• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Mayak kottai - Minnal : Aththiyaayam 2

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Srija Venkatesh

SM Exclusive
Joined
Jan 17, 2018
Messages
408
Reaction score
4,349
Location
chennai
அத்தியாயம் 2.

நாள் 19.11.2017

எப்போதும் அமைதியாக இருக்கும் பாவநாச மலைக் காட்டுக்குள் மக்கள் சிறு கும்பலாக நின்று பேசிக்கொண்டிருந்தனர். அவர்களில் அரவிந்தும் இருந்தான். வன அதிகாரி உடை அணிந்த ஒருவரும் கோட் சூட்டில் ஒருவரும் நின்றிருந்தனர். கோட் சூட் என்ற உடையை அந்த மலை வாழ் மக்கள் அது வரையில் பார்த்ததில்லை என்பதால் அதை அதிசயமாகப் பார்த்தனர். வன அதிகாரி காணிகளின் தலைவர் ஆறுமுகக்காணியை அருகில் அழைத்தார்.

"என்னப்பா ஆறுமுகம்? உங்க மக்கள் என்ன சொல்றாங்க?"

"சாமி! எங்கள்ல யாருக்கும் இங்க கட்டிடம் கட்டுறதுல இஷ்டம் இல்லீங்க! இது மாயக்கோட்டையோட ஆளுமையில் வருது. இங்க கட்டிடம் கட்டக் கூடாதுங்க! அதையும் மீறிக் கட்டுனா நல்லது இல்ல"

"என்னய்யா நீ இன்னமும் மாயக்கோட்டை அது இதுங்குற? நீ சொல்ற மாயக்கோட்டை தாமிரபரணிக்கு அக்கரையில் இருக்குய்யா! அதுக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம்?"

இளைஞனான ஒருவன் முன் வந்தான்.

"ஐயா! எங்க மூப்பன் சொல்றதுல அர்த்தம் இருக்குங்க! காலம் காலமா இங்க எங்களைத்தவிர வேற யாரும் வந்து தங்கக் கூடாதுன்னு சொல்லுவாங்க! நீங்க இப்ப ஹோட்டல் கட்டி வாடகைக்கு விடப் போறேன்னு சொல்றீங்க! இதுனால தான் நாங்க எதிர்க்கறோம்" என்றான்.

"இந்த தம்பி உன் பேரென்ன?"

"கடம்பன்"

"இதைப் பாரு கடம்பா நீ என்ன வேலை செய்யுற?"

"அரசாங்கத்தோட நூறு நாள் வேலை வாய்ப்புல ஏதாவது வேலை கிடக்கும்ங்க! அப்புறம் தேன் எடுத்து கிழங்கு வித்து எங்க பொழைப்பு ஓடுதுங்க" என்றான்.

"முட்டாளய்யா நீ? இப்படி ஒரு வாழ்க்கை தேவையா? இங்க ரிசார்ட் கட்டுனாங்கன்னா உனக்கு வேலை கிடக்கும் இல்ல? மாசம் 10,000 சம்பளம் தருவாங்க! உனக்கு மட்டும் இல்ல உன்னை மாதிரி இளைஞர்களுக்கு வேலை கிடைக்க வழி செய்யும் இல்ல இது?"

10,000 ரூபாய் என்ற மந்திரம் வேலை செய்தது. கடம்பனின் கண்கள் பேராசையில் பளபளத்தன. ஆனால் அவனை பின்னல் இழுத்தாள் அவன் தங்கை பூவிழி.

"அண்ணே! பேராசைக்கு பலியாகாத! நேத்து பிலாத்தி மேல சாமி வந்தப்ப என்ன சொல்லிச்சு? நமக்கு ஏதோ பெரிய ஆபத்து வரப்போவுதுன்னு சொல்லிச்சு இல்ல? சாமி சொல்லி முடிக்கல்ல அதுக்குள்ள இவங்க வராங்க! எனக்கென்னவோ நல்லதாப்படல்ல அண்ணே" என்றாள்.

பூவிழியைத்தொடர்ந்து தாமரை, மஞ்சக்குருவி என சில பெண்களும் அதையே சொல்ல கடம்பன் பயந்து விட்டான். கோட் சூட் போட்டவர் வன அலுவலரை தனியாக அழைத்தார். பாதி இந்தியிலும் பாதி ஆங்கிலத்திலுமாக தொடர்ந்த உரையாடல்.

"என்ன சொல்றாங்க அந்தப் பரதேசிங்க? போனப்போகுதுன்னு அவங்களுக்கு வேலை கொடுக்கலாம்னா இவங்க என்னை உள்ளே வரவே கூடாதுன்னு சொல்றாங்க?"

"சார்! இவங்க இந்த மலையில ஆயிரக்கணக்கான வருஷமா தலைமுறை தலைமுறையா வாழறவங்க! அரசங்கமே இவங்களை தொந்தரவு செய்யுறது கிடையாது தெரியுமா? ஏதோ நீங்க என் மகனுக்கு மெடிக்கல் காலேஜ்ல சீட் வாங்கித்தரேன்னு சொன்னீங்களேன்னு தான் உங்களுக்காகப் பேசிக்கிட்டு இருக்கேன். இல்லைன்னா எனக்கென்ன? நீங்களாச்சு இவங்களாச்சு" என்றார் வீரமணி.

"இங்கே பார் வீர்மணி! உனக்கு அஞ்சு லட்சம் தரேன். அதோட உன் மகனுக்கு மெடிக்கல் சீட்டு ரெண்டு கோடி குடுத்து வாங்கித்தரேன். ஆனா இவங்க இங்க ரிசார்ட் கட்டுறதுக்கு எந்த அப்ஜெக்ஷனும் சொல்லக் கூடாது. ரொம்பக் கத்துனாங்கன்னா சொல்லு. ராத்திரி குடிசையைக் கொளுத்தி விட்டுரலாம்" என்றான் ஜல்ராம் சேட். அவன் குரலில் இரக்கம் என்பது இம்மியும் இல்லை.

"நான் சொல்லிப்பார்க்குறேன் சார்! இல்லைன்னா அப்படித்தான் செய்யணும். ஒருத்தன் கையிலயும் பத்து ரூவாக்காசு கூடக் கிடையாது. ஆனா என்னவோ இந்தக்காட்டுக்கே இவங்க தான் சொந்தக்காரங்க மாதிரிப் பேசுவாங்க! இவனுங்களுக்கு சப்போர்டுக்கு உள்ளூர் ஆட்கள் வேற. "

"எதுனா செய்யி! இன்னைக்கு ஆட்கள் அளக்க வருவாங்க! அவங்களை நீ தான் கவனிச்சுக்கணும். இது காட்டுல இருக்குற இடம். பிரிட்டிஷ் கவர்மெண்ட் எங்களுக்கு இந்த இடத்தை 299 வருஷம் லீசுக்குக் கொட்த்தா மாதிரி டாக்குமெண்ட் ரெடி பண்ணியாச்சு. ரிஜிஸ்டிரார் ஆபீசுல எல்லாரையும் சரிக்கட்டியாச்சு. சும்மா பேருக்கு ரெண்டு பேர் வருவாங்க! அவங்களை நல்லா கவனிச்சு அனுப்பு புரிஞ்சதா?" என்றார் சேட். கொத்தாக நோட்டுக்கள் கை மாறின.

காணிகளையும் உள்ளூர் மக்களையும் அழைத்தார் வீர மணி.

"இதைப்பாருங்கப்பா! இந்த இடம் இவங்களுக்கு சொந்தமானது. 80 வருஷத்துக்கு முன்ன பிரிட்டிஷ் அரசாங்கம் இவங்க தாத்தாவுக்கு இந்த இடத்தை 299 வருஷம் லீசுக்குக் கொடுத்திருக்காங்க! அவங்க இடத்துல அவங்க ரிசார்டு கட்ட வராங்க! அதை நாம தடுத்தா நஷ்டம் நமக்குத்தான்" என்றார் சாமர்த்தியமாக.

"சாமி! கடந்த 100 ஆண்டுகளா இந்த இடத்துக்கு இங்கிலீஸ் காரங்க வரவே மாட்டாங்க ளே! மாயக்கோட்டையோட பயங்கரத்தை அனுபவிச்சவங்களாச்சே அவங்க! அஞ்சு துரைமாருங்க உயிரைக் காவு வாங்கின இடமுங்க இது. அவங்களுக்கு இந்த இடத்து மேல பயமாச்சுங்களே? அப்படி இருக்க 80 வருஷத்துக்கு முன்ன இவங்களுக்கு லீசுக்கு எப்படி கொடுத்திருப்பாங்க?" என்றார் மூட்டுக்காணியான ஆறுமுகம்.

"அதெல்லாம் எனக்குத் தெரியாதுய்யா! என்னமோ மாயக்கோட்டை மாயக்கோட்டை பூச்சாண்டி காட்டுறீங்களே? நான் இதே காட்டுக்குள்ள மூணு வருஷமா இருக்கேன். என்னை எதுவும் செய்யலையே?"

"சும்மா இருக்குறவங்களை மாயக்கோட்டை ஒண்ணும் செய்யாதுங்க! இந்தக் காட்டுக்கு கெடுதல் நெனச்சாலோ இங்க உள்ள விலங்குகளுக்கு கெடுதல் நெனச்சுத் தங்குனாலோ தான் காவு வாங்கும். "

"நல்ல கதை இது! அம்புலிமாமாவுக்கு எழுதுங்க காசாவது கிடைக்கும். இந்தப்பா சின்னப்பசங்களா! உங்க மூப்பனுக்கு வயசாயிடிச்சு. அவர் காலம் வறுமையிலயே போயிடிச்சு. நீங்க வாழ வேண்டியவங்க! இப்படியே அஞ்சுக்கும் பத்துக்குல் அல்லாடப்போறீங்களா? இல்லை ரிசார்டுல வேலை செஞ்சு சம்பாதிக்கப் போறீங்களா? நல்ல வருங்காலம் வரும் போது அதை நாம பயன்படுத்திக்கணும்ப்பா! "

இளைஞர்கள் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர். அவர்கள் மனம் மெல்ல மாறுகிறது என கண்டு கோண்டார் வீரமணி.

"இவங்க இந்தக் காட்டை அழிக்கவோ வன விலங்குகளை துன்புறுத்தவோ போறது இல்ல! அதை நாட்டு மக்களும் ரசிக்கும்படியா செய்யப் போறாங்க! அதனால நம்ம காடு உலகப் புகழ் பெறும்யா! நீங்க செய்யுற பாசி மணிகளை வெள்ளைக்காரங்க ஆயிரக்கணக்கான ரூவா குடுத்து வாங்குவாங்க! நீங்களும் மத்தவங்க மாதிரி ஸ்டைலா உடுத்தலாம் நகை போடலாம் நகரத்துல போய் புதுப்புது சாமானெல்லாம் வாங்கலாம் " என்றார்.

வீரமணியின் பார்வை பாவநாசத்து ஆட்கள் மீது விழுந்தது. அவர்கள் தங்களுக்குள் ஏதோ பேசிக்கொள்வதைக் கவனித்தார்.

"நீங்களும் பயப்பட வேண்டாம். ஏ சுப்பிரமணி நீ இப்ப சாதாரண டீக்கடை வெச்சிருக்க. கொஞ்சம் யோசிச்சுப் பாரு. இங்க டூரிஸ்டு வர ஆரம்பிச்சுட்டாங்கன்னா உன் வியாபாரம் எவ்வளவு பெருகும்? நீ ஹோட்டலே நடத்தலாம். அது பிடிக்காட்டி ரிசார்டுல சமையல் பண்ற வேலை செய்யலாம். மாசம் 30000 சம்பளம். உங்க எல்லாருக்குமே வேலை போட்டு தரச் சொல்றேன். இதை நமக்கு கெடச்சிருக்குற சந்தர்ப்பமா தான் நாம நினைக்கணும். என்ன சொல்றீங்க?"

இப்போது மூப்பன் ஆறுமுகத்தைத் தவிர அனைவரும் கட்சி மாறி விட்டார்கள் என்றே சொல்ல வெண்டும். ஆறுமுகமும் இன்னும் சில வயதானவர்களும் சிந்தனை வயப்பட்டவர்களாக நின்றிருந்தனர்.

"ஆறுமுகம் உங்களுக்கு என்னய்யா பிரச்சனை?"

"இல்ல சாமி வந்து...இந்தப் பகுதியில இது வரையில வெளி ஆட்கள் வந்ததில்ல. அப்படி வரவங்களுக்கு ஏதாவது ஆபத்து வந்தா நல்லா இருக்காதே சாமி! அதான் யோசிக்கறேன்" என்றார். அவரை எரித்து விடுவது போலப் பார்த்தார் வீரமணி. காணிகளுக்குத் தலைவனான மூப்பனைப் பகைத்துக்கொண்டால் நல்லதல்ல என்று அனுபவத்தில் உணர்ந்திருந்த அவர் கோபத்தை அடக்கிக் கொண்டு மெல்லப் பேசினார்.

"யோவ்! ஆறுமுகக்காணி! நானும் உன் யோசனைக்கே வரேன். இன்னைக்கு சாயங்காலம் நிலத்தை அளக்குறதுக்கு ரெண்டு பேரு வராங்களாம். இங்க தான் தங்கப் போறாங்க! அப்படி அவங்களுக்கு ஆபத்து எதுவும் நடக்காம நல்லபடியா திரும்பிட்டாங்கன்னா மாயக்கோட்டையால எந்த ஆபத்தும் இல்லைன்னு ஒத்துக்குவியா நீ?"

வயது முதிர்ந்த பெண்மணியான கிளிக்குட்டி முன் வந்தாள்.

"ஐயாமாரே! மாயக்கோட்டை மின்னலோட சக்தியை ரெண்டு உசுரை வெச்சா பரீட்சை செய்வீங்க? வேண்டாம்யா! இது மாயக்கோட்டை மின்னலோட இடம். அவளுக்கு வெளி மனுஷங்களைப் பிடிக்காது. இதை இதோட விட்டுருங்க" என்றாள்.

அவளது தூக்கி செருகிய கொண்டையும் இடுப்பில் இருந்த கருக்கரிவாளும் வீரமணியை ஒரு மிரட்டு மிரட்டின. ஆனாலும் அவர் தைரியத்தைக் கை விடவில்லை.

"இந்தம்மா! எப்பவோ நடந்த விஷயங்களைச் சொல்லி உங்க வருங்கால தலைமுறையை அழிக்கப் போறீங்களா? இன்னைக்கு ஒரே ஒரு நாள் சமயம் கொடுங்களேன். பார்த்துடலாம் மாயக்கோட்டை மின்னலா இல்லை இந்த வீரமணியான்னு" என்றார்.

ஆறுமுகக்காணி ஏதோ ரகசியமாக கிளிக்குட்டியிடம் சொல்ல அவள் அமைதியானாள். ஆனால் அவள் பார்வை சற்று தொலைவில் இருந்த சேட்டையும் வீரமணியையும் துளைத்தது. சேட்டுக்குள் மெல்லிய குளிர் ஒன்று இறங்குவது போல இருக்க அவர் கைகளை தேய்த்துக்கொண்டார்.

"சரிங்க சாமி! நீங்க சொல்றபடி நாங்க கேக்குறோம். இன்னைக்கு அந்த ரெண்டு அதிகாரிங்களும் வரட்டும். காலையில அவங்க நல்லபடியா இருந்தாங்கன்னா நாங்க கட்டிடம் கட்ட தடை ஒண்ணும் சொல்ல மாட்டோம். ஆனா அவங்களுக்கு ஏதாவது ஆயிடிச்சுன்னா நீங்க இனி இந்தப்பக்கமே இந்த மனுஷங்களைக் கூட்டிக்கிட்டு வரக் கூடாது சரிங்களா?"

"ஏய்யா! உங்களை எப்படி நம்புறது? இந்த எடத்துல கட்டிடம் வரக்கூடாதுன்னு நீங்களே அவங்களை ஏதாவது செய்ய மாட்டீங்கன்னு என்ன நிச்சயம்?" கொக்கி போட்டார் வீர மணி.

"அந்த மாதிரி ஆட்கள் நாங்க இல்ல சாமி! அப்படியும் உங்களுக்கு நம்பிக்கை இல்லேன்னா நாங்க ஆண் பெண் எல்லாரும் தண்ணி மேல சத்தியம் செஞ்சு தரோம்." என்று அப்படியே செய்து கொடுத்தனர்.

"சாமி! நாங்க சத்தியத்தை மீறவே மாட்டோம். அதுவும் தண்ணி மேல செஞ்சு குடுத்ததை எங்க உயிரே போனாலும் மீறணும்னு நினைக்கக் கூட மாட்டோம். அதே மாதிரி நீங்களும் உங்க வாக்கைக் காப்பாத்துங்க சாமி" என்றார் ஆறுமுகக்காணி.

"கட்டாயம் செய்வேன்யா! கவலைப்படாதீங்க! அப்ப இன்னைக்கு ராத்திரி அவங்க வரட்டும் என்ன?" என்றார். அவர் கேட்ட அதே நேரம் பட்டப்பகலில் மிகவும் குளிர்ந்த காற்று வீசியது. அதோடு எங்கிருந்தோ ஒரு ஓலம் எழுந்தது. அது மிருகத்தில் சத்தமா? காற்றில் மூங்கில்கள் உரசும் ஒலியா என எதுவும் தெரியவில்லை. பக்கத்தில் ஓடிக்கொண்டிருந்த தாமிரபரணியின் மறு கரையிலிருந்து தான் அந்த ஓலம் வருவதாகத் தோன்றியது. மெல்லிய இருள் சூழ்வதாக உணர்ந்தனர் அனைவரும். காணிகள் பயத்தோடு ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர்.

"மின்னல் வந்துட்டா" என்றாள் ஒரு வயதான பெண்மணி.

அதே நேரம் இரு களப்பணியாளர்களை சுமந்து வந்து கொண்டிருந்த ஜீப் கட்டுப்பாட்டை மீறி ஒரு மரத்தில் லேசாக மோதி நின்றது. அதிலிருந்து ராமகிருஷ்ணனும் பசுபதியும் குதித்து இறங்கினர்.
 




Sanshiv

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Apr 13, 2018
Messages
5,212
Reaction score
20,359
Location
USA
Superb update srija mam... very interesting... eagerly waiting for next update...
 




Chittijayaraman

அமைச்சர்
Joined
Oct 16, 2018
Messages
2,202
Reaction score
4,376
Location
Chennai
Nice update mam, mayakottai marma kottaiya eruke, minnal oda enna shakthi, poluthu vidimja erukimgala ? Nice mam thanks.
 




SarojaGopalakrishnan

முதலமைச்சர்
Joined
Jul 20, 2018
Messages
5,516
Reaction score
7,708
Location
Coimbatore
காட்டுக்குள் இருக்கிற. இயற்கையை
அழிக்க எங்க இருந்து வராங்க
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top