• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Kadhal Kadan -5

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Shivapriya Murali

இணை அமைச்சர்
Author
Joined
Jan 21, 2018
Messages
621
Reaction score
2,738
Location
Bangalore
காதல் கடன்

(5)

அங்கே...ஒரு 75 இன்ச் டிவி சைசில் ஒரு பெண்ணின் புகைப்படம் மாட்டப்பட்டிருந்தது. மடிசார் உடுத்தியிருந்த அந்தப் பெண் தன் வலதுகை ஆள்காட்டி விரலை வாயில் வைத்து வெட்கப்படும் பாவனையோடு புகைப்படத்திற்கு போஸ் கொடுத்திருந்தாள். கண்களில் குறும்பும் விளையாட்டும் நிரம்பியிருந்த அந்தப் பெண்ணின் புகைப்படத்தைக் காட்டி, துளசி, “இவாதான் லக்ஷ்மி மன்னி, பரத் அண்ணாவோட வைஃப்” என்றாள் பரிதாபமாக.

அந்தப் புகைப்படத்தைப் பார்க்கும்பொழுது, அது இறந்தவர்களின் நினைவாக, நினைவுச்சின்னமாக வைக்கப்பட்ட புகைப்படம் போலத் தெரியவில்லை, அதற்கு பொட்டு வைத்து மாலையும் அணிவிக்கப்பட்டிருக்கவில்லை, மனதில் இருக்கும் பிம்பத்தை நினைத்தபோதெல்லாம் பார்த்துக்கொண்டே இருக்கவேண்டும் என்ற எண்ணத்தில், ஆசையாய் ஆவலாய் நிர்மாணிக்கப்பட்ட காதல் சின்னமாய் காட்சியளித்தது அது. புகைப்படத்தை எடுத்தவரின் ரசனையான பார்வை அதில் நிதர்சனமாகத் தெரிந்தது. மிகவும் காதலோடும் அன்போடும் எடுக்கப்பட்ட புகைப்படம் அது என்று ஒரே பார்வையிலேயே பட்டவர்த்தனமாய்த் தெரிந்தது. போஸ் கொடுத்திருந்த லக்ஷ்மியும் கேமராவைப் பார்த்து வெட்கப்பட்டார் போல் தெரியவில்லை, புகைப்படம் எடுத்தவரைப் பார்த்து பார்வையால் காதல் கணை தொடுப்பது போல் மிகவும் ரசனையுடன் எடுக்கப்பட்டிருந்தது.

“அவள் மனைவி என்றால், அப்போ நான் யாரு?” என்று நா நுனி வரை வந்த கேள்வியைக் கேட்காமல் ராதிகா தன்னைத் தானே கட்டுப்படுத்திக்கொண்டாள். இந்தக் கேள்விக்கு பதில் சொல்லவேண்டிய ஆள் துளசி அல்ல என்பதால். ஆனால் மனதில் தோன்றிய சந்தோசம் முழுவதும் ஒரு நொடியில் காற்றில் கலைந்த பனிபோல சட்டென்று விலகி விட்டது. உரிமையாக நின்றுகொடிருந்த அறையில் இப்போது ஒரு பார்வையாளராக நிற்பதைப் போன்ற உணர்வு தோன்றியது. தன்னுடையது என்று நினைத்த இடத்தில், இப்போது வேறு ஒருவரின் மிக அந்தரங்கமான நொடிக்குள் அனுமதி இன்றி நுழைந்தது போல சங்கடமாக இருந்தது ராதிகாவிற்கு. திடீரென்று மூச்சு முட்டுவதைப் போல் இருக்க, “கீழே போலாமா, துளசி, நம்மளை தேடப்போறா,” என்று கூறிவிட்டு அவள் வருவதற்குக் கூட காத்திருக்காமல், வேகமாக அறையை விட்டு வெளியேறிவிட்டாள்.

அறைக்கு வெளியே வந்து சுவரில் சாய்ந்து நின்று பிடித்திருந்த மூச்சை மெதுவாக வெளியே விட்டாள், “ஒருவேளை, அம்மா சொன்ன நிழல் இதுதானோ? ஆனா இது பார்த்தா நிழலாட்டமா தெரியலியே, நிஜம் போலன்னா இருக்கு, என்ன உயிரோட்டமா இருக்கு அந்த போட்டோ,” என்ற மனதின் கேள்விக்கு பதிலளிக்க முடியாமல் மாடியிலிருந்து இறங்கினாள் ராதிகா.

சம்பந்தியுடன் பேசியதில் சிறிது மனம் நிம்மதி அடைந்திருந்த மரகதம் சோர்வு மேலிட,சிறிது நேரம் ஓய்வெடுக்கலாம் என்று அவர்களுக்கென்று ஒதுக்கப்பட்டிருந்த அறைக்குச் சென்று அமர்ந்து கொண்டு, தன் மகளுக்கு ஒரு அருமையான வாழ்க்கை அமைந்திருக்கிறது என்று நினைத்து தனக்குத் தானே புன்னகைத்துக் கொண்டிருந்தார். அவரின் புன்னகையைப் பார்த்தபடியே உள்ளே வந்த சுந்தரி, “என்ன மரகதம், ஒரே பூரிப்புல இருக்கறியா, எப்படியோ ராதிகாவை கரையேத்தியாச்சு, இப்போ உன்னோட கவலை எல்லாம் கொறைஞ்சுடுத்து இல்லையா?” என்று கேட்டபடியே எதிரில் இருந்த நாற்காலியில் அமர்ந்தார்.

“நீங்க சொல்றது வாஸ்தவம்தான் மன்னி, இந்த நாலு வருஷத்துல, ஒவ்வொரு தடவையும் ராதுவை அலங்காரம் பண்ணி ஒவ்வொரு பையன் வீட்டுக்காரா முன்னாடியும் கொண்டு நிறுத்தறச்சே, எனக்கு எவ்வளவு வேதனையா இருக்கும் தெரியுமா, பகவானே, என் பொண்ணு என்ன பாவம் பண்ணினா, இப்படி பொம்மையாட்டம் ஒவ்வொருத்தரோட அபிப்ராயத்துக்காகவும், அவளை இப்படி காட்சிப் பொருளாக்கறியே, ஒவ்வொரு தடவையும் அவளோட எதிர்பார்ப்பை எல்லாம் சுக்கு நூறா ஒடைச்சு, என் பொண்ணை இப்படி புண்படுத்தறியேன்னு, நான் அந்த பெருமாளோட நான் சண்டை போடாத நாளில்லை, ஆனா மன்னி, நாளாக ஆக அவ முகத்துலையும் ஒரு வெறுமை வந்துடுத்து, கடனேன்னுதான் வந்து நிப்பா. இவனும் வேண்டாம்னு சொல்லிடுவான் அப்படிங்கற முடிவோடவே அவ இருக்கறாப்ல இருக்கும். ஆத்துல பாக்கறச்சே பிடிச்சிருக்குன்னு சொல்லிட்டு போவா, ஆனா அதுக்கப்பறம், கிணத்துல போட்ட கல்லாட்டம் எந்த பதிலுமே வராது, நாமளே போன் பண்ணி விசாரிச்சா, ஏதாவது நொண்டி சாக்கு சொல்லி தட்டிக் கழிச்சுடுவா.” என்று கூறக் கூற அவர் கண்களில் இருந்து கண்ணீர் கட்டுப்பாடின்றி பெருகியபடி இருந்தது.

அந்தக் கண்ணீரை வேகமாகக் துடைத்துக் கொண்டவர், “இப்படி ஒரு நல்ல வாழ்க்கை ராதுக்கு அமையணும்னுதான், பகவான் அவளை அவ்வளவு சோதிச்சாரோன்னு, நேக்கு இப்போ தோணறது மன்னி, அவ பட்ட மனக் கஷ்டத்துக்குதான், அவளுக்கு மணியாட்டம் ஒரு புக்காம் அமைஞ்சிருக்கு, என் குழந்தை அவளோட நல்ல குணத்துக்கும், பண்புக்கும் இந்த ஆத்துல சுகமா இருப்பான்னு தோணறது” என்று மகிழ்ச்சியாகக் கூறினார்.

“ஆமாம்டியம்மா, அவ எந்த ஜன்மத்து புண்ணியமோ, நல்லபடியா வாழ்க்கை அமைஞ்சுடுத்து, உனக்கும் ஒரு கவலை விட்டுது போ,” என்றார் சுந்தரி அத்தை.

“நிஜம்தான் மன்னி, ஒரு சில சமயத்துல, இந்த பொண்ணு இப்படியே கல்யாணமே ஆகாம தனக்கே பாரமா நின்னு போயிடுவாளோன்னு கூட தோணிடுத்து, அப்போல்லாம் எனக்கு நிம்மதியா தூக்கம் கூட வராது. அந்தந்த வயசுல நடக்கவேண்டியது நடந்தாத்தானே அவளுக்கும் நிம்மதி, நமக்கும் நிம்மதி, இவளுக்கப்பறம் இன்னும் ரெண்டுபேர் இருக்காளே, அவாளையும் நான் கடைத்தேத்த வேண்டாமா? ஆனா எல்லாம் நல்லபடியா நடந்து, இவளுக்கும் ஒரு வாழ்க்கை அமைஞ்சுடுத்து, எப்படியோ அவ நிம்மதியா இருந்தா சரி...” என்று கூறிக்கொண்டிருக்கையில்...

பரத்தின் அறையை விட்டு வெளியேறிய ராதிகாவுக்கு ஏனோ உடனே அம்மாவைப் பார்க்கவேண்டும் என்று தோன்றியது, அம்மா மடியில் சிறிது நேரம் தலை வைத்துப் படுத்துக்கொண்டால் ஆறுதலாக இருக்கும் என்று எண்ணி மரகதம் இருந்த அறையின் கதவருகில் வந்தவள், அத்தையும் அம்மாவும் பேசியவற்றை அரைகுறையாகக் கேட்க நேரிட்டது. ஏற்கனவே பரத்தின் அறையில் அவனுடைய முதல் மனைவியின் புகைப்படத்தைப் பார்த்து குழம்பியிருந்த அவள் மனதிற்கு, அவளை பாரம் என்று கூறிய அம்மாவின் பேச்சும் வெந்த புண்ணில் வேலாய்ப் பாய, செய்வதறியாது திகைத்து நின்றாள். ஒரே கணத்தில் தவிப்பும் தனிமையும் அவளைச் சூழ்ந்து கொண்டன. அம்மாவின் அறைக்குள் செல்லாமல், திரும்பி ஹாலுக்குச் சென்று முற்றத்துப் படிகளில் அமர்ந்துகொண்டாள்.
 




Shivapriya Murali

இணை அமைச்சர்
Author
Joined
Jan 21, 2018
Messages
621
Reaction score
2,738
Location
Bangalore
மனம் தாளாமல் அலையாய் அலைபாய்ந்து கொண்டிருந்தது. அமைதியாக கண்மூடி அமர்ந்திருந்தாள். ஆனால் மண்டைக்குள் ஆயிரம் பேர் ‘ஓவென்று’ கூச்சலிடுவது போன்ற ஒரு உணர்வு. எவ்வளவு நேரம் அப்படியே உட்கார்ந்திருந்தாளோ தெரியாது, ஹாலில் இருந்த கடிகாரம் மணியை உணர்த்த ஒலித்தபோது, யோசனையிலிருந்து மீண்டாள். அவளறியாமல் கண்களில் வழிந்திருந்த கண்ணீரைத் துடைத்துக் கொண்டவள், மனதை ஒருவாறாகச் சமன்படுத்திக்கொண்டு எழுந்து அம்மா இருக்கும் அறைக்குச் சென்றாள்.

இதற்கிடையில், பரத்தின் அறையிலிருந்து வந்த துளசி, நேரே தனது தாயிடம் சென்று, “அம்மா, என்னம்மா இது, இன்னும் பரத் ரூம்ல இருந்து லக்ஷ்மி மன்னியோட போட்டோவ ஏன் எடுக்கல, ராதிகா மன்னி அதை பாத்துட்டா தெரியுமா? ஏம்மா இப்படி பண்றேள், கொஞ்சமாவது கவனமா இருக்க வேண்டாமா? இப்போ மன்னி என்ன நெனச்சுண்டாளோ, அதைப் பத்தி எதுவுமே பேசாம ரூம்ல இருந்து வெளிய போயிட்டா. நேக்கு ரொம்ப பயமா இருக்கும்மா, மன்னி மனசு நிச்சயமா ரொம்ப வேதனைப் பட்டிருக்கும், அதுவும் அவா இந்த ஆத்துக்கு வந்த முதல் நாள்லயே...” என்று பொரிந்து தள்ளினாள்.

இதைக் கேட்ட பர்வதம் மாமிக்கும் அதிர்ச்சிதான் போல, “என்னது அந்த போட்டோ இன்னும் பரத் ரூம்லதான் இருக்கா? நாம கல்யாணத்துக்கு கிளம்பறச்சயே அதை எடுத்து ஸ்டோர் ரூம்ல வெச்சுடுன்னு சிவா கிட்ட சொன்னேனே? அவன் எடுத்து வைக்கலியா? போய் அவனை அழைச்சுண்டு வா, நான் என்னன்னு பாக்கறேன்,” என்றபடி பரத்தின் அறைக்கு விரைந்தார்.

வேகமாக அன்னையின் அறையை விட்டு வெளியேறிய துளசி, வீட்டின் பின்புறத்தில் இருக்கும் வேலைக்கரர்களின் க்வார்டர்சில் ஒன்றில் தங்கியிருக்கும் டிரைவர் சிவா என்கிற சிவாண்ணா என்கிற சிவநேசனை உடனடியாக அன்னையிடம் அழைத்து வந்தாள்.

சிவாண்ணா, கும்பகோணத்தில் இருந்த நாட்களில் இருந்தே பரத்தின் குடும்பத்திற்கு டிரைவராக வேலை பார்த்தவர். அவருடைய தந்தை அன்னபூர்ணா கேட்டரர்சில் வேலை பார்த்த நாளிலிருந்தே இக்குடும்பத்துடன் பரிச்சயம் இருந்ததால், அவருக்கு 17 வயது இருக்கும்போது அவருடைய தந்தை இறந்தபின் அக்குடும்பம் அவரை ஏறக்குறைய தத்தெடுத்து வளர்த்தது என்றே சொல்லலாம். சமையலில் ஆர்வமின்றி வாகனம் ஓட்டுவதில் ஆர்வம் காட்டிய 17 வயது சிவாவிற்கு வாகனம் ஓட்டும் பயிற்சியும் அளித்து, லைசன்ஸ் வாங்கவும் உதவி செய்தார் ஜகன்னாதன். அன்றிலிருந்து இன்றுவரை குடும்பத்தின் ஆஸ்தான டிரைவர் மற்றும் பர்வதம் மாமியின் உதவிக்கரமும் சிவாதான். சிவாவிற்கு பரத்தின்மீது ஒரு தனி பாசம் உண்டு. சிறு வயதிலிருந்தே அவரை கீழே விடாமல் தோளில் தூக்கிக்கொண்டே திரிவார். பரத்தும் அவரை “சிவாண்ணா, சிவாண்ணா,” என்று அழைத்தபடி அவர் பின்னாலேயே திரிவான்.

இன்று அவர் காரை ஓட்டவேண்டாம் என்று கூறி பரத் தானே காரை ஓட்டிச் சென்றதால், வீட்டில் இருந்தார். துளசியுடன் பரத்தின் அறைக்கு வந்தவர், பர்வதம் மாமி எதற்கு அழைத்தார் என்று புரிந்துகொண்டு தலை குனிந்து நின்றார்.

அதைக்கண்ட பர்வதம் மாமி, “என்ன சிவா, தலையை குனிஞ்சுண்டு நின்னா ஆயிடுத்தா? ஊருக்கு போறதுக்கு முன்னமே, லக்ஷ்மி போட்டோவ எடுத்து ஸ்டோர் ரூம்ல வைக்கச் சொன்னேனே, ஏன் இன்னும் வைக்கலை, யாராவது பார்த்தா என்ன நெனைப்பா, பொண்ணாத்துக்காரா பாத்தா தப்பா எடுத்துக்க மாட்டாளா, சொல்றது எதையும் ஏன் செய்யவே மாட்டேங்கற நீ,” என்று சிவாவிடம் கோபமாகக் கேட்டார்.

“அம்மா, நீங்க கிளம்பினப்பறம் போட்டோவை எடுத்து வெச்சுட்டு ஆத்தை பூட்டிண்டு போகலாம்னுதான் வந்தேன்மா, ஆனா சின்னத்தம்பி தன்னோட ரூம் கதவை பூட்டிண்டு சாவியை எடுத்துண்டு போயிட்டார். எனக்கு என்ன செய்யறதுன்னு தெரியாமதான் அப்படியே விட்டுட்டேன். இப்போ எடுத்து வைக்கலாம்னு தம்பிகிட்ட கேட்டப்போ, அந்த போட்டோல கையை வைச்சா நடக்கறதே வேறன்னு கோபமா சொல்லிட்டு போயிட்டார். நான் என்ன பண்ணட்டும் நீங்களே சொல்லுங்கோ” என்றார்.

“அவன் கிடக்கறான் பைத்தியக்காரன், நீ இப்போ போயி அந்த போட்டோவை எடுத்து ஸ்டோர் ரூம்ல வை போ,” என்று அவரை விரட்டியவர், துளசியையும் அழைத்துக்கொண்டு நேராக ராதிகாவைப் பார்க்கச் சென்றார். பரத்தின் அறையில் லக்ஷ்மியின் போட்டவைப் பார்த்துவிட்டு ராதிகாவின் மனம் எவ்வளவு கஷ்டப்பட்டிருக்கும் என்று அவருக்கு கலக்கமாக இருந்தது. ஆனால் அறையில் சென்று பார்த்தபோது அவள் நிச்சலனமாக உறங்கிக் கொண்டிருந்தாள். எதுவும் பேசாமல் அப்படியே திரும்பியவரின் கவனம் வந்திருக்கும் விருந்தாளிகளை கவனிப்பதில் திசை திரும்பியது. மாலை 5 மணி ஆகிவிட்டதால், அனைவருக்கும் காபிக்கும் டிபனுக்கும் ஏற்பாடு செய்து தானே அருகில் இருந்து பரிமாறி உபசரித்தார்.

பரத் வெளியில் புறப்பட்டு சென்று 2 மணிநேரத்திற்கு மேல் ஆகியிருந்தபடியால், அவன் எப்போது திரும்பி வருகிறான் என்று கேட்பதற்காக அவனுக்கு போன் செய்தால் சுவிட்ச்ட் ஆஃப் என்றே வந்தது, அவருடைய டென்ஷனை இன்னும் அதிகப்படுத்தியது.

இதற்கிடையில், மரகதமும், “மாமி, நலங்கு பண்ணனும், ஆறு மணிக்கு மேல முஹூர்த்தம் சொல்லி அனுப்பியிருக்கார் புரோஹிதர், மாப்பிள்ளை அதுக்குள்ள வந்துடுவார் இல்லையா? என்று கேட்டு அவர் வயிற்றில் புளியைக் கரைத்தார். இதனால் பதட்டமடைந்த பர்வதம் மாமியும், நேராக வாசல் திண்ணையில் சம்பந்தி ஆடியபாதத்துடன் அமர்ந்து சுவாரசியமாக ஊர் விஷயங்களைப் பேசிக்கொண்டிருந்த தன் கணவனிடம் சென்று, “ஏன்னா, பரத் இன்னும் வரக்காணோமே, உங்களுக்கு ஏதாவது போன் பண்ணினானா? நலங்கு வேற வைக்கணும், நாழியகறது, நான் போன் பண்ணினா அவனோட போன் ஆஃப் ஆகியிருக்கு, எப்போ வருவான்னு ஏதாவது சொன்னானா? நேக்கு ஒரே டென்ஷனா இருக்குன்னா, ஏன்தான் இவன் இப்படி பண்றானோ?” என்று சலித்துக்கொண்டார்.

“இதுல டென்ஷன் ஆகறதுக்கு என்ன இருக்கு பர்வதம், வேலைன்னு வெளியில போனா முன்ன பின்ன ஆகத்தான் செய்யும், அதுவும் யாரோ சென்ட்ரல் மினிஸ்டர் வீட்டு கல்யாணத்துக்கு இவன்ட் மேனேஜ்மெண்ட் பத்தி டீல் ஃபிக்ஸ் பண்ண போயிருக்கான், பெரிய அளவிலான பிசினஸ், நல்ல நாளும் அதுவுமா அவனோட பிசினசும் நல்ல விதமா முன்னேரறது, பாசிடிவா எடுத்துக்கோ, போறச்ச என்கிட்டே டைம் ஆனாலும் ஆகும்பான்னு சொல்லிட்டுதான் போனான், நானும் சம்பந்தியும் சேர்ந்துதான், பரவாயில்லை, நல்ல காரியம் நடக்கறச்சே நேரமானாலும் பரவாயில்லை, எதைப் பத்தியும் கவலைப் படாமல் முடிச்சுட்டு வான்னு சொல்லி அனுப்பிச்சோம், என்ன சம்பந்தி, நான் சொல்றது சரிதானே?” என்று பக்கத்தில் அமர்ந்திருந்த சம்பந்தியையும் தன்னுடன் கூட்டு சேர்த்துக்கொண்டார். அவரும் ஆமாம் என்பது போல் தலையை ஆட்ட,

“ஆகா மொத்தம் அவன் இப்போ வரப்போறதில்லை, அதைதானே நீங்க சொல்ல வர்றேள்?” என்று கோபமாக கணவரைக் கேட்டுவிட்டு, “என்னவோ பண்ணுங்கோ, நடக்கறபடி நடக்கட்டும்,” என்று உள்ளே சென்றுவிட்டார்.

பர்வதத்திற்கு ஆற்றாமையாய் இருந்தது, இந்தச் சூழ்நிலையை எப்படி சமாளிக்கப்போகிறோம் என்று சங்கடமாக இருந்தது. “பகவானே, என்ன பண்ணப் போறேன்னு தெரியலையே, இந்தப் பையனை நம்பி அவனை அனுப்பியிருக்கவே கூடாது, இவரை நம்பி இவர்கிட்ட அனுப்பினா, இவர் அவனை அனுப்பியும் வெச்சுட்டு, இப்போ நேரம் ஆனாலும் ஆகும்னு வேற சொல்றார், இவாளல்லாம் நம்பி ஒரு காரியம் ஒப்படைச்சா, இப்படித்தான்... பொம்மனாட்டிகளோட கஷ்டம் ஏதாவது புரியறதா இவாளுக்கெல்லாம்?”என்று கணவரையும் மகனையும் வைதபடி வீட்டிற்குள் வந்தவரைப்பார்த்து,

“என்னம்மா, ஏன் இவ்வளவு கோபமா இருக்கே, என்ன ஆச்சு?” என்று கேட்டபடி வந்த அவருடைய முதல் மகன் ராகவன் அவர் கையைப் பிடித்து அங்கிருந்த ஊஞ்சலில் அமரவைத்தான். பின்னர் காலால் லேசாக உந்தி ஊஞ்சலை மெதுவாக ஆட்டினான். பர்வதவர்த்தினிக்கு ஊஞ்சல் என்றால் மிகவும் பிடிக்கும். அவருடைய மூடை சரி செய்யவேண்டுமென்றால், ஊஞ்சல் ஒரு மிகச் சிறந்த வழி. அதனாலேயே பிள்ளைகள் இருவரும் சேர்ந்து வீட்டின் மூலைக்கு மூலை ஊஞ்சலை மாட்டி வைத்திருந்தார்கள். பர்வதமும், மனம் சோரும்போதேல்லாம் ஊஞ்சலில் அமர்ந்து சிறிது நேரம் ஆடினால், புத்துணர்ச்சி பெற்றுவிடுவார். இப்பொழுதும், தந்தைக்கும் தாய்க்கும் நடுவில் நடந்த சம்பாஷணையைக் கேட்டபடியே வந்த ராகவன், தாயின் மனநிலை அறிந்து அவரை ஆசுவாசப்படுத்தவே ஊஞ்சலில் அமரவைத்திருந்தான்.

“ஆனாலும், நோக்கு சாமர்த்தியம்தாண்டா ராகவா, என்னோட வீக்னெஸ் தெரிஞ்சுண்டு என்னை எப்படியாவது சமாதானப் படுத்திடுங்கோ, இதுக்கெலாம் ஒன்னும் குறைச்சலில்லை, ஆனா உன் தம்பி பண்றது நியாயமா, கார்த்தாலதான் கல்யாணம் ஆகியிருக்கு, பொண்ணு ஆத்துக்காரா எல்லாரும் நம்மாத்துல வந்து இறங்கியிருக்கா, சாயங்காலம் நலங்கு சம்பிரதாயம் இருக்குன்னு தெரியும், இருந்தாலும் இப்படி வேலைன்னு போய் உக்காந்துண்டா, நான் என்ன பண்ணுவேன், எல்லாருக்கும் என்ன பதில் சொல்லுவேன்னு நீயே சொல்லு, இப்படி ஒரு தர்மசங்கடமான நிலையில் கொண்டு விட்டுட்டானே என்னை,” என்று மனம் நொந்தார்.

அம்மாவின் கையை ஆதுரமாகத் தடவிக் கொடுத்த ராகவன், “அம்மா, அவன் எவ்வளவு முக்கியமான வேலையா போயிருக்கான்னு அப்பாதான் சொன்னாரே, நீ கவலைப்படாதே, எல்லாரும் புரிஞ்சுப்பா, அவாத்து பொண்ணு நம்ம ஆத்துக்குள்ள அடியெடுத்து வெச்ச்சதும் மாப்பிள்ளைக்கு நல்ல அதிர்ஷ்டம் வந்திருக்குன்னு சந்தோஷம்தான் படுவா, நீ வா, நானும் உன்னோட வர்றேன், நாம் ரெண்டு பெரும் போயி பக்குவமா எடுத்து சொல்லுவோம்,” என்று அவரை ராதிகாவின் அம்மா இருந்த அறைக்கு அழைத்துச் சென்றான்.

பர்வதவர்த்தினி மாமி எதிர்பார்த்ததைவிட விஷயத்தை அனைவரும் சுலபமாகவே எடுத்துக்கொண்டனர். சென்ட்ரல் மினிஸ்டர் வீட்டுத் திருமணத்திற்கு தங்கள் மாப்பிள்ளை இவன்ட் மேனேஜ்மெண்ட் செய்யப்போவதைக் கேட்டு மகிழ்ச்சியும் அடைந்தனர். மரகதத்திற்கு மட்டும் சிறிது ஏமாற்றம்தான், ஆனாலும் மாப்பிள்ளையின் முன்னேற்றத்தை எண்ணி மகிழ்ந்தார். இத்தனை பேச்சுக்கு இடையிலும் ராதிகா எதுவுமே பேசாமல், மௌனமாகத் தலை குனிந்து நின்றிருந்தாள், அவள் மனதின் ஓட்டத்தை கணிக்க முயன்று தோற்றார் பர்வதம். நலங்கு நடக்கிறது, அல்லது நடக்கவில்லை என்பதைப் பற்றிய எந்தவிதமான சலனமும் அவளிடம் தென்படவில்லை. பரத் இன்னும் வீடு திரும்பவில்லை என்பதைக் குறித்தும் அவள் எந்தவித ஏமாற்றமோ, கோபமோ எதையும் காட்டவில்லை. ராதிகா மனம் வருந்துகிறாளோ என்று எண்ணி மிகவும் மனம் வருந்தினார் அவர்.

இவ்வாறிருக்க, அந்த இறுக்கமான சூழலை இலகுவாக்கி, மகிழ்ச்சியை அள்ளித்தெளிக்க வந்திறங்கினாள் மேகா என்னும் ஒரு தேவதை...
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
சிவப்ரியா முரளி டியர்
 




Last edited:

Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top