Mayak Koattai - Minnal : Aththiyaayam 33.

Srija Venkatesh

SM Exclusive
Author
SM Exclusive Author
#1
அத்தியாயம் 33:

காணிக்குடியிருப்புக்கு வந்து பிலாத்தியிடமும் மூட்டுக்காணியிடமும் தாங்கள் பூப்பரீட்சைக்குத் தயார் என்றனர் நால்வரும். தனித்தனியே நால்வரிடமும் பூப்பரீட்சை என்றால் என்ன என்று தெரியுமா எனக் கேட்டு அதனை மேற்கொள்ள முழு மனதுடன் சம்மதமா எனக் கேட்டார்கள் பிலாத்தியும் மூட்டுக்காணியும். அவர்கள் சம்மதம் என்றதும் ஒரு திருவிழாவின் குதூகலம் தொற்றிக்கோண்டது காணி இனத்தவரிடையே. மறு நாளான வெள்ளிக் கிழமையே அதற்கான நாளாகக் குறித்தார் பிலாத்தி. இதனை அந்தக் காணி குடியிருப்பில் இருக்கும் அனைவரிடமும் தெவித்தார். அவர்களில் சிலர் மகிழ்ச்சியோடும் சிலர் பயத்தோடும் மீதி உள்ளவர்கள் என்ன தான் ஆகிறது என்று பார்த்து விடுவோமே என்ற மன நிலையிலும் இருந்தனர்.

மறு நாள் மாலை சூரியன் அஸ்தமிக்கும் நேரத்தில் தான் பூப்பரீட்சை நடக்க இருந்தது. ஆனால் காலையில் இருந்தே அதற்கான ஏற்பாடுகள் தொடங்கி விட்டன. செய்தி கேள்விப்பட்டு மலை மேல் இருக்கும் சில காணிக்குடியிருப்புக் காரர்களும் வந்தார்கள். அனைவருக்கும் பொதுவாக உணவு தயாரானது. நாட்டில் நடைபெறும் விருந்து போல இல்லாமல் இது மிகவும் வித்தியாசமாக இருந்தது.

ஒரு புறம் மூங்கில் அரிசிச்சோறு வெந்து கொண்டிருந்தது. மற்றொரு புறம் ஏதோ ஒரு வகையான காயை வைத்து புளிப்பும் காரமுமான குழம்பு வகைகள் தயாராகிக் கொண்டிருந்தன. இவை தவிர வெண்டைக்காய்கள், வாழைக்காய்கள், சேனை மற்றும்சேப்பங்ககிழங்குகள் பெரிய பெரிய கற்களில் வைத்து சூடு படுத்தப்பட்டு பதப் படுத்தப்பட்டன. அவற்றில் மிளகும் உப்பும் கலந்து வைத்தார்கள். தேனும் கனி வகைகளும் அதிகமாக இருந்தன.

நால்வரையும் குருதி ஓடைக்குச் சென்று நீராடி வரச் சொன்னார்கள். அன்று முழுவதும் அவர்கள் யாரோடும் பேசக்கூடாது அது மட்டுமல்ல ஒருவரோடு ஒருவர் கூடப் பேசிக்கொள்ளக் கூடாது என நால்வரையும் தனித்தனியாக குடில்களில் தங்கச் செய்தனர். ஏதோ ஒரு மரப்பட்டையை சுத்தியால் அடித்து அதனை எழுத்த போது அழகான ஆடை போல நீண்டது அது. அது தான் மரவுரி என்று சொல்லி அதனை அணியச்சொன்னார்கள். அழகான ஸ்கர்ட் போல பூஜாவுக்கும் வேட்டி போல ஆண்களுக்கும் கொடுக்கப்பட்டது. மேலே ஆண்கள் எதுவும் அணியக் கூடாது எனக் கண்டிப்பாகச் சொலி விட்டனர். ஆனால் பூஜாவுக்கு அழகான மற்றொரு மரவுரி அளிக்கப்பட்டது. அது அவளது உடலை முழுவதுமாக மூடியது. அழகான மணிகளால் செய்யப்பட்ட மாலைகள் கம்மல்கள் என அணிவித்து பூஜாவை அழகு செய்தார்கள். காது ஓட்டைகளில் மஞ்சள் நிற மலர் செருக்கப்பட்டது. இப்போது பூஜாவைப் பார்க்க கொள்ளை அழகாக இருந்தாள். இதே போல ஆன சற்றே வித்தியசமாக ஆண்களுக்கும் அலங்காரம் செய்யப்பட்டது. அன்று முழுவதும் அவர்கள் பிரார்த்தனையில் ஈடுபட வேண்டும் என்றும் ஏதோ ஒரு வகைப் பழத்தின் சாற்றை மட்டுமே குடிக்க வேன்டும் என்று சொல்லி விட்டனர்.

அவர்களது நம்பிக்கைகளைக் குலைக்க விருல்பாத அரவிந்தன் அருண், பூஜா அப்படியே செய்தனர். ஒவ்வொருவராக வந்து பார்த்து விட்டுச் என்றனர். ஒரு சிலர் உணர்ச்சி வசப்பட்டு விழுந்து கும்பிட்டனர். இவற்றையெல்லாம் பார்க்கப் பார்க்க கலக்கமாக இருந்தது பூஜாவுக்கு. "இறைவா! இவர்கள் எங்கள் மேல் வைத்திருக்கும் நம்பிக்கையை பொய்யாக ஆக்கி விடாதே!" என்று வேண்டியபடி இருந்தாள். மதியம் சுமார் மூன்று மணியளவில் வேலைகள் ஆரம்பித்து விட்டன. காணிக்குடியிருப்பை ஒட்டி ஒரு பரந்த வெளி திடல் ஒன்று இருந்தது. அதில் தான் காய்ந்த விறகுகளைப் போட்டு அதில் ஏதேதோ மூலிகைகளை வைத்திருந்தனர். சுமார் 100 மீட்டர் நீளம் இருந்தது அது.

வாழை இலைகளில் வாழைக்காய், சேனைக்கிழங்கு முதலியவை சுட்டு வைக்கப்பட்டிருந்தன. அவற்றை தேனால் நனைத்தாள் கிளிக்குட்டியம்மாள். அவள் தொடங்கிய பிறகு அனைவரும் தங்கள் பங்குக்கு சில வாழைக்காய்களையும் இதர காய்களையும் கொண்டு வந்து வைத்து தேனை ஊற்றினர். நன்றாகக் கொத்தித்த சுக்கு வெந்நீர் இருந்தது. வாழைப்பழங்கள், பலாச் சுளைகள், இன்னும் பெயரே தெரியாத பலவகையான பழங்களும் ஒரு அடுக்கில் வைக்கப்பட்டிருந்தன. அதன் கீழே இன்னொரு அடுக்கில் பல வகையான மலர்கள் வைக்கப்பட்டன. இறைவனுக்கு அவர்கள் படைக்கும் முறையே இது தான் என புரிந்து கொண்டாள் பூஜா.

சூரியன் வானத்தில் ஒரு குறிப்பிட்ட கோணத்தில் வந்ததும் பிலாத்தி கற்களை உரசி கல்லால் ஆன ஒரு விளக்கை ஏற்றினார். அப்போது பெண்கள் நாவால் ஓசை எழுப்பிக் குலவை இட்டனர். அன்று அனைவருமே பாரம்பரிய முறைப்படு உடை உடுத்தியிருந்தனர். அனைவர் முகங்களிலும் பயமும் எதிர்பார்ப்பும் போட்டி போட்டன. விளக்கை ஏற்றியதும் பிலாத்தி ஏதேதோ மந்திரங்களைக் கூறி சுளுந்தை ஏற்றி அதனை நாலாபுறமும் காட்டினார். படபடவென சத்தத்தோடு எரிந்தது சுளுந்து. பூப்ரீட்சை கொடுக்கப்போகும் மீகாமர்களை அழைத்து வந்து நால்வரையும் ஒரு இடத்தில் அமரச் செய்தார்கள். இப்போது பிலாத்தி மந்திரங்களை மிகவும் உக்க்கிரமாக சொல்லத் தொடங்கினார். அவரது முகம் சிவந்து பார்க்க வேறொருவர் போலத் தெரிந்தார்.

அவர் ஏற்றி வைத்த விளக்கு சட்டென சிவப்பு நிறத்தில் எரிய அனைவரும் ஓவென குழலவை எழுப்பினர். ஒரு புறம் உடுக்கு அடிக்கப்பட்டது. பெரிய பெரிய உலோகத் தட்டுக்களால் ஓசை எழுப்பப்பட்டது. அவை ஓம் ஓம் என முழங்குவது போலத் தோன்றியது பூஜாவுக்கு. பார்த்துக்கோண்டிருக்கும் போதே பிலாத்திக்கு அருள் வந்து விட்டது. கையில் இருக்கும் சுளுந்தை நாலா புறமும் சுற்றிக்கொண்டு பயங்கரமாக அடினார். அவரது விழிகள் வெளியில் தெறித்து விழுந்து விடுமோ என அச்சம் தரும்படியாக இருந்தது.

"உம் நடக்கட்டும் நடக்கட்டும். பூப்பரீட்சை நடக்கட்டும். " என்று கத்தினார். அவரது உடல் பல விதமாக முறுக்கிக்கொண்டது. விளக்கிலிருந்து ஒரு குச்சியால் நெருப்பை எடுத்து அதனைக் காய்ந்த மரங்களும் மூலிகைகளும் கலந்து வைத்திருந்த விறகுகள் மேல் போட்டார். அடுத்த கணம் பக்கெனப் பற்றிக்கொண்டது அது. பத்தடி உயரம் நெருப்பு கொழுந்து விட்டு எரியலானது. சத்தம் கொடுத்தபடியே வந்து பூஜாவின் பக்கம் திரும்பினார் பிலாத்தி.

"நீ தான் முதல்ல! போய் வா மகளே போய் வா! பூமியில வந்த மக அத்தனையும் பார்த்திருக்க நெருப்பிலே பூத்து வாடாது வெளிய வா" என்று வாழ்த்தி அனுப்பினார்.

நெருப்பின் நாக்குகளைப் பார்த்ததும் பயத்தில் பூஜாவின் நெஞ்சு உலர்ந்து போய் விட்டது. அருணையோ மற்றவர்களையோ பார்க்கவே முடியவில்லை. நடுவிலே திரை மறைந்திருந்தது. வயதான பெண் ஒருத்தி வந்து அவளிடம் சிறு கோலைக் கொடுத்தாள்.

"தாயீ! இதை வெச்சுக்கோ! பயம் தெரியாது" என்றாள்.

அதனைக் கையில் வாங்கிய பூஜா கண்களை மூடிக்கொண்டாள்.
 

Advertisements

Top