• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Kadhal Kadan - 2

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Shivapriya Murali

இணை அமைச்சர்
Author
Joined
Jan 21, 2018
Messages
621
Reaction score
2,738
Location
Bangalore
காதல் கடன்

(2)

இரவு மணி பத்து. ராதிகாவால் இன்னுமே நம்ப முடியவில்லை, உண்மையாகவே அவளுக்கு நிச்சயதார்த்தம் முடிந்துவிட்டது, தை மாதம் முதல் முகூர்த்தத்தில் திருமணம் என்றும் முடிவாகிவிட்டது. மாப்பிள்ளைக்கு ஒரு பிரேஸ்லெட்டும் மோதிரமும், பட்டு வேஷ்டி சட்டையும் வாங்கியிருந்தார் ஆடியபாதம். மாப்பிள்ளை வீட்டாருக்கு மிக்க மகிழ்ச்சி. ராதிகாவிற்கு செண்டிமெண்டாக, பச்சையில் அரக்கு பார்டர் போட்ட பட்டுப்புடவையும் அதற்கு மேட்சாக, பச்சைக்கல் பதித்த நெக்லஸ், வளையல், தோடு, மோதிரம் கொண்ட செட்டும் வாங்கி வந்திருந்தனர் மாப்பிள்ளை வீட்டார். அவளுடைய அம்மா அப்பாவிற்கும் தரையில் கால் பாவவில்லை. இத்தனை நாள் காத்திருப்பின் பலனாக மகள் ஒரு நல்ல குடும்பத்தில் வசதியான வாழ்க்கை வாழப்போகிறாள் என்று அகமகிழ்ந்து போயினர்.

பர்வதம் மாமி பெண் கேட்டு வந்த நாளிலிருந்து வீட்டில் இருந்துவந்த குழப்பநிலை நீங்கி ஒரு நிம்மதி உண்டாகியிருந்தது.

பத்து நாட்களுக்கு முன் காதிலும் மூக்கிலும் வைரங்கள் மின்ன, மடிசார் கட்டிய ஒரு மாமி வாசற்கதவைத் தட்டியது முதல் இன்றுவரை நடப்பவை எதையுமே யாராலுமே நம்ப முடியவில்லை.

“நமஸ்காரம், நான் பர்வத வர்த்தினி, என் பிள்ளைக்கு வரன் பார்த்துண்டிருக்கோம், உங்க பொண் ராதிகாவை கோவில்ல பார்த்தேன், விஜாரிச்சபோ, அவளுக்கும் கல்யாணத்துக்கு பார்த்துண்டு இருக்கறதா கேள்விப்பட்டேன், அதுதான் நேர்லயே பேசிடலாம்னு வந்தேன்.”

ஏற்றிவைத்த விளக்குபோன்ற பிரகாசமான முகமும், உடை நேர்த்தியுமாக, நளினமே வடிவாக நின்றிருந்த பார்வதா மாமியை கண்கொட்டாமல் பார்த்துக்கொண்டிருந்த மரகதம், அவர் கூறியதைக் கேட்டு அகமும் முகமும் மகிழ, “உள்ள வாங்கோ,” என்று வரவேற்று ஹாலில் இருந்த சோபாவில் உட்காரவைத்தார், “ஒரு நிமிஷம், அவரைக் கூப்பிடறேன்,” என்று உள்ளே சென்று கணவரை அவர்களைச் சந்திக்க அனுப்பிவிட்டு, வந்தவருக்கு குடிக்க தண்ணீர் கொண்டுவந்து கொடுத்தார்.

அவசர அவசரமாக சட்டையை மாட்டிக்கொண்டு வந்த ஆடியபாதமும், “நான் ஆடியபாதம், ஸ்ரீமத் ஆண்டவர் சான்ஸ்கிரிட் காலேஜ்ல சம்ஸ்க்ருத ப்ரோபசரா இருக்கேன், இவ என்னோட பார்யாள், மரகதம், நீங்க வந்த விஷயம் பத்தி சொன்னா, எங்களைபத்தி எப்படி தெரிஞ்சுது,” என்றார்.

“நீங்க பேசிண்டு இருங்கோ, இதோ அரை நொடியில காஃபி கொண்டு வரேன்,” என்று செல்ல முற்பட்ட மரகதத்தை, பர்வதம் மாமி தடுத்து, “மொதல்ல நான் சொல்ல வந்ததை சொல்லிடறேன், நீங்களும் உக்காருங்கோ, காஃபியெல்லாம் அப்பறம் பாத்துக்கலாம்,” என்றார்.

“என் பேரு பர்வதவர்த்தினி, இங்கே கும்பகோணம் அன்னபூரணி கேட்டரிங் கேள்விப்பட்டிருக்கேளா? எங்காத்து மாமாதான் அதை நடத்திண்டு வர்றார்.” என்றார். “எங்க பூர்வீகம் கும்பகோணம்தான், ஆனா இப்போ இருக்கறது சென்னையில. இன்னிக்கி காலம்பர ஸ்வாமி தரிசனம் பண்ண வந்தப்போ, உங்க மகளைப் பாத்தேன், குருக்களண்ட கேட்டப்போ விவரம் சொன்னார், அதுதான் நேர்லய பேசலாம்னு உங்களைப் பாக்க வந்தேன்,” என்றார்.

“எங்களுக்கு ரெண்டு பொண்ணு ரெண்டு பிள்ளைகள், பெரிய பையனுக்கும் பொண்ணுக்கும் கல்யாணம் ஆயிடுத்து, இப்போ இன்னொரு பிள்ளைக்குதான் உங்க பொண்ணை பார்க்கலாம்னு...”

“ரொம்ப சந்தோஷம், மாமி, பையன் என்ன பண்றார்?” என்று ஆடியபாதம் கேட்க, தான் கைப்பையைத் திறந்து அதிலிருந்து தன் மகனின் புகைப்படத்தை எடுத்து கொடுத்தார். அவர் போட்டோவை வாங்கி ஒரு முறை பார்த்துவிட்டு, மனைவியிடம் தர, அம்மையார் முகத்தில் ஆயிரம் வாட்ச் வெளிச்சம், தனக்குத் தானே மெலிதாய் தலையாட்டிக்கொண்டார்.

“இவன்தான் என்னோட ரெண்டாவது பையன், பேரு பரத்வாஜ், முப்பத்திரெண்டு வயசாறது, எம்‌பி‌ஏ ஹாஸ்பிடாலிட்டி மேனேஜ்மெண்ட் படிச்சிருக்கான், வெறும் கேட்டரிங் பிஸினஸ் மட்டும் பண்ணிண்டு இருந்த அப்பாவை சம்மதிக்க வெச்சு, என் பெரிய பொண்ணு நந்தினியோட ஆத்துக்காரரோட சேர்ந்து ஒரு ஸ்பெஷாலிட்டி ரெஸ்டாரண்ட் செயின் ஒண்ணு ஆரம்பிச்சிருக்கான், அன்னம் பிரம்மான்னு கேள்விப்பட்டிருப்பேளே, அதுதான், போன அஞ்சு வருஷத்துல இந்தியால எட்டு பிரான்ச், பாரீன்ல நாலு பிராஞ்ச்னு நல்லபடியா நடந்துண்டு இருக்கு, இப்போ ரெண்டு வருஷமா ஈவண்ட் மேனேஜ்மெண்டுன்னு ஏதோ பிஸினஸ் ஆரம்பிச்சு பண்ணிண்டு இருக்கான்.” மகிழ்ச்சியாக மகனின் பெருமைகளை சொல்லிக்கொண்டிருந்த மாமி திடீரென சோகமாகி விட்டார்.

“ஆனா அவன் துரதிர்ஷ்டம் பாருங்கோ, அவனுடைய முதல் மனைவி கல்யாணமாகி மூணு வருஷத்திலேயே தவறி போயிட்டா, இது அவனுக்கு ரெண்டாவது கல்யாணம்.” என்று அவர் கூறிய மாத்திரத்தில் போட்டோவைப் பார்த்து மகிழ்ந்து போயிருந்த மரகதத்தின் முகம் சிறுத்துப் போனது, சட்டென்று எழுந்துவிட்டார்,

“இதோ பாருங்கோ மாமி, என் பொண்ணுக்கு இருபத்தியாறு வயசு ஆகியிருக்கலாம், ஒரு சில வரன் தட்டிப் போயிருக்கலாம், ஆனா ரெண்டாம் தாராமா கல்யாணம் பண்ணி குடுக்கற அளவுக்கு ஒண்ணும் கொறைஞ்சு போயிடல, தோஷமில்லாத சுத்த ஜாதகம் அவளோடது, நாங்களும் ஒண்ணும் பஞ்சப்பட்டவா கிடையாது, எங்க கொழந்தைக்கு சீறும் சிறப்புமா கல்யாணம் செஞ்சுவைக்க எல்லா வசதியும் இருக்கறவாதான், எம்ஃபில் படிச்சிருக்கா, காலேஜ்ல இங்கிலீஷ் ப்ரோபசர், கை நெறைய சம்பாதிக்கரா, உங்க பிள்ளையாண்டானுக்கு ரெண்டாம் தாராமா குடுப்போம்னு நீங்க எப்படி நெனைச்சு வந்தேள்,” கொதித்துவிட்டாள் மரகதம்.

“மரகதம், நீ பேசாம ஓக்காரு,” என்று மனைவியை கையமர்த்திவிட்டு, “நீங்க சொல்றதப் பாத்தா, பெரிய இடமாட்டம் தெரியறேள், உங்க அந்தஸ்துக்கு பெரிய இடத்து பொண்களையே பாக்கலாம், ஆனா எங்களைப் போல மிடில் கிளாச தேடி வந்திருக்கேள்னா, உங்க பையனுக்கு ரெண்டாவது கல்யாணம்ங்கறதனாலயா?” என்று கேட்டார், ஆடியபாதம்.

“உங்க ஆத்து மாமியோட கோபம் ரொம்ப நியாயமானது மாமா, ஆனா, இந்த பெரிய இடம், பணம் அந்தஸ்து எல்லாமே எங்களுக்கு இப்போ கொஞ்ச நாள்ல வந்ததுதான், அதுக்கு முன்னால நாங்களும் மிடில் கிளாஸ்தான், பகவான தரிசனம் பண்ண வந்த இடத்துல யதேச்சையா உங்க பொண்ணைப் பாத்தேன், என்னவோ மனசுக்கு ரொம்ப பிடிச்சு போயிடுத்து, நான் நீங்க சொல்றா மாதிரி எந்தவொரு உள்நோக்கமும் இல்லாமல்தான் இங்க வந்தேன், இன்னும் சொல்லப்போனா, ஸ்ரீரங்கம் வர்றச்ச என் பையனுக்கு வரன் பாக்கற எண்ணமே எனக்கு இல்லை, அவனுக்கு ஒரு நல்ல வாழ்க்கை அமையணும்னு ரங்கமன்னார்கிட்டக்க வேண்டிக்கத்தான் வந்தேன், வேண்டிண்டு திரும்பினா, தட்டு நெறைய பூவோட உங்க பொண்ணு எதிர்ல நிக்கறா, மனசு அப்படியே பூரிச்சு போயிடுத்து, மத்தபடி ரெண்டாங்கல்யாணம் அப்படிங்கறதால மிடில் கிளாஸ் பொண்ணு வேணுங்கற மாதிரியான எந்த எண்ணமும் நேக்கு இல்லை, இன்னும் சொல்லப்போனா நான் இன்னிக்கி இங்க வந்திருக்கறதகூட நான் யார்கிட்டயும் சொல்லலை, கோவில்ல இருந்து நேரா இங்கதான் வரேன், உங்களோட பதிலைக் கேட்டுட்டுதான் எங்காத்துலயும் நான் பேசணும்” என்றார் பர்வதம் மாமி தன்மையாக.

“ஆகட்டும் மாமி, இது ஒரு பெரிய முடிவு, அதுவும் இத நான் மட்டும் முடிவு பண்ண முடியாது, எங்க ஆத்துல எல்லார்கிட்டயும், குறிப்பா ராதிகா கிட்டயும் இதக் கலந்து பேசித்தான் உங்களுக்கு என்னால பதில் சொல்ல முடியும், எனக்கு சித்த டைம் குடுங்கோ,” என்றார்.

“வாஸ்தவம்தான், மாமா, நீங்க நன்னா யோசிச்சே பதில் சொல்லுங்கோ. இதுதான் என்னோட மொபைல் நம்பர்.” என்று தனது மொபைல் எண்ணைக் கொடுத்துவிட்டு பர்வதம் மாமி கிளம்பிவிட்டார்.
 




Shivapriya Murali

இணை அமைச்சர்
Author
Joined
Jan 21, 2018
Messages
621
Reaction score
2,738
Location
Bangalore
மாமி சென்றவுடனேயே, அவர் கொளுத்திவிட்ட இரண்டாம் தாரம் என்னும் திரி, சரவெடியாய் வெடித்தது. “இதுல யோசிச்சு சொல்ல என்ன இருக்கு, மொகத்துல அடிச்சாப்புல எங்க பொண்ணை உங்க பிள்ளைக்கு சம்பந்தம் பேச எங்களுக்கு இஷ்டமில்லன்னு சொல்லவேண்டியதுதானே,” என்று குதித்தார் மரகதம்.

“இப்போ வந்துட்டு போறது யாருன்னு தெரியுமா, மரகதம்? கும்பகோணம் அன்னபூரணி கேட்டரர்ஸ் நம்பளவா மத்தியில எவ்வளவு பிரசித்தம் தெரியுமா? அவ சொன்னாளே அன்னம் பிரம்மான்னு ஒரு ஹோட்டல், கும்பகோணம், தஞ்சாவூர், திருச்சி, சென்னை, பெங்களூர், டெல்லி, மும்பைன்னு எல்லா ஊர்லயும் இருக்கு, அமெரிக்கா, சிங்கப்பூர், கனடான்னு வெளிநாட்டுலயும் இருக்கு, இப்போ போன மாசம்தான் துபாய்ல ஒரு பிராஞ்ச் திறந்தா, ரொம்ப பெரிய இடம், இது, ஆனா நம்மளப் போல மிடில் கிளாசா இருந்துதான், கடுமையா ஒழைச்சு முன்னுக்கு வந்திருக்கா, இவா ஆத்துக்கு மருமகளாப் போறதுன்னா அது ரொம்ப பெரிய விஷயம்,” என்றார்.

“அதனால அவா ஆத்துக்கு நம்ம ராதிகாவை ரெண்டாந்தாரமா கல்யாணம் பண்ணி குடுக்கலான்னு சொல்றேளா?”

“அதைத் தவிர வேற என்ன குறை இந்த வரன்ல, சொல்லு?” என்றார். “இத விடவும் ஒரு குறை வேணுமா?” என்றார் மரகதம்.

“ஒரு நிமிஷம் யோசிச்சு பாரு, பையன் நன்னா படிச்சிருக்கார், சொந்தமா பிஸினஸ் பண்றார், வசதியான இடம் இதெல்லாம் நல்ல விஷயமா நோக்கு தெரியலையா?”

“ம்ம்...அதெல்லாம் சரிதான், ஆனாலும்...” என்று மரகதம் இழுக்க, “சரி நாம எந்த முடிவும் பண்ண வேண்டாம், ராது வரட்டும் அவகிட்ட பேசுவோம், அவளோட வாழ்க்கை, முடிவையும் அவகிட்டயே விடுவோம்,” என்றார்.

“அவ கொழந்தைன்னா, அவளுக்கு என்ன தெரியும், நாமதான் பாத்து நல்லது செய்யணும்,”

“இத்தனை நாளும் நாமதானே பாத்து பாத்து ஒவ்வொரு வரனா கொண்டுவந்தோம், பொம்மையாட்டம் எல்லார் முன்னாலயும் நிறுத்தினோம், ஒண்ணும் அமையலையே, நாமளும் தோத்து, அவளையும் தோக்கடிச்சுட்டு நிக்கறோம், எந்தத் தப்புமே செய்யாம நம்ம கொழந்தை தண்டனையை அனுபவிக்கற மாதிரி நேக்கு தோணறது, அதனால இந்த தரம் கொஞ்சம் வித்தியாசமா அவளையே முடிவு பண்ணச் சொல்வோம்,” என்றார்.

மாலையில் எல்லோரும் வீடு திரும்பிய பிறகு, விஷயம் சர்ச்சைக்கு எடுத்துக்கொள்ளப் பட்டது. மனதில் விரக்தியும் வேதனையுமாக வீட்டிற்கு வந்திருந்த ராதிகாவிற்கு அவர்கள் பேசியது எதுவுமே மனதில் பதியவில்லை. இன்றோடு எல்லாவற்றிற்கும் ஒரு முடிவு கட்டிவிடவேண்டும் என்ற எண்ணமே மனதில் மேலோங்கி நின்றது. இன்னும் சிறிது நேரத்தில் உயிரை மாய்த்துக்கொள்ளப் போகும் தனக்கு கல்யாணம் செய்ய தர்க்கம் செய்துகொண்டிருக்கும் பெற்றோரைப் பார்த்து சிரிப்புதான் வந்தது.

அப்போதுதான், அம்மாவின் சொற்கள் காதில் விழுந்தன, “உன்னை கார்த்தால கோவில்ல பார்த்தளாமே அந்த மாமி, ஆவாளோட பிள்ளைக்குதான் உன்னைக் கேட்டு வந்துருக்கா” என்று ஏதோ சொல்லிக்கொண்டிருந்தார்.

டக்கென்று மனம் அந்த விரக்தியான நிலையிலும் காலையில் பார்த்த மாமியின் முகத்தைக் கண்முன் காட்டியது. கல்லூரிக்கு கிளம்பும் முன், தோழி நித்யாவிற்கு பதிலாக அவளுடைய அப்பாவிடம் சுவாமிக்கான மாலைகளைக் கொடுக்கபோனபோது எதிர்பட்ட மாமியின் முகம் நினைவுக்கு வார, “என்ன ஒரு தெய்வீகக் களை அவா மொகத்துல, என்னைப் பாத்து பல நாள் பரிச்சயமானது மாதிரி சிரிச்சாளே,” என்று நினைத்துக்கொண்டாள்.

தற்கொலை செய்ய நினைப்பவர்களுக்கு சரியான நேரத்தில் ஒரு சிறிய தடங்கல் ஏற்பட்டால் போதும், அவர்களுடைய மனம் மாறிவிடும், ராதிகாவின் மனதில் தோன்றிய மாமியின் புன்னகை அந்த வேலையைத்தான் செய்தது.

கையில் பார்க்காமலே வைத்துக்கொண்டிருந்த அந்த பரத்வாஜின் போட்டோவைப் பார்த்தாள். மனம் எல்லா பிரச்சனைகளையும் கொஞ்சம் ஒதுக்கி வைத்துவிட்டு போட்டோவில் இருந்த முகத்தில் லயித்தது.

“ம்ம், ஹாண்ட்ஸம்” என்றது.

நன்றாகத்தான் இருந்தான்(ர்). கோதுமை நிறம். வெள்ளை நிற முழுக்கை சட்டை போட்டிருந்தான், தீர்க்கமான கூர் நாசி, அழுத்தமான உதடுகள், லேசாக முறுக்கப்பட்டிருந்த மீசை. உள்ளே குதித்து நீச்சலடிக்கலாம் போலிருந்த ஆழமான கண்கள். எவ்வளவு சீவியும் அடங்காமல் நெற்றியில் புரண்ட முடிக்கற்றை, அதில் விரல் நுழைத்து ஒதுக்கவேண்டும் என்று மனதில் தோன்றிய எண்ணத்தை அடக்கிக்கொண்டு தலை நிமிர்ந்தாள்.

அம்மா நின்றுகொண்டு கைகளை ஆட்டி ஆட்டி இன்னும் ஏதோ பேசிக்கொண்டிருந்தாள். அப்பாவோ எதிர் சோஃபாவில் அவள் முகத்தை எதிர்பார்ப்போடு பார்த்தபடி உட்கார்ந்திருந்தார்.

ஒன்றும் புரியாமல், “என்னப்பா...” என்றாள்.

“என்னடி என்னப்பா, இவ்ளோ நாழியா கரடியா கத்திண்டு இருக்கேன், காதுலயே போட்டுக்காம அப்பாவும் பொண்ணும் கண்ஜாடை பேசிண்டு இருக்கேள்,” என்று கடிந்துகொண்டார் மரகதம்.

“ராஜாத்தி, உங்க அம்மா சொன்னதெல்லாம் உண்மைதான், இவர்தான் பையன், எம்‌பி‌ஏ படிச்சிருக்காராம், சொந்தமா ஈவண்ட் மேனேஜ்மெண்ட் பிஸினஸ் பண்றராம், ஹோட்டல். கேட்டரிங்குன்னு அப்பாவுக்கும் அண்ணாவுக்கும் ஒத்தாசையாவும் இருக்காராம். நம்ம கும்பகோணம் கோபாலனுக்கு ஃபோனைப் போட்டு இன்னிக்கி மத்தியானம் விசாரிச்சேன், ரொம்ப நல்ல குடும்பம்னு சொன்னான். அந்த ஏரியாவில நல்ல மதிப்பும் மரியாதையும் உள்ள குடும்பம். கஷ்டப்பட்டு முன்னுக்கு வந்தவா, கண்ண மூடிண்டு பொண்ணை கல்யாணம் பண்ணிக் குடுக்கலாம்னு சொன்னான். இதெல்லாம் ஒரு பக்கம்னாலும் பையனுக்கு இது ரெண்டாம் கல்யாணமாம். அதுதான் கொஞ்சம் உறுத்தறது. நேக்கு முடிவெடுக்கத் தெரியல, அதுதான் இந்த தடவை முடிவை உன் கிட்டயே விட்டுட்டேன். நீ யோசிச்சு ஒரு முடிவு சொல்லு.” என்றார்.

இவர்களிடம் என்ன முடிவைச் சொல்ல, அம்மாவும் அப்பாவும் இந்த விஷயத்தில் பிளவுபட்டு நிற்கிறார்களே, என்ன செய்வது என்றிருந்தது.

அம்மாவை நோக்கி, “அம்மா உனக்கு இது பிடிக்கல இல்லையா?” என்றாள். “ஆமாண்டி கொழந்தே, இது காம்ப்ரமைஸ்னு தோண்றது,” என்றார்.

அப்பாவைப் பார்த்து, “உங்களுக்கு பிடிச்சிருக்காப்பா?” என்று கேட்டாள். “அப்படி இல்லேம்மா, ஆனா என்னோட உள்மனசு ஒரேடியா வேண்டாம்னு ஒதுக்கவும் ஒத்துக்க மாட்டேங்கறது” என்றார்.

ராதிகா சோஃபாவை விட்டு எழுந்து நின்றாள். அம்மா அப்பா இருவரையும் பார்த்து, “நீங்க ரெண்டுபேரும் சேர்ந்து என்ன சொல்றேளோ அதுதான் என் முடிவும். என் வாழ்க்கை எப்படி அமையணும்னு உங்க ரெண்டு பேரையும் தவிர வேற யாருக்கும் முடிவு பண்ற உரிமை இல்லை. எனக்கும் கூட, அதனால நீங்க ரெண்டுபேரும் கலந்து பேசி ஒரு முடிவுக்கு வாங்கோ.” என்று கூறிவிட்டு தனது அறைக்குச் சென்றுவிட்டாள்.

கலங்கி நின்ற மனைவியின் கையைப் பிடித்து தன் அருகில் உட்கார வைத்துக்கொண்டார் ஆடியபாதம். “நம்ம ராதிகா அவா ஆத்துல நன்னா இருப்பான்னு தோணறது, மரகதம். ஆனாலும் உன்னை மிஞ்சி உன்னோட விருப்பமில்லாம நான் எந்த முடிவையும் எடுக்க மாட்டேன். நாளைக்கு கார்த்தால வரைக்கும் நன்னா யோசி, அப்பறமும் இது வேண்டாம்னு தோணினா, அந்த மாமிக்கு ஃபோன் பண்ணி நான் மறுத்துடறேன்,” என்றார்.

“நீங்க சொல்ற எல்லாமே சரிதான்னா, ஆனா நம்ம பொண்ணு வாழ்க்கை முழுக்க இன்னொரு பொண்ணோட நிழலோட போட்டி போட்டுண்டே வாழவேண்டியதா போயிடுமோன்னு நேக்கு பயமா இருக்கு, அவ்வளவுதான்.” என்றார் கண் கலங்கி.

“இது தெரிஞ்ச நிழல், மரகதம், ஆனா யோசிச்சுப்பாரு, இதுவரைக்கும் வந்த வரன்கள் எல்லாமே, ஒரு சரியான காரணமே சொல்லாம நம்ம பொண்ணை நிராகரிச்சாளே, நம்மால தடுக்க முடிஞ்சுதா, என்னன்னே தெரியாத நிழல் இல்லையா அது, அந்த நிழல்ல இருந்து அவளை நம்மளால காப்பாத்த முடிஞ்சுதா?”

“அப்போ ஏதோ ஒரு நிழலோட போராடறதுதான் நம்ம பொண்ணோட தலையெழுத்தா?”

“எந்த பொண்ணு போராடலை, சொல்லு, நீ போராடலையா, நேக்கு வேல போனப்போ, அம்மா உன்னை புரிஞ்சுக்காம படுத்தினப்போ, இப்போவும் அக்கா வந்தா உன்னை உதாசீனப்படுத்தறாளே அப்போ, அவ்வளவு ஏன்? கார்த்தால வந்தாளே அந்த மாமி, எல்லா வசதியும் இருந்தும், மகனோட இழப்பால கஷ்டப்படலையா? போராடி ஜெயிச்சாதான் வாழ்க்கை இனிக்கும், போராட பயந்துண்டு வாழறதை நிறுத்த முடியுமா? போ போயி வேலையப் பாரு, இதப் பத்தி இனி பேசவேண்டாம். நாளைக்கு கார்த்தால உன் முடிவைச் சொல்லு, அது என்னவா இருந்தாலும் மறுபேச்சு பேசாம நான் ஒத்துக்கறேன்” என்று மனைவியை அனுப்பிவைத்தார்.

இரவு எல்லோரும் தூங்கச் சென்றபின் மகளைத் தேடி அவளறைக்குச் சென்றார் மரகதம். கட்டிலில் அமர்ந்து ஏதோ யோசித்துக்கொண்டிருந்த மகளின் தலையை வருடி, “ஃபோட்டோ பாத்தியே, நோக்கு அந்தப் பிள்ளைய பிடிச்சிருக்கா ராது?” என்று கேட்டார். என்ன சொல்வது என்று தெரியாமல் அமைதியாய் அமர்ந்திருந்த மகளைப் பார்த்து “அப்பா சொல்றதப் போல, ரெண்டாவது கல்யாணம் அப்படிங்கறதத் தவிர வேற எந்த குறையும் இருக்கற மாதிரி நேக்கும் தோணல, உனக்கும் இது ஒரு பெரிய விஷயமா படலைன்னா, ஜாதகம் பாக்கச் சொல்லட்டுமா?” என்று கேட்டார்.

“நீ என்ன சொன்னாலும் சரிம்மா” என்றாள் ராதிகா, “இதுவே முடிவா என்ன, இன்னும் ஜாதகம் பொருந்தணும், அந்தப் பிள்ளை உன்னைப் பாக்கணும், அவருக்கு பிடிக்கணும், இன்னும் மத்த லௌகீகமெல்லாம் ஒத்து வரணும், அப்பறம்தானே கல்யாணம்” என்று உறங்கச் சென்றுவிட்டார்.

மறுநாள் காலையில் தம்பதி சமேதராய் பர்வதம் மாமியும் அவராத்து மாமாவும் தங்கியிருக்கும் ஹோட்டலுக்கே தேடிச் சென்று ராதிகாவின் போட்டோவையும் ஜாதகத்தையும் கொடுத்தனர். அவர்களோ ராதிகாவின் பெற்றோரையும் அழைத்துக்கொண்டு முசிறியிலிருக்கும் அவர்களுடைய குடும்ப ஜோதிடரிடம் பொருத்தம் பார்க்கச் சென்றனர். ஒன்பது பொருத்தம் அமைந்துவிட, ராதிகாவின் போட்டோவை ஸ்கேன் பண்ணி சென்னையிலிருக்கும் பரத்வாஜுக்கு அனுப்பினர். அவனோ அனுப்பிய மெயிலை மேம்போக்காகப் பார்த்துவிட்டு, அம்மா, அப்பாவுக்கு பிடித்தால் மேற்கொண்டு ஏற்பாடுகளைச் செய்யச் சொல்லிவிட்டான். லௌகீக விஷயத்தில் மாப்பிள்ளை வீட்டாருக்கு எந்தவொரு எதிர்பார்ப்பும் இல்லாமல் போக, திருமணத்தை மட்டும் சிம்பிளாக குலதெய்வம் கோவிலில் நடத்திவிட்டு, ரிசப்ஷனை கிராண்டாகச் செய்வதாக முடிவு செய்யப்பட்டது. நிச்சயதார்த்தத்திற்கு நாள் குறித்துவிட்டு, பர்வதம் மாமி சென்னை புறப்பட்டுவிட்டார்.

ராதிகாவின் தற்கொலை முடிவும் தற்காலிகமாக தள்ளிப்போடப்பட்டது, இந்தத் திருமணத்தில் தடங்கல் ஏற்பட்டால், அப்போது பார்க்கலாம் என்று முடிவெடுத்து, இடி எப்போது விழும் என்று ராதிகா காத்திருக்கலானாள். இடி விழும்...ஆனால் எப்போது???
 




Shivapriya Murali

இணை அமைச்சர்
Author
Joined
Jan 21, 2018
Messages
621
Reaction score
2,738
Location
Bangalore
என்னது இடி முழக்கம் பெரிச இருக்கும் போல
இடி பெருசா முழங்கினாதானே அடுத்து ஜோன்னு காதல் மழை பெய்யும் சரோஜா மேடம் :love:
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top