• Please register and if already registered, log in! Read the stories and always share your opinions. Writers expect only your opinions. Thanks

Keladi Kanmani 7

anisiva

SM Exclusive
Author
SM Exclusive Author
Messages
1,589
Likes
7,676
Points
230
Location
Tvl
#1
அத்தியாயம் 7
“ஏன்டி பொம்பளை பிள்ளையா என் கிட்ட விஷயத்தை சொல்லாம, எப்பவும் போல் இப்பவும் அப்பா அப்பாங்குறே...” அன்னையின் கேள்விக்கு பதிலளிக்கவில்லை மைதிலி.
திருமணம் என்றால் பெண்கள் வெட்கப்படுவார்கள், இல்லை ஆர்வமாகவாவது இருப்பர். ஏன் இத்தனை குழப்ப முகமாய் இருக்கிறாள் மகள்?
“என்ன மைதிலி அம்மாவுக்கு தெரியாம நம்ம வீட்டில் என்ன நடந்திருக்கு. இங்கேயே சொல்லு.” குணசீலன் சொல்லவும்,
மென்று விழுங்கியவள், “எனக்கு இப்ப கல்யாணம் வேணாம் ப்பா...” சொன்னதையே சொல்ல,
குணசீலனுக்கு பொறித் தட்டியது. பஞ்சாயத்தில் எத்தனைப் பேரை பார்த்திருக்கிறார்? வயதுக் கோளாறு எல்லா இடத்திலும் வரும்தானே? வெளியில் உள்ளவர்களுக்கு மட்டுமேவா வரும்.?
“மைதிலி அப்பாவை பார். என்ன சொல்லணுமோ அதை நேரிடையா சொல்லு, இப்படி சுத்தி வளைக்கக் கூடாது.”
மாதவனுக்குத் தட்டாமாலையே சுற்றியது.
“அப்பா, நான் ஒருத்தரைக் காதலிக்கிறேன். உங்க சம்மதத்தோடு அவரைத் தான் கல்யாணம் பண்ணனும்னு நினைக்கிறேன்...”
பளார், அப்பா தான் அடித்துவிட்டார் என்று கன்னத்தை பற்றியவள் அவரை நிமிர்ந்து பார்க்க அடித்தது அவரில்லை.லட்சுமி தான் தன் ஆசை மகளை அடித்தது.
“என்ன திமிர் இருந்தா இப்படியெல்லாம் பேசுவே.” என்று மறுபடியும் கை ஓங்கப் போனவரை குணசீலன் தடுத்துவிட்டார்.
“என்ன பழக்கமிது லட்சுமி, பொம்பளை பிள்ளை மேல கை வைக்கிறது. நான்தான் கேட்டுக்கிட்டு இருக்கேனே. நீ அமைதியாயிரு...”
மகளை அதட்ட வேண்டியவர் மனைவியை அடக்கி வைத்தார். மைதிலி அழுதபடியிருந்தாள். குணசீலனுக்குப் பெருத்த அடி. தன் மகள் தன்னை மீறி எதுவும் செய்துவிடமாட்டாள் என்றிருந்தவருக்கு இதை நம்புவது வெகு சிரமமாகவே இருந்தது.
“மைதிலி என்னம்மா சொல்றே. நீயா இப்படி ஒரு காரியம் செஞ்ச.? என்னால் நம்ப முடியலை..” என்று கேட்டவருக்கு, அவள் பதில் சொல்லவில்லை.
“ஏங்க அவ எவ்வளவு பெரியக் கல்லை தூக்கி நம்ம தலையில் போட்டிருக்கா? இப்பவும் அவளை தாங்குறீங்க? என்கிட்ட விடுங்க அவளை.”
“என்ன பண்ண போறே லட்சுமி. நமக்குன்னு இருக்கிற ஒரே பொண்ணையும் கொன்னுட போறியா?”
லட்சுமி அமைதியாகிவிட, மைதிலி பக்கம் திரும்பியவர், “மைதிலி நீ விஷயத்தை முழுசா சொன்னா தான் நான் என்ன பண்றதுன்னு யோசிக்கணும், சொல்லு ம்மா, யார் அந்த பையன்...” என்று வினவினார்.
‘இப்படியொரு பெண் சொல்லியும் எந்த அப்பனும் இத்தனை நிதானம் காட்ட மாட்டான், இந்த மனுஷனை வச்சிக்கிட்டு...’ லட்சுமி கணவனை மனதில் கரித்துக் கொண்டிருந்தார்.
குரல் தழுதழுக்க அவர் மைதிலியிடம் முகிலை பற்றி கேட்கவும், அத்தனை நேரமும் இருந்த குற்ற உணர்வு மிஞ்சி அவர் தோளில் ‘அப்பா...’ என்று சாய்ந்துகொண்டு அழ ஆரம்பித்தாள்.
அழுத மகளின் முதுகைத் தடவி கொடுத்தவருக்கு அதற்குமேல் என்ன சொல்வதென்றே தெரியவில்லை. அத்தனை அதிர்ச்சி. தன் மகள் தன்னை மீறிச் சென்றுவிட்டாள் என்ற ஆற்றாமை. சற்று நேரம் அழுது தீர்த்தவள், தந்தை கேட்டதற்கு பதில் சொல்ல ஆரம்பித்தாள்.
“அவர் பெயர் முகில், தஞ்சாவூரில் ஒரு கம்பியூட்டர் சென்டரில் பார்த்துக்கிட்டோம்...” என்று சொல்லியவள் தந்தையை நிமிர்ந்து பார்த்தாள். அவர் எவ்வித முகமாற்றத்தையும் தன் மகளிடம் காட்டிக் கொள்ளவில்லை. முகிலை அவர் தவறாக எண்ணிவிடக் கூடாதென்று,
“உங்களைப் பத்தி தெரிஞ்சிக்கிட்டு, அவர் விலகித் தான் போனார். நான்தான் என் மனசில உள்ளதை முதலில் சொன்னேன். முகில் ரொம்ப நல்லவர் ப்பா. உங்களைப் போலவே, என் மேல ரொம்பப் பாசமா இருப்பார்...”
இவர்கள் உரையாடலைக் கேட்டபடி நின்றிருந்த லட்சுமி,
“ஏன் டி இதே ஊரா இருந்தா மட்டும் போதுமா? என்ன ஜாதியோ. பெத்தவங்க நாங்க இருக்கோம், நாங்க பார்த்து கல்யாணம் செஞ்சு வைக்க மாட்டோமா? அதுக்குள்ள நீயே தேடிக்கிட்டியா?” தன் ஆத்திரத்தை காட்ட, மைதிலியிடம் பதில் இல்லை.
இந்தப் பேச்சில் முடிவென்பதே இல்லையோ என்று மாதவன் எண்ணும் அளவிற்கு, கேள்விகளும், விவாதங்களும் நடுஜாமம் வரையிலும் தொடர்ந்தன. இதற்கிடையில் லட்சுமி பேசுகின்ற எதிர்மறையான விஷயங்களை, கோபம் கொண்டாலும் அதை வெளிக்காட்டாமல் சமாளிக்கவும் செய்தாள் மைதிலி. பேச்சு முடித்து மைதிலி அவர்களை விட்டு அகல்கையில் ஜீவன் வடிந்தே போனாள்.
இது நடக்குமா? தன் காதல் நிறைவேறுமா? அப்பா எதுவும் வெளிக்காட்டவில்லை என்பதால் அவரை நம்பலாமா? இல்லை அம்மா மேலும் ஏதாவது பேசி அவரை மாற்றிவிடுவாரா? ஒன்றும் புரியவில்லை. யோசிக்கவும் திராணியில்லை.
இந்த எண்ணத்துடனேயே தன் தம்பி மாதவனைப் பார்த்தபடி அவள் சென்றுவிடவும், அவனுமே அந்த இடத்திலிருந்து நகர்ந்துக்கொண்டான்.
நமக்கு என்ன வம்பா? தெரிந்த மாதிரியே காட்டிக்கக் கூடாது என்ற எண்ணம் அவனுக்கு. பிள்ளைகள் இருவரும் சென்றதும், பெற்றவர்கள் அதே விஷயத்துக்காக விவாதித்துக் கொண்டதை மாதவனுடன் சேர்ந்து மைதிலியும் அறிய வாய்ப்பு இல்லாமல் போனது.
அடுத்த நாளிலிருந்து தீவிரமான விசாரணை. ஜெய் பயந்தது போல் அவன் கடைக்கு வந்த குணசீலன், முகிலைப் பற்றி அவனிடம் விசாரிக்க ஆரம்பித்தார்.
“தம்பி, என்னால் உனக்கு எந்தப் பிரச்சனையும் இருக்காது, ஒழுங்கா அவன் வேலை விஷயம், வீட்டு விலாசம் எல்லாத்தையும் சொல்லிடு...”
அவர் தனியாக மிரட்டவெல்லாம் வேண்டாம். தன்னுடன் ஒரு ஆஜானுபாகவனாய் ஒரு ஆளை அழைத்து வந்து ஒரு சின்னப் பையனிடம் இப்படிக் கேட்டால், சொல்லிவிடமாட்டானா?
அதுவும் அவன் ஏற்கனவே அவர் விஷயத்தில் பதறிப்போனவன் ஆயிற்றே. விலாவரியாக முகிலைப் பற்றி அனைத்தையும் சொன்னவன், அவர்கள் வீட்டு விலாசம் கூட அவரிடம் தந்துவிட்டான்.
“பரவாயில்லையே பிழைக்கத் தெரிஞ்சவனா இருக்கே, நண்பன் அது இதுன்னு பிரச்சனை பண்ணுவியோன்னு பார்த்தேன்...” அவன் முதுகைச் சற்று பலமாகவே தட்டிவிட்டு அங்கிருந்து கிளம்பிவிட்டார்.
அவர் போவதை பார்த்தபடி, ‘நண்பன் இல்லை அவன் தான் இனி என்னோட முதல் எதிரி’ என்ற அதே எண்ணத்துடன் முகிலுக்கு ஃபோன் செய்து நடந்தவற்றைச் சொல்லிவிட்டான் ஜெய்.
முகிலுக்கு என்ன செய்யவென்று தெரியவில்லை. சென்னை ஆபிஸ் வரையிலும் அவன் மாமனார் ஆள் வைத்து விசாரித்திருக்கிறார், சற்று முன்பு தான் ஆபிஸில் இருந்தும் தகவல் வந்தது. இப்போது ஜெய்யையும் விட்டு வைக்கவில்லை. அடுத்துக் கட்டாயம் அவனின் வீடு தான்.
அவர் சென்று குட்டையைக் குழப்பும் முன் நாமே ஆஜர் ஆகிவிடுவோம். நினைத்தபடி அவன் தந்தைக்குப் ஃபோன் போட, அவர் எடுத்தாரில்லை. முகிலுக்குப் பதட்டமாகிவிட்டது. விடாமல் பல தடவை முயற்சி செய்தும் பதில் இல்லை.
அதே நேரம் இன்னொரு லைனில் மைதிலி போன் செய்தாள். அவன் இணைப்பை எடுக்க, “முகில்...” என்று அழுதாளே தவிர, வார்த்தைகள் எதுவும் இல்லை.
“மைதிலி, என்ன ஆச்சு? ஏன் அழறே?”
“முகில் அப்பாக்கிட்ட விஷயத்தைச் சொல்லிட்டேன்.”
‘நீ பார்த்த வேலை தானா?’ என்றெண்ணியவன், “என்னம்மா, நான் தான் கொஞ்ச நாள் பொறுத்துக்கோன்னு சொல்லியிருந்தேனே.”
“நானா சொல்லலை முகில், அவங்க மாப்பிள்ளை பார்க்க ஆரம்பிச்சிட்டாங்க, அதான் சொல்ல வேண்டியதா போயிட்டது.”
அவனுக்கு ஒன்றுமே ஓடவில்லை. மைதிலி தொடர்ந்தாள்.
“அப்பா தஞ்சாவூர் போயிருக்கிறாராம். உங்களைப் பத்தி விசாரிக்கத் தான் இருக்கும். என் ஃபோனும் வாங்கி வச்சிட்டாங்க. இப்ப தான் மாதவன் எடுத்துத் தந்தான். எனக்குப் பயமா இருக்கு முகில்...”
“என்ன மைதிலி, தைரியமா இருக்க வேண்டிய சமயத்தில, இப்படி பயப்படுறே...” என்றவனின் எகிறிக்கொண்டிருந்த இதயத்துடிப்பு அவளுக்குக் கேட்க வாய்ப்பில்லையே.
“கொஞ்சம் தைரியத்தை வளர்த்துக்கோ, என்னதான் நடக்குதுன்னு பார்க்கலாம்.”
“வச்சிடுறேன்...”
“சரி மைதிலி. நல்லதே நடக்கும், நம்புவோம்...”
முகிலின் சென்னை ஆபிஸில் அவனைப் பற்றித் தெரிந்தவர்களை வைத்து விசாரித்தவருக்கு அவன் ஜப்பான் சென்றுவிட்ட தகவல் கிடைக்கவும், மைதிலியிடம் அவன் உண்மையைத் தான் சொல்லியிருக்கிறான் என்றிருந்தது. ஏமாற்றுக்காரனாக இருக்குமோ என்ற ஐயம் இப்போது இல்லை. எப்போதும் மகள் பக்கம் ஒத்துப்போகும் மனம் இப்போதும் அவள் பக்கமே நின்றது.
ஆனால் இந்த ஜாதி வித்தியாசமும், ஊர்த் தலைவர் என்ற போர்வையும் அவரைச் சில நல்ல முடிவுகளை எடுக்கவிடாமல் தடுத்தது. தன்னை எடுத்துக்காட்டாக கொண்டு பலரும் தப்பிப் போய் விடுவார்களே என்ற யோசனையில் மூழ்கியபடியிருந்தார்.
முகில் சென்னையில் பணிபுரிந்த சமயம் அவன் ஜூனியர் கார்த்தி, அவனின் ஆபிஸ் பக்கமே வந்து வேலையில் சேர்ந்தான். மதிய உணவு வேளைகளில் அடிக்கடி சந்திக்க ஆரம்பித்தவர்கள் நண்பர்களாக மிகவும் நெருங்கி விட்டிருந்தனர். ஏற்கனவே கார்த்தியை முகிலுக்குப் பிடிக்கும் என்பதால், இது நடந்ததில் ஆச்சரியமில்லை.
அவனும் கார்த்தியும் சேர்ந்து தனி வீடெடுத்து தங்க ஆரம்பித்து விட்டனர். முகில் நண்பர்கள் விஷயத்தில் ‘லிமிட்' என்பதால், கார்த்தியிடம் மைதிலி விஷயத்தைச் சொன்னதில்லை. விரைவில் வெளிநாட்டுக்கும் போய்விட்டவன், காதல் விஷயத்தையும் அவனோடு மட்டுமே வைத்திருந்தான்.
இந்தப் பிரச்சனை ஆரம்பித்த சமயத்தில் கார்த்தியும் ஜப்பான் வந்துவிட்டான். மைதிலி வீட்டில் விசாரணை கமிஷன் அமைத்து விசாரிக்க ஆரம்பித்த சமயம், கார்த்தி சென்னை வீட்டில் இருந்திருந்தால் எல்லா விஷயமும் அவனுக்கும் தெரிய வந்திருக்கும்.
இப்போது முகிலின் தந்தை ஃபோனை எடுத்த பாடில்லை. ஜப்பானின் புது கம்பெனி, ஜப்பானிய மொழி படிப்பு என்று அவன் மூளையை ஆக்கிரமிக்கும் வேலைகள் பலவும் நடந்துக்கொண்டிருந்தது, அதையும் இந்தப் பிரச்சனையும் யோசிப்பதிலேயே அவன் நாட்கள் சென்றது. இரண்டொரு நாளில் அவன் தந்தை அழைத்தார் அவனை.
“அப்பா ஏன் ப்பா ஃபோன் எடுக்கலை?” அவர் வரையிலும் விஷயம் வந்துவிட்டது என்பது முகிலுக்குத் தெரியாதே.
“கீழே விழுந்து உடைஞ்சி போச்சு, இன்னிக்கு தான் வேற வாங்கிட்டு வந்தேன்...” என்றவர் அமைதியாய் இருக்க, இவனே தொடர்ந்தான்.
“அப்பா உங்கக்கிட்ட ஒரு விஷயம் சொல்லணும்னு முயற்சி பண்ணிக்கிட்டிருந்தேன்.”
“என்ன...?”
“ப்பா, வந்து... நான் நம்ம ஊரில் ஒரு பொண்ணை காதலிக்கிறேன். அவளைத் தான் கல்யாணம் பண்ணிக்கணும்னு நினைக்கிறேன்...”
தந்தை தனக்கு ஆதரவாய் இருப்பார் என்ற நம்பிக்கையில் விஷயத்தைச் சொல்லிவிட்டான்.
‘’தெரியும்...” என்றார் ஒற்றைச் சொல்லில்.
“எப்படி, ஜெய் சொன்னானா?”
“இல்லை. அந்தப் பொண்ணோட அப்பா சொன்னார், நம்ம வீட்டுக்கு நேரில் வந்து.”
முகிலின் நெஞ்சு, தன் குதிரை ஓட்டத்தை மீண்டும் ஆரம்பித்துவிட்டது.
“என்கிட்ட நீ ஒரு வார்த்தை இதைப் பத்தி சொல்லலையே. யாரோ ஒரு ஆள் வந்து சொன்னதுக்கு அப்புறம்தான் என் பையனுடைய லட்சணம் தெரியுது. எனக்கு எப்படி இருந்திருக்கும்னு யோசிச்சுப் பார்.”

 
anisiva

SM Exclusive
Author
SM Exclusive Author
Messages
1,589
Likes
7,676
Points
230
Location
Tvl
#2
“அப்பா, அது சொல்லத்தான் ஃபோன் பண்ணிட்டு இருந்தேன், லைன் கிடைக்கலை.”
“கிட்டத்தட்ட ஒரு வருஷமா அந்தப் பொண்ணை லவ் பண்றே, அப்போ எல்லாம் உனக்கு என்கிட்ட சொல்லத் தோணலை. பிரச்சனைன்னதும் அப்பா ஞாபகம் வந்ததா?”
“...”
“என்னடா வேலை செஞ்சு வச்சிருக்க? நீ சும்மா சும்மா ஊருக்கு வரும் போதே எனக்குச் சந்தேகம்தான். விசாரிக்காம விட்டுட்டேன். வந்தவர் யார் தெரியுமா? ஊர்ல பெரிய ஆளு. அவர் பொண்ணை காதலிக்கிறேன்னு சொன்னா விட்டிடுவாரா? அப்படி ஈசியா கல்யாணம் பண்ணிக்கலாம்னு எவன்டா உனக்கு ஐடியா கொடுத்தான், இந்த ஜெய் தானே?”
ஜெய் அங்குத் தான் இருந்தான் போல, “ஐயோ மாமா, நான் இதெல்லாம் வேண்டாம்னு தான் சொன்னேன், முகில் தான் கேட்கலை...” அந்தப் பக்கம் அவன் சொன்னது ஃபோனில் தெளிவாய் கேட்டது முகிலுக்கு.
“அவங்க அப்பா தன்மையா இது சரிவராதுன்னு சொல்லிட்டு போயிட்டாரு. நானும் உன்கிட்ட பேசுறேன்னு சொல்லியனுப்பியிருக்கேன்...” என்று அவன் தந்தை தொடர்ந்ததும் இவன் நெஞ்சுத் துடிப்பு நின்று போகும் அளவிற்கு வலி.
“அப்பா, என்னால மைதிலி இல்லாம வாழ முடியாதுப்பா...”
பத்மநாதனுக்கு பேச்சு வரவில்லை. இந்தப் பிள்ளைகளுக்கு என்ன இத்தனை அவசரம் எல்லாவற்றிலும்? நிதானம், எதிர்காலச் சிந்தனை எதுவும் இல்லாமல் இருக்கிறானே.
“முகில் என்னடா பேசுறே? அவர் சொன்னதுக்கு அப்புறமும் எந்தத் தைரியத்தில் நாம போய்ப் பேசிட முடியும்? நீ அந்தப் பொண்ணை மறக்கிறது தான் உனக்கு நல்லது...” என்றார் உறுதியாய்..
“முடியாது ப்பா...”
“நேரில் இருந்தேன்னா அறைஞ்சிருப்பேன் ராஸ்கல். என்ன பேச்சுடா இது? ரெண்டு நாளா இந்தப் பிரச்சனையில் மண்டை காஞ்சி போய் இருக்கோம் நானும் அம்மாவும். நீ எங்கையோ இருந்துக்கிட்டு, சொன்னதையே திரும்பச் சொல்றே...”
“அப்பா...”
“நான் சொல்றதை கேளு, அந்த ஆளு ஒரு காலமும் இந்தக் கல்யாணத்துக்கு ஒத்துக்க போறதில்லை. நீ வீணா பிடிவாதம் பிடிக்காம, உன் வேலையில கவனம் வை. எல்லா காதலும் ஜெயிக்கிறது இல்லை. அவ்வளவு தான் சொல்வேன்...”
தந்தை இப்படிச் சொல்லிடுவார் என்று சத்தியமாய் அவன் நினைத்திருக்கவில்லை. பலத்த அடி. அவனுக்கு இருக்கும் கொஞ்ச நஞ்ச நம்பிக்கையும் இவரிடம் பேசி வீணானது.
 
Advertisement

Latest Episodes

Advertisements

Top