Mayak Koattai - Minnal : Aththiyaayam 34.

#1
வழக்கமான தன் அறையில் அதே தோரணையோடு அமர்ந்திருந்தான் சேட். அவன் எதிரே சிவா கணேசன் கந்தன் அவனது நண்பர்கள் மாரி, மற்றும் தவசி நின்றிருந்தார்கள். அவர்கள் முகங்களில் சற்றே பயம் தெரிந்தது, சேட்டும் கூட ஏதோ யோசனையில் இருப்பது போலத் தோன்றியது.

"ஏன் சிவா? அந்த நாலு பேரும் நெருப்புல நடந்து வந்தது உண்மையா?" என்றான் சேட்.

"ஆமா சேட்டு! இதை இவங்க மூணு பேரும் கண்ணால பார்த்திருக்காங்க"

கந்தன் குறிக்கிட்டு.

"ஆமா சாமி! அவங்க நாலு பேரும் பூ மேல நடக்குறா மாதிரி நடந்து நெருப்பைக் கடந்துட்டாங்க. இனிமே அவங்க பேச்சைத்தான் எங்க இனத்து மக்கள் கேப்பாங்க. அதனால தான் நாங்க அவங்களை விட்டு வந்துட்டோம்" என்றான்.

"சரி அதனால என்ன? உங்க ஊர்ல தான் கோயில் திருவிழாவுல நெருப்பை மிதிச்சு வருவாங்களே? அப்புறம் இதைப் போயி ஏன் பெருசா பேசுறீங்க?"

"என்ன சேட்டு நீங்க? எரியிற நெருப்புல நடந்து வரதுன்னா சும்மாவா? அது மட்டும் இல்ல! குமுதான்னு ஒரு லாயர் அவங்களை கூட்டிக்கிட்டுப் போயிட்டாளே! அவங்க மேல எஃப் ஐ ஆர் கூடப் போட முடியல்லன்னு இன்பராஜ் சொன்னாரு. லாக்கப்ல அவங்களைத் தீர்த்துக்கட்டுற திட்டமும் போச்சு. இனி என்ன செய்ய?" என்றான்.

"உங்களுக்கு வெக்கமா இல்ல? மூணு சின்னப்பசங்க ஒரு பொண்ணு! இவங்களைப் போட்டுத்தள்ள முடியாம எங்கிட்ட வந்து கதை சொல்லிக்கிட்டு இருக்கீங்க! உங்களுக்கு சும்மா சும்மா காசு கொடுக்க நான் என்ன முட்டாளா?" என்றான் சேட் கோபமாக.

"இதைப் பாருங்க சேட்டு! நாங்க உங்க வேலைக்காரங்க கிடையாது. என்னவோ எங்க ஆளுங்க அவங்களைத் தீர்த்துக்கட்டிடுவாங்கன்னு சொன்னீங்க? அவங்க தான் செத்தாங்க. அந்த நாலு பேர் கிட்டயும் ஏதோ பவர் இருக்கு சேட்டு" என்றான் கணேசன்.

"சரி அப்ப நாம காவி கட்டிக்கிட்டு கையில ஜால்ரா தட்டிக்கிட்டு பஜனை பாடலாமா?" என்றான் சேட் கோபமாக.

"கோபப்படாதீங்க சேட்டு! இப்ப என்ன அவங்களை போட்டுத்தள்ளணும் அவ்ள தானே? வேற ஏதாவது திட்டம் போடுவோம்" என்றான் சிவா அமைதியாக.

"ஒருத்தன் இப்படி சொல்றான். ஒருத்தன் அவன் கிட்ட ஏதோ பவர் இருக்குன்றான். என்னையே குழப்பி விட்டுட்டீங்களேடா! நான் எத்தனையோ பிசினஸ் டீலிங்கை காதும் காதும் வெச்சா மாதிரி முடிச்சிருக்கேன். தம்ழி நாடு தான் எப்பவுமே பிரச்சனை. எதுக்கெடுத்தாலும் செண்டிமெண்ட் சாமி பூஜைனு இருக்கீங்க" என்றான் கோபம் குறையாமல்

சற்று நேரம் அமைதி நிலவியது அங்கு. மாரி சற்று நேரம் பேசாமல் இருந்தவன் கந்தன் காதில் ஏதோ சொன்னான்.

"என்ன?" என்றான் கணேசன்.

"சாமி வந்து...மீகாமர்களை முறியடிக்க ஒரு வழி இருக்காம். அது இவனுக்குத் தெரியுமாம்" என்றான் மெல்ல.

"அதை முதல்லயே சொல்றதுக்கென்ன? இத்தனை நேரம் சி... இருந்தியா?" என்றான் சேட் ஆத்திரமாக. அவனது வார்த்தைகளைக் கேட்டதும் முகம் சுருங்கி விட்டது அனைவருக்கும்.

"சொல்லு அதையும் கேப்போம்." என்றான் சேட் மீண்டும்.

"மின்னலும் மகிழியும் சொரிமுத்தையருக்கும் பிரம்ம ராட்சசி அம்மனுக்கும் கட்டுப்பட்டவங்க. சொரி முத்தையானர் கோயில்ல ஒரு மரம் இருக்கு. அது தான் வெள்ளைக்காரங்களை முழுங்கின மரத்தோட வம்சத்துல வந்த மரம்னு சொல்லுவாங்க. இன்னைக்கும் கூட அதுல கட்டுற மணிகளை அது விழுங்கிடுது. இதை நீங்க கண்ணாலயே பார்க்கலாம்"

"சரி அதுக்கென்ன?"

"அந்த மரத்தோட இலையை எடுத்து பட்டையோட சேர்த்துக் கட்டி பூஜை செய்யணும். அப்ப ஒரு மை வரும். அதை நாம எப்படியாவது மீகாமர்கள் மேல தடவிட்டா அவங்க கட்டியிருக்குற மந்திரக் கயிறு வலு இழந்து போயிரும். அதோட மின்னலுக்கும் மகிழிக்கும் சக்தியும் போயிரும். அவங்களால நாலு பேரையும் காப்பாத்தவே முடியாது. நாம அவங்களை சுலபமாப் போட்டுத்தள்ளிடலாம்" என்றான் மாரி.

"இதெல்லாம் உனக்கு எப்படித் தெரியும்?"

"எங்க பிலாத்திக்கு உறவு காரன் நான். அவரு எங்களுக்கு மந்திரம் பத்தி பாடம் நடத்தும் போது மீகாமர்கள் பத்தியும் சொல்லியிருகாரு. அவங்க ஒரு வேளை பாதை மாறிட்டாலோ எங்களுக்கு துரோகம் செஞ்சுட்டாலோ அவங்களை மின்னலும் மகிழியும் போட்டுத்தள்ளிடுவாங்க. அப்படி அவங்க செய்யாம இருக்க மீகாமர்கள் இந்த பூஜையைச் செய்வாங்கன்னு சொல்லியிருக்காரு." என்றான்.

"உனக்கே இத்தனை விவரம் தெரிஞ்சிருக்கே? அது அந்த ஆளுக்குத் தெரியாமயா இருக்கும்?"

"தெரியும் சாமி! ஆனா எனக்கு இந்த விவரம் நினைவு இருக்குன்னோ அதை நானு உங்க கிட்ட சொல்லுவேனுன்னோ அவங்களு எதிர்பார்க்க மாட்டாங்க இல்ல?"

"சரி! இப்ப என்ன செய்யலாம்னு சொல்ற?"

"நாம மலைக்குப் போகணும். அதுவும் யாருக்கும் தெரியாம ராத்திரியில. அந்தப் பூஜையை எப்படி செய்யுறதுன்னு எனக்குத் தெரியும். உங்களை முன்னாடி வெச்சு நான் அதை செய்யுறேன். பூஜை முடிஞ்சதும் அவங்களை என்ன செய்யணுமோ செஞ்சுக்குங்க. எங்களுக்கு உண்டான காசைக் கொடுத்துடுங்க" என்றான் மாரி.

சற்று நேரம் யோசித்தார் சேட்.

"சரி உனக்கு பத்தாயிர ரூவா தரேன். இவங்களுக்கு ஆளுக்கு ஐயாயிரம். வர ஞாயித்துக்கிழமை ராத்திரி அந்தப் பூஜையை செய்வோம். அப்புறமா அவங்களை பேச்சு வார்த்தைக்குக் கூப்பிடுறா மாதிரி நான் கூப்பிட்டு போட்டுத்தள்ளிடறேன்." என்றான் சேட்.

சற்றே உற்சாகம் பிறந்தது மற்றவர்களுக்கு. திடீர்னென ஆங்கிலத்தில் பேச ஆரம்பித்தான் சேட்.

"கணேஷ், சிவா எங்கிட்ட ஆங்கிலத்துலயே பேசுங்க. ஏன்னா இந்தக் காட்டுப்பசங்களுக்கு நான் பேசுறது புரியக் கூடாது."

"சொல்லுங்க சேட்டு"

"இந்தக் காட்டுப்பாசங்க சொல்றதை நம்பி மட்டும் நான இந்த விஷயத்துல இறங்க முடியாது. எனக்கு இந்த மந்திரம் மாயம் பூஜை இதுல நம்பிக்கையே இல்ல. ஏதோ மரத்துக்குப் பூஜை செஞ்சு மை தடவுனா அவங்களைக் கொல்லலாம்னு சொல்றாங்க. நாம இதையே நமக்கு சாதகமா மாத்திக்கப் போறோம்"

"எப்படி?"

"நாம மூணு பேரும் பாவநாச மலைக்குப் போறோம். அங்க வெச்சு அந்த நாலு பேரையும் போட்டுத்தள்ளிடறோம். அதுவும் எப்படி உடம்புல இருக்குற ரத்தமெல்லாம் வெளிய வந்து அவங்க செத்துப் போறா மாதிரி செஞ்சுருவோம். அப்புறம் உங்க மீகாமர்கள் எங்க கிட்ட பேரம் பேச வந்தாங்க. அதனால அவங்களை உங்க சாமிங்க அடிச்சிருச்சுன்னு சொல்லி தப்பிச்சுக்கலாம். "

"சரி சேட்டு! ஆனா அவங்களை எப்படி கோலை செய்யப் போறோம்?"

"பேச்சு வார்த்தைக்குன்னு கூப்பிடுவோம். நான் மனசு மாறிட்ட மாதிரி நடிக்கறேன். அப்ப ஜூஸ்ல தூக்க மருந்தை கலந்து கொடுத்திருவோம். அவங்க மயக்கமானதும் கையைக் காலைக் கட்டி ஒரு இடத்துல வெச்சிருவோம். அப்புறம் ராத்திரியானதும் ஏதாவது ஒரு கோயில் பக்கத்துல கொண்டு போயி நான் குடுக்குற ஊசியை நீங்க நாலு பேருக்கும் போடுங்க"

"அது என்ன ஊசி?"

"ரத்தம் உறையாம இருக்குறா மாதிரி ஒரு ஊசி. அது இந்தியாவுல கிடைக்காது. மலேசியாவுல இருந்து நான் திருட்டுத்தனமா வாங்கி வெச்சிருக்கேன்."

"சரி சொல்லுங்க! அதனால என்ன லாபம்?"

"என்னய்யா அறிவே இல்லாம இருக்கீங்க?அந்த ஊசி பத்து நிமஷம் கழிச்சு வேலை செய்ய ஆரம்பிக்கும். அப்ப நாலு பேரு உடம்புலயும் நிறைய இடத்துல கத்தியால கிழிச்சிருங்க. ரத்தம் வர ஆரம்பிக்கும். ஊசி போட்டதால ரத்தம் உறையவே உறையாது. விடிய விடிய ரத்தம் வெளியே போய் அவங்க செத்துப் போயிருவாங்க. எப்படி என் ஐடியா?"

"உம் நீங்க திட்டமெல்லாம் நல்லாத்தான் போடுறீங்க! ஆனா சரியா நடக்க மாட்டேங்குதே?"

"நீங்க எல்லாரும் சேர்ந்து சொதப்பிட்டீங்க! இந்த தடவையாவது நான் சொல்றதை அப்படியே கேளுங்க! "

"சொல்லுங்க! "

"நாம பாவநாச மலை ஏறுறதுக்கு முன்னால அவங்க நாலு பேருக்கும் நம்ம மேல நம்பிக்கை வரணும். இன்ஸ்பெக்டர் இன்பராஜுக்கும் எனக்கும் சண்டை வந்தா மாதிரி காமிக்கணும்"

"அவரு என்ன செய்யணும்?"

"அவரு கேசை டிராப் பண்ணனும். நான் என் பங்குக்கு பேப்பர்ல இந்த மாதிரி ரிசார்ட்டு கட்டுற திட்டத்தைப் பத்தி மறு ஆலோசனை செய்யுறோம்னு ஒரு அறிக்கை விடுவேன். அதைப் பார்த்துட்டு அவங்க நாலு பேரும் ஜெயிச்சிட்டதா நினைப்பாங்க. அந்த சமயத்துல போயி நீங்க அவங்களைக் கூப்பிட்டா என்னை சந்திக்க மறுக்க மாட்டாங்க. அப்புறம் நான் போட்ட திட்டத்தை அப்படியே நிறைவேத்த வேண்டியது தான்." என்றான் சேட் கொஞ்சமும் இரக்கம் என்பதே இல்லாமல்.

அப்படியே அமர்ந்திருந்தார்கள் அனைவரும். காணிகளான மாரி கந்தன் மற்றும் தவசிக்கு அவர்கள் பேசுவது புரியவில்லை என்றாலும் ஏதோ திட்டம் தீட்டுகிறார்கள் என புரிந்து கொண்டார்கள். ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர். சேட் இப்போது தமிழில் பேசினார்.

"இவங்க சொன்னா மாதிரி பூஜைக்கு ஏற்பாடு செய்ங்க! அன்னைக்கு நாம அந்த நாலு பேரையும் போட்டுத்தள்ளிடலாம். பூஜை செய்யுற வகைக்கு உனக்கு முதல்ல அஞ்சாயிரம் கொடுத்துடறேன். வேலை முடிஞ்சப்புறம் பாக்கியைக் கொடுத்துடறேன்" என்றான்.

அவர்களுக்கு வாயெல்லாம் பல்லானது. வாழ்க்கையில் நினைத்துக்கூடப் பார்க்க முடியாத அளவு பணத்தை சேட் தருகிறான். அப்படியானால் அவன் கடவுளை விட மேலானவனோ என்று நினைத்தார்கள் அந்த காணி இளைஞர்கள்.

தன் பணியாட்களின் ஒருவனை அழைத்து இவங்களுக்கு சாப்பாடு வாங்கிக்குடு என்று சொல்லி மூணு காணிகளையும் அனுப்பி விட்டு மீண்டும் கனேசன் சிவாவின் பக்கம் திரும்பினான்.

"நாம வேற ஏதோ திட்டம் போடுறோம்னு புரிஞ்சிக்கிட்டாங்க! அதான் அவங்களை வெளிய அனுப்பினேன். எங்கிட்ட இன்னொரு திட்டமும் இருக்கு"

"என்ன அது?"

"ஏதோ நெருப்பு எரிய வெச்சாங்கன்னு சொன்னாங்க இல்ல! அதுல இருந்து அவங்க வீடுகளுக்கு நெருப்பு பிடிச்சிக்கிச்சுன்னு சொல்லி...நாம...."

"சூப்பர் ஐடியா சேட்டு! காட்டுதீயில மாட்டி எல்லாரும் செத்துட்டாங்கன்னு சொல்லிடலாம். இந்த பிளானே நல்லா இருக்கு சேட்டு. இதையே செய்வோம்" என்றான் கணேசன்.

"இல்ல கணேஷ்! எனக்கு ரொம்ப இரக்க மனசு. எதுக்கு தேவையில்லாம எல்லாரையும் கொல்லணும்? இவங்களை நாம முதல்ல போட்ட திட்டப்படி தீர்த்துக்கட்ட முடியலைன்னா தான் என்னோட ரெண்டாவது திட்டத்தை நிறைவேத்தணும். "

"என்ன சேட்டு நீங்க?" என்றான் சிவா செல்லமாக. அவர்களுக்கு அப்போதே அந்தத் திட்டத்தில் தாங்கள் வெற்றி பெற்று விட்டது போல சந்தோஷமாக இருந்தது.

"என்ன பண்ணச் சொல்ற? என் இரக்க மனசு கேக்குதா?" என்று சொல்லி சொத்தைப் பற்களைக் காட்டி சிரித்தான் சேட். முகத்தை சீரியசாக ஆக்கிக்கொண்டு மெல்லப் பேசினான்.

"முக்கியமான விஷயம். நாம எந்தத் திட்டத்தை செயல் படுத்தினாலும் இந்த மூணு காட்டுப்பயல்களையும் அவங்க கூட சேர்த்துப் போட்டுடணும். இல்லைன்னா திடீர்னு எங்க இனம் எங்க சாமின்னு உண்மையை உளறிட்டா ஆபத்து" என்றான்.

"ஏன் சேட்டு ஒரு வேளை நீ எங்களையும் போட்டுத்தள்ள திட்டம் வெச்சிருக்கியோ?" என்றான் கணேசன் விகாரப் புன்னகையுடன்.

"சேச்சே! என்ன இப்படிக் கேக்குற? உங்களுக்கு அரசு வேலை இருக்கு. வாயைத்திறந்தா நீங்களும் மாட்டிப்பீங்க. அதுவும் போக கொலை செய்யுறதுல உங்களுக்கும் பங்கு இருக்கே? அதனால நீங்க சொல்ல மாட்டீங்க எனக்குத் தெரியும்" என்றான்.

"இதை முடிச்சுக் கொடுத்தா எங்களுக்கு என்ன கிடைக்கும்?"

"மொத்தமா ஆளுக்கு ரெண்டு கோடி. நீங்க வெளி நாட்டுக்குப் போகணும்னா கூடப் போகலாம்"

"ஒத்துக்கறோம். ரெண்டு கோடி தவிர நீ கட்டுற ரிசார்டுல எங்களுக்கு மேனேஜர் பதவி குடு. நாங்க நிம்மதியா இருப்போம். என்ன சொல்ற?"

"அதுக்கென்ன தாராளமா" என்று சொல்லி விட்டு ஒரு பாட்டிலைதிறந்தான்.

சிரித்தபடி பொன்னிற திரவத்தை சுவைக்க ஆரம்பித்தனர் அந்த கயவர்கள் மூவரும்.
 

Find SM Tamil Novels on mobile

Latest updates

Latest Episodes

Mobile app for XenForo 2 by Appify
Top