• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Mayak koattai - Minnal : Aththiyaayam 5

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Srija Venkatesh

SM Exclusive
Joined
Jan 17, 2018
Messages
408
Reaction score
4,349
Location
chennai
அத்தியாயம் 5.

பூஜாவுக்கும் அருணுக்கும் தங்களுக்கு ஏற்பட்ட அனுபவங்கள் தற்செயலானதா? இல்லை பிரமையா? என்ற எண்ணம் வந்து விட்டது. ஆனால் அரவிந்தனோ அவர்களை திருப்பி அனுப்புவதிலேயே குறியாக இருந்தான்.

"இன்னமும் எதுக்கு யோசிக்கறீங்க? பூஜா நீ முதல்ல அருணைக் கூட்டிக்கிட்டு கிளம்பு சொல்றேன்" என்றான்.

"இல்ல அரவிந்தன். இங்க ஏதோ மர்மம் இருக்கு. அதைக் கண்டு பிடிக்கணும்னு நான் நினைக்கறேன். நாம ஜாக்கிரதையா இருந்தா நமக்கு எதுவும் நடக்காதுன்னு தோணுது"

"நானும் அதையே தான் நினைக்கறேன் அரவிந்தா! அதுவும் போக இங்க ரிசார்டு வந்தா எவ்வளவு நல்லதுன்னு அவங்களுக்கு எடுத்துச் சொல்லி புரிய வைக்கணும். அது வரையில நாம இங்க இருப்போம்"

"எனக்குக் கொஞ்சம் கூட இஷ்டமில்ல அருண்! நீங்க ரொம்ப உறுதியா இருக்கீங்க! அதனால நான் ஒண்ணும் சொல்லல்ல! ஆன முன்னாடியே சொன்னா மாதிரி மலையில ராத்திரி நீங்க கண்டிப்பா தங்கக் கூடாது. ஊருக்குள்ள போயிடணும். "

பூஜா அருண் ஒரே குரலில் சரி என்றனர்.

"இப்ப உன் திட்டம் என்ன?" என்றான் அரவிந்தன்.

"முதல்ல இந்த காணிகளோட தலைவர் இருக்காரு இல்ல? அவரை சந்திச்சுப் பேசணும்." என்றான். அவர்களை அழைத்துப் போனான் அரவிந்தன். மிகவும் எளிமையான வீட்டுக்குள் சேர் கூட இல்லாமல் தரையில் அமர்ந்திருந்தார் அவர். ஓலை வேய்ந்த வீடு. படுக்க மட்டும் இரு கட்டில்கல் மடக்கி வைக்கப்பட்டிருந்தன. அவர்கள் வீட்டுக்குள் நுழைந்து சில நிமிடங்களிலேயே சூடான வெந்நீர் கொடுத்தார்கள். அதில் மூலிகைகளின் வாசம் வீசியது. தயக்கத்தோடு பார்த்தாள் பூஜா.

"பயப்படாதீங்கம்மா! நாங்க காணிகள் யாருக்கும் எந்த தீங்கும் செய்ய மாட்டோம். இது மூலிகை கலந்த வெந்நீர். இதைக் குடிச்சா ஜலதோஷம் தலைவலி தும்மல் வராது. தைரியமா குடிங்க" என்றார்.

மூவரும் பருகினார்கள். ஏதோ புதிய சக்தி உடலில் ஏறியது போல உணர்ந்தார்கள்.

"சொல்லுங்க நீங்க அந்த சேட்டோட ஆட்கள் தானே?" என்றார் எடுத்த எடுப்பில்.

"ஐயையோ இல்லவே இல்ல சார்! அவங்களை நாங்க பார்த்தது கூடக் கிடையாது. நாங்க சென்னையில இருக்கோம். "

"அப்ப எதுக்கு இங்க வந்தீங்க?"

"அரவிந்த எங்களுக்கு ஃபிரெண்டு! அவன் மூலமாத்தான் இங்க ரிசார்டு கட்டப் போறாங்கன்னு தெரிஞ்சது. அதுக்காகத்தான் வந்தோம். ஆமா நீங்க ஏன் இங்க ரிசார்டு வரக் கூடாதுன்னு சொல்றீங்க? அதனால உங்களுக்கு நன்மை தானே?" என்றான் அருண்.

அவனை நேருக்கு நேராகப் பார்த்தார் மூட்டுக்காணி ஆறுமுகம்.

"என்னப்பா நன்மை? என்றார். குரலில் சற்றே கேலி.

"இப்ப நீங்க கொஞ்சம் சுமாரான நிலையில தானே இருக்கீங்க? ரிசார்டு வந்தா உங்க இனத்துல இருக்குற பல இளைஞர்களுக்கு வேலை கிடைக்கும். அப்ப உங்க பொருளாதார நிலை உயரும் இல்ல? வீட்டுல டிவி கூட இல்லாத நிலை மாறுமே?" என்றாள் பூஜா.

விரக்தியாக சிரித்தார் அவர்.

"இந்தப் பேராச்சையால தான் எங்க இனமே நாசமாப் போயிட்டு இருக்கு. நாங்க இந்த வனத்துக்குக் காவல் அம்மா! எங்களுக்குத் தேவையான காய்களையும் கனிகளையும் தேனையும் இந்த வனமே எங்களுக்குக் கொடுக்குது. அப்படி இருக்க எங்களுக்கு எதுக்கு காசு பணம்?" என்றார்.

வியப்பில் வாயைப் பிளந்து விட்டார்கள் மூவரும். காசு காசு என்று பறக்கும் உலகில் இப்படி ஒரு இனமா என வியந்தனர். அவர் தொடர்ந்தார்.

"ஆனா எங்க இனத்துலயே உங்களை மாதிரி நினைக்கறவங்க நிறையப் பேர் பெருகிட்டாங்க! அதான் எங்களை படைச்சோன் தண்டிச்சுட்டாரு. இந்த இடத்தைப் பத்தி சொல்லி காசு வாங்கின ரெண்டு காணிகளை காணவே இல்ல!" என்றார்.

"ரெண்டு காணிகளைக் காணோமா?"

"ஆமா! அவங்க படைச்சோனுக்கு பிடிக்காத செயலை செய்தாங்க! அதனால அவங்களை அவரு தண்டிச்சுட்டாருன்னு பிலாத்தி சொன்னாரு" என்றார் கண்களில் மெல்லிய நீரோடு.

கண்ணைக் கட்டி காட்டில் விட்டது போல உணர்ந்தார்கள் மூவரும்.

"சார்! படைச்சோன், பிலாத்தி இவங்க யாரு? எங்க இருக்காங்க?" என்றான் அருண்.

அவர்களை நம்ப முடியாத பார்வை பார்த்தார் ஆறுமுகம். இது கூடத் தெரியாதா என்றது அவரது கண்கள்.

"படைச்சோன்னா கடவுள், பிலாத்தின்றவர் தான் எங்களுக்கு ஆசான். அவர் தான் எங்களுக்கு எல்லா மந்திரத்தையும் கத்துக்கொடுப்பாரு. ஒரு ஊருக்கு ஒரு பிலாத்தி தான் உண்டு. அதே மாதிரி மூட்டுக்காணியும் ஒருத்தர் தான் இருப்பாங்க." என்றார்.

அவர் சொன்ன தகவல்களை மனதில் அசை போட்டு அமர்ந்திருந்தாரன்ர் இளைஞர்கள் மூவரும்.

"என்ன தம்பி?" என்றார் ஆறுமுகம்.

"அப்ப ரெண்டு காணிங்களுக்கு கடவுள் தண்டனை குடுத்துட்டார்னா சொல்றீங்க?"

"ஆமா! எங்க இனத்துக்கு சில கட்டுப்பாடுகள் உண்டு. அதுல ஒண்ணு கன்னிமார் துறைக்கு மேல இருக்குற பூங்குளம் காட்டை யாருக்கும் காட்டிக்கொடுக்கக் கூடாதுன்றது. ஏன்னா அதுல மாயக்கோட்டை இருக்கு. அங்க யாரும் போகக்கூடாது. நாங்க கூட கிழங்கு எடுக்க தேன் எடுக்கன்னு பகல்ல போயிட்டு மதியமே திரும்பிடுவோம். அங்க மாய ஆன்மா ஒண்ணு இருக்கு. அதனால தான் அது பேரே மாயக்கோட்டை" என்றார்.

நகரவாசிகளான பூஜாவுகும் அருணுக்கும் இந்தத் தகவல்கள் மூட நம்பிக்கையாகத் தோன்றின.

"அங்க உண்மையிலேயே மாயக்கோட்டைன்னு ஒண்ணு இருக்கா? இல்லை அது நம்ம கண்ணுக்குத் தெரியாதா?" என்றான் அருண் எகத்தளாமாக.

"மின்னலோட சக்தி தெரியாம விளையாடாதீங்க தம்பி! மாயக்கோட்டை இன்னமும் இருக்கு. ஆனா யாருமே அங்க போறதில்ல! ரொம்பவும் அழகான பங்களா அது" என்றார்.

"ஏன் சார்! அப்படிப்பட்ட அழகான பங்களாவை யாரு கட்டுனாங்க? அதை ஏன் இப்படி சும்மா போட்டு வெச்சிருக்காங்க?" என்றாள் பூஜா.

முகம் சட்டெனக் கறுத்தது ஆறுமுகக் காணிக்கு.

"இதுக்குத்தான் நான் நாட்டுல இருந்து வரவங்களோட பேசறதே இல்ல! இதைப் பாருங்கப்பா! நீங்க எங்க வீட்டுல விருந்தாளா வந்து தண்ணியும் குடிச்சுட்டீங்க! உங்களை பாதுக்காக்க வேண்டியது எங்க பொறுப்புன்னு ஆயிடுது. அதனால சொல்றேன் ! அந்த மாயக்கோட்டை பத்தியோ மின்னல் பத்தியோ நீங்க கேக்காம இருந்தா உங்களுக்கும் நல்லது எங்களுக்கும் நல்லது. தாய்க்குப் பிள்ளையா ஊரு போய்ச் சேருங்க" என்றார் எச்சரிக்கும் குரலில். அதுவரை பேசிக்கொண்டிருந்ததற்கும் இந்த தொனிக்கும் வேறுபாடு அதிகம் இருந்தது.

"இப்பவே இங்க இருந்து போயிருங்க! இல்லைன்னா நான் கட்டுப்பாட்டை இழந்துருவேன் போங்க" என்றார் கோபமாக.

வேறு வழியின்றி மூவரும் பேசாமல் வெளியில் நடந்தனர். சற்றே அவமானமாக இருந்தாலும் சமாளித்தனர். குடியிருப்பிலிருந்து சற்றே தொலைவில் இருந்த மர நிழலில் நின்றனர்.

"என்ன அரவிந்தா நம்மை இப்படி விரட்டி அடிச்சுட்டாரு? என்னவோ இவங்க விருந்தோம்பல் பண்புக்கு இணையே கிடையாதுன்னு சொன்ன?" என்றான் அருண் எரிச்சலாக.

"நல்லா யோசிச்சுப் பாரு அருண்! நாம மாயக்கோட்டையைப் பத்திக் கேட்டதும் தான் அவரு காண்டாயிட்டாரு. அது வரைக்கும் நல்ல தன்மையாத்தான் பேசிக்கிட்டு இருந்தாரு. மூலிகை தண்ணீ கூடக் கொடுத்தாரு." என்றான் அரவிந்தன்.

"அப்ப அந்த மாயக்கோட்டையில தான் மர்மம் இருக்குன்றயா?"

"ஆமாம்! நானும் இதைப் பத்திக் கேள்விப்பட்டிருக்கேன். கன்னிமார் துறைக்கு மேலே பூங்குளம்னு ஒரு இடம் இருக்கு. அந்த இடமே மர்மமான இடம் தான். மனித நடமாட்டமே இல்லாத அந்த இடத்துல பங்களா எப்படி வந்தது? அதுல ஏன் யாரும் இல்லன்னு பல தடவை நான் சில இளைஞர்களைக் கேட்டிருக்கேன். ஆனா அவங்களுக்குத் தெரியல்ல"

"அவங்க கோபப்படலையா?"

"இல்ல! ஆனா அதைப் பத்திப் பேசக் கூடாதுன்னு எங்களுக்குள்ள கட்டுப்பாடு இருக்குன்னு சொல்லிட்டாங்க."

கைகளை சொடுக்கிக் கொண்டான் அருண்.

"அப்ப நம்ம வேலை அங்க தான் இருக்குன்னு நினைக்கறேன். நீ என்ன சொல்ற பூஜா?"

"ஆமா அருண்! அந்த மாயக்கோட்டை பத்தின மூட நம்பிக்கைகளை நாம மூறியடிச்சா தான் இவங்களுக்கு நல்ல காலம் பிறக்கும். அதைத்தான் நாம செய்யணும்" என்றாள்.

"அப்படீன்னா முதல்ல நாம அங்க போகணும்" என்றான் அருண். அதே நேரம் அவர்கள் நின்றிருந்த மரத்தில் கிளை முறிந்து பெரும்ச த்தத்தோடு விழுந்தது. ஒரே ஒரு விரற்கடை வித்தியாசத்தில் மூவரும் தப்பினர். சற்றே தள்ளி விழுந்திருந்தால் மூவரும் நசுங்கித்தான் போயிருப்பார்கள்.மூச்சு வாங்கியது அரவிந்தனுக்கு.

"டேய் அருண் வேண்டாண்டா! நாம அங்க போகணும்னு சொல்லும் போதே மரம் முறிஞ்சு விழுது. அங்க போனா இன்னும் என்னென்ன நடக்குமோ?"

"சே என்ன அரவிந்தா நீ? பழைய மரம் இது! கனம் தாங்காம கிளை ஒடிஞ்சு விழுந்திருக்கு. அதைப் போயி பெருசா சொல்றியே? இது காக்கா உக்கார பனம்பழம் விழுந்த கதை தான்" என்றான் அருண். சிரித்தபடி பூஜா பேசினாள்.

"நீ சொல்றதே உண்மைன்னு வெச்சுக்கிட்டாலும் நமக்கு எந்த கெடுதலும் நடக்கலியே? அப்படீன்னா நமக்கு அங்க போனாலும் எதுவும் நேராதுன்னு கடவுள் சொல்றா மாதிர்யும் எடுத்துக்கலாமே?" என்றாள் பூஜா.

"எனக்கென்னவோ சரியாப்படல்லடா! அப்புறம் உங்க இஷ்டம். ஆனா மாயக்கோட்டைக் போக வழி தெரியுமா உங்களுக்கு? யாராவது தெரிஞ்சவங்க கூட்டிக்கிட்டுப் போனாத்தானே உண்டு? எனக்கும் வழி தெரியாதே?"

"மலை மேல ஏற வேண்டியது தான். அத்தனை பெரிய பங்களாவை நம்மால கண்டு பிடிக்க முடியாதா? திசை தெரியுறதுக்கு எங்கிட்ட செல்ஃபோன் இருக்கு அதுல கேம்பஸ் இருக்கு. வழி தவற மாட்டோம். கண்டு பிடிச்சிடலாம். நாளைக்கே காலையில பூங்குளத்துக்குப் போயிருவோம்" என்றான் அருண். தலையசைத்தாள் பூஜா. இனியும் அங்கு வேலை இல்லை என்பதை உணர்ந்த மூவரும் மலை இறங்கத் தொடங்கினர் காரில். மீண்டும் அந்த அவல ஓலம் எழ திகைத்துப் போனார்கள்.
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
ஸ்ரீஜா வெங்கடேஷ் டியர்
 




SarojaGopalakrishnan

முதலமைச்சர்
Joined
Jul 20, 2018
Messages
5,517
Reaction score
7,709
Location
Coimbatore
என்ன விஷயம்
மர்மங்கள் முடிவுக்கு வருமா
அருண் பூஜா யாருக்கும் கெடுதல் செய்ய மாட்டார்கள்
நன்மை நடக்கும்
 




sridevi

அமைச்சர்
Joined
Jan 22, 2018
Messages
4,750
Reaction score
7,120
Location
madurai
arun& pooja mayakottaiku poga porangala......antha maya anma ivangala thadukuma............. waiting eagerly sis(y)(y)(y)(y)(y)
 




Sanshiv

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Apr 13, 2018
Messages
5,212
Reaction score
20,359
Location
USA
அருண் பூஜா அவசியம் அங்க போலத்தான் வேண்டுமா??? ஆனா இவங்க நல்லவங்கதானே இவங்களையும் மாயக்கோட்டை தண்டிக்குமா???
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top