• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Keladi kanmani epi 1

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

anisiva

SM Exclusive
SM Exclusive
Joined
Jan 17, 2018
Messages
1,578
Reaction score
7,649
Location
Tvl
கேளடி கண்மணி
அத்தியாயம் 1
ராசாத்தி ஒன்ன காணாத நெஞ்சு காத்தாடி போலாடுது
ராசாத்தி ஒன்ன காணாத நெஞ்சு காத்தாடி போலாடுது
பொழுதாகிப் போச்சு விளக்கேத்தியாச்சு
பொன்மானே உன்னத் தேடுது...
அந்தப் பாட்டு தனக்கானதை போல் அதனைக் கேட்டபடி தன் ஒட்டத்தைத் தொடர்ந்தான் முகில். திக்கில்லா ஓட்டம். கண்கள் பழைய ஞாபகத்தில் கலங்க ஆரம்பித்தது.
செய்வதறியாது அப்படியே ஓடிக்கொண்டிருந்தவன் சற்று நேரத்தில் நின்று தன்னை ஆசுவாசப்படுத்தி, பாலத்தின் கைப்பிடி வழியாக எட்டிப் பார்த்தான். கீழே ஆறு.
இவன் நிற்க ஆரம்பித்த சமயத்தில் பிடித்த மழை இப்போது அடித்து ஊற்றிக் கொண்டிருந்தது. வெறும் மழை மட்டுமே இருந்திருந்தாலும் பரவாயில்லை, காற்றும் சேர்ந்து அந்த ஊரை சுழற்றியடித்தது. அவன் மனநிலையை ஒத்தது போல் இருந்தது அந்த இருண்ட வானமும்.
மாதங்களாகியும் ஷேவ் செய்யாத தாடியுடன், கண்களில் துளியும் ஜீவன் இல்லாமல் இருந்தான். பாலத்தின் விளிம்பில் நின்றபடி இப்போது ஆற்றை விடுத்து, இருண்ட வானை வெறித்துப் பார்க்க ஆரம்பித்திருந்தான்.
அவன் சோகத்தை அறியாத இயற்கையோ அதன் பங்குக்கு அவனை முழுவதுமாக நனைத்துக் கொண்டிருந்தது. அன்று புயல் அபாயம் என்பதால் ஆளைத் தூக்கியடித்து விடும் போல் அத்தனை காற்று.
இத்தனை களேபரத்திலும் அங்கு நின்றுகொண்டிருக்கும் ஒரு ஜீவன் அவன் மட்டுமே. வாழ்க்கையில் நிற்காமல் ஓடிக்கொண்டிருக்க ஒரு பிடிப்பு வேண்டும். அது இப்போது அவனிடத்தில் இல்லை. யாருக்காக வாழ வேண்டும் என்ற விரக்தி மட்டுமே எஞ்சியிருந்தது.
‘நடந்து முடிந்த துன்பங்கள் இத்தனைக்கு பிறகும் நான் வாழ்ந்து என்னவாகப் போகிறது? யாருக்காக வாழ வேண்டும்? இங்கிருந்து குதித்தால் ஒன்று கூட மிஞ்சாது. செய்துவிடலாமா...?’
மின்னல் வெட்டி சென்ற அந்த நொடியில் ஒரு கோழையைப் போல் அவன் எண்ணம் போக சிரமப்பட்டு அதிலிருந்து தன் மனதைத் திருப்பினான். கடவுளால் படைக்கப்பட்ட உயிரைக் கொல்ல எவருக்கும் உரிமை இல்லை, அது தன்னுடையதாகவே இருந்தாலும். மழை அவனை முழுவதும் நனைத்திருக்க, அவனின் கண்ணீரும் மழை நீரோடு சேர்ந்து வடிந்தது.
பாலத்தின் விளிம்பில் நின்றிருந்தவனைப் பார்ப்பவர்கள் அவன் விபரீத முடிவு எடுக்க மட்டுமே இப்படி நிற்கிறான் என்று நிச்சயம் சொல்லிவிடுவர். மனம் வெறுமையாய் இருக்க திக்கில்லாமல் வெறித்துக் கொண்டிருந்தவன், எத்தனை நேரம் அசையாமல் அதே இடத்தில் நின்றானோ, கணக்கில்லை.
உடலில் குளிர் ஊடுருவ ஆரம்பித்ததும் வேகமாய்த் தன் வீட்டின் திசையில் ஓட்டத்தை தொடர்ந்தான். மின்தூக்கியில் இவன் ஏறிய பின் அது மூடும் பொழுதில் கார்த்தியும் தொற்றிக்கொண்டான் அதனுள்.
தெப்பலாக நின்றிருந்த முகிலை பார்த்து, “என்ன முகில், எவ்வளோ வருஷமா இந்த ஊரில் இருக்கே. இந்த மழையில் நனையலாமா? உடம்புக்கு எதாவது வந்தா உன்னை யார்...?” சொல்ல வந்ததைப் பாதியில் நிறுத்தியவன், “ஏன் டா...?” என்று முடித்தான், ஆதங்கமாய்.
எதுவும் பதில் பேசாது பதினாலாவது மாடியில் இருந்த அவன் வீட்டினுள் அவனுடன் வந்ததும், “உட்காரு கார்த்தி...” என்று முகில் உபசரிக்க,
கார்த்தியோ அங்கு ஒரு துவாளையைத் தேடி எடுத்து முகிலின் தலையைத் தானே துவட்டி விட ஆரம்பித்தான். அவன் செய்கையில், தன்னை நிதானத்திற்குக் கொண்டு வந்த முகில்,
“பரவாயில்லை கார்த்தி, விடு நான் பார்த்துக்குறேன்...” என்றபடி அந்தப் பணியைத் தொடர்ந்து தன் ஈரத் துணிகளையும் மாற்றினான்.
கார்த்தி அமர, அவனுக்காக டீ தயாரித்துத் தந்தபடி அவனருகில் இவனும் அமர்ந்தான். அருகருகே இருந்தாலும் அவர்களுக்குள் நீண்ட நேர அமைதி.
கார்த்திக்கு புரிந்தது, முகிலின் கலங்கிய கண்களைச் சற்று முன்பு கண்டிருக்கிறானே. தன் நண்பனுக்கு எத்தனை துன்பம்? கடவுளே அவனுக்கு ஏன் இப்படி விதித்தாய்? யோசனையில் இருவரும் மூழ்கியிருக்க, கார்த்தியின் ஃபோன் அடித்தது.
“சொல்லு திவ்யா, ஆமா முகில் கூட தானிருக்கேன். ம்ம் சரி, அவன் கூட போய் கேக் வாங்கிட்டு வந்திடுறேன். வேற எதுவும் வேணுமின்னா மெசேஜ் பண்ணு...”
கார்த்தியின் பேச்சுக் காதில் விழவும், இன்று அவனை வெளியே அழைத்துச் செல்ல வேண்டிய வேலை நினைவில் வந்தது முகிலுக்கு.
“சாரி கார்த்தி, சுத்தமா மறந்துட்டேன். ஃபோன் பண்ணியிருந்தியா என்ன...?” என்றபடி வீட்டில் மறந்து விட்டுச் சென்ற தன் ஃபோனை எடுத்துப் பார்க்க ஏழெட்டு மிஸ்ட் கால்கள் அவனிடமிருந்து.
போனை இத்தனை முறை அடித்தும் அவன் எடுக்கவில்லை என்ற பதட்டத்தில் அவன் வீட்டிற்கு ஓடி வந்திருக்கிறான் கார்த்தி. அதைச் சொல்லாமல்,
“பரவாயில்லை, இப்ப போகலாமா? உனக்கு ஓகே வா? சாரி என் வேலைக்காக உன்னைத் தொந்தரவு பண்றேன்...” என்றவனிடம்,
“பரவாயில்லை வா...” என்றுசொல்லி அழைத்துச் சென்றான்.
இருவரும் மின்தூக்கியில் மறுபடியும் கீழிறங்கினர். அந்த விடாத மழையிலும் சாலையில் சொட்டு நீர் தேங்கவில்லை. அந்த ஊரின் கட்டமைப்பு அப்படி தேங்க விடவில்லை. சாதாரணமாய் எல்லா வண்டிகளும் ஊர்ந்து கொண்டிருந்தது.
கார்த்தி முகிலின் உயிர் நண்பன்.
காலேஜில் அவனுக்கு ஜூனியர். நல்லவன் என்று முகிலுக்கு தோன்ற, படிப்பில் அவனுக்குத் தேவைப்பட்ட உதவிகளைச் செய்திருக்கிறான். அதன்பின் சென்னையில் வேலைக்காகக் தங்கிய சமயம் தன் ரூம்மேட்டாய் ஆனவன்.
யாரையும் எளிதில் நண்பனாக்கிக் கொள்ளாத முகிலிடம் இத்தனை நெருங்கியது கார்த்தியின் முயற்சியால் மட்டுமே. ஆரம்பத்தில் ‘முகில் அண்ணா’ என்றழைத்தவன் காலப்போக்கில் பெயர் சொல்லி அழைக்கும் அளவிற்கு நெருங்கிவிட்டான். சென்னையில் வேலை நிமித்தமும் சில வருடங்கள் சேர்ந்து தங்கியிருந்தனர்.
ஜப்பானில் ஆன்சைட் என்று முகில் வந்தான் முதலில். இருவரும் வெவ்வேறு நாட்டிலிருந்தாலும் அவர்கள் நட்பு தொடர்ந்தது. ஜப்பானின் பாஷை பிரச்சனையில் உழன்று கொண்டிருந்த முகில் ஆரம்ப நாட்களில் அதைப் படிப்பதில் மூழ்கினான்.
இவன் செயல்படுத்திய திட்டத்தை நண்பனுக்கும் சொல்லி அவனைச் சென்னையிலேயே ஜப்பானிய பாஷையைப் படிக்க வலியுறுத்தினான். கார்த்தியும் அவன் சொன்னதைப் பின்பற்ற, அதன் விளைவாய் விரைவில் ஜப்பானிலும் அவர்கள் ரூம்மேட்ஸ். முகிலின் உதவியால் வேறொரு கம்பெனி மூலம் வந்துவிட்டான் கார்த்தி.
கார்த்தி வந்து சேர்ந்ததில் ஆரம்ப நாளில் மிகவும் உற்சாகமாகவே இருந்தது இருவருக்கும். முகிலுக்கு சுத்தமாகச் சமைக்க வராது. ஆக எல்லாமே கார்த்தி வேலை தான்.
“அண்ணே கொஞ்சம் உதவி செய்ங்கண்ணே...”
கெஞ்சிப் பார்த்தாலும் அவன் அசறுவது கிடையாது. வெந்து நொந்து இவன் செய்ய அதைச் சாப்பிடுவது மட்டுமே முகிலின் பணி.
“இதுக்குத் தான் உன்னை ஜப்பானுக்குக் கூப்பிட்டு வந்தேன், சும்மா செய்டா...” என்பான்.
கிட்சன் விஷயத்தில் டிமிக்கி கொடுத்தாலும் வீட்டின் மற்ற வேலைகள் முகில் செய்வான். நம் ஊரைப் போல் வேலைக்கு ஆள் வைப்பதெல்லாம் அங்குக் கட்டுப்படியாகாது. அதனால் எல்லாரும் பின்பற்றும் ஒரே பாலிஸி ‘தன் கையே தனக்கு உதவி...'
சுறுசுறுப்புக்குப் பெயர் பெற்ற மக்கள் ஜப்பானியர்கள். அவர்களின் நடையே நாம் ஓடும் வேகத்தை மிஞ்சும். ரஜினி ஒரு படத்தில் சொன்னது 'வேலை பார்க்கலைன்னா ஜப்பான்காரன் செத்துடுவான்...' என்று. அது அத்தனை உண்மை.
இப்படி ஒரு ஊரில் அவர்களுக்கு ஈடாக நம்மவர்களும் வேலை செய்ய வேண்டும் என்பது எளிதான காரியம் அல்லவே.
முகிலுக்கு படிப்பதில் ஆர்வம் அதிகம். ஒருபக்கம் பாஷையை கற்றுத் தேர்ந்தவன் அடுத்ததாக தன் வேலையில் தனக்கான முன்னேற்றத்திற்குத் தேவையானதை படிக்க ஆரம்பித்திருந்தான். வெட்டிக் கதை வீண் பொழுது போக்குவது என்று எதிலும் அவன் கவனம் செல்லாது. வேலையைத் தவிர மற்றொரு இடத்தில் அவன் கவனம் இருந்தது என்பதைப் பின்னாளில் மட்டுமே கார்த்தி அறிந்தான்.
கார்த்தி முகில் போலில்லை. சில தமிழ் நண்பர்களை அங்குப் பிடித்து அவர்களுடன் நேரம் செலவழிக்க ஆரம்பித்தான். ஊர் சுற்றுவதும், படம் பார்ப்பதும் அவனின் முக்கிய பணி. ஆட்டம் ஜாஸ்தியாகி அவர்கள் வீட்டிலும் மற்றவர்கள் சில சமயம் டேரா போட ஆரம்பிக்க, முகில் முதலில் சில தடவை கண்டு கொள்ளவில்லை.
ஆனால் அதே நிலை தொடரவும் முகிலுக்கு நண்பனின் போக்குச் சுத்தமாகப் பிடிக்காமல் போனது. கார்த்தியை பிடித்துக் கண்டபடி ஏசிவிட்டான்.
“கார்த்தி இந்த வயசில உன் தகுதியை உயர்த்திக்க நிறைய உழைக்கணும். இத்தனை ஃப்ரீ டைம் உனக்குப் பின்னாடி கிடைக்காது, கல்யாணம் குழந்தைன்னு பிஸி ஆயிடுவே. உருப்படியா நேரம் செலவழிக்காம எப்ப பார்த்தாலும் என்ன வெட்டி கதை உனக்கு?”
அவன் சொன்னது சரிதான் என்றாலும், கார்த்தி ஒத்துக்கொள்ளாமல் தனக்குத் தானே வாதாடினான்.
“அதான் ஜாப்பனீஸ் படிச்சிட்டு தானே இருக்கேன்...”
அவனை முறைத்தபடி, “எவ்வளவு நாளா படிக்கிற? நீ ஊரில் ஆரம்பிச்ச வேகத்துக்கு இந்நேரம் லெவல் ஒன் வரை முடிச்சிருக்கணும், செஞ்சியா?” என்று, முகில் சரியாகக் கேட்டாலும்,
“எப்ப பார்த்தாலும் என்னால படிக்க முடியாது முகில் அண்ணே...” சமாதானமாகச் சொல்ல முயன்றவனை,
“உன் நல்லதுக்குத் தான் சொல்றேன். உனக்கு இந்த மாதிரி என்ஜாய் மட்டுமே பண்ணனும்னா தனியா வீடு பார்த்து போயிடு...” உறுதியாய் சொல்லிவிட்டான் முகில்.
கார்த்திக்கு ரோசம் பொத்துக் கொண்டு வந்தது.
‘இவன் எப்படி என்னைச் சொல்லலாம்?’
அந்த பிரச்சனைக்குப் பின் சில நாட்கள் இருவருக்கிடையே பேச்சுவார்த்தை இல்லை. ஏன் கார்த்தி அவர்கள் வீட்டுக்கு வருவது கூடக் குறைந்து விட்டது. தூங்குவதற்கு மட்டுமே என்பதுபோல் வர ஆரம்பித்தான்.
முகிலும் சட்டை செய்யவில்லை, தானே பட்டு திருந்தட்டும் என்று விட்டுவிட்டான்.
கார்த்திக்கு நிதர்சனம் புரியவில்லை. அவனாக உணர்வதே சாலச் சிறந்தது என்று முகிலும் நிலையாய் நிற்க, நண்பர்களுக்குள் இடைவெளி அதிகமானது. கால விரயம் எத்தனைச் சேதம் உண்டாக்கும் என்பதை கார்த்தி உணர இயற்கை வெகு விரைவில் வழி வகுத்தது.
கார்த்தியுடன் பத்து கிலோமீட்டர் அப்பாலுள்ள அந்த கேக் ஷாப் அடங்கிய மாலிற்கு வந்தவன், கார் பார்க்கிங்கில் காத்திருந்து தன் சிந்தனையைத் தொடர்ந்தான்.
புலி தன் காயத்தைத் தானே கீறிக்கொண்டு வருந்துவதைப் போல், மனக்கஷ்டம் தரும் என்று தெரிந்தாலும் சிந்தனை அதை ஒட்டியே இருந்தது. ஒரு மணிநேரத்தில் கார்த்தி அத்தனை சுமையையும் தனியாய் தூக்கிக் கொண்டு திரும்ப, அவர்களின் பயணம் இப்போது வீடு நோக்கி.
இத்தனை நேரமும் அடித்துத் துவைத்த மழை நின்றுபோய், இப்போது சூரியன் மெதுவாக எட்டிப்பார்க்க, எதுவும் பேசாமல் வண்டியைக் ஓட்டிக் கொண்டிருந்தான் முகில். கார்த்தியை அவன் பில்டிங் வாசலில் இறக்கி விட,
“பெர்த் டே பார்ட்டி சாயங்காலம் ஏழு மணிக்கு. கட்டாயம் வந்திடு முகில்..” அவனுக்குப் பிடிக்காதென்று தெரியும் இருந்தாலும் நண்பனை அப்படியே விட மனசில்லை.
“இல்லை கார்த்தி. நான் வரலை...”
“ப்ளீஸ் முகில், நிரல்யா உன்னைக் கேட்டுக்கிட்டேயிருந்தா. எங்களுக்கும் நீ வந்தா தான் சந்தோஷம். வாங்க அண்ணே ப்ளீஸ்...”
சட்டென்று அவன் மரியாதைக்குத் தாவியதைப் பார்த்து முறுவலித்த முகில்,
“சரி, மத்தவங்க எல்லாரும் கிளம்பியதும் கால் பண்ணு, நான் வர பார்க்கிறேன்...” என்றபடி புறப்பட்டான்.
நிரல்யா என்றால் முகிலுக்கு இஷ்டம். மைதிலிக்கு என்னவெல்லாம் பிடிக்குமோ அதெல்லாம் கட்டாயம் இவனுக்கும் பிடித்தது. அதில் நிரல்யாவும் அடக்கம். தங்கக் கொலுசில், அவளுக்கென்று டிசைன் செய்திருந்த ஒரு பட்டுப் பாவாடை சட்டையில் குட்டி தேவதை போல் இருந்தாள், கார்த்தியின் பிள்ளை.
அவளின் பிறந்தநாளுக்கு வந்திருந்த அத்தனை பரிசு பொருட்களையும் அவனிடம் தந்து பிரித்துத் தருமாறு கேட்டாள்.
கார்த்தி தன் பங்குக்குப் பிரிக்க முயன்றதையும், வாங்கி, “அப்பா நோ. மாமா யூ...” என்றாள், முகிலிடம் நீட்டியபடி. அவன் மட்டுமே அதை செய்ய வேண்டுமாம்.
அவள் செய்கையில் புன்முறுவல் பூத்தது முகிலின் முகத்தில். கார்த்திக்கும், முகில் வந்து தன் மகளுடன் விளையாடிவிட்டுச் சென்றது அத்தனை ஆறுதலாக இருந்தது.
நிரல்யா, ‘மாமா மாமா...’ என்று மழலையில் அவனைச் சுற்றிவர அவன் அந்த இரண்டு வயது பிள்ளைக்கு இணையாய் பேச்சுக் கொடுத்தான்.
அன்று முற்பகலில் அவன் ஃபோனை எடுக்காததும், இவன் சென்ற சமயம் வாடிய முகமாய் நின்றதும் மனதை நெருடிக் கொண்டிருக்க, இந்நொடி அதெல்லாம் மாயம். சில மணிநேரமாவது தன் நண்பன் தன் துன்பத்தில் இருந்து வெளிவந்தானே, அதுவரை சந்தோஷம் என்றெண்ணினான் கார்த்தி.
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
:D :p :D
நான்தான் First,
அனிசிவா டியர்
 




Last edited:

banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
அனிசிவா டியர்
 




Last edited:

Mathiman

அமைச்சர்
Joined
Feb 19, 2018
Messages
1,830
Reaction score
1,664
Location
Erode
அருமையான பதிவு சகோ
????
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top