Mayaka Kottai - Minnal : Aththiyaayam 11

Srija Venkatesh

SM Exclusive
Author
SM Exclusive Author
#1
அத்தியாயம் 11.

இன்னும் சில வினாடிகள் தான் மின்னலை அவன் சுட்டிருப்பான். மகிழி ஓடிப்போய் அவன் கைகளைப் பிடித்து விட்டாள். ஒரு இந்தியப் பெண் தன்னைக் கண்டு பயமில்லாமல் தொடுவதா என நினைத்த அவன் கைகளைத் தட்டி விட்டான். துப்பாக்கி குறி தவறி எங்கோ வெடித்தது. ஆங்கிலத்தில் அவன் கத்தினான். அதற்குள் மின்னலும் வந்து விட்டாள்.

"என்ன நீங்க? இப்படி வெள்ளைக்கார துரை வேட்டையாடுறதைக் கெடுத்துடீங்க? இனி அவன் சும்மா இருக்க மாட்டானே? யாரும்மா நீங்க?" என்றார் தொப்பி அணிந்த ஒருவர்.

"ஐயா! இந்தக்காடு எங்களது. இங்க வந்து ஒரு பாவமும் செய்யாத மானையும் மிளாவையும் வேட்டையாடினா நாங்க பார்த்துக்கிட்டா இருப்போம்?" என்றாள் மின்னல். அதை அப்படியே மொழி பெயர்த்தார் அவர் துரைக்கு.

"தினம் புலியும் சிறுத்தையும் மானை வேட்டையாடுது. அதுங்களை நீங்க தடுப்பீங்களா?" என்றான் துரை இளக்காரமாக. அவனை உற்றுப் பார்த்தாள் மின்னல்.

"புலியும், சிறுத்தையும் தன்னோட உணவுக்காக தான் வேட்டையாடுதுங்க! பசி இல்லைன்னா மத்த விலங்குகளை ஒண்ணும் செய்யாது. ஆனா நீங்க மத்தவங்க பாராட்டணும்னு இங்க வந்து வாயில்லா ஜீவன்களுக்கு தொந்தரவு கொடுக்கறீங்க" என்றாள் மின்னல் படபடவென.

"யாரு இந்தச் சின்னப் பசங்க? இனிமே இவங்க இந்தக் காட்டுக்குள்ள வரக் கூடாதுன்னு சொல்லு! அப்படியே வந்தாலும் நாம வேட்டையாடுறதைத் தடுக்கக் கூடாது. இந்த தடவை விடறேன். ஆனா அடுத்த தடவை இதே மாதிரி நடந்தா இவங்களை சுட்டுத்தள்ள தயங்க மாட்டேன்" என்றான் துரை. தொப்பி மனிதர் அதனை மொழி பெயர்த்தார்.

"நீங்க இனிமே இங்க வரவே கூடாதுன்னு நான் சொல்றேன். என்னை வரக்கூடாதுன்னு சொல்ல நீ யாரு? " என்றாள் மின்னல் சளைக்காமல்.

"இந்தச் சின்னப் பொண்ணு கிட்டப் பேச வேண்டிய அவசியம் எனக்கு இல்ல! நீ இவங்க தலைவரை வரச் சொல்லு. நான் பேசிக்கறேன்" என்றான் துரை. அந்த தொப்பி அணிந்த தமிழர் இவர்களை போகச் சொன்னார். அதோடு மூட்டுக்காணியையும் அழைத்தார். ஊர்க்கூட்டம் கூடியது.

துரை பேசியதை தமிழில் மொழி பெயர்த்தார் அந்த மனிதர். தன் பெயரை ராமமூர்த்தி என்று சொன்னார். அவர் சொன்னது இது தான்.

"பிரிட்டிஷ் அரசாங்கம் இந்த நாட்டுக்கு எவ்வளவோ நன்மை செஞ்சிருக்கு. எங்களால தான் உங்க நாடு வளர்ந்தது. நாங்க உங்களை விட மேலானவங்க. எங்க இஷ்டப்படி என்ன வேணும்னாலும் செய்வோம். காட்டுல வேட்டையாடுறது எங்களோட கலாச்சாரம். அதைத் தடுக்க நீங்க யாரு? இந்தக் காட்டுக்குள்ள நாங்க எங்க வேணும்னாலும் போவோம் வருவோம் . அதைக் நீங்க கேக்க முடியாது. இனிமே யாராவது எங்க வேட்டைக்கு இடைஞ்சல் செய்தாங்கன்னா அவங்களையும் சுட்டுட்டுப் போயிட்டே இருப்பேன்" என்றான்.

அவர் பேசியதைக் கேட்ட காணிகளுக்கு ஒன்றுமே புரியவில்லை.

"ஐயா! துரையை யாருங்க தடுத்தாங்க? அவரு ஏன் எங்களை திட்டுறாரு?" என்றான் ஒருவன்.

"உங்க கூட்டத்துல இருக்குற ரெண்டு பேரு துரை வேட்டையாடும் போது கலைச்சு விட்டுட்டாங்க! அவங்களை அவரு கொல்லாம விட்டதே உங்க அதிர்ஷ்டம் தான்" என்றார் ராமமூர்த்தி.

"ஐயா! நீங்க சொல்ற ஆள் யாருன்னு எங்களுக்குத் தெரியல்ல. ஆனா இந்தக் காட்டுக்குள்ள உணவுக்காக வேட்டையாடலாமே தவிர மன மகிழ்ச்சிக்காக எந்த உயிரையும் தும்ன்புறுத்த நாங்க விட மாட்டோம். இவரு பெரிய துரைன்னா அது நாட்டுல இங்க நாங்க தான் அரசன்" என்றார் மூட்டுக்காணி வேம்புலி.

ராமமூர்த்தி இந்த வார்த்தைகளை மொழிபெயர்க்க சற்றே தயங்கினார். அதைப் புரிந்து கொண்டான் துரை.

"கமான் மேன் சொல்லு! அவங்க சொன்னதை அப்படியே சொல்லு" என்று ஆணையிட்டான். ராமமூர்த்தி சொல்லியதைக் கேட்டதும் உள்ளம் கொதித்தது அவனுக்கு.

"என்ன ஒரு திமிரு? எங்க அரசியாரையே எதிர்க்குறானா இவன்? போனாப் போகுதுன்னு விட்டு வெச்சா ரொம்ப தப்பாப் பேசுறாங்களே? " என்றான்.

வேம்புலி எழுந்தார். கூடவே சில இளைஞர்களும் எழுந்தனர்.

"ஐயா! எங்களை மலையரசன்னு கூடச் சொல்லுவாங்க! காலம் காலமா நாங்க இந்தக் காட்டுல இருக்கோம். யாரும் எங்களைத் தொந்தரவு செஞ்சது கிடையாது. நாட்டு மக்களும் இங்க அதிகம் வர மாட்டாங்க! அப்படி வரவங்க கூட எங்க கிட்ட வைத்தியம் பார்த்துக்கவும் மூலிகைகள் வாங்கிட்டுப் போகவும் தான் வருவாங்க. இவரு தான் புதுசா எங்க இடத்துக்கு வந்து எங்களையே எதிர்க்குறாரு. ஜாக்கிரதையா இருக்கச் சொல்லுங்க அவரை" என்றார்.

முகம் சுருங்கி விட்டது துரைக்கு. அவன் துப்பாக்கியை எடுப்பதைப் பார்த்து விட்டு உடன் வந்திருந்த மற்றொரு வெள்ளைக்காரன் அவனைத் தனியே அழைத்தான்.

"நீ என்ன செய்யப் போகிறாய் தாமஸ்! இப்ப நீ இவங்களை சுட்டால் விஷயம் பெருசாகும். ஏற்கனவே அங்கங்க புரட்சி வெடிக்குது. அது நமக்கு சாதகமா இல்லைன்னு அரசியார் வரைக்கும் செய்தி போயிருக்கு. இந்த நேரத்துல நீ காட்டுவாசிகளைப் பகைச்சுக்கிட்டா இவங்க கொதிச்சு எழுவாங்க. இது இவங்களோட போகாது. நாட்டு வாசிகளும் இவங்களுக்கு ஆதரவா வருவாங்க. இது நிச்சயம் நல்லது இல்ல. அதனால துப்பாக்கியை உள்ளே வை" என்றான் ஜார்ஜ்.

ஜார்ஜ் சொன்னதில் அர்த்தம் இருந்ததால் துப்பாக்கியை கீழே போட்டான் தாமஸ் . ஆனால் அவன் மனதில் பழி உணர்ச்சி கொழுந்து விட்டு எரிந்தது. இரு சிறு பெண்கள் நம்மை வென்று விட்டார்களே என அவன் கொதித்தான்.

"உன்னை நான் சும்மா விட மாட்டேன் " என்று மின்னலை நோக்கி கைகளை நீட்டிச் சொல்லி விட்டு போய் விட்டான். அவன் கைகள் மின்னலைக் காட்டுவதைக் குறித்துக்கொண்டனர் மூட்டுக்காணியும் பிலாத்தியும். அவர்கள் மனங்களில் கவலை வந்தது.

"மின்னல்! நீயும் மகிழியும் தான் போய் அவன் வேட்டையைக் கலைச்சீங்களா? அவன் நம்மைக் கரை வெச்சுட்டானே அம்மா? இனிமே நாம என்ன செய்ய?" என்றார் வேம்புலி கலங்கிய குரலில்.

"இவனுக்குப் போயா பயப்படறீங்க? இவனால நம்மை எதுவும் செய்ய முடியாதுப்பா! பார்த்தீங்க இல்ல? எப்படி திரும்பிப் போறான்னு?" என்றாள் மின்னல் வெற்றிச் சிரிப்புடன். ஆனாலும் சமாதானமாகவில்லை அவர்களுக்கு.

காணிகள் காட்டில் கிடைக்கும் தேன், கிழங்கு வகைகள், இவர்கள் செய்யும் வண்ண வண்ண மணிகளால் ஆன மாலைகள் இவற்றை அம்பாசமுத்திரம் சந்தையில் கொண்டு சென்று விற்பது வழக்கம். பதிலுக்குக் காசு வாங்கமல் அரிசி, பாத்திரம் சில துணி வகைகள் இப்படி வாங்கி வருவார்கள். நெடுங்காலமாகவே அப்படித்தான் செய்து வந்தார்கள். ஆனால் அந்த நிகழ்ச்சிக்குப் பிறகு அம்பாசமுத்திரம் சந்தையில் இவர்கள் பொருட்களை விற்க வேண்டுமானால் அனுமதி வாங்க வேண்டும் என்று சொல்லி விட்டார்கள். அதோடு இவர்கள் விற்கும் பொருளுக்கும் வாங்கும் பொருளுக்கும் வரி கட்ட வேண்டும் என்றும் சொல்லி விட்டர்கள்.

பாவம் காணிகள். இது நாள் அவரை அவர்களது எளிய வாழ்க்கையில் இப்படி ஒரு சிக்கலை அவர்கள் சந்தித்ததே இல்லை. வரி அனுமதி போன்றவை அவர்களுக்குப் புதிதாக இருந்தன. நம் நாட்டில் நமது பொருட்களை விற்பதற்கு எதற்கு அனுமதி என வியந்தார்கள். சில வாரங்கள் ஒரு சில வியாபாரிகளின் ஆதரவில் அவர்கள் தங்கள் பொருட்களை பண்ட மாற்று செய்து கொண்டார்கள். ஆனால் அந்த வியாபாரிகளுக்கு அரசாங்க அதிகாரிகள் தொந்தரவு கொடுத்ததில் அவர்களும் காணிகளுக்கு உதவுவதை நிறுத்திக்கொண்டார்கள்.

அம்பையில் காணிகளுக்குத் தெரிந்த ஒரே மனிதரான நடராஜபிள்ளை அவர்களை அழைத்துப் பேசினார்.

"எப்பா! இவனுவோ ராஜ்ஜியம் தான் இப்ப கொடி கட்டிப் பறக்கு! இவனை யாராலயும் ஒண்ணும் செய்ய முடியாதுய்யா! வடக்க இவனுங்களை எதிர்த்து ஒரு கோஷ்டி சண்டை போட்டிருக்கு. அத்தனை பேரையும் கொன்னு போட்டானுவோ. ஈவு இரக்கம்மத்த பாவிங்க இவங்க" என்றார் அவர். மனம் கலங்கியது அவருக்கு.

"இப்ப நாங்க என்ன செய்ய?" என்றார் வேம்புலி. அவரும் அவருடன் காளையன், மூக்கன் என ஒரு சிலர் வந்திருந்தனர் சந்தைக்கு.

"அவனுங்க சொல்றா மாதிரி அனுமதி வாங்கிக்குங்க, அதோட வரியும் கட்டிப்பிடுங்க அப்பத்தான் தொந்தரவு இல்லை. அவனுக்கு உங்க மேல என்ன கோவம்னு தெரியலையே? ஏன் இப்படிப் பண்ணுதான்?" என்றார் நடராஜ பிள்ளை.

"ஐயா! அனுமதி எங்க வாங்கணும்? வரி எப்படிக் கட்டணும்னு கொஞ்சம் சொல்லிக்கொடுங்க! எங்களுக்கு எதுவும் புரியல்ல" என்றார் மூக்கன்.

அவர்களது வேண்டுகோளின்படி நடராஜபிள்ளை தாலுகா அலுவலகத்துக்கு நடையாய் நடந்து காணிகளுக்கு லைசன்ஸ் வாங்கிக்கொடுத்தார். அதோடு மூன்றில் ஒரு பங்குப் பொருளை காசுக்கு விற்கச் சொல்லி அவரே இவர்களது வரிகளையும் கட்டினார். கனத்த மனதோடும் வெற்றுக்கரங்களோடும் மலை ஏறினர் காணிகள். அன்று இரவு நெருப்பு முன் அமர்ந்து இருக்கும் போது அனைவரின் மனமும் வெதும்பிக் கிடந்தது. அவர்களுக்கு இவை யாவும் நல்ல நிமித்தங்களாகப் படவில்லை. காசு என்ற ஒன்று மனிதனைப் பிரிக்குமே அன்றி சேர்க்காது என்று நம்பினர் அவர்கள்.

"இனிமே நமக்கு பாத்திரம் சேலை இதெல்லாம் கிடக்காதா?" என்றாள் பூங்குருவி.

"எல்லாமே கிடைக்கும் தாயீ. ஆனா நாமளும் காசு வாங்கணும். எந்த யாவாரியும் இனிமே பண்டமாற்று பண்ண மாட்டேன்னு சொல்லிட்டான். " என்றார் வேம்புலி.

"ஐயா! காசுன்னா பணம் தானே? அதை சாத்தான்னு தானே நாம சொல்லுவோம். இப்ப நாமளே அதை வாங்குனா எப்படிங்க?" என்றான் கொம்பன்.

"என்ன செய்ய கொம்பா? காலம் மாறுது இல்ல? நாமும் மாறிக்கிட வேண்டியது தான்" என்றார் காளையன்.

"எனக்கு என்னவோ அவன் நம்மை பழி வாங்குறதுக்காக இத்தனையும் செய்யுறானோன்னு தோணுது. பலபேத்தைக் கொன்னிருக்கானாம் அவன். நாம இனுமே ரொம்ப சாக்கிருதையா இருக்கணும். நம்ம மக்கள் அம்பைக்குப் போனா கூட்டமாப் போங்க கூட்டமா வாங்க. " என்றார் மூட்டுக்காணி. சொல்ல முடியாத ஏதோ ஒரு துயரம் அவர்களைப் பிடித்திருந்தது.

அடுத்த வாரம் சந்தைக்குப் பொருட்களை எடுத்துக்கொண்டு போனாவர்களில் மின்னலில் முறை மாமன் மாடசாமியும் இருந்தான். சந்தையில் போய் இறங்கியதுமே அவர்களது பொருட்களைப் பறித்துக்கொண்டனர் அரசாங்கத்தார்.

"எதுக்கு எங்க பொருட்களை பறிக்கறீங்க?" என்றான் மாடசாமி.

"முறைப்படி அனுமதி வாங்கலியாம் அதான்" என்றான் அந்த அரசாங்க அதிகாரி. தங்களது அனுமதியை காட்டினார்கள் அனைவரும். அப்போது அந்த வெள்ளைக்காரன் தாமஸ் துரை வந்தான்.

"நீங்க அனுமதி வாங்கியிருக்கீங்க ஆனா உங்க பேர்ல இல்ல. பொதுவா காணின்னு இருக்கு. உங்கள்ல யாரு காணி?" என்றான் கேலியாக.

"ஐயா நாங்க எல்லாருமே காணிங்க தான். "

"உன் பேரு என்ன மேன்?"

"ஐயா மாடசாமிங்க"

"அப்ப ஏன் காணின்னு பொய் சொன்னே?"

"ஐயா! எங்க இனத்தோட பேரு தான் காணிங்க!"

"என்ன சொன்னாலும் சரி நீங்க அனுமதி இல்லாம பொருட்களை விற்க வந்திருக்கீங்க. அதனால ஜெயிலுக்குப் போகணும். "

கோபம் வந்தது மாடசாமிக்கு.

"யோவ் துரை நாங்க எந்தத் தப்பும் செய்யல்ல. அப்படி இருக்கும் போது எதுக்கு எங்களை சிறையில தள்ளுவேன்னு சொல்ற? அதைச் சொல்ல நீ யாரு? நாங்க எங்க நாட்டுல இருக்குற ராஜாவுக்கே கட்டுப்பவங்க இல்ல. மலையரசர்கள் நாங்க. எங்களை சிறைப்பிடிப்பியா நீ?"

"நீ ஒரு விபசாரி மகன் அதான் இப்படிப் பேசுற" என்றான் துரை. அதைக் கேட்டதும் ஆத்திரம் தாங்காமல் துரையை அறைந்து விட்டான் மாடசாமி. கூட்டமே விக்கித்து நின்றது. கண் இமைக்கும் நேரத்தில் துப்பாக்கியை எடுத்து கொஞ்சம் கூட யோசிக்காமல் மாடசாமியை சுட்டு விட்டான் அந்த வெள்ளைகாரத்துரை. என்ன நடந்தது என்று அறிந்து கொள்ளும் முன்பே மாடசாமி நெஞ்சைப் பிடித்துக்கொண்டு கீழே விழுந்தான். அவனைச் சுற்றிலும் ரத்த வெள்ளம்.

மாடசாமிக்கு எ த விதமான மருத்துவ உதவியும் செய்யக் கூடாது, மீறி செய்தவர்களுக்கு இதே தண்டனை தான் என உத்தரவிட்டு விட்டுப் மாடசாமியைக் காலால் உதைத்து விட்டுப் போய் விட்டான் தாமஸ் துரை. சுற்றிலும் இருந்தவர்ள் கையறு நிலையில் தவித்தனர். காப்பாற்ற ஆளில்லாமல் உடலில் உள்ள உதிரம் முழுவதும் வெளியேறி இறந்து போனான் மாடசாமி. அவனது கண்கள் திறந்தபடியே இருந்தன. வெளிறிக்கிடந்த அவனது உடலைத் தூக்கிக் கொண்டு கெண்ணீரோடு மலையேறினர் காணிகள்.
 
#8
ennala nice update lam solla mudiyala sis... romba kastama iruku... oru kalathu namma makkal nijamave ipdilam kasta patrukangala...:cry::cry:..... kaaningalukku nadakkarathu thana namma kattuvasi makkal palaruku nadandhu, avanga alinju ponanga... evalo periya throgam illaya...:cautious:
 

Srija Venkatesh

SM Exclusive
Author
SM Exclusive Author
#9
ennala nice update lam solla mudiyala sis... romba kastama iruku... oru kalathu namma makkal nijamave ipdilam kasta patrukangala...:cry::cry:..... kaaningalukku nadakkarathu thana namma kattuvasi makkal palaruku nadandhu, avanga alinju ponanga... evalo periya throgam illaya...:cautious:
ஆமாம்! முதல் முதலில் ஆங்கிலேய ஆட்சி வந்த போது நமது காடுகளையும் காட்டு விலங்குகளையும் அதில் வாழ்ந்து வந்த பல அப்பாவிப் பழங்குடியினரையும் இப்படித்தான் அவர்கள் அழித்தார்கள். இந்தியவெங்கும் நடந்த இந்த கொடுமையின் ஒரு பகுதி தான் இது.
 

Latest Episodes

Sponsored Links

Top