PRIYANGALUDAN MUGILAN 01

#74
View attachment 257

ப்ரியங்களுடன்.... முகிலன் 01

உதகமண்டலத்தின் அடர்ந்த காட்டுப்பகுதி அது.. சுற்றிலும் மரங்கள் அடர்ந்திருந்த அந்த வீட்டின் படுக்கை அறையில் கஷ்டப்பட்டு கண்விழித்தாள் அவள். கண்ணாடி மூடிக்கிடந்த ஜன்னல்களையும் தாண்டி குளிர் ஊசிப்போட்டது. எழுந்து அமர்ந்து கைகள் இரண்டையும் தேய்த்துவிட்டுக்கொண்டாள்.

அறை முழுவதும் இருள் சூழ்ந்து கிடந்தது.எப்படி உறங்கிப்போனோம் என்று புரியாதவளாக சுற்றும் முற்றும் பார்த்தாள். நெற்றியை தேய்த்துவிட்டுக்கொண்டாள் ஏதோ நினைவுக்கு வந்தவளாக அவசரமாக எழுந்தவள் ஜன்னலருகே சென்று அந்த கனமான திரை சீலைகளை விலக்கினாள்.

அறைக்குள் மெல்ல வெளிச்ச கீற்றுகள் பரவ அவள் முகத்திலும் மகிழ்ச்சி பரவ ஜன்னலின் வழியே பார்த்தாள். அங்கே தெரிந்தது அந்த கார்.
‘அவன் கார்தானே அது? ஆம் அவன் கார்தான் அது. சொல்லிக்கொண்டாள் அவள். வந்துவிட்டானா? என்னை காப்பாற்ற என்னவன் வந்துவிட்டானா?’ அவள் இதழ்களில் சந்தோஷ புன்னகை.


அந்த சந்தோஷம் அதிக நேரம் நிலைக்காத வகையில் உள்ளுணர்வு தந்த அதிர்ச்சியில் விதிர்த்து போய் திரும்பினாள். குரோதமும், வெறியும் நிறைந்த பார்வையுடனும், இதழ்களில் கள்ளச்சிரிப்புடனும் அவளுக்கு மிக நெருக்கமாக நின்றிருந்தான் அவன்.

‘என்னடி? அவன் வந்துட்டான்னு சந்தோஷமா இருக்கா? மலர்ந்து சிரித்தபடியே குனிந்து அவள் கண்களுக்குள் பார்த்தான் ‘என் மூஞ்சியிலே எங்கேயாவது இளிச்சவாயன்னு எழுதி இருக்கா என்ன?

உடலெங்கும் பூகம்பம்கள் கிளம்ப பயந்து விலகினாள் அவள்

‘நீங்க அவனை ரகசியமா வரச்சொல்லுவீங்களாம். நாங்க அப்படியே ஏமாந்து உங்களை அவனோட அனுப்பி வெச்சிடுவோமாம். நல்லாருக்குடி கதை’ ஈட்டி முனை பார்வையால் அவளை கிழித்தான்

‘ப்ளீஸ்.. ப்ளீஸ்.. வேண்டாம்..’ அவள் பின் வாங்கினாள்.

‘என்ன வேண்டாம்? ம்? அவன் வந்தான். அடிச்சு கார்லே கட்டி வெச்சிருக்கேன். இப்போ அந்த சரிவிலே காரோட உருண்டு போகப்போறான் பார்க்கிறியா? உனக்கு தெரியாம அவனை தள்ளி விட்டுட்டா அதிலே என்ன சுவாரஸ்யம். நீ இங்கிருந்து பார்ப்பியாம். நான் அவனை தள்ளி விடுவேனாம் சரியா? குட் கேர்ள்’

‘வேண்டாம் ப்ளீஸ்.. அவரை விட்டுடு..’ அவள் கத்திக்கொண்டே இருக்க கதவை வெளியே பூட்டிக்கொண்டு நடந்தான். உயிர் நடுங்க அவசரமாக ஓடிச்சென்று அந்த கண்ணாடி ஜன்னலின் வழியே பார்க்க துவங்கினாள் அவள்.

அங்கு நின்றிருந்த காரின் அருகில் வந்தான் அவன். ஒரு முறை திரும்பி அந்த வீட்டின் ஜன்னல் பக்கமாக பார்த்துவிட்டு

‘இன்னையோட நீ ஒழிஞ்சேடா வருண்..’ என சொல்லிவிட்டு அந்த காருக்கு முட்டுக்கொடுத்து வைக்கப்பட்டிருக்கும் பாறையை எத்தி விட வேண்டும் அவன்.

ஏனோ அந்த வார்த்தைகளை உச்சரிக்க தோன்றவில்லை அவனுக்கு. காரணம் அந்த பெயரா? வருண் என்ற அந்த பெயரா?

‘அதெல்லாம் ஏதுமில்லை. அவன் தனக்குதானே சொல்லிக்கொண்டாலும்’ அந்த வார்த்தைகளை சொல்ல மனம் வரவில்லைதான்.
எதுவுமே சொல்லாமல் கண்களில் வெறியை தேக்கி வைத்துக்கொண்டு ஒரு முறை திரும்பி அந்த வீட்டை பார்த்துவிட்டு முழு வேகத்துடன் அந்த பாறையை எத்திவிட்டான் அவன். கார் உருண்டு சரிந்து விழுந்தது அந்த மலைச்சரிவில்.


‘கட். ஷாட் ஒகே.’ ஒலித்தது இயக்குனரின் குரல்.!

சில நிமிடங்கள் கடந்திருக்க இயக்குனர் பேசிக்கொண்டிருந்தார் இணை இயக்குனரிடம். இயக்குனர் வெங்கட்ராமன். வயதில் சற்றே மூத்தவர். திரை உலகில் அவருக்கு சற்று மரியாதை அதிகம்.

‘நான் சொன்னேன் பார்த்தியா? வருண் அப்படிங்கிற பேர்லே எப்படி ஒரு பவர். அவன் முகத்திலே எப்படி ஒரு வெறி. ஷாட் ஒரே டேக்லே ஒகே. இதுக்காகத்தான் அவன் பேரை வருண்னு மாத்த சொன்னேன்.’

‘ஒரு நாள் பார் அந்த வருணை கார்லே வெச்சு இவன் நிஜமாவே தள்ளி விடப்போறான்’ அவர் சொல்ல அங்கே சிரிப்பொலி பரவ

‘ஆஹாங்?’ நெருப்பில் ஊறிய தொனியுடன் ஒலித்த அந்த குரலில் அரண்டு போய் திரும்பினர் இருவரும்.

பேன்ட் பேக்கட்டினுள் கையை நுழைத்தபடி அங்கே நின்றிருந்தான் அவன். விழிகள் கனலை உமிழ்ந்துக்கொண்டிருக்க ரௌத்திர ஸ்வரூபியாய் நின்றிருந்தான் அவன்.

அவன்தான் சற்றுமுன் காமெராவின் முன்னால் நடித்துக்கொண்டிருந்தவன்.
நெடு நெடு உயரம். ஆறடிக்கும் சற்றே மேலே. நேர்த்தியான மீசை. எதற்கும் அஞ்சாத, யாருக்கும் அடங்காத ஒரு கம்பீர பார்வை. இதுவெல்லாம்தான் அவன். தமிழ் சினிமாவின் முன்னணி நடிகன். எப்போதுமே விழிகளில் தாண்டவமாடும் கோபமும் அவனது இன்னொரு அடையாளம்.


பெயருக்கு ஏற்றார் போல் மேகவண்ணன்தான் அவன்! அவனது உயரமே மற்றவர்களை அவனுக்கு அடங்கி போக வைக்கும். அதற்கு மேல் அவனது உழைப்பினால் சேர்ந்த செல்வமும் சமூக அந்தஸ்தும் அது தந்த மிடுக்கும் அவனது நடையிலேயே மிளிரும்.
முகிலன் அவனது பெயர்!


‘ஆஹாங்.... ‘என்றான் அவன் அவனது ‘ஆ....ஹாங்..’ எப்போதுமே பல நூறு கோபக்கனல்களை உள்ளடிக்கியதாகவே இருக்கும்.

ஸோ...? என்றபடி அவர்கள் இருவரின் அருகிலும் வந்து நின்று இயக்குனரை பார்வையால் குடைந்தான் .

‘சா....ர்’ அவர் என்ன பேசுவதென்று அறியாமல் திகைக்க

‘நான் இந்த படத்திலிருந்து .விலகிக்கறேன். எனக்கு நீங்க கொடுத்த அட்வான்ஸ் நாளைக்கே வந்து நீங்க திரும்ப வாங்கிக்கலாம். ரெண்டு நாள் ஷூட்டிங்தானே முடிஞ்சு இருக்கு. நீங்க வேறே ஹீரோ பார்த்துக்கோங்க.’ கோபத்தில் இறுகி வெளிவந்தது முகிலனின் குரல். ‘என்னை மீறி வேறே எவன் வந்து இந்த படத்திலே நடிக்கிறான்ன்னு நானும் பார்க்கிறேன்’

அதிர்ந்து போனார் இயக்குனர். ‘அது இல்லை சார். ஆன்டி ஹீரோ சப்ஜெக்ட். சீன் நல்லா வரணும். அதனாலே நான் ஏதோ சும்மா..’

‘சும்மா? சும்மா விளையாடி பார்கறீங்களா? யார்கிட்டே. முகிலன்கிட்டேயா?‘ விழிகள் இன்னமும் கோபத்தை வீசிக்கொண்டிருக்க தலையை இடம் வலமாக அசைத்தான் முகிலன். ‘எனக்கும் வருணுக்கும் நடுவிலே ஆயிரம் இருக்கும். தட்ஸ் நன் ஆஃப் யுவர் பிசினஸ். மிஸ்டர் டைரக்டர். நாம இதோட முடிச்சுக்கலாம்’ கர்ஜித்தான் முகிலன்.

‘சார்.. சார் ப்ளீஸ்..’ அவர் பேசிக்கொண்டே இருக்க

குரலின் உஷ்ணம் பன்மடங்காக உயர்ந்திருக்க ‘முடிச்சுக்கலாம்னு சொன்னேன் சார்..’ என்றான் முகிலன். அவன் குரல் எழுந்த தொனியில் பொங்கியது இயக்குனரின் கோபமும்.

அணிந்திதிருந்த மூக்குக்கண்ணாடியை கழற்றியபடியே ‘முகிலன்...’ என்றார் கடுமை படர்ந்த தொனியில் ‘தமிழ்நாட்டிலே நீங்க மட்டும்தான் ஹீரோன்னு நினைச்சீங்களா? என்ன சொன்னீங்க ‘என்னை மீறி வேறே எவன் வந்து இந்த படத்திலே நடிக்கிறான்ன்னு நானும் பார்க்கிறேன்ன்னா?’.

‘எனக்கு பணம் பெருசில்ல. சுயமரியாதை ரொம்ப முக்கியம். நான் அதே வருணை வெச்சு இந்த படத்தை முடிச்சு காட்டட்டுமா? அவர் நீங்க மறுத்துட்டீங்க தெரிஞ்சா உடனே ஒத்துக்குவார். அப்படி இந்த படத்தை நான் அவரை வெச்சு முடிச்சிட்டா நீங்க எல்லார் முன்னாடியும் என் காலிலே விழுந்து மன்னிப்பு கேட்பீங்களா?’

உடல் மொத்தமும் தீ பற்றிக்கொண்ட உணர்வு பரவ விழிகள் விரிய பார்த்தான் அவரை.

‘இதோ இங்கே நிக்கறாங்க இல்ல இவங்க எல்லாரும் இந்த சவாலுக்கு சாட்சி. என்ன சொல்றீங்க மிஸ்டர் முகிலன்?’

‘ஆஹாங்...’ சுற்றி நின்றவர்களின் மீது விழிகளை சுழற்றியபடியே உச்சரித்தான் முகிலன். சவாலா? சவாலா மிஸ்டர் வெங்கட்ராமன்? வெரி குட். எனக்கு சவால் ரொம்ப பிடிக்கும்’ என்றான் கொதிக்கும் தொனியில். ‘எத்தனை நாள் டைம்?’

‘ஆறு மாசம். மிஞ்சிப்போனா ஆறு மாசம்’ அதுக்குள்ளே நான் படத்தை முடிச்சிடுவேன்’ தனது பங்குக்கு வெடித்தார் வெங்கட்ராமன்.

‘ஆறு மாசத்திலே? அதுவும் வருணை வெச்சு? ம்?’ கேட்டவன் சில நொடிகள் மௌனமாய் நிற்க அவன் விரல்கள் ஏனோ தன்னிச்சையாக அங்கிருந்த காமெராவின் மீது தாளம் போட்டன. ‘அப்படி உங்களாலே முடிக்க முடியலேன்னா என்ன செய்யலாம்?’

தளரவில்லை இயக்குனர் ‘நான் முடிச்சிடுவேன் முகிலன்’ என்றார் அழுத்தமாக.

வாய்விட்டு சிரித்தவனின் சிரிப்பிலும் கோபமே வழிந்தது ‘உங்களாலே முடியாது சார்’ என்றான் இரும்பாக இறுகிய குரலில். ’இந்த முகிலனை நீங்க ஜெயிக்கவே முடியாது. அப்படி முடிக்க முடியலேன்னா நான் என்ன சொன்னாலும் நீங்க செய்யணும். அதுக்கு நீங்க தயாரா?

‘சரி. நீங்க என்ன சொன்னாலும் நான் கேட்கிறேன்’ தீர்மானமாக சொன்னார் அவர்.

‘நிச்சியமா அப்போ நீங்க அடியோட ஆடிப்போற அளவுக்கு நான் சொல்லி, சொல்லி அடிப்பேன். எந்த எல்லைக்கும் போவேன். தயாரா இருங்க மிஸ்டர் டைரக்டர்’ படு அழுத்தமாக சொல்லிவிட்டு

ஒரு முறை சுற்றி நின்றவர்களின் மேல் பார்வையை சுழலவிட்டுவிட்டு அதற்கு மேல் அங்கே நிற்காமல் விறுவிறுவென நடந்து தனது காரில் ஏறி அவன் அமர, எங்கிருந்தோ ஓடி வந்து காரில் ஏறிக்கொண்டான் அவனது மேனேஜர் ஷ்யாம். கிளம்பி பறந்தது அவன் கார்.

அவன் கார் சென்ற திசையை பார்த்தபடியே கண்ணாடியை அணிந்துக்கொண்டார் வெங்கட்ராமன் ‘உன் வயசு என் அனுபவம்டா கண்ணா’ என்றவர் உதவி இயக்குனர் பக்கம் திரும்பினார்.

‘இப்போ வருண் எங்கே இருப்பான்?’


 

New comments

Latest updates

Latest Episodes

Top