• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Irandalla Ondru - Episode 11

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

akila kannan

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Apr 27, 2018
Messages
7,900
Reaction score
46,307
Location
Earth
Dear Friends,
Thank you so much friends for your likes and comments... It's really encouraging...

இரண்டல்ல ஒன்று – 11
கலங்கிய கண்களைத் துடைத்துக் கொண்டும்… தன்னைத் தானே சமாதானம் செய்துக் கொண்டும் மணமேடைக்குச் சென்றாள் பவித்ரா.


"வாசு அண்ணா நீ பண்றது கொஞ்சம் கூட சரி இல்லை..." என்று சுபா அவனை எச்சரிக்க, "நீ செய்றதெல்லாம் யோக்கியமா?" என்று உத்தமி சுபாவிடம் பாய்ந்தார்.

"அம்மா..." என்று உத்தமியைக் கட்டுப்படுத்தினான் வாசுதேவன்.
அனைவரும் வரவேற்பு முடிந்து வீட்டிற்குக் கிளம்ப, திருமண மண்டபத்தில் தனியாக அமர்ந்திருந்தாள் பவித்ரா. "பவி..." என்றழைத்து அவள் கைகளை வாசுதேவன் பிடிக்க, படக்கென்று கைகளை உருகிக் கொண்டாள் பவித்ரா.


"பவி... இப்ப என்ன பண்ணுத? எட்டி... உனக்கும் எனக்கும் என்ன பிரச்சனை... அவுக வீட்டுக்கும் நமக்கும் ஆகாதுன்னு உனக்குத் தெரியும்... அது தான் அவுக இருக்கிற இடத்துக்கு நான் வரலை... உன் விருப்பப்படி கல்யாணம் சிறப்பா முடிஞ்சிருச்சு... நாளைக்கி மறுவீட்டில் மாப்பிள்ளை வீட்டுக்காரக தான் பெரும்பாலும் இருப்பாக... நீ வந்திரு... நான் வரலை..." என்று வாசுதேவன் கூற அவனைக் கோபமாக பார்த்தாள் பவித்ரா.

"எனக்கு பிடிக்கலை... அங்கனக்குள்ள அவுக தான் இருந்தாக... அதேன் நான் மணமேடைக்கு வரலை... அவ்வுளவு தான்… ஏன் பவி கோபப்படுற?" என்று அவளைச் சமாதானம் செய்யும் விதமாக வாசுதேவன் கூற, "யாரை பிடிக்கலை?" என்று கேட்டாள் பவித்ரா.

"இது என்ன முட்டாள்தனமான கேள்வி?" என்று கேட்டான் வாசுதேவன்.

"யாரைன்னு கேட்டேன்?" என்று பவித்ரா மீண்டும் கடுப்பாக கேட்க, வாசுதேவன் மௌனம் காத்தான்.

"மணமேடைக்கு வாங்கன்னு கூப்பிட்டது நான்... என் வார்த்தைக்கு மதிப்பு கொடுக்கணுமுன்னு நினைச்சிருந்தா வந்திருப்பீங்க... நீங்க அவமதிச்சது என்னை... நீங்க சமாதானம் செய்யவும், நான் வாலை ஆட்டிக்கிட்டு உங்க பின்னாடி நாய் மாதிரி வரணுமா?" என்று பவித்ரா காட்டமாக கேட்க, "என்ன பேசுற பவி?" என்று தன் கண்களை இறுக மூடி மெதுவாகக் கேட்டான் வாசுதேவன்.

உத்தமியின் மகன், பவித்ராவின் கணவனாக மாறி இருப்பது தெரிகிறது.

"கூப்பிட்டா அன்புக்காக… பாசத்துக்காக… மரியாதைக்காக பின்னாடி வரவங்க நாய்ன்னா இப்ப நான் தானே நாய்... நீங்க சொன்னது தான்... நான் புதுசா எதுவும் சொல்லலை..." என்று வாசுதேவன் கூறியதை மீண்டும் மீண்டும் கூறி அவனை கடுப்பேற்றினாள் பவித்ரா.

"பவி... எனக்கு உன் மேல் கோபமும் இல்லை... நான் உன்னை ஒரு வார்த்தை திட்டவுமில்லை... எனக்கு அங்க வர பிடிக்கலை... அம்மாவுக்கும் பெரிய உடன்பாடில்லை... நீ புரிஞ்சிக்காம அழுத்திக் கூப்பிட்டது எனக்குக் கோபம் வந்திருச்சு... ஏதோ கோபத்தில் நான் ஒரு தடவை தான் சொன்னேன்... நீ ஓராயிரம் தடவை சொல்ற டீ..." என்று வாசுதேவன் பவித்ராவிடம் விளக்கம் கூறும் விதமாக ஆரம்பித்து, நக்கலாக முடித்தான்.

அப்பொழுது அங்கு ஆவுடையப்பன் மற்றும் செல்வி வர, பவித்ரா அவர்களை நோக்கிச் சிரித்த முகமாகத் திரும்பினாள். அவர்கள் சண்டையோ... ஊடலோ... தற்காலிகமாக நின்றது.

செல்வி, ஆவுடையப்பன் இருவரும் வாசுதேவனிடம், "மாப்பிள்ளை... ரொம்ப நன்றி... கல்யாணத்தை சிறப்பா நடத்தி குடுத்துடீங்க... நாளைக்கு மறுவீட்டுக்கும் வந்துருங்க..." என்று அழைக்க சம்மதமாக தலை அசைத்தான் வாசுதேவன்.

பவித்ராவால், தங்கள் பெற்றோரின் கூற்றை மறுக்க முடியாது.

திருமணத்திற்காக, வாசுதேவன் செய்த வேலையை யாராலும் கணக்கிட முடியாது. தன் தங்கைக்கு செய்வது போல் செய்திருந்தான். ‘அத்தையின் மறுப்பு... பாராமுகம்... எதையும் அத்தான் கண்டுகொள்ளவில்லையே... அனைத்தையும் எனக்காகத் தானே செஞ்சாங்க…’ என்ற எண்ணம் தோன்ற பவித்ரா அந்தக் கோபத்திலும், வாசுதேவனைப் பெருமையாக பார்த்தாள்.

' திருஷ்டி பொட்டுப் போல் இந்த மனஸ்தாபம்... இந்த மனஸ்தாபம் வாராமல் இருந்திருந்தால்...' என்று பவித்ராவால் எண்ணாமல் இருக்க முடியவில்லை.

சரியான நேரத்தில் காய் நகர்த்தி, தான் நினைத்ததை சாதித்துக் கொண்ட உத்தமியை அவளால் திட்டாமலும் இருக்க முடியவில்லை.

'இந்த முன் கோபம்... தாய் பக்தி.. இது இரண்டும் சற்று குறைந்தால் என்ன?' என்று பவித்ரா சிந்திக்க, அவள் சிந்தனையை கலைக்கும் விதமாக, "பவித்ரா... நீ வீட்டுக்கு கிளம்பு.... நாளைக்கி பேசிக்கலாம்..." என்று அவர்கள் கூற, பவித்ரா சம்மதமாக தலை அசைத்தாள்.

பவித்ராவின் பெற்றோர் சென்றவுடன், "அத்தை... மாமா கோபப்படலை... நீ ஏன் இப்படி இருக்க?" என்று வாசுதேவன் சிடுசிடுக்க, "என் தங்கை நலுங்கை ரசிச்சி பார்க்க முடியாமல் பண்ணது நீங்க... பலர் என்னைப் பார்க்க கண் கலங்க வைத்தது நீங்க... அவமானப் பட்டது நான்... ஏமாற்றம் எனக்கு..." என்று பவித்ரா வாசுதேவனை தன் மனதில் பாராட்டியதை மறந்து கனலாய் கொதிக்க… மேலே எதுவும் பேசாமல் "வீட்டுக்கு வா..." என்று அவளை அழைத்துச் சென்றான் வாசுதேவன்.

வீட்டுக்குச் சென்றதும், "மறுவீட்டுக்கு நாம போக வேண்டாம்... பவித்ரா அது மாப்பிள்ளை வீட்டு அழைப்பு... அதனால் நீ மட்டும் போ..." என்று உத்தமி கூற, பவித்ரா பதில் கூறாமல் மௌனமாக அவள் அறைக்குள் நுழைந்தாள்.

சந்தோஷ் சுபாவோடு சென்று விட, "பவி..." என்று வாசுதேவன் அழைக்க, "நாளைக்கி மறுவீட்டுக்கு போறோம்... நீங்க வரீங்க... உங்க அம்மாவும் வராங்க ... குடும்பத்தோடு எல்லாரும் போறோம்..." என்று பவித்ரா ஆணித்தரமாகக் கூறினாள்.

"இல்லை பவி..." என்று வாசுதேவன் ஆரம்பிக்க, "இத்தனை நாள் நான் ஒருவேளை உங்க கிட்ட சண்டை போட்டுட்டு எங்க வீட்டுக்கு போய்ட்டா... என் தங்கை வாழ்க்கைக்குப் பிரச்சனை ஆகிருமோன்னு பொறுமையா இருந்தேன்... இனி அவசியமில்லை..." என்று பவித்ரா நிறுத்தி நிதானமாகக் கூறினாள்.

"என்னடி ரொம்ப பேசுற?" என்று வாசுதேவன் கர்ஜிக்க, "நான் ஏன் அமைதியா இருக்கனும்? நீங்க என்னை மரியாதையா நடுத்துவீங்கன்னா? இல்லை ஊருக்காகவா?" என்று வாசுதேவனைப் பார்த்து பவித்ரா கேட்க, வாசுதேவன் அவளைக் கூர்மையாக பார்த்தான்.

"நீங்க மரியாதை கொடுக்கும் லட்சணத்தை பார்த்துட்டேன்... ஊரைப் பற்றிய கவலையே இல்லை.. நம்ம லட்சணம்… நீங்க உங்க அம்மா பேச்சை கேட்டு மண்டபத்தில் ஆடின அப்பவே அங்க இருக்கிற எல்லாருக்கும் தெரிஞ்சிருக்கும்... இனி புதுசா தெரிய எதுவும் இல்லை... அதனால நான் எதை பற்றியும்... யாரை பற்றியும் யோசிக்க வேண்டாம்…" என்று பவித்ரா முறுக்கி கொள்ள, வாசுதேவன் அவர்கள் அறையில் இருந்த நாற்காலியில் சோர்வாக சாய்ந்து அமர்ந்தான்.

வாசுதேவன் மௌனம் காக்க, "அத்தையை எதிர்த்துப் பேச எனக்கு ரொம்ப நேரம் ஆகாது... ஆனால், அது பிரச்சனையை வளர்க்கும்... அவங்க சொல்ற பல விஷயங்கள் தப்புனு நிரூபிக்க என்னால் முடியும்... ஆனால், அது குடும்ப சூழ்நிலையை கெடுத்திரும்... யாருக்கும் எந்த மனக்கஷ்டத்தையும் கொடுக்க நான் விரும்பலை... எங்க வீட்டு ஆளுங்களும் இப்படி தான் யோசிப்பாங்க..." என்று பவித்ரா தன்மையாகக் கூறினாள்.

வாசுதேவன், தன் கண்களை இறுக மூடி அமர்ந்திருந்தான்.

"இதை எல்லாம் பொறுத்துகிட்டு, நான் ஏன் அமைதியா வாழறேன் தெரியுமா?" என்று கேள்வியாய் நிறுத்தி மீண்டும் தொடர்ந்தாள் பவித்ரா.

"என் பிறந்த வீட்டு முன்னாடி நான் உங்களோடு நிக்கிறது தான் எனக்கு மரியாதை... உங்க குடும்பம் மொத்தமும் என்னை மதிச்சு அங்க வரது எனக்குக் கெளரவம்... நான் இத்தனை வருஷம் உங்க கூட வாழ்ந்த வாழ்க்கைக்கு ஒரு மரியாதை உண்டுன்னு நீங்க நினைச்சீங்கனா நாளைக்கி எல்லாரும் நந்தினி மறுவீட்டுக்கு வரணும்..." என்று பவித்ரா பொறுமையாக பேசினாள்.

வாசுதேவன் தன் மனைவியை ஆழமாக பார்த்தான்.

அப்பொழுது கதவு தட்டும் ஓசை கேட்க, "உங்க அம்மாவாக தான் இருக்கும்... நான் உங்க கூட பேசி எங்க உங்க மனசை மாத்தி நாளைக்கி மறுவீட்டுக்கு கூட்டிட்டு போயிருவேனோன்னு பயத்துல… உங்களை வேற எங்கயாவது படுக்க சொல்லுவாங்க..." என்று பவித்ரா அசட்டையாகக் கூறினாள்.

பவித்ரா பேசிய விதத்தில், அந்தச் சூழ்நிலையிலும் வாசுதேவனின் முகத்தில் மென்னகை தோன்றியது.

"வீட்டில் கல்யாணத்துக்கு வந்த சொந்தகாரங்க இருக்காங்க... அவுகளுக்காக சொல்லுவாக..." என்று அந்த நேரத்திலும் வாசுதேவன் தன் தாய்க்கு வக்காலத்து வாங்க, "ரெண்டும் ஒன்னு தான்..." என்று சலிப்பாக கூறினாள் பவித்ரா.

மீண்டும் கதவு பலமாகத் தட்டும் ஓசை கேட்க, கதவைத் திறந்தான் வாசுதேவன்.

உத்தமியோடு ஒரு முதியவள் இருக்க, "வாசு... இன்னைக்கு இவுக பவித்ராவோடு இங்க படுக்கட்டும்... நீ தோட்டத்து அறையில் படுத்துக்கோ..." என்று அவர் கூற, வாசுதேவன் பவித்ராவை பார்த்தான்.

பவித்ரா முகத்தில் கேலி புன்னகை தோன்ற, "அம்மா... பாவம் ஆச்சி இங்க விசாலமா படுக்கட்டும்... நீங்களும் கூட இருந்து பேசிட்டு இருங்க... பவித்ரா என் கூட தோட்டத்து அறையில் படுத்துப்பா..." என்று தன் தாயிடம் கூறி, "பவித்ரா வா..." என்று கட்டளையிட்டான் வாசுதேவன்.
பவித்ரா தலையணை, போர்வையை சுருட்டிக் கொண்டு, வாசுதேவன் பின் ஓடினாள்.


"எப்பவுமே... இவுக ரெண்டு பேருக்கும்… புதுப் புருஷன்... புது பொண்டாட்டின்னு நினைப்பு..." என்று உத்தமி முணுமுணுத்தார்.
பாவம்... அவர் முணுமுணுப்பை கேட்கத்தான் ஆள் இல்லை.


தோட்டத்து அறை... ஜன்னல் திறந்திருக்க, காற்று சிலுசிலுவென்று வீசியது.
பவித்ரா பாயை விரிக்காமல் கோபத்தில், அமைதியாக அமர்ந்திருக்க… வாசுதேவன் தனக்கும், பவித்ராவுக்கும் பாயை விரித்து, தலையணை வைத்து கால் நீட்டிப் படுத்தான்.


'சுவரோரமாக, தனக்கு கம்மியாக இடம் விட்டு, வாசுதேவன் படுத்திருக்கிறானோ?' என்ற சந்தேகம் பவித்ராவுக்கு எழுந்தது.
 




Last edited:

akila kannan

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Apr 27, 2018
Messages
7,900
Reaction score
46,307
Location
Earth
"பவி... எவ்வளவு நேரம் இப்படியே உட்காந்திருப்ப? வந்து படு..." என்று தோரணையாக கூறினான் வாசுதேவன்.

பவித்ரா வாசுதேவனைக் கூர்மையாக பார்க்க, வாசுதேவனின் கண்களில் குறும்பு மின்னியது.

அப்பொழுது காற்று வேகமாக வீச, ஜன்னல் வழியாக உள்ளே நுழைந்த காற்று அவர்களை தீண்ட பவித்ராவின் உடல் குளிரில் நடுங்கியது.

"என்னைத் தொடும் தென்றல் உன்னைத் தொடவில்லையா?
என்னைச் சுடும் காதல் உன்னைச் சுடவில்லையா?"
என்று வாசுதேவன் ஏக்கமாகப் பாட, பவித்ரா அவனை மௌனமாய் பார்த்தாள்.


"கடலா புயலா இடியா மழையா
என்னை ஒண்ணும் செய்யாதடி...
ஆனால் உந்தன் மௌனம் மட்டும்
ஏதோ செய்யுதடி, என்னை ஏதோ செய்யுதடி... "


என்று வாசுதேவன் பவித்ராவை சமாதானம் செய்ய, பவித்ரா அவனை யோசனையாக பார்த்தாள்.

'காலையில் இருந்து கல்யாணத்தில் அவ்வளவு வேலை பார்த்தாங்க... நான் உனக்காகத் தானே பார்த்தேன்னு சொல்லலாம்... ஆனால் சொல்லி காட்ட மாட்டாங்க... என் அத்தான்...' என்று பவித்ராவின் மனம் தன்னவனுக்காக அவளிடமே வாதாடியது.

ஒருவர் தவறு செய்யும் பொழுது, அவர்கள் செய்த நல்லதை எண்ணி பார்க்கும் உயரிய குணம் நம்மில் எத்தனை பேரிடம் இருக்கிறது?

பவித்ரா உயர்ந்த குணம் படைத்தவள். வாசுதேவனும் அவளுக்குச் சளைத்தவன் இல்லை என்பதே பவித்ராவின் எண்ணம்... சூழ்நிலை தானே நம்மை நகர்த்திச் செல்கிறது.

தன் மௌனத்தை கைவிட்டு,"நாளைக்கு மறுவீட்டுக்கு வரணும்..." என்று பவித்ரா பிடிவாதமாக கூற, "நாளைக்கி பிரச்சனையை நாளைக்கி பார்ப்போம்... பழைய கதை பேசுவோம்..." என்று கூறி பவித்ரா சமாதானமாக பேசிவிட்ட சந்தோஷத்தில், உற்சாகமாக அவள் முன் சம்மணமிட்டு அமர்ந்தான் வாசுதேவன்.

"ஆக... நீங்க ஒரு வேளை என் கிட்ட சண்டை போட்டுட்டு உங்க வீட்டுக்கு போய்ட்டா... உங்க தங்கை வாழ்க்கைக்குப் பிரச்சனை ஆகிருமோன்னு தான் வேறு வழி இல்லாமல்... என்னைப் பிடிக்காமல்... என்னைப் பார்க்க வெறுப்பா இருந்தாலும்.... என்னை சகிச்சிட்டு நீங்க இங்க பொறுமையா இருக்கீக...” என்று கேலி போல் கூறினான் வாசுதேவன்.

"நான் கூட என் பொஞ்சாதி இந்த அத்தான் மேலுள்ள ஆசையில் தான் பட்டணத்தை விட்டுட்டு இந்த கிராமத்தில் இருக்கானு நினைச்சிட்டு இருக்கேன்... இனி நீங்க இங்கன இருக்கணுமுன்னு அவசியமில்லை... தோது படலைனா கிளம்பிரலாம்... அப்படித் தானே?" என்று வாசுதேவன் பவித்ராவின் கண்களைப் பார்த்த படி கேள்வியாக நிறுத்தினான்.

வாசுதேவனின் குரலில் கேலி இருந்தாலும், அவன் கண்களில் வலி இருந்தது.

வாசுதேவனின் கண்களை பார்ப்பதைத் தவிர்த்து, "அத்தான்... நான் ஏதோ கோபத்தில் ஒரு வார்த்தை சொன்னா... நீங்க நாலு வார்த்தையா இட்டுக் கட்டி பேசுறீங்க..." என்று கூறி பவித்ரா தன் முகத்தை திருப்பிக் கொண்டாள்.
"நான் மண்டபத்தில் உன்னை வையக்கூட இல்ல... ஏதோ ஒரு வார்த்தை கோபத்தில் ஒரு தடவை சொல்லிட்டேன்... நீ வால் வால்ன்னு நாலு தடவை சொல்லலை..." என்று வாசுதேவன் பிடிவாதமாக கேட்டான்.


"எனக்கு உண்மையில் உங்க கூட சண்டை போடற தெம்பில்லை... காலையிலிருந்து பயங்கர வேலை... சாயங்காலம் பயங்கர மன உளைச்சல்... என்னைத் தூங்க விடுறீங்களா..." என்று கூறி பவித்ரா வாசுதேவனையும் மனதில் கொண்டு, சுவரோரமாக விரிக்கப்பட்ட பாயில் படுத்தாள்.

சில நிமிடங்களில் கண்ணுறங்கினாள் பவித்ரா.

'சோர்வா தெரியுறா... காலையில் இருந்து இவ உட்காரவே இல்லை..." என்றெண்ணி தன் இடது கையை தலைக்கு அண்டைக் கொடுத்து, பவித்ராவை பார்த்தபடி அவள் அருகே படுத்திருந்தான் வாசுதேவன்.

ஜன்னல் வழியாக வந்த நிலவொளியில் பவித்ராவின் முகம் ஜொலித்தது.

ஆனால் அவள் முகத்தில் அழுததற்கான கண்ணீர் ரேகைகள்...

வாசுதேவன் அவள் தலையை அன்பாய் அரவணைப்பாக கோதினான்.

"எனக்காக இன்னக்கி நீங்க மணமேடைக்கு வந்திருக்கலாம் அத்தான்..." தூக்கத்தில் முணுமுணுத்தாள் பவித்ரா.

"இது இவ்வளவு பெரிய விஷயமுன்னு நான் நினைக்கலை டீ... வரலைனா விட வேண்டியதுதானே... நீ ஏன் பிடிவாதம் பிடிக்கறன்னு தான் தோணுச்சு..." வாசுதேவனின் குரல் அந்த அறையில் உடைந்து ஒலித்தது.

பவித்ரா வாசுதேவனின் கைவளைவில், ஆழ்ந்த நித்திரைக்குச் சென்றிருந்தாள்.

வாசுதேவன் தூக்கம் வராமல் விட்டத்தைப் பார்த்து படுத்திருக்க, இதே தோட்டத்து அறையில், அவனும் சந்துருவும் அடித்த கோட்டம் நினைவு வந்து பாடாய் படுத்தியது. மறைந்திருந்த சந்துருவின் நினைவுகள் பல நாட்களுக்குப் பின் இன்று விஸ்வரூபம் எடுத்தது. அதைப் பின்னுக்கு தள்ளி, 'யார் மனதையும் புண்படுத்தாமல் நாளைய பொழுதை எப்படிச் சமாளிப்பது?' என்று சிந்தித்தான் வாசுதேவன்.

உரலுக்கு ஒரு பக்கம் இடி...
மத்தளத்துக்கு இரண்டு பக்கமும் அடி...
இதுவே வாசுதேவனின் கதி
இதைச் சரி செய்யுமா விதி....
என்ற புலம்பலோடு நாம் புதுமண தம்பதியரை நோக்கிப் பயணிப்போம்.
ஆவுடையப்பன் வீட்டில், தோட்டத்தில் செல்வி கலங்கிய கண்களோடு அமர்ந்திருந்தார்.


"என்ன செல்வி... ஏன் ஒரு மாதிரி இருக்க?" என்று ஆவுடையப்பன் கேட்க, "இல்லை... வீடே ரொம்ப வெறிச்சோடி இருக்கு..." என்று கண்கலங்க கூறினார் செல்வி.

"ம்..." தலை அசைத்தார் ஆவுடையப்பன்.
"பவித்ராவுக்கும் மாப்பிள்ளைக்கும் ஏதோ சண்டை..." என்று செல்வி கம்மலான குரலில் கூறினார் செல்வி.


"ம்... பார்த்தேன்... எந்தப் புருஷன் பொஞ்சாதி சண்டை இல்லாம இருக்காங்க? உனக்கும் எனக்கும் சண்டை வந்ததில்லையா?" என்று கேள்வியாக நிறுத்தினார் ஆவுடையப்பன்.

"மாப்பிள்ளை வெளி இடத்தில் எல்லாரும் பாக்குற மாதிரி கோவப்பட்டிருக்க வேண்டாம்... இப்படி நம்ம பொண்ணு கண் கலங்குற அளவுக்கு..." என்று செல்வி சற்று மனத்தாங்கலோடு கூற, "மாப்பிள்ளை நல்லவர் தான்... கொஞ்சம் அவுக அம்மா மேல் பாசம் ஜாஸ்த்தி..." என்று மெல்லிய புன்னகையோடு கூறினார் ஆவுடையப்பன்.

"ம்..." என்று செல்வி மெலிதான குரலில் கூற, "ரொம்ப யோசிக்காத... இந்நேரம் உம்பெண்ணை சமாதானம் செய்திருப்பார்..." என்று வாசுதேவனின் மீதுள்ள நம்பிக்கையில் கூறினார் ஆவுடையப்பன்.

"நாளைக்கி சரியா வந்திருவாங்கல்ல?" என்று செல்வி பதட்டத்தோடு கேட்க, "அதெல்லாம் பவித்ரா கூட்டிட்டு வந்திருவா..." என்று தன் மனதில் சில குழப்பம் இருந்தாலும் அதை மறைத்து தன் மனைவியை சமாதானப் படுத்தினார் ஆவுடையப்பன்.

தலை அசைத்த செல்வி, "நந்தினி வாழ்க்கை எப்படி இருக்குமோ?" என்று அவர் யோசனையாகக் கூற, ஆவுடையப்பன் சிரித்துக் கொண்டார்.

"அது சரி... என் பொழப்பு உங்களுக்குச் சிரிப்பா சிரிக்குதா?" என்று தன் மகள்கள் இல்லாத கடுப்பை தன் கணவன் மீது காட்டியபடி வீட்டுக்குள் சென்றார் செல்வி. ஆவுடையப்பனும் உள்ளே செல்ல, உறவினர்களின் சத்தம் எங்கும் கேட்டுக் கொண்டிருந்தது.

அவர்கள் பேச்சில், நந்தினி ராம் பிரசாத் இங்கு இருப்பது நமக்குத் தெரிகிறது.

நந்தினி எந்தவித ஒப்பனையுமின்றி அழகாக இருந்தாள். ராம் பிரசாத் ஜன்னல் வழியாக வானத்தை பார்த்துக் கொண்டிருந்தான்.

நந்தினி, தன் பெட்டியின் மேல் பகுதியில் ராம் பிரசாதுக்குச் செய்திருந்த ரோபட் பொம்மை கொண்ட Gift box யை கையில் எடுக்க, "நான் உங்க கிட்ட பேசணும்..." என்று ராம் பிரசாத் எங்கோ பார்த்தபடி கூறினான்.

"உங்க..." என்ற சொல்லில் இருந்த விலகலை உணர்ந்த நந்தினி, அந்தப் பொம்மையை வெளியே எடுக்கவில்லை.

ராம் பிரசாத் தன் ஒட்டு மொத்த தைரியத்தையும் திரட்டி… நந்தினியின் முகம் பார்ப்பதை தவிர்த்து, வைஷ்ணவி சம்பந்தப்பட்ட மொத்த விஷயத்தையும் கூறி முடித்தான்.

பெட்டியின் மேல் பகுதியில் இருந்த பொம்மையை, ஒரு பையில் சுருட்டி, பெட்டியின் கீழ் பகுதிக்குச் செல்லுமாறு அழுத்தினாள் நந்தினி.
சிறு இடைவெளிக்குப் பின், "ஆக, பெயரில் தான் ராம்... செயலில் இல்லைன்னு சொல்லுங்க..." என்று ஏளன நகையோடு நந்தினி கூற, அத்தனை நேரம் இருந்த குற்ற உணர்ச்சி மறைந்து நந்தினியின் நக்கலான கேள்வியில் கோபம் மேலோங்க, அவளை முறைத்துப் பார்த்தான் ராம் பிரசாத்.


இரண்டல்ல ஒன்று இணையாக பயணிக்கும்…

Next episode on Wednesday friends....
 




Last edited:

SarojaGopalakrishnan

முதலமைச்சர்
Joined
Jul 20, 2018
Messages
5,515
Reaction score
7,708
Location
Coimbatore
அருமையான பதிவு
மாமியார் பற்றி நல்லா
புரிந்து வைத்திருக்கிறாள்
வாசுதேவன் இரண்டு பேரு கிட்ட
மாட்டிக் கொண்டான்
 




akila kannan

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Apr 27, 2018
Messages
7,900
Reaction score
46,307
Location
Earth
அருமையான பதிவு
மாமியார் பற்றி நல்லா
புரிந்து வைத்திருக்கிறாள்
வாசுதேவன் இரண்டு பேரு கிட்ட
மாட்டிக் கொண்டான்

Thank you :)
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top