மருமகளாக உள்ளே நுழைந்து இருக்கிறாள்.

“அம்மா! கவலை படாதீங்க, சீக்கிரம் உங்களையும், அப்பாவையும் மாமாவே வந்து கூப்பிடுவார் வீட்டுக்கு. அப்புறம் நீங்க ஆசைப்பட்ட மாதிரி, எல்லோரும் சேர்ந்தே இருக்கலாம்” என்று மனதிற்குள் தன் தாயிடம் சொல்லிக் கொண்டாள்.

ஹாலில் இருவரையும் அமர வைத்து, பாலும், பழமும் மணமக்களுக்கு கொடுத்து உபசரித்தனர் உறவு பெண்மணிகள். சிறிது நேரத்தில், ராசப்பனின் தூரத்து முறை பெண்கள் எல்லாம் அவனை கேலி செய்ய தொடங்கினர்.

“எங்களை எல்லாம் இப்படி ஏமாத்திபுட்டியே மாமா, உனக்காக நாங்க எம்புட்டு ஆசையா காத்து இருந்தோம். இப்படி பட்டணத்து பிள்ளையை கட்டிகிட்டியே, இது நியாயமா?” என்று கண்ணீர் வடிக்காத குறையாக, அவனை வம்பு வளர்த்துக் கொண்டு இருந்தனர்.

 




umadeepak25

அமைச்சர்
SM Exclusive
Joined
Jan 17, 2018
Messages
1,547
Reaction score
7,648
“நீங்க எல்லாம் எனக்கு தங்கச்சி மாதிரி, உங்களை எல்லாம் நான் அப்படி நினைக்கவே இல்லை” என்று அலறினான், சம்யுக்தாவின் முறைப்பில்.

“சும்மா அக்கா முறைக்குதுன்னு, இப்படி சொல்லாத மாமா. உன்னை எங்களுக்கு தெரியாதா? அடியே பாக்கியா! மாமா நம்மளை பார்த்து லுக் விட்டதை எல்லாம், கொஞ்சம் எடுத்து சொல்லு அக்காவுக்கு” என்று விடுவேனா என்று மீண்டும் வம்பு இழுத்தவர்களை பார்த்து, கை எடுத்து கும்பிட்டான்.

“தங்கச்சிகளா! போதும், மாமா, மாமான்னு சொல்லி இப்படி என் குடும்பத்துல வந்து கும்மி அடிச்சிட்டு போகாதீங்க, ராசாத்திகளா. ஏற்கனவே! எண்ணிக்கை எல்லாம் ஏறிகிட்டே போகுது, இதுல கூட கொஞ்சம் நீங்க ஏத்தி விட்டு புன்னாக்காதீங்க, உங்களுக்கு புண்ணியமா போகும்” என்று அவன் அலறி கூறியதை பார்த்து, சம்யுக்தாவிற்கு சிரிப்பு அடக்க முடியவில்லை.

நன்றாக சிரித்துக் கொண்டு இருந்த மனைவியை பார்த்து, வாஞ்சையாக புன்னகைத்தான். இறுக்கமான மனநிலையில் வந்தவளை, இப்படி நிமிடத்திற்குள் புன்னகை முகமாக மாற்றும் வித்தை, அவன் ஒருவனை தவிர யாரால் முடியும்.

அதற்குள், மூத்த பெண்மணிகள் அவளை தனியாக அழைத்து சென்று பால் காய்ச்ச செய்து, அதன் பின் விளக்கேற்றி வைக்க செய்தனர். சிறிது நேரத்தில், எல்லோருக்கும் இரவு உணவு பரிமாற வீட்டு சிறியவர்கள் செய்ய, பெரியவர்கள் மணமக்களுக்கு தனியாக இலை போட்டு விருந்து படைத்தனர்.

இலையில் இருந்த விதவித உணவுகளை எல்லாம் பார்த்து, இத்தனையும் உண்ண வேண்டுமா என்று பக்கத்தில் இருந்த அவளின் ராசுகுட்டியிடம் கேட்டாள்.

“முடிஞ்ச வரை சாப்பிடு பியுட்டி, இல்லன்னா வருத்தப்படுவாங்க எல்லாம். உனக்காக தான் எல்லோரும் சேர்ந்து, ரொம்ப நாள் கழிச்சு இப்படி விருந்து வச்சு இருக்காங்க” என்று கூறவும், முடிந்த வரை அவளும் உண்டு முடித்தாள்.

அதன் பிறகு, கோதை அவளை ஒரு அறைக்கு அழைத்து சென்று அவளை குளித்து விட்டு, வேறு புடவை உடுத்துமாறு கூறிவிட்டு செல்லவும் தான், அவளுக்கு நிதர்சனம் புரிந்தது.

“ஆத்தி! இதை எப்படி மறந்தேன், பரவால்லை அவன் கிட்ட கேட்க வேண்டியது ஒன்னு இருக்கு. அதுக்கு பதில் சொல்லல ஒழுங்கா, மொத்திட்டு படுக்க வேண்டியது தான்” என்று எண்ணிக் கொண்டு அவளும் தயாரானாள்.

காமாட்சி, அவளின் கையில் பால் சொம்பை கொடுத்துவிட்டு, ஒரு தாயாக அறிவுரை எல்லாம் கூறிவிட்டு, அவளை ஆசிர்வதித்து மாடிக்கு அனுப்பினார் ராசப்பனின் அறைக்கு. முதலில் தயங்கிக் கொண்டே சென்றவள், அதன் பிறகு அவளிடம் கேட்க வேண்டிய கேள்வி இருப்பதால், ஒரு முடிவுடன் அவனின் அறைக்கதவை தட்டிவிட்டு, உள்ளே நுழைந்தாள்.

உள்ளே வந்தவள், அங்கே அவன் இல்லாததை பார்த்து எங்கே சென்றான் என்று தேட துவங்கினாள். கையில் இருந்த பால் சொம்பை மேஜையில் வைத்துவிட்டு, திரும்பும் பொழுது அவன் நெஞ்சில் மோதி நின்றாள்.

“இப்படியா டா தடிமாடு மாதிரி வந்து இடிச்சிகிட்டு, வந்து நிக்குறது. சரி எனக்கு இப்போ உண்மையை சொல்லு, நீ தான இன்னைக்கு நான் ஸ்கூல் போவேன் தெரிஞ்சிகிட்டு, இன்னைக்கு இந்த டே செலக்ட் பண்ண” என்று நேரடியாக விஷயத்துக்கு வந்தாள்.

“ம்ம்.. ஆமா நான் தான் சொன்னேன் ல, என் கிட்ட இருந்து உன்னால ஓடவும் முடியாது, ஒழியவும் முடியாதுன்னு. சரி அதை விடு, என்னை ப்ரித்வி மாமான்னு கூப்பிடு பார்ப்போம்” என்று பேச்சை மாற்றினான்.

“பேச்சை மாத்தாத, எனக்கு நீ ஏன் இப்படி செய்றன்னு உண்மையான காரணம் வேணும்” என்று அழுத்தமாக அவனை பார்த்து கேட்டாள்.

அவனும் விடுவேனா பார் என்று, நீ ப்ரித்வி மாமா என்று கூப்பிட்டால் கூறுகிறேன் என்று அவன் கொக்கி போட்டு விட்டான். அவளோ, எதற்கு இப்பொழுது இப்படி செய்கிறான் என்று தெரியாமல் குழம்பினாள்.

அவளோ, திரும்ப திரும்ப கேட்டு பார்த்து சலித்து விட்டாள். அவனோ, சொன்னதையே திரும்ப திரும்ப சொல்லவும், அங்கு இருந்த தலையணையை எடுத்துக் கொண்டு அவனை மொத்த தொடங்கினாள்.

“ஏய்! பேச்சு பேச்சா இருக்கும் பொழுது, இப்படி அடிக்கிறது தப்பு மா” என்று கூறினான்.

“நானும் பார்த்துகிட்டு தான் இருக்கேன், காரணம் கேட்டா உருப்படியா சொல்ல மாட்டேங்குற, இதுல உன்னை ப்ரித்வின்னு கூப்பிடனுமா, முடியாது டா ராசுகுட்டி என்ன செய்வ?”

“இரு நாளைக்கு காலையில், உன் முறை பொண்ணுங்க முன்னாடி ராசுகுட்டின்னு கூப்பிடுறேன்” என்று அவள் பதிலுக்கு எகிறினாள்.

இப்படியே மாறி, மாறி தலையணை சண்டையில் ஆரம்பித்த அந்த இரவு, எப்பொழுது கட்டில் யுத்தமாக மாறியது என்று இருவருக்கும் தெரியவில்லை.

மறுநாள் காலையில் ஒரே நேரத்தில் கண் விழித்த இருவரும், கட்டிலில் கட்டி பிடித்து படுத்து இருந்ததை பார்த்து அரண்டு போய் எழுந்தனர். எழுந்த பின் தான், இருவருக்கும் நேற்று நடந்து முடிந்த அவர்களின் தாம்பத்யம் நினைவு வந்தது.

ஒரே போர்வையில் இருந்த இருவரும், அடுத்து அந்த போர்வைக்கு சண்டையிட்டனர். இறுதியில் போர்வை கீழே விழ, இவர்கள் ஒரு பக்கம் கட்டிலில் விழுந்தனர்.

அவசரமாக கீழே விழுந்த போர்வையை எடுத்து, தன்னை மறைத்துக் கொண்டு குளியறைக்குள் சென்று ஓடி மறைந்து விட்டாள். குளித்து முடித்த பின் தான், உள்ளே துண்டை தவிர வேறு எதுவும் இல்லாததை உணர்ந்து மானசீகமாக தலையில் கொட்டினாள்.

குளியறை கதவை சிறிது திறந்து வைத்துவிட்டு, வெளியே எட்டி பார்த்தவள் அங்கே அவன் இல்லாததை உணர்ந்து, அந்த துண்டை சுற்றிக் கொண்டு வெளியே வந்தாள். அங்கே அவளுடைய பெட்டியை திறந்து, தேவையானவற்றை எடுத்துக் கொண்டு திரும்பும் பொழுது, மீண்டும் அவன் மீது மோதி நின்றாள்.

அவனும் அப்பொழுது தான் குளித்துவிட்டு வந்து இருந்தான், அவனின் வெற்று மார்பில் மோதியவள், அவளின் உதடு அவனின் இதய பகுதிக்கு முத்தம் வைத்து இருந்தது.

“ம்ம். குட் மார்னிங் ஐ பியுட்டி, காலையிலே என்னை இவ்வளவு புத்துணர்ச்சியா வச்சுக்க உன்னால தான் முடியும்” என்று கூறியதோடு மட்டும் இல்லாமல், அவளை தலை முதல் கால் வரை அவனுக்கே உரிமையான பார்வையில் பார்த்து வைக்கவும், அவள் கன்னம் சிவந்து, கூச்சத்தில் நெளிந்து கொண்டு இருந்தாள்.

நேற்றைய நியாபகம் வேறு, அவனின் அருகாமையில் இப்பொழுது நினைவு வந்து, மேலும் தன் சிவந்த முகத்தை மறைக்க மீண்டும் குளியறைக்குள் புகுந்து கொண்டாள் உடையுடன்.

உடை மாற்றிவிட்டு வெளியே வந்தவள், அவனோடு கீழே இறங்கி செல்லவும், அவர்களை பார்த்த பெரியவர்கள் தங்களுக்குள் நிம்மதி அடைந்தனர். இருவரும் ஒருவருக்கு ஒருவர் சீண்டி, அப்பொழுது அங்கே சாப்பிடும் இடத்திற்கு வரும் பொழுது, அங்கே தன் மாமனோடு இருந்த நபரை பார்த்தவள், அதுவரை இருந்த மோனநிலையில் இருந்து வெளியே வந்து, இறுக்கமானாள்.

தொடரும்...
 




snehasree

SM Exclusive
Joined
Mar 31, 2018
Messages
3,416
Reaction score
7,755
Location
comibatore
அருமையான பதிவு சம்யுக்தா எப்படியோ பொங்கல் வைச்சிட்டியே சூப்பர் ராசுகுட்டி உனக்கு இப்படி ஒரு போட்டியா சம்யு கேர்புல் அசந்தே ராசுகுட்டியை ஆட்டைய போட்டுருவாங்க நைட் ரொமான்ஸ் சூப்பர்
 




Nishirdha

அமைச்சர்
Joined
Feb 8, 2018
Messages
3,003
Reaction score
5,586
Location
Tamil Nadu
Super ud sis:love::love: nalla poitu irundha idathula naduvula abasuram maari yaaru andha aalu:unsure::unsure: waiting for the next ud(y)
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top