Keladi Kanmani epi 3

anisiva

SM Exclusive
Author
SM Exclusive Author
#1
அத்தியாயம் 3

முகிலின் வீடு இருந்தது தஞ்சை டவுனில். அவன் தந்தைக்கு கவர்மெண்ட் உத்தியோகம். அவர் மூன்று வருட வேலை மாற்றலில் ஊர் ஊராகச் சென்றாலும், முகில் அவன் அன்னை, அக்கா மூவரும் அவர்கள் ஊரில் இருந்தனர்.
ஐந்தாம் வகுப்பு வரையிலும் வீட்டின் அருகில் உள்ள மெட்ரிகுலேஷன் பள்ளியில் பயின்றிருந்தான்.வீட்டில் இருந்து படித்தால் தன் காரியங்களைச் சுயமாய் செய்ய மாட்டானோ என்ற ஐயம் அவனை ஒரு நல்ல கான்வென்டில், ஹாஸ்டலில் சேர்த்து விட்டனர்.அன்னையுடன் எப்போதும் சுற்றியிருந்தவனை திடீரென்று பிரிக்க, அந்தப் பிரிவு அவனை மிகவும் பாதித்தது. அவனின் நன்மைக்கு மட்டுமே என்பதைப் புரிந்துகொள்ள முடியாத வயது அவனுக்கு.
ஹாஸ்டல் வாழ்க்கை ஆரம்பத்தில் பிடிக்கவில்லை என்றாலும் போகப் போகப் பழகிவிட்டது. பத்து பன்னிரண்டு வயதில் தாய்க்காக ஏங்கியவன் போகப் போகத் தன் ஏக்கங்களை மறைத்து வாழப் பழகி கொண்டான்.
தாயிடமிருந்து விலகியவனுக்கு, அக்காளிடமும் அதிகம் ஒட்டுதல் இல்லை. அவளின் சுயநல குணம் அவனுக்கு ஒத்து வரவில்லை. நண்பர்கள் மேல் அதிகப் பிடிப்பில்லை, சாதாரணமாய் அனைவரிடமும் பழகுவானே ஒழிய, உயிர் நண்பன் லிஸ்டில் எவரும் இதுவரை கிடையாது.
தந்தையிடம் ஆரம்பக் காலத்தில் சில முட்டல் மோதல்கள் இருந்ததென்னவோ உண்மை. பருவ வயதில் எல்லாருக்கும் அவரவர் தந்தை எதிரிதானே. இப்படிச் சென்ற வருடங்களில், ஒரு விஷயம் மட்டும் உருப்படி, அது அவன் படிப்பு. சுமாராய் படித்துக் கொண்டிருந்தவன் அபாரமாய் படிக்க ஆரம்பித்தது அந்தக் காலகட்டத்தில் தான்.
பொழுதுகள் எல்லாம் படிப்பில் செல்ல, அதன் பலனாய் நல்ல மாணவன் என்ற பெயரை தக்க வைத்துக் கொண்டான். பள்ளி முடித்துக் கல்லூரியும் ஹாஸ்டல் வாசம். வீட்டிற்கு விடுமுறை என்று சென்று வருவதுகூட அவ்வளவாகப் பிடித்தமில்லை என்ற நிலை. பேச்சுத் துணைக்கு அங்குத் தந்தையைத் தவிர எவர் உள்ளனர். ஆம், இன்று அவரே அவனுக்கு உற்ற நண்பராகிப் போனார்.
ஓய்வு பெற்றுவிட்ட அவர் இப்போது அவர்கள் பூர்வீக நிலங்களில் விவசாயம் செய்ய ஆரம்பித்திருந்தார், முழு நேர விவசாயி. இவன் விடுமுறைக்குச் சென்றாலும், அவர் ஆபிஸ் கிளம்புவதைப் போல் வயலுக்குக் காலை நேரத்துக்குக் கிளம்பிவிடுவார்.
“அப்பா இன்னிக்கி வீட்ல இருங்களேன் ப்பா...” அவராக இருப்பார் என்ற எதிர்பார்ப்பு வீணாகி அவனாகவே ஒரு சில சமயம் கேட்டுப் பார்த்தான்.
“இல்ல முகில், வேலையிருக்கு. நீ வேணும்னா என் கூட வாயேன் நம்ம தோட்டத்துக்கு...” அவர் அழைத்தாலும் இவனுக்கு அதில் அத்தனை பிடித்தமில்லை.
இந்த வெயிலில் போய் அங்கே ஏன் நிற்க வேண்டும்? வயல்களை ரசிக்கும் ரசனையெல்லாம் அவனுக்கில்லை.இந்தத் தனிமை நிலை இப்படியே தொடர்ந்தது ஒருத்தி அவன் கண்ணில் படும் வரை.
கல்லூரியில் கேம்பஸ் இண்டர்வியூ இருந்ததென்னவோ உண்மை தான். ஆனாலும் வேலைக் கிடைக்க வேண்டுமே. அவர்கள் பேட்ச்சில் தோராயமாய் ஒரு பத்து பேருக்கு மட்டுமே அந்த அதிர்ஷ்டம் அமைந்தது.
அவனுக்கு எதுவும் அமையவில்லை.கல்லூரி என்றாலாவது கூட்டத்தோடு கோவிந்தா போட்டு போயிருக்கலாம். அது நடக்கவில்லை. இனி வெளியில் சென்று தேடுவதென்றால் நிரம்பவும் கஷ்டமான காரியம் தான்.


அவன் தந்தை கூட, “நல்லா படிக்கிற பையனாச்சே, வேலையை வாங்கிடுவேன்னு பார்த்தேனே முகில், ஏமாத்திட்டியே ப்பா...”
அவனுக்கும் வருத்தமாகத் தான் இருந்தது. ஆனால் என்ன செய்ய முடியும்?
“அப்பா, முயற்சி செஞ்சேன். என்னவோ அமையலை, சாரி ப்பா..”ஆரம்ப நாளில் அவன் மீது குற்றப் பார்வை வீசிக் கொண்டிருந்தவர் போகப் போக அவரின் விவசாய வேலையில் அவனை ஈடுபடுத்திவிடத் துவங்கினார்,
“அறுப்பு மெஷின் ஆள் வரலை, நீ போய்ப் பார்த்துட்டு கையோட கூப்பிட்டு வாயேன் முகில்...”
“டீராக்டர் டிரைவர் வரலை, நீ கொஞ்சம் அதை ஓட்டி, இரண்டு வயலை உழுது விட்டுடேன்...”
“உரக் கடைக்குக் கொஞ்சம் வா, நிறைய வாங்க வேண்டி இருக்கு...”
இப்படிப் பல வேலைகள் அவன் தலையில் கட்டத் துவங்கினார்.
“அப்பா எனக்கு இதெல்லாம் தெரியாதுப்பா...” என்றிவன் நழுவப் பார்த்தாலும் விடுவது கிடையாது.
“என்னடா எப்ப பார்த்தாலும் தெரியாது, வராதுன்னு. கத்துக்கோ. நாளைக்கு இந்த வயலை எல்லாம் நீ தான் பார்த்தாகணும்...”
“அப்படி நினைப்பு எல்லாம் வளர்த்துகாதீங்க...” என்று இவனும் சாரதாவும் ஒரு சேர சொல்ல, ஒரே முறைப்பு தான்.
“ஏங்க, படிச்ச பையனை எதுக்கு இப்படி வயல் வேலைக்கு இழுத்தடிக்கிறீங்க?” என்று சொல்லி அவன் அன்னை வாங்கிக் கட்டியது இவனை விட அதிகம்.
“அவனைக் கெடுக்குறதே நீதான், துரை இப்ப சும்மா தானே இருக்காரு, செஞ்சா என்ன?” என்று கோபத்துடன் புறப்பட்டார்.
இந்த இக்கட்டிலிருந்து தப்பிக்கச் சீக்கிரம் இந்த இடத்தைக் காலி செய்ய வேண்டும். சென்னை போய்த் தங்கி வேலை தேடுவதெல்லாம் இயலாத காரியம். செலவு பிடிக்கும், தகப்பனிடம் கேட்க ஒரு தயக்கம்.
தற்காலிகமாய்த் தப்பிக்கும் பொருட்டு அவன் பக்கத்து வீட்டுப் பையன் ஜெய் நடத்திக் கொண்டிருந்த கம்பியூட்டர் சென்டருக்கு சென்று தஞ்சம் புகுந்து கொண்டான். அவனுக்கு நெட்வொர்கிங் வேலைகளில் உதவியாக முகில் இருந்தான் என்றபடியால் அவனும் இவனை ஆவலுடன் வரவேற்கத் தொடங்கி விட்டான்.
இவனின் தந்தை காலையில் வயல் கிளம்பும் வரை தூங்குவதைப் போல் பாசாங்கு செய்துவிட்டு, மதிய வேலையில் தப்பித்து அங்குச் சென்றுவிடுவான் முகில். இதுவே வழக்கமானது.
ஏகப்பட்ட நிறுவனங்களுக்கு ரெசியூம் அனுப்பும் வேலையும், கொஞ்சமே கொஞ்சம் படிக்கும் வேலையும் நடந்தது. வேலை வெட்டி இல்லாமல் பொழுதை தள்ள ஏதுவாக எதையோ செய்து கொண்டிருந்தான்.
அன்றும் அவன் செண்டரில் தன் வேலையில் மூழ்கியிருக்க,
“முகில் அண்ணே, இந்த டாக்குமெண்ட் கொஞ்சம் அலைன் செஞ்சி பிரிண்டு எடுத்து கொடுத்திடுங்க, அம்மா அவசரமா வீட்டுக்கு வர சொன்னாங்க, போயிட்டு வந்துடுறேன்...” என்றபடி கிளம்பிவிட்டான் ஜெய்.


“தஞ்சாவூர் மண் எடுத்து
தாமிரபரணி தண்ணிய விட்டு
சேர்த்து சேர்த்து செஞ்சதிந்த பொம்ம...” என்பது போலிருந்தது அவளைப் பார்க்கையில்.
பெண்ணுக்கான இலக்கணம் எல்லாமே தப்பாமல் இருந்தது அவளிடம்.
நிமிர்ந்த பார்வை. அவனைக் கண்களைப் பார்த்துப் பேசினாள். அதுவும் தெளிவாய்.
“இரண்டு காபி எடுத்துக் கொடுத்திடுங்க...”
சற்று நேரத்தில் அதைப் பெற்றுக் கொண்டு கிளம்பிவிட்டாள்.
அவளின் பென் டிரைவை திருப்பித் தரவில்லை என்ற ஞாபகம் அவனுக்கு இருந்தும், அதைத் தன் பாக்கெட்டில் மறைத்துக் கொண்டான். இதற்காகவேணும் இன்னும் ஒரு முறை அவளை எப்படியும் பார்த்து விடலாம் என்ற நம்பிக்கையில். அடிக்கடி சென்னை பயணம் மேற்கொள்ள வேண்டியதிருந்தது, சில நேர்முகத் தேர்வுகளில் கலந்து கொள்வதற்காக.
“ஏன் ப்பா இத்தனை முறை அலையுறே? அங்கேயே தங்கி செய்யலாமே...” அப்பா சொல்லி பார்த்தார், ஆனாலும் இப்போது நிலைமையில் அவன் பிடிக் கொடுக்கவில்லை.
பின்னே செய்வதற்கு இங்கு எத்தனை வேலைகள் உள்ளது?
சில நாளில் அதைத் தேடிக் கொண்டு சென்டருக்கு வந்தாள்.
“அன்னைக்கு பிரிண்ட் அவுட் எடுத்தப்போ, பென் டிரைவ் மறந்துட்டேன், அது இருக்கா?”
முகிலிடம் தான் கேட்டாள், அவனோ அவள் யாரோவிடம் பேசுவதைப் போல் கணினியில் மூழ்கியிருந்ததைப் போல் பாவலா காட்ட, “உங்களைத்தான்...” என்றாள் மறுபடியும்.
“என்னையா, என்ன வேணும்..?”
அவனை முறைத்தபடி மறுபடியும் அதே வாக்கியத்தைச் சொல்ல.
“ஓ அது உங்களோடது தானா? இங்க வைச்சிருந்தா காணாம போயிடும்னு வீட்டில் வச்சிருக்கேன், நாளைக்கு வாங்க தரேன்...” அவன் சொன்ன தொனியில் சந்தேகமாகப் பார்த்தாள்.
“அதை வச்சி நான் என்னங்க பண்ண போறேன், நாளைக்கு வாங்க...” என்றபடி அவன் விட்ட பணியைத் தொடர, அவள் புறப்பட்டு விட்டாள்.
தோழியிடம் கிசுகிசுத்தபடி போனவளை இவன் பார்வைக்கு எட்டும் தூரம் வரை பார்த்துக் கொண்டிருந்தான். என்னவோ அவளைப் பிடித்திருந்தது.
வீட்டில் பிடிக்கொடுக்காமல் எத்தனை நாள் இருப்பது...? அவன் தந்தையின் தொல்லை நாளொரு வண்ணமாய் அதிகமானது. இவன் வேண்டுமென்றே வேலைக்குப் போகாமல் தட்டிக் கழிக்கிறான் என்பதைப் புரிந்து கொண்டவர், அடிக்கடி அந்தக் கம்பியூட்டார் சென்டர் வந்து எட்டி பார்க்க ஆரம்பித்தார்.
அவனுக்கே அவர் செயல் பகீரென்றானது. நல்லவேளை அவர் வரும் சமயம் எல்லாம் இவன் வேலையில் மூழிகியிருந்ததால் தப்பித்தான். அன்று மாலை இவன் வீட்டிற்கு வந்த ஜெய்,
“நாளைக்கு நான் வர மாட்டேன், நீங்க கொஞ்சம் கடையைப் பார்த்துக்க முடியுமாண்ணே...” என்றான்.
“என்னடா எல்லாப் பக்கமும் என்னை ஃபுல் டைம் வேலையாளாவே பாக்குறீங்க...? வீட்டில அப்பா, இப்ப நீயுமா?”
இத்தனை நாள் பழக்கத்தில் அவனுடன் சகஜமாகப் பேச துவங்கியிருந்தான் முகில்.
“ஐயோ இல்லண்ணே, எனக்கு அவசர வேலை. கொஞ்ச அக்காங்க இன்னிக்கி அவங்க பிராஜெக்ட் வேலைக்காக வரேன்னு சொல்லியிருக்காங்க, நான் பாட்டுக்கு பூட்டிட்டு போயிட கூடாது இல்லையா?”
அவன் அக்கா என்று சொன்ன கூட்டம் யார் என்று முகிலுக்கு தெரியுமே.
“சரி சரி நான் பார்த்துக்குறேன், போயிட்டு வா”
அப்பா இதைக் கேட்டபடி வந்து, ஜெய் அகலவும், “வெட்டி பொழுதில் வாழ்க்கையை வீணாக்கிடாதே முகில். நீ இப்ப செய்றது சல்லிக் காசுக்கு பிரயோசனமில்லை...” என்று ஒரு முறைப்போடு சொல்லிவிட்டு சென்றார்.
‘இவர் வேற அடிக்கடி என் மனசாட்சி மாதிரி ஏதாவது சொல்லிகிட்டே இருக்காரு...’ என்று அலுத்துக்கொள்வதைத் தவிர இப்போது அவனுக்கு வேறு வழியில்லை.
அடுத்த நாள் அவனுக்கான இனிய நாள். மதியம் போல் வந்த மைதிலி ஆண்ட் கோ காலியாய் இருக்கும் சிஸ்டமில் அமர்ந்து தங்கள் பணிகளைக் கவனித்தனர்.
இடையிடையே இவனிடம் பிரிண்ட் அவுட், டவுட் என்று ஏவல் வேறு. பணம் கட்ட வருகையில், அவள் கேட்காமலே அவளின் பென் டிரைவை நீட்ட, ‘தாங்க்ஸ்...’ என்றபடி வாங்கிக் கொண்டாள்.
இன்று அவளின் செய்கையில் ஏக மாற்றம், இவன் காணாத நேரத்தில் பார்த்து வைத்தாள். கண்ணை நேரிடையாகப் பார்ப்பதை தவிர்த்தாள். தோழிகளிடம் என்னவோ சொல்லி சிரிக்க அவர்களும் சேர்ந்து இவனை நோட்டமிடத் தொடங்கினர்.
அதில் ஒரு துடுக்கான பெண், “உங்க முதலாளி எங்கே?” என்றிட,
கவுண்டமணியைப் போல், 'அது ஏன் என்னைப் பார்த்து அந்தக் கேள்வி கேட்ட?’ என்று கேட்க வேண்டும் போல் இருந்தது முகிலுக்கு.
ஆனாலும் செய்வதறியாது, கேள்வி கேட்டவளையும் மைதிலியையும் மாறி மாறிப் பார்த்த பின், “நான் இங்க வேலை செய்யலைங்க...” என்றான்.
“ஹேய்... அண்ணன் இங்க வேலைச் செய்யலையாம் டி...” என்றாள் அதே பெண். இவன் நிலையை என்ன சொல்ல, சிங்கம் சிங்கிளா மாட்டிக் கொண்ட நிலை.


மைதிலிக்கும் அவனைப் பிடித்திருந்தது. அங்கே பணி செய்யும் பையன் என்று தோழிகள் முடிவு கட்டியிருக்க, அது உண்மையில்லை என்பது இவள் எண்ணமாயிருந்தது. அவனின் நவநாகரிக உடைகளும், அவன் படித்துக் கொண்டிருந்த பெரிய பெரிய புத்தகங்களும் வேறு கதை சொல்லியது.
அநாவசிய பார்வையில்லை, சில ஆண்களைப் போல்.அதிகப் பேச்சு மட்டும் இருந்தது. அவளிடம் மட்டும். அந்த பென் டிரைவை திருப்பித் தர வேண்டுமென்றே தாமதித்திருக்கிறான். தோழிகளும் அவனைப் பற்றியே பேசினர்.
“இத்தனை பேர் நிக்கிறோம், அப்பவும் உன்னை எப்படிப் பார்க்குறான் பார்த்தியா...”
அவளும் அதை உணர்ந்து தானிருந்தாள். அவன் பார்வை வீச்சுக்கு அத்தனை வலிமை. இவன் யாரென்றே தெரியாதே, அதற்குள் எதற்கு இப்படித் தன் மனம் அவன் பின்னால் செல்கிறது? தன் குடும்பத்தின் கட்டுப்பாடுகளுக்கு இதெல்லாம் சற்றும் சரியில்லாத விஷயமாயிற்றே.
நடப்பதெல்லாம் சரியில்லை. கொஞ்சக் காலம் அவன் இருக்கும் இடத்துக்குச் செல்லாமல் இருப்பது சாலச் சிறந்தது. அதன்படி அடுத்தச் சில நாட்கள், அங்கு செல்வதைத் தவிர்த்தும் வந்தாள்.
அவள் தற்போது படித்துக் கொண்டிருந்தது தமிழ் பல்கலைக்கழகத்தில். தன் ஊரில் இருந்து கல்லூரிக்கு பஸ்ஸில் வர ஒரு மணிநேரம் பிடிக்கும். அவள் தந்தை குணசீலன், அவர்கள் ஊரில் பெரிய ஆள். அரசியல், பண பலம் எல்லாம் உண்டு.
மைதிலியுடன் பிறந்தது ஒரே ஒரு தம்பி. இளங்கலை பட்டத்துடன் இவள் படித்தது போதும் என்ற தந்தையிடம் கெஞ்சிக் கூத்தாடி, முதுகலைக்காக இங்குச் சேர்ந்திருக்கிறாள், மைதிலி. காரில் சென்று விடுகிறேன் என்றவரிடம், தோழிகளுடன் பஸ்ஸில் செல்ல ஆசை படுவதாகச் சொல்லி சாதித்தும் கொண்டாள்.
 

anisiva

SM Exclusive
Author
SM Exclusive Author
#2

மைதிலி என்றால் அத்தனை பிரியம் அவள் தந்தை குணசீலனுக்கு. அவள் வைத்தது தான் சட்டம் அந்த வீட்டில். தம்பியின், அன்னையின் காரியங்கள் எதுவானாலும் இவள் மூலமே தந்தைக்குச் சொல்லிவிடுவது. இன்னல்கள் இல்லாமல் முடியும்.
அவளும் அவருக்கு ஏற்றார் போல் இதுவரையிலும் நடந்து கொண்டிருக்கிறாள். ஊரில் அவள் தலைவரின் மகள் என்பதால், மற்றவர்கள் அவளிடம் படு ஜாக்கிரதையாகவே பழகுவர். இத்தனை நாளும் கட்டுப்பட்டு இருந்தவளுக்கு ஏதோ மாற்றம் இந்தப் புதியவனால். ஆனால் இதை வளர விடக்கூடாது, என்று நினைத்தபடி அவன் இருக்கும் இடத்துக்குச் செல்வதை தவிர்க்கத் தொடங்கினாள்.
முகிலோ அவளை மிகவும் எதிர்பார்க்கத் தொடங்கிவிட்டான். சமீபதினங்களில் அவளின் வருகை குறைந்து விட்டது. தன்னைப் புறக்கணிக்கிறாளா? ஆனால் அவள் பார்வை அப்படி உணர்த்தவில்லையே. யாரிடம் அவளைப் பற்றிக் கேட்கலாம்?
ஜெய் தான் சரியான ஆள். அவனை அழைத்துக் கொண்டு தன் வீட்டின் மொட்டை மாடிக்குச் சென்றவன்.
“ஜெய் உன் கிட்ட ஒண்ணு கேட்கணும்...”அந்தப் பெண் இந்த ஊர் போல் தெரியவில்லை. இவனிடம் சொல்லி பிரச்சனை பெரிதானால், தன் தந்தையை எப்படிச் சமாளிக்க? வம்பில் மாட்டி விட்டதைப் போலாகிவிடும். அந்தத் தயக்கத்துடனே ஆரம்பித்த காரியம் தொடர்ந்தது.
“நம்ம சென்டருக்கு ஒரு கூட்டம் வருமே, அதில் வர மைதிலி பத்தி உனக்கு ஏதாவது தெரியுமா?”
அவனை ஒட்டினார் போல் நின்றிருந்த ஜெய், இவன் கேள்வி கேட்டு முடிந்ததும் முகிலை விட்டு சில அடி விலகி நின்றான்,

“அண்ணே, எனக்குப் புரிஞ்சி போச்சு...” என்றவனை பார்த்து,
“சும்மா தெரிஞ்சிக்கலாம்னு கேட்டேன் ஜெய், நீ எதுவும் வேற மாதிரி நினைச்சிக்காதே...” என்றான் வேகமாய்.
முகில் சொன்னாலும், அவனை நம்ப முடியாத பார்வை பார்த்து வைத்தவன், “என்னை வம்பில் மாட்டிவிட்டிட கூடாதுன்னு என் கூடப் படிச்சவனுங்க ஒருத்தனையும் கடை பக்கம் விடாம உங்களை மட்டும் சேர்த்துக்கிட்டேன், இப்ப நீங்களுமா?” என்று, அவன் அடைந்த பதட்டத்தில் சிரிப்பு தான் வந்தது.“ஏன் இப்படி பயப்படுறே..? இந்தக் கேள்விக்கு மட்டும் பதில் சொல்லு...”
“ஏன் தெரிஞ்சி என்ன பண்ண போறீங்க, வேணாம் அண்ணே அது பெரிய இடத்து பொண்ணு”
“அந்த அக்கா முதன் முதலில் என் கடைக்கு ஒரு பிரின்ட் அவுட் எடுக்க வந்ததுக்கே, அடுத்த நாள் இரண்டு பேர் வந்து என்னைப் பத்தி வீடு வரைக்கும் விசாரிச்சிட்டு போயிட்டாங்க, தெரியுமா?”
“ஓ.. ஹோ...”
“நான் என்ன கதையா சொல்றேன்? எல்லாப் பக்கமும் அவங்களுக்கு ஆள் இருக்கும். உங்க நல்லதுக்குத் தான் சொல்றேன். அடக்கி வாசிங்க.”சொன்னவன் தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டு, “நான் கிளம்புறேண்ணே..” என்றபடி புறப்பட்டுவிட, அந்தத் தனிமையில் முகிலின் யோசனை தொடர்ந்தது.
தேவையற்ற வேலையோ? வேலை வெட்டி இல்லாததால் மனம் இப்படிச்
சஞ்சலப்படுகிறதோ?
அடுத்த நாளிலிருந்து அவன் கடைக்குப் போகவில்லை. ஜெய் அழைத்தால் பார்க்கலாம் என்று வீட்டில் இருந்தபடி படிப்பதில் மூழ்கினான்.

அப்பாவுக்கு ரிட்டையர்மெண்ட் பென்ஷன் பணம் மாதமானால் நன்றாகவே வந்தது. ஆனால் விவசாயம் செய்கிறேன் பேர்வழி என்று எப்போதும் பணம் இல்லாத பாட்டைப் பாடினார். இதில் தான் வேறு வருமானம் எதுவும் இல்லாமல் அதே வீட்டில். அவர் தன்னைக் குற்றம் சொல்வதற்கு முன் அவனே ஆரம்பித்தான்.

“அப்பா இது தேவைதானா? நஷ்டம் வருதுன்னு தெரிஞ்சி ஏன் ப்பா விவசாயம் செய்யணும்னு அடம்பிடிக்கிறீங்க?” என்றவனை ஒரு பார்வை பார்த்தவர்,
“இது பிஸினஸ் இல்லைப்பா, நம்ம வாழ்வாதாரம்...” என்றார்.
அவர் பேச்சில் அவனுக்கு உடன்பாடு இல்லை.
“வயலை வச்சிக்கிட்டு சும்மா போட முடியாதுப்பா, ஒரு வருஷம் சும்மாயிருந்தாலே, பிளாட் போடலாமான்னு வந்து கேட்டுத் தொலையுறான்...”
“நல்லது தானேப்பா, அப்படிக் கொடுத்தா நல்ல காசு பார்க்கலாமில்ல?” என்றவனை கோபமாகப் பார்த்து,
“முகில் சிலது சொன்னா உன் வயசுக்கு புரியாது, நல்லா விளைஞ்சிட்டு இருக்கிற இடம்.இதிலே நாமும் வேற பிளாட் போட்டுவிட்டு, பணத்தையா பொங்கி மூணு வேளையும் சாப்பிட முடியும்...?”
மேலும் பெரிய பெரிய வசனங்களாய் பேசினார். வாழ்வாதாரம் என்றால் எத்தனைப் பேர் அதைச் செய்து காத்திட வேண்டும்? அப்படியா நடக்கிறது நம் ஊர்களில்? சில பேர் மட்டும் இப்படி உயிர் கொடுத்து உழைப்பதால் எல்லாம் சரியாகிவிடுமா?
“என்னவோப்பா, உங்க உழைப்பு வீணாகுதேன்னு எனக்கு ஒரு எண்ணம், அதான் சொன்னேன்...இன்னும் இரண்டு நாளில் சென்னை கிளம்புறேன் ப்பா..” என்றவனைச் சந்தேகமாக பார்த்து,
“சரி சரி... இந்த முறையாவது நல்ல பதிலோட வா...” என்றார்.
ஜெய்யும் அவனை அழைக்கவில்லை. வீட்டில் வந்து பேசிவிட்டு செல்வானே ஒழிய, ஏன் வரவில்லை என்ற கேள்வி கூட இல்லை.
அவனுக்கு அது தொழில். பேங்கில் கடன் வாங்கி இதை ஆரம்பித்ததாக முகிலிடம் முன்னர் சொல்லியிருக்கிறான். அப்படிப்பட்டதை காப்பாற்றிக்கொள்ள நினைப்பான் தானே.
சென்னையில் ஒரு வேலைக் கிடைத்துவிடும் தருவாயில் இருந்தது. இறுதிக்கட்ட நேர்காணல் என்று அழைத்திருந்தனர். அன்று அதற்காகக் கிளம்பிக் கொண்டிருக்க, ஜெய் அவனுடன் பேருந்து நிலையம் வரை உடன்வந்தான்.
வாசலிலேயே அவனிடம் விடைபெற்றுக் கொண்டு சென்னை பஸ்ஸில் தனக்கான ஒரு ஜன்னல் இருக்கையில் அமர்ந்துகொண்டான் முகில்.
பஸ் இன்னும் நகராமல் உருமிக்கொண்டிருக்கையில், திரும்பி தன்னிடம் வந்த ஜெய் இவன் கையில் தண்ணீர் பாட்டிலை நீட்டினான்.
“ஏற்கனவே வச்சியிருக்கேன் ஜெய், வேண்டாம்...”
“பிடிங்க அண்ணே மைதிலி அக்கா தரச் சொன்னாங்க...” என்றுவிட்டு, திரும்பி பார்க்காமல் ஓடிவிட்டான்.
‘பயபுள்ள பயத்துலையும் உதவி செய்யுது...’ தனக்குள் நகைத்தவாறு அவள் எங்கும் தென்படுகிறாளா என்று சுற்றி முற்றிப் பார்த்தான்.
‘இந்தப் பாட்டிலை எதற்குக் கொடுக்கச் சொன்னாள் என்றபடி அதை ஊன்றிப் பார்க்க, அந்தப் பாட்டிலுக்குள் ஒரு காகிதம் சுற்றப்பட்டு இருந்தது. அதை எடுத்துப் பார்ப்பதற்குள், திக்திக்கென்றிருந்தது. வேண்டாம் என்று விலகினால், எதிர்மறையாய் நடக்கும் என்பது நியதி போல. அந்தக் கடிதத்தைப் படிக்கத் துவங்கினான்.


நேற்று நடந்ததைப் போலிருந்தது, இத்தனை நேரமும் முகிலின் மனதுக்குள் படமாய் ஓடிக் கொண்டிருந்த சம்பவங்கள். எத்தனை பிரச்சனைகள் அதற்குப் பின்னும்.
எல்லாவற்றையும் கடந்து அவர்கள் வாழ ஆரம்பிக்கவே வருடங்கள் ஆனது. அதற்காகவேணும் கடவுள் அவளை அதிக நாட்கள் வாழ விட்டிருக்கக் கூடாதா? எண்ணிப்பார்த்தால் இருபது இருபத்தைந்து மாதங்களில் வாழ்க்கை அஸ்தமமாகிவிட்டதே.
 

Advertisements

Top