Thaalikayiru #2

paulrasaiya

Author
Author
#1
அத்தியாயம் 2
மதியம் இரண்டு மணிக்கு வசந்தியின் குடிசைக்கு வந்து சேர்ந்தான் பிரபாகரன். அவனை புன்னகையால் வரவேற்று நாற்காலியை எடுத்துப் போட்டாள்.

”அப்பா வீட்டில இல்லையா?” கேட்டான் பிரபாகரன்.

”தோட்டத்துல வேலை செஞ்சுகிட்டு இருக்கார், நம்ம காதல் விஷயம் அப்பாவுக்கு தெரிஞ்சிடிச்சி!”
.
” நான் உங்கிட்ட ஒரு முக்கியமான விஷயம் பேசத்தான் வந்தேன்”

” என்ன விஷயம்?” பதட்டமாகவே கேட்டாள் வசந்தி.

” அமெரிக்காவிலயிருந்து நாளைக்கு என் அப்பா வர்றாரு, நம்ம காதல் விவாகாரம் அமெரிக்கா வரைக்கும் போயிடிச்சின்னு நினைக்கிறேன், அதான் எங்கப்பா அவசரமா திரும்பி வர்றாரு.”

” பிரபாகரன், நமக்குள்ள நிறைய வேறுபாடுகள் இருக்கு, நீங்க பெரிய பணக்கார வீட்டுப்பிள்ள, ஆனா நான் இந்த சேரியில வாழுற ஒரு குடிசைவீட்டுப்பொண்ணு உங்கள நான் காதலிக்கிறேன்னு தெரிஞ்சதும் யாரோ தீ வெச்சு கொழுத்தி என்னையே அழிக்கப்பார்த்தாங்க, அந்த நேரத்துல நீங்க என் கூட இருந்ததால என்ன காப்பாத்தியிட்டீங்க, அதுவே இன்னும் புரியாத மர்மமாயிருக்கு, இந்த நேரத்துல உங்க அப்பா அவசரமா அமெரிக்காவில இருந்து திரும்பி வர்றத கேட்குறப்போ என் மனசு பதறுது . ஒரு ஏழைப்பொண்ணு பணக்கார வீட்டு பையனக் காதலிச்சா இது மாதிரிப்பட்ட பின் விளைவுகள் வருமுன்னு நினைச்சுத்தான் நீங்க என்ன விரும்புறேன்னு சொன்னப்பவெல்லாம் நான் உங்கள விரும்பல விரும்பலன்னு சொன்னேன், கடைசியில என்ன அறியாமலேயே என் மனச உங்ககிட்ட நான் இழந்திட்டேன்.” வசந்தி தனது மனதில் கிடந்த விஷயங்களை அவனிடம் கொ

”வசந்தி, உன் குடிசைக்கு தீ வெச்சது வேற யாருமில்ல..இந்த ஊரே பயந்துகிட்டு இருக்குற கேடி ஜோசப் தான்.”

”என்னது கேடி ஜோசப்பா?”

”ஆமா, அவன் வெறும் அம்புதான், அவன ஏவிவிட்டது வேற யாருமில்ல எங்க சித்தப்பா தான்,

” கேடிஜோசப் பேரக்கேட்டாலே இந்த ஊரே நடுங்கும், அமெரிக்காவில இருந்து வர்ற உங்கப்பா அவன கைக்கூலி ஆக்கீட்டா அப்பறம் என்ன நடக்குமுன்னு எதுவும் சொல்ல முடியாது, .கேடி .ஜோசப் ரொம்ப முரடன், அவன் கொல பண்றதுக்குகூட தயங்கமாட்டான், உங்க அப்பா வர்றதுக்குள்ள நானும் என் அப்பாவும் இந்த ஊர விட்டே போயிடுறோம்.கேடி ஜோசப்பையும் உங்கப்பாவையும் பகைச்சுகிட்டு இந்த சேரியில நிச்சயமா வாழ முடியாது.!” வசந்தியின் கண்களில் கண்ணீர் வந்திறங்கியது. அவள் அவன் தோள்களில் சாய்ந்தபடியே வடிந்த கண்ணீரை துடைத்தெறிந்தாள்.

” நாம வாழமுடியும் வசந்தி நிச்சயமா வாழமுடியும். இன்னும் கொஞ்ச நாள்ல உன் கழுத்துல ஒரு தாலியக்கட்டிகிட்டா அந்த கேடி ஜோசப் என்ன அந்த ஆண்டவனே நேர்ல வந்தாலும் நம்மள எதுவுமே செய்ய முடியாது. உன் கழுத்துல நான் தாலி கட்டுறவரைக்கும் நீ வாழுற இந்த ஓலக்குடிசையிலேயே நானும் வாழப்போறேன், என்னோட காதல எங்கப்பா ஏத்துக்கிட்டார்ன்னா அவர் கூட சேர்ந்து வாழலாம், ஏத்துக்க மறுத்தா உன்னோட குடிசைதான் என்னோட நிரந்தர மாளிகை.” அவனது உறுதியான பேச்சைக் கேட்டு ஒரு கணம் அசந்தே போனாள்.

”பிரபாகரன், வசதியா வாழ்ந்தவன் நீங்க, பட்டுமெத்தையில படுத்து தூங்குறவன் நீங்க, ஏசி வீடு, சொந்தக்காரு, இதையெல்லாம் விட்டுட்டு என் குடிசையில வந்து தங்கப்போறீங்களா…? வேண்டாம் வேண்டாம் அது ரொம்ப கஷ்டம்!”.

”உனக்காக விலைமதிக்கமுடியாத என் இதயத்தையே இழந்திட்டேன், ஆப்ரால் விலைமதிக்கக்கூடிய என் ஆடம்பர வாழ்க்கைய இழக்கிறது ஒண்ணும் பெரிய கஷ்டமில்ல வசந்தி”

”நான் ரொம்ப குடுத்து வச்சவ!” வசந்தி அவன் மார்பில் சாயவும் கருப்பசாமி தென்னை மர ஓலைகளை தலையில் சுமந்து கொண்டு வந்து குடிசையின் முற்றத்தில் போட்டார்.

”வாங்க...நீங்க மட்டும் சரியான நேரத்துல வந்து என் மகள காப்பாத்தலையின்னா .வசந்திய நான் உயிரோடயே பார்த்திருக்க மாட்டேன். உங்களுக்கு ரொம்ப நன்றி.!” கருப்பசாமி மறுபடியும் கையெடுத்து கும்பிட்டார்.

” சரி நான் கிளம்பறேன்!”

” போய்ட்டு வாங்க!” பிரபாகரன் திரும்பிப் பார்த்தபடியே புறப்பட்டான்.

”வசந்தி ..தோட்டத்துல தேங்காய் எல்லாம் வெட்டிப் போட்டுட்டேன், நீ வந்து பொறுக்கிப் போடும்மா!”

”நீங்க முன்னால போங்கப்பா, நான் பின்னாலயே வர்றேன்!” கருப்பசாமி புறப்பட்டுப்போனார்.

தோட்டத்தின் முதலாளி தங்கமணியின் ஒரே மகன் சூர்யா தோட்டத்தை வேடிக்கை பார்த்தபடி நின்றான்.

”சின்ன முதலாளி நீங்களா..? நீங்க தோட்டம் பக்கமே வரமாட்டீங்க, அத்தி பூத்தது மாதிரி இண்ணைக்கு வந்திருக்கீங்க?” ஆச்சரியமாகக் கேட்டார் கருப்பசாமி..

”கருப்பா…இந்த ஆண்டவன்ப்பாத்தியா..? குடுக்கிறவனுக்கு கூரைய பிச்சுகிட்டே குடுக்கிறான், நம்ம தோட்டத்துல எத்தன தேக்குமரம், எத்தன தென்ன மரம் எத்தன ரப்பர் மரம் இருக்குன்னு எனக்கே தெரியாது அந்த அளவுக்கு சொத்து சேத்து வெச்சிருக்காரு எங்கப்பா…வீட்டுல இருந்து சுகம் அனுபவிச்சு போர் அடிச்சுது அதான் தோட்டத்த சுத்தி பார்க்கலாமுன்னு வந்தேன். ஆமா எவ்வளவு தேங்கா கிடைக்குது இப்போ..?
:
”இதுவரைக்கும் 5000 தேங்கா வெட்டியிருக்கோம், இனியும் வெட்டுறதுக்கு நிறைய தென்னைமரமிருக்கு. முதலாளிக்கு குடிக்க இளநீர் வெட்டி கொண்டு வரட்டுமா.?” பவ்யமாய் கேட்டார் கருப்பசாமி..

”சரி கொண்டு வா.”

கருப்பசாமி எந்த மரத்தில் இளநீர் இருக்கிறதென்று தென்னை மரத்தை அண்ணாந்து பார்த்தபடியே நடந்தார்.

வசந்தி தென்னை மரங்களில் மூட்டில் வெட்டி போட்டிருக்கும் தேங்காய்களை பொறுக்கி போடுவதற்காக கையில் கடவத்துடன் வந்து கொண்டிருந்தாள்.
தோட்டத்தில் சூர்யா நிற்பதைப் பார்த்ததும் அவன் அருகில வந்தாள்.

”வணக்கம் சின்ன முதலாளி”

”வணக்கம்” சூர்யா அதிர்ந்தான். அவளைப் பார்த்த மாத்திரத்திலேயே நிலை குலைந்தான்.

”என்ன தெரியலையா சின்ன முதலாளி, நான் வசந்தி… உங்களுக்கு தேங்கா வெட்டிப்போடுறதே என் அப்பாதான்.

”கறுப்பனோட பொண்ணா நீ….வசந்தி இந்த ஆண்டவனப்பார்த்தியா அழக மட்டும் பொண்ணுங்களுக்கு கொஞ்சம் அதிகமாவே வெச்சிட்டான், நம்ம தோட்டத்துல இப்பிடியொரு புள்ளிமான் துள்ளி விளையாடுறது முன்னாடியே தெரிஞ்சிருந்தா அடிக்கடி வந்து உன் அழக அணு அணுவா ரசிச்சிருப்பேன், லேட் பண்ணீட்டனே!”

”சின்ன முதலாளி…நீங்க பணக்காரங்க, பணத்த தூக்கி எறிஞ்சா பல பொண்ணுங்க உங்க பக்கத்துல வந்து நிப்பாங்க, அவங்கள எல்லாம் விட்டுட்டு உங்க தோட்டத்துல வேலை செய்யற என் மேல கண் வைக்கிறீங்களே இது நியாயமா..?

”வசந்தி…இந்த ஆண்டவனப்பாத்தியா..? அழகுக்கு மட்டும் ஏழை பணக்காரன், உயர்ந்தவன் தாழ்ந்தவன், மேல்சாதி கீழ்சாதியிங்கற வித்யாசமே வைய்க்கமாட்டான், என்னப் பொறுத்த வரைக்கும் நீ ஒரு அழகு ஓவியம், உன்னநான் பார்த்து பார்த்து ரசிக்கணும், உன் பட்டு மேனிய தொட்டு தொட்டு தழுவணும், மின்னும் விழி அன்ன நடை, மின்னல் இடை, ஆப்பிள் கன்னங்கள், ரோஜா இதழ்கள், மொத்தத்தில் உன்னை நான் அடைய வேண்டும் வசந்தி உன்னை நான் அடையவேண்டும்.” அவன் ஒரு தேர்ந்த மேடைப் பேச்சாளன் போல் பேசினான்.

”சின்ன முதலாளி…அங்க சுத்தி இங்க சுத்தி கடைசியில என் மேலயே கண் வைக்கிறீங்களா..? எங்க அப்பா முப்பது வருஷமா உங்க தோட்டத்துல வேல செய்றவரு, உங்க அப்பா இந்த சேரியில ஒரு குடிசைய கட்டிக்குடுத்து இந்த தோட்டத்த காவல் காக்கிற பொறுப்பையும் குடுத்தார், அப்படிப்பட்டவரோட பொண்ணு நான், என் மேல ஆசப்படலாமா..? கொஞ்சம் யோசன பண்ணிப்பாருங்க”..

”வசந்தி…இந்த ஆண்டவனப்பாத்தியா ஆசைக்கு மட்டும் அளவே வைக்காம பண்ணீட்டான், வசந்தி நீ ஒரு ரோஜா மாதிரி, ரோஜா செடிய தோட்டக்காரன் நட்டா என்ன? அடுத்தவன் நட்டா என்ன? உங்கப்பா நட்டா என்ன?…ரோஜா மேல ஆசப்பட்டா அத அடையாம விட முடியுமா…?

”இந்த வசந்தி நீங்க நினைக்கிற பொண்ணு இல்ல.. இது மாதிரி கீழ்த்தரமான எண்ணத்தோட என்ன பார்க்காதீங்க, அப்பா வர்றாரு, அவருக்கு உங்க தப்பான எண்ணம் தெரிஞ்சா அவரு உசிரோட இருக்கமாட்டாரு…”
:
”இந்தாங்க சின்ன முதலாளி,,இளநீர்..”

இளநீர் எப்பவும் இனிப்பாத்தான் இருக்கும், ஆனா இப்ப சாப்பிட்டா அது இனிப்பா இருந்தாலும் கசப்பாத்தான் எனக்குத்தோணும், இனி அடிக்கடி இங்க வருவேன் இல்ல, அப்போ சாப்பிடுறேன்.." சொல்லிவிட்டு வசந்தியை பார்த்தபடியே நடந்தான்.

”சின்ன முதலாளி சொல்றது எதுவுமே எனக்கு புரியலம்மா..” கருப்பசாமி யோசித்தபடியே சொன்னார்..

” எனக்கு புரிஞ்சுது…நீங்க வாங்கப்பா… ” அவள் கடவத்தை கக்கத்தில் இடுக்கிப் பிடித்தபடி தென்னை மரத்தில் வெட்டி போட்டிருக்கும் தேங்காய்களை கடவத்தில் போட்டு ஏற்கனவே கூட்டிப்போட்டிருந்த தேங்காய் கூட்டத்தோடு சேர்த்துப் போட்டாள்.

தென்னை மரத்திலிருந்து கருப்பசாமி பறித்துப்போட்ட கொதும்புகளையும் கிலாஞ்சிகளையும், சில்லாட்டைகளையும் உலர்ந்த மட்டைகளையும் எடுத்து வந்து தென்னை ஓலையின் மட்டையிலிருந்து நார் உரித்து அதை சிறு சிறு கட்டுகளாக கட்டி வைத்தாள்.

தென்னை ஓலைகளை தனியாக அடுக்கி வைத்தாள். அந்த ஓலைகளைக் காய வைத்து இரண்டாகக் கீறி தண்ணீரில் நனைய வைத்து முடைந்து வைத்தால் குடிசையின் கூரையை வேய்ந்து விடலாம்.

வசந்திக்கு சட்டென்று பிரபாகரனின் நினைவு வந்தது. பெரிய வீட்டு பணக்காரனாக இருந்தாலும் அவன் அதை வெளிக்காட்டிக் கொள்வதே இல்லை. ஆடம்பரம், பகட்டு, அவனுக்கு பிடிப்பதில்லை
 
Top