• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

KK 9

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

anisiva

SM Exclusive
SM Exclusive
Joined
Jan 17, 2018
Messages
1,578
Reaction score
7,649
Location
Tvl
9

‘முகில் நல்லவன் தானோ? அவனிடமிருந்து பிரித்து, இப்படி என் மகளைக் கஷ்டப்படுத்த வேண்டுமா?’
அங்கே வண்டியில் பயணப்பட்ட பத்மநாதனுக்கும் அதே நிலை. இறுகிப் போயிருந்த முகிலின் முகம் அவர் நெஞ்சைப் பிசைந்தது. குணசீலனின் மிரட்டலுக்கு முகில் படிவான் என்ற நினைப்பு வீணாகி இப்போது மகனின் நிலை அவரையும் சேர்த்துக் கலங்கடித்தது.
‘இப்படி ஒருத்தர் மேல் ஒருத்தர் எத்தனை உயிரா இருக்காங்க? இந்தப் பிள்ளைகளுக்கு முன்னால் ஜாதியாம், ஜாதகமாம்...’ அவர் மனம் வித்தியாசமாக யோசிக்க ஆரம்பித்தது.
அடுத்த நாளில் சாரதாவிடம் சில விஷயங்களைப் பேசியவர், அவள் சொன்ன தடைகளையும் மீறி தன் இறுதி முடிவை சொன்னார்,
“எனக்கு என் மகன் வாழ்க்கை தான் முக்கியம் சாரதா, நீ சும்மா இரு...” என்றபடி அடுத்து ஒரு முக்கியமான ஆளுக்கு ஃபோன் செய்ய, இதெல்லாம் சரிவருமா என்ற எண்ணம் சாரதாவிற்கு மட்டும்.
முகில் இரண்டு வாரம் விடுப்பில் வந்திருந்தான். எப்படியாவது தன் காரியம் நடந்துவிடாதா என்று வந்தவனுக்கு அந்த நம்பிக்கை எல்லாம் பொய்த்துப் போனது. மொட்டை மாடியில் வருத்தமாக நின்றவனிடம் வந்தார் பத்மநாதன்,
“முகில் நடந்ததையே நினைத்து வருத்தப்படாதே. எல்லாம் நன்மைக்குத் தான்ப்பா..”
அவர் சொன்னதை கேட்டவனுக்குக் கண்ணில் நீர் கோர்த்தது. அதைக் கண்டு பதறியவராய், “டேய் ஆம்பிளைங்க அழக்கூடாது.” என்று சொல்ல,
“அப்பா உணர்ச்சிகள் எல்லாருக்கும் பொதுதான், அழுகை வந்தா அழுதுதான் ஆகணும். ப்ளீஸ், என்னைக் கொஞ்சம் தனியா விடுங்கப்பா...” என்றான் நொந்து போய்.
அவன் மனநிலையை நன்கு அறிந்தவர்,“அப்பா இருக்கேன், எதற்கும் கலங்காதே...” என்று, ஆதரவாய் அவன் தோள் தட்டிவிட்டு, யோசனையுடன் கீழே சென்றுவிட்டார்.
அன்று வெள்ளிக்கிழமை. காலையில் அவனை நேரத்துக்கு எழுப்பிவிட்ட அவன் தந்தை,
“முகில் கோவிலுக்குப் போறோம், இந்தப் பட்டு வேஷ்டியை கட்டிக்கிட்டு சீக்கிரமா ரெடி ஆகிடு...” என்றிட,
‘ஆமா இப்ப கோவிலுக்கு போறது தான் குறை’ மனதில் எண்ணினாலும், அதைச் சொல்லாது,
“நான் எங்கையும் வரலைப்பா, நீங்க மட்டும் போயிட்டு வாங்க...” என்றான்.
“ச்சு அபசகுனமா பேசக்கூடாது. சொல்றதை செய். இன்னும் பத்து நிமிஷத்தில் கிளம்பிடணும்...”
முகில் பட்டு வேஷ்டிச் சட்டையில், அவன் தந்தையும் அவ்வாறே தயாராகி வர, சாரதா கூட இன்று வழக்கத்துக்கு மாறாகக் கோவிலுக்குப் பெரிய ஜரிகை வைத்தப்பட்டு புடவையில் கிளம்பியிருந்தார்.
வண்டியை முகில் செலுத்த பத்மநாதன் வழி சொல்லியபடி இருந்தார். மைதிலி வீட்டுப் பக்கம் போவது போல் இருக்க, அவன் பக்கமிருந்த தந்தையைத் திரும்பி பார்த்தபடி வண்டி ஓட்டினான். சரியாய் அவர்கள் வீட்டின் முன் அவன் தந்தை நிறுத்தச் சொல்ல, அந்த வீடு தோரணங்களால் அலங்கரிக்கப் பட்டிருந்தது அவன் கண்ணில் பட்டது. முகில் ஒன்றும் புரியாமல் இறங்க அவனுக்காகக் காத்திருந்ததைப் போல், மாதவன் ஓடோடி வந்து இவன் கையைப் பற்றிக் கொண்டான், ‘வாங்க மாமா..’ என்றபடி.
முகிலுக்கு இன்ப அதிர்ச்சி. குணசீலன் இன்முகத்துடன் பத்மநாதனை நெருங்கினார்.
“வாங்க சம்மந்தி...நான் பேசினது எதுவும் மனசில் வச்சிக்கதீங்க...” என்று அவரிடம் கைகூப்பியபடி சொல்ல,
“அதையெல்லாம் மறந்துட்டேங்க...” என்றார் இவரும், மகனைப் பார்த்தபடி.
குணசீலன் இப்போது முகிலையும் வரவேற்க, அங்கு நடக்கும் நிகழ்வை யூகித்தவன் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவேயில்லை. மகனின் சந்தோஷத்தை ரசித்தபடி இருந்த பத்மநாதனின் கண்களை சந்தித்தவன், தந்தையை நெருங்கி வந்து அணைத்துக் கொண்டான்.
இவர்கள் செயலை விந்தையாக பார்த்துக் கொண்டிருந்த குணசீலனிடம்,
“பையன் கிட்ட எதுவுமே சொல்லாம கூப்பிட்டு வந்துட்டேன்...” என்று விளக்கம் கொடுத்தார்.
குணசீலனுக்கு அன்று முகில் வந்த சமயம் நடந்த விஷயங்களுக்குப் பிறகு மகளின் மனம் நன்றாகவே புரிந்து விட்டது. தான் நினைத்தது போல அவனைப் பார்க்காதே பேசாதே மறந்துவிடு என்றால் மாறிக்கொண்டு போய்விடுபவள் இல்லை மைதிலி. அவருக்குத் தெரியும் அவளின் குணம்.
முகிலிடம் பேசியிருந்தாலும், தன் பெண்ணின் மனதைக் கலைத்தவன் என்ற ரீதியில் பேசியிருந்தார். அவனிடம் உள்ள நல்ல விஷயங்கள் அவர் கண்களுக்கு அப்போது புலப்படவில்லை. ஆனால் எப்போது பெரியவர்களின் முடிவே இறுதியானது என்று தன் காதலியை விட்டுச் சென்றானோ, அன்று முடிவெடுத்து விட்டார், தன் மருமகன் அவன்தான் என்று.
அவர் மைதிலி முகிலை சேர்த்து வைக்க வேண்டும் என்று நினைத்து முடித்த சமயம் பத்மநாதனும் அவரை அழைத்து அதையே வேண்டினார். இரு பெரியவர்களும், பெரியவர்களாய் நடந்துக்கொண்டனர். காதலுக்கு மரியாதை செய்துவிட்டனர்.
நடக்கும் என்பார் நடக்காது, நடக்காது என்பார் நடந்துவிடும். எத்தனை உண்மை. வாழ்க்கையில் மைதிலியை தொலைத்துவிடுவோம் என்று அஞ்சியிருந்தவனுக்கு அவள் கிடைக்கப் போகிறாள் என்பது எத்தனைப் பெரிய ஆனந்தம்.
இதை நிலைக்க வைக்க அந்தக் கடவுளுக்கு மனமில்லாமல் போனதே.
நிச்சயதார்த்த விழா ஆரம்பித்தது. மைதிலியின் அன்னைக்கு இதில் பெரியதாக விருப்பமில்லை போலும். அவரைப் பார்த்தபோது முகிலின் குடும்பத்தில் அனைவருக்குமே புரிந்தது.
மைதிலி அவன் கண்ணுக்கு இன்று இராஜகுமாரியாகத் தெரிந்தாள். எப்போதுமே எளிமையாகக் பார்த்திருந்தவளை இன்று தழையத் தழைய பட்டுப்புடவையில் காணவும் தான் பட்ட வேதனைகள் எல்லாம் மறந்து போனது. இனி அவன் வாழ்க்கையில் வசந்தம் மட்டுமே.
சம்பிரதாயங்கள் முடிந்த பின் பெண் மாப்பிள்ளையைச் சிறிது நேரம் ஒருவர் பக்கம் ஒருவராய் அமர வைத்திருந்தனர். சின்ன குரலில் அவளிடம், “மைதிலி, எப்படி இதெல்லாம்?” என்று வினவ,
“நீங்க வந்திட்டு போன பிறகு அப்பா என்கிட்ட, நான் உன்னை முகிலுக்கே கல்யாணம் பண்ணிக் கொடுக்க முடிவு பண்ணிட்டேன்னு சொன்னார். இடையில் என்ன நடந்ததுன்னு தெரியலை...” என்று வெட்கப்பட்டவள் மேலும் அழகானாள்.
“நடப்பது எல்லாம் நிஜம் தானே, கனவு இல்லையே..?”
அவன் கேள்வி கேட்க, சட்டென்று அவன் கையை கிள்ளி விட்டவள், அவன் தடவிக்கொள்வதை பார்த்து, “வலிக்கிதா, அப்போ இது கனவில்லை, நிஜம்.” என்றபடி தன் முத்துப் பற்களை காட்டிச் சிரித்தாள்.
அவளை அப்படியே அள்ளிக்கொள்ள வேண்டும் என்ற ஆர்வத்தைக் கட்டுப்படுத்த வெகு நேரமானது முகிலுக்கு.
சற்று நேரத்தில் விருந்தினர் அனைவரும் கிளம்பிவிட, முன்னறையில் அமர்ந்திருந்தான் முகில். மைதிலியை எங்கும் காண முடியவில்லை. அவளிடம் பேசுவதற்கு இன்னும் எவ்வளவோ விஷயம் இருந்தது, ஆனால் உள்ளே அழைத்துச் சென்றுவிட்டனர். ச்சே...
தனியே இருந்தவனிடம் வந்த குணசீலன் அவன் வேலை, வெளிநாட்டு வாழ்க்கை என்று அனைத்தையும் விசாரித்தார். எல்லாவற்றுக்கும் பொறுமையாய் பதில் சொன்னான் முகில். இப்போது அவனைப் பொறுத்தவரை அவர் அவனுக்கு மாமனார் மட்டுமில்லை, அவனின் குலதெய்வம். அடடா..!!
மிடுக்கான தோரணை, அவர் போட்டிருந்த கண்ணாடி வழியே அடிக்கடி அவனை ஊடுறுவுவதைப் போல் ஒரு பார்வை பார்த்து வைத்தார். அச்சு அசல் ஹெட்மாஸ்டரின் பார்வை. முழுவதுமாய் அவனை ஸ்கேன் செய்வதைப் போல. அவனை அலசி ஆராய்ந்துக்கொண்டிருக்கிறார் என்பது முகிலுக்கு நன்றாகவே புரிந்தது.
அவர் செய்கை எதுவும் அவனைப் பாதிக்கவும் இல்லை. அதான் குலதெய்வம் என்றாயிற்றே. அவனின் சம்பளம், வீட்டு வாடகை, சேமிப்பு என்பது உட்பட எல்லாமே சொல்லியாயிற்று, ஆனாலும் அவரின் சந்தேகப் பார்வை தொடர்ந்தது. ‘அட என்னடா உன் மாமனார் குறுகுறுன்னு பார்க்குறார்...' அவன் மனசாட்சி வேறு சமயம் தெரியாமல் குரல் கொடுத்துக் கொண்டிருந்தது.
குணசீலன் அவர் தகுதிக்கு நிச்சய விழாவை எளிமையாகவே செய்திருந்தார். ஆனால் அவனைப் பொறுத்தவரை செய்து வைத்ததே பெரிய காரியம்.
அதுவும் இந்த இரண்டு மூன்று தினங்களில் அவராக இருக்கப் போய் இது எல்லாம் சாத்தியப்பட்டிருக்கிறது. நினைக்காதது எல்லாம் வேக வேகமாய் நடப்பது போலிருந்தது. ஏனெனில் இப்போது அவன் பக்கமிருந்த அவன் பெற்றோரும் மாமனாரும் திருமணத் தேதியை பற்றிப் பேசிக் கொண்டிருந்தனர். அந்தப் பேச்சு முடிந்ததும், மாதவனை அழைத்தவர்,
“மாமா அத்தைக்கு வீட்டைச் சுத்திக்காட்டு..” என்று அவர்களை அனுப்பிவைத்தார்.
பின் இவன் பக்கம் திரும்பியவர், “கல்யாணத்துக்கு முன்னாடி இந்தப் ஃபோனில் பேசுறதை எல்லாம் நான் அனுமதிக்க மாட்டேன் மாப்பிள்ளை...” என்றார்.
இந்த ஃபோனினால் தானே இந்த பிரச்சனை என்று நினைத்தாரோ. விளக்கம் எதுவும் சொல்லுவாரோ என்று இவன் அவரைப் பார்த்துக்கொண்டிருக்க, அவரோ எழுந்து மற்ற வேலையைப் பார்க்க சென்றுவிட்டார்.
‘என்னங்கடா நடக்குது இங்க? இதைச் சொல்ல தான் வீட்டை சுத்திக் காட்டும் பிளானா? ம்ம்...' என்றெண்ணியவன், ‘பரவாயில்லை முகில்...’ என்று தன்னைத் தானே தேற்றிக்கொண்டாலும், அவர் இப்படிச் சொன்னதில் அந்த நாளில் அவனுக்கு அளிக்கப்பட்டிருந்த இனிமை எல்லாம் கற்பூரமாய்க் காற்றில் கரைந்து போனது.
கல்யாணம் மூன்று மாதங்களுக்குப் பிறகு என்று பேசிக்கொண்டனர். அதுவரையிலும் மைதிலியிடம் தான் பேசக்கூடாது என்றால்.? இதே யோசனையில் விட்டத்தை வெறித்துக் கொண்டிருந்தான்.
‘மாமனாரை வசப்பத்துவது எப்படி?’ இப்படி எதுவும் புத்தகம் கிடைத்தால் தேவலை. இத்தனை நாளும் மைதிலியை சரிக்கட்டியவன் இனி அவள் தந்தையையும் சரிக்கட்ட வேண்டுமா? நினைக்கவே மலைப்பாய் இருந்தது.
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
அனிசிவா டியர்
 




Last edited:

Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top