• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Kadhal Kadan - 3

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Shivapriya Murali

இணை அமைச்சர்
Author
Joined
Jan 21, 2018
Messages
621
Reaction score
2,738
Location
Bangalore
metti.JPG
காதல் கடன்

(3)

கல்யாண வேலைகள் வெகு ஜோராக நடக்கத் தொடங்கிவிட்டன, சிம்பிள் கல்யாணம் அதுவும் கோவிலில் என்பதில்தான் மரகதத்திற்கு கொஞ்சம் சுணக்கம், “நம்மாத்துல மொதல் கல்யாணம், டாம்பீகமா ஆயிரம் பேரை அழைச்சு ஆனையில அம்பாரி ஏத்தி பண்ணலைன்னாலும், இப்படி ஒரேடியா கோவில்ல கல்யாணம் ஹோட்டல்ல சாப்பாடுன்னு நடக்க வேண்டாமே”, என்று அங்கலாய்த்துக்கொண்டார்.

இதற்கு பதிலளிக்க ஆடியபாதம் வாயைத் திறக்கும் முன், ராதிகாவே, “அம்மா, நேக்குமே சிம்பிளாத்தான் கல்யாணம் பண்ணிக்கணும்னுதான் தோண்றது, ஊரையே அழைச்சு எல்லார்கிட்டயும் எம் பொண்ணுக்கும் கடைசில கல்யாணம் ஆயிடுத்துன்னு தம்பட்டம் அடிச்சுக்கணுமா, முக்கியமா ஒரு அம்பது அறுபது பேரைக் கூப்பிடுங்கோ, அமைதியா கல்யாணத்தை முடிக்கலாம்,” என்று ஆணித்தரமாகக் கூறிவிட்டாள். அதற்குப் பிறகு மரகதம் இதைப் பற்றி வாயைத் திறக்கவே இல்லை.

பேரென்னவோ சிம்பிள் கல்யாணம்தான், ஆனால் ஏற்பாடுகளில் எந்தக் குறையும் இல்லை. ஒரு நல்ல நாள் பார்த்து முகூர்த்தப் புடவை வாங்க இரு குடும்பமும் கிளம்பி காஞ்சிவரம் சென்று வந்தார்கள். பரத் மட்டும் வெளியூரில் இருந்ததால் வரமுடியாமல் போனது.

“அவா எதிர்பாக்கலைன்னாலும் நாம செய்யவேண்டியதை செய்யவேண்டாமா?” என்று மகளுக்குத் தேவையான நகைகள், உடைகள், வெள்ளிப்பாத்திரங்கள், சீர்வரிசை என்று மரகதம் எதையும் விட்டுவைக்கவில்லை. மாப்பிள்ளைக்கும் பார்த்து பார்த்து ஆடைகள், நகைகள் என்று வாங்கி வைத்தார்.

திருவையாறில் மாப்பிள்ளை வீட்டாருடைய குலதெய்வம் கோவிலின் அருகிலேயே நான்கைந்து வீடுகள் வாடைகைக்கு எடுத்து தங்குவதற்கான ஏற்பாடும் செய்யப்பட்டிருந்தது. விருந்துபசாரமும் பிரமாதமாகவே அமைந்திருந்தது.

மத்தளம் கொட்ட வரிசங்கம் நின்றூத திருமண நாளும் கோலாகலமாய் வந்துவிட்டது.

தலைக்கு மேல் கத்தி தொங்கும் உணர்வுடனே ராதிகா எல்லா கல்யாணச் சடங்குகளையும் செய்து கொண்டிருந்தாள், எப்பொழுதும் பின்னால் திரும்பிப் பார்க்கவேண்டும் என்பது போன்ற ஒரு உணர்வு உறுத்திக்கொண்டே இருந்தது. முன்தினம் விரதம், மாப்பிள்ளை அழைப்பு, நிச்சயதார்த்தம் என்று எதிலுமே மனம் பொருந்தவில்லை.

காசியாத்திரை முடிந்து மாப்பிள்ளையை எதிர்கொண்டு அழைக்க காத்திருந்தபோதுதான் அவளுக்கு உரைக்கவே உரைத்தது,

“எவ்வளவு பெரிய தப்பு செஞ்சுட்டேன், இத்தனை நாள் வரைக்கும் என்னோட பிரச்சினையால என் அம்மா அப்பா, தம்பி தங்கைக்கு மட்டும்தான் அவமானம் ஆகியிருக்கும், ஆனா இப்போ, எதுவுமே அறியாத, ஒரு சம்பந்தமுமே இல்லாத இவா எல்லாரையும் கூட அது பாதிக்குமே, என்னால இவாளும் எல்லார்கிட்டயும் ஏச்சும் பேச்சும் கேட்கவேண்டி வருமே, என்னை இவாளோட மருமகளா ஆக்கிண்டதுக்கு இனி இவாளும் கஷ்டப்படப் போறாளே, இதுக்கு பதில் நான் உயிரை விட்டுருந்தா, கொஞ்ச நாள் அழுதுட்டு எல்லாரும் அவாவா வேலையைப் பார்த்துண்டு போயிருப்பா, இப்போ என்ன பண்றது?” என்று யோசித்துக் கொண்டிருந்தவளை,

“உன் வலது கையை இப்படி வைம்மா,” என்று ஐந்து விரல்களையும் குவித்துக் காட்டியபடி கூறிய சாஸ்த்திரிகளின் குரல் நிகழ்காலத்திற்குக் கொண்டுவந்தது. சில்லிட்டு நடுங்கிக்கொண்டிருந்த உடலை கஷ்டப்பட்டுக் கட்டுக்குள் கொண்டுவந்து மருதாணியால் சிவந்திருந்த விரல்களை தாமரை மொட்டாய் குவித்து நீட்ட, “நீங்க எல்லா விரலையும் சேர்த்தாப்போல பிடிச்சுக்கோங்கோ மாப்பிள்ளை,” என்று பரத்திற்கும் கட்டளையிட்டார். அவளுடைய உடலின் நடுக்கம் கைகளில் தெரிந்ததோ என்னவோ அவன் பிடி லேசாக அவளுடைய கையை அழுத்தி இளகியது.

நடுக்கத்தை விலக்கி ஒரு பாதுகாப்பான உணர்வைக் கொடுத்த அந்த அழுத்தம், தன்னுடைய கையைப் பிடித்திருந்தவனை டக்கென்று திரும்பிப்பார்க்க வைத்தது. அவனோ அந்த உணர்வைப் பொய்யாக்கி விடுவதைப்போல அருகில் அவள் இருந்ததைக் கூட கண்டுகொள்ளாதவனாய் நின்றிருந்தான்.

“இவனா… இவனா என்னைப் பாதுகாக்கப் போகிறான், ஒரு கூட்டத்தில் நான் தொலைந்து போனால் கூட என்னை இவனுக்கு அடையாளம் தெரிவது சந்தேகம்தான், என் முகத்தையும் ஏறெடுத்துப் பார்க்காத, யாரென்றே தெரியாத இவனா எனக்கு பாதுகாப்பு வளையமாய் இருக்கப்போகிறான்?” என்று மனம் அலைபாய்ந்தது. ஒருநாள் அவனுக்காகவே அந்தப் பாதுகாப்பு வளையத்தை மீறி பேராபத்தில் மாட்டிக்கொள்ளப்போகிறாள் என்பது இப்போது அவளுக்குத் தெரிந்திருக்க வாய்ப்பே இல்லை...

தன்னைச் சுற்றி நின்றிருந்த அவனுடைய குடும்பத்தினரைப் ஒருமுறை பார்த்தாள், “என்னைப் பெற்று வளர்த்த உறவுகளாலேயே காப்பாற்ற முடியாதபோது இன்று புதிதாய் உருவாகவிருக்கும் இந்த உறவுகள் என்னைக் காப்பாற்றுமா?”

இந்த குழப்பத்தினூடேயே மாங்கல்யதாரணமும் முடிந்து ராதிகா, திருமதி ராதிகா பரத்வாஜ் ஆகிவிட்டாள். சப்தபதி முடிந்து மெட்டிபோட பரத் அவளுடைய கால் விரலைப் பிடித்து அம்மியின் மீது வைத்தபோது உணர்ச்சிகள் மீறி ஆற்றமாட்டாமல் அழுகை வந்துவிட்டது, தலையைக் குனிந்து காலில் மெட்டி போட்டுக் கொண்டிருந்தவனைப் பார்த்துக் கொண்டிருந்ததால் அவளுடைய அழுகை மற்றவர்களுக்குத் தெரியாவிட்டாலும், கண்மீறி சிந்திய கண்ணீர் பரத்தின்மீது விழுந்து அவன் கவனத்தைக் கலைத்தது.

புறங்கையில் விழுந்த கண்ணீர்த்துளிகளை உணர்ந்தவன் தலையை நிமிர்த்தி அழுதுகொண்டிருந்தவளைப் பார்த்தான், அந்த நொடியே கண்மூடி கண்ணீருக்கு அணைபோட முயற்சித்துக்கொண்டிருந்தவளும் கண்திறக்க, மின்னல் வெட்டியதோ, நட்சத்திரங்கள் மின்னியதோ...(அட, நம்ம ஃபோட்டோ ஃப்ளாஷ்தாங்க...) இருவர் கண்களும் முதல்முறையாகச் சந்தித்துக் கொண்டன.

அவளுடைய கண்ணீரின் காரணம் புரியாமல், பரத்தின் பார்வை அவளுடைய விழிகளை ஊடுருவ, அந்தப் பார்வையின் கூர்மை தாளாமல் ராதிகா தன் பார்வையை விலக்கிக் கொள்ள முயன்றாள். “மெட்டியை சீக்கிரம் போட்டு முடிடா, ஆத்துக்காரிய அப்பறமா ரசிச்சுக்கலாம், வேற வேலை நெறைய இருக்கு,” என்று கூட்டத்தில் யாரோ நக்கலடிக்க, பார்வைகள் மீண்டு பழைய நிலைக்குத் திரும்பின.

கிரகப்பிரவேசம் சென்னையில் பரத்தின் வீட்டிலே நடப்பதாக முடிவு செய்திருந்ததாலும் வார இறுதியில் சென்னையில் ரிசப்ஷன் நடக்கவிருந்ததாலும், மதிய உணவு முடிந்து முக்கியமான உறவினர்கள் மட்டும் சென்னை செல்லப் புறப்பட்டனர்.

உடை மாற்றிக்கொண்டு களைப்பாறிவிட்டு வருவதற்காக அறைக்கு வந்திருந்தாள் ராதிகா. நடக்கவே நடக்காது என்று நினைத்த திருமணம் நடந்து முடிந்துவிட்டது, ஆனாலும் கிணற்றில் போட்ட கல்லாய் அவளுடைய வேதனை மட்டும் குறைந்தபாடில்லை, இன்னும் குழப்பங்கள் அதிகமாகிவிட்டதைப் போலவே உணர்ந்தாள். இருக்கும் பிரச்சினையில் இன்னும் சிலரையும் இழுத்து விட்டுவிட்டோமோ என்று அவளுடைய மன அரற்றியது.
 




Shivapriya Murali

இணை அமைச்சர்
Author
Joined
Jan 21, 2018
Messages
621
Reaction score
2,738
Location
Bangalore
அந்த நேரத்தில் அவளுடைய அறைக்குள் பதுங்கிப் பதுங்கி நுழைந்தாள் அம்பிகா, அத்தை சுந்தரியின் மருமகள். உள்ளே வந்தவள், கதவை மூடி தாழிட்டுவிட்டு, ராதிகாவின் கைகளைப் பிடித்துக்கொண்டாள். “கங்க்ராட்ஸ் ராதிகா, ஒருவழியா கல்யாணம் எந்தவொரு அசம்பாவிதமும் இல்லாம நடந்துடுத்து,” என்றாள். அவ்வார்தைகளைக் கேட்டு ராதிகா ஒரு நொடி அதிர்ந்தாலும், அதை காட்டிக்கொள்ளாமல் “தாங்க்ஸ் அக்கா, நடக்காதுன்னு நினைச்சேளோ, ஆனா நடந்துடுத்து பாருங்கோ, ஆச்சரியம்தான்,” என்றாள் கோபத்தை அடக்கிக்கொண்டு. இவள் வாய்க்கு நான்தான் அவலா, அத்தைக்குத் தப்பாமல் மருமகள் என்று மனதிற்குள் வைதுகொண்டாள்.

“உண்மைதான் ராதிகா, நான் எவ்வளோ பயந்துண்டு இருந்தேன் தெரியுமா, உன் கல்யாணம் நடந்து முடியறவரைக்கும் என் உயிரே என்கிட்ட இல்லை, தெரியுமா?” என்றவளை வினோதமான பார்வை பார்த்தாள், ராதிகா. “என்ன அக்கா சொல்றேள், என் கல்யாணத்துக்காக நீங்க ஏன் பயப்படனும்?” என்றவளைப் பார்த்து மெலிதாகப் புன்னகைத்து, “நீ ஏன் பயந்தியோ அதுக்காகத்தான்,” என்றாள். உதடுகள் புன்னகைத்தாலும், கண்களில் வழிந்த கண்ணீரைத் தடுக்க முடியவில்லை அம்பிகாவால்.

“எனக்கு எல்லாமே தெரியும் ராதிகா, ஆனா இப்போ விளக்கமா எதுவும் பேச நேரமில்லை, அதனால் நான் சொல்றதை நன்னா ஞாபகம் வெச்சுக்கோ. மொதல்ல உன்னோட மொபைல் நம்பர மாத்து, உன்னோட அம்மா, அப்பா, தம்பி, தங்கை அப்பறம் உன் புக்கத்துக்காரளத் தவிர வேற யாருக்கும் அந்த நம்பர குடுக்காதே, உன் ஆத்துலயும் யாருக்கும் குடுக்கவேண்டாம்னு சொல்லிடு. இதுவரைக்கும் எல்லாம் நல்லபடியா நடந்துடுத்து, இனிமேலும் அப்படியே நடக்கணும். எனக்கு தெரிஞ்சவரையில் இன்னும் கொஞ்ச நாளைக்கு உனக்கு எந்த பிரச்சினையும் வரக்கூடாது. ஆனா அதுக்குள்ள ஒரு சரியான சமயம் பாத்து உன் ஆத்துக்காரர் கிடக்க எல்லாத்தையும் சொல்லிடு. படிச்சவர், நல்லவராட்டமே தெரியறார், சொன்ன புரிஞ்சுப்பார், உனக்கு உதவியும் பண்ணுவார். என்ன புரியறதா?” என்று அவசர அவசரமாகக் கேட்டவளை ஓடிச்சென்று கட்டிக்கொண்டாள் ராதிகா.

இத்தனை நாள் அணையிட்டு அடைகாத்த அழுகை காட்டாற்று வெள்ளமாய் வெளிப்பட்டது. “இதப்பத்தி யார்கிட்டயும் சொல்லி அழக்கூட முடியாம தவிச்சுண்டு இருக்கேன்க்கா, சாகக்கூட முடிவு பண்ணினேன், பகவான்தான் மாமி ரூபத்துல வந்து காப்பாத்தினார். நீங்க என்ன செஞ்சேளோ தெரியாது, ஆனா ரொம்ப நன்றி,” என்று தேம்பியபடி கூறினாள் ராதிகா. “அதென்னடி பைத்தியமாட்டம் சாகறதைப் பத்தியெல்லாம் பேசிண்டு, நான்தான் கவலைப்படாதேன்னு சொல்றேனே, மொதல்ல கண்ணைத் தொடைச்சிக்கோ, மத்ததெல்லாம் அப்பறம் சாவகாசமா பேசிக்கலாம், யாராவது உன்னைத் தேடிண்டு வரதுக்குள்ள முகத்தை அலம்பிண்டு ரெடியாகு, கிளம்பறதுக்கு நாழியாயிடுத்து, நான் சொன்னதையெல்லாம் ஞாபகமா செய், பாத்துக்கலாம்” என்று கூறியபடி கதவைத் திறந்துகொண்டு வெளியேறிவிட்டாள் அம்பிகா.

நடப்பதை நம்ப முடியாவிட்டாலும், தன் தோளிலிருந்து ஒரு பெரிய பாரம் நீங்கியதைப் போல் இருந்தது ராதிகாவிற்கு. கூரைபுடைவையையே கட்டிக்கொண்டு செல்லவேண்டுமென்பதால், முகம் கழுவி ஒப்பனையை சரிசெய்துகொண்டாள். இடையே தங்கை பானுவும் உதவிக்கு வந்துவிட அவளுடன் வாயடித்துக்கொண்டே கிளம்பிவிட்டாள்.

குழப்பங்கள் லேசாக நீங்கவும், எதிர்நோக்கியிருக்கும் புதிய வாழ்க்கையைப் பற்றிய சிந்தனை மனதில் குடிகொண்டது. இதயம் பட்டாம்பூச்சியாய் சிறகடிக்கத் தொடங்கியது. இத்தனை நேரமும் இல்லாத இனம்புரியாத எதிர்பார்ப்புகள் மனதில் உருவாகத் தொடங்கின. ஒரு சராசரி பெண்ணுக்கேயான எல்லா ஆசைகளும் வரிசை கட்டி நின்றன. பலநாட்களாக மறந்துவிட்டிருந்த புன்னகை இதழோரத்தில் எட்டிப்பார்த்தது. இதுநாள்வரை உணர்ந்தேயிராத லேசான நாணத்துடன் இனிவரும் நிகழ்ச்சிகளை எதிர்நோக்கிக் காத்திருக்கலானாள்.

பிரயாண ஏற்பாடுகளைத் தாமே பார்த்துக்கொள்வதாக பர்வதம் மாமி கூறியிருந்ததால், அதைப் பற்றியும் ஆடியபாதம் கவலைப்படத் தேவையிருக்கவில்லை. வசதியான இரண்டு ஏ‌சி வேன்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருக்க, அனைவரும் ஏறிக்கொண்டு புறப்பட ஆயத்தமாகினார். வேனில் பரத்தின் அருகில் உட்கார்ந்திருந்த ராதிகாவிற்கு இரண்டு நாட்களில் முதல் முறையாக கணவனின் அருகாமை புரிந்தது. வேனின் சீட்டுகள் சிறிது குறுகலாக இருந்ததால் அவனுடைய வலதுகை ராதிகாவின் இடதுகையை லேசாக உரசியபடி இருக்க, அந்த உரசல் அவளையும் மீறி உடலில் லேசான வெம்மையைப் பரப்ப, மெதுவாகத் திரும்பி அருகில் அமர்ந்திருந்தவனைப் பார்த்தாள். அவனோ, அவள் அருகிலிருந்ததையே உணராதவனாய், வேறெங்கோ பார்த்தபடி இருக்க, சிறிது ஏமாற்றத்துடன் ஜன்னல் வழியே வேடிக்கை பார்க்கத் தொடங்கினாள்.

ஆனால் மரகதத்தின் போராட்டமோ வேறுவிதமாக இருந்தது, மாப்பிள்ளை வீட்டினார் பிரயாண ஏற்பாடுகளைச் செய்ததில் அவருக்கு கிஞ்சித்தும் ஒப்புதலில்லை, “அவா நாங்களே பாத்துக்கறோம்னு சொன்னா, நீங்களும் விட்டது செலவுன்னு சரின்னு சொல்லிட்டேளாக்கும், நாளைக்கு இதுக்காக என் பொண்ணு அவா ஆத்துல இடி சொல் கேட்கணுமா, இந்த ரெண்டு வேனுக்கு கூட நம்மளால பணம் குடுக்க முடியாதுன்னு நெனைச்சுட்டாளா, வண்டி அவா புக் பண்ணியிருந்தாலும், அங்க போய் சேர்ந்த உடனே வண்டி சத்தம் எவ்வளவுன்னு கேட்டு மொதல்ல குடுத்துடுங்கோ,” என்று கட் அண்ட் ரைட்டாகக் கூறிவிட்டார். அவர்கள் பிரயாணப் பட்டிருந்த வண்டி திருச்சி விமான நிலையத்துக்குள் ரன்வேயில் சென்று ஒரு விமானத்தின் முன் நின்றதை கவனிக்கவில்லை.

வேனிலிருந்து இறங்கி எதிரில் நின்றிருந்த குட்டி விமானத்தைப் பார்த்த மாமிக்கு கண்களில் ஈயாடவில்லை, “ஏன்னா, எல்லாருக்கும் பிளேன்லயா டிக்கட் புக் பண்ணியிருக்கா?” என்று கணவரிடம் கேட்க, அவரோ, “டிக்கட் இல்லடி, நாம சென்னைக்கு போறதுக்கு பிளேனையே புக் பண்ணியிருக்கா, மாப்பிள்ளையோட யாரோ ஃப்ரெண்டாம், அவர் கல்யாணத்துக்குப் பரிசா இந்தப் பிளேனை போக வர யூஸ் பண்ணிக்கோன்னு அனுப்பிருக்காராம், இப்போ சொல்லு அங்க போனவுடனே வண்டி சத்தம் எவ்வளவுன்னு கேட்டு குடுத்துடலாமா?” என்று நக்கலடித்தார்.

ஆனால் மாமியின் மனமோ வண்டிச் சத்தத்தை மறந்து வேறுபக்கம் தாவியிருந்தது, “ஏன்னா, ஆழம் தெரியாம காலை விட்டுட்டமோ, ஏதோ டாக்சி புக் பண்றா மாதிரி பிளேனையே புக் பண்ணியிருக்காளே, இவா அந்தஸ்துக்கு நம்மாத்துல வந்து ஏன் பொண்ணு எடுத்துருக்கா?” என்றார். “இதை கல்யாணம் ஆகறதுக்கு முன்னால யோசிச்சுருக்கணும், இப்போ அவா ஆத்துல நம்ம பொண்ணு நல்லபடியா வாழணும்னு வேண்டிக்கோ போறும்,” என்று விட்டு அனைவரையும் கவனிக்கச் சென்றுவிட்டார்.

சார்டர்ட் விமானத்தைப் பார்த்த ராதிகாவுமே வியப்பில் ஆழ்ந்திருந்தாள், வசதி படைத்தவர்கள் என்று தெரியும், ஆனால் ஒரு விமானத்தையே வாடகைக்கு எடுக்குமளவிற்கு வசதி படைத்தவர்களா தன்னைத் தேடி அம்மா மண்டபம் ரோட்டில் இருக்கும் தனது நடுத்தர வர்க்க வீட்டிற்கு வந்து சம்பந்தம் பேசினார்கள்? யார் இவர்கள்? இரண்டாவது திருமணமாகவே இருந்தாலும், தகுதிக்குத் தகுந்த இடம் அமையாமலா போயிருக்கும்? என்னைத் தேர்ந்தெடுக்கக் காரணம் என்ன? இது எப்படிப்பட்ட முடிச்சு? எண்ண அலைகளால் மனம் அலைக்கழிக்கப்பட, புதிய வாழ்க்கையை நோக்கிய ராதிகாவின் பயணம் இனிதே துவங்கியது!!??
 




SarojaGopalakrishnan

முதலமைச்சர்
Joined
Jul 20, 2018
Messages
5,551
Reaction score
7,765
Location
Coimbatore
பயத்தில் கல்யாணம் எதுக்கு இப்படி பயப்படறா
அம்பிகா என்ன சொல்லுகிறாள்
வசதிகளை பார்த்து நமக்கு பயம்தான்
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top