Mayak Koattai - Minnal : Aththiyaayam 33 continuation

#1
கண்களை மூடி பிரார்த்தித்தாள்.

"அம்மா தாயே மின்னல்! நானும் என் கூட வந்தவங்களும் இந்தக் காட்டுக்கு தீமை செய்ய நினைக்கல்லன்னு உனக்கே தெரியும். இதைக் காப்பாத்த எங்களை நீ மீகாமர்களா தேர்ந்தெடுத்திருக்கேன்னு கிளிக்குட்டி அம்மா சொன்னாங்க! அதை நம்பித்தான் நான் இந்த நெருப்புல இறங்குறேன் தாயே! நான் தவறா எதும் செஞ்சிருந்தா என்னை மன்னிச்சு காப்பாத்து. என்னை பலி வாங்கினாலும் அருணையும் மத்தவங்களையும் காப்பாத்து தாயே" என்று கண்களை மூடி வேண்டினாள். யாரோ ஒருவர் அவளது கரங்களைப் பிடித்து அழைத்துச் செல்வது தெரிந்தது. அவர்கள் அழைத்துச் சென்ற பாதையில் நடந்தாள். தீயின் வெம்மை போகப் போக அதிகரித்தது. ஒரு கட்டத்தில் சட்டென அது நின்று போய் பல விதமான பூக்களின் வாசம் வந்தது. கண்களைத் திறக்காதே! நேராக நட என்று யாரோ கட்டளையிடுவது போலத் தோன்ற அப்படியே செய்தாள். சுற்று முற்றும் உள்ள ஓசைகள் எதுவும் அவளுக்குக் கேட்கவில்லை. அந்த நேரத்தில் அவள் மின்னல் மகிழி இவர்கள் மூவரும் தான் இருந்தார்கள். மகிழி சிரித்தபடி அழகான பூவை பூஜாவின் கூந்தலில் சூட்டினாள்.

அதோடு சட்டென கனவு கலைந்தது போலத் தோன்றியது. நாலாபுறமும் ஏகப்பட்ட சத்தம். பெண்களின் குலவைச் சத்தம், ஆண்களின் கொட்டுச் சத்தம் என அந்த இடமே சத்ததால் நிரம்பியிருந்தது. மெல்லக் கண்களைத் திறந்து பார்த்தாள் பூஜா. அவளால் நம்பவே முடியவில்லை. அவள் நெருப்பைக் கடந்து இந்தப்பக்கம் வந்து விட்டிருந்தாள். கிளிக்குட்டியம்மாள் ஓடி வந்து அவளை அணைத்துக்கொண்டு கண்ணீர் உகுத்தாள்.

"பூப்பரீட்சையில நீ வெற்றி பெற்றுட்டே தாயீ! நான் உயிரோடு இருக்கும் போது இந்த அதிசயத்தை நடத்திக் காமிச்சுட்டாங்க மின்னலும் மகிழியும். இனிமே எனக்கு கவலை இல்ல. இந்த மலைக்கு எதுவும் ஆகாது" என்று உண்ர்ச்சி வசப்பட்டாள். அனைத்துப் பெண்களும் பூஜாவின் அருகில் வர விரும்பினர். மூட்டுக்காணி அவர்களை அமைத்திப்படுத்தினார்.

"இன்னமும் மூணு பேரு இருக்காங்க. அவங்களும் பரீட்சை கொடுக்கட்டும் அப்புறமா பேசிக்கலாம்" என்று கத்தியதும் கூட்டம் கட்டுப்பட்டது. பூஜாவின் நெஞ்சு வேகமாக அடிக்க முதலில் அருண் அழைத்து வரப்பட்டான். கடவுளே அருணைக் காப்பாத்து அருணைக் காப்பாத்து என வேண்டிக்கொண்டாள் பூஜா. அவளது பிராத்தனைக்கு பதிலே போல அருண் அந்த நெருப்பின் நடுவே எந்த விதமான பதற்றமும் இல்லாமல் நிதானமாக நடந்து வந்தான். அவன் நடக்க நடக்க நெருப்பின் நிறம் பச்சையாக மாறி அவன் வெளியில் வந்ததும் மீண்டும் சாதாரணமாக எரிந்தது. அவன் வெளியில் வந்ததும் அவனை தழுவிக்கொள்ளும் ஆசையைக் கஷ்டப்பட்டு அடக்கிக்கொண்டாள் பூஜா.

அதே போல மருதன் மற்றும் அரவிந்தன் எந்த சேதமும் இல்லாமல் நெருப்பில் நடந்து வெளியில் வந்து விட்டனர். அவர்கள் அனைவரும் நடந்து முடிக்கக் காத்திருந்தது போல நெருப்பு திடீரெனப் பெரிதாக எரிந்து சட்டென அணைந்தது. பிலாத்தி முன்னல் வந்து நால்வர் நெற்றியிலும் மஞ்சளால் திலகமிட்டார். அவர்களை அந்த இலைகளில் இருப்பவற்றை கொஞ்சம் போல எடுத்து குருதி ஒடையில் கரைத்து வரச் சொனார். அப்படியே செய்தனர் நால்வரும். இதற்குள் மாலை மயங்கி இரவு சூழ்ந்தது. ஆங்காங்கே பந்தங்கள் வெளிச்சத்தைக் கொடுத்தன. பிலாத்தி மரங்கள் எரித்த சாம்பலை ஏதோ ஒரு மூலிகைக் கலவையோடு சேர்க்க அது பேஸ்ட் போல ஆனது. அதனை ஒரு இலையில் கட்டி ஒரு கயிற்றில் அதனைச் சேர்த்தார்.

நால்வரையும் அருகில் அழைத்து சைகை காட்ட கூட்டம் அமைதி காத்தது.

"மின்னலும் மகிழியும் தெய்வமா நின்னு நமக்கு மீகாமர்களைக் கொடுத்திருக்காங்க. இனி இவங்க சொல்றபடி தான் நாம கேக்கணும். இதுக்கு எல்லாக் காணிக்காரங்களும் ஒத்துக்கறீகளா? ஒத்துக்காதவங்க இப்பவே சமவெளிக்குப் போயிடலாம். அவங்களை யாரும் எதுவும் செய்யக் கூடாது. ஒத்துக்கிட்ட பிறகு அதை மீறினா மின்னல் சும்மா இருக்க மாட்டா. அதை நல்லா யோசிச்சுக்குங்க" என்று உரத்த குரலில் கூறினார்.

கூட்டத்தில் சலசலப்பு ஏற்ப்பட்டது. அதைக் கண்டதும் அதையே மீண்டும் மூன்று முறை கூறினார் பிலாத்தி. கூட்டத்திலிருந்து கந்தன் மற்றும் இன்னும் இருவர் வெளியேறினர். அவர்களைப் பெற்றவர்கள் அதைக் கண்டு அழுதனர். ஆனால் யாரும் அவர்களை திரும்பி வருமாறு அழைக்கவில்லை. அவர்கள் விலகிச் செல்வதற்கு சற்று நேரம் அவகாசம் அளிக்கப்பட்டது. பின்னர் மீண்டும் பேசினார் பிலாத்தி.

"காணிகளே, இவங்க தான் நம்ம மீகாமர்கள்னு நம்புறவங்க மட்டும் தான் இப்ப இருக்கீங்க இல்லையா?" என்று கேட்க கூட்டம் ஆமாம் என ஆமோதித்தது.

"மின்னலும் மகிழியும் உங்க கண்ணு முன்னால இந்த அதிசயத்தை செஞ்சிருக்காங்க. அவங்க இங்க தான் எங்கியோ இருக்காங்க. அவங்க பேரால இதோ இந்தக் கயித்தை நான் இவங்க கையில கட்டுறேன். இவங்களை இனிமே பாதுக்காக்க வேண்டியது அவங்க பொறுப்பு. " என்று சொல்லி விட்டு கயிற்றைக் கட்டினார். அந்தக் கயிறு உடலில் பட்ட போது சிலிர்த்தது பூஜாவுக்கு. காணிகள் என் மேல் வைத்திருக்கும் நம்பிகைக்குப் பங்கம் வராமல் வாழ்வேன் என்று உறுதி சொல்லிக்கொண்டாள். அதே போல மற்ற மூவருக்கும் கூடக் அக்ட்டப்பட்டது. நால்வரையும் உயரமாக அமைக்கப்பட்ட ஒரு மேடையின் மேல் நிற்க வைத்து கூட்டம் மலர்களையும் அரிசியையும் தூவி வாழ்த்தியது காணிகள் கூட்டம். கண்ணீர் மல்க அவர்கள் நின்றிருந்தனர்.

அதன் பிறகு வெற்றி விருந்து என்று அழைக்கப்படும் விருந்து ஆரம்பமாகியது. அங்கே குவித்து வைக்கப்பட்டிருந்த சோறு, பழங்கள் காய்கறிகள் இவற்றிலிருந்து வேண்டியவர்கள் வேண்டுமட்டும் எடுத்துக்கொண்டனர். இலை போட்டு பரிமாறுவது என்ற வழக்கம் இல்லை காணிகளிடம். காலை முதல் ஒருவருக்கொருவர் பேசிக்கொள்ளாத நண்பர்கள் நால்வரும் பேசிக்கொள்ள முயன்றனர்.

"அருண்! நீ நெருப்புல இறங்கி நடந்து வரதுக்குள்ள நான் எவ்வளவு பயந்து போய்ட்டேன் தெரியுமா?" என்றாள் பூஜா.

"நானும் தான் பூஜா. ஆனா நீ எப்ப இறங்குனேன்னே எனக்குத் தெரியல்ல. நான் நெருப்புல போனதும் கூட எனக்குத் தெரியாது. மின்னலும் மகிழியும் என் கையைப் பிடிச்சுக் கூட்டிக்கிட்டு வந்தாங்க. ஒரு கட்டத்துல என் மேல ஒரு பூமாலையைப் போட்டுட்டு மறைஞ்சு போயிட்டாங்க. அப்புறம் தான் சுத்து முத்தும் என்ன நடக்குதுன்னே எனக்குத் தெரிஞ்சது" என்றான். கண்கள் கலங்க இருவரும் நின்றிருந்தனர்.

மருதனுக்கும் அரவிந்தனுக்கும் கூட ஏறத்தாழ இதே அனுபவம் தான். மருதான் மிகவும் உணர்ச்சிவசப்பட்டிருந்தான்.

"மின்னல் தாயீயையும் மகிழித்தாயீயும் என் கையைப் பிடிச்சுக் கூட்டிக்கிட்டுப் போனாங்களே! என் யோகமே யோகம் . எனக்கு அவங்க காட்சி கொடுத்துட்டாங்க. அது போதும் எனக்கு. நானும் ஒரு மீகாமன்னு நிரூபணம் ஆயிரிச்சு. இனி என் உசிர் போனாலும் நான் கவலைப்பட மாட்டேன்" என்றான். அவனை அமைத்திப்படுத்தினர் மற்ற மூவரும்.

"மருதா! நமக்கு தெய்வம் துணை இருக்கு. அந்த சேட்டை எதிர்த்து சண்டை போடுற பலத்தையும் புத்திசாலித்தனத்தையும் நமக்கு மின்னலும் மகிழியும் அருளட்டும். நாம யாரும் சாகக் கூடாது மருதா! நம்ம எதிரிகள் அதாவது இந்த மலையோட எதிரிகள் தான் சகாணும்." என்றான் அருண் மருதனின் கையைப் பிடித்து. கண்களில் நீர் வழிய மருதன் ஆமோதித்தான்.

எங்கும் ஒரே உற்சாகமும் கும்மாளமுமாக இருந்தது. அனைவரும் வந்து மீகாமர்களோடு பேசினார்கள். அவர்களது அனுபவங்களைக் கேட்டார்கள். எத்தனை முறை சொன்னாலும் அலுக்காது போல இருந்தது. ஒரு சிறு பெண் சிவப்பு மணிகளால் ஆன மாலையை மருதனுக்கும் அரவிந்தனுக்கும் அணிவித்தாள். அவளே பச்சை வண்ண மணிகளால் ஆன மாலையை பூஜாவுக்கும் அருணுக்கும் அணிவித்தாள். மூட்டுக்காணி வந்து அவர்களை உணவு உண்ணும்படி சொல்லவே மற்றவர்களோடு சேர்ந்து அவர்களும் உண்டார்கள்.

காணிக்குடியிருப்பில் இப்படி உல்லாசமும் சந்தோஷமும் பொங்கிய அதே நேரத்தில் கந்தன் கணேசனையும் சிவாவையும் சந்தித்து ஏதோ சொல்லிக்கொண்டிருந்தான். அதைக் கேட்டதும் அவர்கள் முகங்கள் பயங்கரமாக மாறின. சேட்டுக்கு தகவல் சொல்ல விரைந்தார்கள் அவர்கள்.
 

Latest updates

Latest Episodes

Top