Sokkattan paarvai - 25(final)

Riha

SM Exclusive
Author
SM Exclusive Author
#1
ஹாய் தோழமைகளே !!!

எப்படியோ கதையை முடிச்சுட்டேன். ஹப்பாடா , ரொம்ப ஹேப்பியா இருக்கு இப்ப .

இத்தனை நாளா எனக்கு ஆதரவு தந்து ஊக்குவித்த அனைத்து நல் உள்ளங்களுக்கும் மனமார்ந்த நன்றிகள் !!

கதையைப் படிச்சுட்டுக் கட்டையைத் தூக்காம குணமா கருத்தை சொல்லிடுங்க . எப்பவும் போல் லைக் , கமெண்ட் எல்லாம் வாரி வழங்கி எனக்கு சப்போர்ட் பண்ணுங்க பா.

மீண்டும் அனைவருக்கும் நன்றி !!
 
Last edited:

Riha

SM Exclusive
Author
SM Exclusive Author
#3
விஸ்தாரமான அறையில் மௌனமே நிறைந்திருக்க , மூச்சு சத்தம் கூட மூன்றடிக்கு மேல் கேட்காததால் , பத்தடி தள்ளியே அமர்ந்திருந்த ரஞ்சித்தும் ராஜஷேகரும் ஆழ்ந்த சிந்தனை கலையாத அட்மாஸ்ஃபியரில் இருந்தனர்.

அதைக் கெடுக்கும் வண்ணம் வந்தமர்ந்தான் கிருஷ் .

அவனின் அழுத்தமான நடை , இவர்களின் தொடையை நடுங்க செய்தது. அவனின் பார்வை இவர்களின் உயிரைக் கூறு போட்டது .

அவனின் மெல்லிய சிரிப்பு , இவர்களது மரணப் படுக்கையின் விரிப்பானது.

கால் மேல் கால் போட்டு அங்கிருந்த சோபாவில் அமர்ந்தவன் , அவர்கள் இருவரையும் சற்று நேரம் யோசனையாவே பார்த்துக் கொண்டிருந்தான் .

பின்னர் பிரகாஷிற்கு கால் செய்தான்.

"சைட் விசிட் முடிஞ்சுதா பிரகாஷ்?"

" யெஸ் சர் . இப்ப வீட்ல தான் இருக்கேன் "

சூர்யா முன்பு அழைத்திருந்த பொழுது கிருஷ்ஷைக் குறித்து சொன்னவை அவனை உடனே வர செய்திருந்தது .

ஆனால் , தர்ஷினி மூலம் கிருஷ் கேம் தான் ஆடுகிறான் என்று தெரிந்ததும் நிம்மதியாக வீட்டிற்கே சென்றான் பிரகாஷ் .

அங்கே , பல மாதங்கள் கழித்துத் தன் குடும்பத்தினரைக் காண வந்திருந்த சூர்யாவைக் கண்டதும் அவனோடு அளவளாவி மகிழ்ந்தான் .

இப்பொழுது கிருஷ் என்னவென்று உரைக்காமல் உடனே வர RS புரம் பங்களாவுக்கு வர சொல்லவும் , உடனே கிளம்பினான் .

" டேய் , என்னை மாதிரியே இருக்கியே டா. ஒரு காலத்துல நானும் ராகவ் கூப்பிட்டா இப்படி தான ஓடுவேன் ? அப்போ எவ்ளோ ஓட்டிருப்பீங்க சஞ்சுவும் நீயும் ! "

" ஹாஹாஹா, ராகவா இருந்தா என்ன கிருஷ்ஷா இருந்தா என்ன? ஆளு ஒன்னு தான . சஞ்சு மட்டும் சென்னைக்குப் போய் படிக்கறேன்னு சொல்லாம இங்கயே இருந்திருந்தா இன்னும் நல்லா இருந்திருக்கும் . ஒரே ஆஃபீஸ்ல ஆட்டம் போட்டிருக்கலாம்."

சொன்னபடியே பைக்கில் ஏறி அமர்ந்த பிரகாஷ் ,

" சரி டா சூர்யா .போயிட்டு வரேன் . நீ சாப்பிட்டுக்கோ லேட் ஆனா"

என்று சொல்லிவிட்டுப் பறந்து போனான்.

பிரகாஷ் வரும் வரை எதையும் பேசாமலே இருந்த கிருஷ் , அவன் வந்ததும்

" ஃபைல் எங்க பிரகாஷ் ? " என்று வினவினான் .

" இந்தாங்க சர் . சாரி கொஞ்சம் லேட் ஆயிடுச்சு "

என்றவாறே அவனிடம் ஒரு ஃபைலைத் தந்தான் .

" தட்ஸ் ஓகே " என்று மொழிந்துவிட்டுத் தன் பார்வையைக் கோப்பில் சுழல விட்டான் .

அப்பொழுது பிரகாஷ் ரஞ்சித்தை வெறுப்புடன் பார்க்க , அவனைப் பார்ப்பதையும் தவிர்த்தான் ரஞ்சித்.

" வெரி குட் ரஞ்சித். நம்ம ஊரு ரெட் லைட் ஏரியால தான் அவங்க எல்லாரையும் அடைச்சு வெச்சிருக்கியாமே? அப்படியா "
என்று கேட்டான்.


கிருஷ்ஷின் கண்களை நேர்கொண்டு பார்க்க முடியாமல் தலையைக் குனிந்து கொண்டான் ரஞ்சித் .

" உண்மையை ஒழுங்கா சொல்லிடு "

அவனின் கண்டிப்பில் தானாக அனைத்தையும் கூறினான் ரஞ்சித் .

இம்மாதிரியான ஈனப் பிறவிகளுக்கு நாக்கைப் போல் உடலெங்கும் நரம்பில்லாமல் இருந்திருக்கலாம் ...

" அட ச்சீ... இதெல்லாம் ஒரு பொழப்பா ? மனுஷனா நீங்க எல்லாம் . காசுக்காக இவ்ளோ கேவலமா இறங்குறீங்க.

உங்க வீட்டுப் பொண்ணுன்னா இப்படி பண்ணுவீங்களா ?இந்தப் பொண்ணுங்களைக் காணோம்னு பெத்தவங்க எவ்ளோ துடிச்சிருப்பாங்க !!

அதெல்லாம் அனுபவிச்சா தான் தெரியும் டா "

"என் மேல தப்பு தான் ராகவ். அதுக்குன்னு பெருசா தண்டிச்சுடாத"

"தண்டனை தர எனக்கு என்ன உரிமை இருக்கு ரஞ்சித் . ஒன்னு நான் அதுக்கு ஆர்டர் போடற பெரிய அரசியல் பதவியில இருக்கணும் , இல்லன்னா அதை நிறைவேத்தற காவல் துறைல இருக்கணும்.

ஆனா, இவங்க ரெண்டு பேருமே பணம்னா , பதவியைப் பயன்படுத்தி எல்லாரையும் முட்டாளாக்கறாங்க.

இதுல மக்களுக்கு நல்லது பண்ணனும்னு நினைக்கறவங்க பேரையும் நாரடிச்சு நடுத் தெருவுல கொண்டு வந்து நிறுத்திடறாங்க . இது தான் சமூக சேவை போல "

ராஜஷேகர் , எங்கோ பார்வையைப் பதித்தபடி அமர்ந்திருந்தார்.

உள்ளுக்குள் உதறல் எடுத்துக் கொண்டு தான் இருந்தது அவருக்கு .

என்னதான் கிருஷ் தன்னிடம் பதவி இல்லையென்று கூறினாலும் , அதற்கானத் தகுதியாக வேறொன்றை யோசித்திருப்பான் என்று நன்றாகவே அவருக்குத் தெரியும் .

" என்ன சர் ? எவ்ளோ கமிஷன் கிடைச்சுது இந்த அசிங்கமான பொழப்புல ? எவ்ளோ நாள் நிம்மதியா சாப்பிட்டீங்க அதை வெச்சு ? "

அவனின் கேள்விக்கு என்ன சொல்வதென்று தெரியாமல் அவர் முழித்தார்.

" அதுல எவ்ளோ பேரோட சாபம் இருக்கும்னு தெரியுமா ? பொண்ணுங்களைக் காணோம்னு கம்பளைன்ட் தர வந்தவங்ககிட்ட கவர்மெண்ட் மார்ச்சுவரில இருந்து அடையாளம் தெரியாத அனாதைப் பொணத்தைக் குடுத்து ஆக்சிடன்ட்னு கேஸை முடிச்சிருக்கீங்க .

ஆனா , இதெல்லாம் உங்க சில அல்லக்கை தவிர போலீஸ் தவிர டிப்பார்ட்மெண்ட்ல கூட யாருக்கும் தெரியாது .

எல்லாரும் உங்களை பெரிய மனுஷன்னு மதிச்சுட்டு இருக்காங்க. யோவ் , மனசாட்சின்னு ஒன்னு இருக்கா இல்லையா உனக்கு ? "

" ராகவ் , இதெல்லாம் பெரிய இடத்து மேட்டர். இனிமே அவாய்ட் பண்ணலாம் அவ்ளோதான் .

இதுக்கு மேல என்ன செய்ய முடியும்னு சொல்லற?? ஒழுக்கமா இருக்கணும்னு நினைச்சா ஒதுங்கிட்டு தான் போகணும். எவ்ளவோ கேஸ் எல்லாம் வருது . எல்லாத்தையுமா அலட்சியப் படுத்தறோம் ? "

" இல்லைதான் . பெரிய மினிஸ்டர் வீட்டு நாய் செத்து போனா உடனே கேஸ் போட நாய் மாதிரி ஓடுவீங்க.

ஆனா , எது ரொம்ப முக்கியமோ அதைக் கண்டுக்காம தப்பு பண்ணறவனுக்கு உடந்தையா இருந்து உயிரை வாங்கறீங்க . நல்ல லாஜிக் !! "

கிருஷ்ஷின் நக்கலில் வெகுண்டார் ராஜஷேகர்.

" டேய் நீ ரொம்ப பேசற. உனக்கு என்ன வேணுமோ அதைப் பண்ணிட்டு என் பொண்ணைக் கூட்டிட்டு போறது தான் எனக்கு இப்ப முக்கியம்.

இப்பவே இதுக்கு ஒரு முடிவு கட்டிடலாம். தேவை இல்லாம ஏதேதோ பேசிட்டு இருக்காத."

"உங்கப் பொண்ணுக்கு விபத்து நடந்தது இவனாலதான். அது முதல்ல தெரியுமா உங்களுக்கு? சொல்லப்போனா அவளையும் கெடுக்கத்தான் பார்த்தான் இவன்"

என்ற கிருஷ்ஷின் கூற்றில் ராஜஷேகர் அதிர, அன்று நடந்தவற்றை அவன் கூறினான்.

அதைக் கேட்கவே முடியவில்லை அவரால். தன்னுடைய பெண்ணிற்கே கடைசியில் இந்த நிலையா என்று அவரின் மனம் ஓலமிட்டது.

பிறகு,

"இப்ப சொல்லுங்க, உங்க மனைவி கிட்ட இருந்தும் இதைக் காசு குடுத்து மறைப்பீங்களா? ரஞ்சித்தை சும்மா விடுவீங்களா?"

என்று அழுத்தமாகக் கிருஷ் கேட்க, அந்தக் கேள்வியில் ராஜஷேகர் ஆவேசம் வந்ததுபோல் கத்தினார்.

"மாட்டேன் மாட்டேன், இவனைத் தண்டிச்சாதான் என் மனசு ஆறும்."

"ஓகே தென் , இப்பவே உங்க பொண்ணை நீங்க மீட் பண்ணலாம் . பேச்சு மாறாம நான் சொல்லறதை நீங்க பண்ணா சரிதான். "

என்றபடியே பிரகாஷிடம் சொல்லி வெளியே அமர்ந்திருக்கும் வைஷாலியை வர செய்தான்.

உள்ளே வைஷாலி வர , அவளைக் கண்டதும் கண்களில் நீர் ஆறாய்ப் பெருக

" ஷாலினி " என்றபடியே வேகமாக ஓடி வந்து மகளின் தலை , முகம் , கைகள் எல்லாவற்றையும் தடவிக் கொடுத்து உச்சி முகர்ந்தார் ராஜஷேகர்.

காரணம் தெரியாமல் அவளின் கண்களும் நீரைப் பொழிந்தது.

இருப்பினும் கைகள் மெல்லத் தந்தையைத் தள்ளி நிறுத்தியது.

" என்னம்மா !! " ஏக்கத்துடன் அவர் கேட்க ,

" உங்களை எனக்கு நியாபகம் இல்லை . நீங்க தான் என்னைப் பெத்தவருன்னு கிருஷ் சொன்னான். எனக்கு கிருஷ்ஷையும் நியாபகம் இல்லை தான் .

ஆனா , அவன் மேல வர நம்பிக்கை உங்களைப் பார்த்து எனக்கு வரல. உங்க கிட்டத் தள்ளியே நிக்கணும்னு தான் தோனுது "

என்று வைஷாலி ஒட்டாத குரலில் கூறினாள்.

மகளின் பேச்சில் அவருக்குத் தன் கபாலத்தில் யாரோ கொடுவாளை இறக்கியது போல் இருந்தது.

" ஷாலினி என்ன பேச்சு இது ? உனக்காக தான் நான் உசுரோடவே இருக்கேன் . நீ காணாம போனதுல இருந்து எங்கெல்லாமோ தேடிருப்பேன் .

இப்ப கூட நீ எங்களுக்குக் கிடைக்கணும்னு தான் இவன் சொல்லறதுக்கெல்லாம் பல்லைக் கடிச்சுட்டு இருக்கேன். என் மனசை உடைச்சுடாத மா. "

ராஜஷேகர் தழுதழுத்தார் .

" அந்தப் பொண்ணுங்களோட அப்பாக்கெல்லாம் கூட இப்படி தான இருக்கும் ? காலம் பூரா பொண்ணைப் பிரிஞ்சு அவங்க எப்படி இருப்பாங்க ?

உசுரோட அவங்க வாழ்க்கையை புதைச்சுட்டு இப்ப உங்க பொண்ணுக்குன்னு வரப்போ மட்டும் சுயநலமா எப்படி இருக்க முடியுது உங்களால? "

வைஷாலி கூர்மையான பார்வையுடன் அவரை நோக்க , மகளின் முகத்தை நேர்கொண்டு காண முடியாமல் அவர் தவித்தார் .

" கிருஷ் , நீ கேட்டுகிட்ட மாதிரி நான் இவரை மீட் பண்ணிட்டேன் . இப்போ என்னால இங்க நிக்கவே முடியல . இத்தனை நாளா என்னை வளர்த்தவங்க எவ்ளோ வெறுத்துப் போயிருந்தா இவங்க கிட்ட இருந்து என்னை மறைச்சிருப்பாங்க !!

என்னால சகிக்கவே முடியல இவரு பண்ணதையெல்லாம் . கிளம்பலாம் வா . தலை வெடிச்சுடுமோன்னு பயமா இருக்கு "

என்று வைஷாலி முகம் கசங்கிப் போகக் கூற , ராஜஷேகரின் முகம் தவிப்பைத் தத்தெடுத்தது.

" ஷாலினி , இரும்மா . நான் சொல்லறதைக் கேளு "

என்று அவளின் கையைப் பிடித்து நிறுத்தப் பார்க்க , ஏதோ தணலுக்குள்ள தத்தளிப்பதைப் போன்று உணர்ந்தவள் வேகமாக அவரின் கையை உதறினாள் .

" என்னைத் தொடாதீங்க மிஸ்டர். அருவருப்பா இருக்கு "

பெற்ற மகளின் வாயில் இருந்து இப்பேற்பட்ட வார்த்தையைக் கேட்க எவ்வளவு புண்ணியம் செய்திருக்கிறோம் என்று அப்பொழுதே உணர்ந்தார் ராஜஷேகர் .

அந்நொடியே மரணம் சம்பவிக்காதா என்று அவரின் உயிரணுக்கள் ஒவ்வொன்றும் துடித்துப் போயின.

இடிந்து போய் நிற்க வலுவில்லாமல் அவர் தொய்ந்து கீழே விழ , பிரகாஷ் வேகமாக சென்று அவரைத் தாங்கிப் பிடித்தான் .

பின்னர் , கிருஷ்ஷின் முகத்தைப் பார்க்க , அவனோ எதையும் பேசாமல் இறுகிப் போய் நின்றிருந்தான் .

" கிருஷ் , சீக்கிரமா வா . நான் வெளிய தர்ஷினி கூட வெயிட் பண்ணறேன் . "

என்ற வைஷாலி , ரஞ்சித்தையும் காரி உமிழும் பார்வை பார்க்கத் தவறவில்லை .

அவள் செல்வதைத் தடுக்க முயலாமல் உடைந்து போன மடை போல் கண்ணீரை மட்டும் வெளியேற்றிக் கொண்டிருந்தார் ராஜஷேகர்.

காலங்கள் மாறலாம் , கூடவே காட்சிகளும் மாறலாம் . ஆனால் நடந்தவற்றை மறைக்க முடியாது .

மாற்றம் ஒன்றே மாறாதது எனில் ஏற்றம் தரும் மாற்றமே அனைவரும் விரும்பும் ஒன்றாகும்.

வீரப்புண் ஏற்பட்டால் வீராப்புடன் காட்டலாம் . ஆனால் , விழுப்புண்ணை மறைப்பதில் முனைப்புடன் இருப்போர் தான் அதிகம் . கடுகளவும் மறையாத வடுவை மறைப்பதற்குத் தான் அவ்வளவு பாடு .

பசுத்தோல் போர்த்திய புலியைக் கூட நம்பலாம் . அது ஒரேயடியாகத் தன் இரையைக் கொன்றபின் சென்றுவிடும் .

ஆனால் , நரித்தனம் மிகுந்த பன்றியை நம்பவே கூடாது.
சாக்கடையில் உழன்றபடியே சுற்றிலும் இருப்போரைத் தன்னுடன் இழுத்துக் கொள்ளும் . அதிலிருந்து வெளியே வரவே முடியாது . வந்தாலும் , அடையாளம் சேற்றோடு புதைக்கப்படும்.


பூவோடு சேர்ந்தால் நாரும் மணக்கும் என்பது உண்மை என்றால் , சாக்கடையுடன் சேர்ந்தால் சந்தனமும் நாறும் என்பது கூட உண்மையே !
 
Last edited:

Riha

SM Exclusive
Author
SM Exclusive Author
#4
லம்போகினி சீரான வேகத்தில் சென்று கொண்டிருக்க , கிருஷ்ஷின் அருகே வெளியே வேடிக்கைப் பார்த்தபடி அமர்ந்திருந்தாள் வைஷாலி .

பின்னால் தர்ஷினி ஏதோ பாடலை முணுமுணுத்தபடி வர , அந்த மெல்லிய சத்தத்தைத் தவிர வேறு எந்த ஒலியும் அங்கே கேட்கவில்லை.

பரபரப்பான சாலையில் நினைத்த நேரத்தில் நினைத்தபடி செல்ல முடியாததால் வைஷாலி பதட்டமாகவே இருந்தாள் .

தந்தையைக் கண்ட மோசமான நிகழ்வையும் , தாயைக் காணப் போகின்ற இனிய தருணமும் அவளை ஆட்டிப் படைத்தது.

ஏற்கனவே வீட்டில் அவளைக் காணாமல் பதறிப் போயிருந்தனர் அனைவரும் .

உண்மை மறைக்கப்பட்டதில் கண்காணாமல் சென்றுவிட்டாளோ என்று அவளின் எண்ணிற்கு ஏகப்பட்ட தடவை அழைப்புகள் வந்தவண்ணம் இருந்தன.

சற்று நேரம் முன்பே அதைக் கவனித்தவள் , கிருஷ்ஷுடன் இருப்பதைக் கூறி அவர்களை சமாதானம் செய்வதாக எண்ணி அவர்களின் நிம்மதிக்கு மேலும் சமாதி கட்டியிருந்தாள் அவளறியாமல் .

நடந்தவற்றை அறிந்து , சத்யவதியின் மனம் சற்றே ஆறுதலுற்றது .

ஷாலினியின் நன்மைக்காகத் தான் பெற்ற மகனையே தியாகம் செய்தவர்களைத் தவறாக எண்ணியதை உணர்ந்து வேதனை கொண்டார் சத்யவதி .

மேலும் , அவர்கள் ஷாலினியை அப்பொழுதே தங்களிடம் விட்டிருந்தால் , தன் கணவன் அந்த ரஞ்சித்துடன் சேர்ந்து ராகவைப் பழி வாங்குகிறோம் என்று இவளைப் பலியாக்கிருப்பார்கள் என்று நன்கு புரிந்து கொண்டார்.

ஆனால் , அவரால் ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்று ஷாலினி இப்பொழுது கிருஷ் என்று ஒருவனை விரும்புவதைத் தான் .

இவளைப் பிரிந்து ராகவ் என்ன பாடு படுவான் என்று அவருக்குத் தெரியாதா என்ன !

அதனால் உடனே அவனிடம் இதைக் கூற வேண்டும் என்று அவர் பிடிவாதம் பிடிக்க , முடியவே முடியாது என்று சிவசங்கரியும் அடம் பிடித்தார்.

" இப்ப தான் வைஷாலி சந்தோஷமா இருக்கா . அவகிட்ட அதையும் இதையும் சொல்லி எதையும் கெடுக்க வேணாம் .

கிருஷ் தான் அவளுக்கு கரெக்டான ஜோடி . கொஞ்ச நாள் போனா ராகவ் இவளை மறந்திடுவான். எல்லாம் சரியா போயிடும் "

சிவசங்கரி வாதாட ,

" அப்போ ஷாலினிக்குப் பழசெல்லாம் நியாபகம் வந்து , எதுக்கு ராகவ் பத்தி மறைச்சீங்கன்னு நம்மகிட்ட கேட்டா என்ன பண்ணறது ?

அது துரோகம் பண்ண மாதிரி ஆகாதா ? இந்த கிருஷ் கிட்டப் பேசி நான் சரி பண்ணறேன் "
என்று சத்யவதியும் பிடியாக நின்றார்.


இவர்களின் நடுவே மஹேந்திரன் முழித்துக் கொண்டுத் தன் பணியில் தனியாய் நின்றார்.

அப்பொழுது ,

" ம்மா !!"

என்று அக்கறையில் சர்க்கரை கலந்த குரல் கேட்க , திரும்பிப் பார்த்த மூவரும் கப்சிப் ஆயினர்.

கொஞ்சம் கூட நகராமல் அவர்கள் அவளையே பார்க்க , ஆடாமல் அசையாமல் நின்றிருந்தவர்களைக் கண்டு
' நான் அசைந்தால் அசையும் அகிலமெல்லாமே ! ' என்ற ரீதியில் மெல்ல நடந்து வந்தாள்.


ஆம், அசைந்தது ... அவளுக்கு அனைத்து உண்மையும் தெரியும் என்று அறியாத அவர்களின் இதயம் மட்டும் வேகமாக மேலும் கீழும் அசைந்தது.

தன்னைத் தான் அம்மா என்று அழைக்கிறாளோ என்று சத்யவதியின் கரங்கள் முன்னே செல்லத் துடிக்க ,

' கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி இவகிட்ட வாங்குன பல்பு மறந்து போச்சா ? '

என்று மனதின் குரல் மண்டையில் அடிக்க , அப்படியே பின்வாங்கினார் சத்யவதி.

ஆனால் எதிர்பாரா விதமாக சத்யவதியைக் கட்டிக் கொண்டு வைஷாலி கதறி அழ ஆரம்பிக்க , அனைவரும் ஒன்றும் புரியாமல் தவித்துப் போயினர்.

"ம்மா , என்னை மன்னிச்சுடு . உன்னை எனக்கு அடையாளம் தெரியல "

என்று கதறலுக்கிடையில் கூற , அவளுக்கு உண்மை தெரிந்ததில் ஆனந்தம் கொண்ட சத்தியவதி தன் மகளை ஆரத் தழுவினார்.

மஹேந்திரன் , சிவசங்கரி இருவருக்கும் மனதில் ஏதோ பாரம் ஏறிய உணர்வே மிஞ்சியது .

என்னதான் இருந்தாலும் மாற்றான் வீட்டு மல்லிகையைத் தினமும் சூடிக்கொள்ள இயலுமா!

வைஷாலியின் பின்னோடு வந்திருந்த தர்ஷினி , கிருஷ் இருவரும் வாயிலோடு நின்றுகொண்டனர்.

சற்று நேரம் அனைவரும் உணர்ச்சிப் பிழம்பாக இருக்க , அந்த அமைதியைக் கிருஷ் தான் கலைத்தான் .

" போதும் ஷாலு , இன்னும் எவ்ளோ நேரம் தான் அழுத்துட்டே இருப்ப ? "

அவனின் அந்த உரிமை தெறித்த குரலில் அனைவரும் திரும்பிப் பார்த்தனர் .

" நீயா !! "

என்ற அதிர்ச்சி கலந்த ஆனந்தம் சத்யவதியிடம் வெளிப்பட,
சிவசங்கரியோ


" நீயா ?? "

என்று ஆனந்தம் கழிந்த அதிர்ச்சியுடன் நின்றார் .

அவனைக் கண்டதும் கண்களைத் துடைத்துக் கொண்ட வைஷாலி ,

" சரிங்க சர் , நீங்க இப்ப உள்ள வாங்க . அப்படியே எஸ்கேப் ஆக ஐடியா பண்ணறீங்களா ! "


என்று லேசாக சிரித்தாள் .

ஆனால் , உள்ளே வந்தால் நடக்கப் போகும் கலவரத்தை அவனல்லவோ அறிவான்.

இவள் சகஜமாக அவனிடம் பேசுவதைக் கேட்டதும் இன்னமும் ஷாக் ஆனவர்கள் அப்படியே நிற்க , வைஷாலி சென்று அவனின் கையை விடாப்பிடியாகப் பிடித்து இழுத்து வந்தாள் .

கூடவே தர்ஷினியும் வர , யார் என்ன பேசுவது என்றே தெரியாமல் முழித்தனர் .

அதற்குள் வைஷாலியே ,
" என்னப்பா !! கிருஷ்ஷைப் பார்த்ததே இல்லாத மாதிரி நிக்கறீங்க ? "


என்று கேட்க , சர்வமும் விளங்கியது அனைவருக்கும் .

' அவனா நீ ??!! '

" ஆனா , அன்னைக்கு வந்தது நீங்க இல்லையே ? "

மஹேந்திரன் சந்தேகமாகக் கேட்க , பிரகாஷ் செய்த குளறுபடியைக் கூறி நடந்தவற்றிற்கு விளக்கமும் தந்தான் கிருஷ் .

" ஓஹோ , அப்போ எங்களுக்குப் பயந்து தான் கிளம்புனீங்களா ! வைஷாலிக்கு சந்தோஷம்னா , எங்களுக்கு அது போதும் ராகவ் . இது புரியாம நீங்க வேற ..."

என்று மஹேந்திரன் வாய் விட்டு சிரிக்க , அதிலேயே சூழ்நிலை சகஜமானது.

ஆனால் அப்பொழுது தான் மிக முக்கியமான பிரச்சனையைப் பிறக்க வைத்தார் சிவசங்கரி.

" அதெல்லாம் சரி தான் . ஆனா , இனிமே வைஷாலியை கூட்டிட்டுப் போறேன்னு யாராச்சும் வந்தீங்க , நான் கண்ணகியா மாறிடுவேன் "

சிவசங்கரியின் கூற்றைக் கேட்டு, அவ்வளவு நேரம் பொங்கிய பாலில் நீரை ஊற்றியது போல் இருந்த சத்யவதி , அணையும் நெருப்பில் எண்ணெய் ஊற்றியது போல் மாற , அதற்குள் மஹேந்திரன் முந்திக் கொண்டார்.

" ஆமா இப்ப மட்டும் என்ன காந்தாரி மாதிரியா இருக்க ? கொஞ்ச நேரம் சும்மா இரேன் "

" அட அட சண்டை போடாம நான் சொல்லறதைக் கேளுங்க .

பேசாம நான் ஷாலுவை சீக்கரமே கல்யாணம் பண்ணிக்கறேன் . அதான் கரெக்ட்டா இருக்கும் . என்ன ஷாலு !! "

என்று அவளைப் பார்த்து கண்ணடிக்க , அவள் ஆள்காட்டி விரலை நீட்டி எச்சரித்தாள்.

அவன் கூறியதைக் கேட்ட சத்யவதி அதை ஆமோதிக்க , சிவசங்கரிக்கோ வைஷாலியைப் பிரிவதில் உடன்பாடே இல்லை .

அப்பொழுது சத்யவதியின் மொபைல் அடிக்க , எடுத்துப் பேசியவரின் முகம் கலவையான உணர்ச்சிகளை உரித்துக்காட்ட , கைகள் வேகமாக சென்று டீவியை ஆன் செய்தது .

அங்கே , தலைப்பு செய்தியாக ஓடிக்கொண்டிருந்தது தமிழ்நாடை உலுக்கிக் கொண்டிருந்த ஒரு சம்பவம் .

" தலைமறைவான தொழிலதிபர் ரஞ்சித்தை நடு ரோட்டில் கட்டிப் போட்டு தலை முதல் கால் வரை அங்குலம் அங்குலமாக சுட்டுத் தள்ளிய கமிஷனர் ராஜஷேகர் .

துடிதுடித்து இறந்த ரஞ்சித் .

கோரக் காட்சியைக் கண்டு பதறிய பொதுமக்கள் !! "

என்று செய்தியாளர் கூற , சம்பவம் நேரலையாக ஒளிபரப்பப்பட்டது.

ராஜஷேகரின் மிருகத்தனமான செயலுக்குப் பலர் கண்டனம் தெரிவிக்க , சிலர் காரணம் தெரியாமல் கட்டுக் கதையைப் புனைந்து கொண்டிருந்தனர் .

ரஞ்சித்தின் சிதைந்த உடலைக் காண சகிக்காமல் அனைவரும் கண்ணை மூடிக் கொள்ள , கிருஷ் மட்டும் உணர்வே இல்லாமல் திரையில் தெரிந்த அடையாளம் தெரியாதவனை வெறித்துக் கொண்டிருந்தான்.

" நீங்க பண்ண தப்புக்குப் பிராயச்சிதமா ஒரு தண்டனையை முடிவு பண்ணிக்கோங்க ரெண்டு பேரும்.

நீங்களா முடிவு பண்ணலன்னா , நான் வேற மாதிரி ரியாக்ட் பண்ண வேண்டி இருக்கும் "

இவ்வளவே அவர்களிடம் அவன் கடைசியாகக் கூறியது . அவர்கள் அதற்கு மேல் என்ன பேசினார்களோ தெரியாது .

ராஜஷேகர் இப்படி ஒரு சம்பவத்தை நிகழ்த்தி இருந்தார்.

ரஞ்சித்தின் பொறாமை , ஆற்றாமை இரண்டும் சேர்ந்து அவனின் கடமையைக் கூட கருத்தில் பதிய விட்டதில்லை .

பணத்தின் பின்னே சென்று குணத்தை உணர மறுத்தவன் ரஞ்சித் .

சிறு சிறு தவறுகள் செய்து அதில் சுகம் கண்டுவிட்டால் பெரிய தவறுகள் தன் அகத்தை அழித்துவிடும் .

கிருஷ்ஷைப் போல் குறுகிய காலத்தில் மாற வேண்டும் என்று குறுக்கு வழியைத் தேர்ந்தெடுத்து அவனின் அழிவை அவனே தேடிக் கொண்டான் ரஞ்சித்.

இதில் கிருஷ்ஷின் காழ்ப்புணர்ச்சியும் இருப்பதாகத் தோன்றலாம்.

ஆனால் , கிருஷ் என்றும் பகையைத் தொகை தந்து அழைத்ததில்லை .

சாதாரண குடும்ப சண்டையாக இருந்தால் பரவாயில்லை . அந்த எல்லையை ரஞ்சித் எப்பொழுதோ தாண்டிவிட்டான்.

அதற்கு மேல் , சமூகத்தின் ஒரு அங்கமாக இருந்து சமூகத்தின் அவலத்தைக் கண்டு அடங்கிப் போக வேண்டும் என்ற அவசியமும் கிருஷ்ஷிற்கு இல்லை.

சிங்கத்தின் பிடரியைப் பிடித்திழுத்து விட்டு என்றேனும் பொன்மான் பத்திரமாக சென்றதுண்டா !!

ரஞ்சித் ஆசைப்பட்ட அதிகாரம் , பணபலம் இரண்டுமே அவனின் மானத்தை வெளி உலகில் வெளிச்சம் போட்டு விற்றது .

இத்தனைக்கும் அவன் ஈடுபட்டிருந்த கேவலமான செயல் சொல்லப்படவில்லை அப்பொழுது வரை.

சொல்லவேண்டியவர்கள் சொன்னால் தான் அந்த சொல்லுக்கு மதிப்பு என்று உணர்ந்திருந்த கிருஷ் அதை சொல்லாமல் அமைதியாக இருந்திருந்தான்.

அதற்கேற்ப ராஜஷேகர் மீடியா முன்பு இரத்தக்கறை படிந்த நிலையில் தீவிரமாகப் பேசிக் கொண்டிருந்தார் .

ரஞ்சித் செய்த செயல் , அதற்குத் தான் உடந்தையாக இருந்தது என அனைத்தையும் ஒரு வித நடுக்கமுடன் தெரிவித்தார் அவர்.

"நம்ம நாட்டுல பெண்களுக்கான அநீதியைத் தட்டிக் கேட்க சட்டத்தில இடம் இருக்கு தான்.

ஆனா , என்னைப் பொறுத்த வரைக்கும் தண்டனைன்னா அது அடுத்தவனை அடங்கிப் போக வெக்கணும் . அடுத்த முறை எவனும் அதைப் பண்ண துணியவே கூடாது.

நாலு பேருக்கு முன்னாடி இப்படி நடுத்தெருவுல சுட்டுத் தள்ளுனா , அடுத்து எவன் தைரியமா பொண்ணுங்களை நாசமாக்க வருவான் ?

என்னை மாதிரி இல்லாம உடனுக்குடனே ஆக்ஷன் எடுத்தா எவன் இழிவா நடந்துக்கத் துணிவான் ?? .

ஆனா , இதுல நம்ம நாடு கருணைக்கு துணை போகும் . அதுனால அவ்ளோ கெடுபிடியான சட்டம் எல்லாம் இங்க இல்லை.

இருந்திருந்தா வாட்ஸப் , ட்விட்டர்னு பெண்களுக்கு எதிரா நடக்கற சம்பவங்களை ஷேர் மட்டும் பண்ணிட்டு , வேற எதையும் செய்ய முடியாத நிலைமை இருந்திருக்காது.

எனக்கே என் பொண்ணு தான் தப்பை உணர வெச்சது.

யாருக்கும் என் நிலைமை வரவே கூடாதுன்னு நினைக்கறேன்.

என்னை மன்னிச்சுடு ஷாலினி . நாட்டுக்கு சேவை பண்ண வந்துட்டு எதுக்கும் உதவாம சுடுகாட்டுக்குப் போறேன் "

என்று பேசிக்கொண்டு இருக்கும்போதே நெஞ்சைப் பிடித்துக் கொண்டு விழுந்தார் ராஜஷேகர் .

ஒரு நிமிடம் உலகமே ஸ்தம்பித்தது . சத்யவதி முதல் தர்ஷினி வரை அனைவரும் அதிர்ச்சியில் அலறக் கூட முடியாமல் நிற்க , சம்பவம் நிகழ்ந்து கொண்டிருந்த இடத்தில் இருந்து ராஜஷேகர் உடனே மருத்துவமனை கொண்டு செல்லப்பட்டார்.

ஆனால் , சென்றவர் சென்றவர் தான் . மாசிவ் அட்டாக் என்று மட்டும் இவர்களின் வீட்டிற்கு ரிப்போர்ட் வந்தது.

அனைவரும் இந்த சோகத்தில் இருந்து வெளியே வர சில காலம் எடுத்துக் கொண்டனர் .

அவர்களின் மனக் காயத்தை காலமே ஆற்றியது என்பதை விட காலம் தந்த பரிசு மாற்றியது என்றும் கூறலாம்.
 
Last edited:

Riha

SM Exclusive
Author
SM Exclusive Author
#6
" ஸ்டாப் கேஷு . கொஞ்ச நேரம் ஓடாம இரு . மம்மி ரெடி ஆகணும்ல "

தங்களின் அறையினுள்ளே ஆட்டம் போட்டுக் கொண்டிருந்த ஐந்து வயது மகனிடம் வைஷாலி கெஞ்சிக் கொண்டிருந்தாள் .

ஆனால் , அவனோ கேட்டால் தானே ! மகிழ்ச்சியின் உச்சத்தில் இருந்தவனிடம் அமைதியாக இருக்க சொன்னால் நடக்குமா என்ன ?

" மம்மி , நான் டாடியைப் போய் கூட்டிட்டு வரேன் "

என்று அவன் ஒரே ஓட்டமாக ஓட ,

"என் நேரம் , இன்னிக்கு கிளம்புன மாதிரி தான் . அப்பாவும் பையனும் என்னை அலற விடறதுலையே குறியா இருப்பாங்களே !! "

வைஷாலி வேகமாகக் கிளம்பிக் கொண்டிருந்தது அவளது மகனின் பள்ளி ஆண்டு விழாவிற்கே.

இன்று ஒரு டான்ஸ் கூட ஆடப் போகின்றான்.

எல். கே. ஜியை நல்லபடியாக முடித்துவிட்டதற்கு அவன் செய்த அட்டகாசங்கள் இருக்கே , அதை நினைத்து அவள் தனக்குள்ளே சிரித்துக் கொண்டாள்.

" ஷாலு பேபி , இன்னுமா கிளம்பாம இருக்க ! இட்ஸ் கெட்டிங் லேட் . ஹெல்ப் பண்ணவா!!"

கதவை சாத்தியபடி கிருஷ் உள்ளே வர ,

"நீங்க பேசாம வெளிய நில்லுங்க . நானே வரேன் . அப்பறம் , கேஷு கூடவே இருங்க கிருஷ் .

லாஸ்ட் மினிட்ல ஸ்டெப் மறந்து போயிடப்போகுது அவனுக்கு . இவ்ளோ ஆட்டம் போட்டா என்ன பண்ணறது ?? "

வைஷாலி ஒரு காதில் கம்மல் மாட்டிக் கொண்டே கொஞ்சம் பதட்டமுடன் கூறினாள்.

" ஹ்ம்ம் , அவன் என் பையன் ஷாலு . எல்லாத்துலயும் பெர்ஃபெக்ட் . நீ கூலா இரு "

என்றவாறே அவளின் இன்னொரு காதில் கம்மல் மாட்டி விட முனைந்தான் .

அப்பொழுது கதவை யாரோ படபடவென தட்ட , கிருஷ் கடுப்பானான்.

" டேய் , என்னை ரொமான்ஸ் பண்ண விடுங்கடா இப்பவாச்சும் "

ஆனால் , காரியத்தில் கண்ணாக இருக்கும் கரடி சிவ பூஜையைக் கருத்தில் கொள்ளுமா என்ன !!

" ராகவ் , அல்ரெடி லேட் ஆயிடுச்சு. நீ இந்த வாயிலையே வடை சுடறது , கண்ணுலயே கடலை போடறது எல்லாம் அப்பறமா வெச்சுக்கோ "

என்ற கரடி வேறு யாராக இருக்க முடியும் ? எல்லாம் சூர்யா தான் .

சிரித்தபடியே கதவைத் திறந்த வைஷாலி ,

" வீ ஆர் ரெடி . போகலாமா ?? "

என்க , இரண்டு கார்களில் பள்ளியை இரண்டாக்கும் கும்பல் கிளம்பியது.

ஒரு காரில் கிருஷ் , வைஷாலி , சூர்யா , தர்ஷினி ஆகியோர் தத்தம் மகன்களுடன் பயணிக்க , பிரகாஷ் , சிவசங்கரி , மஹேந்திரன் , சத்யவதி ஆகியோர் இன்னொரு காரிலும் வந்தனர்.

" என்னடா உன் தம்பியை என்கூட பயப்படாம பேச சொல்லு . உண்மையை மறைச்சீங்க தான் ரெண்டு பேரும் . அதுக்காக , என்ன செய்யறது ? ஜகதீஷையே மன்னிச்சு விட்டாச்சு . இவனுக்கென்ன டா ! "

என்று கிருஷ் சூர்யாவிடம் எடுத்து சொல்ல ,

" நானும் சொல்லிட்டேன் ராகவ் . அவன் ரொம்ப கில்டியா ஃபீல் பண்ணறான் . கொஞ்ச நாள்ல சரி ஆயிடும் . உன் PA தான ? எங்க போயிட போறான் சொல்லு "

சூர்யாவும் பிரகாஷின் மனநிலையை எடுத்துக் கூறினான்.

இவர்கள் பேசியபடியே வர , பள்ளி வளாகம் வந்துவிட்டது.

MSD மெட்ரிகுலேஷன் பள்ளியின் நுழைவு வாயிலில் கார் நின்றதுமே இறங்கி ஓடி சென்ற தர்ஷினியின் ஐந்து வயது மகன் ரக்ஷித் அங்கிருந்த அவன் வயதையொத்த சிறுமியிடம் , சிரித்தபடி பேசத் துவங்க , மற்றவர்கள் வந்து கிளம்பும்படி கூறவும் மனமே இல்லாமல் கிளம்பினான் .

பின்னர், மெல்ல கேஷுவிடம்

" ஷிவானி இன்னும் வரலையாமா கேஷு "

என்று வருத்தத்துடன் கூறினான்.

" ஷீ வில் கம் " என்று உறுதியுடன் பெரிய மனுஷத் தோரணையில் கேஷு அதற்குப் பதில் கூறினான்.

அந்த ஷிவானி என்பவள் கேஷுவிற்கு ஜோடியாக அன்றைய டான்ஸ்ஸில் ஆடப் போகும் சிறுமி .

நேற்று கேஷுவிற்கும் அவளுக்கும் சிறு உள்நாட்டுப் பூசல் .

இவன் எதேச்சையாக டைரி மில்க் தந்திருக்க , அவளோ

" இதெல்லாம் லவ் பண்ணா தான தரணும்? . நீ பேட் பாய் . இரு மிஸ் கிட்ட சொல்லித் தரேன்"

என்று பொங்கிவிட்டு முறைத்துக் கொண்டே வீட்டிற்கு சென்றுவிட்டிருந்தாள்.

ஒரே வகுப்பில் படிக்கும் ரக்ஷித்தும் , கேஷுவும் இதைக் குறித்தே நேற்று முழுவதும் அலசி, காதலர்கள் தான் டைரி மில்க் தந்து கொள்வார்கள் என்று கண்டுபிடித்தனர் .

ஆனால் , ரக்ஷித்திற்கு ஷிவானி வரப் போவதில்லை என்று தோன்ற , கேஷுவோ அவள் நிச்சயம் வருவாள் என்று நம்பினான் .

சிறு குழந்தைகளுக்கு இருக்கும் பிரச்னை தான் எவ்வளவு
பெரிது !!!


விழா ஆரம்பித்து இனிதே நடந்து கொண்டிருக்க , பேக் ஸ்டேஜில் இந்த இரண்டு வாண்டுகளும் கண்களை அலைபாய விட்டுக் கொண்டே இருந்தனர்.

அப்பொழுது அவர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருந்த ஷிவானி என்ற சிறுமி தேவதையென வந்தாள் .

வந்தவள் கைகளைப் பார்த்தால் !! டைரி மில்க் .

"இந்தா , நீ தந்ததுக்கு நானும் திருப்பி தந்தா லவ் வாபஸ் தான "
என்று லாஜிக் வேறு பேசினாள் .


உடனே இருவரும்
கள்ளமில்லாமல் சிரித்தவாறே கையைக் குலுக்கிக் கொண்டனர்.


அப்பொழுது ,

" லெட்ஸ் வெல்கம் கேஷவ் கிருஷ்ணா அண்ட் ஷிவானி ராஜகோபால் நவ் டு பெர்ஃபார்ம் அ லவ்லி டான்ஸ் "

என்று ஒரு மாணவி அறிவிக்க , பலத்த கைதட்டலுடன் இருவரும் அரங்கினுள் நுழைந்தனர்.

🎵அழகிய லைலா அவள் இவளது ஸ்டைலா

சந்தன வெயிலா இவள் மன்மத புயலா

அடடா பூவின் மாநாடா ஓஹோ

அழகுக்கு இவள்தான் தாய் நாடா🎵

என்ற பாடல் ஒலிக்க , இரு குழந்தைகளும் ரசிக்கும்படியான சுட்டித்தனத்துடன் ஆடினர்.

வைஷாலியும் ஆவலுடன் அதை வீடியோ எடுத்துக் கொண்டிருந்தாள் .

அப்பொழுது , ஷிவானி கால் தடுக்கி கீழே விழ , அதை எதிர்பாராத அவளின் கையைப் பிடித்திருந்த கேஷுவும் அவள் மேலே விழுந்தான் .

பார்வையாளர்கள் அனைவரும் ஒரு வித சலசலப்புடன் இருக்க , குழந்தைகளை மேடையிலிருந்து ஆசிரியை அழைத்து சென்றுவிட்டார்.

உடனே அடுத்த நிகழ்வு ஆரம்பிக்க, வைஷாலி தான் முந்தைய நிகழ்வுகளுக்கு சென்றிருந்தாள்.

Voc பார்க்கில் அவர்களின் முதல் சந்திப்பில் ராகவ் அவள் மீது விழுந்தது அவளுக்கு அப்படியே கண்முன் காட்சியாய் விரிந்தது.

கண்களில் கனவு மிதக்க , அவ்வாறே நின்றிருந்த வைஷாலியை கிருஷ் உலுக்கி என்னவென்று கேட்க , அவள் திரும்பி அவனைப் பார்த்த பார்வையில் அவளுக்கு நினைவு திரும்பியதை உணர்ந்து அவன் மகிழ்ச்சியின் எல்லைக்கே சென்றான்.

" ஷாலு !!!!"

என்று ஆச்சரியத்தில் அவன் கூவ, மெல்ல அவன் கைகளைக் காதலுடன் பற்றிக் கொண்டாள் வைஷாலி.

விஷயம் தெரிந்ததும் அருகில் இருந்த சூர்யா முதலானோரும் பூரிப்படைய , அந்த இடமே ஆனந்தத்தில் அமிழ்ந்தது .

விழா முடிந்ததும் ஒருவருக்கொருவர் மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டு உற்சாகத்துடன் சென்றனர் .

"ஆமா , ஸ்டார்டிங்ல என்னை ரொம்ப இரிட்டேட் பண்ணிட்டே இருந்திருக்க நீ ??

ஆனா அதையெல்லாம் பெருசா சொல்லாம , நம்ம ரொமான்ஸ் அப்படிங்கற பேருல பண்ணதை மட்டும் அடிஷனல் ஷீட் வாங்கி கதை அடிச்சிருக்க . இதுக்கெல்லாம் உன்னை ! "

என்று காரில் அவனை வைஷாலி மொத்த ,

" நீயே அதை மறந்துட்ட ஷாலு . அப்பறம் அதை நியாபகப் படுத்தி , உன்னை மறுபடி தாஜா பண்ணறதுக்கு ஒரு கஜா புயலையே சமளிச்சுடலாம் தெரியுமா !.

அதான் நம்ம ரொமான்டிக் சைட மட்டும் பெரிய சைஸ்ல சொல்லி உன்னை கவுக்கலாம்னு நினைச்சேன் "

அவளின் மொத்தல்களையும் , பின்னோடு கலாய்த்துக் கொண்டே வந்தவர்களையும் ஒற்றை சிரிப்பால் சமாளித்தான் கிருஷ் .

கூடவே நம்மையும் தான் .

இவர்களின் இந்த மகிழ்ச்சி என்றும் நிலைத்து நிற்குமாறு எல்லாம் வல்ல இறைவனை வேண்டி நாமும் விடை பெறுவோம்.

சொக்கட்டான் ஆடும்போது யார் யாரைக் குறி வைக்கின்றனர் என்று எளிதில் கணிக்க இயலாது.

நம் வாழ்வும் சொக்கட்டானை ஒத்ததே. எதை நோக்கி ஓடுகிறோம் என்றோ , எதிலிருந்து தப்பி ஓடுகிறோம் என்றோ புரியாமல் இருந்தால் வாழ்வில் எதையும் சாதிக்க இயலாது .

சொக்கட்டானின் பார்வையைப் பொறுத்த மட்டில் , திருப்பங்கள் நிறைந்த தருணங்களைத் திறமையுடன் கையாண்டால் வாழ்வு தித்திக்கும் !

சொக்கட்டான் பார்வை முற்றும்...
 
Last edited:

Advertisements

Top