• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Kannae Unthan Kai VaLaiyaay.....Episode1

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Srija Venkatesh

SM Exclusive
Joined
Jan 17, 2018
Messages
408
Reaction score
4,349
Location
chennai
கண்ணே உந்தன் கை வளையாய் ....

எழுத்து : ஸ்ரீஜா வெங்கடேஷ்

அத்தியாயம் 1:

சரசு டீச்சர் என்று எல்லாராலும் அன்போடு அழைக்கப்படும் சரசுவதி அம்மாள் மறைந்து போன தன் கணவனின் படத்தின் முன் நின்றிருந்தாள். அவளது கண்களில் கண்ணீர். கடமையை நிறைவேற்றி விட்டோம் என்ற பெருமிதம் இரண்டும் தெரிந்தது. பக்கத்தில் நின்றிருந்த மகள் அனிதாவையும் அவளது கழுத்தில் புதிதாக மின்னிய மாங்கல்யத்தின் சொந்தக் காரனான ஆனந்தையும் தந்தையின் படத்தை வணங்கச் சொன்னாள். வணங்கி எழுந்தனர் இருவரும். மகளின் முகத்தைக் கூர்ந்து கவனித்தாள் அந்தத் தாய். சற்றே கலக்கமாக இருந்தது போலத் தோன்றியது. கல்யாணமான புதிது தானே? போகப் போக சரியாகி விடும் என எண்ணி மகளை உச்சி முகர்ந்தாள்.

"மாப்பிள்ளை! அனிதாவைக் கூட்டிக்கிட்டு எப்ப கிளம்பப் போறீங்க?" என்றாள் சரசு டீச்சர்.

"ஏன் அத்தை எங்களை விரட்டுறதிலேயே இருக்கீங்க? நாங்க இருக்குறது உங்களுக்கு இடைஞ்சலா இருக்கா?" என்று கேட்டு சிரித்தான் ஆனந்த.

சுருக்கென தைத்தன அவன் வார்த்தைகள். அவனது முகத்தைப் பார்த்தாள். சாதாரணமாக தென்பட்டது. சரி ஏதோ விளையாட்டுக்காக இப்படிக் கேட்டிருக்கிறான் என முடிவு கட்டினாள்.

"நீங்க எத்தனை நாள் இருந்தாலும் அது எனக்கு பாரம் இல்ல மாப்பிள்ள! ஆனா கல்யாணம் ஆனதுமே தனிக்குடித்தனம் போயிருவோம்னு நீங்க சொன்னீங்களே அதனால கேட்டேன்." என்றாள் அமைதியாக.

"நானும் சும்மா விளையாட்டுக்குத்தான் கேட்டேன் அத்தை. தென்காசியில எங்களுக்குன்னு வீடு பார்த்தாச்சு. எல்லா வசதியும் இருக்கு. இந்நேரம் எங்க அம்மா அப்பா அதை ரெடி பண்ணியிருப்பாங்க. நாங்க போய் குடித்தனம் ஆரம்பிக்க வேண்டியது தான்" என்றான்.

"அம்மா! நீயும் கூட வாயேன் பிளீஸ்" என்றாள் அனிதா. அவள் குரலில் தாயைப் பிரிய வேன்டுமே என்ற சோகம் ஜரிகையிட்டது. மகள் கேட்டதில் தாய் மகிழ்ச்சியானாள்.

"ஆமாம் மாப்பிள்ளை! நானும் வரேன். அங்க வந்து உங்களை செட்டில் பண்ணிட்டு திரும்பிடுறேன். என் மக குடித்தனம் பண்ற அழகை நான் பார்க்க வேண்டாமா?" என்றாள்.

முகம் சற்றே கடுமையானது ஆனந்துக்கு.

"அதான் எங்க அம்மா அப்பா இருக்காகளே? அவங்க பார்த்துப்பாங்க! உங்களுக்கு ஸ்கூல் வேலை கெட்டுப் போகும். செல்ஃபோன் இருக்கே. நிமிஷத்துக்கு நிமிஷம் பேசிக்கலாம்" என்றான்.

முகம் வாடியது அனிதாவுக்கு. அதை சரசுவும் கவனித்து விட்டாள். மனம் எதையோ நினைத்து ஏங்கியது. தவறு செய்து விட்டோமோ என்ற பயம் முதல் முறையாகத் தோன்ற திகைத்துப் போனாள் சரசு. சட்டென தேற்றிக்கொண்டாள்.

"ஆமா அனிக்கண்ணு! மாப்பிள்ளை சொல்றதும் சரிதான். இப்ப பசங்களுக்கு அரையாண்டுப் பரீட்சை நெருங்குது. என்னால லீவு எடுக்க முடியாது. இன்னும் ஒரு மாசத்துல கிறிஸ்துமஸ் லீவு விடுவாங்க. அப்ப வந்து நான் ஒரு வாரம் தங்கியிருக்கேன் என்ன?" என்றாள் சமாதானமாக.

அரிசி பருப்பு முதல் காய்கறி வரை எல்லாவற்றையும் நீட்டாக அட்டைப்பெட்டியில் போட்டுக் கட்டி தயாராக வைத்திருந்ததால் எல்லாவற்றையும் காரில் ஏற்றினார்கள். இறுதியாக மகள் காரில் ஏறும் போது வெடித்துக் கிளம்பிய அழுகையை கட்டுப்படுத்திக்கொண்டாள். குழந்தை முதல் முதலில் குடித்தனம் போடப் போகிறாள். இப்போது அழுதால் அது நல்லதில்லை என தீர்மானித்திருந்ததால் கண்ணீரை அடக்கினாள் சரசு. ஆனால் அனிதாவுக்கோ கண்ணீர் நிற்கவே இல்லை. அம்மா அம்மா என்ற வார்த்தையைத் தவிர எதுவும் அவளுக்கு வரவில்லை.

"அனிம்மா! இப்படியா அழுவாங்க! கண்ணைத் தொடைச்சுக்கோ. நீ என்ன வெளி நாட்டுக்காப் போகப் போற? இங்க இருக்குற தென்காசி. ராஜபாளையத்துல இருந்து பஸ்ஸூல ரெண்டு மணி நேரம். நெனச்சா வந்துடலாமே? சந்தோஷமா போயிட்டு வா" என்றாள்.

தலையை அசைத்து விட்டு கணவனோடு காரில் ஏறினாள். கார் புறப்பட்டு வெகு நேரம் ஆகியும் வாசலில் இருந்து நகரவே இல்லை சரசு.

"என்ன டீச்சர் பொண்ணு புகுந்த வீட்டுக்குப் போயாச்சா?" என்று கேட்டபடி வந்து நின்றனர் தெருவில் இருந்த சில பெண்மணிகள்.

"எப்படியோ தனியா நின்னு சாதிச்சுட்டீங்க டீச்சர். உங்க மன உறுதி யாருக்கும் வராது" எனப் புகழ்ந்தாள் வசந்தா . எதிர் வரிசையில் இருப்பவள்.

"எல்லாம் கடவுள் செயல். என் மக நல்லா இருந்தா அது போதும்"

மேலும் கொஞ்ச நேரம் பேசி விட்டு சென்றனர் பெண்கள். வீட்டுக்குள் நுழைந்த்தும் முதல் முறையாக தனிமை முகத்தில் அறைந்தது. சிறிய வீடு தான். ஆனாலும் அனிதா மான் போல எங்கும் ஓடுவாள். அம்மாவைத்தவிர அவளுக்கு வேறு உலகமே இல்லை என்றே சொல்லலாம். அவள் சிறு குழந்தையாக இருந்த போது எடுத்த குடும்பப் புகைப்படத்தை பார்த்தாள். கைக்குழந்தையாக இருந்த அனிதா அப்போதே கொள்ளை அழகோடு இருந்தாள். அதுக்குள்ளவா 23 வருஷம் ஓடிப் போச்சு? என்று நினைத்தபடியே காப்பியைக் கலந்தாள்.

எப்போது அடுப்படிக்கு வந்தாலும் பின்னாலேயே வரும் அனிதாவுக்காக மனம் ஏங்கியது. மேடையின் பக்கத்தில் நின்று கொண்டு ஏதாவது தொண தொண என்று பேசிக்கொண்டிருப்பாள். பள்ளியில் நடந்தது கல்லூரியில் நடந்தது என நீளும் விஷயங்கள். வீட்டில் ஒரு நிமிஷம் கூட வாயை மூடாத அனிதா வெளியில் வந்தால் பேசா மடந்தை தான். சட்டென யாரோடும் பழகி விட மாட்டாள். அதற்கும் காரணம் சரசு தான்.

சாய்வு நாற்காலியில் அமர்ந்து காப்பியை துளித்துளியாக பருகி முடித்தாள். சில மாதங்களுக்கு முன்னால் நினைவுகள் ஓடின. கதிரவனை நினைத்ததும் மனம் உதறிப் போட்டது. அவனிடமிருந்து அனிதாவைக் காப்பதற்குள் என்ன பாடு பட்டு விட்டாள் சரசு? நல்ல வேளை அவன் இல்லை. வெளி நாட்டுக்குப் போய் விட்டான் என்று தெரிந்தவர்கள் சொன்னார்கள். அதன் பிறகு தான் நிம்மதிப் பெருமூச்சு வந்தது சரசுவுக்கு. அவசரமாகக் கல்யாண ஏற்பாட்டில் இறங்கியதும் அப்போது தான்.

நன்றாக சாய்ந்து அமர்ந்தாள். முதுகு வலி உனக்கு வயதாகி விட்டது சரசு என்று சொன்னது. பார்வை கணவனின் படத்தில் நிலைத்தது. பழைய நினைவுகள் மனதில் உலா வந்தன. கண்கள் நீரைச் சிந்த கண்களை மூடியபடி கடந்த காலத்துக்குள் நுழைந்தாள் சரசு டீச்சர்.

சுமார் 25 ஆண்டுகளுக்கு முன்னால் சரசு சாதாரண இல்லத்தரசி தான். அவள் கணவன் ஷண்முகம் ராஜபாளையத்தில் ஒரு அரசு உதவி பெறும் பள்ளியில் ஆசிரியர். சாந்தமான குணமும் குடும்பத்தின் மேல் பாசமும் உள்ளவர். அரையாண்டு விடுமுறையில் குற்றாலம், திருநெல்வேலி என அழைத்துப் போவார், முழு ஆண்டு விடுமுறையில் பெங்களூர் மைசூர் என பக்கத்து மாநிலங்களுக்கும் அழைத்துச் சென்று காண்பிப்பார். நல்ல கணவன் மணியான குழந்தை என வாழ்க்கை ஆனந்தமயமாக இருந்தது சரசுவுக்கு. அப்போது ஒரு சதாரண நிகழ்வு அவளது தலையெழுத்தை மாற்றி விட்டது.

ஆசிரியர் ஷண்முகம் ஒரு நாள் தெருவில் நடந்து வந்து கொண்டிருக்கும் போது நாய் ஒன்று கடித்து விட்டது. அது வெறி நாய் கூட இல்லை. அப்படியே விட்டிருந்தால் கூட ஒரு வேளை ஆசிரியர் பிழைத்திருக்கக் கூடும். அவரது விதி அவரை டாக்டர் குமரேசனிடம் அழைத்துச் சென்றது. அவரும் பரிசோதித்து விட்டு உடனே ஊசி போட வேண்டும் என்றார். பொதுவாக நாய்க்கடிக்கு தொப்பிளைச் சுற்றி 16 ஊசி போடுவார்கள். ஆனால் குமரேசன் புதிதாக ஒரு ஊசி வந்திருப்பதாகவும் அதனை முதுகுத்தண்டில் ஒரு முறை போட்டால் போதும். நாய்க்கடியினால் எந்தப் பிரச்சனையும் வராது என்று சொல்லி அந்த ஊசியைப் போட்டார். அதைப் போடும் போதே மயக்கமாக வந்து விட்டது ஷண்முகத்துக்கு., ஆனால் சற்று நேரத்தில் எல்லாம் சரியாகி வீட்டுக்கு வந்தார்.

முதலில் சாதாரணமாக இருந்தவருக்கு கை கால்களாய் அசைப்பதில் பிரச்சனையும் மிகுந்த வலியும் ஏற்பட்டது. என்னென்னவோ வைத்தியம் செய்தும் அவை செயலிழந்து போயின. சுத்தமாக கழுத்துக்குக் கீழே உணர்ச்சியே இல்லாமல் போய் சக்கர நாற்காலியில் அவர் அமர வேண்டியது வந்த போது கதறி விட்டார் ஷண்முகம். முகம் சுளிக்காமல் பணிவிடை செய்தாள் சரசு. ஆனால் சில மாதங்களுக்குப் பிறகு இதயமும் செயலிழந்து போனது. திகைத்துப் போனாள் சரசு. குழந்தை அனிதாவுக்கு அப்போது ஆறே வயது தான். ஏன் தன் கணவனுக்கு இப்படி ஆனது? என்றே தெரியாமல் ஈமச் சடங்ககுளை செய்து முடித்தார்கள் உறவினர்கள். அவர்கள் கொடுத்துச் சென்ற பணம் தீரும் தருணம் தான் விழித்துக்கொண்டாள் சரஸ்வதி.

இரு உயிர்கள் உண்ண வேண்டும். அதோடு அனிதாவைப் படிக்க வைக்க வேண்டும், கல்யாணம் செய்து கொடுக்க வேண்டும். இதற்கு என்ன செய்வது? சமூகத்தில் மரியாதையாக ஆசிரியரின் மனைவியாக உலா வந்த அவளுக்கு வீட்டு வேலை செய்ய இஷ்டமில்லை. அதில் கேவலம் இல்லை என்றாலும் சண்முகம் சாரின் மனைவியும் மகளும் வேலைக்காரியாக இருக்கிறார்கள் என்று ஊர் பேசுமே என சங்கடப்பட்டாள் சரசு. கணவன் வேலை செய்த பள்ளிக்குச் சென்று தாளாளரை சந்தித்து வேலை கேட்டாள்.

"உங்களுக்கு என்ன வேலைம்மா கொடுக்க முடியும்? நீங்க வெறும் பத்தாவது தான் படிச்சுருக்கீங்க?" என்றார்.

"சார்! டீச்சர் வேலை குடுங்கன்னு நான் கேக்கல்ல! பியூன் வேலையாவது குடுங்க. அப்பத்தான் நானும் என் மகளும் மானமாப் பிழைக்க முடியும்" என்று கெஞ்சினாள். மிகவும் தயங்கினார் தாளாளர் ராமநாதன்.

"அம்மா! உங்க கணவர் இருந்தா இன்னும் ரெண்டே வருஷத்துல ஸ்கூலுக்கே ஹெட் மாஸ்டரா வந்திருப்பாரு. அப்படிப்பட்டவரோட மனைவியை எப்படிம்மா பியூனாப் போடுறது? மத்த சாருங்களும் டீச்சருங்களும் உங்க கிட்ட வேலை சொல்லத் தயங்குவாங்களே?" என்றார்.

"சார்! அதையெல்லாம் பார்த்தா முடியுமா சார்? நான் இப்படியே ப்யூனாவே இருந்துட மாட்டேன் சார். முன்னேறணும்னு ஆசை இருக்கு ஆனா வழி தான் தெரியல்ல" என்று சொல்லி அழுதாள்.

மிகவும் இரக்க மனம் கொண்ட ராமநாதன் ஒரு வழி சொன்னார்.

"இதைப் பருங்கம்மா! இப்ப உங்களை நான் பியூனாப் போடுறேன். ஆனா தற்காலிகமாத்தான். நீங்க படிங்க. படிச்சு பி எட் முடிச்சுட்டீங்கன்னா இதே ஸ்கூல்ல உங்களை டீச்சரா சேர்ந்துக்கறேன்" என்றார்.

கடலில் தத்தளித்துக் கொண்டிருந்தவளுக்கு அவரது வார்த்தைகள் படகைப் போலத் தோன்றின. சிக்கெனப் பற்றிக்கொண்டாள். பியூனாக வேலை செய்து கொண்டே தாளாளரின் அறிவுரைப்படி மேற்கொண்டு பி எஸ் சி படித்து எம் எஸ் சியும் முடித்து பி எட்டும் எட்டு ஆண்டுகளில் முடித்து விட்டாள். தாளாளர் சொன்னபடி அதே பள்ளியில் அறிவியல் ஆசிரியையாக அமர்த்தி விட்டார். அனிதாவும் அதே பள்ளியில் படித்து +2வில் நல்ல மதிப்பெண்கள் எடுத்து பி காம் சேர்ந்தாள். அப்படியே எம் காமும் முடித்து விட்டு ஒரு இடத்தில் வேலைக்குப் போனாள்.
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top