• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Kadhal Kadan - 18

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Shivapriya Murali

இணை அமைச்சர்
Author
Joined
Jan 21, 2018
Messages
621
Reaction score
2,738
Location
Bangalore
Hi Friends,

ரொம்ப நாள் கழிச்சு அப்டேட் போட வந்திருக்கேன். எல்லாரும் நான் எப்போ எபி குடுப்பேன்னு காத்திருந்து காத்திருந்து ஏமாந்து போயிருப்பேள்னு நேக்கு நன்னா தெரியும். அந்த ஏமாற்றம் இனியும் தொடரக் கூடாதுன்னுதான் நான் கொஞ்சம் அதிக நேரம் எடுத்துண்டேன். அதென்னமோ தெரியலை, த்விதீய விக்னம் மாதிரி நேக்கு த்ரிதீய விக்னம் ஆயிடறது ஒவ்வொரு தடவையும். ரெண்டு எபிசொட் போட்டுட்டு மூணாவது போடறதுக்குள்ள ஏதாவது தடை வந்துடறது. இனிமேல் அது நடக்ககூடதுன்னுதான், சில எபிசோட்ஸ் எழுதி முடிச்சுட்டு அப்டேட் போட வந்திருக்கேன். இனி வாரம் ஒரு எபிசோட் திங்கட்கிழமை அன்னிக்கு வந்துடும். இப்போதைய நிலைமையில் வாரம் ஒரு எபி போடறதுதான் தோதுப்படும்னு நெனைக்கிறேன். கொஞ்சம் கோச்சுக்காம அப்டேட் படிச்சுட்டு வந்து, லேட்டானதுக்கு என்னை நன்னா திட்டறதா இருந்தாலும் திட்டிடுங்கோ... லைக்ஸ் கமெண்ட்ஸ் குடுக்க மறக்காதீங்கோ... Luv U All...:love::love::love:

காதல் கடன்

(18)

வாசலிலேயே உட்கார்ந்திருந்தார் பர்வதம் மாமி. “என்னம்மா, வாசல்ல தனியா ஏன் ஒக்காந்துண்டு இருக்க, எல்லாரும் எங்க?” என்று கேட்டபடியே வண்டியை நிறுத்திவிட்டு வந்த பரத் எதிர் திண்ணையில் அமர்ந்துகொண்டான்.

“எங்கேடா போனே நீ? எவ்ளோ நாழியா காத்துண்டு இருக்கேன் தெரியுமா? அந்த வண்டிய தொடக்கூடாதுன்னு உன்னண்ட எத்தனை வாட்டி சொன்னாலும் கேக்கவே மாட்டியா நீ?” என்று படபடத்தவரின் முகத்தில் ஏகத்துக்கும் கலக்கம்.

தாயின் தவிப்பை ஆற்றும் விதமாக அவரது காலடியில் படியில் வந்து அமர்ந்தவன் “நான் எங்கேயும் போகலைம்மா, என்னவோ கொஞ்ச தூரம் ஒரு டிரைவ் போனா நன்னா இருக்கும்னு தோணித்து, அதான் போனேன், இதுக்கு போய் ஏன் இவ்ளோ பதட்டப்படறே?” என்றபடி அவர் மடியில் தலையை சாய்த்து கண்களை மூடிக்கொண்டான்.

மகனின் தலையை மெதுவாகக் கோதியவரின் கைகளில் லேசாக நடுக்கம் தெரிய, தாயின் கையை தன் கைகளுக்குள் பிடித்து அடக்கிக் கொண்டவன், மென்மையாக, “அதான் திரும்பி வந்துட்டேனேம்மா,” என்றான்.

“மொதல்ல அந்த வண்டி சாவிய குடு இங்க” என்று அவனிடமிருந்து பிடுங்கிக்கொண்டவர், “இனிமேல் என்னை மீறி நீ இந்த வண்டிய எப்படி தொடறேன்னு நானும் பாக்கறேன்,” என்றபடி சாவியை முந்தானை நுனியில் முடிந்து இடுப்பில் தொங்கிய மற்ற சாவிக்கொத்துடன் அதையும் சொருகிக்கொண்டார். அவருடைய செய்கையை புன்னகையுடன் பார்த்திருந்தவன், “இனிமே உன்னண்ட சொல்லாம நான் எங்கேயுமே போகமாட்டேன், ப்ராமிஸ்” என்று தாயைச் சமாதானம் செய்ய முயன்றான்.

உதடுகளில் விரிந்த புன்னகை மகனின் கண்களை எட்டாததை கவனித்த பர்வதம் மாமி, மகனின் முகம் வருடி, “போறுண்டா பரத், நீ ஓடினதெல்லாம் போறும் கண்ணா, எல்லாத்தையும் மறந்துட்டு நிம்மதியா இருடா,” என்று அவர் இறைஞ்ச, “ஓடிண்டே இருக்கணும்னு நேக்கென்ன ஆசையா, தொரத்திண்டு இருக்கற நிழலெல்லாம் தொரத்தறதை நிறுத்திட்டா, நானும் ஓடறத நிறுத்திடுவேன்மா,” என்று எங்கோ வெறித்த பார்வையுடன் பதிலளித்தவனின் முகத்தைத் தன்புறம் திருப்பியவர், “நீ ஒருதரம் ஓடறதை நிப்பாட்டிட்டு திரும்பி நின்னு பாருடா கண்ணா, எல்லா நிழலும் திக்கே தெரியாம சிதறிப் போயிடும், அம்மா இருக்கேண்டா உன்னோட” என்றார் ஆதங்கமாக.

ஒரு ஆழ்ந்த பெருமூச்சுடன் எழுந்து நின்று, தன் இரு கைகளாலும் தாயின் முகத்தை ஏந்தியவன், “நீ எனக்காக காத்துண்டு இருப்பேங்கறதுக்காகத்தான் நான் இந்த ஆத்துக்கு இன்னும் வந்துண்டு இருக்கேன், அன்னிக்கும் உனக்காகத்தான் திரும்பி வந்தேன், இன்னிக்கும் உனக்காகத்தான் திரும்பி வந்திருக்கேன், இதோ இது மாதிரி எனக்காக காத்துண்டு இருக்கற ஒரே ஜீவன் நீதாம்மா,” என்றான்.

“ஏண்டா கண்ணா இப்படியெல்லாம் பேசற, எல்லாரும் உயிரையே வெச்சுண்டு இருக்கா உன் மேல, நீதாண்டா எல்லார்கிட்ட இருந்தும் விலகிப் போயிட்ட” என்றார் அவனைக் குற்றம்சாட்டும் விதமாக.

பதிலேதும் கூறாமல் மெளனமாக நின்றவனைப் பார்த்து, “சரி, சரி, ரொம்ப நாழியாயிடுத்து, கைகால் அலம்பிண்டு சாப்பிடவா,” என்றபடி எழுந்துகொண்டார் பர்வதம் மாமி.

“எனக்கு பசிக்கலைம்மா, நீ போய் படுத்துக்கோ,” என்று கூறியவனிடம், “ராதும்மாவும் சாப்பிடலை கண்ணா, நீ வந்தப்பறம் சாபிடறேன்னு சொல்லிட்டா, கௌசிக்கு வேற உடம்பு சரியில்ல, இன்னிக்கி அவதான் எல்லாருக்கும் தனியா நின்னு தோசை வார்த்தா,” என்று கூற

“ம்ப்ச், எனக்காக யாரும் சாப்பிடாம கத்துண்டு இருக்கக்கூடாதுன்னு நான் எத்தனை தடவ சொல்லிருக்கேன், ஏன்மா கேக்க மாட்டேங்கறேள்,” என்றான் பரத் சீற்றமாக.

“அதை என்கிட்டே சொன்னே, உன் ஆத்துக்காரிகிட்டக்க சொன்னியா? எவ்ளோ சொல்லியும் நீ வந்தப்பறம் தான் சாப்பிடுவேன்னு பிடிவாதமா சொல்லிட்டா, என்னை என்ன பண்ணச் சொல்றே? போ, போயி அவளையும் அழைச்சுண்டு வா, ரூம்லதான் இருப்பா, நான் போய் தோசைய வார்க்க கல்லைப் போடறேன்,” என்றபடி சமையலறைக்குள் சென்றுவிட்டார் பர்வதம் மாமி.

மாடியில் அவனது அறை இருளில் மூழ்கியிருந்தது, ராதிகாவை எங்கும் காணவில்லை.

படுக்கையின் மீது இருந்த அவளுடைய ஃபோன் ஒளிர்ந்துகொண்டிருந்தது. எடுத்துப்பார்த்தால் அம்மாவிடமிருந்து பதினைந்து மிஸ்டு கால் என்று காட்டியது.

ஃபோனைக் கையில் எடுத்துக்கொண்டு ராதிகாவைத் தேடியபடி பால்கனிக்கு சென்றவன் பார்வையில் பட்டது அங்கே ஊஞ்சலில் ஒருக்களித்துப் படுத்து உறங்கிக்கொண்டிருந்த ராதிகாவின் முயல்குட்டிப் பாதங்கள்தான்.

உள்ளங்கால்களிலும் குட்டி வட்டங்களாக மருதாணி வைத்திருந்தாள். செந்தாழம்பூ மலர்ந்தது போலிருந்த அந்தப் பாதங்களில் இருந்த அரக்குநிற மருதாணி வட்டங்களில் நகரமுடியாமல் அவனுடைய பார்வை நிலைத்தது.

திக்கின்றி அலைபாய்ந்து கொண்டிருந்த மனமும் அந்த வட்டங்களில் வந்து இளைப்பாறியது போலத் தோன்றியது. அவனுடைய அனுமதி இல்லாமலே ஒரு பெருமூச்சு அவனிடமிருந்து வெளிப்பட்டது.

எவ்வளவு நேரம் நின்றிருந்தானோ தெரியாது, ஆனால் அலைபாயும் கடலில் ஆதாரத்திற்குக் கிடைத்த நங்கூரம் போல் அவனுடைய மனதிற்கு அமைதியளித்த அந்தக் காட்சியிலிருந்து பார்வையை விலக்க மனமில்லாமல் அப்படியே நின்றிருந்தான் அவ்விளைஞன்.

அவனுடைய மோனத்தைக் கலைக்கும்படியாக கையிலிருந்த ராதிகாவின் கைபேசி அதிரத் தொடங்க, ‘அம்மா காலிங்’ என்று அறிவித்த அழைப்பை எடுத்தவன், “ஹலோ” என்றான்.

“ஹலோ, மாப்பிள்ளை, மாப்பிள்ளையா பேசறது, நான் ராதிகாவோட அம்மா பேசறேன்.” என்றார் மறுமுனையில் மரகதம். “ரொம்ப நாழியா ஃபோன் பண்ணிண்டு இருக்கேன், ராதும்மா ஃபோனையே எடுக்கல்லை” என்றவரிடம்,

“ஃபோனை சைலன்ட்ல போட்டிருக்கா போலருக்கு மாமி, அதான் கேட்டிருக்காது,” என்றபடி உறங்கிக்கொண்டிருந்தவளின் அருகில் வந்தவன் “உங்க பொண்ணு தூங்கிண்டு இருக்கா மாமி, எழுப்பட்டுமா?” என்று கேட்டான்.

“இல்லை, இல்லை மாப்பிள்ளை, தூங்கட்டும், நான் அப்பறமா பேசிக்கறேன், பரவால்லை”, என்று கூறியவர், “ரொம்ப நன்றி மாப்பிள்ளை, பிரயாணமெல்லாம் ரொம்ப சௌகரியமா இருந்துது, ஏற்பாடெல்லாம் ரொம்ப நன்னா பண்ணியிருந்தேள்,” என்றார், மரகதம்.

“அதனால என்ன மாமி, பரவாயில்லை, என்றவனிடம், “ராதுவை நாளைக்கு தோதுபடறச்ச கூப்பிடச் சொல்லுங்கோ,” என்று கூறிவிட்டு ஃபோனை வைத்துவிட்டார் மரகதம்.

அருகினில் கேட்ட பரத்தின் குரலுக்கு திடுக்கிட்டு விழித்த ராதிகா ஊஞ்சலில் படுத்திருப்பது நினைவில்லாமல் வேகமாக எழுந்துகொள்ள முயல, அவள் வேகத்தில் ஊஞ்சல் தாறுமாறாக அசைந்து ராதிகாவையும் நிலையிழக்கச் செய்தது.

“ஏய், கீழே விழப்போற,” என்று ஊஞ்சலை ஒரு கையாலும், தடுமாறிய ராதிகாவை ஒரு கையாலும் பரத் பிடித்துக்கொள்ள, ராதிகாவும் பிடிமானத்திற்காக தன் முன் சற்றே குனிந்திருந்தவனின் தோளைப் பிடித்தவள், ஒரு நொடி என்ன நினைத்தாளோ, தீயைத் தொட்டதுபோல் அவன் மேலிருந்த கையை விலக்கிக்கொண்டாள்.

ராதிகாவின் விலகலைச் சிறிதும் உணராதவனாய், உணர்ந்தாலும் அதைக் காட்டிக்கொள்ளதவன் போல பரத், தனது கையிலிருந்த அவளுடைய ஃபோனை அவளிடம் நீட்டி, “உங்க அம்மாதான் அழைச்சிருந்தா, நீ தூங்கிண்டு இருக்கேன்னு சொன்னேன், நாளைக்கு கூப்பிடச் சொன்னா,” என்று கைப்பேசியை அவளிடம் கொடுத்துவிட்டு, “பேசறதா இருந்தா பேசிட்டு கீழ வா, அம்மா சாப்பிடறதுக்காக காத்துண்டு இருக்கா,” என்று கூறிவிட்டு அவ்விடத்தை விட்டு அகன்றான்.

********************************************​


ராதிகா சமையலறையில் நுழைந்தபோது பரத் டைனிங் டேபிளில் அமர்ந்திருக்க, பர்வதம் மாமி தோசை வார்க்கத் தொடங்கியிருந்தார்.

“அம்மா, நீங்க உக்காந்துக்கொங்கோ, நான் வாக்கறேன்,” என்றபடி கரண்டியை வாங்க முற்பட்டவளிடம், “நீயும் அவனோட சாப்பிட ஒக்காரு, நான் வாக்கறேன், இப்போவே நாழியாயிடுத்து பாரு, பசிக்கலையா உனக்கு?” என்றார்.

“இல்லைமா, பரவாயில்லை, அப்போவே கால வலிக்கறதுன்னு சொன்னேள், நீங்க அவர் கிட்ட ஒக்காந்துண்டு பரிமாறுங்கோ, தோசை வாக்க எவ்வளவு நாழி ஆயிடும், நான் பாத்துக்கறேன்,” என்று வலுக்கட்டாயமாக அவரை பரத்தின் அருகில் உட்காரவைத்துவிட்டு தோசை வார்க்கத் தொடங்கினாள் ராதிகா.

எண்ணை ஊற்றாமல், நெய் விட்டு பட்டுப்போல பொன்னிறத்தில் ராதிகா வார்த்த தோசைகளை இரண்டு சாப்பிட்டு முடித்தவன், மூன்றாவது தோசையை அவள் பரிமாற வந்தபோது “போறும்” என்று தட்டின் மீது கையை மறித்து தடுக்க முயன்றான்.
 




Last edited:

Shivapriya Murali

இணை அமைச்சர்
Author
Joined
Jan 21, 2018
Messages
621
Reaction score
2,738
Location
Bangalore
“ஷ்ரவுகுட்டியே ரெண்டு தோசை சாப்பிட்டான், உங்களுக்கு எப்பிடி ரெண்டு தோசை போறும்,” என்றபடி அவன் கையைப் பிடித்து விலக்கியவள், தட்டில் தோசையைப் போட்டுவிட்டு, தொட்டுக்கொள்ள சட்னியையும் பரிமாறினாள், “தயிர் சாதம் சாப்பிடனும்னு நெனைச்சேன்,” என்று பரத் சற்று காட்டமாகவே கூற, “இன்னொரு தோசை சாப்பிட்டுட்டு அப்பறமா தயிர்சாதம் சாப்பிடுங்கோ,” என்று இன்னொரு தோசையையும் அதற்குப்பின் தயிர்சாதத்தையும் அவன் சாப்பிடும் வரை விடவில்லை.

மருமகளின் உரிமையான அதட்டலும், அதற்கு எதிர்ப்பு தெரிவிக்காத மகனின் இணக்கமும் பர்வதம் மாமியின் மனதிற்கு இதமாக இருந்தது. மெலிதான புன்னகையுடன் பரிமாறிக்கொண்டிருந்த ராதிகாவையும், சாப்பிட்டுக்கொண்டிருந்த பரத்தையும் மௌனமாகப் பார்த்துக்கொண்டிருந்தார்.

“ஊர்லருந்து மன்னி (குரு வைத்தியநாத சாஸ்திரிகளின் மனைவி) ஃபோன் பண்ணிருந்தா. இந்த வருஷம் சிவராத்திரிக்கு அண்ணா வரச்சொன்னாராம்.” என்று பரத் அவருடைய மௌனத்தைக் கலைக்க,

“ஆமாம் பரத், பாட்டி கூட இன்னிக்கி ஃபோன் பண்ணி இருந்தா, இந்த வருஷம் சிவராத்திரி நம்மாத்து கட்டளை, அதனால ஒரு வாரம் முன்னாடியே கெளம்பி வரச்சொன்னா. அதனால அப்பா, உன்னையும் ராகவனையும் அந்த சமயத்துல வேலையெல்லாம் ஒதுக்கி வச்சு சித்த தோது பண்ணிக்கச் சொன்னார். மாப்பிள்ளையும் வரேன்னு சொல்லிட்டார்.” என்றார் பர்வதமும்.

அதற்குள் ராதிகாவும் தனக்கான தோசைகளை வார்த்துக்கொண்டு வந்து சாப்பிட அமர்ந்தாள். அவளுடைய தட்டிலிருந்த ஆறிப்போன தோசைகளைப் பார்த்த பரத், “என்னதிது, தோசை தோல் மாதிரி வளவளன்னு இருக்கு, இதைச் சாப்பிடாதே, ஒரு நிமிஷம் இரு” என்று கையலம்பிக்கொண்டு வந்தவன்,

வேஷ்டியை மடித்துக்கட்டிக்கொண்டு ராதிகாவிற்காக தோசைகளை வார்க்கத் தொடங்கினான், “இல்லை, இது போறும், நான் இதையே சாப்பிட்டுக்கறேன்,” என்று கூற, அந்தத் தட்டை அவளிடமிருந்து பிடுங்கிக்கொண்டு வேறொரு தட்டில் மொறுமொறுவென்று சூடான தோசையைப் போட்டு, சட்னியையும் பரிமாறினான்.

பரத்தின் இந்தச் செயல் ராதிகாவிற்கு தர்மசங்கடமாக இருக்க மெதுவாக நிமிர்ந்து தயங்கியபடியே பர்வதத்தின் முகத்தைப் பார்க்க, அவர் முகத்திலோ ஆயிரம் வாட்ஸ் புன்னகை.

ஆனாலும் இது தினப்படி சாதாரணமாக நடப்பதுதான் என்பதுபோல் அவர் பரத்துடனான தன்னுடைய சம்பாஷணையைத் தொடர்ந்தார்.

“அப்பறம், இந்த வெள்ளிக்கிழமை உன் மாமியாராத்துக்கு மாப்பிள்ளை விருந்துக்கு போகணும், ராதிகாவையும் அழைச்சுண்டு போய் ரெண்டு நாள் இருந்துட்டு வா,” என்று பர்வதம் கூற,

“இப்போல்லாம் சான்சே இல்லைம்மா, ஏற்கனவே ஆபீசுக்கு போய் ஒரு வாரமாச்சு, இதோ இப்போ மறுபடியும் சிவராத்திரிக்காக ஊருக்கு போனா வாரம் பத்து நாள் ஒரு வேலையும் பாக்க முடியாது, அடுத்து நந்துக்காவோட வளைகாப்பு, இப்பிடியே போனா நான் பிசினஸை எப்பிடி கவனிக்கறது?” என்றான் சிறிது எரிச்சலுடன்.

பரத் இப்படிதான் கூறுவான் என்று பர்வதமும் எதிர்பார்த்திருப்பார் போலும், “கரெக்டுதாண்டா, சிவராத்திரி முக்கியம், நந்தினியோட வளைகாப்பு முக்கியம், ராதிகாவோட பொறந்தாம் நமக்கென்ன முக்கியமா, அவா என்ன நமக்கு ஒட்டா உறவா, போயும் போயும் நம்பாத்துக்கு பொண்ணு குடுத்தவாதானே, மாப்பிள்ளையும் பொண்ணும் முதல் தடவையா நம்பாத்துக்கு வருவான்னு அவா ஆசையா காத்துண்டு இருந்தா நமக்கென்ன, இருக்கற முக்கியமான வேலையெல்லாம் விட்டுட்டு மாமியாரத்துக்கு போறதென்ன அவ்வளவு முக்கியமா?” என்று படபடவென்று பொரிந்தார் பர்வதம்.

இதற்கு பதில் சொல்ல பரத் வாய் திறக்கும் முன் இடை மறித்த ராதிகா, “ஏம்மா, இவ்வளவு கடுமையா பேசறேள், அவர் என்ன வரமாட்டேன்னா சொன்னார், இப்போ சௌகரியப்படாதுன்னுதானே சொன்னார், கொஞ்ச நாள் கழிச்சு போனா போறது, நான் அம்மாகிட்ட சொல்றேன், சொன்னா புரிஞ்சுப்பா” என்றாள் பரிவாக.

“நன்னா பரிஞ்சுண்டு வரேம்மா உன் ஆம்படையானுக்கு, அவன் அவன் கல்யாணம் பண்ணின்டானா ஆத்துக்காரிய அழைச்சுண்டு மாசக்கணக்குல ஹனிமூனுக்கு போனானான்னு இருக்கறச்சே, இதோ இருக்கற ஸ்ரீரங்கத்துல இருக்கற உங்கம்மாவாத்துக்குப் போக நேரமில்லைன்னு சொல்றான், அவன் கிட்ட சண்டை போடறதை விட்டுட்டு நீ என்னை சமாதானம் பண்ண வர்றியா?” என்று மருமகளையும் கடிந்துகொண்டார் பர்வதம்.

ராதிகா சங்கடமாக பரத்தைப் பார்க்க, அவனோ அம்மாவைக் கோபமாகப் பார்த்துக்கொண்டிருந்தான், “நீ ஒரு விஷயத்தை மறந்துபோயிட்டம்மா, நீ எனக்குத்தான் அம்மா, அவளுக்கு மாமியார்தான், ஞாபகம் வெச்சுக்கோ,” என்று கூறவிட்டு, கையிலிருந்த தோசைக்கரண்டியையும் டைனிங் டேபிள் மீது படார் என்று வைத்துவிட்டு, சமையலறையை விட்டு வெளியேறிவிட்டான்.

போனவனை விட்டுவிட்டு மருமகளை மீண்டும் பிடித்துக்கொண்டார் பர்வதம், “இதோ பாரு ராதும்மா, நீ ஏன்னா பண்ணுவியோ நேக்கு தெரியாது, இந்த வெள்ளிக்கிழமை அவனை உங்க அம்மவாத்துக்கு அழைச்சுண்டு போறது உன்னோட பொறுப்பு,” என்று கூறிவிட்டுச் சென்றுவிட்டார்.

மத்தள நிலையாகிவிட்டது ராதிகாவிற்கு. இதில் யாரை சமாதானம் செய்வது, யாரை சம்மதிக்கவைப்பது? குழப்பத்துடனே அறைக்குச் சென்றாள். வந்த வேகத்தில் அறையில் குறுக்கும் நெடுக்குமாக நடந்துகொண்டிருந்தான் பரத். அவனிடம் எதுவுமே பேசாமல் தூங்குவதற்கு ஆயத்தமானவளிடம்,

“வெள்ளிக்கிழமை கார்த்தால கிளம்பினா போதுமா?” என்று பரத் கேட்க,

“இல்லை நிஜமாவேதான் சொல்றேன், இப்போ போக தோதுப்படாதுன்னா, இன்னொரு தரம் போயிக்கலாம், நான் அம்மாகிட்டக்க சொல்றேன்,” என்று கூறினாள் ராதிகா.

“இப்போ என்ன? உங்க அம்மவாத்துக்கு என்னை வரவேண்டாம்னு சொல்றியா?” என்று குற்றம் சாட்டும்விதமாக பரத் கேட்க,

“நான் என்ன சொன்னா இவர் என்ன புரிஞ்சுக்கறார்” என்று நினைத்தவளாக அவசர அவசரமாக “இல்லை, அப்படியெல்லாம் இல்லை,” என்றவளிடம்

“அப்போ, வெள்ளிக்கிழமை கிளம்பறதுக்கான ஏற்பாட்டைப் பண்ணிக்கோ,” என்றபடி அறையை விட்டு வெளியேறப்போனவனை,

“இன்னும் எத்தனை நாளைக்குத்தான் நான் தூங்கறவறைக்கும் ஆபீஸ் ரூம்லயும் மொட்டைமாடியிலையும் போய் நிண்டுண்டு இருக்கப்போறேள்?” என்ற ராதிகாவின் கேள்வி தடுத்து நிறுத்தியது.

“உனக்கு சங்கடமா இருக்கக் கூடாதேன்னுதான், நான் வெளியில போறேன்,” என்று கூறியவனிடம்,

“இல்லை நீங்க இப்பிடி போறதுதான் நேக்கு சங்கடமா இருக்கு, உங்களோட ரூம்லேயே உங்களால இஷ்டம் போல இருக்கமுடியாம நான்தான் தொந்தரவு பண்றேன்னு குற்ற உணர்ச்சியா இருக்கு, ப்ளீஸ் நீங்க வந்து படுத்துக்கொங்கோ, நான் வேணும்னா சித்தநாழி வெளியில இருக்கேன்,” என்று கூறினாள்.

அறை வாசலிலியே நின்று சில நொடிகள் அவளையே மௌனமாகப் பார்த்துக் கொண்டிருந்தவன், “அதெல்லாம் ஒன்னும் வேண்டாம், நீ படுத்துக்கோ, நான் எங்கேயும் போகல்லை” என்றபடி அறைக்கதவைத் தாழிட்டுவிட்டு வந்து படுத்துக்கொண்டான் பரத். அவனது செய்கையில் லேசாகப் புன்னகைத்த ராதிகா, விளக்கை அணைத்துவிட்டு அவளும் தூங்கச் சென்றாள்.

********************************​

மறுநாள் எஞ்சியிருந்த விருந்தினர்களும் விடைபெற்றுச் சென்றுவிட, கல்யாண கலகலப்பெல்லாம் அடங்கி வீடு பழைய நிலைமைக்குத் திரும்பியது. குடும்பத்தினர் அனைவரும் இயல்பாகவே ராதிகாவையும் தங்களில் ஒருவராக இணைத்துக்கொண்டனர்.

ஆண்கள் அனைவரும் தத்தம் அலுவல்களில் மும்முரமாகிவிட, புகுந்த வீட்டின் இயல்பான வாழ்க்கை மெதுவாகப் பிடிபட ஆரம்பித்தது ராதிகாவிற்கு.

வீட்டில் இருக்கும் யாருமே ஒரு நொடியும் சோம்பலாக அமரவில்லை. அன்னபூரணி கேட்டரர்சின் பட்சணம் செய்யும் டிபார்ட்மெண்ட் முழுவதும் பர்வதம் மாமி மற்றும் கீதாவின் பொறுப்பில் நடத்தப்பட்டு வந்தது. அதற்கான தொழிற்சாலையும் ஆபீசும் வீட்டிற்கு அடுத்த காம்பவுண்டிலேயே இருந்தது.

காலை உணவை முடித்துக்கொண்டு பட்சணம் பேக்டரிக்குச் செல்லும் பர்வதம் மாமியும் கீதாவும் மதிய உணவிற்குத்தான் வீடு வருவார்கள். அதன்பிறகு குழந்தைகள் பள்ளியில் இருந்து வரும்வரை மீண்டும் வேலையைத் தொடர்வார்கள். வீட்டின் சமையல் பொறுப்பு மொத்தமும் கௌசி மாமியிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது.

பல ஆண்டுகளாக கேட்டரிங்கில் சமையல் வேலை பார்த்து வந்தவரை சென்னை வரும்பொழுது கூடவே அழைத்துவந்து வீட்டு சமையல் பொறுப்பையும் அவரிடம் ஒப்படைத்திருந்தனர் ராகவனும் பரத்தும். பர்வதம் மாமிக்கு ஒரு நல்ல தோழி கௌசி மாமி. காலை உணவையும் மதிய உணவையும் கௌசி மாமி சமைத்தாலும் இரவு உணவை வீட்டுப்பெண்களே சமைக்கும் பழக்கத்தை வைத்திருந்தனர்.
 




Shivapriya Murali

இணை அமைச்சர்
Author
Joined
Jan 21, 2018
Messages
621
Reaction score
2,738
Location
Bangalore
இப்படியாக மூன்று நாட்கள் கடந்துவிட்டிருந்த நிலையில், ராகவனும் ஜகன்னாதனும் கேட்டரிங் வேலையாக வெளியூர் சென்றிருக்க, கீதா, குழந்தைகளைப் பள்ளியில் விட்டுவிட்டு கௌசி மாமியையும் துணைக்கு அழைத்துக்கொண்டு நந்தினியை அவளது மாதாந்திர மருத்துவப் பரிசோதனைக்காக அழைத்துச் சென்றிருந்தாள். துளசி கல்லூரிக்குச் சென்றுவிட, ராதிகாவும் பர்வதம் மாமியுமே வீட்டில் இருந்தனர்.

மருமகளிடம் ஏதேதோ பேசிக்கொண்டிருந்த பர்வதம் மாமி, சிறிது நேரத்திற்குப் பிறகு ஆயாசமாக இருப்பதாக உட்கார்ந்துகொண்டவர் அப்படியே மயங்கிச் சரிந்தார்.

சாதாரணமாகப் பேசிக்கொண்டிருந்தவர் திடீரென்று மயங்கி விழுந்துவிட, சர்வாங்கமும் நடுங்கிவிட்டது ராதிகாவிற்கு.

என்ன செய்வதென்று தெரியாமல் சில நொடிகள் குழம்பியவள், அவர் முகத்தில் தண்ணீர் தெளித்து எழுப்ப முயன்றாள். அப்போதும் பர்வதம் கண் விழிக்காமல் போகவே, செய்வதறியாமல், தனது கைபேசியை எடுத்தவளுக்கு பரத்தின் எண்ணைத் தவிர அந்த வீட்டிலுள்ள வேறு யாருடைய தொலைபேசி எண்ணும் தன்னிடம் இல்லை என்பது அப்போதுதான் நினைவுக்கு வந்தது.

அந்த நிலையிலும் பரத்திற்கு அழைக்கத் தயக்கமாக இருந்தது அவளுக்கு, ஆனாலும் ஆபத்துக்குப் பாவமில்லை என்று பரத்தின் எண்ணிற்கு அழைத்தாள்.

அந்த நேரத்தில் கிளவுட் நைன் அலுவலகத்தில் இருந்த பரத்தை, அரவிந்தும் மேகாவும் ராதிகாவுடன் சேர்த்து வைத்து கிண்டலடித்துக்கொண்டிருக்க, பரத்தின் பிபி கொஞ்சம் கொஞ்சமாக உயர்ந்துகொண்டிருந்தது. எரிச்சலுடன் தலையில் கைவைத்துக்கொண்டு அமர்ந்திருந்தவனின் கோபத்தை கைபேசியின் திரையில் ஒளிர்ந்த ராதிகாவின் எண் இன்னும் அதிகமாக்க, அழைப்பை எடுக்காமலேயே துண்டித்தான்.

ஆனாலும் திரும்பித் திரும்பி அவளுடைய எண்ணிலிருந்து அழைப்பு வந்துகொண்டே இருக்க, ஒருநிலையில் எரிச்சல் மிதமிஞ்ச, வெறுப்புடன் அழைப்பை எடுத்தவன், அவள் என்ன சொல்ல வருகிறாள் என்பதைக் கேட்காமலேயே, “திரும்பி திரும்பி கால் பண்ணியும் ஒருத்தன் போனை எடுக்காம இருக்கான்னா ஏதோ முக்கியமான வேலையில இருக்கான்னு அர்த்தம், வேண்டாத வெட்டிப் பேச்சுக்கெல்லாம் அவனுக்கு நேரமில்லைன்னு அர்த்தம்,” என்று சீற,

பரத் பேசியதை கேட்ட ராதிகாவிற்கு டென்ஷனுடன் சேர்ந்து கோபமும் தலைக்கேறியது, அவன் பேச்சில் விட்ட சிறு இடைவெளியில், “கரெக்ட்தான், ரொம்ப வெட்டியால்லாம் பேச அழைக்கல்லை உங்களை, உங்க அம்மா திடீர்னு மயங்கி விழுந்துட்டா, அதான் போன் பண்ணினேன், ஒன்னும் அவசரமில்லை, நீங்க நிதானமா உங்க முக்கியமான வேலை எல்லாம் முடிச்சுட்டு வந்து இந்த வெட்டி வேலையை என்னன்னு பாருங்கோ போறும்,” என்று கூறி அழைப்பைத் துண்டித்தாள் ராதிகா.

விஷயம் தெரியாமல் அவளிடம் கோபத்தைக் காட்டிய முட்டாள்தனத்தை நொந்துகொண்டவன் மீண்டும் ராதிகாவை அழைக்க முயற்சிக்க, ராதிகா அவனுடைய அழைப்பை எடுக்காமல் உதாசீனம் செய்து அவனுடைய டென்ஷனை இன்னும் ஏற்றிவிட்டாள்.

வீட்டிலிருந்த ராதிகா, இனி யாருக்காகவும் காத்திருந்து பலனில்லை என்று உணர்ந்தவள், ஆம்புலன்சுக்கு அழைத்து செக்யூரிட்டியின் உதவியுடன் பர்வதம் மாமியை அருகிலுள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றாள். நந்தினிக்கு தேவையிலாமல் டென்ஷனை உண்டாக்கவேண்டாமென்று கீதாவிற்கு அழைக்காமல் இருந்தவள், இதற்கு மேலும் அவர்களிடம் சொல்லாமல் இருக்க முடியாதென்று, கீதாவிற்கு அழைத்து நிலைமையை விளக்கிக் கூறிவிட்டு, செல்லும் மருத்துவமனையின் பெயரையும் கூறி கீதாவை மட்டும் அங்கே வரச்சொன்னாள்.

மருத்துவமனையில் பர்வதம் மாமியைப் பரிசோதித்த மருத்துவர், லோ பிபி என்று கூறி, மயக்கம் தீர ஒரு ஊசி போட்டவர், ஒரு பாட்டில் ட்ரிப்ஸ் ஏற்றியபிறகு வீட்டிற்கு அழைத்துச் செல்லலாம், பயப்பட எதுவும் இல்லை என்று கூறியபிறகுதான் உயிரே வந்தது ராதிகாவிற்கு.

சிறிது நேரத்தில் நந்தினியை வீட்டில் கௌசி மாமியுடன் விட்டுவிட்டு கீதாவும் வந்துவிட, ராதிகா சிறிது தைரியமானாள். ராதிகாவிற்கு மீண்டும் மீண்டும் அழைத்தும் அவள் தன்னுடைய அழைப்பை கடைசி வரையில் எடுக்காமல் போகவே, கீதாவிற்கு அழைத்து விவரங்களை அறிந்துகொண்டு பரத் மருத்துவமனைக்கு வந்து சேர்கையில் பர்வதம் மாமி கண் விழித்திருந்தார். மருத்துவரிடம் பேசிவிட்டு வந்தவன், சிகிச்சைக்கான கட்டணத்தைச் செலுத்திவிட்டு, அவர்களை வீட்டிற்கு அழைத்து வந்தான். அவன் வந்ததிலிருந்து வீடு வந்து சேர்ந்த முழு நேரத்திலும் அவனை ஏறெடுத்தும் பார்க்காமல், அவன் இருப்பதையே உணராதவள் போல் நடந்துகொண்டாள் ராதிகா.

வீட்டிற்கு வந்ததும், பர்வதம் மாமியை அவருடைய அறையில் ஓய்வெடுக்க வைத்துவிட்டு கீதாவும் நந்தினியும் அவரவர் அறைக்குச் சென்றுவிட, தோட்டத்தில் உள்ள ஊஞ்சலில் சென்று அமர்ந்துகொண்டாள் ராதிகா. அவளிடம் தேவையில்லாமல் கோபமாகப் பேசியது பரத்தினுள் ஒருவிதமான குற்ற உணர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. தன் மீது மிகவும் கோபமாக இருக்கிறாள் என்பதை அவளுடைய பாராமுகத்திலேயே உணர்ந்தவன், அவளிடம் மன்னிப்பு கேட்கலாமென்று அவளருகில் சென்றான்.

அவன் வாயிலிருந்து ஒரு வார்த்தை வெளியே வரும்முன் ஒரு கையைக்காட்டி அவனுடைய பேச்சைத் தடுத்தவள், “இதோ பாருங்கோ, சாரின்னு மட்டும் சொல்லிடாதீங்கோ, கையில கிடைக்கிற எதையாவது எடுத்து அடிச்சுட கிடிச்சுடப் போறேன், என்ன நினைச்சுண்டு இருக்கேள் என்னைப் பத்தி, வெக்கம் மானம் இல்லதவன்னா, என்னை வேண்டாம்னு சொல்றவகிட்டக்க ஈஷிண்டு இளிச்சுண்டு பேசற பழக்கமும் நேக்கில்லை, அதுக்கான அவசியமும் நேக்கில்லை, உங்களுக்கு நான் வேண்டாம்னா, நேக்கும் நீங்க வேண்டாம்தான். அதனால உங்களுக்கு போன் பண்ணி பேசி, சிரிச்சுலாம் உங்களை மயக்கிடுவேன்னேல்லாம் அனாவசியமா நீங்க பயப்பட வேண்டாம், ஆனாலும் என் புத்தியைச் சொல்லணும், இந்த ஆம்புலன்ஸைக் கூப்பிடற யோசனை முன்னாடியே தோணியிருந்தா, டென்ஷன்ல உங்களுக்கு போன் பண்ணி இந்த அவமானமே பட்டிருக்க வேண்டாம், எல்லாம் என் தலையெழுத்து, ஆனா ஒண்ணு மட்டும் சொல்றேன் நன்னா கேட்டுக்கோங்கோ, இனிமேல் என் உயிரே போற நிலைமையா இருந்தாலும், இன்னொரு தரம் உங்களுக்கு மட்டும் போன் பண்ணவே மாட்டேன்...” பட்டாசாய் வெடித்தவள், அவன் முகத்தை ஏறிட்டும் பார்க்காமல் வீட்டிற்குள் சென்றுவிட்டாள்.

பேசுவதற்குமுன் ஒன்றுக்கு நான்கு முறை யோசித்துப் பேசவேண்டுமென்று பெரியவர்கள் சொல்லுவார்கள். வானத்தில் இருக்கும் அஸ்து தேவதைகள் எந்த நேரத்தில் “ததாஸ்து” என்று சொல்வார்கள் என்று தெரியாதாம். அதனால்தானோ என்னவோ வானத்தில் அமர்ந்திருந்த ஒரு குட்டி அஸ்து தேவதை ராதிகாவின் பேச்சிற்கு தன் மழலைக் குரலில் “ததாஸ்து” என்று கூறியிருக்கும் என்பதை உணராமலே போனாள் ராதிகா...
 




Last edited:

Chitrasaraswathi

முதலமைச்சர்
Joined
Jan 23, 2018
Messages
11,488
Reaction score
29,223
Age
59
Location
Coimbatore
Super. நாங்கள் கடனுக்காக காத்திருக்கிறோம்
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top