Minnal vizhiye -7(b)

Iniya

Author
Author
#1
தன் அண்ணனிடம் இருந்து எந்த பதிலும் இல்லாததால் தளர்ந்து போயிருந்த வினு, கடைசி நொடியில் அகில் அழைத்து, கோடிங்கை முடித்துவிட்டேன் என்று கூறவும், சந்தோஷத்தில் அவனுக்கு ஆயிரம் நன்றிகளை கூறினாள்.

அதன்பின் நேரமாகுவதை உணர்ந்து, வேகமாக கிளம்பி தன் ஸ்கூட்டியில் வந்தவள்... அவசரத்தில் கார்ப் பார்க்கிங்கில் ஸ்கூட்டியை விட்டுவிட்டு திரும்ப, அங்கு கம்பெனியின் முதல் தளத்தில் கண்ணாடி தடுப்பு சுவர் அமைப்பதற்க்காக வாங்கி வைத்திருந்த பெரிய கண்ணாடியில் சிக்கி அவளின் மேல் சட்டை லேசாக கிழிந்தது... தன் தலையில் அடித்துக் கொண்டவள் அப்படியே கிளம்ப எத்தனிக்க... அவ்வாறு செய்தால் திருவை தினமும் இதே போல் அருகில் இருந்து சந்திக்க முடியாது என்பதாலேயே போனி டெய்லாக போட்டிருந்த தன் முடியை பிரித்துவிட்டு எதை பற்றியும் யோசிக்காமல் மீட்டிங் ஹாலுக்குள் நுழைந்துவிட்டாள்..

ஹாலின் உள்ளே நுழையவும் அவளுக்கு எதிர்புறம் தான் அனைவரும் அமர்ந்திருந்ததால் அவளுக்கு அது சாதகமாக தோன்றினாலும்., அங்கு அத்தனை பேரையும் பார்த்த பின்னர் தான் அவளுக்கு தான் இப்படி வந்திருக்க கூடாதோ என்று தோன்றியது. எவ்வளவு பெரிய முட்டாள்த்தனம் செய்திருக்கிறோம் என புத்திக்கு உரைத்தது. அதன் பின் பதட்டத்துடனே தன் உரையை துவங்கினாள்.

தனது ஆர்வக்கோளாறை எண்ணி வினு நொந்துக் கொண்டிருக்க, விக்கியுடன் பேசிக்கொண்டிருந்த நவினும் வெளியேறிவிட்டான். அவன் வெளியேறவும் அந்த ஹாலில் திருவும், வினுவும், விக்கியும் மட்டுமே இருந்தனர்... வினுவை மறைத்தவாறு திரு நிற்ப்பதை பார்த்த விக்கி,

“ஹேய் வினு !!! சூப்பரா பிரசென்ட் பண்ணின... மச்சானைப் பாரு அதிர்ச்சியில் ஷாக் ஆகிட்டார்... நான் சொன்னேனே மச்சான்... எங்க வினு எப்பவுமே ஓடி ஒளிய மாட்டா” வினுவை பற்றி பெருமையாக கூறியவன், வினு இன்னும் அவன் பின்னால் நிற்ப்பதை பார்த்து....

“வினு அங்க என்னப் பண்ற?? இங்க வா” என்றான்..

என்ன செய்வது எனப் புரியாமல் நின்றவள், விக்கி தன்னை வித்தியாசமாக பார்ப்பதை உணர்ந்து பாரமாக இருந்த கால்களை நகர்த்தி திருவை தாண்டி முன்னேறினாள்...

‘இவள் என்ன பைத்தியமா” என கோபமாக பார்த்த திரு, அவள் தன் முன்னே வரவும் சட்டென்று பின்னிருந்து அவள் இடையோடு கைக் கொடுத்து அணைத்துக் கொண்டான்... விக்கியும் வினுவும் திருவின் செயலில் அதிர.... வினு தலையை குனிந்துக் கொள்ள அவளுக்கு புரிந்து போனது.. திரு கவனித்துவிட்டான் என்று..

“நீ என்ன லூசா டி.... அரைவேக்காடு” அவளின் காதருகில் அர்ச்சித்தவன் விக்கியை நோக்க... பே என்று இருவரையும் பார்த்துக் கொண்டிருந்தவனை பார்க்க எரிச்சல் பெருகியது...

“விக்கி கெட் அவுட்” சத்தம் அதிகம் இல்லாவிட்டாலும் அழுத்தமாக திரு கூற.,.

“என்னது கெட் அவுட்டா??? வா வினு நாம போகலாம்...” திருவின் அணைப்பில் இருப்பவளை அழைத்தான் விக்கி.

அதில் திருவிற்கு கோபம் வர, .” ஐ ஸே கெட் அவுட் விக்கி...” மேலும் அழுத்தம் கூட்டி விக்கியிடம் கட்டளையிட்டான்.

வினுவையும் திருவையும் மாற்றி மாற்றி பார்த்தவன், “இல்ல... என் அக்காவை விடுங்க... எதுவா இருந்தாலும் என் முன்னாடியே பேசுங்க பர்ஸ்ட் அவளை விடுங்க...” என்னத்தான் வினு திருவை காதலித்தாலும் இருவருக்குள்ளும் சுமூகமான நிலை இல்லாத போது இவ்வாறு திருவின் அனைப்பில் வினுவை விட்டுச் செல்ல விக்கிக்கு விருப்பம் இல்லை...

“நீங்க அக்கா தம்பியாவே இருங்க... உன் அக்காவ நான் எதுவும் செய்ய மாட்டேன்... வெளியே போ விக்கி... உன் அக்காவோட...” அவளின் துணி கிழிந்திருக்கிறது என எப்படிச் சொல்வது எனத் தெரியாமல் திரு பாதியில் நிறுத்திவிட....

“விக்கி நீ வெளிய வெயிட் பண்ணு நான் வரேன்....” அவ்வளவு நேரம் அமைதியாக இருந்தவள் அவசரமாக விக்கியிடம் சொல்ல... விக்கி திரும்பி திரும்பி பார்த்தவாறே சென்றான்..

என்னத்தான் தன் உடன்பிறந்த சகோதரனிடம் தான் ஒருவன் முன்பு ஆடை கிழிந்த நிலையில் நின்றிருப்பதை அவளால் கூற முடியவில்லை.. ஒரு வேளை திரு மட்டும் இவ்விடத்தில் இல்லாவிட்டால் நிச்சயம் தன் தம்பியிடம் கூறியிருப்பாள் ஆனால் திருவின் முன்பே கூற அவளின் பெண் மனம் ஒப்பவில்லை. அதோடு அதை புரிந்துக் கொண்டு திரு கூறாமல் இருந்தது அவன் மேல் இருந்த காதலை அதிகப்படுத்தியது.

விக்கி சென்றதும் வினுவின் கையை பிடித்து தர தரவென அழைத்து போன திரு., மீட்டிங் ரூமிலிருந்து தன் கேபினுக்கு செல்லும் கதவை திறந்து தன் கேபினுக்குள் அவளோடு நுழைந்தான். அவளை அங்கேயே விட்டவன், தான் எப்போதாவது மீட்டிங் நேரங்களில் ஆபிஸிலையே தங்குவதால், தனக்காக எப்போதும் மற்றொரு செட் துணி வைத்திருப்பான். அதிலிருந்து சட்டையை மட்டும் எடுத்தவன் அவள் கைகளில் திணித்தான்.

“மாத்திக்கோ...” என்றவன் அவளிடம் தன் அறையில் இருந்த வாஷ்ரூமை காட்டிவிட்டு திரும்பி நின்றுக் கொள்ள, அவனையும் சட்டையையும் பார்த்தவள் குடு குடுவென வாஷ் ரூமிற்குள் நுழைந்து, தன் சட்டையை மாற்றினாள்.

அவனது சட்டையை அணிந்தவள், அதில் அவன் வாசம் வருவது போல் இருக்க, சட்டைக் காலரை இழுத்து முகர்ந்துப் பார்த்தாள். அப்படியே சிறிது நேரம் நின்றவள் வெளியே திரு காத்திருப்பதால் அவசரமாக சட்டையை மாற்றிக் கொண்டு வெளியே வந்தாள். அவனது சட்டை அவளுக்கு தொள தொனவென்று இருக்க, தன் ஸ்கேர்ட்டிற்குள் டக் இன் செய்து கொண்டாள். ஆனாலும் லூசாகத்தான் இருந்தது.

வெளியே வந்தவள் அவனை தேட... யாரிடமோ போனில் பேசிக் கொண்டிருந்தான்...அவள் வருவதை பார்த்தவன் போனை வைத்துவிட்டு திரும்பி அத்தனை நேரம் அடக்கி வைத்திருந்த கோபத்தை காட்டினான்...

“அறிவில்லையா டி உனக்கு??? லூசா நீ... இப்படி தான் டிரெஸ் கிழிஞ்ச அப்புறம் கூட மீட்டிங்க்கு வருவியா??? அந்த அளவுக்கு இந்த மீட்டிங் என்ன முக்கியமா??? எல்லார் முன்னாடியும் இப்படி வந்து நிற்கிற??, யாராச்சும் பார்த்திருந்த… எவ்வளவு பெரிய அசிங்கம்???” அப்படி ஒரு சூழ்நிலையில் அவளை நினைத்துக் கூட பார்க்க முடியாமல் அவன் சீற.,

“ஆமா முக்கியம் தான்...” அவன் கண்களை நேராக பார்த்து அவள் கூறியதில் திட்டிக் கொண்டு இருந்தவன் திகைப்புடன் அவளை பார்க்க., வினுவோ அதைக் கண்டுக் கொள்ளாமல்., “இந்த மீட்டிங் அட்டென்ட் பண்ணினா மட்டும் தான்., இங்க உன்கூட இருக்க முடியும்.. அதனால தான் எதை பத்தியும் யோசிக்காம வந்தேன்... அந்த நேரம் இதெல்லாம் பெருசா தெரியலை.. உன்னை விட்டுடக் கூடாதுன்னு மட்டும் தான் தோணுச்சு. கண்டிப்பா கடவுள் என்ன கைவிட்டுட மாட்டார்னு எனக்குத் தெரியும்....” அவனின் கோபத்திற்கு நிகராக அவளும் கோபப்பட, திரு விழித்தான்.

அவள் ஆமா என்றதிலையே அதிர்ந்தவன் அடுத்து கூறியதில் முற்றிலுமாக உறைந்திருந்தான்...

‘யார் இவள்???? ஏன் தன்னை துரத்துகிறாள்???’, அவளைக் காணும் போதெல்லாம் தனக்குள் எழும் கேள்வியின் கணம் தாளாமல்., எதுவும் கூறாமல் அங்கிருந்து நகர்ந்தான்....

“மிஸ்டர் அரசு... மூணு நாள் வேலை பார்த்ததுல நான் ரொம்ப டையர்ட்... எனக்கு லீவ் வேணும்.... கிளம்பவா???” அவனின் முதுகின் பின் நின்று வினு கத்த...

அவளை திரும்பி கூட பாராமல், “போய் தொலை” என்றவன் தன் கேபினை விட்டு வெளியேறினான்... அவன் செல்வதையே காதலோடு பார்த்திருந்தாள் அவள்....

தன் கேபினை விட்டு வெளியே வந்தவன்., மீட்டிங் ஹால் முன்பு விக்கி நிற்ப்பதை பார்க்க.... மெலிதாக சிரிப்பு எட்டிப் பார்த்தது.....

‘சரியான ரெட்டவாலுங்க’ அவர்களை நினைத்து முனுமுனுத்தவன் விக்கியை கடந்து செல்ல... விக்கியோ, ‘இவர் என்ன இங்க இருந்து போறாரு அப்போ வினு எங்க???’ அவசரமாக தான் நின்றிருந்த மீட்டிங் ஹாலின் கதவை திறந்து உள்ளே எட்டிப் பார்த்தவன்., அங்கு யாரும் இல்லை என்றதும் வினு எங்கே என கண்களால் தேடினான்.

மீட்டிங் ஹாலின் உள்ளே தலையை விட்டிருந்தவனின் முதுகில் வினு ஓங்கி ஒரு அடி வைக்க, அதில் பதறியடித்துக் கொண்டு திரும்பி பார்த்தான் விக்கி. முதுகை தேய்த்துவிட்டவன்.,

“பிசாசே எதுக்கு டி அடிச்ச??? இங்க தானே டி போன.. இப்போ மேஜிக் ஷோ மாதிரி வெளியே இருந்து வர்ற??, குழப்பமாக கேட்டவன் அவளது உடை மாறுதலில்., “யாரோட ஷர்ட் டி இது?? நீ வரும் போது வேற போட்டிருந்தியே??,” முகத்தில் குழப்ப ரேகையோடு விக்கி பார்க்க.,

“அதெல்லாம் போற வழியில சொல்றேன். வா கிளம்பலாம்.... இப்போ நமக்கு உன் ஹிட்லர் லீவ் குடுத்துட்டாரு....” என்றவள் சுற்றும் முற்றும் பார்க்க, அனைவரும் சாப்பிட சென்றிருந்ததால் அந்த தளம் வெறிச்சோடி இருந்தது. யாரும் பார்க்கும் முன் விக்கியை இழுத்துச் சென்றவள் செல்லும் வழியில் அனைத்தையும் கூற, திருவை போல விக்கியும் அவளை கடிந்துக் கொண்டான் அதோடு திருவின் மேல் விக்கிக்கு மதிப்பும் கூடியது.
 

Sponsored Links

Top