• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Madhumitha's Vallamai Thaaraayo 28

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Madhumitha

மண்டலாதிபதி
Joined
Jan 17, 2018
Messages
234
Reaction score
317
Location
Rajapalayam
வல்லமை தாராயோ 28 – மதுமிதா

மாசறு திங்கள் கங்கை முடிமேல் அணிந்தென்

உளமே புகுந்த அதனால்

பாடலை ஆரம்பித்து முடிக்கும் முன்பே மொபைல் ஒலித்தது. சைலண்ட் மோடில் போட மறந்துவிட்டோமே என்று நினைத்தபடி போனை எடுத்தாள் சுரேகா.

அம்மா கஸ்தூரி பேசறேன்

கஸ்தூரி சொல்லும்மா எப்படி இருக்கிறே

அம்மா இந்த ஞாயித்துக்கிழமை சாயந்தரம் நாலரை மணிக்கு ரூபாம்மா பள்ளிக்கூடத்துல மீட்டிங் இருக்கு. நீங்க அவசியம் வரணும்.

என்ன மீட்டிங் கஸ்தூரி

இனிமேல் தான் தெரியும்மா

என்னது.

ஆமாம்மா வாங்களேன். இன்னிக்கு லைப்ரரிக்கு வரும்போது சொல்ல நினைச்சேன். நான் வரும்போது நீங்க லைப்ரரியில் இல்ல. அதான் இப்ப கூப்பிட்டேன்.

அன்னிக்கு காலையில் சுதந்திர சிந்தனை மீட்டிங் இருக்குதேம்மா. மீட்டிங் முடிய எப்படியும் மதியம் இரண்டு மணி ஆகிடும். அப்புறம் ஆறு மணிக்கு இங்கே ஒரு மீட்டிங் இருக்குது.

இது சாயந்தரம் நாலரை மணிக்கு தானேம்மா. ஆரம்ப விழாவில் நீங்க ஆரம்பிச்சு வெச்சுட்டு போயிடலாம். ப்ளீஸ் வாங்கம்மா. என்ன லைப்ரரிக்கு நாம சொன்ன இடம் இன்னும் அமையலியாம்மா…

இன்னும் அதுக்கு நேரம் வரலை போலிருக்கு. எப்போ நடக்குதோ நடக்கட்டும். மூணு வருட வாடகைப்பணம் வந்ததே. இனி என்ன நடக்குதுன்னு பார்க்கலாம்.

இதென்ன புதுவித மீட்டிங்காக இருக்குது. எதற்குன்னே தெரியாமல் ஆரம்பிச்சு வைக்கணுமா. சரி இந்தத் தகவலைச் சொன்னது கஸ்தூரி அதனால் போய் வரலாம் என்று முடிவு செய்தாள்.

கஸ்தூரியைப் பற்றிய விபரங்களை இங்கே சொல்லியே ஆக வேண்டும்.

கஸ்தூரியின் வீடு மடத்துப்பட்டியில் ஊருணிக்கு எதிரில் இருக்கும். குழந்தை முகம். சுருள் முடி. கன்னங்கள் புன்னகைக்கும்போது அழகாக மலரும். சுரேகா மடத்துப்பட்டியில் இருக்கும்போது நடத்தும் கூட்டங்களில் கலந்து கொள்வது, நூலகத்து உறுப்பினர்கள் சேர்க்கை, என்று ஆரம்பித்து பள்ளியில் படிக்கும் போதிலிருந்தே ஆர்வத்துடன் கலந்து கொள்வாள்.

திருமணமாகி இரு குழந்தைகளுடன் துபாயில் இருந்தாள். அங்கே இருந்து இங்கே தென்றல்நகருக்கு வந்து ஒரு வருடம் ஆகியிருந்தது.

இங்கு வந்த உடனேயே தென்றல்நகரில் முதன்முறையாக *** “அன்னதான-சுற்று” (Food Drive) என்ற புதிய சேவையை அறிமுகப்படுத்தி இன்றுவரை தொடர்ந்து செய்து வருகிறாள்.

ஆரம்ப கட்டத்தில் தனியாளாக, 15 நாட்களுக்கு ஒருமுறை என பேருந்து நிலையம், சாலையோரம் வசிக்கும் வீடற்றவர்கள், வயதான வரியவர்கள், சாலையோர சிறுவணிகர்கள், பிச்சைகாரர்கள், நரிகுறவர்கள் என கஸ்தூரியின் சேவை தொடங்கியது.

முதலில் கடையில் வாங்கி அனைவருக்கும் கொடுத்துக் கொண்டிருந்தது சரியாக அமையாததால், தன் வீட்டிலேயே தானே சமைத்து சிறு பொட்டலங்களாக்கி ஊர்முழுக்க சுற்றி தேடிச் சென்று உணவு கொடுக்க ஆரம்பித்தாள் கஸ்தூரி.

குடும்பத்தினர், நண்பர்கள் என ஆதரவு பெருகி, அவர்களும் தங்களாலான உணவுகளை செய்து கொடுத்தனுப்ப ஆரம்பித்தனர். சில நேரங்களில் இரண்டு,மூன்று என சிறிய அளவில் பொட்டலங்கள் கிடைத்தாலும் உடனடியாக தானே தனியே டூவீலரில் சென்று உணவளித்து வருவாள். தன்னிடம் 50 பொட்டலங்களுக்கு மேல் வரும்போது கள-உதவிக்கு தன் சகோதரியையோ, குடும்பத்தாரையோ அழைத்துக்கொண்டு பரிமாறுவதை வழக்கமாகக் கொண்டிருந்தாள்.

தென்றல்நகர் மற்றும் புறநகர் என அனைத்து இடங்களுக்கும் சென்று வறியோர் தேவைகளை அறிந்துகொள்வதில் முனைப்புடன் இப்போதுவரை இயங்குகிறாள்.

அதானால் கஸ்தூரி சொன்னபடி ஞாயிறு மீட்டிங்குக்குப் போக வேண்டும் என்று முடிவு செய்தாள் சுரேகா.

(* ”அன்னதான-சுற்று” (Food Drive)-விளக்கம்J

சாதாரணமாக அன்னதானமென்பது ஒருவரையோ,பலரையோ நம்மிடத்திற்கு அழைத்து வறியோர்க்கும்,இயலாதோர்க்கும் உணவு பரிமாறி அவர்களுக்கு பசியாற்றுதல். ஆனால் அன்னதான சுற்று(Food Drive)-ல் வறியோரை அவர்களிடத்துக்கு தேடிச் சென்று உணவளித்து பசியாற்றுதல். இம்முறையில் பல நன்மைகள் உண்டு. உண்மையில் வறியோரை நேரில் அடையாளம் கண்டு, அவர்களை அலைகழிக்காமல் உதவுவது.

போனை வைத்ததும் பாதியில் விட்ட பாடலைத் தொடர்ந்தாள் சுரேகா.

வேயுறு தோளி பங்கன் விடமுண்டகண்டன்

மிக நல்ல வீணை தடவி

மாசறு திங்கள் கங்கை முடிமேல் அணிந்தென்

உளமே புகுந்த அதனால்…

உளமே புகுந்த அதனால் வரி வந்ததும் அதற்கு மேல் அவளால் பாட முடியவில்லை.

திருஞான சம்பந்தர் அத்தனை சிறிய வயதில் எப்படி இந்தப் பாடலைப் பாடினார். உள்ளத்தில் புகுவது அப்படியொன்றும் சாதாரண விஷயமல்ல.

ஒரு காதலன் காதலியின் உள்ளத்திலோ ஒரு காதலி காதலனின் உள்ளத்திலோ புகுவது சட்டென நிகழ்வது. இறையை நாயக நாயகி பாவனையில் பார்க்கும்போது இன்னும் ஆழமான நம்பிக்கை எழும் அற்புத பரிமாற்றம் இத்தகைய பாடலின் வழி நிகழ்வது அபூர்வமான விஷயமல்லவா.

இதை ஓதுவார் கோபி கிருஷ்ணா அவர்கள் தேவார வகுப்பில் பாடலுக்கு நடுவே கதையாக எடுத்துச் சொல்லும்போது உள்ளம் உருகும்.

அசோக் வந்ததும் நினைவையும் பாடலையும் அப்படியே முடித்துக் கொண்டாள்.

“என்ன எழுத்து முடிஞ்சு இப்போ பாட்டுமா?”

“எப்பவும் தானே பாடறேன். பாடும்போது வலியே தெரியலைங்க.”

“உனக்கு என்ன வலி. எழுதும் போதும் லைப்ரரிக்கு அலையும் போதும் வலி எதுவும் இல்ல. வீட்டு வேலை செய்யறப்போ மட்டும் வலி வருமா”

“இங்க பாருங்க. வேலை செய்யறதைப் பத்தி மட்டும் பேசவேணாம். எவ்வளவு செய்தாலும் உங்களுக்கு திருப்தி இருக்காது”

“நீ வேலையை முடிச்சுட்டு ரெஸ்ட் எடுன்னு தானே சொல்லறேன். அது மட்டும் உனக்குப் புரியறதில்ல”

எதுவும் பேசாதே என்று மனதுக்குள் சொல்லிக் கொண்டாள். என்ன பேசினாலும் எடுபடாது. புரியாது. பிரச்சினை தான் பெரிதாகும் என்று அமைதியாக, “சரிங்க. ரெஸ்ட் எடுக்கிறேன்” என்று சொல்லிவிட்டு வாசல் தெளிக்க வந்துவிட்டாள்.
 




Last edited:

Madhumitha

மண்டலாதிபதி
Joined
Jan 17, 2018
Messages
234
Reaction score
317
Location
Rajapalayam
ஞாயிறு மாலை ரூபாவின் நர்சரி பள்ளியில் மீட்டிங்.

உள்ளே நுழையும் போதே ஒரு பேப்பரைக் கையில் கொடுத்து பெயர், வயது, தொலைபேசி எண் மற்றும் என்ன காரணத்துக்காக இந்த மீட்டிங்கிற்கு வந்திருக்கிறீங்க என்று எழுதச் சொன்னார்கள்.

நாற்பது பேர் வரை வந்திருந்தனர்.

எதுக்காக வந்திருக்கிறோம்னு நீங்க தானே சொல்லணும். மீட்டிங் முடிஞ்ச பிறகு அதை எழுதறோம் என்று காகிதத்தை நிரப்ப கையில் வாங்கிய அனைவரும் இதைச் சொல்லிவிட்டு திருப்பிக் கொடுத்துவிட்டு உள்ளே போடப்பட்டிருந்த நாற்காலிகளில் வந்து அமர்ந்தனர்.

தெரிந்த பல தோழிகள் வந்திருந்தனர். சேவைப் பணியில் ஈடுபட்டிருக்கும் சில ஆண்களும் கலந்துகொண்டனர். சில பள்ளிச் சிறுவர்களும் கலந்து கொண்டனர்.

கஸ்தூரி அனைவரையும் வரவேற்றாள்.

“இன்னிக்கு எல்லோரும் இங்கே ஏன் கூடி இருக்கிறோம் என்றால், நீராதாரநிலைகளை எப்படி பாதுகாக்கணும், கண்மாயில் தூர் வாரி வேறு என்னென்ன செய்யலாம்னு பேசறதுக்கு நாம் கூடி இருக்கிறோம். இந்த நிகழ்ச்சியை அபுதாபியிலிருந்து ராம்குமார் ஏற்பாடு செய்திருக்கிறான். உங்களுக்குத் தெரிந்தது போல எனக்கும் இது இவ்வளவு மட்டுமே தெரியும். இதுக்கு மேல இனி என்ன செய்யணுங்கறதை, இங்க வந்திருக்கிற நீங்கதான் அவங்க அவங்க கருத்துகளைச் சொல்லணும். நீங்க சொன்னால் அடுத்து என்ன எப்படி செய்யணுங்கறதை எல்லோருமே கலந்து பேசி முடிவெடுக்கலாம்” என்றாள்.

நீராதாரத்தைக் காக்க ஒவ்வொருவரும் ஒவ்வொரு ஆலோசனைகளைக் கூறினார்கள்.

கண்மாய்களில் தூர் வார வேண்டும், அது மிகப் பெரிய பணி. அதற்கு முதலில் டிரஸ்ட் ஆரம்பிக்க வேண்டும் என்று அனைவரும் ஒரே முடிவுக்கு வந்தனர்.

அன்றைக்கு இரவே தென்றல் நகரின் தண்ணீரைப் பாதுகாக்க வேண்டும் என்று, வாட்ஸப் குரூப் Save water Thenral Nagar என்று ஆரம்பிக்கப்பட்டது.

ராம்குமார் அபுதாபியிலிருந்து ஆடியோவில் அனைவருக்கும் நன்றி தெரிவித்திருந்தான்.

மறுநாள் தொலைபேசியில் அழைத்து அடுத்த வாரம் தென்றல் நகருக்கு வருவதாகவும் அனைவரையும் சந்திக்க வேண்டும், இந்தப் பணிகளை எப்படி தொடர்ந்து செய்ய வேண்டும் என்றும் ஆர்வத்துடன் பேசினான்.

ஒரு பாசிடிவ் அதிர்வுடன் தொடர்ந்து பணிகள் துரிதமாக நடந்தன.

சென்னை பெருவெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ முக நூலில் இணைந்த குழுக்களும், தென்றல் நகரின் அனைத்து சமூக சேவைப்பணி இயக்கங்களும் ஒன்றிணைந்தனர்.

தொடர்ந்து மரங்கள் நடுவிழா, கண்மாய்களில் தூர்வாரும் பணி, கரைகளில் பனை மரங்கள் நடும் பணி என துரித வேகத்தில் பணிகள் நடக்க ஆரம்பித்தன.
 




Madhumitha

மண்டலாதிபதி
Joined
Jan 17, 2018
Messages
234
Reaction score
317
Location
Rajapalayam
மூன்று மீட்டிங்குகளை முடித்துவிட்டு வீட்டுக்கு சோர்வாக வந்து சேர்ந்தாள் சுரேகா. உடல்வலியைக் காட்டிக்கொள்ளாமல் வேலை செய்தாலும், களைப்பு அவளை வாட்டியது. நூலகத்திலிருந்து எடுத்து வந்திருந்த புத்தகத்தை மூடி வைத்தாள். அசோக் தூங்கிய பிறகு களைப்பின் மிகுதியிலும் தூங்க முடியவில்லை. படுக்கையில் தலையைச் சாய்த்தால் தொடர்ந்து இருமல் வந்தது.

தன்னை மறக்க தன் வலிகளை மறக்க ஒன்று பாட வேண்டும். இல்லை இப்போது பாட முடியாது. தொடர் இருமல். அனைவரும் உறங்கும் நேரம். புத்தகம் வாசிக்க முடியவும் இல்லை. எழுதலாம் என்று எழுத அமர்ந்தாள்.

சூரியக்கதிர் பத்திரிகையிலிருந்து ஒரு கட்டுரையைக் கேட்டிருந்தனர்.

இந்த வலியையும் இதன் மூல காரணத்தையுமே ஏன் கட்டுரையாக எழுதக் கூடாது என்று எழுத ஆரம்பித்தாள்.



குள்ளம் என்பது குறைபாடல்ல - சுரேகா

==============================================

முழுமையான உடல் பரிசோதனை என்பது 40 வயதுக்கு மேல் யாராக இருந்தாலும் செய்துகொள்ள வேண்டும் என்று குழந்தைகளால் பரிந்துரைக்கப்பட்டு, இந்த மாதம் புல் செக் அப் க்கு போக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அதில் ஒரு பரிசோதனையாக மேமோகிராம் (மார்பக புற்று நோய்க்கான சோதனை) செய்யப் போக வேண்டி இருந்தது. அந்த மருத்துவமனையின் பல அடுக்கு மாடியும், குளிரூட்டப்பட்ட அறையும், தனியாக பரிசோதனைக்குப் போகிறோமே என்ற சின்ன பதட்டமும் கடந்து, லிப்ட்டில் ஏறி இரண்டாம் மாடிக்குப்போய், பணம் கட்டிய ரசீதைக் காட்டியதும், அழைப்போம் அங்கே உட்காருங்கள் என்று சொன்னதும், ஆசுவாசப்படுத்திக் கொண்டு உட்கார்ந்ததும்தான் கவனித்தேன். இத்தனை வருடங்களில் வீட்டிலோ, வெளியிடங்களிலோ இதுபோன்ற ஒரு இருக்கையில் வசதியாக உட்கார வாய்த்திருக்கவில்லை என்பது. ஆஹாஹா. கால்கள் தரையைத் தொட, தொடைகளிலோ கால்களிலோ எந்த வலியும் இல்லாமல் இயல்பாக உட்கார முடிந்தது. ஆனால், பின்னால் முதுகைச் சாய்த்துக் கொண்டு உட்கார முடியாமல் இருக்கையின் பின்பாகம் ஒட்டி இல்லாமல் ஒன்னரை முழம் பின்னால் இருந்தது. அதிசயமாய் இயல்பாய் அமரக் கிடைத்த இருக்கையில் சாய்ந்து ரிலாக்ஸ்டாக உட்கார முடியவில்லையே என்னும் எண்ணம் தோன்றும்போதே அதே பழைய உயரக்குறைவு பிரச்சினை நினைவு வளையங்களாக சுழல ஆரம்பித்தது.

உயரம் குறைவாக நான் குள்ளமாக இருக்கிறேன் என்பதே எனக்கு முதலில் தெரியவில்லை. அது ஒரு குறைபாடாகப் பார்க்கப்படும் என்பதும், உபயோகிக்கும் சாமான்கள், சாதனங்கள் பிரச்சினையாக இருக்கும் என்பதோ சிறுவயதில் எனக்குத் தெரிந்திருக்கவில்லை.

பெரியவளாகி, சடங்கு வைத்த நாளில், அம்மாவின் அம்மா, பாட்டி தன் வீட்டிலிருந்து பேத்திக்கான சீர்வரிசைகளோடு வந்திருந்தார். பாட்டியுடன், தென்றல்நகருக்கு குடும்ப மருத்துவர் மேரி தங்கசாமியும் தென்காசியில் இருந்து வந்திருந்தார். அவரிடம் என்னுடைய தந்தை விபரம் அறிந்துகொள்ள, தான் தெளிவு பெற கேட்ட ஒரு கேள்வி அதுவரையில், எனக்குத் தோன்றியதே இல்லை. எந்த ஒரு கவனமும் அதில் இருக்கவும் இல்லை. அந்த கேள்விக்கான பதிலாக டாக்டர் மேரி அம்மாவும் இதற்கு மேல் இவள் வளரமாட்டாள் என்னும் பதிலை என்னுடைய தந்தையிடம் சொல்லிக்கொண்டிருந்தார். இவள் இன்னும் கொஞ்சமாவது உயரமாக வளர்வாளா இன்னும் உயரமாக வளரும் வளர்ச்சி இன்றி, இவள் இப்படியே இருப்பாளா என்னும் மகளின் உயர வளர்ச்சி குறித்த அக்கறையுடன் அவர் கேட்ட அந்தக் கேள்வி, நான் எதிர்பாராத, சிந்தித்தே இருந்திராத ஒன்று.

நான் குள்ளம் என்னும் உணர்வு கூட அதுவரையில் எனக்குத் தோன்றியதில்லை. அதன்பிறகு எனது உயரம் கூடவே இல்லை. பெரியவளாகும்போது என்ன உயரத்தில் இருந்தேனோ அதே உயரத்தில் தான் ( 5.2 ) அதற்குப் பிறகும் இருந்தேன். வளரவே இல்லை. எங்கள் குடும்பத்தில் அம்மா வழியிலும் அப்பா வழியிலும் அனைவருமே கம்பீரமான தோற்றத்துடன் உயரம் அதிகமாகவும் இருப்பார்கள். நான் மட்டுமே உயரம் குறைவு என்பதால் அப்பா அப்படி கேட்டிருந்திருக்கலாம்.

ஆங்கில இலக்கியத்தில், கலீவரின் லில்லிபுட் டில் வரும் பிக்மி குள்ளர்கள் குறித்து படித்திருக்கிறோம். அது புனைவு.

’கள்ளனை நம்பினாலும் குள்ளனை நம்பாதே’ என்று எழுதியவர் கண்டிப்பாக உயரமான திருடனாக இருக்கவேண்டும் என்ற முடிவுக்கு வந்திருந்தேன்.

உயரம் குறைந்தவர்கள், மனதளவில் உயர்ந்தவர்கள். அன்பு காட்டுவதில் உயர்ந்தவர்கள். விசால மனமும், உயர் சிந்தைகளும் கொண்டவர்கள். செயல்பாடுகளிலும், உழைப்பிலும் அசாதாரண திறமை அவர்களுக்கு உண்டு.

ஹிந்தி பிரவேசிகா பரிட்சைக்குப் படித்துக்கொண்டிருந்தபோது ‘அமர் லேகிகா ஸ்டோ’ என்னும் பாடம் ஒன்று இருக்கும். அதில் உலகப் புகழ் பெற்ற ’டாம் காகா கி குடியா’ ( Uncle Tom’s Cabin ) என்னும் படைப்பை அளித்த பெண்மணி திருமதி ஸ்டோ (Harriet Elisabeth Beecher Stowe) அடிமை முறையை ஒழிக்கக் காரணமாகயிருந்தவர் என்னும் புகழைப் பெற்றவர். அவரை அப்போது அமெரிக்க ஜனாதிபதியாய் இருந்த ஆப்ரஹாம் லிங்கன் சந்திக்கிறார். சந்தித்தபோது திருமதி ஸ்டோவின் கைகளைப்பற்றிக் குலுக்குகிறார். அவருடைய நீளமான பெரிய கையால் வாழ்த்து சொல்லும் விதமாக இந்தப் பெண்ணின் சிறிய கரம் பிடித்து குலுக்கப்படுகிறது. ’இந்தப் பெண்மணியின் இந்தச் சிறிய கரமா அடிமை முறையினை ஒழிக்கும் இந்தப் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது’ என்று லிங்கன் பாராட்டுவார். படிக்கும்போதே சிலிர்க்கும். பெரும் அடிமை முறையினை ஒழிக்க ஒரு படைப்பு நிகழ்த்திய மாற்றம் என்பது எத்தனை பெரிய விஷயம். சமூக மாற்றத்தில் எழுத்து என்பது மாற்றத்தை விளைவிக்கும் மிகப்பெரிய சக்தியாகும் என்ற எண்ணம் மனதில் அழுத்தமாகப் பதிந்தது. ஆனால், நான் எழுத வருவேன் என்று நினைத்தும் பார்த்திருக்கவில்லை.

எனது கணவர் ஆறடி உயரம் இருப்பார். அவர் ஒரு தேசிய கூடைப்பந்தாட்ட விளையாட்டு வீரர். நான் அவருடைய தோளுக்கும் குறைவான உயரத்தில்தான் இருப்பேன். இந்த உயர வேறுபாடு எங்கள் இருவருக்குமே இந்த 35 வருட மணவாழ்க்கையில் எந்தச் சிக்கலையும் ஏற்படுத்தவேயில்லை.

ஒரு ஹிந்தி சினிமாவில் அமிதாப் ஒரு பாடலில் ( மேரே அங்கனோ மே துமார ந காம் ஹை….ஜிஸ் கி பீவி லம்பி ) எப்படி எல்லாம் இருக்கும் பெண்களை, எப்படி கணவன் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று சொல்லிப் பாடுவது போல ஒரு பாடல் இருக்கிறது. இந்தப் பாடலை என் கணவர்தான் பாடி என்னைக் கேட்க வைத்தார். உயரமாக இருந்தால் ஏணியாக வைத்துக்கொள், குண்டாக இருந்தால் படுக்கை தலையணை, கருப்பாக இருந்தால் கண்களில் கண்மையாக வைத்துக்கொள், சின்னதாக குள்ளமாக இருந்தால் தூக்கி இடுப்பில் (மடியில் குழந்தை போல) வைத்துக்கொள் என்றெல்லாம் வரும்.

கிட்சன் டாப் ஸ்லாப் இடுப்புக்கு மேலே இருக்கும். அதுக்கு மேலே கேஸ் அடுப்பு. அதுக்கு மேலே பாத்திரம், அல்லது தோசைக்கல். குழந்தைகள் பள்ளிக்கூடம் போகும்போது, காலையிலேயே மதியத்துக்கும் சேர்த்து லஞ்ச் பாக்ஸில் வைத்துக் கொடுக்கணும்.

டிபன் செய்யணுமென்றால், அதாவது முறுக்கு, சீவல் பிழியணுமென்றால், ஸ்டவ்வை தரையில் இறக்கி வைத்து, 4,5 மணி நேரங்கள் கீழே உட்கார்ந்து கொண்டு செய்யும் பதார்த்தங்கள், கூட்டுக்குடும்பம் என்பதால், 2 நாட்கள் கூட இருக்காது. மூன்றாம் நாள் மறுபடியும் செய்ய வேண்டும்.

இந்த மெனோபாஸ் காலம் வந்தபிறகு வாழ்க்கையை வலிகளோடு கடத்தும்போது இந்த வேதனையை அதிகமாக உணர முடிகிறது.

இப்போதெல்லாம் தோசையைத் திருப்பிப்போடணும் இல்லைன்னா பாத்திரத்தில் பொரியலுக்கு அல்லது வேறு ஏதும், வதக்கணும், அல்லது இடியாப்பத்துக்கு மாவு கிண்டனும் என்றால், முழு கையும் தோள்பட்டைக்கு மேலே தான் அசையணும், முதுகு வலியும், தோள்பட்டை வலியும் பிடுங்கித் தின்னும். இதில் இந்தக் கால நான் ஸ்டிக் தோசைக்கல் கொஞ்சம் பழசாச்சுன்னா போச்சு. எண்ணெய் விட்டு சுரண்டி சுரண்டி தோசையைத் திருப்பிப் போடுவதற்குள் தோள்பட்டை கழண்டு விழுவது போல இருக்கும்.

சமையலை விட்டு பாத்திரம் தேய்க்க வரலாமென்றால், கீழே அமர்ந்து பாத்திரம் கழுவும்போதுகூட இடுப்பு வலி மட்டுமே இருக்கும். இப்போது நின்றபடி பாத்திரம் தேய்க்கணும், அதுவும் சிங்க்கில் என்னும் போது கைகளை உயரத்துக்கு கொஞ்சம் தூக்கிதான் செய்ய வேண்டும். கைகளின் உயரம் போதாது. பரிசு வலிதான்.

துணி காயப்போடும் கயிறு கட்டி இருப்பது, குதித்து தான் துணிகளைக் காயப் போட வேண்டும்.

ஒட்டடை எடுக்கும்போது வலி உயிர் போகும். கழுத்து பிடித்துக்கொள்ளும். எட்டு அடி உயரத்துக்கு இருக்கும் சீலிங்கை எட்டி எட்டி தூசியை எப்படி துடைப்பதாம்.

இந்த வலியின் தீவிரம் இவங்களுக்குப் புரியாது.

ஏதோ எல்லா வேலைகளையும் ஆடுற மாட்ட ஆடிக்கறக்கணும், பாடுற மாட்டைப் பாடிக்கறக்கணும் என்று சொல்வது போல, பாட்டு பாடிக்கொண்டே நம்மளை நாமளே வேலை வாங்கிக்கணும் என்று வலியை மறக்க பாடிக்கொண்டே வேலை செய்யப் பழகிவிட்டது.

பருவ வயதான அப்போது தெரியாத அல்லது கவனம் கொள்ளாத உயரக்குறைபாடு வேறுபாடு இப்போது அதிகமாகத் தெரிகிறது. வீட்டு உபகரணங்கள் எதுவுமே உயரம் குறைந்தவர்களுக்கு ஏதுவான தோதாய் இல்லவே இல்லை. ஆடைகள் வைக்கும் பீரோவில், புத்தக ஷெல்ப் அல்லது சமையல் அறையில் பாத்திரங்கள் பலசரக்கு பாட்டில்கள் வைக்கும் செல்பில் மேல் தட்டில் பொருள்களை வைத்து எடுக்கும் வகையில் சிக்கல். சமையல் மேடையில் அதற்கு மேல் கேஸ் ஸ்டவ் வைக்கையில் அதன் மேல் பாத்திரம் வைத்து கரண்டியால் கிண்டும்போது தோள்வலி. அதே மேடையில் மிக்ஸி, கிரைண்டர் கையாள்வதில் சிக்கல், டைனிங் டேபிளில் பேப்பர் வைத்து சேரில் அமர்ந்து எழுதும் போதும் வலி. எழுத சேர் போட்டு அமர்ந்து கம்ப்யூட்டரில் டைப் செய்யும்போதும் சிக்கல் என உயரச் சிக்கல் எல்லா இடங்களிலும் நீக்கமற நிறைந்துள்ளது.

வீட்டை விடுங்க. வெளியில் போகணுமென்று பஸ்சில் ஏறினால், உட்கார இடம் கிடைக்கவில்லையென்றால், கையை உயரே தூக்கி, தொங்கும் பிடியைப் பிடிக்க முடியாது… அப்படி பிடித்தால் வேறு பானம் அருந்தி விட்டு வந்து தள்ளாடுவது போல தள்ளாட்டம் அதிகமாக இருக்கும். இதற்கு சீட் கம்பியைப் பிடித்துக்கொண்டு கொஞ்சம் குறைந்த கை வலியுடன் இருந்துவிடலாம். இரவில் ட்ராவல் பஸ்சில் ஏறினாலோ புஷ் சீட்டில் சாய்ந்து உட்காரவும் முடியாது; படுக்கவும் முடியாது… மறுநாள் காலை ஊர் வந்து சேரும் போது கால்கள் வலியில் வீங்கி இருக்கும்.

சினிமா தியேட்டருக்குப் போனால், சீட்டில் உட்கார்ந்தால் கால் அந்தரத்தில் அரை அடி உயரத்தில் ஆடுமே தவிர தரையைத் தொடாது. யாராவது கீழே குனிந்து பார்த்து கால் தரையில் தெரியாமல் பேயோ என சந்தேகப்படும் வாய்ப்பும் உண்டு. இருளில் சீட்டில், கால்களை சம்மணம் கட்டி உட்காருவது, மறுபடி தொங்கப்போடுவது, மறுபடி சம்மணம் கட்டி உட்காருவது என்று தியேட்டரில் படம் பார்த்துக்கொண்டே யோகாசனப் பயிற்சி செய்வது போலிருக்கும்.
 




Madhumitha

மண்டலாதிபதி
Joined
Jan 17, 2018
Messages
234
Reaction score
317
Location
Rajapalayam
ஹோட்டல் என்றால் வேறு வழியே இல்லை. காலைத் தொங்கப்போட்டிருக்கணும். சம்மணம் கட்டி உட்கார முடியவே முடியாது.

மகள் கார் டிரைவ் செய்வார். அவருடன் போகும் போது காரின் கைப்பிடியை மேலே எப்போதோ ஒருமுறை பேலன்ஸுக்காகப் பிடித்துவிட்டேன். அண்ணா அம்மாவைப் பாரேன், ஷேர் ஆட்டோவில் போவது போல கைப்பிடியை பிடித்திருக்கிறதை என்றாள். உயரமான கணவருக்கே இத்தனை வருட குடித்தனத்தில் இந்த உயரக்குறைவுக்கான சிரமம் தெரியவில்லை. உயரமான மகனுக்கும் மகளுக்கும் எங்கே தெரியப் போகிறதுன்னு பேலன்ஸ்க்காக பிடித்தேன் என்று சொல்லி சிரித்து வைத்தேன்.

இத்தனை நாட்கள் இந்த வலி இல்லையாக்கும்னு கேள்விகள் வரும். இத்தனை வருஷங்கள் இப்பிடிதான் பண்ணினோம்…. ஆனா இப்போது முடியவில்லையே… இளமையைக் கடந்து முதுமையைத் தொட்டுவிட்ட பிறகு…

என்னுடைய தங்கையின் இளைய மகன் அஸ்வின் ஒருநாள் எனக்கு எதிர்பாராத பொழுதொன்றில் வீட்டில் வைத்தே ஞானோபதேசம் அருளிச் செய்தார்.

“என்னடா இது அஸ்வின். எல்லோர்டயும் இவ்ளோ உண்மையா அன்பா இருந்தாலும், அவங்களுக்கான நல்லது மட்டுமே எடுத்துச் சொன்னாலும், நல்லது மட்டுமே செய்தாலும் ஏன் எல்லோரும் இப்படி இருக்கிறாங்க, நாம சொல்றதுதான் சரின்னு தெரிஞ்சாலும், நாம சொல்றதைக் கேக்கிறதில்லை… நாமளே எல்லோரையும் அட்ஜஸ்ட் செய்ய வேண்டியிருக்கு. ஒருத்தராவது நம்மள அனுசரிச்சுப்போறாங்களா” ன்னு தொடர்ந்து பேசறதுக்குள்ளே…

”ஸ்டாப்” என்று வாயில் ஒரு விரலை வைத்து சைகை காட்டி நிறுத்தினான்.

”ஏண்டா” என்றதும், ”இதுக்கு தாம்மா” என்றவன் என் தலையில் கை வைத்து, உடனே தலையில் இருந்து ஒரு அடிக்கு கையை மேலே உயர்த்தித் தூக்கி, ”நீங்க இவ்ளோ உயரம் வளர்ந்து இருந்திருக்கணும்,,, அப்பிடியே கண்ணு பெரிய கண்ணா இருந்து பேசும்போது முழிச்சு முழிச்சுப் பார்க்கணும்… அப்போ எல்லோரும் நீங்க சொல்றதைக் கேட்பாங்க;” கையை ஐந்து விரல்களையும் விரித்துக் காட்டியவன், கையைக் கீழே இறக்கினான், கண்களைச் சுருக்கி கை விரலை கண்களுக்கருகில் மூன்று விரல்களை இணைத்து சுருக்கிக் காட்டி, “இப்பிடி இருந்து, இவ்ளோ சின்ன கண்ணால பார்த்து பேசினா யாராவது உங்களுக்கு பயப்படுவாங்களா” என்றான்.

ஆ என்று வாயைப் பிளந்து அவனைப் பார்த்துக் கொண்டிருந்தவளுக்கு சட்டென தூக்கி வாரிப்போட்டது. இத்தனை வருடங்கள் கழித்து இந்த குள்ளமாக இருக்கிற விஷயம் இப்போ தான் தெரிஞ்சது அதுவும் பாதி ஆயுள் போன பிறகு, இன்னும் இந்தக் உயரக் குறைவு விஷயம் பற்றி தமிழில், யாராவது எழுதி இருக்கிறாங்களான்னு தேடவும் ஆரம்பிக்கல, அதற்குள் இப்போ இந்த சின்னக் கண்ணுக்கான பாடத்தை இதுக்கப்புறம் எப்போ படிக்கப்போறோம்னு புது சிந்தனையில் மூழ்கிப் போனேன். இனி சின்னக் கண்களுக்கான ஒரு கட்டுரையை வேறு உடனே தயார் செய்யணும். தமிழ் இலக்கிய உலகில் உயரக் குறைவுக்கும், சின்ன கண்களுக்குமாக எழுதப்பட்ட ஏதாவது படைப்புகள் இருந்தால் தேட வேண்டும்.

மனதுக்கு திருப்தி அளிக்கும் வகையில் அப்படி யாரும் இதுவரையில் எழுதியிருக்கவில்லை என்றால், உயரம் குறைந்தவர்கள் அன்பால் உயர்ந்தவர்கள் மனதால் உயர்ந்தவர்கள் விசால மனமும் உயர்சிந்தனையும் கொண்டவர்கள் செயல்பாடுகளிலும் உழைப்பிலும் அசாதாரண திறமை அவர்களுக்கு உண்டு என்று விளக்கிச் சொல்லும் விதமாக ஒரு புத்தகத்தை உடனடியாக எழுதியாக வேண்டும். ஆனால், இந்தச் சிறிய கைகளால் உலகம் போற்றும் ஒரு படைப்பினை என்றேனும் ஒருநாள் எழுதியே ஆக வேண்டும் என்று எடுத்த முடிவு சாத்தியமாகுமா? காத்திருக்கிறேன்.

அன்புடன்
சுரேகா
என்று எழுதி முடித்தாள்.

வாய்வார்த்தை என்று சொல்லுவது போல இப்போது எழுதியது வெறும் எழுத்தல்ல. இது அற்புதங்களைப் புரியும் மந்திரச்சொல். நூலகத்துக்கான அற்புதத்தை இது நிச்சயம் நிகழ்த்தும் என்று அமைதி கொண்டாள்.
 




sakthipriya

SM Exclusive
Joined
Jan 17, 2018
Messages
1,855
Reaction score
5,222
Age
40
Location
coimbatore
அருமையான பதிவு அதிலும் FOOD DRIVE கண்மாய் தூர்வாருதல் குள்ளம் என்பது குறைபாடல்ல எல்லாம் அருமை
 




Madhumitha

மண்டலாதிபதி
Joined
Jan 17, 2018
Messages
234
Reaction score
317
Location
Rajapalayam
அருமையான பதிவு அதிலும் FOOD DRIVE கண்மாய் தூர்வாருதல் குள்ளம் என்பது குறைபாடல்ல எல்லாம் அருமை
அவ்வளவு நன்றிம்மா சக்திப்ரியா. இன்னும் இரண்டு அத்தியாயங்களில் நாவலை முடிக்கணும்.
 




sakthipriya

SM Exclusive
Joined
Jan 17, 2018
Messages
1,855
Reaction score
5,222
Age
40
Location
coimbatore
அவ்வளவு நன்றிம்மா சக்திப்ரியா. இன்னும் இரண்டு அத்தியாயங்களில் நாவலை முடிக்கணும்.
நல்லபடியாக முடிங்க வாழ்த்துக்கள்
 




Madhumitha

மண்டலாதிபதி
Joined
Jan 17, 2018
Messages
234
Reaction score
317
Location
Rajapalayam
நல்லபடியாக முடிங்க வாழ்த்துக்கள்
அன்புக்கும் வாழ்த்துக்கும் கடமைப்பட்டிருக்கிறேன்மா
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top