Evano Oruvan epi 4

anisiva

SM Exclusive
Author
SM Exclusive Author
#1
“ தாரிணி ஏட்டி எங்களை குறை சொல்ல வச்சிட்டியே புள்ள! உன் வாழ்க்கை எப்படியெல்லாம் இருக்கணும்னு நான் கனவு கண்டிருந்தேன்!”
மறுபடியும் பாட்டி தான்.
“பாட்டி” இவள் அழைத்தும் முகம் திருப்பிக் கொண்டார் ஜானகி.
“ஏய் கிழவி நீயும் என் கூட பேச மாட்டியா? எல்லாரும் தான் என்னை தப்பு சொல்றாங்கன்ன நீயுமா?”
“ஆமாட்டீ, நீ செஞ்சது தப்புத்தேன்”
“பாட்டி” அவள் சத்தமாய் கூப்பிட பாட்டி அவ்விடத்தில் இல்லை… அலறல் சத்தத்தில் சரண் வந்திருந்தான் இவளருகில்.
“என்னாச்சு மா?”
கண்ணில் நீர் வழிய கட்டிலில் அமர்ந்திருந்தவளின் கண்ணீரை துடைத்துவிட்டான்.

அவன் செய்கை அவளை அசைத்து பார்க்கவில்லை, ஆங்காரம் கொள்ள வைத்திருந்தது.
“உங்களால் என் எல்லா சொந்தமும் விலகி போய் இப்போ தனியா நிக்கிறேன் சரண்!”
கைகளில் முகம் புதைத்து அழ ஆரம்பித்துவிட்டாள்.
“இப்ப மித்ரனும் அதையே செய்றான்.அவனுக்கும் அப்பா தான் வேணுமாம்!என்னை மறந்துட்டான்”
அவளின் அழுகை தொடர்ந்தது.

“எல்லாம் உங்களால் தான் சரண்,உங்களால் தான்!”
சமாதானமாய் அவள் முதுகை தடவி விட்டவனை முறைத்தவள்,
“என் கனவு லட்சியம் வேலை,சொந்தம் எல்லாம் விட்டுட்டு உங்க பின்னாடி வந்தா,யூ டுக் மீ பார் கிராண்டட் சரண்!”
அவன் கையை தட்டி விட்டவள் மறுபுறம் திரும்பி படுத்துக் கொண்டாள்…

சரண் முகத்தில் இத்தனை நேரம் இருந்த வருத்தம் புன்னுறுவலாய் மாறியிருந்தது.தான் படுத்துக் கொண்டிருந்த சோபாவுக்கு திரும்பினான்.
அவள் கோபம் நியாயமாய் பட்டது,அன்று மாலை நடந்த விஷயங்களும் அப்படி!

வாசலுக்கு வெளியே நின்றிருந்த சரணை பார்த்த அற்புதாவுக்கு அத்தனை ஆச்சரியம் .
“சரண், எப்போ வந்தீங்க?எப்படியிருக்கீங்க?”
“நல்லா இருக்கேன் அற்புதா.உள்ளே வாங்க”
அவளை அழைப்பது போல் தன்னை தானே வீட்டினுள் அழைத்துக் கொண்டான்.

அவள் அமர்ந்ததும் அவள் பக்கத்தில் நின்று கொண்டிருந்த தாரிணியிடம்,
“பிரண்டுக்குன்னு ஸ்பெஷலா ஏதோ செஞ்சியே,கொண்டு வந்து கொடு தாரிணி”
அற்புதாவின் திகைத்த பார்வையை இருவரும் கவனிக்கவில்லை.
கடுப்புடன் கிட்சனுக்குள் சென்றவள் தோழிக்கு மட்டுமாய் ஒரு தட்டில் எடுத்து வர,
“நீங்க முதலில் எடுத்துக்கோங்க சரண்”

அவனுக்கு அதை தந்துவிட்டு அடுக்களைக்கு போன அற்புதாவின் பின்னோடு வந்த தாரிணியை அவள் முறைக்க ஆரம்பித்திருந்தாள்.
“அவர் எப்போ டி வந்தார்?நீ ஏன் என்கிட்ட சொல்லலை?மித்துவை அம்மா வீட்டில் விட்டிட்டு இரண்டு பேரும் என்ன பண்றீங்க?”
அற்புதாவின் அடுக்கடுக்கான கேள்விக்கு இவள் யோசித்து விடையளிக்கும் முன் அவள் வரவேற்பறை திரும்பிவிட்டாள்.
“எப்போ வந்தீங்க சரண்?”
தாரிணியை ஓரக் கண்ணால் பார்த்தவன்,
“ரெண்டு நாளாச்சு அற்புதா”
“மித்து உங்களை ரொம்ப மிஸ் செய்றான் சரண்”
“ஆமா,எனக்கும் இவங்க ரெண்டு பேரையும் விட்டிட்டு இருக்க முடியலை அதான்…”

அவனின் ஒவ்வொரு பதிலுக்கும் திரும்பி தாரிணியை பார்த்துக் கொண்டாள் அற்புதா!
‘ஐயோ முறைக்கிறாளே’
‘அடேய் இது உலகமகா நடிப்பு டா’
தாரிணியின் மனசு சத்தம் போட்டு அழுதது அங்கு யாருக்கும் கேட்கவில்லை!

தாரிணியை நடுவில் வைத்துக் கொண்டு இருவரும் நீயா நானா என்பது போல் பேசிக் கொண்டனர்.ஒன்பது மணிவாக்கில்,
“நேரமாச்சு நான் கிளம்புறேன்.லேட்டா போனா ஹாஸ்டல் கேட் பூட்டிடுவாங்க.அப்புறமா பார்க்கலாம் சரண்.வரேன் அற்புதா”
அவள் செய்கையே அவள் கோபமாய் இருக்கிறாள் என்பதை தெரிந்தது தாரிணிக்கு.கேட் வரை போனவளிடம்,
“பேசலாம்னு கூப்பிட்டது நான்.அது உனக்கு நியாபகம் இருக்கா?” என்றாள்.
“கோவமா இருக்கேன் தாரிணி”
அவள் கையை பற்றிக் கொண்டவள்,
“இங்கே தங்கிடேன் அற்பு.காலையில் போலாம்”
கையை உதறியவள்,
“மூச்...வாயை திறக்காதே. அது எப்படி தாரிணி ஒண்ணுமே நடக்காத மாதிரி உன்னால் இருக்க முடியுது? இனி என் கிட்ட பேசாதே!”
“ஹேய் நான் என்ன டி செஞ்சேன்”
“சரண் வந்ததை சொன்னா நான் பொறாமை பட்டிருவேனா, அதான் சொல்லலையா?நீயும் மாறிட்ட தானே தாரிணி”
“அடியேய் அப்படியெல்லாம் இல்லை டி”
“உன்னை விட்டா எனக்கு இந்த உலகத்தில் யாருமில்லைன்னு தெரிஞ்சும் இப்படி செஞ்சிட்டல”
“ஏய் லூசே! அந்த ஆள் அதிரடியா வந்து வீட்டுக்குள் உட்கார்ந்திருக்கான் டி. என்னவோ நான் கூப்பிட்டு வச்ச மாதிரி பேசுறே!”

“என்னவானாலும் சரி நீ என் கிட்ட சொல்லலை.நான் கிளம்புறேன். நாளைக்கு ஆபிஸ் வர மாட்டேன்.”

அவள் கார் தெரு முனையை கடக்கும் வரை பார்த்துக் கொண்டு அங்கேயே நின்றாள்.இவள் வீட்டிற்குள் திரும்புகையில் சரண் பெட்டியிலிருந்த தன் துணிகளை அலமாறியில் அடுக்கிக் கொண்டிருந்தான்.
——
பள்ளியில் சர்வேஷ் அற்புதாவுக்கு ஜுனியர்.பவதாரிணியை விட ஒரு வருடம் மூத்தவன்,மூவரும் ஒரே பள்ளியில் தான் பயின்றனர்.அற்புதா அங்கே சமீபமாக சேர்ந்தபடியால் தாரிணிக்கு அவளை பற்றி அதிகம் தெரிந்திருக்கவில்லை. சர்வேஷின் தந்தைக்கும் இரத்தினவேலுக்கும் தொழில்முறையில் நல்ல பழக்கம்.
“ஹேய் தாரிணி ஏன் நேத்து டியூஷன் வரலை?” கெமிஸ்டரி கிளாஸ் வாசலில் சைக்கிள் ஏடுத்துக் கொண்டு நின்றவளிடம் கேட்டான்.
“மார்க் கம்மின்னு அப்பாட்ட சைன் வாங்கிட்டு வர சொல்லிட்டார் சார். வரவர இவங்களும் ஸ்கூல் மாதிரி ஆகிடாங்க”
“கொஞ்சம் முயற்சி செஞ்சி நல்லா படிச்சா தான் என்ன தாரிணி?”
“நான் என்ன வச்சிகிட்டா வஞ்சகம் பண்றேன்? வந்தா படிக்க மாட்டேனா?”
“ஹ ஹ”
“அவ்ளோ பெரிய ஜோக் எல்லாம் இல்லை.ரொம்ப சிரிக்காதே சர்வர்”
“வாயாடி…ஒழுங்கா படி,என் சீனியர் ஒருத்தி இருக்கா,என்னமா படிப்பா தெரியுமா!”

அற்புதாவை பற்றி தாரிணிக்கு சொன்னதே சர்வேஷ் தான்.அவன் சொன்னதெல்லாம் வைத்து ‘அந்த பிள்ளை கூட ஒரு நாளும் பழகிட கூடாது’ என்ற முடிவெடுத்திருந்தாள் தாரிணி!

யாருக்கு யார் என்று எழுதிவைப்பது தம்பதிகளுக்கு மட்டுமில்லை,உயிர் நண்பர்களுக்கும் தான் போல.சர்வேஷ் எத்தனை முட்டுக்கட்டை போட்டிருந்தாலும்,தாரிணியின் பக்கத்து வீட்டுக்கே குடி வந்திருந்தாள் அற்புதா.

அதன் பின் சர்வேஷின் கை மீறி போனது எல்லாம்.அற்புதாவுக்கு தாரிணியின் குடும்பத்தை மிகவும் பிடித்திருந்தது. சாந்தி மிகவும் அன்பாக பழகினார். தாரிணி முதலில் அவளிடம் ஒதுக்கம் காட்டினாலும் போக போக அவளிடம் நெருங்கிவிட்டிருந்தாள்.
அப்படி அவர்கள் வீட்டில் பார்த்தது தான் கண்ணனை.
‘இந்த களையான முகத்தில் சிரிப்பு மட்டுமிருந்தால் எப்படியிருக்கும்!’

“உன் அண்ணி செம அழகு தாரிணி”
“ம்ம்”
“உங்க அண்ணனும் தான்...ஆனா ஏன் சிரிக்கவே மாட்றார்?”
“இது ரெண்டையும் நீங்க என் அண்ணிகிட்ட தான் கேட்கணும்,கூப்பிடவா?”
‘இன்னிக்கி நீ தொலைஞ்சே அற்பு’
“வேண்டாம் தாரு”அவள் தடுப்பதை பொருட்படுத்தாமல்,
“பூஜா ஆண்ணி இவங்க நீங்க ரொம்ப அழகுன்னு சொல்றாங்க”

அன்றோடு ஆரம்பமானது தொல்லை.பூஜாவுக்கு தன்னை பற்றி பீற்றிக் கொள்ள ஆள் கிடைத்த சந்தோஷத்தில் அவளிடம் அழகு குறிப்புகள் பற்றி பேசியே ஒரு வழி செய்தாள்.
‘தெரியாம சொல்லிட்டேன் என்னை விட்டிரு தாயே’அவள் உள்ளுக்குள் அழுதாள்.
அற்புதா அதன் பிறகு தாரிணியிடம் கேட்டு பூஜா இல்லாத சமயம் மட்டுமே வீட்டுக்கு வருவது.
“அற்புதா” அக்கா எல்லாம் எப்போதோ விட்டாயிற்று, “நீ இத்தனை ஜாலியான ஆளுன்னு எனக்கு முன்னாடியே தெரியாம போயிடிச்சே”
‘எல்லாம் இந்த சர்வேஷ் செய்த வேலை’ என்பதை சொல்லவில்லை.
“தெரிஞ்சா என்ன செய்திருப்பே தாரிணி?”
“அப்பவே இப்படி வெட்டியா பேச ஆரம்பிச்சிருப்பேன்..ஹ ஹ…”

இப்படியே சென்ற இனிமையான பொழுதுகள் முடிவுக்கு வந்தன.அற்புதா பி.ஈ படிக்க கோவை சென்றுவிட,வீட்டை பூட்டி விட்டு அவள் பெற்றோரும் அங்கேயே சென்றுவிட்டனர்.நடுவில் இரு வீட்டினருக்கும் பேச்சுவார்த்தை இல்லாமல் போனது.மறுபடியும் அவர்கள் திரும்புவதற்குள் கண்ணனின் வாழ்க்கை முடிந்துவிட்டிருந்தது!

அற்புதாவுக்கு வேலைக்கு போகும் எண்ணமில்லை.மேற்படிப்புக்கு அவள் முயற்சிக்கையில் திருமணம் செய்துவிட்டு படி என்று அவளைப் பெற்றவர்கள் முடிவெடுத்தனர்.விதி அவள் வாழ்வில் விளையாட ஆரம்பித்தது அப்போதிலிருந்து தான்.

“அற்புதா,உனக்கு வீட்டில் மாப்பிள்ளை பார்க்குறாங்களாமே”
நமுட்டுச் சிரிப்புடன் தாரிணி அவளை ஓட்டிக் கொண்டிருக்க,பதில் சொல்லாமல் இருந்தாள்.
“உனக்கு எப்படி பட்ட பையனை பிடிக்கும் அற்பு? நல்லா உயரமா,குள்ளமா?வெள்ளையா இல்ல கருப்பா?…அரவிந்த் சாமியா இல்லை விஜய்யா?”
“உதை வாங்கப்போறே தாரிணி.எனக்கு எப்படி யாரை மாதிரின்னு சொல்ல தெரியலை”
“இங்க சுத்தி பாரேன், இங்க உள்ள யாரையாவது மாதிரி”
அவர்கள் இருவரும் இருந்தது,ஒரு புகழ் பெற்ற ஐஸ்கிரீம் கடை.ஊர் சுற்ற போகலாம் என்று அவளை இங்கு இழுத்து வந்திருந்தாள் தாரிணி.சுற்றியிருந்த அத்தனை பேரையும் இவள் நோட்டமிட்டுக் கொண்டே வர,கடையினுள் நுழைந்தான் கண்ணன்.
நண்பர்களுடன் வந்திருப்பான் போல.சர்வேஷும் அந்த கூட்டத்திலிருந்தபடி தாரிணியை பார்த்து கையசைத்தான்.
“அந்த கூட்டத்தில் ஒருத்தரை மாதிரி வேணும் தாரிணி”
“இருக்கிற எட்டு உருப்படில யாருன்னு சரியா சொல்லு அற்பு!”
அவள் சொல்ல சொல்லிக் கெஞ்ச,சொல்லாமலேயே வீடு வரைக்கும் அழைத்து வந்துவிட்டாள்.
அந்த கடுப்பில்,
“ நானே கண்டுபிடிச்சிட்டேன், நம்ம சர்வேஷ் தானே!வழக்கம் போல் மோதலில் ஆரம்பித்து காதலில் முடிஞ்சிடிச்சா?எத்தனை படத்தில சொல்லியிருக்காங்க.ஆனாலும் உன்னை விட சின்ன பையனை எப்படி அற்பு”
“அடச்சீ…”
அவள் தலையில் இரண்டு கொட்டு வைத்தவள், “அவனை பத்தி என் கிட்ட பேசாதேன்னு எத்தனை தடவை சொல்லியிருக்கேன்”
“உனக்கு ஏன் தான் அவனை பிடிக்கலையோ,நம்ம கூட படிச்ச பையன் தானே”
“நம்ம இல்ல, உன் கூட மட்டும் தான்.அவன் குணம் சரி கிடையாது தாரிணி. அதை சொன்னா நீ ஒத்துக்க போறதில்லை.விடு”
“சரி அவன் இல்லை,வேற யாரு. சொல்லுடீ, எனக்கு அப்புறம் தூக்கமே வராது”
“கடவுளே!”
நீண்ட தயக்கத்துக்கு பிறகு
“உன் அணணன் தான் போதுமா.இப்ப ஆளை விடு”
தாரிணி அதிர்ச்சியாய் போகிறவளையே பார்த்துக் கொண்டு நின்றாள்.


 

Advertisements

Top