You must have JavaScript enabled in order to use this order form. Please enable JavaScript and then reload this page in order to continue.


Mounam sammatham Story thread

#1
அத்தியாயம் 1

சென்னையின் மிகவும் முக்கியமான இடமது.

பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தது.

நிற்காமல் ஓடிக்கொண்டிருந்த மெஷினரிகள் அந்த இடத்தை ஆக்கிரமித்துக் கொண்டு இருந்தன. பேப்பர் ரீம் சுழன்று உள்ளே சென்று, அச்சாகி பின் அளவாக வெட்டப்பட்டு பத்திரிக்கையின் பக்கங்கள் வெளிவந்துக்கொண்டு இருந்தன.

மக்கள் குரல் பத்திரிக்கையின் அலுவலகம்.

அலுவலகத்தோடு அருகிலேயே பிரஸ் இருப்பதால் எப்போதும் அந்த சப்தம் குறைவதே இல்லை. கவின் மலருக்கு அந்த சப்தம் மிகவும் பிடிக்கும். அது ஏதோ இளையராஜாவின் இன்னிசை போல அவளது காதில் விழுந்து வைக்கும்.

நமக்கு அந்தப்பக்கம் போனால் அந்த சப்தம் என்னவோ நாராசமாக கேட்பது தான் உண்மை. சில நேரங்களில் வசுந்தராவுக்கு தலைவலி கூட வந்துவிடும். ஆனால் கவின் மலரோ அந்த சப்தத்தை அவ்வளவு ரசிப்பாள்.

“இதென்னடி இப்படி ரசிச்சுண்டு கேட்டுட்டு இருக்க? காதே குடையுது...” வசு காதை பொத்திக்கொண்டு கத்த, தடக் தடக் என்ற சப்தத்தை ரசித்து பழகிய கவின் மலருக்கு வசுவை பார்க்கும் போது ஆச்சரியமாக இருக்கும்.

“வசு... இது நமக்கு அன்னமிடற தொழில். தொழிலை வெறும் தொழிலா பார்க்காம அதை ரசிக்கணும். ஆராதிக்கணும்... அதுக்கு நேர்மையா இருக்கணும். மொத்ததுல அது நமக்கு குழந்தைடி. நாம எப்படி அதை கொண்டாடி வெச்சுக்கறோமோ அது மாதிரி தான் அதுவும் நம்ம கொண்டாடும்...”

நீண்ட விளக்கம் கொடுத்தவளை, வசு ஏலியனை பார்ப்பது போல பார்த்து வைத்தாள்.

“நீயெல்லாம் மியுசியம் டிக்கட்டு கவி... என்னை ஆளை விடு...” என்ற வசுந்தரா தப்பித்து போக நினைக்க,

“வசு... உன்னோட ரைட் அப் முடிஞ்சுதா? மெட்டிரியல் இன்னும் எனக்கு வந்து சேரலியே?”

கடமை உணர்வு தவறாமல் கவின் கேட்டு வைக்க, வசு பல்லை கடித்துக் கொண்டாள்.

“இதெல்லாம் மட்டும் நல்லா கேட்டுடு கவி. நாளைக்கு ஒரு நாள் லீவ் வேணும்னு நானும் கழுதை மாதிரி கத்திண்டே இருக்கேன்... அதை கண்டுக்கிட்டயா நீ?”

முகத்தில் பரவிய வெப்பத்தோடு அவள் கேட்டு வைக்க, கவின் சிரித்துக்கொண்டாள்.

“ஏன் வசு, கழுதை வந்து என் காதுல கத்தினா அதோட லாங்குவேஜ் எனக்கு புரியுமா? காழ் காழ் ன்னு ஏதோ கத்திட்டு இருக்குன்னு விட்டுட மாட்டனா?”

“ம்ம்ம்... ஜோக்கு... சிரிப்பே வரலையாக்கும்...” என்றவள் தன்னுடைய வாயை ஆவென்று காட்ட,

“ஐயோ... இப்படியெல்லாம் பயமுறுத்தாதே...” என்று வேண்டுமென்றே பயப்படுவது போல நடித்தவள், “சரி அந்த கழுதை மேட்டரை இன்னொரு முறை தான் சொல்லேன்...” என்று வழிக்கு வர, முறைத்துக் கொண்டிருந்த வசு ஆர்வமாக அவள் முன்னே வந்தமர்ந்தாள்.

“அதாவது உஆ...” என்று ஆரம்பிக்க,

“ஏய் ஏன்டி கொலை பண்ற? சொல்றதுதான் சொல்லித் தொலைக்கற, முழுசா சொல்லக்கூடாதா?” என்று கடுப்படிக்க,

“சரி உதவி ஆசிரியரே...” என்று சிரிக்க, அதை கேட்டு தலையில் தட்டிக்கொண்டு யோசித்த கவின் மலர்,

“ம்ம்ம்... போறலியே...” என்று யோசிக்க,

“ம்ம்ம்... சொல்லித்தொலைக்கறேன்... மக்கள் குரலின் உதவி ஆசிரியரே...” என்று ஆரம்பிக்க,

“இதுவும் போறலை...” என்று குறும்பாக சிரித்தாள் கவின்.

“ஏய்... வேணாண்டி...”

“என்ன டி யா? ஓகே ரிஜக்ட் பண்ணிட வேண்டியதுதான்...” மலையேறிய கவின் மலரின் கையைப் பிடித்துக்கொண்டாள் வசுந்தரா.

“சரி சரி... மக்கள் குரலின் உதவியாசிரியர் மாண்புமிகு கவின் மலர் அவர்களே...” என்றழைத்த வசுவை பார்த்து சிரித்தாள்.

“இன்னும் கொஞ்சம் கூட ஆட் பண்ணலாம்...” என்று சாதாரணமாகக் கூறியவளை கொலை வெறியோடு பார்த்தாள்.

“என்ன ஆட் பண்றது மேடம்? அதையும் நீங்களே சொல்லிடுங்க...” கடுகடுவென முகத்தை வைத்துக்கொண்டு வசுந்தரா கேட்க,

“ம்ம்ம்... தானைத்தலைவி, பொன்மன செம்மல், அழகு சுந்தரி, அதிரூப முந்திரி... இப்படி ஏதாவது அடைமொழி கொடுத்து சொல்லேன் வசு...” என்று சிரிக்காமல் கூற,

“ஏய்.. என்னடி நீ இம்சை அரசி இருபத்தி ஒன்பதாம் புலிகேசியா இருக்க?” வசுவால் சிரிப்பை அடக்க முடியவில்லை.

“வசு... பின்னாடி வர்றவங்க எல்லாம் பார்த்து தெரிஞ்சுக்கணும் இல்லையா?” என்று கூற, வசு தன் பின்னால் பார்த்தாள். விஷமமாக!

“ஹலோ... உனக்கு பின்னாடி வர்ற ஜூனியர்சை சொன்னேன். அதுக்காக உன்னோட பேக்கை பார்க்காத! அது ஆல்ரெடி...” என்று ஆரம்பிக்க வசு அவசரமாக கையெடுத்து வணங்கினாள்.

“போதும்டி என்னை இதுக்கு மேலயும் டேமேஜ் பண்ண முடியாது... போதும் விட்டுடு...”

“அட சின்ன பாப்பா...” என்று ஆரம்பித்தவளை கண்களில் கொலை வெறியோடு பார்த்தாள் வசு.

“இந்த பேரை வெச்சு கூப்பிடாதே சொப்பன சுந்தரி...” ஸ்வப்னா கவின்மலர் என்ற அழகான பெயரை கடுப்பில் சொப்பன சுந்தரியாக்கி இருந்தாள் வசு.

“என்ன சின்ன பாப்பா நீ? வரலாறு முக்கியம் சின்ன பாப்பா...” என்று அவளை விடாமல் கலாய்த்தவளை ஏதாவது வைத்து மொத்தும் வெறியில் இருந்தாள் வசுந்தரா.

“அடியே... நீ லீவுக்கு ரெக்கமன்ட் பண்ணவும் வேண்டாம்... நான் லீவ் எடுக்கவும் வேண்டாம்... போதும்டி...” என்று அவளைத்தாண்டி போக,

“அட இரு சின்னப்பாப்பா... இதுக்கெல்லாம் கோச்சுட்டா என்னவாறது? பாரேன்... உன்னோட டொமேட்டோ கன்னம் அப்படியே மின்றது...” என்று ஐஸ் வைக்க, தன்னையும் அறியாமல் அவளது கன்னத்தை தடவிப் பார்த்தாள் வசு.

“அந்த டொமேட்டோ மேட்டர் ஓகே டி... ஆனா...” என்று அவள் கூறிக்கொண்டிருக்கும் போதே,

“ஆனா என்ன சின்னப்பாப்பா? இந்த சின்னபாப்பா மேட்டர் தானே சின்னபாப்பா?” என்று அதற்கும் கலாய்க்க, அவளது கழுத்தை நெரிக்க வந்தாள் வசு.

எதற்குமே அசைந்துக் கொடுக்காத வசு கடுப்பாவது என்றால் இந்த சின்னபாப்பா என்ற வார்த்தைக்குத்தான். சற்று பூசிய உடல்வாகில் இருப்பவளை வேண்டுமென்றே கலாய்ப்பது தான் ஸ்வப்னா கவின்மலரின் வேலை. அதற்கு வசு அவளை சொப்பன சுந்தரி என்று கிண்டல் செய்தாலும் அதையெல்லாம் கவின் துடைத்து போட்டுவிட்டு போகும் ரகமானதால் அவளை என்ன சொல்லி நாக் அவுட் செய்வது என்று ரொம்பவே யோசித்து மெனக்கெட்டு, ஒன்றும் புலப்படாமல் தான் வசு காண்டாவது!

“உனக்கு வாய் இருக்கே வாய்... அது செங்கல் காளவாய்... கொஞ்சமாச்சும் அடங்கறதா பார்...” என்று கடுப்படிக்க,

“அது எதுக்குடி அடங்கணும்? அதுபாட்டுக்கு சுதந்திரமா திரியட்டுமே...” என்று சிரிக்காமல் கூற,

“உன்னோட இந்த வாயை அடக்க ஒருத்தன் வராமையா போய்ட போறான்? அப்ப இருக்குடி உனக்கு...”

“அவன் வரும் போது வரட்டும்... இப்ப உன் மேட்டருக்கு வாம்மா ராசாத்தி...”

“எங்கடி வர விட்ட? விடாம கழுவி ஊத்தி ஒருத்தரை எப்படி ஆப் பண்றதுன்னு உன்ட்ட தான்டி கத்துக்கணும்...” உதட்டை சுளித்துக்கொண்டு கூற,

“சரி... சரி... நாளைக்கு நீ பையன் பார்க்க போற! அதுக்காக லீவ் கேக்கற... சரியா?” இதழோரம் துடித்த புன்னகையை அடக்கிக்கொண்டு கவின் கேட்க,

“அட இதுவும் நல்லாத்தானே இருக்கு. அதென்ன அவன் பொண்ணு பார்க்க வர்றது? நான் தான் பையன் பார்க்க போறேன்...” என்று அவள் சிரித்துக்கொள்ள,

“ரைட்... அந்த பையனுக்கு ஆடத்தெரியுமா, பாடத்தெரியுமான்னெல்லாம் கேட்டுக்கடி... அப்புறம் சமைக்க தெரியுமான்னு முக்கியமா கேட்டுக்க...” ஐடியா மணியாக ஐடியாக்களை வாரி வழங்கினாள் கவின்.
 
#2
“எப்படியும் எங்காத்துல என்னை சாணில முக்கி அடி வாங்கி வைக்கறதுன்னு முடிவு பண்ணிட்ட போல இருக்கு...”

“ஆத்துலையோ குளத்துலையோ... ஏதோ ஒன்னு வாங்கேன் வசு!”

“விட்டா நீயே செய்வடி ராசாத்தி... ஆளை விடு... எனக்காக நாளைக்கு ஒரு நாள் லீவ் வாங்கித்தா தங்கம்...”

“ஏன் நீயே டாபர்மேன் கிட்ட கேட்டுக்கயேன்...” என்று புன்னகைக்க,

“என்னை மாட்டி விட பாக்கற பார்த்தியா? அது வள்ளுன்னு விழுந்தா நான் அலறி அடிச்சுட்டு ஓடிடுவேன்டி...” சோகமாக முகத்தை வைத்துக் கொண்டு அவள் கூற,

“ஏன் என்னை மட்டும் அது வள்ளுன்னு விழுந்து பிராண்டி வைக்காதா? எவ்வளவு நல்ல எண்ணம் உனக்கு...”

“உன் மேல அதுக்கு ரொம்ப மதிப்பும் மரியாதையும் ஜாஸ்தி கவி...” என்றவள், சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு, “அதுவுமில்லாம...” என்று இழுக்க, கவின் சுவாரசியமாக குனிந்துக் கொண்டு கேட்டாள்.

“அதுவுமில்லாம?”

“உனக்கு கொஞ்சம் இந்த சூடு சொரனை எல்லாம் கம்மிடி... எவ்வளவு அடிச்சாலும் தாங்குவன்னு இந்த மக்கள் குரல் ஆபீஸ் முழுக்க தெரியுமே...” என்று ரகசியம் போலக் கூற, இப்போது காண்டாவது கவினின் முறையானது.

“அடியே...” என்று அருந்ததி பாணியில் குரல் கொடுத்தவளை, கிண்டல் பார்வையோடு வசு பார்க்க, அடுத்த நொடி அடக்க முடியாமல் சிரித்தாள் கவின்.

“பாரேன்... இப்பவே நீ ப்ரூவ் பண்ற... சூடு சொரணை எல்லாம் இல்லன்னு...”

“எக்சாக்ட்லி... யூ வார் ரைட்... அதெல்லாம் கிலோ எம்புட்டு விலை?”

கீழ்பார்வையாக ஒரு பார்வை பார்த்துக்கொண்டு, கவின் கேட்க, வசுவுக்கும் சிரிப்பு தொற்றிக்கொண்டது.

“ஏன்டி உனக்கு கொஞ்சம் கூட கோபம் வராதா? அதுவும் ஒரு ஜர்னலிஸ்ட்டா இருந்துட்டு எப்படி இப்படி இருக்க?” சற்று வியப்பாக அவள் கேட்க, அமர்ந்திருந்த சேரில் இருந்து மேஜை மேல் ஏறி அமர்ந்து கொண்டாள்.

“செல்லாவிடத்து சினம் தீது மகளே...” என்று புன்னகையோடு கூறியவள், “ஜர்னலிஸ்ட்டா இருந்தா? பாக்கெட்ல கோபத்தை வெச்சுட்டே திரியனுமா என்ன? எங்க கோபப்படனுமோ அங்க தான் கோபப்படனும்! தேவையில்லாத இடத்துல உன்னோட கோபத்தை வேஸ்ட் பண்ணக்கூடாது. கோபம் கூட பணம் மாதிரி தான் வசு. நாம அதை செலவு பண்ற விதத்துல தான் அதோட மதிப்பு இருக்கு...”

மிகவும் தெளிவாகக் கூறியவளை ஆச்சரியமாகப் பார்த்தாள் வசுந்தரா.

மொத்த ஆச்சரியங்களின் கலவை தானே இந்த கவின்மலர்!

எப்போதுமே அவள் மேல் மிகுந்த மதிப்புண்டு வசுவுக்கு!

சராசரியை விட அதிகமான உயரம். அதற்கேற்ற உடல்வாகு. ஒல்லி என்றும் இல்லாமல் பருமனென்றும் இல்லாமல் அளவான உடல். சந்தனத்தையும் ரோஜாவையும் கலந்து பிசைந்து செய்துவைத்தது போன்ற நிறம். கூர்மையான நேர்மையான ஆனால் சிரிக்கின்ற உயிர்ப்பான கண்கள்.

மொத்தத்தில் மாமல்லனின் செதுக்கி வைத்த சிற்பம் அவள்!

ஆனால் அவள் தோற்றத்தை வைத்தோ பேசுவதை வைத்தோ அவளை யாருமே மதிப்பிட முடியாது.

அவளுடைய எழுத்து வீச்சு அத்தகையது.

மக்கள் குரல் ஓங்கி ஒலிப்பதன் காரணங்களுள் ஒன்று இவளது எழுத்தும் கூட!

ஆசிரியர் வாஞ்சிநாதனின் வலது கை!

வசுவின் டாபர்மேன் என்ற அழைப்புக்கான அருஞ்சொற்பொருள் வாஞ்சிநாதனே!

அவள் கிண்டலாகக் கூறினாலும் வாஞ்சிநாதனுக்கு கவின் மலரின் மேல் மதிப்பு அதிகம் தான். திறமைகளை ஊக்குவிப்பது அவரது இயல்பு.

தவறுகளை தட்டிக் கேட்க வேண்டும் என்ற தணியாத ஆர்வத்தோடு ஜர்னலிசம் முடித்துவிட்டு பயிற்சிக்காக வந்த கவின் மலரை அவருக்கு மிகவும் பிடித்து விட்டது. அவளது திறமைகளை கண்டுக்கொண்டவர் வேலைகளை பழகுவதற்கு நிறைய வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுத்தார்.

கற்பூர புத்தி கொண்ட கவின் பட்டென்று பற்றிக் கொண்டு விட, சிறிது சிறிதாக உயர்ந்து, தற்போது மக்கள் குரலின் உதவி ஆசிரியராக பணிபுரிகிறாள்.

கவினுக்கு அடுத்து மக்கள் குரலில் வேலைக்கு சேர்ந்தவள் வசுந்தரா. எண்ணமும் செயலும் ஒன்றாகியபடியால் உயிர்தோழிகளாகி விட்டவர்கள்.

வசு சினிமா செய்திகள் பகுதியில் பணியாற்றி வருகிறாள்.

“உன்னை ஏன் டாபர்மேனுக்கு அவ்வளவு பிடிக்குதுன்னு புரியுது...” என்று புன்னகையோடு வசு கூற, இல்லாத காலரை ஏற்றிவிட்டுக்கொண்டாள் கவின்.

“ஹா... அது...”

“பின்ன... இவ்வளவு தெளிவா யாருமே குழப்ப மாட்டாங்க ராசாத்தி... இப்படி குழப்பி குழப்பித்தான் அந்த ஆசாமி கிட்ட மீன் புடிச்சுட்டு இருக்கன்னு சொல்லு...” என்று கிண்டலாகக் கூற, கவினின் புன்னகை பெரிதாகியது.

“வாவ்... எக்சாக்ட்லி சின்னப்பாப்பா...” என்று கண்ணடித்தாள்.

“ஜோக்ஸ் அப்பார்ட் கவின்... நாளைக்கு ஒரு நாள் மேனேஜ் பண்ணிக்க... இன்னைக்கு நான் தர வேண்டிய ரைட்அப்பை இன்னும் ஒன் அவர்ல உனக்கு மெயில் பண்ணிடறேன்... நீ பார்த்துட்டு ப்ரூப் ரீடிங் அனுப்பிடு...”

“சியூர் வசு... அப்புறம் எந்த சுவாரசியமான நியுஸுமே இல்லையா? இந்த வீக் செம ட்ரையா இருக்கு...” என்று வசுவின் வாயை கிளறினாள் கவின்.

இருவருக்கும் இதுவொரு பொழுதுபோக்கு. சற்று நேர இளைப்பாறுதல்!

கழுத்தை நெரிக்கும் வேலை சமயங்களில் தங்களை தாங்களே ஆற்றிக்கொள்வதற்காக ஊர் கதை உலக கதை என்று பேசிக்கொள்வார்கள். அதில் சினிமா ஆட்கள் பற்றிய செய்தியும் அடக்கம்.

“ஏன் இல்லாம...” என்று கண்ணடித்தவள், “அஞ்செழுத்து நடிகையோட மூனேழுத்து நடிகர் பாங்காக்ல செம ஆட்டம் போட்டாராம்... அது தெரியுமா?” சுவாரசியமாக கேட்க,

“அஞ்செழுத்துன்னா... ம்ம்ம்... ஏய் அவங்களாடி?” கண்டுபிடித்ததை அதிர்ந்து போய் கேட்க,

“ம்ம்ம்... ஆமா ஆமா... ஆனா அந்த மூனேழுத்து நடிகருக்கு கல்யாணமாகி ரெண்டு குழந்தையும் இருக்கு...”

“அட ஆமாம்... அப்புறமும் ஏன்டி அந்தாளுக்கு இப்படி ஒரு புத்தி?”

“ஐம்பதிலும் ஆசை வரும்...” என்று வசு பாட, கவின் வாய் விட்டு சிரித்தாள்.

“அப்புறம் உன் ஆள் என்ன பண்றார்? அவரைப் பற்றி எதுவும் ஸ்கூப் இல்லையா?” வேண்டுமென்றே வசுவை அவள் வம்பிழுக்க, வசுவின் முகமோ விழுந்துவிட்டது.

“அவருக்கு என்ன? கோயிங் ஸ்டெடி வித் நந்திதா... ரெண்டு பேரும் சீக்கிரமே கல்யாணம் செய்துக்க போறாங்களாம்!” என்று அவள் பெருமூச்சு விட,

“ஏய் அதுல உனக்கென்ன வந்தது? மனுஷன் கல்யாணம் பண்ணிக்க நினைக்கறது ஒரு குத்தமாய்யா?” கவின் நியாயத்தை கேட்க,

“தப்பே இல்ல... ஆனா அது என்னோட இந்தரஜித்தா இருக்கறதுதான் குத்தம் ராசாத்தி... இந்த பிஞ்சு மனசு பிஞ்சே போச்சுடி...” என்று நெஞ்சை பிடித்துக்கொள்ள, கவின் மலரால் சிரிப்பை அடக்க முடியவில்லை.

வசுவின் செய்தியும் அதற்கு அவள் காட்டிய ரியாக்ஷனும்!

வாய்விட்டு சிரித்தாள்!

“உனக்கு சிரிப்பா இருக்கு... என்னோட பீலிங்க்ஸ் யாருக்கு புரியுது?” என்று அவள் அலுத்துக் கொள்ள,

“ஏய் எனக்கு புரியுது சின்னப்பாப்பா... அதுக்காக என்ன பண்ணலாம்ங்கற?” கள்ளப்புன்னகையோடு அவள் கேட்க,

“இந்தர் மனசுல எனக்கு ஒரு மூலைல இடம் கொடுத்தா போறும் சொப்பன சுந்தரி... நானென்ன நாலு கிரவுண்ட் இடமா கேக்கறேன்? ஒரு பத்துக்கு பத்து சைஸ் போதுமே...” என்று மூக்கால் அழுதவளை பார்க்கும் போது, இவள் உண்மையாகத்தான் சொல்கிறாளா இல்லை எப்போதும் போல விளையாடுகிராளா என்று கேட்க தோன்றியது!

“அடிப்பாவி... விட்டா அவர் மனசை ரியல் எஸ்டேட்காரங்க மாதிரி பிளாட் போட்டு வித்துடுவ போல இருக்கே...”

“சொல்லுவியே... அப்படி மட்டும் ஒரு சான்ஸ் கிடைச்சா நானெதுக்கு விக்க போறேன்? அத்தனையும் எனக்கே...”

“இது பேராசை சின்னப்பாப்பா...”

“இருக்கட்டுமே சொப்பன சுந்தரி...”

“ஏய் அவன் செக்கன்ட் ஹேன்ட் பீஸ் சின்னப்பாப்பா... ஆல்ரெடி எங்கேஜ்ட் வித் நந்திதா...”

“இருக்கட்டுமே... ஒரு ஓரத்துல நான் இருந்தா கூட போறுமே... எத்தனையாவது ஹேன்ட்டா இருந்தா என்ன?”

மூக்கை சிந்தியவளை பார்க்கும் போது அவளால் சிரிப்பை கட்டுப்படுத்தவே முடியவில்லை.

“ஏய் போதுண்டி... விட்டா அந்தாளை இப்பவே முழுங்கிடுவ போல இருக்கே... நாளைக்கு வர்றவனுக்கும் கொஞ்சம் மிச்சம் வை...” விளையாட்டாக கூற,

“அட பிசாசே... இது வேற டிப்பார்ட்மென்ட் அது வேற டிப்பார்ட்மென்ட்...”
 
#3
“டிப்பார்ட்மென்ட் டிப்பார்ட்மென்ட்டா பிரிச்சு ஜொள்ளு விடறதுக்கு உன்கிட்ட தான்டி கத்துக்கணும்...” என்று கூறிக்கொண்டிருக்கும் போதே, இன்டர்காம் அழைத்தது.

“டாபர்மேன் காலிங்...” சிரித்துக்கொண்டே வசு கூற,

“உஷ்... பாவம்டி பவர் பாண்டி... தெரிஞ்சா மனசு சங்கடப்படுவார்...” என்று மிகவும் சீரியசாக கூறுவது போல கூறிவிட்டு ஒன்றுமறியாத பிள்ளையாக இண்டர்காம் ரிசீவரை எடுத்தாள்.

அவள் கூறுவது போல பவர் பாண்டிக்கு வயது அறுபத்தி ஒன்று. வசு இறுக்கமாக வாயை கைகளால் மூடிக்கொண்டாள். அவளால் சிரிப்பை கட்டுப்படுத்த முடியவில்லை.

ஆனால் இருவர் மட்டும் கிண்டலடித்துக் கொள்வார்களே தவிர, வாஞ்சிநாதன் மேல் அத்தனை மரியாதை இருவருக்கும்.

மக்கள் குரலின் தூணும் துரும்பும் அவர் தான் என்று அதையும் விளையாட்டாக கூறுவாள் கவின்.

****

அறைக்குள் நுழையும் போதே ஏஸியோடு சேர்ந்து சிட்ரான் ரூம் ஸ்ப்ரேயின் மணம் மூளையை தட்டி எழுப்பியது.

ஆழ்ந்து மூச்சை இழுத்துவிட்டுக் கொண்டாள் கவின்.

அவளுக்கு மிகவும் பிடித்த மணமது!

லேவண்டர் தான் ரொமாண்டிக்கான மணம் என்பது வசுவின் எண்ணம். ஆனால் அவளுக்கென்னவோ லேவண்டரை விடவும் வாஞ்சிநாதன் தனது அறையில் உபயோகிக்கும் சிட்ரான் மிகவும் பிடித்திருந்தது.

“நீ இன்னும் வளரனும் ராசாத்தி... உனக்கும் ரொமாண்டிக் பீலிங்க்ஸுக்கும் வெகு தூரம்...” என்று அதற்கும் கிண்டலடிப்பாள் வசு!

சுற்றிலும் புத்தகங்களும், பேப்பர்களும் அடுக்கப்பட்டிருக்க, நடுவில் அமர்ந்திருந்தார். முகத்தில் தேஜஸ். கண்களில் தீட்சண்யம்! தங்க பிரேமிட்ட கண்ணாடி. ஒற்றை நாடி தேகம். இவரா அத்தனை அரசியல்வாதிகளுக்கும் அதிகார வர்க்கத்துக்கும் சிம்ம சொப்பனமாக இருக்கிறார் என்ற கேள்வி கண்டிப்பாக தோன்றும்.

ஆனால் எத்தகைய மிரட்டல்கள் வந்தாலும் நேர்மையாக தான் கொடுக்க வேண்டிய செய்திகளை கொடுத்தே தீருவேன் என்பதிலிருந்து சற்றும் வழுவாதவர்!

“வாங்க மேடம்... நாளைக்கு உங்க ப்ரென்ட் பையன் பார்க்க போறாங்க போல இருக்கே?”

முதல் பாலிலேயே சிக்சர் அடித்தவரை சிறிது ஜெர்க்காகி பார்த்தாள் கவின் மலர். இவரென்ன நேரில் அத்தனையும் கேட்டது போல கேட்கிறாரே!

“சார்... அது...” என்று தயங்க,

அடக்கி வைத்த சிரிப்பை அவிழ்த்துவிட்டார் வாஞ்சிநாதன்!

“அடடா... எஸ்கே முகத்துல முதல் முறையா டென்ஷனை பார்க்கறேனே...” என்று புன்னகைத்தார்.

ஷப்பா என்று மூச்சை விட்டாள் கவின்.

எஸ்கே பக்கம் என்பது அவள் எழுதும் பக்கம். அதில் அத்தனையும் இருக்கும். வம்பு தும்பு என்று ஒன்றையும் விட்டதில்லை. பகைக்காத ஆள் என்று ஒருவரும் இல்லை. அரசியல் முதல் அத்தனையும் எழுதுவாள். சமுதாய சீர்கேட்டை தட்டிக்கேட்பாள். தவறு செய்பவர்களை கையும் களவுமாக எஸ்கே பக்கத்தில் கழுவில் ஏற்றுவாள்.

ஆனால் எஸ்கே என்பது அவள் தான் என்பது வெளியுலகம் அறியாதது. ஆனால் அந்த பெயர் நிகழ்த்தும் மாயம் எக்கச்சக்கம்!

தைரியலட்சுமி தான் என்றாலும் அவளுக்கான பாதுகாப்பிற்காக வாஞ்சிநாதன் அவளைப்பற்றி வெளியே செய்தி கசிய விடுவதில்லை.

“சார்... ஜஸ்ட் விளையாட்டா பேசிட்டு இருந்தோம்...” சற்று தயங்கி அவள் கூற,

“இட்ஸ் ஓகே எஸ்கே...” என்று அவர் கூறிவிட்டு, “அடுத்த எடிஷனுக்கு உன்னோட ரைட் அப் ரெடியா?”

“ரெடி சார்... ஆனா இந்த முறை கொஞ்சம் வேற விஷயத்தை தொடலாம்ன்னு நினைக்கறேன்...” என்று இடைவெளி விட,

“அவுட்லைன் சொல்லும்மா...” என்று அதற்கு தயாராக சாய்ந்துக் கொண்டார்.

“சினிமா ஆசையால கெட்டு போற பெண்கள்... அவர்களை உபயோகித்துக் கொண்டு ஏமாற்றும் ஆண்கள்... இதுதான் அவுட்லைன் சார்...”

கூறிவிட்டு அவரது முகத்தை ஆர்வமாக பார்த்தாள். கண்களை மூடிக்கொண்டு சிந்தித்தார்.

“இது பழசு தானே எஸ்கே... உன்னோட டச் இதுல வருமா?” சரியாக நாடி பிடித்து பார்ப்பது போல அவர் கேட்க,

“பழசு தான் சார்... ஆனா நாம இந்த டாபிக்ல முழுசா டீல் பண்ண போற ஆள் புதுசு...” என்று புதிர்போட்டாள்.

“யாரை சொல்றம்மா?”

“ம்ம்ம்... இந்த்ரஜித்...” என்று தீர்க்கமாக அவள் கூற, வாஞ்சிநாதன் அதிர்ந்தார்!

“இந்தரா?”

“எஸ்...”

“ஆதாரம் இருக்காம்மா? பெரிய ஆள்ன்னு எல்லாம் நான் பயப்படலை... ஆதாரம் இல்லாம நாம பேசிடக் கூடாது... அவரோட ரசிகர் படை நம்மளை சும்மா விடாது...”

“கண்டிப்பா சார்... ஆதாரம் இல்லாம நான் எந்தவொரு விஷயத்தையும் எழுத மாட்டேன்...”

“அரசியல் சப்போர்ட், ரசிகர்கள் பக்கபலம்ன்னு இருக்க ஆள்... பி கேர்புல்...” என்றுக் கூறியவர், என்ன நினைத்தாரோ...

“வசுந்தரா, அவர்கிட்ட பேட்டி எடுக்க டேட்ஸ் கேட்டிருந்தாங்க... அந்த பேட்டியை எடுக்க நீயேன் போயேன்மா...” என்று இடைவெளி விட்டவர்,

“உனக்கு இன்னொரு டைமென்ஷன் கிடைக்கும்...” என்று கூற, சற்று யோசித்த கவின்,

“ஓகே சார்... டன்...”
 
#4
Hi mam

நாயகி பத்திரிக்கை துறையில் வேலை செய்பவரா, அப்போ துணிவுள்ள பெண்,நாயகன் சினிமாத்துறையா,அப்போ கிசு கிசுக்கு பஞ்சமில்லாத்துறை,முதலில் மோதல் பின்பு காதலா ?.

நன்றி
 

Sponsored

Latest Episodes

Advertisements

Top