• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Madhumitha's Vallamai Thaaraayo 31

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Madhumitha

மண்டலாதிபதி
Joined
Jan 17, 2018
Messages
234
Reaction score
317
Location
Rajapalayam
வல்லமை தாராயோ 31 – மதுமிதா

நூலகத்தில் சுரேகாவும் நூலகர் முத்துலட்சுமியும் மட்டுமே இருந்தனர்.

நூலகம் திறக்கப்பட்டும் நேரத்துக்கு ஒரு மணி நேரம் முன்பாகவே தொலைபேசியில் நூலகரின் அழைப்பு வந்ததும் சுரேகா நூலகத்துக்கு வந்திருந்தாள். நாளிதழ்களும் புத்தகங்களும் பிரிக்கப்படாமல் மேஜையில் கிடக்க இருவரும் பேசிக் கொண்டிருந்தனர்.

“அக்கா எம் எல் ஏ க்கு போன் பண்ணுங்க. லைப்ரரி இடம் பத்தி ஏதும் தகவல் வந்ததான்னு கேளுங்க”

“என்னம்மா பேசறீங்க. அவர் எம் எல் ஏ. எந்த இடத்தில் இருந்து யாருடைய நலனுக்காக யாரு கிட்ட பேசிட்டு இருக்கிறாரோ. நாம நினைச்ச நேரத்துல நாம அவருக்கு போன் பண்ண முடியாது.’

“அக்கா. எனக்காக போன் பண்ணுங்க. மார்ச் மாசம் மகளிர் தினத்துக்கு கட்டடப் பணி அஸ்திவாரம் போட்டு ஆரம்பிக்கலாம்னு அன்னிக்கு சொன்னாரே. அது என்னாச்சுன்னு நாம கேக்க வேணாமா”

“நம்ம மனுவையும், அவர் எழுதினதையும் கலெக்டர் ஆபீசில் அன்னிக்கே அவர் கொடுத்தாச்சு. இனி அங்கிருந்து எதுனா நடவடிக்கை எடுக்க ஆரம்பிச்சாதானே அவருக்கு அடுத்து என்ன நடந்ததுன்னு விபரம் தெரியும். அவர் நமக்கு இவ்வளவு செய்யறதே பெருசு. அதுக்குள்ளே நாம அவரை தொந்தரவு செய்யக்கூடாதும்மா.”

“இல்லக்கா. இன்னிக்கு நாம கேட்ட இடத்தை சர்வே பண்ண வர்றாங்க. அவங்க இடத்தைப் பார்க்க வர்றப்போ நம்மளயும் வரச் சொல்லி இருக்கிறாங்க. அவங்க வர்றதுக்கு அஞ்சு நிமிஷம் முன்னால உங்களுக்கு போன் பண்ணுவேன். நான் போன் பண்ணுன உடனே நீங்க அங்க வந்துடுங்க. எம் எல் ஏ க்கு போன் பண்ணினா அவரும் வந்துட்டாருன்னா நல்ல விதமா முடியும்லக்கா”

“இல்லம்மா. அவர்ட்ட இப்போ பேச முடியாது. இவங்க பார்த்துட்டு போகட்டும். அவரா பேசும்போது இந்தத் தகவலைச் சொல்லலாம். ஆனா, இன்னிக்கு பாக்க வர்றது கூட எனக்கு சும்மாதான் வர்றாங்கன்னே தோணுது”

“ஏன்க்கா அப்படி சொல்லறீங்க. எல்லாமா சேர்ந்து ஒண்ணா கூடி வர்றப்போ இப்படி சொல்லறீங்களேக்கா”

“இத்தனை வருஷமா நடந்தது அப்படி நினைக்க வைக்குதும்மா. நாம இப்போ இருக்கிற கலெக்டரையும், முனிஷிபல் கமிஷனரையும் இதுவரைக்கும் நூலக இட விஷயமா பார்க்கல. எம் எல் ஏ ஆளும்கட்சிக்கு எதிரான கட்சியில இருக்கிறவரு. இதை நடக்க இந்த கட்சி அனுமதிக்குமா. அதை யோசிங்க”

“அக்கா ஒண்ணும் சொல்லாதீங்க. இவங்களுக்குதான் மனு குடுத்திருக்கிறோமேக்கா”

“மனு எழுத்து மூலமா போயிருக்கு. நேரில் பார்த்தால் தானே முழு விபரமும் சொல்ல முடியும். கலெக்டர், கமிஷனர் ரெண்டு பேரையும் துளி நிகழ்ச்சியில் பார்த்திருக்கிறேன். நூலக இட விஷயம் பற்றிப் பேசும் சந்தர்ப்பம் அமையல. போன வாரம் பழைய பேருந்து நிலையம் பக்கத்துல பேரணியாக நடந்து ஒவ்வொரு ஏரியாவாக துப்புறவு செஞ்சோமே, அன்னிக்கு இந்த கமிஷினர் அம்மாதான் நிகழ்வைத் துவக்கி வைச்சாங்க. வணக்கம் சொல்லும்போது, எழுத்தாளர்னு அறிமுகம் செஞ்சவுடனே மரியாதையாகப் பேசிட்டு தள்ளி இருக்கணும் நான், நீங்க பெசியவங்கன்னு பேசினாங்க, நூலக விஷயத்தை அப்போ கூட அவங்க கிட்ட பேச முடியல.”

“இதெல்லாம் ஒரு விஷயமாக்கா. இடம் இன்னிக்கு பார்த்துட்டு முடிவு சொல்லிடுவாங்க. இன்னிக்கு முடிவு தெரிஞ்சுட்டா அவருடைய சட்ட மன்ற உறுப்பினர் நிதி பணத்துல கட்டட வேலை ஆரம்பிச்சுட்டா நல்லதுக்கா”

“இந்த இடம் இதுதான்னு அவங்களுக்கு தெரியாதாம்மா. சும்மா வந்து பாத்துட்டு நீர்ப்பிடிப்பு இடம் அதனால தர முடியாதுன்னு எழுதிக் குடுக்கப் போறாங்க அவ்வளவு தான்.”

“ஏங்க்கா நெகடிவாவே பேசறீங்க. நல்லது நடக்கும்னு நினைக்காம”

“நாலு சமுதாயத்துக்காறங்க கட்டின நாலு கல்யாண மண்டபங்கள் அங்க இருக்கு. கழிப்பிட கட்டிடம் கட்டி இருக்கிறாங்க. இது எல்லாமே அரசிடம் 99 வருஷ லீஸ் எடுத்துதான் பண்ணி இருக்கிறாங்க. இது எல்லாமே இருக்கும் இடம் நீர்ப்பிடிப்பு இருக்கிற இடம்தான். ஆனா கட்டடம் கட்ட இடம் ஒதுக்கி கல்யாண மண்டபங்கள் கட்டி எத்தனையோ வருஷங்கள் ஆச்சு. ஆனா லைப்ரரிக்கு இப்படிதான் பதில் வரும்.”

நூலகரின் முகம் வாடியது.

“சரிம்மா. நல்லது நடந்தா நல்லது தானே. இந்த இடத்தை லைப்ரரிக்கு குடுக்குறோம்னு எழுதி எழுத்து மூலமா குடுத்துட்டாங்கன்னா நமக்கு நல்லதுதான். நீங்க புதுசா வந்திருக்கிறீங்க. உங்களுக்கு நம்பிக்கை இல்லாம பேசக்கூடாது. இருபத்தியாறு வருஷமா இப்படி நடக்கிறதுனால சொல்லறேன். நீங்க வந்த கொஞ்ச நாள்ல இப்படி நடக்குறத பாக்கறீங்க தானே. சரிசரி நீங்க வருத்தப் படாதீங்க.”

இன்னும் வாயைத் திறக்காமல் சோகமாக சுரேகாவைப் பார்த்தாள்.

“பாருங்கம்மா. எத்தனையோ பிரச்சினைகள், உயிர் போகிற பிரச்சினைகள், போராட்டங்களை அரசு கண்டுக்காம இருக்கு, முதல் அமைச்சருக்கே பாதுகாப்பு இல்லை. கட்சி ஸ்திரமா இருக்க அரசாங்கத்துல போராடிக்கிட்டு இருக்கிறாங்க. மக்களின் உயிர் ஆதாரப் பிரச்சினைகளையே கண்டுக்காம கடந்து போறாங்க. இதில் நம்ம லைப்ரரி விஷயத்தில் என்ன வருமானம் இருக்குதுன்னு அவங்களுக்கு அக்கறை இருக்கும். நம்மால சில லட்சங்களையாச்சும் புரட்டி அவங்களுக்கு கொடுத்து வேலை செய்யற நிலையில் இருக்கிறோமா. சரி சரி நான் மீதி வேலைகளை முடிக்கிறேன். நீங்க சர்வே பண்ண அந்த அம்மா வந்ததும் போன் பண்ணுங்க. நான் மாரியம்மன் கோயிலுக்கு வந்துடறேன்” என்று சுரேகா கூறியதும்,

“சரிக்கா” என்று காலையில் வரும்போதிருந்த உற்சாகம் குறைந்து சோர்வுடன் பதில் அளித்தாள். கிளம்பிய சுரேகாவை நிறுத்தி,

“அக்கா. சொல்ல மறந்துட்டேன். ரெண்டு விஷயம் சொல்லணும். விருதுநகர் லைப்ரரியில் இருந்து மாவட்ட அளவுல கட்டுரைப் போட்டி நடத்தினாங்கள்ல. நம்ம லைப்ரரியில இருந்து எழுதின ரெண்டு குழந்தைங்களுக்கு பரிசு கிடைச்சிருக்குக்கா. அதை தனியா ஒரு நாள் எல்லார் முன்னாடியும் சொல்லி பரிசா கொடுக்கலாம்.”

“ரொம்ப நல்ல விஷயம். அடுத்த வாரம் இதை செஞ்சுடலாம்.”

“நீங்க இத்தனை புஸ்தகம் வாசிக்கிறீங்க. வாசிச்ச புஸ்தகங்களைப் பத்தி வாசகர் வட்டத்துல பேசறீங்க. ஏன்க்கா எழுத மாட்டேங்கறீங்க”

“இந்த லைப்ரரி ஆரம்பிச்சதிலிருந்து இப்ப வரைக்கும் இங்க இருக்கிற, அப்புறம் நான் தனியா வாங்கி வாசிச்சது மட்டும் ஆறாயிரம் புஸ்தகங்களுக்கு மேல இருக்கும். ஒவ்வொண்ணும் எனக்கு பிடிச்சு வாசிச்ச புஸ்தகங்கள். எல்லாத்தையும் எழுத முடியல. நேரம் இருக்கிறப்போ எழுதப் பார்க்கிறேன். சரி இன்னொரு விஷயம் ன்னு சொன்னீங்களே. அது என்ன சொல்லுங்க”

“அப்புறம் வந்து… இன்னொன்னு நம்ம சரளா பொண்ணு யாரையோ லவ் பண்ணிட்டு வீட்டை விட்டு போச்சுல்ல. அவளைத் தேடிட்டுப் போயி கண்டுபுடிச்சு வீட்டுக்கு கூட்டிட்டு வந்தாங்கள்ல, அந்தப் பொண்ணு மருந்து குடிச்சிடுச்சுக்கா”

சுரேகா பதிலேதும் பேசவில்லை. லைப்ரரியை விட்டு வெளியே வந்தாள். வெயில் நேரடியாக மேலே படுவது கூட அவளுக்கு எந்த பாதிப்பையும் தந்ததாகத் தெரியவில்லை. வீட்டுக்கு வந்து சேர்ந்தாள்.

இப்படியான மரணங்கள் அவளை வெகுவாக பாதிக்கின்றன. சமூகம் நிர்ப்பந்தம் தருவது. இதை எப்படி எதிர்கொள்ளணும் என்பதை இளய தலைமுறையினருக்கு கற்றுக்கொடுக்கும் எந்த வழியும் இல்லை. ஒன்று அவர்களே இப்படி முடிவுக்கு வருகிறார்கள். அல்லது பெற்றோரோ சமுதாயமோ அதைச் செய்துவிடுகின்றனர். இது இருபத்தி ஒன்றாம் நூற்றாண்டு இல்லையோ… கற்காலத்தில்தான் இருக்கிறோமா?

யாரையும் தப்ப விடுவதில்லை மரணம். மரணத்தை மனிதனாகத் தேடிப் போக வேண்டிய தேவையும் இல்லை. தானாகவே வர வேண்டிய நேரத்தில் யார் தடுத்தாலும் நில்லாது வந்து எதிர் நிற்கும் உடன் அழைத்துச் செல்ல. நமக்கான ஒரே தீர்வு புன்னகையோடு அதை எதிர் கொள்வது மட்டுமே.

உங்களுக்கு மரணம் வருவதற்கு முன் நாம் உங்களுக்கு வழங்கியவற்றிலிருந்து (நல்வழியில்) செலவிடுங்கள்! "இறைவா! குறைந்த காலம் வரை எனக்கு நீ அவகாசம் அளித்திருக்கக் கூடாதா? தர்மம் செய்து நல்லவனாக ஆகியிருப்பேனே'' என்று அப்போது (மனிதன்) கூறுவான்.
திருக்குர்ஆன் 63:10

ஒவ்வோர் உயிரும் மரணத்தைச் சுவைக்கும். கியாமத் நாளில் உங்களின் கூலிகள் முழுமையாக வழங்கப்படும். நரகத்தை விட்டும் தூரமாக்கப்பட்டு சொர்க்கத்திற்கு அனுப்பப்பட்டவர் வெற்றி பெற்று விட்டார். இவ்வுலக வாழ்க்கை ஏமாற்றும் வசதிகள் தவிர வேறில்லை.
திருக்குர்ஆன் 3:185

எழுத்தாளர் சோ. தர்மன் அவர்கள் சமூக அக்கறையுடன் எழுதி இருந்தார்.

எங்கள் ஊரில் நான் சிறுவனாயிருந்த போது மரத்தினடியில் மாடு கட்டுபவர்கள் முளைக்குச்சி அடித்து அதில்தான் மாடுகளை கட்ட வேண்டும்.மரத்தின் வேரில் கட்டினால் அபராதம். ஆடுமேய்ப்பவர்கள் துரட்டிக்கம்பால் மரக்கொப்புகளை வளைத்து சவட்டி ஆடுகளை திங்க விடலாம். மரக்கொப்புக்களை துண்டாக வெட்டி விட்டால் அபராதம்.

நீர் நிலைகளைச் சேதப்படுத்தினால் ஊரைவிட்டே விளக்கி வைக்கப்படுவார்கள். கண்மாய்கரைகளில் புதர்களில் தேன் எடுக்க, முள்புதர்களை சேதப்படுத்தினால் அபராதம். படிப்பறிவில்லாத வேளாண் தொழில் செய்த சம்சாரிகள் இப்படியெல்லாம் நீர் நிலைகளை பாதுகாத்தார்கள். 1947ல் வெள்ளைக்காரன் சுதந்திரம் கொடுத்த போது 39632 கண்மாய்களையும் சேர்த்துதான் கொடுத்தான். இவற்றில் பாதிக்கு மேல்இப்போது இல்லை. இருப்பவைகள் தூர்வாராமல் பராமரிப்பின்றி மேடேறி புதர்மண்டி கிடக்கின்றன. பகுத்தறிவுவாதிகள் என்று சொல்லிக் கொள்ள நாம் வெட்கப்பட வேண்டாமா?

என்று எழுதி இருந்தார் சோ தர்மன்.

எத்தனை அர்த்தம் பொதிந்தவை. இவற்றையெல்லாம் யார் மாற்றினார்கள். இந்த எழுபது வருடங்களில் இயற்கையில் இருந்து வெகுதூரம் நாம் விலகி வந்திருக்கிறோம் என்பதைத்தான் நாம் யாருமே உணர்ந்து கொள்ளவில்லை.

தமிழ்நாட்டில் இப்போது ஏறக்குறைய 18,000 ஏரிகள் தான் இருக்கின்றன. 1947ல் வெள்ளைக்காரன் சுதந்திரம் கொடுத்த போது 39632 கண்மாய்களைக் காப்பாற்ற எப்படித் தவறினோம்.

முன்பு வெள்ளப் பெருக்கெடுத்தோடும் காலங்களில், மூடி இருக்கும் மடையைத் திறப்பது மிகவும் கடினமான விஷயம். வெள்ளமாகப் பாய்ந்துவரும் நீருக்கு மத்தியில், பல அடி ஆழமான நீருக்குள் மூச்சை அடக்கி மூழ்கி மடையைக் கண்டுபிடித்து திறந்துவிட்டபின் அந்த மடைவழியாய் வெளியேறும் நீரின் அதிவேகமான பாய்ச்சலில் சிக்காமல் மீண்டு மேலெழுந்து வருவது உயிரைப் பணயம் வைக்கும் செயல். அந்தப் பணி செய்பவர்களை அந்தக் காலத்தில் மடையைத் திறப்பவர்கள் என்பதால் ’மடை’ யர்கள் என்பார்கள். இப்போதோ உயிரைப் பணயம் வைக்கும் மடையர்களாக விவசாயிகளும் மீனவர்களும் உயிரைக் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் மீதான எந்த அக்கறையும் இன்றி, விவசாயம் செய்ய வேண்டாம் என்னும் நிலைக்குத் தள்ளும் பணியினை அரசாங்கமே செய்கிறது.

எலிக்கறி தின்பதையும் தற்கொலையையும் வாழ்வாகச் செய்தது யார்?
 




Madhumitha

மண்டலாதிபதி
Joined
Jan 17, 2018
Messages
234
Reaction score
317
Location
Rajapalayam
சரி காதல் விஷயத்துக்கு வருவோம்.

காதல் என்றால் என்ன?
காதல் என்பது கற்பனையா
காதல் என்பது கனவா நனவா
காதல் என்பது உன்மத்த மனநிலையா
காதல் என்பது உன்னத உணர்வுகளின் சேர்க்கையா
காதல் சென்று முடியும் இடம் காமமா

இதுதான் காதல் என்று யாராலும் ஒன்றையே சுட்டிக்காட்ட இயலாத அளவில் காதல் உலகம் முழுக்க ஒவ்வொருவரின் கருத்திலும் ஒவ்வொரு பொருளைக் கொண்டிருக்கிறது. உடலுள் நிகழும் வேதியியல் நிகழ்வு என்றும் சொல்கிறார்கள்.

காதலைப் பற்றிய தவறான ஒரு மாயைக்கு நிகரான உணர்வே சமுதாயத்தில் காணக்கிடைக்கிறது. ஊடகங்களும் அதையே ஊதிப் பெருக்கி நலன் காண்கின்றன.

காதல் என்றால் என்ன?

காதல் என்பது மனநோயா வாழவைக்குமா வாழ்வை அழிக்குமா

காதல் என்னும் உணர்வு எத்தனை வயதில் ஆரம்பித்து எத்தனை வயதில் முடியவேண்டும் என்னும் கணக்கு இருக்கின்றதா என்ன

ஒருதலைக்காதல், பொருந்தாக்காமம், பெருந்திணை, கைக்கிளை என்றெல்லாம் காதலின் வகைகள் இலக்கியத்தில் பிரிக்கப்பட்டுள்ளன.

காதல் என்பது மனித மனங்களில் சிறகுகளை விரிக்கச் செய்து எங்கெங்கிலும் பறந்து திரியச் செய்யும் வல்லமை பெற்றது. அதன் வீச்சு ஆக்கப்பணிகளில் உயர்வடையவும் செய்யும். எதிர்மறையாகத் தன்னையே அழித்துக்கொள்ளவும் செய்யும். கடவுளுக்கு இணையான வல்லமை பொருந்திய உணர்வாகவே உலகில் விளங்குகிறது.

இலக்கியங்கள் முழுக்க சொல்லப்படும் காதல்கள் அனைத்தும் அழியாக்காதல்கள் என ஆண்டாண்டு காலங்களாக சொல்லப்படுகின்றன.

அம்பிகாபதி அமராவதி, ரோமியோ ஜூலியட், லைலா மஜ்னு, அனார் சலீம்... இன்னும் இது போன்ற இந்த காதல் ஜோடிகள் அனைவரும் காதலித்து கைகூடாமல் உயிரைத் துறந்தவர்கள். அதன் விளைவாக ஏற்பட்ட பரிதாப உணர்ச்சியினால் மக்களின் மனதில் அழியாமல் நிலைத்து நின்றவர்கள். எல்லாமே காதலர்கள் என அறியப்பட்ட ஜோடிகள் ஒன்று சேரவே இயலாது மரித்த அழிவற்ற காதல்களாகப் போற்றப்படும் கதைகள். காதலில் இணைந்து வெற்றிபெற்ற காதல்களைப் பற்றி அழிவற்ற காதலென போற்றப்பட்ட கதைகள் சிலவே.

காதல் என்பது அதீதபிரியம் + காமம் = காதல் என்னும் பொருளில் பெரும்பாலும் காணப்படுகிறது. பாலுணார்வு இல்லாத காதல் இல்லை என்றே குறிப்பிடலாம். ஏனெனில் காதல் என்னும் உணர்வு எழும்போதே உறவில் முடிகிறதோ இல்லையோ பாலுணர்வும் தொத்திக் கொண்டே இருக்கிறது.

காதலித்த பெண்ணுக்காக தாஜ்மஹால் கட்டிய தேசத்தில் தான், தான் காதலித்த பெண்ணின் மீது ஆசிட் வீசும் வெறித்தனத்தையும் பார்க்கிறோம். கொலை புரிவதையும் நாளிதழில் படித்து அதிர்ந்து போகிறோம். இது காதலாகுமா? இல்லவே இல்லை. இது மிதமிஞ்சிய தீவிரமான மனநோயின் விளைவு. இது செக்சுவல் ஜெலஸியின் ( போட்டி, பொறாமையின்) விளைவு. காதலுக்கு எதிராகக்கிளம்பும் எதிர்ப்புக்கு காரணம் இந்த பொறாமை உணர்வே ஆகும் எனலாம்.

காதல் கவிதைகளும், காதல் கடிதங்களும் என்றென்றைக்கும் பேசப்படுபவைகளாகும். லவ் கோட்ஸ் என்று கூகுளில் கிடைக்கும் வாசகங்கள் காதலர்களால் அப்படியே எடுத்து உபயோகப்படுத்தப்படுபவை.

காதல் காதல் காதல் காதல் போயின்
சாதல் சாதல் சாதல் என்றான் பாரதி.

பாரதி எழுதிய காதல் பாடல்கள் வசனகவிதையின் உச்சம். கண்ணம்மா பாடலும், ராதை பாடலும் காதல் ரசத்தைப் பிழிந்து எழுதப்பட்டவை. அவன் தான் ‘மோகத்தைக் கொன்று விடு. அல்லால் என் மூச்சை நிறுத்திவிடு' என்றும் பாடுகின்றான்.

திருவள்ளுவரோ காமத்துக்கு என்று ஒரு பிரிவை எடுத்து காமத்துப்பால் என்றே ஒதுக்கிவிட்டார்.

உவந்து உறைவர் உள்ளத்துள் என்றும் இகந்து உறைவர்
ஏதிலார் என்னும் இவ்வூர்.

என் மனதில் என்றும் என் காதலன் உறைந்திருக்கிறான். இந்த ஊர்க்காரர்கள் அவர் என்னைப் பிரிந்து இருக்கிறார் என்று எதற்கு சொல்கின்றனர் என அந்தக் காதலி காதல் மயக்கத்தில் கேட்கிறாள்.

சரித்திரத்தில் நிலைபெற்ற பல காதல் கடிதங்கள் உள்ளன.

’சிமொன் தெ பொவ்வார்’ பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த பெண்ணியசிந்தனை கொண்ட எழுத்தாளர். ’இரண்டாம் பாலினம்’ என்னும் நூலை உலகுக்கு அளித்தவர். இவர் தத்துவவாதி சார்த்தருடன் இணைந்து வாழ்ந்து வந்தவர். அப்போது அமெரிக்காவில் வாழ்ந்த அல்கிரெய்னைச் சந்திக்கிறார். இவரின் மரணத்தின்போது கை விரல்களில் அல்கிரெய்ன் இவருக்கு பரிசளித்த மோதிரத்தை அணிந்திருக்கிறார். அவர்களின் கலாசாரப்படி இதில் தவறெதுவும் இல்லை எனலாம்.

இவரின் காதல் கடிதங்கள் பிரசித்தி பெற்றவை. இவரின் வாசகர்களில் சிலர் இந்த காதல் கடிதங்கள் இவரால் எழுதப்பட்டதில்லை எனச் சொல்வோரும் உண்டு. அதற்கு அவர்கள் எடுத்துக்கூறும் காரணங்கள் சிந்தனை சாலியான ஒரு பெண் இவ்வளவு கற்றுக்குட்டியாக காதல் கடிதங்கள் எழுதியிருக்க முடியாது என்பதாகும்.

இதில் எனக்கு மாற்றுக்கருத்துண்டு. ஒரு பெண் எத்தனை சிறந்தவளாக அறிவு ஜீவியாக சிந்தனாவாதியாக இருந்தாலும் காதல் என்று வந்துவிட்டால் அங்கே அறிவுக்கோ சிந்தனைக்கோ இடமில்லை. காதலில் அன்பும் பிதற்றலுமே சிறந்த விஷயமாகும். அங்கே அறிவுக்கு வேலையேயில்லை. எனில், அது காதலும் ஆகாது. ’பிலவ்ட் சிக்காகோ மேன்’ என்னும் தலைப்பில் வெளிவந்த நூல் முழுக்க இவர் தனது காதலன் நெல்சன் அல்கிரெய்னுக்கு எழுதிய நூற்றுக்கும் மேற்பட்ட காதல் கடிதங்களின் தொகுப்பாகும். இதில் காதலின் மேன்மை ததும்பித் தளும்ப பல கடிதங்கள் எழுதியிருப்பார். அதில் அல்கிரெய்னை ’செல்ல முதலையே’ என்றெல்லாம் அழைத்து எழுதியிருப்பார். கொஞ்சலும் கெஞ்சலும் இல்லாத காதல் எப்படி காதலாக முடியும்.

காதல் மணம் புரிந்து கொண்ட ஒருவர் ஒருவருடம் முடிந்ததும் என்னிடம் கேட்டார். காதல் என்பது உண்மையில் இருக்கிறதா? காதல் என்ற ஒன்று இல்லையெனில் ஒருவரின் மனம் ஏன் தான் விரும்பும் ஒருவரையே நாடுகிறது. இன்னொருவர் என்னதான் அருகில் வந்தாலும் அவரை விடுத்து தான் விரும்பும் ஒருவருக்காக ஏன் உயிரையே தர முனைகிறது. காதல் மனமும் உடலும் சார்ந்த விஷயம். மனதின் ஈர்ப்பும் உடலின் நெகிழ்வும் உயிரின் சமர்ப்பணமும் காதலாக பரிணமிக்கிறது என்றேன்.

ஆண்டாளும், அக்கமகாதேவியும் இதைத்தானே செய்தனர். சங்க இலக்கியங்களும் தற்போதைய இலக்கியங்களும் இதைத்தானே சொல்கின்றன.

யதார்த்த வாழ்வில் நாம் சந்தித்த எத்தனையோ காதல்கதைகள் வலியும் ரணவேதனையும் நிரம்பியதாகவே காணப்படுகின்றன.

காதல் வயதோடு சம்பதப்பட்டதல்ல. எந்தப் பருவத்திலும் காதல் உண்டாகலாம். எப்போது எவர் மீது என்ன காரணத்தால் காதல் உணர்வு ஏற்படுகின்றது என்பது வியத்தற்குரிய விஷயமாகவே உள்ளது.

சரி காதல் என்றால் என்ன எந்த டெபனிஷனில் அதை அடக்கலாம் என கண்ணைக் கட்டிக்கொண்டு முயற்சிக்கும்போதெல்லாம் அது நம் கைகளுக்குள் அகப்படுவதில்லை. எந்த டெபனிஷனுக்குள்ளும் அடங்காமல் அது கண்ணாமூச்சி ஆட்டம் காட்டி தப்பித்து மறைந்து போய்விடுகிறது.

உயிர்களின் சந்ததியின் நீட்சிக்கு காரணமாயிருக்கும் இந்த உணர்வு மரபணுக்களில் பிணைந்து காலங்காலமாக தொடர்ந்து உயிர்களில் இயங்கிக்கொண்டிருக்கிறது. ஜீன்கள் அவற்றை ஒரு உயிரிலிருந்து அதன் அடுத்த சந்ததி உயிருக்கு கடத்திக்கொண்டே இருக்கிறது. அதன் தொடர் சங்கிலியில் இணைந்து மற்றொன்றாய் பிறந்து வேட்கையே மனித உயிர்களின் அடிப்படை நோக்கமாகவுமிருக்கலாம்.

டபுள் ஹேலிக்ஸ் மூலக்கூறு தன்னைப் போல் இன்னொரு மூலக்கூறை தன்னைப்போலவே உருவாக்க வேண்டும் என்பது இயற்கை நியதி. இந்த உந்துதல் அதற்கு எப்படி வந்தது என்பதை நாம் அந்த ஜீனின் கட்டளைப்படி நடந்துகொண்டிருக்கிறோம் என்று இருக்கும் வரை என்றும் அதன் காரணத்தை அறிந்துகொள்ள முடியாது. இதை அறியையலா மாயை என்றும் சொல்லிக்கொள்ளலாம்.

கோழி முதலில் தோன்றியதா முட்டை முதலில் தோன்றியதா என்னும் தத்துவ கேள்வி என்றைக்கும் இருந்துகொண்டிருக்கிறது.

கோழி இன்னொரு கோழியை உருவாக்கதான் முட்டையை இடுகிறது என்று சொல்கிறோம். முட்டை இன்னொரு முட்டையை உருவாக்கதான் கோழியாக மாறுகிறது என்று சொன்னால் நீங்கள் ஒத்துக்கொள்வீர்களா?

ஆனால் உண்மையில் இன்றைய அறிவியல் இப்படித்தான் விளக்கம் அளிக்கிறது. முட்டைக்குள் இருக்கும் கருவுக்குள் இருக்கும் செல்லுக்குள் இருக்கும் ஜீனுக்குள் இருக்கும் டிஎன்ஏ என்ற டபுள் ஹேலிக்ஸ் மூலக்கூறின் தன்னைப்போலவே மற்றொரு மூலக்கூறை புதிதாக உருவாக்க வேண்டும் என்ற உந்துதலின் முடிவற்ற விளையாட்டில்தான் புவியில் உயிரினங்கள் இருக்கின்றன. டிஎன்ஏ மூலக்கூறின் பரிணாம வளர்ச்சியில் மனிதனும் ஒரு அங்கம் ஆகிறான். காதலும் ஒரு அங்கம் ஆகிறது.

என்ன குழப்பமாக இருக்கிறதா. நல்லது. குழப்பத்திலிருந்துதான் தத்துவ கேள்விகள் துவங்குகின்றன. காதல் தத்துவம் எப்படி இருக்கிறது? இதுவே உலகின் மிகப்பெரிய சிறந்த நாடகம் (The Greatest Show On Earth).

போன் ஒலித்தது. நூலகரின் அழைப்புதான். எழுதுவதை நிறுத்திய சுரேகா காதல் குறித்த நினைவுகள் கலைய மாரியம்மன் கோயில் நோக்கி நடந்தாள்.

இரு கல்யாண மண்டபங்களைக் கடந்ததும் தந்தை பெரியார் சிலையைப் பார்த்துவிட்டு சென்றாள். நூலகர் ஜீப்பில் வந்திருந்த பெண்மணியிடம் பேசிக்கொண்டிருந்தார். அருகில் இரு ஆண்கள் இருந்தனர். சற்றே தள்ளி முகம் முழுக்க கவலை அப்பிய முகத்துடன் இரு பெண்கள் பார்த்துக் கொண்டிருந்தனர். மேலே டிஷ் மாட்டப்பட்ட மூன்று குடிசை வீடுகள் இருந்தன. அங்கே வசிப்பவர்களாக இருக்க வேண்டும். தங்களை அங்கிருந்து அப்புறப்படுத்துவதற்காக வந்தவர்களாக ஜீப்பில் வந்து இறங்கியவர்களைப் பார்த்ததும் பயந்து நின்றிருக்க வேண்டும்.

வணக்கம்மா என்றாள் சுரேகா.
இவங்க தான் சுரேகா. எழுத்தாளர்.

அந்தப் பெண்மணி மென்மையாக புன்னகைத்தவர் மீண்டும் இடத்தைப் பார்த்தார்.

“அம்மா. அந்தப் பக்கம் பத்து செண்ட் இடமாவது ஒதுக்குங்க. வரும் காலத்தில் பெண் குழந்தைகள் சைக்கிள் டூ வீலர் எடுத்து வந்து நிறுத்திட்டு படிச்சுட்டுப் போற இடமாக இருக்கட்டும். கல்யாண மண்டப பின் பக்க சுவருக்கும், இந்த கழிப்பிட இடத்துக்கும் நடுவில் இருக்கும் இடமாக இருந்தால் கூட பரவாயில்லை.” என்றாள் சுரேகா.

ஐந்து செண்ட் மட்டுமாவது ஒதுக்கினால் போதும் என்ற மனநிலையில் இருந்தாள் நூலகர்.

பத்து நிமிடங்களுக்குள் என்ன பார்த்து முடித்தார்களோ பதில் எதுவும் பேசாமல், ஜீப்பில் ஏறிச் சென்றுவிட்டனர்.

இரண்டு மாதங்களில் சுரேகா எதிர்பார்த்தைப் போல நீர்ப்பிடிப்பு இடம் நூலகத்துக்கு ஒதுக்க முடியாது என்ற பதில் தகவலாகக் கிடைத்தது.

பதறிக்கொண்டு நூலகர் தொலைபேசியில் சொன்ன இன்னொரு விஷயம், “அக்கா நூலகத்துக்கான கட்டடம் கட்டுறதுக்கு இடம் இல்லைன்னா நூலகத்தை அருகில் இருக்கும் அரசுப்பள்ளிக்கு மாத்தணும்னு கடிதம் வந்திருக்குக்கா”
 




sridevi

அமைச்சர்
Joined
Jan 22, 2018
Messages
4,750
Reaction score
7,120
Location
madurai
Surekha correcta than sonnanga..
neer pidippu idamnu noolakathuku othuka mattanganu ..
kadhal pathiya karuthukal????adutha sothanaya noolakathuku .... Nice epi sis
 




Madhumitha

மண்டலாதிபதி
Joined
Jan 17, 2018
Messages
234
Reaction score
317
Location
Rajapalayam
Surekha correcta than sonnanga..
neer pidippu idamnu noolakathuku othuka mattanganu ..
kadhal pathiya karuthukal????adutha sothanaya noolakathuku .... Nice epi sis
Thanks a lot ma Sridevi...
sothanai mel sothanai podhumada sami...
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top