• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Kadhal Kadan - 13

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Shivapriya Murali

இணை அமைச்சர்
Author
Joined
Jan 21, 2018
Messages
621
Reaction score
2,738
Location
Bangalore
காதல் கடன்

(13)

எதுவும் பேசாமல் ராதிகா காரிலேறி உட்கார, பரத்தும் ஏறியமர்ந்து காரைக் கிளப்பினான். ஒரு மணிநேரப் பயணம்...கொஞ்சமே திறந்திருந்த ஜன்னல் வழியாக வந்த காற்று மென்மையாகத் தாலாட்ட...களைப்பு மேலிட ராதிகா சீட்டில் தலை சாய்த்து உறங்கிப்போனாள்...



ஈசிஆர் ரோட்டில் மிதமான வேகத்தில் காரை ஓட்டிக்கொண்டிருந்தான் பரத். ஒரு மாதமாகப் பரபரத்துக் கொண்டிருந்த ரிசப்ஷன் ஒரு வழியாக வெற்றிகரமாக முடிந்துவிட்டது. தோளின் மீதிருந்து மிகப்பெரிய பாரம் விலகியது போன்ற லேசான உணர்வு ஏற்பட்டிருந்தது. மெதுவாகத் தலையைத் திருப்பி பக்கத்து சீட்டில் நிச்சலனமாக உறங்கிக் கொண்டிருந்தவளை பார்வையால் வருடினான். அவளுடைய முழுமையான ஒத்துழைப்பு இல்லாமல் ரிசப்ஷன் இவ்வளவு அருமையாக நடந்திருக்க சாத்தியமே இல்லை என்பது அவனுக்கு நன்றாகத் தெரியும்.



அதிலும் அவளுடைய நிமிர்வு அவனை பிரமிப்பில் ஆழ்த்தியிருந்தது. மிகப் பிரபலமான, விஐபிக்களை எல்லாம் மிகவும் நிமிர்வுடனும் தெளிவுடனும் வரவேற்றிருந்தாள். அவள் கை கூப்பி கூறிய வணக்கத்தில் கூட ஒரு கம்பீரமும், ஆளுமையும் காணப்பட்டது. அதே நேரத்தில் நளினமாகவும், பெண்மைக்கே உரிய மென்மையுடனும் நடந்துகொண்டிருந்தாள். அவனை மட்டுமன்றி வரவேற்பிற்கு வந்த விருந்தினர்களின் கவனத்தை அவளுடைய நறுவிசான நடத்தையால் தன்பால் எளிதாக ஈர்த்திருந்தாள்.



பகட்டும் பாசாங்கும் நிறைந்த மேல்தட்டு மக்களின் மத்தியில் மென்மையான அழகுடனும், மேன்மையான நிமிர்வுடனும் மனத்தைக் கொள்ளையடித்திருந்தாள் இந்தப் பெண். போலித்தனமற்ற அவளுடைய புன்னகை வைரங்களின் ஜொலிப்பையும் மங்கச் செய்திருந்தது. “உனக்கு சரியான ஜோடிதான் பரத்,” என்று பலர் புகழ்ந்திருந்தனர். கூடவே கேக்கை வெட்டவேமாட்டேன் என்று அவளடித்த லூட்டியும் நினைவுக்கு வர, தனக்குத்தானே சிரித்துக்கொண்டான் பரத்.



“இதே, வேறு சூழ்நிலைகளில் உன்னைச் சந்தித்திருந்தால், இந்நேரம் உன்மேல் காதல் பித்துகொண்டு உன் பின்னாலேயே அலைந்திருப்பேனடி பெண்ணே...” என்று பிதற்றியது அவன் மனம்.



முகத்திலறைந்தாற்போல் தாக்கிய இந்த எண்ணத்தின் அதிர்ச்சியில் வண்டியை சடன் பிரேக் போட்டு நிறுத்தினான், பரத்.



மூச்சு முட்டுவதுபோலிருக்க, கார் கதவைத் திறந்து வெளியே வந்து நின்றுகொண்டான்...பிறகு என்ன தோன்றியதோ...காருக்குள் சென்றமர்ந்து ஜன்னல்களை மேலேற்றி முழுதாக மூடிவிட்டு ஏசியை ஆன் செய்து பின் வண்டியை ஐடிலில் போட்டுவிட்டு காரை விட்டு வெளியேறினான். கடற்காற்று இதமாக வருடிச் சென்றது...இதையெல்லாம் கவனிக்காமல் மனம் தான்தோன்றித்தனமாகக் குதியாட்டம் போட்டுக்கொண்டிருந்தது. அதன் தலையில் “ணங்” என்று ஒரு கொட்டு வைத்து அடக்கியவன், அமைதியாக கண்மூடி பானட்டில் சாய்ந்து நின்றுவிட்டான்.



அப்படி எவ்வளவு நேரம் நின்றிருப்பானோ தெரியாது, “என்ன ஆச்சு, ஏதாவது ப்ராப்ளமா?, கார் ரிப்பேரா?” என்னும் ராதிகாவின் குரல் அவனை எழுப்பியது. அவள் குரல் கேட்டு திரும்பியவன், அவளுடைய தோற்றம் கண்டு வாயடைத்து நின்றுவிட்டான். சுற்றிலும் இருட்டு...அவனுடைய கார் விளக்கின் வெளிச்சம் மட்டுமே அவ்விடத்தில் பரவியிருந்தது...அது காருக்குப் பக்கத்தில் நின்றிருந்த ராதிகவைச் சுற்றி ஒரு ஒளிவட்டம்போல் பரவியிருந்தது. முதன்முறையாக ராதிகாவை ஒரு பெண்ணாக மட்டும் பார்க்கவேண்டும் என்று அவன் மனம் அலைபாய்ந்தது...அத்துமீறத் துடித்த மனதை அடக்க அவனுடைய புத்தி பெரும்பாடு பட்டுக்கொண்டிருந்தது...மனதுக்கும் புத்திக்கும் இடையேயான இந்தப் போராட்டத்தில் சில கணங்களுக்கு மனம் வெற்றி பெற்றது...



மனதின் தூண்டுதலில் பரத்தின் பார்வை ராதிகாவை விச்ராந்தியாக தலை முதல் பாதம் வரை வருடியது. லேசாகக் கலைந்திருந்தாள் ராதிகா, பாதி நாளுக்கு மேல் அணிந்திருந்ததால், உடையும் லேசாக நலுங்கியிருந்தது, முகத்தில் இருந்த மேக்கப்பை முழுமையாகக் கலைத்திருந்தாள். நெற்றியில் சிறிய பொட்டும், கண்ணில் கலைத்தும் கலையாத மையின் சாயலும் மட்டுமே மிஞ்சியிருந்தது. தூக்கக் கலக்கத்தில் கண்ணிமைகளும் கன்னங்களும் லேசாகச் சிவந்திருந்தன. அவனிடம் வம்பிற்கு நிற்கும்போது மட்டும் லேசாக மேலுயரும் கூர்நாசியில் சறுக்கி ராதிகாவின் இதழ்களில் நிலைத்தது பரத்தின் பார்வை. ஜீராவில் தோய்த்த ஆரஞ்சு சுளை போல் மினுமினுத்த அவளுடைய இதழ்கள் லேசாகத் திறந்திருந்தன...அதையும் தாண்டி அத்துமீறிய பரத்தின் கண்கள் மயிலிறகுபோல் அவள் உடல் தீண்டிக் கீழிறங்கின...தறிகெட்டு பாய்ந்த பார்வைக்குக் கடிவாளமிடும் நோக்கமே இல்லாமல் லேஹங்காவிலிருந்து வெளியே தெரிந்த முயல்குட்டிப் பாதங்கள் வரை படர்ந்து, மீண்டும் வந்தவழியே அதே நிதானத்துடன்...இவள் என்னவள் என்ற உரிமையுடன், மேலேறியது பரத்தின் விழிகள். பாதாதிகேசம் தீண்டிப் படர்ந்த அந்த உரிமைப் பார்வையின் வீச்சைத் தாளமாட்டாமல் செம்மை நிறம் பூசிக்கொண்டன ராதிகாவின் கன்னங்கள். விழி விடுத்த கணைகளில் வீழ்ந்துவிடுவேன் என்று மிரட்டிப் படபடத்த இதயத்தைக் கட்டுப்படுத்த முடியாமல், சட்டென்று திரும்பி பரத்துக்கு முதுகு காட்டி நின்றாள் ராதிகா. பல மைல் தூரம் மாரத்தான் ஓடியதுபோல் மேல்மூச்சு கீழ்மூச்சு வாங்கியது அவளுக்கு. பரத்தின் பார்வையின் உரிமையான ஊடுருவலால் உடல் முழுவதும் குப்பென்ற வெம்மை பரவ உடல் நடுங்க நின்றிருந்தாள் ராதிகா. “ச்சே, என்ன இப்பிடி பாக்கறார், பேட் பாயாட்டம்,” என்று நினைத்தபடி அவன் இன்னும் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறானா என்று அறியும் ஆவல் தூண்ட, மெதுவாக அவனை நோக்கித் திரும்பினாள்.



ராதிகா திரும்பி நின்ற அக்கணமே பரத்தும் தன்னிலைக்கு வர, அவனும் எதிர்ப்புறமாகத் திரும்பி, காற்றில் கலைந்து வீழ்ந்த நெற்றிமுடிக்குள் கைவிட்டுக் கோதி தன் மனதைச் சமன்படுத்த முயன்றான்…மெதுமெதுவாய் மனதுக்கும் புத்திக்கும் நடந்துகொண்டிருந்த போரில் கடைசியாக புத்தி வென்று நிமிர்ந்து நின்றது...அதே சமயம் சரியாக பரத்தின் ஃபோன் அடிக்க, அவர்கள் இருவரும் இன்னும் வீடு வந்து சேரவில்லையே என்ற கவலையில் ஜகன்னாதன்தான் ஃபோன் செய்திருந்தார்...ஃபோனை எடுத்தவன், “இதோ வந்துண்டே இருக்கோம்பா...இன்னும் பத்து பதினைஞ்சு நிமிஷத்துல வந்துடுவோம்...” என்று திரும்பியவன் தன்னையே பார்த்தபடி நின்றிருந்த ராதிகாவைப் பார்த்து, “அப்பாதான் ஃபோன்ல, இன்னும் வரலையேன்னு கேக்கறார், போலாமா?” என்று கேட்க, அவனுடைய பார்வையைச் சந்திக்காமல் சிவந்த முகத்துடன் தலையைக் குனிந்தபடி தலையை அசைத்த ராதிகாவைப் பார்த்து, மனதில் எந்தவொரு குற்ற உணர்வுமே இல்லாமல் ஒரு குறுநகை பூத்தான் பரத்.



அதற்குள், சடசடவென மழை தூர ஆரம்பிக்க, “அச்சச்சோ, மழை,” என்றபடி, வேகமாகக் காரில் ஏறி அமர்ந்துகொண்டனர் இருவரும். அவர்கள் ஏறி அமர்வதற்குள் மழை வலுத்து, அவர்களையும் நனைத்து விட்டிருந்தது. ஈர்ப்பால் கனத்திருந்த சூழல் மாறி, இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து சிரித்துக்கொள்ள...பரத் ராதிகாவைப் பார்த்து, “மழை வேணும்னு கேட்டியே, அதுவும் வந்துடுத்து, இப்போ சந்தோஷமா?” என்று கேட்க, “சரிதான், விட்டா இந்த மழையும் எங்க கிளவுட் நைனோட ஏற்பாடுதான்னு சொல்லிடுவேள் போலருக்கே...” என்றபடி சிரிக்க... “அப்படி சொல்லணும்னு ஆசைதான்...ஆனா இது இயற்கையோட கலப்படமில்லாத விளையாட்டு மட்டுமே...” என்றான் பரத். “ஆனாலும், சீசனே இல்லாம மழையும் பெஞ்சு, இன்னிக்கி நீ ஆசைப்பட்ட இந்த விஷயமும் நடந்துடுத்து...திருப்திதானே? என்று கேட்டான் காரைக் கிளப்பியபடி.



பரத்தைப் பார்த்து ஆமோதிப்பாகத் தலையசைத்தவள், அதன் பிறகு மௌனமாகிப் போனாள். மௌனத்திலேயே சில வினாடிகள் கடக்க...மெல்ல அவன்புறம் திரும்பி, “தேங்க்ஸ்” என்றாள் ராதிகா.



எதற்கு என்பதுபோல் அவளைக் கேள்வியாகப் பார்த்த பரத்தின் பார்வைக்கு விடையாக,



“யு ரியலி மேட் மீ ஃபீல் லைக் அ ப்ரின்செஸ் டுடே,” என்றாள் ராதிகா.



“அண்ட் யு ரியலி பீஹேவ்ட் லைக் ஒன் டூ,” என்று பரத் சிரித்தபடி பதிலளிக்க...



“இதுக்கும் தேங்க்ஸ், நான் இதை காம்ப்ளிமெண்டாவே எடுத்துக்கறேன்,” என்றாள் ராதிகா...



“நானும் இதை காம்ப்ளிமெண்டாதான் சொன்னேன், கம்ப்லெயிண்டா இல்லை,” என்று பதிலளித்தான். “ஐ ரியலி மீன் இட், யு வேர் ஆசம் டுடே, தேங்க்ஸ்” என்று பரத்தும் நன்றி கூற...



“வாழ்க்கை நாளைக்கி நமக்காக என்னத்தை வெச்சுண்டு காத்துண்டு இருக்கோ நேக்கு தெரியாது...ஆனா இன்னிக்கி, இந்த நாள், உங்களால என் வாழ்க்கையில ஒரு மறக்க முடியாத நாளா இருக்கும். இந்த மாதிரி ஒரு இவென்ட்ட ஏற்பாடு பண்றது உங்க பிசினஸ்ல சர்வ சாதாரணமான விஷயமா இருக்கலாம், ஆனா என்னை மாதிரி ஒரு மிடில் கிளாஸ் பொண்ணோட வாழ்க்கையில இதெல்லாம் கனவுல கூட நடக்காத விஷயங்கள், உண்மையா சொல்லனும்னா, இப்படியெல்லாம் கூட கனவு காணலாம்னே கூட தெரியாத விஷயங்கள்...எனக்கு எப்பிடி எக்ஸ்ப்ரெஸ் பண்றதுன்னு தெரியல...இதுக்காக நீங்க எக்கச்சக்கமா பணத்தையும் நேரத்தையும் செலவு செஞ்சிருக்கேள்னு நேக்கு நன்னா தெரியும்...அதோட ரொம்ப ஹார்ட் வர்க்கும் பண்ணிருப்பேள்...ஒரு தேவலோக வைபோகம் மாதிரி இருந்துது...ஐ வில் செரிஷ் எவ்ரி மொமென்ட் ஆஃப் டுடே...தேங்க் யு...தேங்க்ஸ் ஃபார் மேகிங் டுடே ஃபார் பெட்டர் தான் மை ட்ரீம்ஸ்...” என்றாள் பரத்திடம் கிசுகிசுத்த குரலில்...



அவளுக்கு பதில் சொல்லாமல் பரத் மௌனமாகவே இருக்க...என்ன ஆச்சு என்பது போல் தலை நிமிர்த்தி பரத்தை ஏறிட்டாள் ராதிகா...அவனோ காரோட்டுவதை நிறுத்தியிருந்தான்...ஸ்டியரிங் வீல் மீது சாய்ந்தபடி கன்னத்தில் கைவைத்து அவளையே புன்னகையுடன் இமைகொட்டாமல் பார்த்துக்கொண்டிருந்தான்...ஏன் இப்படி பாக்கறார் என்று நினைத்தபடி சுற்றும் முற்றும் பார்க்க...வீட்டிற்கு வந்து சேர்ந்திருந்தார்கள்...வெளியில் அனைவரும் காரைச் சுற்றி நின்றுகொண்டு இவர்களையே பார்த்துக் கொண்டிருந்தார்கள்... “ஐயோ கடவுளே...” என்றபடி பரத்தைத் திரும்பிப் பார்க்க அவன் சிரித்தபடி இறங்கு என்பதுபோல் சைகை செய்தான்.



கார்க்கதவைத் திறந்துகொண்டு வெளிய இறங்க முற்பட்டவளைப் பார்த்து, “ஒண்ணும் அவசரமில்லைம்மா, ஏதோ முக்கியமா டிஸ்கஸ் பண்ணிண்டு இருந்தா மாறி இருக்கு, நாங்கல்லாம் வெயிட் பண்றோம், நீங்க ரெண்டு பெரும் நிதானமா பேசி முடிச்சுட்டு சொல்லுங்கோ, நாங்க அப்பறமா ஆரத்தி எடுத்து உள்ள அழைச்சுண்டு போறோம், “ என்று ஸ்ரீராம் கிண்டலடித்தார்.



மிகவும் வெட்கமாகிப் போனது ராதிகாவுக்கு. முகம் சிவக்க தலையைக் குனிந்துகொண்டாள். “நீ என்னடா அங்க நின்னு வேடிக்கை பாத்துண்டு இருக்கே, இங்க வந்து நில்லு சுத்திப் போடணும்,” என்று பரத்தையும் அதட்டினார் ஸ்ரீராம்.
 




Shivapriya Murali

இணை அமைச்சர்
Author
Joined
Jan 21, 2018
Messages
621
Reaction score
2,738
Location
Bangalore
பரத்தும் வந்து ராதிகாவின் அருகில் நின்றுகொள்ள, “எல்லா குழந்தைகளும் சேந்து நில்லுங்கோ என்று அனைத்து இளையவர்களையும் வைத்து பூசணிக்காய் சுற்றிப் போட்டார் ஜகன்னாதன். கூடவே ஆரத்தியும் தயாராக இருக்க அதில் ஒரு வெற்றிலையிட்டு கற்பூரம் ஏற்றி அதனாலும் சுற்றிப்போட்டார் பர்வதம்.



சுற்றிப்போடுவதற்காக பரத்தின் அருகில் வந்து நின்றிருந்த துளசி, “டேய் அண்ணா, இன்னிக்கி பங்ஷனுக்கு எவ்ளோடா செலவாச்சு? என்று அவன் காதில் ரகசியமாய்க் கேட்க, தங்கையைத் திருப்பிப் பார்த்த பரத், அவளைக் கிட்டே வருமாறு தலையசைத்து, அவள் காதில் அவளுடைய கேள்விக்கு பதிலைச் சொன்னான். “இது உங்க காஸ்டியூம் அப்பறம் நகையெல்லாம் இல்லாம...” என்றான்.



அவன் கூறிய ஒன்பதிலக்க எண்ணில் அதிர்ந்தவள், “என்னோட கல்யாணத்தையும் இதே மாதிரி கிராண்டா பண்ணுவியாடா அண்ணா?” என்று கேட்டாள் அண்ணனைப் பார்த்து. தங்கையின் இந்தக் கேள்வியில் மென்மை வந்து தொற்றிக்கொண்டது பரத்தின் முகத்தில். துளசியின் தோளில் கைபோட்டு தன்னுடன் சேர்த்துக்கொண்டவன், “நீ நம்பாதது குட்டி பிரின்சஸ்டா துளசி, உன்னோட கல்யாணத்தை இதைவிட கிராண்டா பண்ணிடலாம்...” என்று அவளைப் பார்த்துக் கூற... “இரு இரு, என்ன சொன்னே இப்போ? குட்டி பிரின்சஸா? நான் குட்டி பிரின்சஸ்னா அப்போ நம்பாதது பெரிய பிரின்சஸ் யாரு?” என்று கேள்வியால் கொக்கி போட்டாள் துளசி.



ஏதோ சொல்ல வந்த பரத்தைச் சட்டை செய்யாமல், ராதிகாவின் அருகில் நின்றிருந்த நந்தினியை அழைத்தாள், “ஏ, நந்துக்கா, இந்த சின்னண்ணா உன்னை எப்போவாவது பெரிய பிரின்சஸ்னு கூப்பிட்டிருக்கானா?” என்று அவளிடம் கேட்க,



நந்தினியோ, “பிசாசுன்னு வேணா கூப்பிட்டிருக்கான், ஆனா பிரின்சஸ்னுல்லாம் கூப்பிட்டதே இல்லைடி துளசி, ஏன் என்னாச்சு?” என்றபடி அவர்களின் முன்னால் வந்து நின்றாள் நந்தினி.



“லாஜிக் சரியா வரலையே...ஸ்ருதி குட்டிய பிரின்சஸ்னு கூப்பிட்டிருந்தாலும், அவளைத்தான் குட்டி பிரின்சஸ்னு கூப்பிடனும், அப்போ என்னை பெரிய பிரின்சஸ்னுதானே கூப்பிடனும்?” என்று லாஜிக் பேசினாள் துளசி.



“நான் இவ்ளோ கேக்கறேன், பதிலே சொல்லாம நின்னா எப்படி?” என்று இடுப்பில் இரு கைகளையும் வைத்துக்கொண்டு என்ன என்பதுபோல் பரத்தையும் ராதிகாவையும் மாறி மாறி பார்த்தனர், அக்காவும் தங்கையும்...பக்கத்தில் நின்று இந்தக் கேளிக்கையை கீதாவும் பானுவும் ஒருவருக்கொருவர் ஏதோ குசுகுசுப்பாகப் பேசிச் சிரித்தபடி வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தனர்.



பரத் இருவரிடமும் மாட்டிக்கொண்டு விழிக்க...அவனருகில் ராதிகாவும் இவர்களுடைய கவனம் தன் மீது திரும்பிவிடக் கூடாதே என்று வேண்டாத தெய்வங்களை எல்லாம் வேண்டியபடி நின்றிருந்தாள்...இன்று எந்த தெய்வத்திற்கும் அவளுக்கு உதவ மூட் இல்லை போலும்...நீயாச்சு உன் நாத்தனார்களாச்சு என்று கைகழுவி விட்டு விட்டிருந்தன...தலையைக் குனிந்தபடி நின்றிருந்த ராதிகாவைத் தோள் தட்டி தலை நிமிரச் செய்த துளசி, “எனக்கு இப்போவே தெரிஞ்சாகணும்...பெரிய பிரின்சஸ் யாருன்னு...சொல்லாம யாரும் உள்ள போக முடியாது,” என்றாள் அடமாக.



காரில் பரத் தன்னை பிரின்சஸ் என்று கூறியது நினைவுக்கு வர...மெதுவாகத் தலையைத் திருப்பி பரத்தைப் பார்த்தவள், அவன் அவளைப் பார்த்த பார்வையில் தடுமாறி, முகம் சிவக்கத் தலையைக் குனிந்துகொண்டாள்...இதைக் கண்ட பரத், ராதிகாவைச் சுற்றி நந்தினியின் அருகில் வந்து அவள் தோள் மீது கை போட்டு, ராதிகாவின் மீதிருந்த தனது பார்வையை விளக்காமலேயே, “நந்துக்கா, நீ 50 ஷேட்ஸ் ஆஃப் க்ரே படிச்சிருக்கியா?” என்றான். இவன் எதற்கு இப்படி சம்பந்தா சம்பந்தம் இல்லாமல் கேள்வி கேட்கிறான் என்று நந்தினி அவனை முறைக்க, அதே சந்தேகத்தில் தலை உயர்த்தி பரத்தைப் பார்த்த ராதிகா, அவன் இன்னும் தன்னையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக்கொண்டிருப்பது கண்டு தன் விழிகளைத் தாழ்த்திக்கொண்டாள்.



“படிச்சிருக்கேண்டா, அதுக்கென்ன இப்போ, என்று நந்தினி அவனைக் கிள்ள, “ஆமாமா, 50 ஷேட்ஸ் ஆஃப் க்ரே படிச்சிருப்பே, ஆனா 50 ஷேட்ஸ் ஆஃப் பிங்க் பாத்திருக்கியா?” என்றான் சிரித்தபடி...அப்படியும் ஒரு புத்தகம் வந்திருக்கிறதா என்று நினைத்தபடி தம்பியின் முகத்தைப் பார்த்த நந்தினி, அவன் கண்ணிமைக்காமல் தன் மனைவியையே பார்த்துக்கொண்டிருப்பதையும், அவன் பார்வையைத் தாங்கமுடியாமல் ராதிகா முகம் சிவக்க தலை குனிந்து நின்றிருப்பதையும் கண்டாள்.



“டேய், என்னடா நடக்கறது இங்கே...” என்று இருவரையும் மாறி மாறி பார்த்தபடி நந்தினி கேட்க...அவன் அதையெல்லாம் சட்டை செய்தது போலவே தெரியவில்லை, “நீ பாரு நந்துக்கா, 50 ஷேட்ஸ் ஆஃப் பிங்க் பளிச்சுன்னு தெரியும், அதுலயும் காட்டன் கேண்டி பிங்க் பிரகாசமா தெரியும்...நீ பாரேன்,” என்று தன்னையே ஆச்சரியமாகப் பார்த்துக்கொண்டிருந்த நந்தினியை எதிரில் நின்றிருந்த ராதிகாவைப் பார்க்கும்படி சைகை காட்டிவிட்டு, திரும்பி வீட்டிற்குள் செல்ல முற்பட்டவன்...அங்கே இந்த சம்பாஷணையை கன்னத்தில் விரல் தட்டியபடி பார்த்துக்கொண்டிருந்த துளசியின் தலையில் ஒரு கொட்டு வைத்து, “உன்னை குட்டி பிரின்சஸ்னா சொன்னேன், தப்பு தப்பு, நீ குட்டி பிரின்சஸ் இல்லைடி, நீ குட்டி பிசாசு, பிசாசே,” என்று கூறிவிட்டு, அடிக்க வந்தவளிடமிருந்து தப்பித்து, வீட்டிற்குள் ஓடிவிட்டான்.



ஆனால் அவன் வீசிய வலையில் ராதிகா வசமாக மாட்டிக்கொண்டாள், நந்தினி, கீதா மற்றும் பானு ராதிகாவைச் சுற்றி நின்றுகொள்ள, பரத்தை விரட்டிக்கொண்டு வீட்டுக்குள் ஓடலாமா அல்லது ராதிகாவை கவனிக்கலாமா என்ற குழப்பத்தில் முன்னும் பின்னும் பார்த்தபடி நின்றிருந்த துளசியை “அவனை அப்பறம் கவனிச்சுக்கலாம்டி துளசி, எங்கே போயிடப் போறான்? இங்க வா மொதல்ல இதை என்னன்னு பாப்போம்,” என்று அழைக்க, துளசியும் ராதிகாவைச் சுற்றி அவர்கள் போட்டிருந்த வட்டத்தில் இணைந்துகொண்டாள்...



“அம்பது ஷேட் தெரியறதாமேடி அவனுக்கு, எங்கே காட்டு பாப்போம்,” என்றபடி ராதிகாவின் கன்னம் பற்றி அவள் முகத்தை இடமும் வலமுமாக நந்தினி திருப்பிப் பார்க்க...



“அதென்னடி ஷேட் சொன்னான், பளிச்சுன்னு பிரகாசமா வேற தெரியறதுன்னு சொன்னானே, என்ன அது?” என்று கீதாவும் ராதிகாவின் முகத்தை உற்றுப் பார்த்தபடி கேட்க,



“காட்டன் கேண்டி பிங்க் மன்னி, பஞ்சு மிட்டாய் பிங்க்,” என்று கர்மசிரத்தையாய் துளசி பதிலளிக்க,



கீதாவின் தோளில் தூக்கக் கலக்கத்துடன் படுத்திருந்த ஸ்ருதி தலையை நிமிர்த்தி, “எனக்கும் பஞ்சு மிட்டாய் வேணும்மா,” என்று சிணுங்க...



அதற்கு கீதாவோ, ராதிகாவின் முகத்தை ஆராய்வதை நிறுத்தாமலேயே, “இது உன் சித்தாவோட பஞ்சு மிட்டாய்டி, நாம கேட்டால்லாம் குடுக்கமாட்டன்,” என்று கூற,



“எனக்கு இப்போவே பஞ்சு மிட்டாய் வேணும்” என்று அடம் பிடிக்க ஆரம்பித்தாள் ஸ்ருதி.



சரி, சரி, குட்டிமா, நாளைக்கு நீயே உன் சித்தாகிட்ட கேட்டு வங்கிக்கோ, இப்போ சமத்தா தாச்சுக்கோடி பட்டு,” என்று அவளை சமாதானம் செய்தபடி 50 ஷேட்ஸ் ஆஃப் பிங்க் ஆராய்ச்சியைத் தொடர்ந்தாள் கீதாவும்.



நால்வரும் மாறி மாறி அவர்களுடைய ஆராய்ச்சியைத் தொடர...வெட்கம் தலைக்கேறி நிஜமாகவே பஞ்சுமிட்டாய் பிங்க் நிறத்தில் மாறியிருந்தது ராதிகாவின் கன்னங்கள். “இதோ பஞ்சுமிட்டாய், இதோ பஞ்சுமிட்டாய்...” என்று ராதிகாவின் கன்னத்தைக் காட்டி துளசி குதிக்க...தலையில் அடித்துக்கொள்ளலாம் போலிருந்தது ராதிகாவிற்கு.



யாரவது காப்பற்றமாட்டர்களா என்று தலையை நிமிர்த்தி பார்வையை அங்கும் இங்கும் துழாவியவளின் கண்ணில் விழுந்தான் முதல் படியில் நின்று பேண்டின் இரு பாக்கெட்டுகளுக்குள்ளும் கை விட்டபடி ராதிகாவின் நிலையை சிரித்தபடி பார்த்துக் கொண்டிருந்த பரத். “ப்ளீஸ் காப்பத்துங்களேன்,” என்பதுபோல் அவனைப் பார்த்து ராதிகா கண்ணசைக்க, அவன் சிரித்தபடியே தலையை முடியாது என்பதுபோல் ஆட்டிவிட்டு, திரும்பி உள்ளே சென்றுவிட்டான்.



சில கணங்கள் கழித்து வாசலுக்கு வந்த பர்வதம் மாமி, அங்கே குழுமியிருந்த ராகிங் பார்ட்டியைப் பார்த்து, “அம்மாடி பொண்களா, அதேதோ பாக்கறதை வாசல்ல நின்னுண்டுதான் பாக்கணுமா, உள்ள வந்து பாக்கப்படாதா, மணி பதினொன்னாகறது” என்று அழைக்க, அதற்கு மேல் அங்கே நிற்பாளா ராதிகா, கிடைத்தது சான்ஸ் என்று வீட்டுக்குள் ஓடியேவிட்டாள்...
 




Manikodi

அமைச்சர்
Joined
Jan 20, 2018
Messages
3,747
Reaction score
17,102
Location
Vriddhachalam
பரத் அவன் பொண்டாட்டிய தானே பார்த்தான் அது எதுக்கு பேட் பாய் கமெண்ட் ராதுவிடம் இருந்து
 




Last edited:

jeyalakshmigomathi

அமைச்சர்
Author
Joined
Jun 11, 2018
Messages
2,820
Reaction score
7,471
Location
Tirunelveli
பரத் அவன் பொண்டாட்டிய தானே பார்த்தான் அது எதுக்கு பேட் பாய் கமெண்ட் ராதுவிடம் இருந்து
Mm... பரத் இன்னும் ராதிகா ஆத்துகாரரா மாறல.. சோ பேட் பாய் look தான் மணி கா...
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top