• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Idhu Irul Alla! - 22

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Annapurani Dhandapani

மண்டலாதிபதி
Joined
Jan 31, 2018
Messages
346
Reaction score
3,223
Location
Chennai
இது இருளல்ல!



22.


பாஸ்கரன் கோலவிழியம்மன் கோவிலுக்கு செல்லுகின்ற வழியை விஜயகுமாருக்கு சொல்லிவிட்டு, அவனை விட்டே அவனுடைய அம்மாவுக்கு போன் செய்தான்!

தன்னை அறிமுகம் செய்து கொண்டு தன் மனைவியின் நிலை பற்றிச் சொல்லி, கோவிலிலிருந்து வரும்போது தன் தங்கையை அழைத்து வரமுடியுமா என்று உதவி கேட்க, அவரும் சரியென்று கூறினார்கள்!

அதன்படி பத்மினி அவளுடைய பள்ளித் தோழன் விஜயகுமாரின் குடும்பத்துடன் கோவிலுக்குச் சென்றாள்!

வழக்கமாக கோவிலிலிருந்து திரும்பி வரும் நேரம் தாண்டி ஒரு மணி நேரத்துக்கு மேல் ஆகியும் பத்மினி திரும்பி வராததால் பாஸ்கரனுக்கும் ருக்மணிக்கும் கலக்கம் ஏற்பட்டது!

அதனால் அந்த விஜயகுமாரின் வீட்டுக்கு போன் செய்தான்! மணி அடித்துக் கொண்டேயிருந்தது! யாரும் எடுக்கவில்லை!

சரி! இன்னும் அவர்கள் கோவிலிலிருந்து திரும்பவில்லை போலும், என்று நினைத்து தன்னைத் தானே சமாதானம் செய்து கொண்டான்!

அப்படியே அடுத்த ஒரு மணி நேரம் கழிய, திரும்பவும் விஜயகுமாரின் வீட்டுக்கு போன் செய்தால், அவள் அப்போதே கிளம்பிவிட்டதாகவும், தன்னுடைய மகன்தான் அவளை வீடு வரை விட சென்றிருப்பதாகவும் சொல்லி, அவன் கிளம்பிய நேரத்துக்கு இந்நேரம் அவன் வீடு திரும்பியிருக்க வேண்டுமே! அவன் ஏன் இன்னும் திரும்பவில்லை! என்று அவனுடைய அம்மா, பாஸ்கரனிடம் கேள்வியெழுப்பினார்!

பாஸ்கரன் தன் தலையில் இடி இறங்கியதைப் போல உணர்ந்தான்!

அதற்குள் நவராத்திரியென்று அவர்கள் வீட்டுக்கு தாம்பூலம் வாங்கிக் கொள்ள வந்த பெண்களுக்கு விஷயம் தெரிந்து போக, அவர்கள் தங்கள் பங்காக, ஒன்றுக்கு நாலாக கதை பரப்பிவிட்டார்கள்!

ஆனது ஆகட்டும் என்று பாஸ்கரன் அந்த விஜயகுமாரின் வீட்டுக்கே சென்று பார்க்க, அவனுடைய அம்மா, பாஸ்கரனைப் பார்த்து அசிங்க அசிங்கமாகத் திட்டத் தொடங்கினாள்!

அவனே அவன் தங்கையின் களவுக்குக் கூட்டு என்று அவனை குற்றம் கூறினாள்!

என்ன ஏதென்று விசாரிக்கப் போக, அந்த விஜயகுமார் தன் நோட்டுப் புத்தகங்கள் எல்லாவற்றிலும் ஒன்று விடாமல்,

"பத்மினி! ஐ லவ் யூ!" என்று கிறுக்கி வைத்திருக்கிறான்!

"இல்ல.... என் தங்கைய பத்தி எனக்கு நல்லா தெரியும்! அவ அப்டிபட்டவ இல்ல...." என்று ஏற்றிய கற்பூரத்தை கையால் அடித்து சத்தியம் செய்யாத குறையாக பாஸ்கரன் கதறியது அங்கு எவர் காதிலும் விழவேயில்லை!

படபடத்துப் போய் வேதனை கப்பிய முகத்துடன் பித்து பிடித்தது போல தனக்குத் தானே புலம்பிக் கொண்டு திரும்பி வந்த கணவனைப் பார்த்த ருக்மணி அதிர்ந்து போனாள்!

தண்ணீர் கொடுத்து அவனை ஆசுவாசப்படுத்தி நடந்த விவரங்களைக் கேட்டறிந்தவள், சற்றும் தாமதியாமல் கிருஷ்ணாவுக்கு போன் செய்ய, அவன் அன்று இரவுப் பணியாக ரோந்து சென்றிருப்பதாகவும் விடியற்காலைதான் திரும்புவான் என்றும் தெரிவித்தனர்!

வேறு வழியேயின்றி காலை வரை அவர்கள் காத்திருந்தனர்!

விடியற்காலையில் சென்னை வந்திறங்கிய சபாபதி, காமாட்சி, ரகுராமன் மற்றும் மைதிலி நால்வரும் வீடு வந்து சேரும் போது பாஸ்கரனும் ருக்மணியும் பேயறைந்தது போல அமர்ந்திருந்தது கண்டு அதிர்ந்தனர்!

நடந்ததை ருக்மணி கூறக் கேட்டு, சபாபதி அப்படியே நெஞ்சைப் பிடித்துக் கொண்டு கீழே சாய்ந்தார்! அவருடைய வாழ்வு அதோடு முடிந்தே விட்டது!

திருமணமாகாத தன்னுடைய பதினாறு வயதுப் பேத்தி இரவெல்லாம் வீடு திரும்பவில்லை என்ற ஒன்றே அந்த மனிதரின் உயிரைக் குடிக்கப் போதுமானதாக இருந்தது!

இதற்குள் இரவுப்பணி முடிந்து வந்த கிருஷ்ணா விஷயமறிந்து ஓடி வந்து பாஸ்கரனை உலுக்கி, தேவையான விவரங்களை கேட்டறிந்து கொண்டு அந்த விஜயகுமாரின் வீட்டுக்குச் சென்றான்!

அங்கே அவனையும் திட்டித் தீர்த்தனர்! ஆனால் அவன் அதையெல்லாம் பொருட்படுத்தாமல் தனக்கு வேண்டிய விவரங்களை தன் போலீஸ் மிரட்டலினால் கேட்டறிந்து கொண்டான்!

அவர்கள் அனைவரும் கோவிலிலிருந்து கிளம்ப அரைமணி நேரம் தாமதமாகி விட்டதாகவும், அங்கிருந்து கிளம்பி நேராக தங்கள் வீடு வந்து, தன்னை விட்டுவிட்டு, பத்மினியை அழைத்துக் கொண்டு போய் அவர்கள் வீட்டில் விட்டு வர தன் மகன் விஜயகுமார் பத்மினியுடன் கிளம்பியதாகவும் கூறினார் விஜயகுமாரின் தாய்!

அவர்களிடம் கேட்டு விஜயகுமாரின் சமீபத்திய புகைப்படம் ஒன்றை வாங்கிக் கொண்டு அங்கிருந்து கிளம்பினான் கிருஷ்ணா!

பாஸ்கரனிடம் விவரம் கூறி தங்கையைக் காணவில்லை என காவல்துறையில் ஒரு புகார் அளிக்கச் சொன்னான் கிருஷ்ணா! ஆனால் பாஸ்கரனின் அப்பா அதை ஒப்புக்கொள்ளவில்லை!

"நீதான் போலீஸ்ல இருக்கியேப்பா.... ரகசியமா தேடுப்பா...." என்றார்!

"அங்கிள்.... அப்டியெல்லாம் தேடணும்னா நாம வி.ஐ.பி.யா இருக்கணும்.... அப்பதான் அப்டில்லாம் தேட முடியும்...." என்றான் கிருஷ்ணா!

மைதிலியும் ருக்மணியும் எவ்வளவோ சொல்லியும் மனிதர் ஒப்புக்கொள்ளவேயில்லை!

சபாபதியின் மரணச் செய்தி கேட்டு வந்த உறவினர்களும் நண்பர்களும் அரசல் புரசலாக விஷயம் கேள்விப்பட்டு, ஆளுக்கு ஒன்றாக புரளி பேசத் தொடங்க, காமாட்சியும் ருக்மணியும் மௌனமாக கண்ணீர் வடித்தனர்!

இதையெல்லாம் கேட்ட ரகுராமன் அவமானம் தாங்காமல் எதைப் பற்றியும் யோசிக்காமல் அப்படியே தூக்கில் தொங்கி விட்டார்!

நல்ல குணங்கள் கொண்ட பெண்ணைப் பற்றி அவளை நன்கறிந்தவர்களே சந்தேகப்பட்டு புரளி பேசினால் அதை எந்தப் பெற்றவரால் தாங்க முடியும்! அவர்களை எதிர்த்து தைரியமாகக் கேள்வி கேட்கவா முடியும்?

ஆனால் மைதிலி கேட்டாள்! சற்று ஆவேசமாகவே கேட்டாள்!

"எம்பொண்ணப் பத்தி இப்டி பேசறேளே? உங்களுக்கெல்லாம் மனசாட்சியே கெடையாதா?" என்று திருப்பிக் கேட்டாள்!

"எம்பொண்ணப்பத்தி எனக்கு நன்னாத் தெரியும்! அவ ஒரு நாளும் இப்டி ஒரு தப்ப பண்ணவே மாட்டா!"என்று அழுகையினூடே சொன்னாள்!

அன்று முழுதும் பாஸ்கரனும் கிருஷ்ணாவும் பல இடங்களில் அலைந்தனர்! ஆனால் பத்மினியோ, விஜயகுமாரோ கிடைக்கவேயில்லை!

பாஸ்கரன் இடிந்து போனான்! தன்னுடைய பலம் அத்தனையையும் ஒரே நேரத்தில் இழந்தது போல தவித்தான்!

கிருஷ்ணாவும் அவனுடைய தந்தை நாகலிங்கமும், பவதாரிணியின் தந்தை சிவநேசனும் அவனுக்குத் துணையாக இருந்திருக்காவிட்டால் பாஸ்கரன் அன்றே தானும் போய்ச் சேர்ந்திருப்பான்!

அன்றைய நாளும் இப்படியே கழிய மறுநாள் விஜயகுமாரின் அன்னை, பாஸ்கரனின் வீடு தேடி ஓட்டமும் நடையுமாக வந்தார்!

"இப்பதான் ஆஸ்பிடல்லேந்து போன் வந்திச்சு! முந்தா நேத்தி நைட்டு என் பையனுக்கு ஆக்ஸிடென்ட் ஆயிருச்சுன்னு! என் பையன் எந்த தப்பும் பண்லங்க.... வாங்க! அநேகமா உங்க வீட்டு பொண்ணும் அங்கதான் இருக்கும்! வாங்க!" என்றாள்!

எல்லாருக்கும் பாதி உயிர் வந்தது போல இருக்க, எல்லாரும் பதறியடித்துக் கொண்டு அவள் குறிப்பிட்ட அந்த மருத்துவமனைக்கு ஓடினார்கள்!

அங்கே விஜயகுமார் உடல் முழுதும் கட்டுகளுடன் குற்றுயிரும் குலையுயிருமாகக் கிடந்தான்!

அவனை மெல்ல எழுப்பி, விவரம் கேட்டனர்! அவனால் பேசக் கூட முடியவில்லை! எனினும் கஷ்டப்பட்டு கிருஷ்ணா கேட்ட எல்லா கேள்விகளுக்கும் பதிலளித்தான் அந்த விஜயகுமார்!

"கோவில்லேந்து வந்து எங்க வீட்ல எங்கம்மாவ விட்டுட்டு, அப்டியே நா பத்மினிய கூட்டிகிட்டு அவங்க வீட்டுக்கு கௌம்பிட்டேன்! அவள அவங்க வீட்டு வாசல்ல விட்டுட்டுதான் நா எங்க வீட்டுக்கு வரதுக்கு திரும்பினேன்! அவ அவங்க வீட்டு கேட்டை தெறக்கறதப் பாத்தப்றம்தான் நா அங்கிருந்து நகர்ந்தேன்! சத்தியமா! என்ன நம்புங்க!

அவள விட்டுட்டு திரும்பி எங்க தெருவுக்குள்ள நுழையும் போதுதான் எனக்கு ஆக்ஸிடென்ட் ஆயிடுச்சு! நா யாரு என்னன்னு தெரியாததால இவங்க இன்னிக்கு காலைல நா கண் முழிச்சப்றமா என் கிட்ட கேட்டு எங்கம்மாவுக்கு தகவல் குடுத்தாங்க! சத்யமா நா பத்மினிய எதுவும் பண்ல!" என்றான் அழுதபடி!

"சரிப்பா! ஆனா உன் நோட்லல்லாம் இப்டி எழுதி வெச்சிருக்கியே? இதுக்கென்ன அர்த்தம்?"

"ஐயோ! சும்மா சார்! அவ ரொம்ப அழகா இருக்கா! நல்லா படிக்கறா! எனக்கு அவள ரொம்ப புடிச்சது... பசங்கல்லாம் சேந்து என்னையும் அவளையும் வெச்சு கிண்டல் பண்ணாங்க.... அத நெனச்சு நானும் சும்மா கிறுக்கி வெச்சேன் சார்! பத்மினி ஒருநாள் இத பாத்துட்டா! இதெல்லாம் தப்பு! படிப்புதான் நமக்கு முக்கியம்ன்னு எனக்கு அட்வைஸ் கூட பண்ணினா! அதுலேந்து நா இதெல்லாம் மறந்துட்டு படிப்புல கான்சென்ட்ரேட் பண்ண ஆரம்பிச்சுட்டேன் சார்! அவ நெஜமாவே நல்ல பொண்ணு சார்! எனக்கு நல்ல ஃப்ரண்டு சார்!" என்றான் அவன்!

அவனுடைய அம்மா பாஸ்கரனிடம் மனமாற மன்னிப்பு கேட்டார்!

ஆனால் என்ன பயன்! இவருடைய துக்கிரித்தனமான பேச்சால் இப்போது இரண்டு உயிர்கள் போய்விட்டனவே! இதை இவருடைய மன்னிப்புக் கோரலினால் திருப்பித் தர முடியுமா?

விஜயகுமார் கிடைத்துவிட்டதால், இப்போது அவனுடன் பத்மினி எங்கும் ஓடவில்லை என்பது தெளிவாகிவிட்டது! அப்படியெனில் அவள் எங்கே போனாள்? அவளுக்கு என்ன ஆயிற்று?

இப்போதும் பாஸ்கரன் காவல்துறையில் புகார் அளிக்க ஒப்புக்கொள்ளவில்லை! ஆனால் மைதிலியின் வற்புருத்தலால் வேறு வழியின்றி அவன் காவல்துறையில் புகாரை எழுதி வைத்தான்!

பத்மினிக்கு என்ன ஆயிற்று என்று தெரியாமல் எதுவும் புரியாமல் எல்லாரும் வீடு வந்து சேர்ந்தனர்!

வீடே வெறிச்சென்று ஆகிவிட, அடுத்தடுத்து, கணவன், மகன் என்று பறி கொடுத்த காமாட்சிப் பாட்டி நோயில் விழுந்தாள்!

இந்த நிலையில் ருக்மணியை இங்கே வைத்து பார்த்துக் கொள்ள உங்களால் முடியாது என்று கூறி, அவளை, அவளுடைய பெற்றோர் தங்கள் வீட்டுக்கு அழைத்துச் செல்ல அனுமதி கேட்க, மனசேயில்லாமல் அனுப்பி வைத்தான் பாஸ்கரன்!

பட்ட காலிலே படும்! கெட்ட குடியே கெடும் என்பது போல அவர்களுக்கு அடுத்த அடி விழுந்தது!

ருக்மணியை அழைத்துச் சென்ற கார் விபத்துக்குள்ளாகி, அவளுடைய கரு கலைந்துவிட்டது!

பாஸ்கரன் உடைந்தே போனான்! கடவுளே! நா என்ன தப்பு செஞ்சேன் என்று ஊமையாய் அழுதான்!

ருக்மணியை வீட்டுக்கு அழைத்து வந்து தன்னால் முடிந்த அளவு அவளை பார்த்துக் கொண்டான்! தன் மனம் வேதனைப்படும்போது வரும் கோபத்தை அவளிடம் காட்டப் போக, ருக்மணிக்கு வாழ்க்கையே விட்டுப்போயிற்று! ஆனால்,

"எனக்குன்னு இருக்கற ஒரே சொந்தம்டீ நீ! உன்னையும் இழந்திடுவேனோன்னு பயமா இருக்குடீ! டீ! ருக்மணீ! நீயும் என்ன விட்டுப் போய்டாதடீ!" என்று அவன் தூக்கத்தில் உளறியது கேட்டு தன்னைத் தானே தைரியப்படுத்திக் கொண்ட ருக்மணி அன்றிலிருந்து பாஸ்கரனுக்குத் துணையாக ஒரு தூணைப் போல நிற்கலானாள்!

காமாட்சிப் பாட்டியின் உடல்நிலை மோசமாகிப் போக, யாருக்கும் தொந்திரவாகிவிடக் கூடாதென்று ஒரு நள்ளிரவில் அவரும் சத்தமின்றி இறைவனடியைச் சேர்ந்தார்!

இப்படியே ஒரு வருடம் ஓடிப் போனது!

வீட்டில் மைதிலியும் பாஸ்கரனும் ருக்மணியும் நடை பிணங்களாக வளைய வந்தனர்!

இவர்களைப் பார்த்துக் கொண்டிருந்த கிருஷ்ணாவும் பவதாரிணியும் கூட வேதனையுடனே வளைய வந்தார்கள்!

இவர்கள் இப்படி நொந்து போய் இருப்பதைப் பார்த்த சிவநேசனும் நாகலிங்கமும் கிருஷ்ணா-பவதாரிணியின் நிச்சயதார்த்த விழாவை நடத்தினால் அவர்கள் இருவரும் கொஞ்சமாவது உற்சாகமடைவார்கள் என்று நம்பி அதற்குண்டான ஏற்பாட்டைச் செய்தார்கள்!





- இது இருளல்ல...... விரைவில் வெளிச்சம் வரும்!


 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top