Mayak Kottai - MInnal : Aththiyaayam 12

Srija Venkatesh

SM Exclusive
Author
SM Exclusive Author
#1
அத்தியாயம் 12:

மின்னல் உறைந்து போய் அமர்ந்திருந்தாள். மகிழி தான் அவளைத் தேற்றிய வண்ணம் இருந்தாள். மாடசாமியின் உடலை அடக்கம் செய்து விட்டு வந்து அவர்கள் அமர்ந்திருந்தனர். அனைவர் முகங்களிலும் அதிர்ச்சியும் பயமும் அப்பட்டமாகக் காணப்பட்டது. அவர்களது இனத்தில் இப்படிக் கொலையுண்டு யாரும் இறந்ததே இல்லை. இயற்கை மரணத்தை மட்டுமே பார்த்துப் பழகிய அவர்களுக்கு இள வயதில் மாடசாமியின் அகால மரணம் அதிலும் கொலை செய்யப்பட்டு இறந்தது பெரும் அதிர்ச்சியைக் கொடுத்தது. அடுத்து என்ன செய்வது? என்று எதுவுமே தெரியவில்லை. இளைஞர்கள் கொதித்துப் போயிருந்தனர்.

"பிலாத்தி! நீங்க அன்னைக்கே சொன்னீங்க நம்ம இனத்துக்கு கேடு காலம் வரப்போகுதுன்னு. அது வந்துடிச்சு போல இருக்கு" என்றார் மூட்டுக்காணி வேம்புலி.

"என்ன ஐயா நீங்க? எவனோ ஒரு வெள்ளைக்காரன் நம்ம ஆளை கொலை செய்திருக்கான் அவனை எதுவும் செய்யாம விட்டு வந்துட்டீங்களா?" என்றான் கொம்பன்.

"என்ன செய்யச் சொல்லுறீங்க? அங்க நமக்கு ஆதரவா பேச யாரும் இல்ல? நடராஜ பிள்ளையே பயந்து போயிட்டாரு. நாம மலைக்காணிங்க என்ன செய்ய முடியும்?"

"உங்களால முடியலைன்னா சொல்லுங்க நாங்க பார்த்துக்கறோம். அவன் எப்படியும் மலைக்கு வருவான் இல்ல அவனைத் தீத்துக்கட்டிட்டு தான் மறுவேலை" என்றான் மகிழியின் அண்ணன் நல்லான். அதைக் கேட்டு விழிகளை அசைத்தாள் மின்னல்.

"அண்ணா! நீங்க உண்மையாகவே அப்படி செய்வீங்களா?" என்றால் அவள் குரலில் பழி வாங்கும் வெறி இருந்தது.

"ஆமா தங்கச்சி! உன் நிலைமையை என்னால பார்க்க முடியல்ல! அடுத்த மாசம் உனக்கும் மாடசாமிக்கும் நிச்சயம்னு பிலாத்தி சொல்லியிருந்தாரு. ஆனா இப்படி ஆயிடிச்சே அவன் நிலை? சும்மா விட்டுருவோமா?"

"அப்ப நான் உங்க கூட நிக்கறேன் அண்ணா! அந்த வெள்ளைக்காரப் பன்னி மலைக்கு வந்துட்டு உயிரோட போகக்கூடாது. பார்த்துடுவோம் ஒரு கை" என்றாள்.

"மின்னல் என்ன நீ பேசிக்கிட்டே போற? அவங்க கையில பெரிய அரசங்கமே இருக்கு! நமக்கு இந்த மலையை விட்டா என்ன தெரியும்? நாம ஏதாவது செய்யப் போயி அவங்க நம்மை இங்க இருந்து விரட்டிட்டாங்கன்னா என்ன செய்ய?" என்றாள் மகிழி.

"சீ! இப்படி பயந்து பயந்து வாழறதைக் காட்டிலும் செத்துப் போறதே மேல். நம்மை அவங்களால என்ன செய்ய முடியும் மகிழி? இந்தக் காட்டோட மூலை முடுக்கெல்லாம் நமக்குத்தான் அத்துபடி. நாம மறைஞ்சு இருந்தோம்னா அவங்களால நம்மைத் தேடக் கூட முடியாது.

இளைஞர்களின் பேச்சு மூட்டுக்காணிக்கும், பிலாத்திக்கும் பயத்தையும் கவலையையும் கொடுத்தது.

"இங்க பாருங்க பிள்ளைங்களா! ஏற்கனவே நமக்கு கெட்ட நேரமா இருக்கு. ஒரு உயிர் போனது போதும். நீங்க எல்லாரும் வெள்ளைகாரங்களை எதிர்த்து சாக வேண்டாம். நம்ம இனமே அழிஞ்சாலும் அழிஞ்சிரும். " என்றார் மூட்டுக்காணி.

"நாங்க எதுவும் செய்யல்ல! அவன் மலைக்கு வந்தா தான் பார்த்துக்கலாம்னு சொல்றோம். என்ன தலைவர் நீங்க? நம்ம இனத்துல இப்படி அகால மரணம் நடந்தது உண்டா? அதை உண்டாக்கின அந்த நாயை சும்மாவா விடச் சொல்றீங்க?" என்று சீறினாள் மின்னல். அப்போது அவளைப் பார்க்கவே பயங்கரமாக இருந்தது. மாடசமியின் தாய் நெஞ்சில் அடித்துக்கொண்டு அழுதாள். அவளது ஒப்பாரி நெஞ்சைத்தொட்டது. அனைவருக்கும் கண்களில் நீர் வந்து விட்டது. அப்போதும் கூட கல்லாக அமர்ந்திருந்தாள் மின்னல். இனி அவளைத் தனியாக ஒரு நொடி கூட விடக் கூடாது என மகிழியும் அவளது அண்ணன் நல்லானும் தீர்மானித்துக்கொண்டனர்.

நல்லானுக்கு மின்னல் வேறு மகிழி வேறு அல்ல. இருவரையும் சிறு வயது முதலே வளர்த்தவன் அவன். மின்னலை மாடசாமிக்கும், மகிழியை கொம்பனுக்கு நிச்சயம் செய்து அடுத்த வரும் மாதத்தில் மணம் முடிப்பதாகத் தீர்மானித்திருந்தது. மின்னலில் நிச்சயம் முறிந்து விட்டதால் மகிழியும் மணம் வேண்டாம் என்று சொல்லி விட்டாள். கொம்பனும் அவர்களது மனக்காயங்கள் ஆறட்டும் என்று விட்டு விட்டான். ஆனால் மின்னலின் காயம் நாளுக்கு நாள் பெரிதாகி வலித்ததே தவிரக் குறையவே இல்லை. நல்லான் மகிழி மற்றும் மின்னல் அன்று காட்டுக்குள் கல் தமாரை என்ற மூலிகையைப் பறிக்கப் போயிருந்தனர். உடன் பெரியவர்கள் யாரும் இல்லாததல் சுதந்திரமாகப் பேசினான் நல்லான்.

"நீ இன்னமும் மாடசாமியை மறக்கலியா மின்னல்?" என்றன் நல்லான் மென்மையாக.

"இல்ல அண்ணா! என்னால அவரை மறக்க முடியாது. மறக்கணும்னு நானும் முயற்சி செய்யவே இல்ல. அவரோட சாவுக்கு நான் பழி வாங்கணும். அப்பத்தான் அவரோட ஆன்மா சாந்தி அடையும்" என்றாள். அவளது கண்கள் சிவப்பேறி இருந்தன.

மலைக்காணிகளுக்கு ஆவி ஆன்மா இவைகளில் நம்பிக்கை மிக அதிகம். இறந்தவர்களது ஆன்மா தங்களை வழி நடத்தும் என அவர்கள் நம்பினார்கள்.

"அப்படீன்னா மாடன் ஆன்மா நம்மை சுத்துதுன்னா சொல்ற?"

"ஆமா அண்ணா! இப்பக் கூட இதோ இங்க நின்னு நம்மைப் பார்த்துக்கிட்டு தான் இருக்காரு அவரு. எப்ப பழி வாங்கப் போறீங்க? எப்ப பழி வாங்கப் போறீங்கன்னு கேட்டுக்கிட்டே இருக்காரு" என்றாள்.

"செத்தவங்க ஆன்மா நம்ம கண்ணுக்குத் தெரியக்கூடாதே மின்னல். அது நல்லதில்லையே? நீ முதல்ல பழி உணர்ச்கியைக் கட்டுப்படுத்து. அப்பத்தான் நல்லது" என்றாள் மகிழி தோழியின் கரங்களைப் பிடித்தபடி.

"நல்லதா? எது நல்லது இனிமே? நாம இப்ப ஒண்ணுமில்லாதவங்க மகிழி. பணம் காசு உள்ளவன் தான் பெரிய மனுஷன்னு ஆகிட்டுது. நாட்டு மக்கள் நம்மை எத்தனை உயர்வா நெனச்சிருந்தவங்க இப்ப எப்படி மாறிட்டாங்க மார்த்தியா? இனிமே நமக்கு நல்ல காலமே கிடையாது" என்றாள்.

அண்ணனும் தங்கையும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர். நல்லானால் மின்னலின் உணர்வுகளைப் புரிந்து கொள்ள முடிந்தது.

"தங்கச்சி! நான் முக்கியமா ஒரு விஷயம் சொல்லத்தான் உங்களை இங்க கூட்டிக்கிட்டு வந்தேன். நம்ம மாடனைக் கொன்னானே அந்த வெள்ளைக்காரப் பன்னி அவன் இன்னும் மூணு நாள்ல நம்ம மலைக்கு வரானாம்" என்றான் நல்லான்.

அதைக் கேட்டதும் சரெக்கென விழிகளை உயர்த்தினாள் மின்னல். மாடசாமியின் ஆவி இருப்பதாகச் சொன்ன இடத்தில் மளுக்கென செடி உடைந்தது.

"வரானா? வரட்டும். ஆனா அவன் உயிரோட திரும்பிப் போகக் கூடாது. அதுக்கு நாம திட்டம் போடணும்" என்றாள் மின்னல்.

"அதைத்தான் நானும் சொல்ல வந்தேன். தாமிரபரணி நதிக்கரையில கூடாரம் அடிச்சுத் தங்கப் போறாங்களாம். "

"உனக்கு எப்படித் தெரியும் அண்ணா?" என்றாள் மகிழி.

"நடராஜ பிள்ளையோட மகன் புரட்சிக் கூட்டத்துல இருக்கான் மகிழி. அவங்களும் வெள்ளைகாரங்களை பழி வாங்க சந்தர்ப்பத்தை பார்த்திருக்காங்க. அவன் தான் சொன்னான் இந்தத் தகவலை. காட்டுல வெச்சு ஏதோ மிருகம் அடிச்சுக் கொன்னா மாதிரி செய்யச் சொன்னான்" என்றான் நல்லான்.

மகிழிக்கு ஏனோ இது பிடிக்கவில்லை.

" அவங்க தான் இரக்கமில்லாம நடந்துக்கறாங்கன்னா நாமும் அப்படியே நடந்துக்கணுமா?" என்றாள்.

அவ்வளவு தான் மின்னலுக்கு எங்கிருந்து தான் அத்தனை கோபம் வந்ததோ? மகிழியைப் பிடித்து உலுக்கினாள். அவளது கோபத்தால் பக்கத்தில் இருந்த ஓடை நிறம் மாறி சிவப்பாக ஓடியது போல இருந்தது.

"உனக்கு என்னை விட என் மாமனை விட அந்த வெள்ளைக்காரன் பெருசாப் போயிட்டானா? இனிமே நீ எனக்கு தோழியே இல்ல! நீ துரோகி துரோகி என்று அவளைக் கழுத்தை நெறித்தாள். மூச்சு விட முடியாம தத்தளித்தாள் மகிழி. நல்லான் பெரும் பாடு பட்டு அவளது கைகளை அகற்றினான்.

"மின்னல்! என்ன இது? உன் தோழியை நீயே கொன்னுருவே போல இருக்கே? இது நல்லதில்ல விடும்மா விடு" என்று கதறினான். மின்னல் கைகளை அகற்றிய பின்னரும் மூச்சுத் திணறியது மகிழிக்கு. அது மாடசாமியின் வேலை என்று புரிந்து கொண்டான் நல்லான்.

"மாடா! என் தங்கச்சியை விட்டுருடா! அவ தெரியாம சொல்லிட்டா! விடு" என்று கை கூப்பிக் கெஞ்சினான் நல்லான். பிறகே மகிழியின் சுவாசம் சீரானது. அந்த ஓடையில் நீர் இன்னமும் சிவப்பாகத்தான் ஓடிக்கொண்டிருந்தது.

"நீயும் உன் மாமனும் சேர்ந்து என் தங்கச்சியைக் கொல்லப் பார்த்தீங்களே? " என்றான் நல்லான் பரிதாபமக. மின்னலின் நெஞ்சு நெகிழ்ந்தது.

"மன்னிச்சுக்கோ மகிழி! அண்ணா நீங்களும் என்னை மன்னிச்சுக்குங்க! இனிமே என்னாலயோ என் மாமனாலயோ நம்ம இனத்தவங்களுக்கு எந்த ஆபத்தும் வராது. இது இதோ சிவப்பா ஓடுற தண்ணி மேல சத்தியம்" என்றாள் மின்னல். அவள் அப்படிச் சொன்னதும் கொஞ்சம் கூட கருமேகமே இல்லாத வானில் மின்னல் வெட்டியது. மாடசாமியின் ஆமோதிப்பாக அதைக் கொண்டார்கள்.

"ஏதோ ஒரு நீர்த்தவரம் காரணமா தண்ணி அப்பப்ப இந்த ஓடையில சிவப்பா ஒடும்னு பிலாத்தி சொல்லிக்கொடுத்திருக்காரு. ஆனா நானும் என் மாமனும் இங்கே இருக்குற வரை இதே நேரத்துல மூணு நிமிஷம் தண்ணி சிவப்பாத்தான் ஓடும். அது தான் நான் இருப்பதற்காகன் அடையாளம். இதை நீ நம்ம கூட்டத்துல சொல்லிரு" என்றாள் மகிழியிடம். மகிழிக்கு அதைக் கேட்டதும் அழுகை வந்தது.

"நீ சொல்றது பேசுறது எல்லாமே எனக்கு கலக்காம இருக்குடி! என்னவோ நீ இனிமே நம்ம காணிக்குடியிருப்புக்கு வரப்போறதே இல்லைன்றா மாதிரிப் பேசாத! உன் உணர்ச்சிகள் புரியாம நான் பேசுனது தப்பு தான் அதுக்காக என்னை தண்டிச்சுராதடி! நீ இல்லாத வாழ்க்கையை என்னால நினைசுக்குக்கூடப் பார்க்க முடியாது." என்று அழுதாள்.

மின்னல் தன் தோழியை அணைத்து தேற்றவில்லை. மாறாக கோபமே கொண்டாள்.

"கோழை போல அழாதே மகிழி! இந்தக் காட்டுக்கும் நம் இனத்துக்கும் தீங்கு செய்பவர்களை அழிக்கும் கடமை தான் இனி எனக்கு. அந்த வெள்ளைக்காரன் உயிர் போகும் வரை இனி நான் குடியிருப்பில் கால் வைக்க மாட்டேன். அது வரையில் நீ தான் எனக்கு உதவியாக இருக்கணும். செய்வியா? இல்லை இப்படியே அழுதுக்கிட்டு இருப்பியா?" என்றாள்.

மின்னலின் தோற்றம் அவள் கேட்ட தொனி இவைகளைப் பார்த்தால் அவள் மனுஷியாகவே தோன்றவில்லை. வனப்பேச்சியையும் அவர்கள் வணங்கும் பிரம்ம ராட்சசி அம்மன் போலவும் இருந்தாள். மின்னல் பிறந்த உடன் இவள் தெய்வாம்சம் பொருந்தியவள் பல அற்புதங்கள் செய்வாள் என்று பிலாத்தி சொல்லியது அவர்கள் நினைவில் ஆடியது.

"நீ சொன்னபடியே செய்கிறோம் மின்னல். உன் திட்டத்தைச் சொல்லு" என்றான்.

கழுத்தில் கிடந்த வண்ண மணிகளைக் கடித்தபடி ஓடையை நோக்கினாள் மின்னல். சில உருவங்கள் தோன்றி மறைவதைப் போல இருந்தது மற்ற இருவருக்கும். ஆனால் ஓடை நீரோட்டத்தையே பார்த்தபடி இருந்தாள் மின்னல். அவளது மனதில் ஒரு திட்டம் விரிந்தது. அதை விளக்கலானாள்.மின்னலின் திட்டத்தைக் கேட்ட நல்லானும் மகிழியும் பயத்தில் உறைந்து போனார்கள். இது நடக்குமா? என்ற எண்ணம் தோன்றியது. அதை மகிழி கேட்கவும் செய்தாள்.

"நிச்சயம் நடக்கும் மகிழி. " என்று உறுதி கூறினாள் மின்னல்.
 

Latest Episodes

Sponsored Links

Top