Mounam Sammatham Episode 2

Thendral

Author
Author
SM Exclusive Author
#1
அத்தியாயம் இரண்டு

சத்யம் திரையரங்க வளாகத்தினுள் நுழையும் போதே மணி ஆறாகி ஐந்து நிமிடங்களை கடந்திருந்தது. ராயப்பேட்டையின் வாகன நெரிசல்களை மீறி திருவிக சாலையில் அமைந்திருக்கும் அந்த திரையரங்கத்தில் தான் அந்த விழா ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

மக்கள் குரலுக்கு வந்த அழைப்பின் பேரில் போட்டோக்ராபர் ஹாசனை அழைத்துக்கொண்டு வந்திருந்தாள். இருவருமே அவரவர் வாகனத்தில்!

ப்ரெஸ் என்று ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட தனது ஆக்டிவாவை பார்த்தவுடன் அந்த வாகன நெறியாளர், நிறுத்த வேண்டிய இடத்தை காட்ட, அந்த இடத்தை நோக்கி போனாள்.

ப்ரெஸ் என்ற ஸ்டிக்கர் எப்போதுமே அந்த மாயாஜாலத்தை செய்துவிடும் இது போன்ற விழாக்களில். தனியொரு மரியாதை!

கவின்மலர் எப்போதுமே இதுபோன்ற சினிமா விழாக்களுக்கு வந்ததில்லை. அவளுக்கு அது பிடித்தமும் இல்லை. அவளது ஆர்வமும் அதுவல்ல!

அவளுக்கு பிடித்ததெல்லாம் அரசியல் மற்றும் சமூகம்!

பெண்கள் அரசியல் பற்றி எழுத முடியுமா என்ற கேள்விக்குறியை ஆச்சரியக்குறியாக்கியவள் அவள்! வெகு தீர்க்கமாக, தெளிவாக, அரசியல் நிலைப்பாடுகளை துல்லியமாக அவள் செய்யும் விமர்சனம் வெகுவாக வாசகர்களால் பாராட்டப்பட்டு வந்திருக்கிறது.

அப்படிபட்டவளுக்கு இந்த சினிமா விழாவென்பது அவ்வளவு பிடித்தமில்லாவிட்டாலும் வேறு வழியில்லாமல் தனது அடுத்த கட்டுரைக்காகவென சமாதானம் சொல்லிக்கொண்டு வந்திருந்தாள்.

சித்திரை வெயில் மண்டையை பிளந்தது. அனல் காற்று வேறு!

திரையரங்க வளாகத்தினுள் வாகனம் நிறுத்துமிடம் வேறு மொட்டையாக, கொஞ்சமேனும் நிழல் கிடைக்குமா என்று தேடுமளவு இருந்தது.

முக்கால் கை சல்வாரை அணிந்து வந்தது நல்லதாக போய்விட்டது என்று நினைத்துக்கொண்டாள். அனலில் சற்று வியர்த்தாலும் இந்த வெயிலுக்கு இதுதான் சரி. இல்லையெனில் இந்த சித்திரை வெயிலில் ஹாஸ்டல் சென்று சேர்வதற்குள் சிக்கன் ப்ரை ஆகி விட வேண்டியிருக்குமே!

சென்னையில் வெளியே செல்வதற்கு பெண்கள் எத்தனை ஆயத்தங்களை செய்ய வேண்டியிருக்கிறது? முகத்துக்கு முகமூடியை கொள்ளைகாரர்களை போல கட்டிக்கொண்டு, கண்களுக்கு கருப்பு கண்ணாடியை போட்டுக்கொண்டு, கைகளுக்கு கவசத்தை மாட்டிக்கொண்டு கால்களுக்கு சாக்ஸ் போட்டு அந்த இடத்தையும் மறைத்துக் கொண்டு, ஷப்பா மொத்தமாக தங்களை மம்மியாக்கி கொள்வது போல வெளியே கிளம்பி, இந்த வெயிலில் வதங்கி விடாமல் தங்களை பாதுகாத்துக்கொள்ள நிறைய திறமை தேவைப்படுகிறது.

எங்கோ சென்னையை பற்றி ஒரு வடக்கத்தியன் எழுதியது கவினுக்கு நினைவுக்கு வந்தது. சென்னையின் மூன்று விதமான கிளைமேட் என்று. ஒன்று ஹாட்(வெப்பம்), அடுத்தது ஹாட்டர் (மிகவும் வெப்பம்), அடுத்தது ஹாட்டஸ்ட்(மிக மிக வெப்பம்) என்று!

இருக்கட்டுமே!

ஆனாலும் கவினுக்கு பிடித்தது இந்த சென்னை தான்!

சென்னை அவளது உணர்வோடு ஒன்றி விட்ட ஒரு இடம். இங்கு வாழ்க்கையை உயிர்ப்போடு வாழ நிறைய விஷயமிருக்கிறது. சென்னை என்பது இருபது மாடி அப்பார்ட்மென்ட்களை கொண்ட மாநகரம் அல்ல!

சென்னையின் உயிர் இருப்பதும் அங்கல்ல!

சென்னையின் உண்மையான வாரிசுகள் வசிப்பது வடசென்னையில் தான்.

அதுவே வேர்!

அதுவே சென்னையின் உண்மையான முகவரி!

அது ஒரு தனி உலகம்!

உழைப்பாளிகளின் உலகம்!

கறுப்பர்கள் என்றும், மதராஸிகள் என்றும், வடக்கத்தியர்கள் கிண்டல் செய்யும் கறுப்பர்களின் மண். கறுப்பன் என்றால் யார் குறைவாக கூற முடியும்? இது எமது ஆதி நிறம்! எமது சொந்த நிறம்! எமது மண்ணின் உண்மையான நிறம்! எமது திராவிட நிறம்! அது பெருமையன்றோ!

ஏன் என்று கேட்க ஒட்டுமொத்த ஜனமும் வரும் ஒரு நல்ல உலகமது! அண்டை வீட்டுக்காரன் உயிரோடு இருக்கிறானா இல்லையா என்பதை கூட அறியாத தென் சென்னை வாசிகளுடன் ஒப்பிடும் போது கட்டுபாடுகளுக்கு அப்பாற்பட்டு ஒற்றுமையாக சுதந்திரமாக வாழும் வடசென்னை என்பது நிறைய நேரங்களில் கவினுக்கு சொர்க்கமாகத்தான் தோன்றியிருக்கிறது.

தினம் பத்து ரூபாயை வைத்துக்கொண்டு குடும்பம் நடத்துபவர்களும், ஒரு வேளை உணவுக்கு பத்தாயிரம் ருபாய் செலவு செய்பவர்களும் சேர்ந்து வாழுமிடம் இந்த வடசென்னை!

மக்கள் குரலின் ஊழியர்கள் பலர் வடசென்னை ஆட்கள் என்பதால் அவர்களுக்கு இயல்பாகவே அந்த பெருமை இருக்கும். வெளியிலிருந்து பார்ப்பவர்களுக்கு வடசென்னைவாசிகள் அழுக்கானவர்களாக, நாகரிகம் குறைந்தவர்களாக தோன்றலாம்.

ஆனால் சென்னையின் உயிர் இருப்பது வடசென்னையில் தான்.

மக்கள் குரல் அலுவலகமும் ப்ரெஸ்ஸும் இருப்பது வேப்பேரி. அதனால் இந்த வடசென்னை கவினுக்கு புகலிடமாகி நான்கு வருடங்களாகியிருந்தது. அலுவலகத்தின் அருகிலேயே ஹாஸ்டல் என்பதாலும், அவள் ஒய்வு நேரங்களில் சுற்றித் திரிவதும் அங்குதான்.

அவளுக்கு விடுமுறை நாட்களில்லை, பண்டிகைகள் இல்லை, எந்த விசேஷமும் இல்லை. காரணம் குடும்பம் என்ற ஒன்று அவளுக்கு இல்லை.

பிறந்தது எங்கேயோ? அது அவளறியாத ஒன்று! அதைப் பற்றி சிந்தித்தும் இல்லை!

வளர்ந்தது ராமகிருஷ்ணர் ஆசிரமத்தில்!

படித்தது எத்தனையோ பேரின் தயவில்! ஆஸ்ரமத்துக்கு வரும் நன்கொடைகள்! அரசாங்க உதவிப்பணம் என்று முடித்தாள். அவளுக்கு இஷ்டமான ஜர்னலிசம் படித்தாள். அதற்கு பின் இன்னொருவருக்கு வழி விட வேண்டும் என்று ஹாஸ்டலுக்கு புலம் பெயர்ந்து கொண்டாள்.

கவின்மலர் என்பது ஆசிரமத்தில் அய்யா வைத்த பெயர். அதோடு அவளது முதன்மையான ஸ்பான்சர் பெயரான ஸ்வப்னா ஸ்வரூப் என்ற வட இந்தியரின் பெயரை தன்னோடு இணைத்துக் கொண்டாள்.

என்றுமே தன்னுடைய வேரை மறந்துவிடக் கூடாதல்லவா!

கண்டித்து வளர்க்க தாயில்லை. அன்பூட்டி வளர்க்க தந்தையும் இல்லை. ஆனாலும் எப்போதும் ஒழுக்கத்தை பேணும் குணத்திலிருந்து தவறியதில்லை! இப்போதும் எத்தனையோ பிரச்சனைகள் பற்றி எழுதினாலும் குடும்பம் என்ற ஒன்று இல்லையென்பதால் பயமும் அறவே இல்லை.

எப்போதும் விழிப்பாகவே இருக்க வேண்டும் என்ற உணர்வு அவளது ரத்தத்தில் கலந்தது. அது ஒன்று மட்டுமே உண்டு!

முகத்தில் கட்டியிருந்த முகமூடியை கழட்டி ஆக்டிவாவின் பாஸ்கட்டில் வைத்தாள். திரையரங்கம் முழுக்க தோரணமும் மிகப்பெரிய கட்அவுட்களுமாக அல்லோலகல்லோல பட்டது.

இந்திரஜித்தின் இருபத்தி ஐந்தாவது திரைப்படத்தின் நூறாவது நாள் வெற்றிவிழா!

இந்திரஜித்!

முப்பது வயதை தொட்ட கம்பீரமான ஆணழகன்!

தமிழகத்தில் மட்டுமல்ல, தென்னிந்திய சினிமாவின் நம்பிக்கை நட்சத்திரம்!

இப்போது வடக்கிலும் கால்பதித்து வெற்றிக்கொடி நாட்டியிருப்பவன்!

ரசிகர்களுக்கு அவன் கடவுள்!

இளம் பெண்களுக்கு அவன் ரகசிய காதலன்!

குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான நாயகன்!

அத்தனை பேரையும் எப்படித்தான் இவன் இப்படி வசீகரித்து இருக்கிறானோ என்று அவளுக்கு தோன்றியது!

அவன் திரையில் தோன்றினாலே சூடம் காட்டி வணங்க கூட ஆயத்தமாக இருக்குமொரு கூட்டம். அவனது பேரை நெஞ்சில் பச்சை குத்திக் கொள்ளும் ஒரு கூட்டம். அவனுக்காக எதையும் தியாகம் செய்ய காத்திருக்கும் ஒரு கூட்டம் என்று எத்தனை கூட்டங்களை வசீகரித்து வைத்திருக்கிறான்!

ஆச்சரியம் தான் என்று எண்ணிக்கொண்டாள்!

இந்தரின் கட் அவுட்டை நிமிர்ந்து பார்த்தாள். அந்த கண்களில் தென்பட்ட கூர்மையோடு கூடிய அப்பாவித்தனம். அது மிகவும் ஸ்பெஷலாக தோன்றியது. இது எல்லோரிடமும் அமைந்து விடுவதில்லை.

ஆனால் அதில் சற்று உண்மையும் இருக்க வேண்டுமே என்று எண்ணிக்கொண்டாள். உண்மையில்லாத மனிதர்கள் விலங்குக்கு ஒப்பானவர்கள் இல்லையா?
 

Thendral

Author
Author
SM Exclusive Author
#2
இந்த ஷோ பிசினெஸில் உண்மையை எதிர்பார்ப்பது மடத்தனம் என்று அவளது மனம் சிரித்தது.

எப்படியோ... தனக்கு தேவை ஒரு இன்டர்வியு! அதை வைத்து அவனை தோலுரிக்க வேண்டும்! அவ்வளவே!

முடிவெடுத்துக்கொண்டு அவள் சத்யம் காம்ப்ளெக்சில் நுழைய, ஹாசன் அப்போதுதான் தனது வண்டியை பார்க் செய்துவிட்டு அவளை நோக்கி வந்தான்!

“உஷ்ஷ்! ஷப்பா! வெயில் மண்டையை பிளக்குது சோப்பு...” என்று கூறிக்கொண்டு தலையை சிலுப்பிக்கொண்டான்.

ஸ்வப்னா கவின்மலர் என்பதன் சுருக்கம் இவனுக்கு சோப்பு!

ஊரையெல்லாம் தான் கலாய்த்தால் இவன் தன்னை கலாய்ப்பதா என்று எண்ணிக்கொண்டு,

“அப்படியா ஹாசினி? வேண்ணா மண்டைக்கு மட்டும் ஏசி வெச்ச ஹெல்மெட் ட்ரை பண்ணேன் ஹ ஹ ஹாசினி...” என்று சிரிக்க,

“உனக்கிருக்க கொழுப்புக்கு உன் வாய்க்கு எவன் பூட்டு போட வரான்னு தெரியல சோப்பு... அப்ப இருக்கு உனக்கு ஆப்பு!”

“ஏன்டா? உனக்கும் சின்ன பாப்பாக்கும் இது ஒன்னு மட்டும் தான் குறியா? வர்றவனையே டார்கெட் பண்றீங்க?”

“உனக்கு நாங்க ஆப்பு வைக்க முடிய மாட்டேங்குதே சோப்பு! அந்த கடுப்புத் தான்!” மிகவும் சீரியசாக கூறுவது போலவே அவன் கூற, அவளால் சிரிப்பை அடக்க முடியவில்லை.

“டேய்! ஜூனியர் டிஆரே... அடங்கு...” என்று அவனது தலையை தட்டினாள், வாய் விட்டு சிரித்துக் கொண்டே! “ஒழுங்கா ஒரு படம் எடுக்க துப்பில்லாத உன்னையெல்லாம் நான் கூடவே வெச்சுட்டு திரியறேன் பாரு தம்பி... அந்த லொள்ளு தான்...” என்று அவள் மீண்டும் சிரிக்க,

“இங்க பாரு... உன்னை விட ஒரு வயசு கம்மிதான்... அதுக்காக என்னை நீ தம்பி தம்பின்னு கூப்பிட்டு இங்கயும் அசிங்கப்படுத்தாதே சோப்பு... சொல்லிட்டேன்...” என்று பின்னாலிருந்து அவளது பின் மண்டையில் தட்டியவனின் தலையில் எம்பி ஒரு கொட்டு வைத்தாள்.

“உஷ்... உஷ்...” என்று அவன் எச்சரிக்கைப்படுத்த ஹாசனை அவள் கவனிக்கவில்லை. என்னவென்பதை போல அவனது முகத்தை பார்த்து கேட்டு வைக்க,

“இந்தர்...” என்று அவன் கிசுகிசுப்பாக கூறிக்கொண்டிருக்கும் போதே, அவர்களை சமீபித்து இருந்தான் இந்தர்!

இந்தரஜித்!

அவளுக்கு பின்னாலிருந்து வந்ததால் அவன் வருவதை அறிய முடியவில்லை. அவர்கள் நின்றிருந்த வழி திரையரங்கின் மேடைக்கு செல்லும் வழி.

சட்டென்று தள்ளி நின்றுக் கொண்டாள் கவின்மலர்!

ஒரு வினாடி வழியில் நின்றிருந்த இருவரையும் கூர்மையாகப் பார்த்தவன், அடுத்த வினாடி அந்த இடத்தை கடந்திருந்தான்.

புயல் அந்த இடத்தை கடந்தது போல உணர்ந்தாள் கவின். என்னவென்று அவளுக்கு சொல்லத்தெரியவில்லை, ஆனால் அவனது அந்த தேஜஸ் அதாவது aura என்று ஆங்கிலத்தில் சொல்வார்களே, அது மிகவும் தனித்தன்மையோடு அவனை சுற்றி இருந்தது.

இந்த வசீகரம் தான் பெண்களை கவ்வி இழுக்கிறதோ?

இளம்பெண்களை விட்டில் பூச்சிகளாக இவனது வெப்ப ஜ்வாலையில் வீழ செய்கிறதோ?

வலையில் மாட்டிக்கொள்ள சொல்லுமளவு இவனது வசீகரம் ஆபத்தானதா?

இருக்கலாம்! எவர் கண்டார்?

இத்தனைக்கும் அவ்வளவு அதீத நிறம் இல்லை. திராவிட நிறம் தான். ஆனால் அவனது தனித்தன்மை அவனது அந்த கூர்மையான கண்கள்!

கவ்வி இழுக்கும் அந்த காந்த கண்கள்!

ஒரு நொடிதான் அவளை கண்ணோடு கண் பார்த்தான். ஆனால் எதற்குமே நடுங்காத அவள் அந்த பார்வையின் வீச்சு தாங்காமல் நடுங்கினாள். அந்த பார்வை, அவளை எக்ஸ்ரே மெஷினை போல உள் வரை சென்று ஆராய்ந்து பார்த்தது.

ஒரு நொடிப் பார்வை இத்தனை ஆபத்தானதா?

கடவுளே... இவன் ஆபத்தானவன்!

நேர்முக சந்திப்பிலும் அவனது கண்களை மட்டும் பார்த்து விடாதே கவின் என்று மனம் அவளை எச்சரித்தது.

அடையாள அட்டையை காட்டிவிட்டு, அழைப்பை காட்டி இடத்தை விசாரித்துக் கொண்டு மீடியாவுக்கான முன் வரிசையில் சென்று அமர்வதற்குள் அரங்கினுள் கூச்சல் அதிகமாகி கொண்டிருந்தது.

“இந்தர்...”

“இந்தர்...”

“இந்தர்...”

சுற்றிலும் பார்த்தாள் கவின். ரசிகர்களின் வெறித்தனமான கூச்சல்! அவன் மேடையேறுவதை பார்த்து அப்படியொரு ஆரவாரத்தோடு எழுந்து ஆடிக் கொண்டிருந்தார்கள். ஹாசனின் முகத்தில் பெரிய புன்னகை. அவனுக்குமே இந்தர் என்றால் இஷ்டம் என்பது கவின் அறிந்தது தான்.

சொல்லிக்கொடுத்தோ, அள்ளிக்கொடுத்தோ இந்த அளவு கூட்டத்தை சேர்க்க முடியுமா?

மேடையை பார்த்தாள் கவின்.

அந்த ஆரவாரத்துக்கும் தனக்கும் எந்தவித சம்பதமும் இல்லை என்பதை போல அமர்ந்திருந்தான் இந்தர். முகத்தில் மெல்லிய புன்னகை. ரசிகர்களின் அந்த அங்கீகாரத்தை ஏற்றுக் கொள்ளும் புன்னகை.

கவின் மலருக்கு இந்த கூச்சல் புதிது. அரசியல் கூட்டங்களுக்கு செய்தி சேகரிக்க சென்றிருக்கிறாள். தொண்டர் படையின் வாழ்க கோஷம் அவளுக்கொன்றும் புதிதில்லை. ஆனால் இந்த கோஷம் வித்தியாசமானது!

அவன் பின்னே நிற்கும் வெறித்தனமான ரசிகர் படையின் வெளிப்பாடு.

அதென்ன ஒரு திரைப்படம் நடிகனை கடவுளாக்கி விடுமா?

ரசிகனை இந்தளவு பித்தனாக்கி விடுமா?

அவனை உச்சாணிக் கொம்பில் அமர வைப்பதும் இல்லாமல் அந்த நடிகனுக்காக என்ன வேண்டுமானாலும் செய்ய வைக்குமா?

இந்த முட்டாள்தனத்திலிருந்து தமிழன் எப்போதுதான் மாறப்போகிறான்?

உள்ளுக்குள் மனம் வருந்தியது இந்த முட்டாள் தனத்தை நினைத்து.

வெற்றி பெற்ற படத்தின் இயக்குனர் பேச வந்தார்.

“அனைவருக்கும் வணக்கம்...” என்று ஆரம்பித்த போதே,

“இந்தர்...”

“இந்தர்...”

“இந்தர்...” கூச்சல் அதிகமாக, அவர் நெளிந்துக் கொண்டு இந்தரை பார்த்தார். அவன் சலனமில்லாமல் அமர்ந்திருந்தான் அதே சிறு புன்னகையோடு, இவையெல்லாம் எனக்கு சாதாரணம் என்பது போல. ரசிகர்களை கட்டுப்படுத்த அவன் எந்த முயற்சியும் செய்யபோவதில்லை என்பதை உணர்ந்த அந்த இயக்குனர், அந்த கூச்சலுக்கிடையே அனைவருக்கும் நன்றியை மட்டும் கூறிவிட்டு அமர்ந்தார். இதில் இந்தரின் பெயரை திரும்ப திரும்ப கூற வேண்டும் என்ற கூச்சல் வேறு.

அதில் அந்த இயக்குனருக்கு எந்த மறுப்பும் இல்லையென்பது வெளிப்படையாக தெரிந்தாலும், வலுக்கட்டாயமாக ஒரு செயலை செய்ய வைப்பதின் எரிச்சலை லேசாக அவரது முகத்தில் பார்க்க முடிந்தது.

அடுத்து பேச வந்த தயாரிப்பாளருக்கும் இதே நிலையே நீடித்தது.

அடுத்து வந்த சக நடிகர், நடிகைகள்!

முக்கியமாக நந்திதா!

அவனருகில் அமர்ந்திருந்த நந்திதா எழுந்த போதே அப்படி ஒரு ஆரவாரம்!

எக்கச்சக்க கிசுகிசுக்கள் இருவரையும் பற்றி வெளிவந்து இருந்ததால் அப்படி ஒரு ஆரவாரம்.

நந்திதா வெட்கப்புன்னகையோடு இந்தரை பார்த்தபடி பேசியவளுக்கும் அதே கூச்சல் தான்!

“இந்தர்...”

“இந்தர்...”

“இந்தர்...”

அனைவரையும் பேசவிட்டு கடைசியாக அவன் எழுந்தான்.

நடையில் நிதானத்தோடுக் கூடிய ஒரு வேகம். ஒவ்வொன்றையும் ஒரு கணக்கீட்டின் படியே அவன் செய்வதாக தோன்றியது அவளுக்கு. மைக்கை பிடித்தவன், கூட்டத்தை பார்த்து வசீகரமாக புன்னகைத்து,

“எனது உயிரினும் மேலான அன்பு உடன்பிறப்புக்களே...” என்று ஆரம்பிக்க, “இந்தர்...” என்ற அந்த கரகோஷம் விண்ணை பிளந்தது.

முகம் விகசிக்க புன்னகைத்தவனின் ஈர்ப்பு இன்னமும் பன்மடங்காகியது!

அது ஒரு விதமான புன்னகை!

அனைத்தையும் தன்னுள் ஈர்த்து கொள்ளும் கருந்துளைப் போன்ற புன்னகை!

பார்ப்பவரை அவனுக்குள் ஈர்த்து கொள்வான் போல!

அரங்கை பார்த்த கவின் மலருக்கு ஆச்சரியம் தாளவில்லை! தான் எழுதப்போகும் எழுத்துக்கள் இந்த கூட்டத்தினரை என்னவாக்கும் என்று அவளால் கணிக்க முடியவில்லை!

எப்படியும் இவர்கள் கண்மூடித்தனமானவர்கள்!

ஆட்டு மந்தைக் கூட்டம் போல என்று எண்ணிக்கொண்டாள்!

“இது ஆட்டு மந்தை கூட்டமல்ல... அன்பால் ஆளும் கூட்டம்...” என்று இந்தர் ஆரம்பிக்க, திடுக்கிட்டு நிமிர்ந்து அவனைப் பார்த்தாள். தான் நினைத்ததை அப்படியே அவன் கூறுவதை பார்த்தபோது ஆச்சரியம் தாள முடியவில்லை. அதற்கு பதிலாக அவன் கூறியது பெரும் வியப்பைக் கொடுத்தது.

அவனது அந்த சொற்கள் மந்திரம் போலத்தான் வேலை பார்த்தது. அவனது குரலில் கட்டுண்டு ஆரவாரித்தது ரசிகர் படை.

அவனது ஒவ்வொரு சொல்லையும் கொண்டாடியது அந்த படை.

“நன்றி உடன்பிறப்புக்களே...” என்று சொல்லி அவன் முடித்தபோது கரகோஷத்தில் உண்மையில் அரங்கம் அதிர்ந்தது.

விழா முடிந்தவுடன் நிருபர்கள் அவனை எப்படியும் பிடித்துவிட வேண்டும் என்று பறக்க, தன்னுடைய உதவியாளரை அழைத்து காதில் ஏதோ கூறியவன், ரசிகர்களிடம் கை காட்டிவிட்டு அவசரமாக அந்த இடத்திலிருந்து அகன்றான்.

போவதற்கு முன் அதே பார்வை!

ஆளை சுழட்டி தன்னுள் தன்னோடு ஐக்கியப்படுத்தும் பார்வை!

பார்வையின் வீச்சை தாளவியலாமல், அவள் தனது பார்வையை தளைத்துக் கொள்ள வேண்டியிருந்தது... தன்னையும் அறியாமல்.

அவர்களை நோக்கி வந்தார் அந்த உதவியாளர்.

“ஹலோ... ஐ ஆம் ஸ்ரீநாத்... சரோட பிஏ...” என்று அறிமுகப்படுத்திக்கொள்ள...

“ஹலோ... நான் ஹாசன்... இவங்க ஸ்வப்னா கவின்மலர்...”

“நீங்க மக்கள் குரல்ல இருந்து தானே வந்து இருக்கீங்க...” என்று அவர் மீண்டும் உறுதிப்படுத்திக்கொள்ள,

“ஆமா சர்... இந்தர் சர் கிட்ட ஒரு இன்டர்வியு கேட்டிருந்தோம்...” என்று மீண்டும் காரணத்தை கூறினான் ஹாசன்.

“ம்ம்... சர் சொன்னார்... உங்களை வீட்டுக்கு வர சொன்னார்... இங்க இந்த க்ரவுட்ல முடியாதுன்னு சொன்னார்...” என்று சற்று வருத்தம் தெரிவிக்கவும்,

“சியூர் சர்... அவரோட நீலாங்கரை பங்களாவா? இல்லைன்னா ஆழ்வார்பேட்டை பங்களாவா?” ஹாசன் கேட்க,

“ஆழ்வார்பேட்டைக்கு சர்... ஈவினிங்... ஆறு மணி...” என்று சற்று தயங்கியவர், கவின்மலரை பார்த்தார். “நீங்க தான் பேட்டி எடுக்க போறீங்களாம்மா?” என்று கேட்க,

“ஆமாங்க...”

“சரிம்மா...” என்று கூறியவர், சற்று குரலை தழைத்துக் கொண்டு “ஜாக்கிரதை...” என்று கீழ் குரலில் கூற, அவளுக்கு தூக்கி வாரிப் போட்டது.

“ஏன் சர்...” என்று ஹாசன் அவசரமாக கேட்டான், கவினை ஜாடையாக பார்த்து விட்டு.

“இல்லம்மா... தப்பால்லாம் இல்ல... சர் இதுவரைக்கும் இந்த மாதிரி தனிப்பட்ட பேட்டிக்கு ஒத்துகிட்டது இல்ல. மக்கள் குரல்ல இருந்து கேக்கவும் தான் ஒத்துக்கிட்டார். எதுவும் தப்பா கேட்டுடாதீங்க... ரொம்ப கோபம் வந்துடும்...” என்று கூறியவர், “குறிப்பா நந்திதா அம்மாவை பற்றி...” என்று கூறவும், உள்ளுக்குள் சிரித்துக் கொண்டாள் கவின்.

“ஓகே சர்...” என்று இருவருமே ஒப்புக்கொள்ள, மாலை ஆறு மணிக்காக காத்திருந்தனர் இருவருமே!

 
#8
sirappana pathivu sis(y)(y)(y)vada chennai pathina narration nice. kavinmalar indara mattavaikanumnu avanitam aval matikuvala:unsure::unsure::unsure:indarin manmannerism as hero so nice...... waiting eagerly for their meeting:):):)
 

Sponsored

Latest Episodes

Advertisements

New threads

Top