• Please register and if already registered, log in! Read the stories and always share your opinions. Writers expect only your opinions. Thanks

Kadhal Kadan - 22

Messages
620
Likes
2,717
Points
133
Location
Bangalore
#1
சென்ற எபிசோடுக்கு லைக்ஸ் கமெண்ட்ஸ் போட்ட எல்லாருக்கும் நன்றி. உங்களுக்காக காதல் கடன் - 22 இதோ...

காதல் கடன்

(22)

பச்சை மாமலைபோல் மேனி* பவளவாய் கமலச் செங்கண்*

அச்சுதா! அமரர் ஏறே!* ஆயர் தம் கொழுந்தே! என்னும்,*இச்சுவை தவிர யான்போய்* இந்திர லோகம் ஆளும்,*

அச்சுவை பெறினும் வேண்டேன்* அரங்கமா நகர் உளானே!வேத நூல் பிராயம் நூறு* மனிசர் தாம் புகுவ ரேலும்,*

பாதியும் உறங்கிப் போகும்* நின்றதில் பதினையாண்டு,*
பேதை பாலகனதாகும்* பிணி பசி மூப்புத் துன்பம், *

ஆதலால் பிறவி வேண்டேன் * அரங்கமா நகர் உளானே.*காவலில் புலனை வைத்துக்* கலிதன்னைக் கடக்கப் பாய்ந்து,*

நாவலிட்டு உழி தருகின்றோம்* நமன் தமர் தலைகள் மீதே,*மூவுலகு உண்டு உமிழ்ந்த* முதல்வ நின் நாமம் கற்ற,*

ஆவலிப் புடைமை கண்டாய்* அரங்கமா நகர் உளானே.ஊரிலேன் காணி யில்லை * உறவுமற் றொருவ ரில்லை,*
பாரில்நின் பாத மூலம்* பற்றிலேன் பரம மூர்த்தி,*
காரொளி வண்ண னே!(என்)* கண்ணனே! கதறு கின்றேன்,*
ஆருளர்க் களைக ணம்மா!* அரங்கமா நகரு ளானே!பேரழகி ஆண்டாள்...பெருமானை, அரங்கனை மணாளனாக அடைவதற்கே பிறவி எடுத்தவள். அவளுடைய தீராக் காதலை தடுத்தாட்கொண்டு தன் மனையாளாக்கிக் கொண்டார் அரங்கன். அதனால்தானோ என்னவோ, அரங்கனின் துயில் களைவதே ஆண்டாளின் முக தரிசனத்தோடுதான்.

அன்னநடை பயின்று, அரங்கனின் திருமஞ்சனத்திற்காக வெள்ளிக்குடத்தில் தீர்த்தம் தாங்கி, ஒய்யாரமாக நடந்துவரும் ஆண்டாளின் அழகைக் காணக் கண்கோடி வேண்டும். நெற்றியில் தீர்க்கமாய் ஒரு பெரிய நாமத்துடன், நெற்றிச்சுட்டி அணிந்து, கிணிகிணியென மங்கல மணியிசைக்க ஆண்டாள் மெல்ல மெல்ல ஆடியசைந்து நடந்துவரும் இந்தக் காட்சி பூலோக வைகுண்டமாகிய திருவரங்கத்தில் தினசரி அதிகாலையில் நிகழும் தெய்வீகக் காட்சி.

பட்டர் வெண்சாமரம் வீச, மத்தளம் முழங்க, நாதஸ்வரம் இசைக்க, பக்தர்கள் ஊர்வலாமாகப் பின்தொடர, மாடவீதிகளின் வழியாக கொள்ளிடத்தில் இருந்து வெள்ளிக்குடத்தில் அபிஷேகத்திற்காக தீர்த்தம் கொண்டுவருவாள் திருவரங்கனின் ஆஸ்தான யானை ஆண்டாள்.

அரங்கனைக் காண உலகாளும் அரசனே வந்தாலும், நம்பெருமாளின் விழிக்கமலம் மலர்வதோ பேரழகி ஆண்டாளையும், கோமாதா மஹாலக்ஷ்மியையும், பரியழகன் ஆடல்மாவளவனையும் காண்பதற்கே. காதுகளுக்கு இனிமையாய் வீணை இசை ஒலிக்க கனவு போல் நிகழும் அரங்கனின் திருப்பள்ளியெழுச்சி, வாழ்நாள் முழுவதற்கும் மனதில் செதுக்கி வைத்த சிற்பம்போல் நீங்காமல் நிறைந்துவிடுவது திண்ணமே.

இப்படியானதொரு திவ்யமான ஒரு காட்சியை தனது மனத்திலும், ஆன்மாவிலும் நிரப்பிக்கொண்டு மெய் மறந்து நின்றிருந்தான் பரத். அவனருகில் நின்றிருந்த ராதிகா தனது தெள்ளமுதத் தேன் குரலில் பாசுரம் பாடிக்கொண்டிருக்க, புதுத்திரி போட்டு, ஜகஜ்ஜோதியாய் வெளிச்சம் பரப்பிய விளக்குகளின் மத்தியில், விஸ்ராந்தியாய் பள்ளி கொண்டிருந்த பெருமாள், தன் முன் குழுமியிருந்த பக்தர்களுக்கு கடாக்ஷம் செய்தருளினார்.

அதன் பின் தொடர்ந்த நம்பெருமாளின் திருமஞ்சனமும், உதயகால தீபாராதனையும் அதைத் தொடர்ந்த பஞ்சாங்கப் படனமும், காணக்கிடைக்காத வைபோஹமாக நெஞ்சம் நிறைத்தது.

நம்பெருமாளின் அலங்காரத்திற்காகவும், நித்யப்படி கைங்கர்யங்களுக்காகவும் திரை போடப்பட, ரங்க நாச்சியாரை தரிசனம் செய்துவிட்டு வரலாமென்று புறப்பட்டனர் ராதிகாவும் பரத்தும். அரங்கனின் மனையாட்டி அவனுக்கு முன்பே தயாராகி வீற்றிருந்தாள். காதுகள் இரண்டிலும் ஏழுகல்பதித்த வைரத்தோடு, அதைத் தூக்கிப்பிடிக்கும் இரட்டை வட வைர மாட்டல்கள், மூக்கின் இருமருங்கிலும் மிளிர்ந்த வைரமூக்குத்திகள், அழகுக்கு அழகு சேர்க்கும் விதமாகத் தொங்கிய புல்லாக்கின் பிராகசத்தில், பச்சைப்பட்டுடுத்தி, வைரமணிக் கிரீடம் அணிந்து, திருமாங்கல்யம், பதக்கம், சங்கிலி, முத்துமாலை, பவளமாலை, நவரத்ன ஹாரம் தரித்து, அபயஹஸ்தம் அருளி, கருணையே உருவாக வீற்றிருந்தாள் ரங்கவல்லி நாச்சியார்.

பலமுறை திருவரங்கம் வந்து தரிசனம் செய்திருந்தாலும், இந்த அதிகாலை விஸ்வரூப தரிசனம் பரத்திற்கு ஒரு புதிய அனுபவமே. உச்சரிக்கும் ஒரு சிறிய வார்த்தையும் கூட அந்த தெய்வீகமான உணர்வைக் கலைத்துவிடும் என்று உணர்ந்ததாலோ என்னவோ, இருவரும் மௌனமாகவே பிரகாரத்தைச் சுற்றி வந்தனர். ராதிகாவிடம் முன்பெப்பொழுதும் கண்டிராத ஒரு அமைதி தென்பட்டது. ஏதோ ஒரு திருப்தியான அனுபவத்தைக் கண்டதுபோன்ற நிறைவான புன்னகை. அருகில் பரத் நடந்து வருவதையும் உணராமல் வேறேதோ ஒரு உலகில் சஞ்சரிப்பது போன்ற ஒரு சாயல் அவள் முகத்தில்.

அவளுடைய அந்த அமைதியைக் குலைக்க விரும்பாமல் பரத்தும் அவளுடன் அமைதியாகவே நடந்துவந்தான். விடிந்தும் விடியாத அந்தக் காலைப் பொழுதில், அரங்கபுரியின் அந்த விஸ்தாரமான பிரகாரத்தில், மெல்லிய தென்றல் தழுவிச்செல்ல, இருவருக்கும் இடையிலிருந்த வார்த்தைகளற்ற மௌனம் கூட சுகமாகவே இருந்தது.

அவர்கள் அரங்கனின் சந்நிதியை வந்தடைந்தபொழுது திரை விலக்கப்பட்டு அரங்கன் சர்வாலங்கார பூஷிதனாக பக்தர்களுக்கு அனுக்ரஹம் புரியத் தொடங்கியிருந்தார். ஆதிசேஷனை மெத்தையாக்கிக் கொண்டு, இடது கையை நன்கு இடுப்புக்குக் கீழே நீட்டியபடியும், வலது கையை தலைக்கு அணைவாக தலையணையாகவும் தாங்கி, சிவப்புக் கரையிட்ட வெண்பட்டு உடுத்தி, மார்பில் பொன்கவசம் தரித்து, சேஷ சயனப் பெருமானாகக் காட்சியளித்தார் ரங்கநாதசுவாமி. பரத்தையும் ராதிகாவையும் சன்னிதானத்தின் அருகில் நிற்கவைத்து, ரங்கநாதருக்கு சாத்தியிருந்த மாலையை அணியச்செய்து, சடாரி வைத்து ஆசீர்வாதம் செய்யப்பட்டது.

கோவிலை விட்டு வெளியில் வந்தவர்கள் பத்மா காபியில் சூடாய் ஸ்ட்ராங்காய் ஒரு காபியைக் குடித்துவிட்டு வீடு திரும்பினர். மரகதம் மாமி காலை உணவுடன் தயாராகக் காத்திருந்தார். காலை உணவை முடித்துக்கொண்டு அனைவரும் திருச்சிக்கு அருகிலுள்ள சுற்றுலாத்தலங்களுக்கு ஒரு குட்டி பிக்னிக் சென்றுவர முடிவு செய்து கிளம்பினார்கள். நாளும் உல்லாசமாகவே கழிந்தது.

இன்முகமாகப் பழகிய மாப்பிள்ளையாக, பரத், மரகதம் மற்றும் ஆடியபாதத்தின் மனத்தைக் கவர்ந்துவிட்டிருந்தான். பானுவும் சீனுவும் அத்திம்பேருக்கு ஒரு ஃபேன் க்ளப் திறக்கவே ஆயத்தமாகிவிட்டார்கள். இரவு வீடு திரும்பிய அனைவரையும் ஒரு மகிழ்ச்சியான சோர்வு ஆட்கொண்டிருந்தது.

அனைவரும் உறங்குவதற்கான ஆயத்தத்தை மேற்கொள்ளத் தொடங்க, “நாங்க நாளைக்கு ஊருக்குக் கிளம்பறோம், மாமா” என்றான் பரத். “என்ன மாப்பிள்ளை, நேத்திக்கு தானே வந்தேள், இன்னும் ரெண்டுநாள் எங்களோட இருந்துட்டு போலாமே?” என்றார் மரகதம். “இல்லை மாமி, கல்யாண கலாட்டால, நான் ஆபீசுக்கு போயி பதினைஞ்சு நாளுக்கு மேல ஆயிடுத்து, நாளைக்கி கிளம்பி போனாதான், திங்கக்கிழமைல இருந்து நான் ஆபீசுக்குப் போக சரியா இருக்கும், அப்பறம் தோதுப்படரச்சே இன்னொரு தரம் நாங்க வரோம்,” என்று பரத் கூற, “நீயாவது சொல்லேன் ராதும்மா” என்று ராதிகாவை ஏக்கத்துடன் பார்த்தார் மரகதம். “இல்லைம்மா, அவர் சொல்றது சரிதான். ஏகப்பட்ட வேலை அவருக்கு, நாங்க இன்னொரு வாட்டி இன்னும் கொஞ்சநாள் அதிகமாவே இருக்கறா மாதிரி வரோம்,” என்றாள் ராதிகா பரத்தை வழிமொழிந்து.

“சரி ஆகட்டும் மரகதம், மாப்பிள்ளை அவரோட வேலைகளுக்கு மத்தியில நம்மளோட வந்து ரெண்டுநாள் இருந்ததே ரொம்ப சந்தோஷமான விஷயம்தான். நீ மேல மேல அவரை சங்கடப் படுத்தாதே,” என்று மனைவியை சமாதானம் செய்தவர், “நாளைக்கு மத்தியானம் சாப்பிட்டுட்டு கிளம்பலாமே மாப்பிள்ளை, உங்களோட இன்னும் கொஞ்ச நாழி அதிகமா செலவு பண்ணின திருப்தி எங்களுக்கும் இருக்குமே?” என்றார் ஆடியபாதம்.

“உங்களுக்கு எதுக்கு மாமா, வீண் சிரமம்...”என்று ஏதோ சொல்லத் தொடங்கியவன் ராதிகாவின் முகத்தைப் பார்க்க, அவள் முகத்தில் தோன்றிய ஏதோ ஒன்று அவனை, “சரி மாமா, உங்களோட திருப்திக்காக நாங்க நாளைக்கு மதியானம் சாப்பிட்டுட்டே கிளம்பறோம்,” என்று முடித்துக்கொண்டான்.
மீண்டும் மாடியறை, மீண்டும் அவளுடனான தனிமை. இந்தத் தனிமையை நான் விரும்புகிறேனா, தன்னிடம் தானே கேள்வி எழுப்பிக்கொண்டான் பரத். கேள்விக்கான பதில் தனக்குப் பிடித்தமானதாக இருக்காது என்பதாலோ அல்லது அதை எதிர்கொள்ளும் துணிவு இல்லாததாலோ, அதற்கு பதிலளிக்க முயலவில்லை அவன். அவள் அருகில் இருப்பதாலோ என்னவோ, சூழல் ரம்யமாக இருப்பதாகத் தோன்றியது அவனுக்கு. லேப்டாப்பில் ஏதோ வேலை செய்துகொண்டிருந்தவன், அப்படியே சுவற்றில் தலை சாய்த்து கண் மூடி அமர்ந்துகொண்டான். தனக்குத்தானே ஏதோ பாடலை முணுமுணுத்தபடி மதில் சுவற்றின் மீது சாய்ந்தபடி ராஜகோபுரத்தைப் பார்த்துக்கொண்டு நின்றிருந்தாள் ராதிகா.

“நான் நாளைக்கு கார்த்தலாயும் அப்பாவோட கோவிலுக்குப் போயிட்டு வரட்டுமா?” கோபுரத்தை வேடிக்கை பார்ப்பதை விடுத்து அவனுடைய முகத்தைப் பார்த்துக்கொண்டிருந்தாள் இப்போது.

“இதுல கேக்கறதுக்கு என்ன இருக்கு, தாராளமா போயிட்டு வா...” என்றவனிடம், “நீங்களும் வரேளா?” என்றாள். “இல்லை பரவால்ல, நீ போயிட்டு வா,” என்றவன், “எல்லாத்துக்கும் என்கிட்டக்க பர்மிஷன் கேட்டுண்டு இருக்க வேண்டாம், இன்பர்மேஷன் குடுத்தா போறும், நீ என்ன அடிமை சாசனமா எழுதிக் குடுத்துருக்க,கல்யாணம் தானே பண்ணிண்டு இருக்க...” என்றான்.

அவனையே ஆச்சரியமாக விழிவிரித்துப் பார்த்துக்கொண்டிருந்தாள் ராதிகா. “என்ன அப்படி பார்க்கறே?”

“இல்லை, நீங்க இப்பிடி சொல்றது ஆச்சரியமா இருக்கு, எங்க அம்மால்லாம் அப்பாகிட்ட கேட்காம எங்கேயுமே போனதே கிடையாது, தெரியுமா? அப்பாக்கிட்ட கேட்டு அப்பா சரின்னு சொன்னாதான் அம்மா எங்கயுமே போவா” என்றாள் ராதிகா.

“நீ சரியா கவனிச்சிருக்க மாட்டே, அம்மா கேக்கறாளா சொல்றாளான்னு, எனிவேஸ், நீ…சொல்லிண்டு போனா போறும், கேட்டுண்டு போகவேண்டிய அவசியமில்லை,” என்று கூறிவிட்டு மீண்டும் வேலையில் ஆழ்ந்தான்.

ராதிகாவும் மறுபடியும் கோபுரத்தைப் பார்த்தபடி, காலால் தாளம் தட்டிக்கொண்டு ஏதோவொரு பாடலை முணுமுணுக்கத் தொடங்கினாள். பரத் தனது வேலையை முடிக்கும்வரை அவனுக்குத் துணையாக ராதிகாவும் அவனுடன் இருந்தாள். வார்த்தைகள் தேவையில்லாத இயல்பான மௌனம், உறுத்தலாகத் தோன்றாத அருகாமை. இரவு இனிமையாகத்தான் இருந்தது இருவருக்கும்.
 
Last edited:
Messages
620
Likes
2,717
Points
133
Location
Bangalore
#3
மறுநாளும் மனம் போல் அரங்கனை அதிகாலையிலேயே தரிசித்துவிட்டு ராதிகா வீடு திரும்பிய போது பரத் ஊருக்குக் கிளம்புவதற்கான ஆயத்தங்களில் ஈடுபட்டிருந்தான். பெட்டியில் உடைகளை அடுக்கிகொண்டிருந்தவன் முன் மூச்சு வாங்க வந்து நின்றவள், “சாரி கொஞ்சம் நாழியாயித்து, நீங்க காபி சாப்பிட்டேளா, கொண்டு வரவா?” என்றாள் பதைப்புடன். “ஏன் இவ்ளோ பதட்டப்படறே, காபில்லாம் சாப்டாச்சு, நீ காபி சாப்டியா?” என்றான் அவளை ஆசுவாசப்படுத்தும் விதமாக.

“இல்லை, இனிதான் சாப்பிடணும், அதுக்குள்ள ஊருக்குப் போக பேக் பண்ணிட்டேளா?” கேட்டவளின் குரலில் லேசான ஏக்கம் தெரிந்ததோ. ராதிகாவின் முகத்தை ஏறிட்டான் பரத் “கஷ்டமா இருக்கா, நீ வேண்ணா ரெண்டு நாள் இருந்துட்டு வரியா?” என்றான்.

“இல்லை, அதெல்லாம் ஒன்னும் வேண்டாம், எத்தனை மணிக்கு கிளம்பனும்னு சொல்லுங்கோ அதுக்குள்ள நானும் ரெடியாயிடறேன்” என்றாள் ராதிகா. “ஒன்னும் அவசரமில்லை, ரெண்டு மணி வாக்குல கிளம்பலாம், இல்லைன்னா ராகுகாலம் அது இதுன்னு...” என்று சிரித்தபடி கூற, “அதுவும் சரிதான்,” என்றபடி அறையை விட்டு வெளியேறி மாடியில் அவள் வழக்கமாக நிற்குமிடத்தில் சென்று நின்றுகொண்டாள்.

அங்கிருந்து ரங்கனின் ராஜகோபுரம் நன்றாகத் தெரியும். மறுபடியும் எப்போது வருவேனோ, எப்போது உன்னைக் காண்பேனோ என்ற எண்ணத்துடன், அந்தக் காட்சியை மனனம் செய்து கொண்டுவிடும் ஆவலில் கோபுரத்தையே பார்த்தபடி நின்றுகொண்டாள் ராதிகா.

“ஏதேது, உங்க அம்மா அப்பாவை மிஸ் பண்றதை விட அதிகமா இந்த கோபுரத்தை மிஸ் பண்ணுவே போலருக்கே?” என்றபடி அவளருகில் வந்து நின்றுகொண்டான் பரத்.

“நிஜம்தான், நேக்கு விவரம் தெரிஞ்ச நாள்லருந்து, ஆடாம, அசையாம, ஸ்திரமா நேக்கு துணையா நிக்கறது இந்த ரங்கா ரங்கா கோபுரம்தான். எத்தனை குழப்பம், கஷ்டம், துக்கம், இருந்தாலும், இந்த கோபுரத்தைப் பார்த்தா போறும், அலைபாஞ்சுண்டு இருக்கற மனசு அமைதியா ஆயிடும். அந்த கோபுரத்துக்குக் கீழ்தான் என் ரங்கன் இருக்கான், அவனை மீறி எந்த கெடுதலும் நடந்துடாதுன்னு ஒரு நம்பிக்கை வந்துடும்,”

“ஹ்ம்ம்...என் ரங்கன்...ஏக போக உரிமை போலருக்கே, உன் ரங்கன் மேல”

“இல்லையா பின்ன...ஒரு ஸ்டேஜ்ல ரங்கனைத்தான் கல்யாணம் பண்ணிக்கனும்னே முடிவு பண்ணிருந்தேன்னா பார்த்துக்கோங்கோளேன்...” என்றவுடன் சிரிப்பு வந்துவிட்டது பரத்துக்கு, ஆனாலும் சிரிப்பை அடக்கிக்கொண்டு, “அப்பறம் என்ன ஆச்சு, உன்னோட ப்ரபோசலை உன்னோட ரங்கன் ஏத்துக்கலையா?” என்றான் கிண்டலாக.

“ம்ஹும், என்ன பண்ண, என்னோட ஜன்மா கணக்கு எழுதறச்சே சித்ரகுப்தன்தான் என் தலை மேல ஒரு ஆஸ்ட்ரிக்சையும், பேஜ் கார்னர்ல ‘கண்டிஷன்ஸ் அப்ளை’ன்னும் எழுதி வெச்சுட்டாரே, ரங்கன்தான் என்னோட கண்டிஷன்சுக்கு ஒத்து வரலை, அதனால ப்ரபோசல் ட்ராப் ஆயிடுத்து?”

“அப்படி என்னம்மா கண்டிஷன் போட்டே நீ, அதுவும் ரங்கனுக்கே,” என்றவனை முறைத்தாள் ராதிகா, அதையும் மீறி சிரிப்பு வந்துவிட்டது அவளுக்கு. “போறும் போறும் கஷ்டப்பட்டெல்லாம் சிரிப்பை அடக்கவேண்டாம், சிரிச்சுக்கொங்கோ, நான் ஒன்னும் கோச்சுக்கமாட்டேன்” என்றவளிடம் “பேச்சை மாத்தாதே, என்ன கண்டிஷன் போட்டேன்னு சொல்லு,” என்றான் பரத்.

“பெரிசா ஒன்னும் இல்ல, எனக்கு கொஞ்சம் பொசசிவ்னெஸ் ஜாஸ்தி. ஆனா பாருங்கோ, ரங்கனுக்கு ஸ்ரீரங்கத்துலேயே ரங்கநாச்சியார், துலுக்க நாச்சியார், பூதேவி, ஸ்ரீதேவி, ஆண்டாள், சேரகுலவள்ளி, மகாலக்ஷ்மின்னு ஏழு நாச்சியார், அதோட திருப்பதில, பத்மாவதி, அலமேலு மங்கை தாயார், த்ரேதாயுகத்துல, ராதா, மீரா, ருக்மணி சத்யபாமா, இன்னும் கூடவே பதினெட்டாயிரம் பொண்டாட்டிகள்,” மூச்சுக்கட்டிக்கொண்டு சொன்னவள், “சொல்றதுக்கே, இத்தனை மூச்சு முட்டறதே, இத்தனை சூப்பர் சீனியர்சுக்கு நடுவுல போய் நின்னுண்டு ரங்கன் எனக்கு மட்டும்தான்னு சண்டை போடமுடியுமா? அவாள்லாம் என்னை சும்மாதான் விட்டுடுவாளா? அதோட நேக்கு ஷேர் பண்ணிக்கற பழக்கமும் கிடையாது, என்னோடதுன்னா அது எனக்கு மட்டும்தான், அதனாலதான் அந்த ப்ரபோசலே ட்ராப் ஆயிடுத்து,” என்றாள் ஒரே மூச்சில்.

அப்படியா என்பதுபோல் புருவம் உயர்த்தியவன், “அப்போ, நீ ரங்கனையே ரிஜெக்ட் பண்ணிட்டேன்னு சொல்லு?” என்றான். “அபசாரம், அபசாரம், ரங்கனைப் போல ஒரு பேரழகனைப் போய் யாராவது வேண்டாம்னு சொல்வாளா, இந்த லோகத்துலே ரங்கனைப் போல ஒரு அழகனை எங்கேயுமே பாக்க முடியாது தெரியுமா. ரங்கனோட மூக்கைப் பாத்திருக்கேளா, அத்தனை அழகு அந்த மூக்கு, தீர்க்கமா, கூர்மையா, நாள் முழுக்க பாத்துண்டே இருக்கலாம், ரங்கனோட கொழு கொழு கன்னம், தலைமாட்டுல வெச்சுண்டு இருக்கற அந்தக் கை, அந்தக் கைமேல தலை வெச்சுண்டு தூங்கினா, எவ்வளவு நன்னா இருக்கும்னு எவ்வளவு நாள் நெனைச்சிருக்கேன் தெரியுமா? அந்த உதட்டுல தவழற மந்தஹாசமான புன்னகை, “கண்ணன் முகம் கண்ட கண்கள் மன்னர் முகம் காண்பதில்லை, கண்ணனுக்குத் தந்த உள்ளம், இன்னொருவர் கொள்வதில்லை”...” என்று பாடினாள் ராதிகா.

“பாட்டி சின்ன வயசுல பாவை நோன்பு இருக்கச் சொல்வா, கண்ணுக்கு மை தீட்டிக்ககூடாது, தலைக்கு எண்ணை தடவக்கூடாது, சீப்பால தலை வாரக்கூடாது, பூ வெச்சுக்கக் கூடாது, பாலையோ, பால்லேருந்து கிடைச்ச எதையுமே சாப்பிடக்கூடாதுன்னு சொல்வா, அப்போதான் ஆண்டாளுக்கு ரங்கன் கிடைச்சா மாதிரி நோக்கும் நல்ல ஆம்படையான் கிடைப்பான்னு சொல்வா பாட்டி. அதென்ன ரங்கன் மாதிரி ஆம்படையான், எனக்கும் ரங்கன்தான் வேணும்னு அடம் பிடிப்பேன், பாட்டி என்னைப் பாத்து, போடி அசத்தேன்னு கிண்டல் பண்ணி சிரிப்பா. ரொம்ப நாளைக்கு அதே பிடிவாதம்தான் பிடிச்சுண்டு இருந்தேன், அப்பறம்தான் புரிஞ்சுது, கலியுகத்துல ஆண்டாள் மாதிரி பக்தி பண்ணவும் முடியாது, நெனைச்ச மாத்திரத்துல ரங்கன் அப்படி கெடைச்சுடவும் மாட்டான்னு.” சிரிப்பை மறந்து சிந்தனைக்கே எட்டாத விஷயங்களைக் கூறிக்கொண்டிருந்தவளை வியப்பாகப் பார்த்துக்கொண்டிருந்தான் பரத்.

“ஆனா, நான் இத்தனை வருஷமா பண்ணின பாவை நோம்புக்கும், நான் போட்ட கண்டிஷனுக்கும் மத்தில ரங்கன் ஏகத்துக்கும் குழம்பிப் போய், என்னோட லைப்ல என்ன ட்விஸ்ட் குடுத்தான் தெரியுமா?” என்று ராதிகா புதிர் போட,

என்ன என்பதுபோல் புருவம் உயர்த்தியவனின் முகம் பார்த்துச் சிரித்தவள், “ரங்கனுக்கே கண்டிஷன் போடறியா நீ, இந்தா பிடி ருத்ரனை அப்படின்னுட்டு, ருத்ரனுக்கு கல்யாணம் பண்ணி வெச்சுட்டார், இப்போ மோகினி அவதாரம்தான் எடுக்கணும் போலருக்கு நான்...” என்றாள் அவனைக் கைகாட்டி.

“எது? இந்த மகாவிஷ்ணு பொம்மனாட்டியா வேஷம் போட்டாரே, அந்த மோகினி அவதாரத்தையா சொல்றே?” என்றான் நக்கலாக.

“அரிதாரம் பூசி வேஷம் போடறதுக்கும், அவதாரம் எடுக்கறதுக்கும் கூடவா உங்களுக்கு வித்தியாசம் தெரியாது, ஆம்பளையா இருக்கறச்சே பேரழகனா இருக்கற ரங்கன், பொம்மனாட்டியா அவதாரம் எடுத்தா, இன்னும் எத்தனை அழகாய் இருந்துருப்பான்னு உங்களால யோசிச்சு கூட பார்க்க முடியாது தெரியுமா?” சண்டைக்குப் போனாள் அவனிடம்.

“அழகிய நாச்சியார் திருக்கோலம் எப்படி இருக்கும்னு தெரியுமா உங்களுக்கு? ராக்குடி, ஜடநாகம், புஷ்பத்தண்டை, குஞ்சலம் வெச்சு, தலைநெறைய்ய வாசனையான பூக்களை வெச்சு பின்னின நதியாட்டம் அலைபாயற கூந்தல், சந்திர பிரபை, சூரிய பிரபை, நெத்தியில நெத்திச்சுட்டி பூட்டிண்டு, கஸ்தூரி, திருமண் காப்பு தரிச்சுண்டு, காதுல வைரக்கல் பதிச்ச ஜிமிக்கி ஆட, மூக்குல எட்டுக்கல் பேசரி போட்டுண்டு, மோகினியோட திருமுக மண்டலமே பாக்க மனசை மயக்குமாம்...”
 
Messages
620
Likes
2,717
Points
133
Location
Bangalore
#4
“பனியில நனைஞ்ச ரோஜா மொட்டு மாதிரி உதடு, அது மேல வெச்ச திருஷ்டி பொட்டு, கழுத்துல பெரிய ஒத்தை மரகதக்கல் பதிச்ச பதக்கம் இருக்கற வைர அட்டிகை போட்டுண்டு, நீலப்பட்டுடுத்தி, பிடியிடைக்கு நவரத்தின ஒட்டியாணம் போட்டுண்டு, பிறந்த குழந்தையோட பாதம் மாதிரி இருக்கற மென்மையான கால்ல, நலங்கு வெச்சுண்டு, தங்கக் கொலுசு, தண்டை போட்டுண்டு, தாமரை பூ பூத்தா மாதிரி இருக்கற கைகள்ல கல்பதிச்ச வளையல், கங்கணம், வங்கி, திருஷ்டி தாயத்து எல்லாம் பூட்டிண்டு ஓய்யாரநடை நடந்து வருவாளாம் மோகினி.” பின்னலை முன்னால் போட்டுக்கொண்டு, கண்கள் விரிய முன்னும் பின்னும் நடந்தபடி, கைகளை ஆட்டி ஆட்டி அழகிய நாச்சியார் திருக்கோலத்தை விவரித்தவளை வைத்தகண் வாங்காமல் பார்த்துக்கொண்டிருந்தான் பரத்.

கோவிலுக்குச் செல்வதற்காக மடிசார் கட்டியிருந்தாள். தலையில் ராக்குடி வைத்துப் பின்னி, செண்டாக மல்லிகைப் பூவை ஜடையைச் சுற்றி வைத்திருந்தாள். மூக்கில் வைரமூக்குத்தி மின்ன, காதுகளில் போட்டிருந்த குட்டி ஜிமிக்கி அவளுடைய தலையாட்டலுக்கேற்றபடி கன்னங்களில் சரசமாட, மடிசாரிலிருந்து எட்டிப்பார்த்த வாழைத்தண்டுக் கால்களில் வெள்ளிக்கொலுசு மின்ன, தேனில் தோய்த்தது போன்ற ஆரஞ்சுச் சுளை இதழ்களைச் சுழித்துப் பேசிக்கொண்டிருந்தவளை விழிகளால் அளந்தவனின் மனம், “இவள் கூட மோகினிதான்...மடிசார் கட்டின மோகினி...” என்று அவள்பால் மயங்கிச் சரியப் பார்த்தது...

அவனுடைய மயக்கம் தோய்ந்த விழிகளைப் பொருட்படுத்தாமல், பேசிக்கொண்டே இருந்தவளை, கைகாட்டித் தடுத்து நிறுத்தியவன், “ஒத்துக்கறேம்மா, ஒத்துக்கறேன், மோகினி பேரழகிதான், ருத்ரனையே மயக்கப் பார்த்தவளாச்சே, நிச்சயமா பேரழகிதான்...தொண்டைத்தண்ணி வத்திடுத்து பாரு, போய் ஒருவாய் காபி சாப்பிடு” என்றான்.

“ம்ம், சரி சரி போறேன், நீங்களும் வாங்கோ, அப்பா உங்களோட ஏதோ பேசணும்னார்,” என்றபடி திரும்பி நடக்க, இவளும் நடப்பதும் ஒய்யார நடைதானோ, என்ற சந்தேகம் வந்தது பரத்துக்கு.

நடந்து சென்றவளின் அழகில் கட்டுண்டு பார்வையை விலக்கமுடியாமல் தடுமாறியவன், அந்தக் காட்சியையே கண்முன்னிருந்து மறைத்துவிடும் நோக்கத்தோடு கண்களை மூடிக்கொண்டான், மூடிய கண்களுக்குள்ளும் மோகினியாய் அவளுருவமே வந்து நின்றதோ, மூடிய மாத்திரத்தில் கண்களைத் திறந்துவிட்டான் ராதிகாவின் ருத்ரன். அவள் சென்றபின்னும் சில நொடிகள் அப்படியே நின்றிருந்தவன், மெதுவாகத் தன்னைச் சுதாரித்துக்கொண்டு மாமனாரைச் சந்திப்பதற்காகச் சென்றான்.

ஹாலில் அனைவரும் குழுமியிருக்க, கையில் இரண்டு கவர்களோடு ஆடியபாதம் பரத்துக்காக காத்திருந்தார். கண்களில் கேள்வியோடு அவர் முன் பரத் அமர, “அது வந்து மாப்பிள்ளை, கல்யாணத்துக்கு முன்னால பிஎச்டி பண்ணனும்னு ராதிகா அப்ளை பண்ணிருந்தா, இப்போ அதுக்கு அப்ரூவல் வந்துருக்கு, கைடு கூட சென்னைலதான் இருக்கா, அதுதான் உங்ககிட்டக்க சொல்லலாம்னு,” என்று அவர் தயங்கியபடியே கூறினார்.

“நீங்க உங்க அப்பா அம்மாகிட்டக்க, கலந்து பேசிண்டு ராதிகா ரிசர்ச் பண்ணலாமா வேண்டாமான்னு முடிவு பண்ணுங்கோ. உங்களோட முடிவுதான். எதுவானாலும் ஓகேதான்,” என்றார் ஆடியபாதம்.

“இதுல கலந்து பேசி முடிவெடுக்க என்னன்னா இருக்கு, ஏதோ கல்யாணத்துக்கு வரன் பாத்துண்டு இருக்கறச்சே அப்ளை பண்ணினா, இப்போ கல்யாணம் ஆனாவுட்டு இன்னும் என்ன ரிசர்ச்,படிப்புன்னுட்டு, போறும் போறும் பொறுப்பா குடும்பம் பண்ணினா போறும், படிக்கப்போனா குடும்பத்தை எப்படி நடத்தறது, படிப்பையெல்லாம் தூக்கி மூட்டை கட்டி வைக்கச் சொல்லுங்கோ மாப்பிள்ளை,” என்றார் மரகதம்.

“என்ன மாமி, இப்படி சொல்றேள், ஏதோ பிஏ, எம்ஏன்னா, ஏதோ கட்டாயத்துக்காக, வேலை கிடைக்கணும்கறதுக்காக படிக்கறான்னு சொல்லலாம், ஆனா உங்க பொண்ணு, பிஎச்டி பண்ணனும்னு அப்ளை பண்ணிருக்கான்னா, படிப்பு மேல எவ்வளவு ஆர்வம் இருக்கணும் அவளுக்கு, அதனால அவ படிக்கணும்னு விரும்பினா அவளை எங்காத்துல யாரும் தடுக்க மாட்டா, அவ எதுக்காக குடும்பமா படிப்பான்னு ஏதாவது ஒண்ணை சூஸ் பண்ணனும், குடும்பத்துல இருந்துண்டே அவளால தாராளமா படிக்கவும் முடியும். அதோட, பிஎச்டிக்கு அப்ளை பண்ணினது அவ...படிக்கலாமா வேண்டாமான்னு முடிவும் அவதான் எடுக்கணும். அவளோட முடிவு எதுவா இருந்தாலும் எங்க எல்லாரோட சப்போர்ட்டும் அவளுக்கு எப்போவும் இருக்கும்,” என்றபடி ஆஃபர் லெட்டர் வந்திருந்த கவரை ராதிகாவிடமே கொடுத்தான் பரத்.

அதற்கு பிறகு வாயைத் திறப்பாரா மரகதம், வாயை இறுக்கமாக மூடிக்கொண்டார். “ரொம்ப சந்தோசாம் மாப்பிள்ளை. அப்பறம், இது...” என்றபடி கையிலிருந்த இன்னொரு கவரை மாப்பிள்ளையிடம் கொடுத்தார். “என்ன. இன்னொரு பிஎச்டியா?” என்றபடி கவரைப் பிரித்துப் பார்த்தவன் அதிர்ந்து, “என்ன மாமா இது, எதுக்கு இதெல்லாம்,” என்று தர்மசங்கடமாக ராதிகாவைப் பார்த்தான். அவளும் என்ன என்பதுபோல் அவனைப் பார்க்க, கையிலருந்த கவரை அவளிடம் நீட்டினான். அதில் சில லட்சங்களுக்கான ஒரு செக் இருக்க, “என்னப்பா இது, எதுக்கு இவ்வளவு பணம்?” என்று கேட்டபடி பரத்தின் அருகில் வந்து நின்றுகொண்டாள். “அது ஒன்னும் இல்லை மாப்பிள்ளை, ராதிகா கல்யாணத்துக்காக சேர்த்து வெச்ச பணம் இது. கல்யாணத்துல பெருசா ஒரு செலவும் இருக்கல்லியே, அதனாலதான் அதுல மிஞ்சினதை அப்படியே உங்க ரெண்டுபேர் பேரலையும் செக்கா எழுதிட்டேன்,” என்றார்.

“ராதிகா கல்யாணத்துல செலவாகலைன்னா என்ன, சேர்த்து வெச்சு பானு கல்யாணத்துல செலவு பண்ணுங்கோ, சீனு படிப்புக்கு செலவு பண்ணுங்கோ, அதை விட்டுட்டு, கல்யாணத்துல செலவாகலை, அதனால உங்களுக்குத்தான்னு சொல்றது...நேக்கு எப்படி எடுத்துக்கறதுன்னு தெரியலை மாமா,” என்றான் பரத்.

“இல்லை, மாப்பிள்ளை, மூணு பேருக்கும் சமமாதான் சேமிச்சு வெச்சுருக்கேன், இது ராதிகாவோட பங்கு, நியாயப்படி அவளுக்குத்தானே சேரனும்...” என்று ஆடியபாதம் விடாப்பிடியாகக் கூறினார்.

ராதிகாவை தந்தை கூறியதற்கு பதில் எதுவுமே பேசாமல் பரத்தின் முகத்தைப் பார்த்தபடி நின்றிருக்க, “என்ன நீ, சும்மாவே வேடிக்கை பார்த்துண்டு இருக்கே, எடுத்து சொல்லமாட்டியா, லட்சக்கணக்குல செக்கை கொண்டுவந்து நீட்டறார் உங்கப்பா, நீ என்னோட முகத்தையே பாத்துண்டு இருக்கே?” என்றான் கோபமாக.

“இதுல நான் சொல்ல என்ன இருக்கு, நீங்க என்ன சொல்றேளோ அதுதான், உங்க முடிவுதான் என் முடிவும்,” என்றாள் ராதிகா.

“அப்போ சரி”, என்றவன், செக்கை மரகதத்தின் கையில் வைத்தவன், “இது உங்களுக்கு உங்க பொண்ணோட பரிசு, பானு கல்யாணத்துக்கோ, சீனுவோட படிப்புக்கோ இல்லை. உங்களோட ரிடையர்மெண்டுக்கு. பிக்சட் டெபாசிட்ல போட்டு வெச்சுக்கோங்கோ,” என்று அவர்களுடைய பணத்தை அவர்களிடமே ஒப்படைத்துவிட்டான். “இல்லை மாப்பிள்ளை, எதுக்கும் உங்க அம்மா அப்பாகிட்டக்க ஒரு வார்த்தை கேட்டுண்டு...” என்று ஆடியபாதம் தயக்கமாய் இழுக்க...

“அம்மா அப்பாவும் இதையேதான் சொல்வா மாமா, அதோட நான் கட்டிண்டவளை நல்லபடியா, கஷ்டமில்லாம பாத்துக்கற வசதியும் நேக்கிருக்கு, அப்படி இல்லைன்னாலும் அதுக்காக உழைக்கிற தெம்பும் எனக்கிருக்கு, அதனால ப்ளீஸ் இது வேண்டாமே...” என்றவனை விழி கொட்டாமல் பார்த்துக்கொண்டிருந்தாள் அவனுடைய மடிசார் கட்டிய மோகினி.

இன்று அவளுடைய பார்வையில், அவளுக்குப் பிரியமான அந்த ராஜகோபுரத்தைவிட அவன் உயர்ந்து நின்றான் என்பதை அவன் அறிவானோ...

சிறுபிராயம் முதல் ரங்கன் மீது மையல் கொண்டு பாவை நோன்பிருந்த பாவையின் மனதில் அரங்கனை விட உயர்ந்துநிற்கும் ருத்ரனின் மீது ஏற்பட்ட மயக்கத்தைதான் அவன் உணர்வானோ???
 
Advertisement

Latest Episodes

Advertisements

Top