• Please register and if already registered, log in! Read the stories and always share your opinions. Writers expect only your opinions. Thanks

Kadhal Kadan - 14

Messages
620
Likes
2,717
Points
133
Location
Bangalore
#1
Radhika.jpg

காதல் கடன்
(14)
சில கணங்கள் கழித்து வாசலுக்கு வந்த பர்வதம் மாமி, அங்கே குழுமியிருந்த ராகிங் பார்ட்டியைப் பார்த்து, “அம்மாடி பொண்களா, அதேதோ பாக்கறதை வாசல்ல நின்னுண்டுதான் பாக்கணுமா, உள்ள வந்து பாக்கப்படாதா, மணி பதினொண்ணாகறது” என்று அழைக்க, அதற்கு மேல் அங்கே நிற்பாளா ராதிகா, கிடைத்தது சான்ஸ் என்று வீட்டுக்குள் ஓடியேவிட்டாள்...

நேராக தாயின் அறையில் சென்று ஓட்டத்தை நிறுத்தியவள், பதட்டம் மேலிட அங்கிருந்த சோபாவில் அமர்ந்துகொண்டாள். நல்லவேளையாக அறையில் யாரும் இருக்கவில்லை. அந்தத் தனிமை அவளுக்கும் தேவையாகத்தான் இருந்தது.

“இவர் ஏன் இப்பிடி நடந்துக்கறார், அன்னிக்கி அவர் பேசினதுக்கும், இப்போ நடந்துக்கறதுக்கும் பொருந்தவே இல்லையே, இதுல எது உண்மை, எது பொய்?” என்று கேள்வி கேட்டது அவள் மனது. அவனுக்கே தெரியாத பதில் இவளுக்கு மட்டும் கிடைத்துவிடுமா என்ன? ஆயாசமாய் வந்தது ராதிகாவுக்கு. சோபாவில் தலை சாய்த்து கண்மூடிக்கொண்டாள், ராதிகா. மூடிய இமைகளுக்குள்ளும் பரத்தின் குறும்புப் புன்னகையே வந்து இம்சை செய்தது. தனிமையிலும் தனிமை அளிக்காமல் துரத்திய அவனுடைய அந்தப் புன்னகையால் அவளே அறியாமல் அவளுடைய முகம் செம்மை பூசிக்கொண்டது.

அப்படியே கண்மூடி அமர்ந்திருந்தவளை மரகதம்தான் வந்து எழுப்பினார். “ராதும்மா, என்ன ஒக்காந்துண்டு இங்கே தூங்கிண்டிருக்கே? என்று அவளுடைய எண்ணங்களைக் கலைத்தது அவர் குரல். “தூங்கலைம்மா, சும்மா கண்ணை மூடிண்டு இருக்கேன், அவ்வளவுதான்,” என்று ராதிகா கூற, “சரி சரி, இப்படியே ஒக்காந்துண்டு இருக்காம, போய் டிரெஸ்ஸை மாத்திண்டு ரூமுக்கு போ, மாப்பிள்ளை அப்போவே மேலே போயிட்டார்,”என்று அவளை அவசரப்படுத்தினார். “நாளைக்கு முதல் வேலையா சம்பந்தி மாமிகிட்டக்க சொல்லி உன்னோட பெட்டியை எல்லாம் எடுத்துண்டு போய் உங்க ரூம்ல வைக்கணும்,” என்றபடி அவளுக்கு மாற்றிக்கொள்வதற்கு உடைகளை எடுத்துக்கொடுத்தவர், அறையை விட்டு வெளியேறினார்.

அம்மா உங்க ரூம் என்று கூறியவுடன், ஸ்ரீரங்கத்தில் அம்மா வீட்டில் இருக்கும் தனது அறை நினைவுக்கு வந்தது ராதிகாவிற்கு...கூடவே நாளை தன்னவர்கள் அனைவரும் அவளை விட்டுவிட்டு கிளம்பிவிடுவார்கள் என்ற நினைவும் வந்துவிட, ஏனோ அழுகை வரும் போலிருந்தது.எதிரே பார்க்காத அளவில் வெகு விரைவில் நடந்துவிட்ட இந்த மாற்றங்கள் ராதிகாவினுள் கிலியை கிளப்பியது. இதுநாள்வரை கூடவே வாழ்ந்து வளர்ந்த பழகிய உறவுகள் அனைவரும் இந்த தெரியாத பரிச்சயமற்ற புது மனிதர்களுடன் தன்னை விட்டுவிட்டு சென்றுவிடுவார்கள்.

“அம்மாவின் துணையின்றி எப்படி இருப்பது? காலையிலிருந்து இரவு வரை அம்மாவிடம் சொல்லாமல், அவளுடன் பேசாமல் அவள் எதுவுமே செய்ததில்லையே...ஏன்...இரவில்கூட சில சமயங்களில் அவளுக்கு அம்மாவின் துணை வேண்டும். அம்மாவை தன்னுடனே தன் அறையில் படுத்துக்கொள்ளச் சொல்வாள். வீட்டிலிருக்கும் பொழுதெல்லாம் அம்மாவின் முந்தானையைப் பிடித்துக்கொண்டே திறிவாளே...இனி என்ன செய்ய...அப்பா வீட்டிற்குள் நுழையும்போதே “ராதும்மா” என்றுதானே கூப்பிடுவார்? அவர் அப்படி கூப்பிடுவதற்காகவே இவளும் தினமும் காத்திருப்பாளே...இனி அதெல்லாம் இருக்காதா?அப்பா அம்மாவைப் பிரிந்து அவள் ஒருநாள் கூட இருந்ததில்லையே...சீனுவையும் பானுவையும் பார்க்காமல் எப்படி இருப்பேன்? இதெல்லாம் இந்த அம்மாவுக்குத் தோன்றவே இல்லையா...ரொம்ப சாதாரணமாக இருக்கிறாளே...என்னைப் பிரியவேண்டுமே என்று அவளுக்கு வருத்தமே இல்லையா?” என்றெல்லாம் மனதில் தோன்ற அப்படியே உட்கார்ந்துவிட்டாள்.

“என்ன ஆச்சு இந்த பொண்ணுக்கு? டிரெஸ்ஸ மாத்திக்க இவ்ளோ நாழியா? என்றபடி அறைக்குள் வந்த மரகதம் வாடிய முகத்துடன் உட்கார்ந்திருந்த ராதிகாவைப் பார்த்து திடுக்கிட்டார். “டி, ராதிகா, டிரெஸ்ஸை மாத்துன்னு சொன்னா, இப்பிடி ஒக்காந்துண்டு வெறிக்க வெறிக்க பாத்துண்டு இருந்தா என்ன அர்த்தம்...ரொம்ப நாழியாயிடுத்து, சீக்கிரம் மாத்திண்டு போ, மாப்பிள்ளை கோச்சுக்கப் போறார்...” என்று அதட்ட, கையிலிருந்த மாற்று உடையைக் கீழே போட்டுவிட்டு “அம்மா” என்று அவரைக் கட்டிக்கொண்டாள் ராதிகா.

மகளின் மனநிலை அவருக்கு நன்றாகப் புரிந்தது. வெளியில் காட்டிக்கொள்ளவில்லை என்றாலும், ராதிகாவின் பிரிவு அவரையுமே வாட்டிக்கொண்டுதான் இருந்தது. அதற்காக மகளை வாழ்நாள் முழுவதும் தன்னுடனேயே வைத்துக்கொள்ள முடியுமா? ராதிகாவின் முதுகை ஆதரவாகத் தடவியவர், அவளை தன்னிடமிருந்து பிரித்து நிறுத்தியவர் “அம்மாவை கட்டிண்டு கொஞ்சினது போறும், மாப்பிள்ளை காத்துண்டு இருப்பார், சீக்கிரமா போடி கொழந்தே, நாம நாளைக்கி பேசலாம்” என்று கன்னம் வருடி, உடை மாற்ற அனுப்பினார். இதற்கு மேலும் ஏதாவது பேசினால் அம்மா பத்ரகாளியாக மாறிவிடுவாள் என்று உணர்ந்த ராதிகா உடைமாற்றிக்கொண்டு அறையை விட்டு வெளியேறினாள்.

வீட்டில் அனைவரும் உறங்கச் சென்றிருக்க, ஒரளவு அமைதியாய் இருந்தது. முற்றத்தில் பர்வதமும் கீதாவும் உட்கார்ந்து ஏதோ பேசிக்கொண்டிருந்ததைப் பார்த்த ராதிகா, அவர்களருகில் சென்று, “இன்னும் தூங்கலியா அம்மா?” என்று கேட்க, “நாளைக்கு மங்களி பொண்டுகள் இல்லியா...அதப்பத்திதான் பேசிண்டு இருக்கோம் ராதும்மா. அதுசரி, நீ இன்னும் இங்க என்ன பண்ணிண்டு இருக்கே, பரத் அப்போவே ரூமுக்கு போயிட்டானே?” என்று கேட்க, “அம்மா ரூம்ல ட்ரெஸ் மாத்திண்டு அங்கேதான்மா போயிண்டு இருந்தேன், நீங்க உக்காந்துண்டு இருக்கறதைப் பாத்துட்டுதான் வந்தேன்,” என்று கூற, “ஒண்ணும் இல்லடா, நாளைக்கி மடி சமையல் பண்ணனுமே அதுதான் என்ன எப்படின்னு டிஸ்கஸ் பண்ணிண்டு இருக்கோம். ராகுகாலம் ஆனாவுட்டு சுமங்கலிகளுக்கு இலை போட்டுட்டா சரியா இருக்கும், அப்படின்னா ஒம்போது மணிக்குள்ள சமையல் ஆகி மீதி எல்லா வேலைகளும் முடியணும்,” என்று இரு மருமகள்களையும் பார்த்து பர்வதம் கூற, “அப்படின்னா, கார்த்தால நாலு மணிக்கே வேலை ஆரம்பிச்சாதான் சரியா இருக்கும்மா,” என்று கீதா கூற, “ஆமாம், கீது, நீ சாமானை எல்லாம் சரிபார்த்துட்டியா? நாளைக்கி வேண்டியது எல்லாம் வந்துடுத்தா?” என்று மாமி கேட்க, “ஆச்சும்மா, எல்லாம் ரெடி, இப்போ நாழியாயிடுத்து, தூங்கலாம், நான் கார்த்தால எழுந்து கோலமெல்லாம் போட்டுடறேன், நாலு மணிக்கு எழுந்துண்டாதான் சரியா இருக்கும். உங்களால முடிஞ்சா பாருங்கோ, இல்லைன்னா கொஞ்சம் நிதானமாவே எழுந்துக்கோங்கோம்மா, நாங்க பாத்துக்கறோம்” என்றாள் கீதா ராதிகாவின் கையைப் பிடித்துக்கொண்டு.

திடீரென்று கையைப் பிடித்துக்கொண்ட கீதாவைத் திரும்பிப் பார்த்த ராதிகா, மீண்டும் பர்வதத்தின் பக்கம் திரும்பி ஆமாம் என்பதுபோல் தலையை அசைக்க. “ஆமாம்டியம்மா, ரெண்டு சின்ன பொண்கள் கிட்டக்க வேலையைக் குடுத்துட்டு நான் தூங்கறேன், நன்னா இருக்கும் பாக்க, யாராவது கேட்டா சிரிப்பா...ஆத்துல இவ்ளோ பெரிய காரியத்தை வெச்சுண்டு தூங்க முடியுமா? என் சமத்து நாட்டுப்பொண்கள் நீங்க ரெண்டுபேரும் துணைக்கி இருக்கறச்சே நேக்கேன்னடி கஷ்டம், இந்த பண்டிகை என்ன, எந்த காரியத்தையும் ஜெயிச்சுண்டு வந்துடமாட்டேன்,” என்று இரு மருமகள்களின் கன்னம் தடவி முத்தமிட்டார் பர்வதம். பிறந்த வீட்டை நினைத்து ஆராடிக்கொண்டிருந்த ராதிகாவின் மனதிற்கு கையைப்பிடித்துக்கொண்டு, கன்னம் தடவி முத்தமிட்ட புகுந்தவீடு கொஞ்சம் ஆறுதல் அளித்தது. புன்னகைத்தபடி தலையைத் திருப்பி கீதாவை பார்க்க, அவளும் ராதிகாவைப் பார்த்து புன்னகைத்து, “போய் தூங்கு ராதிகா, நாளைக்கி நெறைய்ய வேலையிருக்கு நமக்கு,” என்றாள்.

அவர்களிடம் தலையை ஆட்டிவிட்டு மாடியேறிய ராதிகாவின் மனதில் இப்பொழுது புதிதாய் ஒரு தயக்கம் குடிகொண்டது. இவ்விரு நாட்களாக அவள் தூங்கிய பின்னே பரத் அறைக்கு வந்ததால் பெரிதாக அவனை எதிர்கொண்டு தனியாகப் பேசும் வாய்ப்பு அமையவில்லை. ஆனால் இன்றோ பரத் அறைக்குச் சென்றுவிட்டதாக பர்வதம் கூற, அறைக்குள் செல்லவே ராதிகாவிற்குத் தயக்கமாக இருந்தது. அவனிடம் என்ன பேசுவது, அல்லது பேசாமல் தன்னைப் பார்த்து அவன் முகம் திருப்பிக்கொண்டால் அதை எப்படி எதிர்கொள்வது என்பது போன்ற சந்தேகங்கள் அவள் மனதில் எழத் துவங்கின.

ஏனோ முதலிரவன்று இருந்த தைரியம் அவளிடம் இன்று இல்லை. பரத் ஏதாவது எதிர்மறையாகப் பேசிவிட்டால் அதைத் தாங்கும் சக்தி அவளிடம் இருக்கவில்லை. மிகவும் அழகாகத் தொடங்கிய நாள், அதேபோல் அமைதியாக முடிந்தால் நன்றாக இருக்கும் என்று தோன்றியது அவளுக்கு. ராதிகாவின் தயக்கத்தைப் புரிந்துகொண்டானோ என்னவோ முந்தைய இரு நாட்களைப் போலவே அன்றும் பரத் அறையில் இருக்கவில்லை. ஒருபக்கம் நிம்மதியாக இருந்தாலும், இன்னொருபக்கம் அவனுடைய அறையில் அவனே இருக்கக்கூடாது என்று நினைப்பது ராதிகாவிற்கு குற்ற உணர்ச்சியையும் ஏற்படுத்தியது.

இந்த நிலைக்கு என்றுதான் விடிவுகாலமோ என்று ஆயாசமாகவும் இருந்தது. ஆனால் மனதில் தோன்றிய அனைத்து எண்ணங்களையும் மீறிய களைப்பு கொட்டாவியாக வெளிவர, சோர்வு மேலிட படுக்கையில் சாய்ந்தவள், தலையணையைத் தலை தொட்ட நொடி உறங்கிப்போனாள்.

ராதிகாவின் மனதில் நீர்க்குமிழிகளாய் மேலெழுந்த கேள்விகளுக்கு விடையானவன் அந்த அறையின் பால்கனியில் நின்றுகொண்டு அனைத்தையும் பார்த்துக்கொண்டிருந்தான். உடை மாற்றிக்கொள்ள அறைக்கு வந்த பரத், சோர்வாக இருந்தாலும், ராதிகா அறைக்குள் வரும்பொழுது அவன் அங்கு இருந்தால் அவளுக்கு சங்கடமாக இருக்கலாம் என்று நினைத்து அறையை விட்டு வெளியேற முற்பட்ட அதே சமயத்தில் ராதிகா அறை வாயிலுக்கு வந்துவிட, வேகமாகச் சென்று பால்கனியில் நின்றுகொண்டான். எண்ணங்களில் உழன்றபடி வந்த ராதிகா இதை கவனிக்கவேயில்லை.

உண்மையாகக் கூறினால் ராதிகாவை நேருக்கு நேர் சந்திக்கும் மனநிலையில் பரத்தும் இருக்கவில்லை. அவளுடைய கண்களில் தொக்கி நிற்கும் கேள்விகளுக்கு அவனிடம் விடை இல்லை. அவளுடைய பார்வையில் தெரியும் எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்யும் நிலையிலும் அவன் அறவே இல்லை. அதனாலேயே கடந்த இரு நாட்களும் ராதிகா தூங்கிய பிறகே அவன் அறைக்கு வந்தான். இப்பொழுதும் அவள் தூங்குவதற்குச் சிறிது நேரம் கொடுத்து அறைக்குள் நுழைந்தவன், ராதிகாவின் அருகில் இருந்த மேஜைவிளக்கு எரிந்து கொண்டிருக்க, அதை அணைக்கச் சென்றவனின் கவனம் நிச்சலனமாக உறங்கிக் கொண்டிருந்தவளின் முகத்தில் படிந்தது.

எல்லா குழப்பங்களையும் மீறி அவன் மனம் உறங்கிக் கொண்டிருந்தவளின் அழகு முகத்தில் லயித்தது. ஏதோ இனிமையான கனவு கண்டுகொண்டிருந்தாள் போலிருக்கிறது. அவளுடைய இதழ்களில் லேசான புன்னகை இருந்தது. அதைக்கண்ட பரத்தின் முகத்திலும் தானாகவே புன்னகை அரும்பியது. முந்தைய இரவைப் போலவே ஜன்னல் வழியாக வந்த தென்றல் அவளுடைய கூந்தலைக் கலைத்து, ஒரு முடிக்கற்றை பின்னலிலிருந்து விடுபட்டு அவளுடைய கன்னத்தை வருடிக்கொண்டிருக்க, தன்னையும் மீறி ராதிகாவின் கன்னம் தொட்டு அந்த கூந்தல்கற்றையை விரல்களால் பட்டும்படாமலும் ஒதுக்கி அவளுடைய காதுக்குப் பின் ஒதுக்கியவன், அவனுடைய லேசான தொடுகையில் சலனமடைந்து ராதிகா லேசாக அசைய, அவள் கண்விழித்து தன்னைப் பார்த்துவிடுவாளோ என்ற பதட்டத்தில் தன்னை சுதாரித்துக்கொண்டு வேகமாக மேஜைவிளக்கை அணைத்துவிட்டுச் சென்று படுத்துக்கொண்டான். உதட்டில் இனிமையான புன்னகையுடன் உறங்கச் செல்பவர்களை நித்திராதேவிக்கு மிகவும் பிடிக்குமோ என்னவோ...எந்தவித நிபந்தனைகளும் இல்லாமல் நித்திராதேவி வந்து அவனை ஆரத்தழுவிக்கொண்டாள்...
 
Messages
620
Likes
2,717
Points
133
Location
Bangalore
#2
இனிமையாக முடிந்த இரவின் விடியலும் இனிமையாகவே இருந்தது. வழக்கம்போல நான்கரை மணிக்கே ராதிகாவிற்கு விழிப்பு தட்டிவிட எழுந்தவள், பல்துலக்கி முகம் கழுவிக்கொண்டு சமையலறைக்கு வந்தாள். பர்வதம் மாமியும் கீதாவும் காபி குடித்துக்கொண்டிருந்தனர்.

“வா, வா ராதும்மா, நீயும் எழுந்துட்டியா, இரு மொதல்ல காபி குடி,” என்று அவளுக்கும் பர்வதம் காபியைக் கலந்து கொடுக்க, “குட் மார்னிங்மா, குட் மார்னிங் கீதாக்கா,” என்று கூறியவள், “விழுப்பு காரியம் ஏதாவது இருக்கான்னு பாத்துண்டு குளிக்கப் போகலாம்னு வந்தேன்மா,” என்று அவள் இன்னும் குளிக்காததற்கு விளக்கம் கூறியபடி காபியைக் குடிக்கத் தொடங்கினாள்.

“இப்போதைக்கு விழுப்பு காரியம் எதுவும் இல்லை, சுமங்கலிகளுக்கு இலை போடற இடத்தை பெருக்கி துடைச்சு கோலம் போடணும், அதை துளசி பாத்துப்பா, நீங்க ரெண்டுபேரும் எண்ணை தேச்சு குளிக்கணும், அந்த மனையில ஒக்காருங்கோ, நான் எண்ணை வெச்சு விடறேன், நீங்க ரெண்டுபேரும் குளிச்சுட்டு வந்துடுங்கோ, நாம ஒண்ணொண்ணா சமைக்க ஆரம்பிச்சா சரியா இருக்கும், காய் நறுக்கற வேலைய பரத்தும் ராகவனும் பாத்துக்கறேன்னு சொல்லிட்டா, அதனால அவாளையும் எழுப்பிவிட்டுடுங்கோ, எல்லாருக்கும் கொல்லையில மடி ஒணத்திருக்கேன், இங்கேயே குளிச்சுட்டு ரெடி ஆகுங்கோ,” என்று இரு மருமகள்களையும் அங்கே கோலமிட்டு போடப்பட்டிருந்த மனையில் அமரவைத்து மங்களஸ்நானத்திற்காக நெற்றியில் குங்குமமிட்டு உச்சியில், கன்னத்தில் கைகளில் மற்றும் கால்களில் எண்ணையும் மஞ்சளும் தடவி, ஆரத்தி எடுத்து, பின்னர் சீயக்காயும் வாசனைப் பொடியும் கொடுத்து ஸ்நானம் செய்ய அனுப்பிவிட்டு, சமையலுக்கான ஆயத்தத்தில் இறங்கினார் பர்வதம் மாமி.

இவர்கள் பேசிக்கொண்டிருக்கையிலேயே பரத் குளித்துவிட்டு வந்துவிட, “நல்ல வேளை இவரை எப்படி எழுப்பரதுன்னு நெனைச்சுண்டு இருந்தேன், இவரே எழுந்து வந்துட்டார், நல்லதா போச்சு” என்று அவள் விட்ட நிம்மதிப் பெருமூச்சையும், எண்ணையும் மஞ்சளுமாக அவள் நின்றிருந்த கோலத்தையும் கண்டு நமட்டு சிரிப்பு சிரித்தபடியே சமையலறைக்குள் நுழைந்தவன், “அம்மா ஸ்ட்ராங்கா ஒரு காபி குடு,” என்றபடி, காய்கறிகளை எல்லாம் எடுத்துவைக்கத் தொடங்கினான்.

நார்மடி வேஷ்டியும், ஒரு டி ஷர்டும் போட்டுக்கொண்டு நெற்றியில் பட்டை வீபூதியுடன் வேலை செய்துகொண்டிருந்தவனை வியப்புடன் பார்த்தபடி நின்றிருந்தாள் ராதிகா, “நேத்திக்கி கோட்டும் சூட்டும் போட்டுண்டு மிடுக்கா பிசினஸ்மேனா இவர் நின்ன அவதாரமென்ன, இன்னிக்கி சமையலறைையில வேஷ்டிய மடிச்சு கட்டிண்டு கறிகாய் நறுக்கற அவதாரமென்ன? இன்னும் என்னென்ன அவதாரம் எடுக்கப் போறாரோ?” என்று எண்ணியபடி நின்றிருந்தவளின் அருகில் வந்து, “எத்தனைதான் கோட்டும் சூட்டும் போட்டுன்டாலும், பேசிக்கலி நான் ஒரு சமையல்காரன்தான், அதுதான் நிரந்தர அவதாரம்,என்ன புரியறதா?” என்று அவளைப் பார்த்து புருவத்தைக் கேள்வியாக உயர்த்தியபடி பரத் கிசுகிசுக்க, நேற்றும் இதேபோல தான் மனதில் நினைத்தவற்றிற்கு பரத் பதிலளித்தது நினைவுக்கு வந்து, அனைவர் முன்னாலும் என்ன பேசுவது என்று தெரியாமல் ராதிகா வெடவெடத்துப் போய் முகம் சிவக்க நின்றிருக்க, அவளிடமிருந்து ஒரு அடி பின்னால் விலகிய பரத் அவளுடைய சிவந்த முகத்தையே பார்த்தபடி, “ஏம்மா, நம்பாத்து மயலை மகாலட்சுமி எல்லாம் குளிக்கப் போகக்கூட ஏதாவது முஹூர்த்தம் பாத்திருக்கியா என்ன , எல்லாரும் அப்படி அப்படியே மசமசன்னு நின்னுண்டு வேடிக்கை பாத்துண்டு இருக்கா?” என்று நக்கலடிக்க, “ஏண்டா அவளை காலங்கார்த்தால வம்புக்கு இழுக்கற” என்று பர்வதம் மாமி பரத்தைச் சாடியதையும் காதில் போட்டுக்கொள்ளாமல் குளியல் அறையை நோக்கி ஓட்டமெடுத்தாள் ராதிகா.

“என்னை இப்பிடி ஓட ஓட விரட்டறதே இவருக்கு வேலையா போச்சு,” என்று பரத்தை நொந்தபடியே வேகவேகமாகக் குளித்து முடித்து உலர்த்தியிருந்த மடிப்புடைவையை மடிசாராகக் கட்டிக்கொண்டு ஈரத்தலையை உதறி நுனி முடிந்துகொண்டு வந்தாள் ராதிகா.

அதற்குள் கீதாஞ்சலியும் குளித்துவிட்டு வந்து பர்வதத்துடன் இணைந்து வேலையைத் தொடங்கியிருந்தாள். ராகவன் தேங்காய் உடைத்துக்கொண்டிருக்க, டேபிள்டாப் கிரைண்டரில் தேங்காய் துருவும் ப்ளேடை இணைத்து தேங்காய்த் துருவிக்கொண்டிருந்தாள். “அம்மா, நான் என்ன பண்ணட்டும்?” என்று ராதிகா பர்வதத்திடம் கேட்க, “பரத் கறிகாய் நறுக்கிண்டு இருக்கான் பாரு, ராதும்மா, நீயும் போய் அவனுக்கு ஹெல்ப் பண்ணு,” என்று பரத்திடம் அனுப்பிவிட, அவனோ அவள் முன்னால் வந்து நின்றதைக் கண்டுகொள்ளாமல் மும்முரமாய் காய் நறுக்கிக் கொண்டிருந்தான். ராதிகா அவனுடைய கவனத்தைக் கலைக்கும் வண்ணமாக வலது காலை லேசாகத் தட்டி கொலுசை ஒலிக்கச் செய்தாள். கொலுசொலி பரத்தின் கவனத்தைக் கலைத்தாலும் நிமிர்த்து பார்க்காமல் வேலையைச் செய்துகொண்டிருந்தவனைப் பார்க்கப் பார்க்கப் பற்றிக்கொண்டு வந்தது ராதிகாவிற்கு.

வேறு வழியில்லாமல், “அம்மா உங்களுக்கு ஹெல்ப் பண்ணச் சொன்னா,” என்று மென்று விழுங்கிக்கொண்டு கூறியவளை நிமிர்ந்து பார்த்து, தன்னை நோக்கி விரல் காட்டி, “என்னண்ட பேசிண்டு இருக்கியா?” என்று கேட்டான் பரத்.

ராதிகா சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு ஆமாம் என்பதுபோல் தலையசைக்க, “என்ன வேணும் சொல்லு?’ என்று கேட்டான் பரத்.

“அம்மா காய் நறுக்கச் சொன்னா,” என்று பதிலளித்தவளைப் பார்த்து. “மொதல்ல உனக்கு காய் நறுக்கத் தெரியுமா?” என்று நக்கலாகக் கேட்க, அவனை நன்றாக முறைத்துவைத்தாள் ராதிகா. அதற்கும் அவன் சளைக்காமல் “’முறைக்கத் தெரியுமான்னு கேக்கலை, காய் நறுக்கத் தெரியுமான்னு கேட்டேன்?” என்று சிரிப்பை அடக்கிக்கொண்டு கேட்க,

“காய் நறுக்கவும் தெரியும், கழுத்தை நறுக்கவும் தெரியும், வேணும்னா சொல்லுங்கோ நறுக்கிக் காட்டறேன்” என்று பல்லைக் கடித்துக்கொண்டு அவனுக்கு மட்டுமே கேட்கும்படியாக ராதிகா சிடுசிடுக்க, நமுட்டாகச் சிரித்துக்கொண்டிருந்தவன் இப்பொழுது சத்தமாகவே சிரித்துவிட்டான். அதைக் கேட்டு அனைவரின் கவனமும் அவர்களின் பக்கம் திரும்ப, ராதிகாவிற்கு சங்கடமாகிப் போனது.

“பரத், விளையாட்டை நிறுத்திட்டு வேலையைப் பாரு, நாழியாறது,” என்று பர்வதம் அதட்ட, “சரி சரி ஒக்காரு,” என்று ராதிகாவிற்கு தன் முன்னால் இருந்த இடத்தைச் சுட்டிக்காட்ட, ராதிகாவும் உட்கார்ந்துகொண்டாள். அவள் உட்கார்ந்த மறுநொடி, இஞ்சி நிறைந்திருந்த ஒரு கூடையைக் கொடுத்து, “இதைப் போய் நன்னா அலம்பிட்டு, வேற ஒரு கிண்ணத்துல ஜலத்துல போட்டு எடுத்துண்டு வா’” என்று அவளிடம் கொடுக்க, “இதை நின்னுண்டு இருக்கறச்சேயே குடுக்கறதுக்கென்ன?” என்று மீண்டும் முறைத்தாள் ராதிகா.

அதற்கும் அவளைப் பார்த்து புன்னகைத்தவன், “அம்மா, இந்த அசிஸ்டன்ட் சரியில்ல, சொல்ற வேலைய செய்ய மாட்டேங்கறா, நீ ஆளை மாத்து,” என்றான் அவளிடமிருந்து பார்வையை விலக்காமலேயே. அவன் அவ்வாறு கூறிய மாத்திரத்திலேயே அவன் கையிலிருந்த கூடையை வெடுக்கென்று பிடுங்கிக்கொண்டவள், கோபமாகவே எழுந்து இஞ்சியை அலம்ப சிங்கிற்குப் போனாள் ராதிகா.

பரத்தின் மேலிருந்த கோபத்தையெல்லாம் காட்டி இஞ்சியைத் தேய்த்து தேய்த்து அலம்பியவள், அதை ஒரு பாத்திரத்தில் போட்டுக்கொண்டு அவன் முன் வந்து நின்றவள், “இன்னும் வேறென்ன பண்ணனும்,” என்று நின்றபடியே கேட்க, அவள் முன்னால் ஒரு பெரிய கட்டு கறிவேப்பிலையைப் போட்டு, “உக்கார்ந்து இதை ஆஞ்சு குடு,” என்று கூற, “கறிவேப்பிலை ஆயரதுக்குதானா இவ்ளோ பீடிகை?” என்று முணுமுணுத்தபடி கறிவேப்பிலையை உறுவத் தொடங்க, “பின்ன கழுத்தை நறுக்கறேன்னு சொல்றவா கிட்ட கத்தியை குடுத்துட்டு வேடிக்கை பார்க்க நான் என்ன முட்டாளா?” என்று அவளை நோக்கி புருவத்தை உயர்த்த, அவனுக்கு பதில் கூற முடியாமல் வாய்க்குள் முணுமுணுத்தபடியே, கோபமாகவே கறிவேப்பிலையை ஆயத் தொடங்கினாள் ராதிகா.

கோபத்தில் சிவந்த மனைவியின் முகத்தை ஓரக்கண்ணால் பார்த்துக்கொண்டே பீன்சை நறுக்கிக் கொண்டிருந்த பரத்தின் இதழ்கள் தன்னிச்சையாக “பஞ்சுமிட்டாய்” என்று முணுமுணுத்தன...
 
Last edited:

Advertisement

Latest Episodes

Advertisements

Top