Puli(/) pathunguvathu...!!

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Srija Venkatesh

SM Exclusive
Author
Joined
Jan 17, 2018
Messages
408
Reaction score
4,268
Points
93
Location
chennai
புலி(?) பதுங்குவது...

எழுத்து : ஸ்ரீஜா வெங்கடேஷ்

எழுத்தாளர் முன்கோபி தன் வீட்டின் பக்கவாட்டு அறையிலிருந்து வாசலை மீண்டும் ஒரு முறை எட்டிப் பார்த்தார். அரை மணி முன்பு பார்த்த அந்த இரு குண்டர்களும் சிகரெட்டைக் கையில் வைத்துக்கொண்டு இன்னமும் அங்கேயே தான் நின்று கொண்டிருந்தனர். வயிற்றை கலக்கியது எழுத்தாளருக்கு. காட்சி புரியாதவர்களுக்காக இந்த சின்ன அறிமுகம். எழுத்தாளர் முன்கோபி தமிழ் கூறும் நல்லுகம் புகழும் ஒரு வீரமான எழுத்தாளர். அறச்சீற்றம் கொண்டவர். சமூகக் கொடுமைகளைச் சாடுவதில் அவருக்கு நிகர் அவர் தான். ஆனால் அவர் யாரைக் குறிப்பிட்டுச் சொல்கிறார் என்று படிப்பவர்களுக்கும் புரியாது அவருக்கும் தெரியாது.

போன வாரம் தான் பக்கத்துத் தெருவில் இருந்த ஒரு கந்து வட்டிக்காரனைப் பற்றிக் காரசாராமாக எழுதியிருந்தார். அதை ஒரு நகைச்சுவைக் கதையென ஒரு நாளிதழும் பிரசுரித்தது. இன்று மதியம் முதல் அந்த இருவர் வீட்டு வாசலையே முற்றுகையிட்டதைப் போல நின்று கொண்டிருப்பது அந்த எழுத்தின் விளைவோ என்ற கவலை அவருக்குள் எழுந்தது. தாதா தன்னைத் தாக்கச் சொல்லி ஆளனுப்பியிருப்பாரோ? இல்லை போன மாதம் ஒரு அரசியல் தலைவரை பற்றி எழுதினோமே அதற்காக பழி வாங்கக் காத்திருக்கும் குண்டர் மன்னிக்கவும் தொண்டர்களோ? என்று யோசித்தார். அவரது பதட்டத்தில் அந்த அரசியல் கட்டுரையை யாருமே பிரசுரிக்கவில்லை என்பதைக்கூட மறந்தே போய் விட்டார்.

இப்போது அந்த ஆட்கள் வீட்டின் பக்கம் கையைக் காட்டி ஏதோ பேசிக்கொண்டிருந்தனர். பயத்தில் வியர்த்து விட்டது அவருக்கு. நல்லவேளை மனைவியும் மகனும் வீட்டிலேயே தான் இருக்கிறார்கள். இல்லையென்றால் அவர்கள் வெளியிருந்து வரும் நேரம் அப்படியே அமுக்கி விட்டால்? என்று பய ரேகை ஓடியது. இவரது தவிப்பையும் பயத்தையும் உணராத துணைவியார் காப்பி கொண்டு வந்தார். "என்னங்க.." என்று ஆரம்பித்த அவரை அடக்கி வாயிற்புறம் கையைக் காட்டினார். "அவங்க தலைவரைப் பத்தி எழுதிட்டேன்னு என்னைப் பழி வாங்க வந்திருக்காங்க" என்றார் கிசுகிசுப்பாக. அம்மாளுக்கும் கவலை கூடி விட்டது.

"இப்ப என்னங்க செய்ய? நீங்க வீட்டுக்குள்ள இருக்கீங்கன்னு தெரிஞ்சா உள்ள நுழைஞ்சு உங்களை கத்தியால குத்தி கடத்திக்கிட்டுப் போயிருவாங்களோ?"

பேயறைந்தாற் போல மாறியது முகம் முன்கோபிக்கு. "வாயை மூடு. நீயே அவங்களுக்கு ஐடியா குடுக்குறியா?"

"ஏங்க பேசாம போலீஸ்ல சொல்லிடலாமா? உயிராவது பிழைக்கும் இல்ல? இதுக்குத்தான் நான் அப்ப பிடிச்சு சொன்னேன். நீங்க எழுதி என்ன கிடைச்சது நமக்கு? இப்ப அநியாயமா சாகப்போறீங்களே? நான் என்ன செய்வேன்?" என்று ஒப்பாரி வைத்தார் துணைவியார். "ஏண்டி நானே பயத்துல இருக்கேன். நான் சாகப்போறேன்னே முடிவு செஞ்சுட்டியா? முடிஞ்சா இவங்களைத் துரத்த ஐடியா குடு. இல்லை வாயை மூடிக்கிட்டுப் போ! போலீஸ்ல சொன்னா இன்னமும் பிரச்சனை தான் வரும்" என்றார். அவருக்கு பயத்தில் காய்ச்சலே வரும் போல ஆகி விட்டது. மனதில் பல சிந்தனைகள் ஓடியது.

ஒரு எழுத்தாளராக நான் சாதிக்க வேண்டியது நிறைய இருக்கிறதே? இன்னும் ஒரு சாகித்ய அகாதமி அவார்டு கூட வாங்கவில்லை, எனது நாவல் எந்த சர்ச்சைக்கும் ஆட்படவில்லை, என்னை யாரும் பேசுவதற்கோ தலைமை தாங்கவோ கூட அழைப்பதில்லை. இப்படி எதையும் சாதிக்காமல் அல்பாயுளில் போவது தான் என் தலையெழுத்தா? மனதில் கழிவிரக்கம் பொங்கியது. நான் ஏன் மற்ற சாதாரண எழுத்தாளர்களைப் போல சிறுகதை எழுதினோமா? நாவல் எழுதினோமா? என்று இல்லாமல் வீண் வம்பை விலைக்கு வாங்கினேன்? யார் எப்படிப் போனால் எனக்கு என்ன? ஏதோ வித்தியாசமாக எழுதினால் தான் என்னைப் பற்றிப் பேசுவார்கள், சர்ச்சை செய்வார்கள் என்று நினைத்து பெரிய மனிதர்களைப் பற்றி எழுதியது தவறாகப் போய் விட்டது. பேசாமல் வாசலில் நிற்பவர்கள் காலில் போய் விழுந்து விடுவோமா? என்று எண்ணினார்.

காலில் விழத்தான் வருகிறோம் என்று தெரியாமல் ஒரே குத்தாகக் குத்தி விட்டால் என்ன செய்ய? இவள் வேறு போதாக்குறைக்கு அவரைக் குத்தாதே! கொல்லாதே! என்று எடுத்துக்கொடுப்பாளோ? வேலை வெட்டிக்குப் போகாமல் வீட்டில் உட்கார்ந்து சாப்பிடுகிறேன் என்று சொல்லிக்கொண்டிருப்பாள். இப்போது அதற்குப் பழி வாங்கி விடுவாளோ?? சே! என்ன வாழ்க்கை இது? என் வாசகர்களுக்கு நான் பயப்படுகிறேன் என்று தெரிந்தால் என்னைப் பற்றி என்ன நினைப்பார்கள்? பொது இடத்தில் பேசும் போது கூட நான் அனைவரையும் கண்டபடி பேசியிருக்கிறேன். அப்போது அதன் விபரீதம் புரியவில்லை. இப்போது வருத்தப்பட்டு என்ன பயன்? என்று மனம் அதன் போக்கில் சிந்தித்தது.

ஒரு நப்பாசையில் வாசலை மீண்டும் எட்டிப்பார்த்தார். அந்த இருவரும் வாசலில் வந்த பழக்காரரை ஏதோ விசாரித்துக்கொண்டிருந்தனர். அவரும் உள்ளே கை காட்டி பதில் சொன்னார். "அட பாழாப்போகிறவனே! உங்கிட்ட நான் எத்தனை தடவை பழம் வாங்கியிருக்கேன். என்னைக் காட்டிக்குடுக்கிறியே நியாயமாடா? பேரம் பேசுனதுக்குப் பழி வாங்குறியா?' என்று மனதுள் அவனோடு சண்டை போட்டார். அந்த இருவரும் எங்கோ போனார்கள். நிம்மதிப் பெருமூச்சு விட்டார் எழுத்தாளர். "முடியுமா? இது சுதந்திர நாடாச்சே? எனக்குக் கருத்து சுதந்திரம் இருக்கே? தப்பு செஞ்சா தட்டிக் கேட்கத்தான் வேணும்" எண்ணம் மீண்டும் தடைப்பட்டது. காரணம் அந்த இருவரும் இப்போது ஆளுக்கொரு கப் டீயை கையில் வைத்து சீப்பியபடி மீண்டும் இவர்கள் வீட்டுப் பக்கமாகப் பார்த்தனர்.

பந்தாக எழுந்த பயத்தை சமாளித்தார் புரட்சிக்காரர். மனதில் புதுப்பயம் ஒன்று முளைத்தது. "ராத்திரியில வீட்டுக்குள்ள நுழைஞ்சி என்னைக் கொலை செய்யத் திட்டம் போட்டிருக்காங்களோ? அதனால தான் நான் வெளியில வராம இருக்க வாசல்லயே காத்திருக்காங்களோ? " நெஞ்சுக்குழி அடைத்தது. யாருக்காவது ஃபோன் செய்து வரச் சொல்லலாம் என்றால் அவர்கள் எத்தனை தூரம் உதவுவார்கள்? ஏதேனும் முக்கிய இலக்கிய கூட்டம் இருக்குமே? தமிழுக்கு செய்யும் பணியை விட எதுவும் முக்கியமில்லை என்று சொல்வார்களே? அக்கம் பக்கத்தில் இருப்பவர்களைக் கூப்பிடலாம் என்றால் அவர்கள் எது நடந்தாலும் கேட்க மாட்டார்கள். என்ன இருந்தாலும் இது பெரு நகரம் இல்லையா?

துணைவியார் கையில் ஒரு பொட்டலத்தோடு வந்தாள். "என்னங்க நான் கையில மொளகாப்பொடி வெச்சிருக்கேன். அதை அவங்க மூஞ்சி மேல போட்டா அவங்களால எதுவும் செய்ய முடியாது. அப்ப நாம அவங்க கையைக் காலைக் கட்டிப் போட்டுடலாம். என்ன சொல்றீங்க?" சினிமாத்தனமாக ஐடியாவாக இருந்தாலும் கூட அதைத்தான் செய்தாக வேண்டும் போல இருந்தது.

அந்த நேரத்தில் இருவரில் மஞ்சள் சட்டை போட்ட ஒருவர் வீட்டு வாசலுக்கு வந்து மணியடித்தார். நெஞ்சு அடைத்து கண்கள் இருண்டன எழுத்தாளருக்கு. துணைவியாரோ செய்வதறியாது நின்றார். இங்கே நடப்பது எதுவும் தெரியாத மகன் வந்து வாசற்கதவைத் திறந்தான். காலம் அப்படியே நின்று விட்டதாகத் தோன்றியது அவருக்கு.

"அப்பா! பக்கத்து வீட்டு மாடிப்போர்ஷனைப் பார்க்க வந்தாங்களாம். ஓனர் வரவேயில்லையாம். அதான் நம்ம கிட்ட சாவி இருக்கான்னு கேக்க வந்திருக்காங்க" என்றான்.

தாய் ஏன் இப்படி வயிற்றைப் பிடித்துக்கொண்டு சிரிக்கிறாள் என்றும் கோபக்காரத் தந்தை எதனால் மயங்கி விழுந்தார் என்றும் பாவம் அந்த மகனுக்கு இன்று வரை தெரியாது நீங்களும் சொல்லி விடாதீர்கள்.
 
Guhapriya

Well-known member
Joined
Apr 5, 2019
Messages
3,061
Reaction score
9,959
Points
113
Location
Trichy
:ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO:நாங்க சொல்லைல நீங்களும் சொல்லிட்டாதீங்க:love::love::LOL::LOL::LOL:
 
Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top