• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Idhu Irul Alla! - 16

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Annapurani Dhandapani

மண்டலாதிபதி
Joined
Jan 31, 2018
Messages
346
Reaction score
3,223
Location
Chennai
இது இருளல்ல!


16.


மருத்துவமனையில் பவதாரிணி கண் விழித்து எல்லாருடைய மனங்களையும் குளிரச் செய்துவிட, அனைவரும் கொஞ்சம் நிம்மதியாய் உணர்ந்தனர் என்றே சொல்லலாம்.

ஆகாஷிடமும் கிருஷ்ணாவிடமும் கூறிவிட்டு யாமினியை அழைத்துக் கொண்டு வாசு காவல் நிலையம் சென்று முடிக்க வேண்டிய பணிகளை கவனிக்கச் சென்றான்.

அங்கே ஏதேதோ காகிதங்களில் யாமினியிடமும் வாசுவிடம் கையெழுத்து வாங்கிக் கொண்டார்கள்! யாமினியை ஏதேதோ கேள்விகள் கேட்டார்கள்! இப்படியே ஒரு மணி நேரம் கழிய, எல்லாம் முடிந்தது என்று யாமினியை வெளியே தன்னுடைய பைக் அருகே காத்திருக்கச் சொல்லிவிட்டு திரும்பவும் வாசு காவல் நிலையத்தினுள் சென்றான்!

யாமினி அமைதியாக அவன் சொன்னது போல் அவனுடைய பைக்கின் அருகே நின்றாள்.

அவள் இரு விஷயங்களைப் பற்றி மிகவும் தீவிரமாக யோசித்துக் கொண்டிருந்தாள்!

ஒன்று! என்னைக் கெடுத்தவனை கண்டுபிடித்தாயிற்று! இனி மேல் அநாவசியமாக வாசுவின் வீட்டில் இருக்கக் கூடாது! எப்படியாவது இங்கிருந்து சென்றுவிட வேண்டும்! நான் இங்கிருந்து செல்வது வாசுவின் அப்பாவைத் தவிர வேறு யாருக்கும் பெரிதாக பாதிப்பிருக்காது! அவர்தான் பாவம், வாய்க்கு வாய், மருமகளே! மருமகளே! என்று அழைத்தபடி இருக்கிறார்! அவருடைய தங்ககளும் அண்ணி! மன்னி! என்று அழைக்கிறார்கள்தான்! அவர்களும் என் மேல் பாசம் வைத்திருக்கிறார்கள்! பவதாரிணி அம்மா கூட என்னை மிகவும் அன்பாகத்தான் நடத்துகிறார்கள்! ஆனால் என்னால் இதற்கு ஒன்றும் செய்ய முடியாது! ஆனால் ஒன்று! இப்போது கிளம்பினால் அவ்வளவு நன்றாக இருக்காது! மூழ்குகிற கப்பலிலிருந்து தப்பிக்கும் எலியைப் போல ஆகிவிடும்! பவதாரிணி அம்மா வீட்டுக்கு வந்து அவருடைய உடல்நிலை தேறி சீராகிய பின்னர் இங்கிருந்து கிளம்பிவிட வேண்டும்!

இரண்டாவது! இனி அடுத்து என்ன? தங்குவதற்கு இடம் பார்க்க வேண்டும்! பிழைப்பதற்கு ஒரு வேலை வேண்டும்! இப்போதைக்கு வாசு வாங்கிக் கொடுத்த தையல் இயந்திரம் உள்ளது! அதை வைத்து சம்பாதிக்கத் தொடங்கலாம்! ஆனால் நிரந்தர வருமானம் வரும்படியாக ஒரு வேலை தேட வேண்டும்!

இப்படி அவள் சிந்தனை செய்து கொண்டிருக்கும் போது அவளுடைய சிந்தனையைக் கலைப்பது போல அருகிலிருந்த மரத்தின் பின்னால் அந்தக் கயவனின் பெற்றோர் இருவரும் பேசிக் கொண்டிருந்தர்கள்.

"எதுக்குடீ இவனுக்கு இந்த வேண்டாத வேல.... யார் எப்டி போனா இவனுக்கென்ன.... இப்ப பார்.... இவந்தான் போலீஸ்ல மாட்டி அவஸ்த்தப் படறான்!"

"நீங்க கொஞ்சம் சும்மா இருங்க! இவன வெளிய கொண்டு வர வேலைய மட்டும் பாருங்க... புரியுதா?"

"ஏய்... ஏய்.... இவ்ளோ பட்டும் உனக்கு புத்தி வரலியா?"

"என் புத்திக்கு என்ன வந்திச்சு? உங்களுக்குதான் புத்தி கெட்டு போச்சு! புள்ளைய காப்பாத்தற வழிய பாக்காம இப்டி கேண மாதிரி புலம்பிகிட்டு கெடக்கீங்க!?" என்று கோபமாகக் கத்தினாள் அவனுடைய அம்மா!

"நீ புரிஞ்சிதான் பேசறியா? உம்புள்ளய எப்டி காப்பாத்த முடியும்? அவனே தன் வாயால குற்றத்த ஒத்துகிட்டான்! இதுக்கு மேல என்ன பண்ண முடியும்!?"

"உங்கள.... மொதல்ல ஒரு நல்ல லாயரா பாருங்க! மத்தத நா பாத்துக்கறேன்!"

"ஒன்னால இல்ல.... ஒங்கப்பனாலயும் ஒண்ணும் கிழிக்க முடியாது! புரிஞ்சுக்கோ! இப்பல்லாம் இந்த மாதிரி கேஸ்ல சட்டம் ரொம்ப ஸ்ட்ராங்கா ஆயிடுச்சு! நீ என்ன பண்ணாலும் உம்புள்ள சாகற வரைக்கும் உள்ள தான் கெடக்கணும்! ஞாபகம் வெச்சுக்கோ!"

இதற்கு அந்த அம்மாவால் எதுவும் பேச முடியவில்லை போலும்! அதனால் யாமினியை வசை பாடத் தொடங்கினாள்.

"பாவீ... சண்டாளி..... எம்புள்ள வாழ்க்கைய கெடுக்கறதுக்குன்னே பொறந்தா போலிருக்கு...."

"ஹூம்.... யாரு வாழ்க்கைய யாரு கெடுத்தா.... உம்புள்ளதான் அந்தப் பொண்ணு வாழ்க்கைல மண்ணள்ளிப் போட்டிருக்கான்....."

"நீங்க வாய மூடுங்க..... அந்த நாசமாப் போறவ.... அவ வாய மூடிட்டு இருந்திருந்தா.... இந்நேரம் எம்புள்ளைக்கு நிச்சய தார்த்தம் முடிஞ்சிருக்கும்....."

"உம்புள்ள தன் வேலைய மட்டும் பார்த்துண்டு இருந்திருந்தான்னா நீ நெனக்கறது நடந்திருக்கும்...."

"உங்கள நா வாய மூடச் சொன்னேன்.... என் கோவத்த கௌறாதீங்க...."

"காேவமா..... அதெல்லாம் இனிமே ஒனக்கு வரவே கூடாது...."

"வேணாங்க..... பேசாம இருங்க...."

"ஹூம்..... நா எவ்ளோ வாட்டி சொல்லியிருப்பேன்..... அவனுக்கு கைல தாராளமா காசக் குடுத்து கெடுக்காதன்னு..... அந்தப் பையன் வாசுவப் பத்தி அவன்கிட்ட தரக்குறைவா பேசாதன்னு.... நீயும் சரி! உன்னப் பெத்தவங்களும் சரி! உன் சொந்தக்காரங்களும் சரி! யாராச்சும் எப்பவாச்சும் என் பேச்சக் கேட்டீங்களா..... அந்தப் பையன தரந் தாழ்த்திப் பேசிப் பேசி... நம்ம பெத்த புள்ள மனசில வெஷத்த வெதச்சீங்க..... இன்னிக்கு.... அது விஷ மரமா வளந்து அடுத்தவன அழிக்கறேன்னு கௌம்பி தன்னையே அழிச்சிண்டிருக்கான்.... ஆனா அந்தப் பையன் வாசு.... நீங்க நெனச்ச மாதிரி தரம் தாழ்ந்து போகல..... தன்னோட பெத்தவா இவா இல்லன்னு தெரிஞ்சப்றமும் அவா பேச்சுக்கு கட்டுப்பட்டு நடக்கறான்! தான் தப்பே பண்ணலன்னாலும் அவா சொன்ன வார்த்தைக்கு கட்டுப்பட்டு அந்தப் பொண்ணுக்கு தாலி கட்டியிருக்கான்! அவன் மனுஷன்!"

அந்த மனிதர் சொன்னதில் இருந்த உண்மை சுட்டதோ என்னவோ, அந்தப் பெண்மணி ஓவென்று அழத் தொடங்கினாள்.

"இப்ப அழுது என்ன ஆகப் போறது.... ஆன்னா ஊன்னா..... இப்டி ஒப்பாரி வெக்கதான் தெரியும் உனக்கு!"

"இப்ப என்ன பண்ணப் போறோம் நம்ம..." என்று கேட்டு மூக்கை சிந்தினாள் அவள்.

"ம்...... பண்ணின பாவத்துக்கு பிராயசித்தம் செய்வோம் வா..." என்று எழுந்தார்.

"என்ன சொல்றீங்கன்னு கொஞ்சம் புரியும்படியா சொல்லுங்க...." என்று அவள் கோபப்பட்டாள்.

"ம்க்கும்..... ஒன்னல்லாம்.... வா.... வந்துத் தொல.... லாயரப் பாக்க போலாம்..... இவனப் பெத்ததுக்கு என்னால வேற என்ன செய்ய முடியும்.... ஈஸ்வரா..... இன்னும் நா என்ன கர்மத்தெல்லாம் பாக்கணும்னு எழுதியிருக்கோ...." என்று தன் தலையைத் தூக்கி வானத்தைப் பார்த்து புலம்பியபடியே அவர் முன்னால் நடக்க, அந்தப் பெண் கோபமாகவும் அழுதபடியும் முணுமுணுத்துக் கொண்டே அவர் பின்னால் நடந்தாள்.

இதையெல்லாம் மௌனமாக கேட்டுக் கொண்டிருந்த யாமினிக்கு குழப்பமாக இருந்தது!

வாசுவுக்கு என்ன பிரச்சனை? அன்று அவனை வளர்த்த பவதாரிணி அம்மாவும் இது போல கூறினார்கள்! அன்று ஆகாஷ் வீட்டுப் பெரியவர்களும் இதே போலதான் அவரைப்பற்றி ஏதோ கூறினார்கள்! இன்று நிச்சயதார்த்த விழாவிலும் என்னைக் கெடுத்த பாவி இதைப் போலதான் கூறினான்! இதோ, இப்போது அவனுடைய அம்மாவும் அவரை வசைபாடுகிறாள்! என்னதான் பிரச்சனை அவருக்கு?

அவர் மேல் நல்ல அபிப்ராயம் கொண்டவர்கள், அவரை தெய்வம் போல நினைக்கிறார்கள்; அவர் எது செய்தாலும் நல்லதுக்குதான் என்று நம்புகிறார்கள்! அவரைப் பிடிக்காதவர்கள் அவரை அவமானப்படுத்தத் துடிக்கிறார்கள்! ஏன்?

வாசுவுக்கு என்ன பிரச்சனை? வாசுவைப் பழிவாங்க அவன் என்னை பகடைக்காயாக ஆக்கிக் கொண்டான்! இதன் மூலம் அவனுக்கு என்ன கிடைக்கும் என்று எதிர்பார்த்தான்!

இப்படி அவளுடைய சிந்தனை தன்னைப் பற்றியும் வாசுவைப் பற்றியும் ஓடிக் கொண்டிருக்க, வாசுவும் ஸ்டீவனும் வெளியே வந்தனர்! ஸ்டீவன் தன்னுடைய அலுவலகம் செல்ல, வாசு அவளை அழைத்துக் கொண்டு ஸ்டீவனை பின் தொடர்ந்து அவனுடைய அலுவலகத்துக்கு சென்றான்!
 




Annapurani Dhandapani

மண்டலாதிபதி
Joined
Jan 31, 2018
Messages
346
Reaction score
3,223
Location
Chennai
அவளை அங்கிருந்த வரவேற்பறையில் காத்திருக்கச் சொல்லிவிட்டு ஸ்டீவனின் அறையில் வாசு அவனுடன் உரையாடிக் கொண்டிருந்தான்.

"இந்த கேஸ் நல்லபடியா முடிஞ்சிருச்சு! அவங்களக் கெடுத்தவனக் கண்டு பிடிச்சாச்சு! குற்றவாளியும் குற்றத்த ஒத்துகிட்டான்! அதனால சீக்கிரமே கோர்ட்ல தீர்ப்பும் வந்துடும்!" என்றான் ஸ்டீவன்!

"ரொம்ப தேங்க்ஸ் ஸ்டீவன்!"

"ம்ச்... இல்லடா! உன் தங்கச்சி நிச்சயதார்த்தம் நடக்கறதுக்கு முன்னாடி இது தெரிஞ்சிருந்தா நல்லா இருந்திருக்கும்...... நாம எது வெளிய தெரிஞ்சிடக் கூடாதுன்னு நெனச்சி இவ்ளோ தூரம் ஏற்பாடு பண்ணினோமோ..... எல்லாம் வீணாப் போச்சு..... அது மட்டும் சரியா நடந்திருந்ததுன்னா இப்டி..... எல்லாருக்கும் விஷயம் தெரிஞ்சிருக்காது....." என்றான் ஸ்டீவன் உண்மையான வருத்தத்துடன்!

"விடுடா! இதான் நடக்கணும்னு எழுதியிருந்தா யாரால அத மாத்த முடியும்! அத விடு.... அவன் டார்கெட் நான்னு சொன்னியே...."

"ஆமா வாசு.... அவனுக்கு உன் மேல என்ன வெஞ்சன்ஸோ தெரியல.... உன்ன அவமானப் படுத்தணும்னுதான் இப்டி பண்ணிருக்கான்...."

"எனக்கு அவனப் பாத்த ஞாபகம் கூட இல்லையே...." என்றான் வாசு.

"இது இப்ப வந்த எனிமிட்டி இல்ல வாசு! ரொம்ப வருஷம் முன்னாடியே..... உன் சின்ன வயசிலிருந்தே.... "

"அதாவது...."

"ஆமா...."

வாசுவின் முகம் மிகவும் கடினமாக மாறியது! கண்கள் சிவந்தது! அவன் தன் கண்களை மூடி தலையை அழுத்தமாகப் பிடித்துக் கொண்டான்! தன்னை கட்டுப்படுத்திக் கொள்ள மிகவும் சிரமப்பட்டான்!

இவனுடைய நிலையை உணர்ந்த ஸ்டீவன் எழுந்து வந்து அவனுடைய தோள்களில் ஆதரவாகக் கை வைத்தான்! ஆனாலும் அவனால் வாசுவுக்கு எந்த ஆறுதலையும் அளிக்க முடியவில்லை!

இவன் தன்னை வெளியே அமர வைத்துவிட்டுப் போய் வெகு நேரமாகிறதே என்று உள்ளே எட்டிப் பார்த்த யாமினி, வாசு இப்படி தன் தலையைப் பிடித்துக் கொண்டு அமர்ந்திருப்பது கண்டு அதிர்ந்தாள்!

இவள் பார்ப்பது கண்டு ஸ்டீவன் அவளைப் பார்த்து புன்னகைத்து அவளை வரவேற்று உள்ளே அமரச் சொல்லிவிட்டு எழுந்து வெளியே சென்றான்!

மெதுவாக அவனருகில் வந்து அவன் தோளைத் தொட்டு அழைத்தாள்!

"என்னாச்சு வாசு!?"

அவன் தன் தலையைப் பிடித்திருந்த கைகளை எடுத்துவிட்டு நிமிர்ந்து அவளைப் பார்த்தான்!

வாசுவின் சிவந்திருந்த கண்களும் வேதனை அப்பிய முகமும் பார்த்த யாமினிக்கு அடி வயிறு கலங்கியது போலிருந்தது!

"ஐயோ.... என்னாச்சு வாசு?" என்றபடி அவனுடைய முகத்திலிருந்த வியர்வையை தன் கைக்குட்டையால் அவள் துடைக்க, அவனுக்கு தலையை சுற்றிக் கொண்டு வந்தது போலும்! அருகில் அவள் நின்றிருந்ததால், பிடிமானமாக அவள் மேல் சாய்ந்தான்! அவள் அதிர்ந்து போய் அவன் விழுந்து விடாமல் அணைத்தாற்போல பிடித்தாள்! எதையோ கேட்க வந்த ஸ்டீவன் இவர்களுடைய நிலையைக் கண்டுவிட்டு திரும்பிப் போனான்! சில நிமிடங்கள் இந்த நிலை அப்படியே நீடித்தது!

காலைல அந்தப் பாவிய பிடிக்கறப்ப இவரு இப்டி ஆகல.... அவங்கம்மா மயக்கம் போட்டு விழும் போது கூட இவரு இப்டி ஆகல.... இப்ப என்னாச்சு இவருக்கு.... என்று தனக்குள் நினைத்தபடியே அவனுடைய முதுகில் மெதுவாகத் தட்டிக் கொடுத்தாள்!

அவளுடைய அணைப்பு தந்த ஆறுதலா, அல்லது அவளின் பாசமான மெல்லிய தட்டுதலோ, அல்லது அவன் அவளிடம் உணர்ந்த மெல்லிய உஷ்ணமாே, எதுவோ ஒன்று அவனை நிலைப்படுத்தியது! மெதுவாக அவளை விட்டு நகர்ந்தான்!

"தலை சுத்துதா வாசு! தண்ணி எதுனா குடிக்கறீங்களா?" என்று கேட்டுக் கொண்டே அங்கே ஸ்டீவனின் மேஜை மேல் இருந்த தண்ணீர் பாட்டிலை எடுத்துத் திறந்து அவனிடம் தந்தாள்!

அவள் தந்ததை மறுக்காமல் வாங்கி கடகடவென்று தன் வாயில் சரித்துக் கொண்டான். அப்போது ஸ்டீவன் உள்ளே வந்தான்.

"இரு! முகம் கழுவிட்டு வரேன்!" என்று கூறிவிட்டு எழுந்து சென்றான்!

யாமினி ஸ்டீவனிடம் கேட்டாள்!

"அவருக்கு என்னாச்சு? தலை சுத்தற மாதிரி பெரிய பிரச்சனையா......"

"ம்.... பெரிசா... சின்னதான்னு தெரீல... ஆனா பிரச்சனைதான்!"

"ஆனா..... வந்து..... அது என்னன்னு....."

சில நிமிடங்கள் யோசித்த ஸ்டீவன், ஒரு பெருமூச்சொன்று எடுத்துக் கொண்டு சொன்னான்!

"அத நா சொல்ல முடியாது ஸிஸ்டர்! வாசுதான் உங்ககிட்ட சொல்லணும்..... ஆனா.... உங்ககிட்ட நா ஒரு ரிக்வஸ்ட் வெக்கலாமா...."

"ரிக்வஸ்ட்ன்னா...."

"ம்.... கோரிக்கை.... ஒரு உதவி...."

"சொல்லுங்க...."

"எந்த சூழ்நிலையிலயும் எந்த காரணத்துக்காகவும் வாசுவ விட்டுப் போய்டாதீங்க ஸிஸ்டர்! ஏன்னா... வாசு இப்ப ஒரு நெருக்கடியான சூழ்நிலைல இருக்கான்! நாமெல்லாம் இப்பதான் அவன் மனச புரிஞ்சி நடக்கணும்! அவனுக்கு நம்ம எல்லாரோட சப்போர்ட்டும் வேணும்! "

"அவருக்கு என்ன பிரச்சனைன்னு நீங்களே சொல்லக் கூடாதா?"

"இல்ல... அத வாசுதான் சொல்லணும்! அதுதான் முறையும் கூட!"

"கவலப்படாதீங்க! நா அவர் கூடவேதான் இருப்பேன்! எப்பவுமே!" என்றாள் அழுத்தமான குரலில்!

"ரொம்ப தேங்க்ஸ் ஸிஸ்டர்!"

"நாந்தான் உங்களுக்கு தேங்க்ஸ் சொல்லணும்!"

"எதுக்கு?"

"எல்லாத்துக்கும்!" என்று யாமினி கூறும் போது வாசு முகம் கழுவிக் கொண்டு வந்தான்! அவனுடைய கண்களில் சிவப்பு இருந்தாலும் முகத்தில் வேதனை கொஞ்சம் மிச்சமிருந்தாலும் கொஞ்சம் தெளிவும் வந்திருந்தது!

"சரி ஸ்டீவன்! நா கௌம்பறேன்! பை!"

"வரேங்க!" என்றாள் யாமினி!

இருவருக்கும் விடை கொடுத்து அனுப்பி வைத்தான் ஸ்டீவன்!

இரண்டு நாட்கள் மருத்துவமனையில் இருந்து தன் பலவீனப்பட்ட இதயத்தை பலப்படுத்திக் கொண்டு வீடு வந்து சேர்ந்தாள் பவதாரிணி.

அவள் வீட்டுக்கு வந்ததும் வராததுமாக, இத்தனை நாளாக அடக்கி வைத்திருந்த கோபத்தையெல்லாம் மொத்தமாக கிருஷ்ணாவின் மீது காட்டினார் பாஸ்கர் மாமா!

இவருடைய கோபத்தினால் அவருக்கு நன்மை விளைந்ததோ இல்லையோ யாமினிக்கு வாசுவின் மீது காதல் பிறந்தது!





- இது இருளல்ல...... விரைவில் வெளிச்சம் வரும்!



 




sridevi

அமைச்சர்
Joined
Jan 22, 2018
Messages
4,750
Reaction score
7,120
Location
madurai
கவலப்படாதீங்க! நா அவர் கூடவேதான் இருப்பேன்! எப்பவுமே!" என்றாள் அழுத்தமான குரலில்!
(y)(y)(y)(y)(y)(y) nice epi sis:):):):):):):)vasuvai pazhi vanga than yaminiyai asinga patuthitana.............:unsure::unsure::unsure:
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top