• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Kayam Kakkum Kasayangal - Mudakkaththaan soup/rasam/dosa

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Srija Venkatesh

SM Exclusive
Joined
Jan 17, 2018
Messages
408
Reaction score
4,349
Location
chennai
காயம் காக்கும் காசாயங்கள் - முடக்கத்தான் சூப்/தொசை/ரசம்

முடக்கத்தான் என்பது ஒரு அற்புதமான மூலிகை. கால்சிய சத்துக் குறைவதால் கை கால்களில் மூட்டுகளில் எலும்புத்தேய்மானம் இருக்கும். அதனால் கால் வலி மூட்டு வலி என ஏற்படலாம். இவை நமது இயக்கங்களை முடக்கக் கூடும். அதிலிருந்து தடுத்துக் காப்பதால் முடக்குக் காத்தான் என்ற பெயர் பெற்றது இந்த மூலிகை. நாளடைவில் முடக்கத்தான் என்று சொல்லப்படலாயிற்று. மழை மற்றும் பனி காலங்களில் சாதாரணமாக வளரும் முடக்கத்தான் கோடை காலங்களில் மிக அரிதாகவே காணப்படும். இதனை வீட்டிலேயே தொட்டியில் வைத்து வளர்க்கலாம். படரும் கொடி வகையான இதனை ஒரு கொம்பில் ஏற்றி விட்டால் அழகாக படர்ந்து நமக்கு நிறைய இலைகளைத் தரும். இதன் இலைகள் தான் மருந்து. இந்த இலைகளை பலவிதமாக உணவில் சேர்த்துக்கொள்ளலாம். வளர்க்க முடியாதவர்கள் முடக்கத்தான் பொடி கிடைக்கும் அதனை நாட்டு மருந்துக் கடைகளில் வாங்கிக் கொள்ளலாம். வளரும் குழந்தைகள் முதல் வயதான பெரியவர்கள் வரை இதனை தாராளமாக உணவில் சேர்த்துக்கொள்ளலாம். மெனோபாஸ் சமயத்தில் பல பெண்களுக்கு எலும்புத்தேய்மானத்தால் கால் வலி மிகவும் அதிகமாக இருக்கும். அதற்கு முடக்காத்தனை உணவில் வாரம் நான்கு முறை சேர்த்து வர இந்த வலி நீங்கி விடும்.

இனி அதனை எப்படிப் பயன் படுத்துவது என்பதைப் பார்க்கலாம்.

முடக்கத்தான் இலைகளை பறித்து நங்கு கழுவி விட்டு இதனைப் பயன் படுத்த வேண்டும். வீட்டில் இட்லி, தோசை மாவு ஆட்டும் போது இந்த இலைகளை ஒரு கைப்பிடி அளவு போட்டு அரைத்தால் சுவையும் கூடும் சத்தும் சேரும். பொடி உபயோகிப்பவர்கள் நேரடியாக மாவு ஆட்டும் போது கிரைண்டரில் இரு ஸ்பூன் சேர்க்கலாம். மிகவும் எளிய ஆனால் பயனுள்ள வழி இது. மாவுக்கு மிக மிக மெல்லிய இளம் பச்சை நிறம் வரலாம். அதைப் பற்றிக் கவலைப்படத் தேவையில்லை. இயற்கையான நிறம் என்பதால் உடலுக்கு எந்தத் தீங்கும் செய்யாது. இட்லி ஊற்றினால் ஒரு வயதுக் குழந்தைக்குக் கூடக் கொடுக்கலாம். தோசை ஊற்றி பெரியவர்கள் முதல், சிறியவர்கள் வரை அனைவரும் சாப்பிடலாம்.

முடக்கத்தான் சூப்

தேவையான பொருட்கள்

பெரிய தக்காளி -1 (சிறியது என்றால் 2)
பூண்டு - 2 அல்லது 3 பற்கள்
முடக்கத்தான் இலை - 1 கப் (பொடி என்றால் 2 ஸ்பூன்)
மிளகு - 10
சீரகப் பொடி - 1/2 ஸ்பூன்

செய்முறை

முதலில் தக்காளியை மைக்ரோ வேவ் ஓவனில் வைத்து சூடு செய்து கொள்ளுங்கள். தோலுரிக்கும் பதத்துக்கு வர வேண்டும். மைக்ரோ வேவ் இல்லாதவர்கள் கொதிக்கும் நீரில் தக்காளியைப் போட்டு பின்னர் தோலிருத்துக் கொள்ளலாம். தக்காளி சூடு ஆறியதும் தோலுரித்து மிக்சி ஜாரில் தக்காளி, பூண்டு, மிளகு இவைகளைப் போட்டு நன்றாக அரைக்க வேண்டும். தேவையான தண்ணீர் ஊற்றிக் கொள்ளலாம். இந்தக் கலவையை அடுப்பில் வைத்து சூடு செய்யவும். தேவையான உப்பு சேர்க்கவும். இப்போது நன்றாகக் கழுவிய முடக்கத்தான் இலைகளை மிக்சி ஜாரில் போட்டு சிறிதளவு நீர் விட்டு அரைத்துக்கொள்ளவும். நன்கு அரைந்த உடன் இந்தக் கலவையை கொதிக்கும் தக்காளிக் கலவையில் சேர்க்கவும். முடக்கத்தானை சேர்க்கும் முன் குறைந்தது பத்து நிமிடங்களாவது தக்காளி கலவை கொதிக்க வேண்டும். பூண்டு பச்சை வாசனை போன பிறகு தான் முடக்கத்தானை சேர்க்க வேண்டும். பொடி உபயோகிப்பவர்கள் கொதிக்குக் தக்காளிக்கலவையில் மேலும் சிறிது நீர் ஊற்றி இரு ஸ்பூன் பொடியைப் போட்டு நன்றாகக் கலக்கி கொதிக்க விடலாம். கொதிக்க ஆரம்பித்ததும் சிறிது சீரகத் தூளை சேர்த்து மீண்டும் கொதிக்க விடவும். தக்காளி+ முடக்கத்தான் நன்றாகக் கலந்து முடக்கத்தான் பச்சை லேசாக நிறம் மாறும் அதன் பிறகு சுமார் மூன்று நிமிடங்கள் சிம்மில் வைக்கவும். பிறகு அடுப்பை அணைத்து விடலாம்.

சூடாக இருக்கும் போதே ஜூஸ் வடிகட்டியில் வடிகட்டி அனைவருக்கும் பருகக் கொடுக்கலாம். சுவையும் மணமும் நன்றாகவே இருக்கும். உடலுக்கும் எந்தக் கடுதலும் செய்யாத சூப் இது.

முடக்கத்தான் ரசம்

சூப் செய்யப் பிடிக்காதவர்கள் முடக்கத்தனை ரசம் வைத்து சாப்பிடலாம்.

தேவையான பொருட்கள்

முடக்கத்தான் இலை - 1/2 கப் (பொடி 1 ஸ்பூன்)
தக்காளி - 1 (சிறியது)
பூண்டு - 10 பற்கள்
மிளகு - 10 எண்ணிக்கை
தனியா - 1 ஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 2
உளுத்தம் பருப்பு + கடலைப் பருப்பு (சேர்ந்து) - 1 ஸ்பூன்
கடுகு - 1/2 ஸ்பூன் (அரைக்க) 1 ஸ்பூன் தாளிக்க
சீரகம் - 1 ஸ்பூன்
வெந்தயம் - 1/4 ஸ்பூன்
புளி - பெரிய கோலி அளவு
பெருங்காயம் - சிறிது
உப்பு - தேவையான அளவு

செய்முறை:

புளியைக் கரைத்து வைத்துக்கொள்ள வேண்டும். முடக்கத்தான் இலைகளை கழுவி சிறிதாக நறுக்கி வைத்துக்கொள்ள வேண்டும். இப்போது தனியா, பருப்புகள், காய்ந்த மிளகாய், வெந்தயம், கடுகு இவற்றை காய்ந்த மிக்சி ஜாரில் போட்டு நன்றாக பொடித்து வைத்துக்கொள்ளுங்கள். வாணலியில் சிறிது எண்ணெய் ஊற்றி அதில் கடுகு , சீரகம் தாளித்து பின்னர் பூண்டைப் போட்டு வதக்குங்கள். பூண்டு ஓரளவு வதங்கியவுடன் அதில் நறுக்கிய தக்காளியைப் போட்டு வதக்குங்கள். தேவையானால் சிறிது உப்பு சேர்த்துக்கொள்ளலாம். பச்சை வாசனை போனதும் அதில் கரைத்து வைத்த புளியை ஊற்றி பொடியைப் போட்டு முடக்த்தான் இலைகள் (நறுக்கியவை) போடவும். பொடி உபயோகிப்பவர்கள் புளிக்கரைசலோடு சேர்த்து பொடியை பொட்டு விடலாம். சிம்மில் வைத்து விடவும். அவ்வப்போது கரண்டியால் கிளற வேண்டும். சுமார் 15 நிமிடங்களுக்குப் பிறகு பெருங்காயம் சேர்த்து அடுப்பை அணைத்து விடவும். ருசியான இந்த ரசத்தை ஒரு வயதுக் குழந்தைக் கூடக் கொடுக்கலாம். அப்படிக் கொடுக்கும் போது கவனமாக இலைகளை எடுத்து விடுங்கள். பெரியவர்கள் இலையை சேர்த்தே சாப்பிடலாம்.

முடக்கத்தான் ரசம், சூப் செய்து பருகுங்கள் நண்பர்களே! தோசை மாவில் முடக்கத்தனைச் சேருங்கள் உடலுக்கு வலு சேர்க்கும் முடக்கத்தான். செய்து பார்த்து விட்டு, உங்கள் கருத்துக்களை என்னோடு பகிர்ந்து கொள்ளுங்கள் தொழிகளே.
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top