• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Thaalikayiru -4

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

paulrasaiya

நாட்டாமை
Joined
Jun 5, 2018
Messages
36
Reaction score
206
Location
Irenepuram
அத்தியாயம் -4-

பனி படர்ந்த அதிகாலை காற்றின் ஆரவாரங்களோடு விடிந்திருந்தது. காற்று தென்னை மர ஓலைகளில் நிலை கொள்ள அதன் தாளத்துக்கு ஏற்றார்போல் அசைந்து ஆடிக்கொண்டிருந்தது தென்னை மரங்கள்.

வசந்தி தூக்கம் கலைந்து கண் விழித்து படுத்திருந்த பனையோலைப் பாயை சுருட்டி வைத்து விட்டு முற்றத்துக்கு வந்த போது கருப்பசாமி பல் துலக்கிக் கொண்டு நின்றார்.
கருப்பசாமி வாய் கொப்பளித்து முகம் கழுவி விட்டு கையில் சொம்புடன் மூலேதட்டுக்கு நடந்தார். சொசைட்டிக்கு கொண்டு செல்லும் பால்காரரிடம் அரை லிட்டர் பால் வாங்கிக்கொண்டு குடிசைக்கு வேகமாய் நடந்தார்.

ஒரு கப் டீ சாப்பிட்டுவிட்டு உடனே புதுக்கடை சந்தைக்கு போகவேண்டும் என்ற அவசரத்தில் வேகமாய் நடந்தார்.

வசந்தி முற்றம் கூட்டி தண்ணீர் தெளித்து கோலம் போட்டு முடித்திருந்தாள், அவரது அவசரம் கண்டு வேகமாக டீ போட்டு கொண்டு வந்து நீட்டினாள். கருப்பசாமி வேகமாய் குடித்து முடித்தார்.

”வசந்தி,,,நான் புதுக்கடை சந்தைக்குப் உரம் வாங்கப் போறேன், வர்றதுக்கு ஒன்பது மணி ஆகும்!”

”சரிப்பா!” சமையலறையில் நின்று குரல் கொடுத்தாள் வசந்தி. அவள் மனதில் பிரபாகரன் வந்து நின்றான். எப்பொழுதெல்லாம் தனிமை கிடைக்கிறதோ அப்பொழுதெல்லாம் அவன் நினைவுகளில் மூழ்கியிருப்பாள்.

அப்பா புதுக்கடை சந்தைக்குப் போகும் விஷயத்தை முன் கூட்டியே சொல்லியிருந்தால் பிரபாகரனுக்கு தகவல் கொடுத்து வரச்சொன்னால் அவனும் வந்திருப்பான்.

அவனோடு பேசி பொழுது ஓட்டியிருக்கலாம். வசந்தி அவன் நினைவுகளோடு பாத்திரங்கள் கழுவிக்கொண்டு நின்றாள்.
நாகர்கோவில் வேலை வாய்ப்பு அலுவலகத்துக்கு கார்டு புதுப்பிக்க பிரபாகரனோடு போன நிகழ்வுகள் அவள் மனதில் அசைவாடியது.
அவளது வகுப்புத்தோழிகளோடு தான் மூலேதட்டிலிருந்து புறப்பட்டாள் ஆனால் தகவல் முன்கூட்டியே பிரபாகரனுக்கு சொல்லப்பட்டதால் அவன் இருசக்கர வாகனத்தில் வெட்டுமணியில் காத்து நின்றான்.

வெட்டுமணியிலிருந்து நாகர்கோவில் சென்று திரும்பும்வரை அவனது பைக்கின் பின்னால் அமர்ந்து யாராவது தன்னை பார்த்து விடுவார்களோ என்ற பயத்தில் அணிந்திருந்த ஷால் கொண்டு முகத்தை மூடியிருந்தாள்.

அன்று வேலைவாய்ப்பு அலுவலகத்தில் கார்டு பதிவை சீக்கிரமாய் முடித்து விட்டு நாகர்கோவில் விஜைதா ஹோட்டலுக்குச் சென்றார்கள்.
ஹோட்டலின் நான்காவது மாடியில் ஆள் அரவமற்று இருந்தது அந்த ரெஸ்ட்ராரெண்ட். இருவரும் லிப்டில் ஏறி நான்காவது மாடிக்கு வந்தார்கள்.

இருக்கைகள் அனைத்தும் காலியாகவே கிடந்தன. யாரும் வந்து அமர்ந்து உணவு அருந்தவில்லை.

பிரபாகரனுக்கு அது வசதியாகவே இருந்தது. வெயிட்டர் மெனு கார்டை வைத்து விட்டு ஆர்டருக்காக காத்திருந்தான்.
மெனு கார்டின் எல்லா பக்கங்களிலும் மேய்ந்து விட்டு இறுதியாக வசந்தியின் கண்களைப் பார்த்துக் கேட்டான்

”என்ன சாப்பிடுற...?”

”சிக்கன் பிரியாணி..!”

”ரெண்டு சிக்கன் பிரியாணி..அப்பறம் ரெண்டு ஐஸ் கிரீம்!” வெயிட்டர் ஆர்டரை எடுத்துக் கொண்டு போகவும் பின்னால் வேறு ஒருவன் தண்ணீர் கொண்டு வைத்தான்.
வசந்தி பேச ஆரம்பித்தாள். ஒரு மாத நிகழ்வுகளை ஒன்று விடாமல் பேசிக்கொண்டிருந்தாள். தினசரி நாளிதழில் வரும் காதலர்கள் பற்றிய எல்லா தகவல்களையும் கதையாகச் சொன்னாள்.

” நம்ம காதலுக்கு என் வீட்டில அம்மா அப்பா சம்மதிக்கலையின்னா என்ன பண்ணலாம், பேப்பர்ல வர்றது மாதிரி நாம ரெண்டு பேரும் எங்கேயாவது ஓடிப்போலாமா..?!” பிரபாகரன் அவள் முகம் பார்த்துக் கேட்டான்.

சட்டென்று அவள் முகத்தில் சோகம் நிழலாடியது. பதில் சொல்லத் தெரியாமல் விட்டத்தைத் பார்த்தாள். அவள் நினைவுகளில் கருப்பசாமி வந்து வந்து போய்க்கொண்டிருந்தான்.
சிறு வயதில் அம்மா இறந்த போது வேறு யாராக இருந்தாலும் வேறு பெண்ணைத் திருமணம் செய்து கொண்டு மனைவியின் சொல் கேட்டு ஒரு வேலைக்காரி மாதிரி நடத்தி இருப்பார், ஆனால் அவர் அப்படிச் செய்யவில்லை.

என்ன தான் மகள் மீது பாசம் வைத்திருந்தாலும் வரும் மனைவி சும்மா இருக்க மாட்டாள். அவள் ஆஸ்திக்கு என்று ஒரு குழந்தை வேண்டும் என்று அடம் பிடித்து குழந்தை பெற்றுக் கொள்வாள்.

குழந்தை பிறந்து விட்டால் பாசம் முழுவதும் நகர்ந்து கொள்ளும், அப்பாவும் முதலில் பாசம் இருந்தாலும் இல்லாததுபோல் நடிக்கத் துவங்கி இறுதியில் இல்லாதவர் போல் மாறுவார்.

அந்த நிலை தன் மகளுக்கு வரக்கூடாது என்று திருமணமே செய்து கொள்ளாமல் வாழ்ந்து விட்டார். அப்படிப்பட்ட அவரை விட்டுப் பிரிந்து பிரபாகரன் அழைத்தான் என்று போய்விட்டால் தனிமை அவரது ஆயுளை குறைத்துக் கொள்ளும்.

ஐந்து வருடம் அதிகமாக இருக்க வேண்டியவரை தனிமை தத்து எடுத்துக் கொண்டு அவரை சீக்கிரம் மேலே அனுப்பி விடும்.

”என்ன வசந்தி...இவ்வளவு யோசிக்கிற...? ஒருவேள என் வீட்டில எங்கப்பா நம்ம காதலுக்கு சம்மதிக்கலன்னு வை, நாம ஓடிப்போய்தான் கல்யாணம் பண்ணிக்கணும், நான் கூப்பிட்டா என்கூட ஓடி வருவியா..? மாட்டியா?” குரலை சற்று உயர்த்திக் கேட்டான் பிரபாகரன்.

”அது மட்டும் என்னால முடியாது பிரபாகர்..அப்பாவ தனியா விட்டுட்டு நிச்சயம் நான் வரமாட்டேன், அப்பிடி ஒரு சூந்நிலை வந்தால் என் காதலுக்கு அப்பா நிச்சயம் குறுக்கே வரமாட்டார், உங்க அப்பாவ எதிர்த்துகிட்டு நீங்க என் கழுத்துல தாலி கட்டுவீங்களா பிரபாகர்..?” அவளது கேள்வியில் ஒரு கணம் ஆடிப்போனான்.

அதற்குள் வெயிட்டர் பிரியாணியை கொண்டு வந்து வைத்தான். இருவருக்கும் சிறு அமைதி நிலவியது. வெயிட்டர் அங்கிருந்து நகர்ந்ததும் கேட்டாள் வசந்தி.

”பதில் சொல்லவே இல்ல”

”நிச்சயமா உன் கழுத்துல தாலி கட்டுவேன், முதல்ல என் அப்பாகிட்ட நம்ம காதலச் சொல்வேன், அவர் ஏத்துக்கிட்டா நம்ம கல்யாணம் அப்பா சொல்றது மாதிரி நடக்கும், அவர் ஏத்துக்கலையின்னா நாம நினைக்கிறது மாதிரி நடக்கும், போதுமா..!” அவன் பேசியது கேட்டு அவள் மனம் குளிர்ந்தது.

அதன்பிறகே பிரியாணியை சாப்பிட ஆரம்பித்தாள் வசந்தி. இருவரும் சாப்பிட்டு முடித்த போது ஒரு மணி நேரம் கரைந்திருந்தது.

வெயிட்டர் பில் வைத்து விட்டு பவ்யமாய் நின்றான். பிரபாகரன் தனது பேண்ட் பாக்கெட்டில் கை விட்டு பர்ஸ் எடுத்து பிரித்து பணம் எடுத்து வைத்தான்.

அங்கிருந்து நேராக கலெக்டர் ஆபீஸ் வந்து இடது பக்கம் திரும்பி கன்னியாகுமரிக்கு தனது இரு சக்கர வாகனத்தை விரட்டினான் பிரபாகர்.

வழிநெடுக அவனுடன் பேசியும் சிரித்தும் நேரம் போனதே தெரியவில்லை. வழியில் பனம் நுங்கு சர்பத்தும் பனை ஓலையில் பட்டை தயாரித்து அதில் பதனீரும் விற்பனைக்கு வைத்திருந்தார்கள்.

வசந்திக்கு பதனீர் குடிக்க வேண்டும் போல் தோன்றியது, ஆனால் பிரியாணி சாப்பிட்டு வயிறு நிரம்பி இருந்ததால் வரும்போது சாப்பிடலாம் என்று விட்டு வைத்தாள்.
கன்யாகுமரி வந்து சேர்ந்த போது கடற்கரை எங்கும் மனிதர்கள் நிறைந்து நின்றார்கள். டிக்கெட் கவுண்டருக்கு முன்பு இருந்த வரிசையில் இருவரும் நின்றார்கள்,

வட இந்தியாவைச் சேர்ந்தவர்களே அதிகமாக டிக்கெட் வாங்க நின்றிருந்தார்கள். கூட்டத்தின் இடையே தமிழ் பேசும் பிற மாவட்டத்துக்காரர்களும் நின்றிருந்தார்கள்.
கூட்டம் மெல்ல மெல்ல நகர்ந்து கொண்டிருந்தது. டிக்கெட் வாங்கிவிட்டு போட் நிற்கும் பகுதிக்கு வந்தார்கள்.

ஆளுக்கொரு தண்ணீரில் மிதக்கும் ஜாக்கெட் எடுத்துக்கொண்டு போட்டில் ஏறிக்கொண்டார்கள். போட் ஆடி அடி நின்றிருந்தது.

பிரபாகர் முதலில் ஏறிவிட்டு அவன் கரத்தை நீட்டினான். அவள் அவன் கரத்தை வலுவாய் பிடித்து போட்டினுள் ஏறினான்.

அவள் மென்மையான கைவிரல்கள் ஐந்தும் அவன் உள்ளங் கைக்குள் அழுத்தமாய் படிந்திருந்தது. அவள் விரல்களை விடுவிக்க பலமாய் முயற்சி செய்து தோற்றுப்போனாள்.

”எல்லாரும் நம்மளையே பார்க்கிறாங்க, கைய விடுங்க!” வசந்தி படகின் உள்ளே வந்தபடி அவனுக்கு மட்டும் கேட்கும்படியாகச் சொன்னாள்.
பிரபாகரன் சுதாகரித்து கையை மெல்லமாய் விடுவித்தான். அவள் விரல்கள் உருவிச் செல்கையில் ஒரு வித கிறக்கம் வந்து கண்களை இறுக மூடினான்.

அவளது கைவிரல்களின் ரேகைகள் அவன் கைகளில் பதிவாகி இருக்கிறதா என்று தனது உள்ளங்கையை திரும்பத் திரும்ப விரித்துப் பார்த்தான்.
ஒரு பஸ்சில் பயணிக்கும் பயணிகளைப்போல இருக்கைகலில் அமர்ந்து கொண்டு கடலில் நீல நிறம் கண்டும், கரையிடம் சேதி சொல்ல வந்து சொல்லாமல் திரும்பிச் செல்லும் அலைகளை ரசித்தபடியும் அமர்ந்து இருந்தார்கள்.

ஐந்து நிமிடப் பயணத்துக்குப் பிறகு ஜாக்கெட்டுகளை தரையில் போட்டுவிட்டு விவேகானந்தர் பாறைக்கு நடந்தார்கள்.

காலணிகளை உருவி தந்துவிட்டு டோக்கன் வாங்கிக் கொண்டு வெறும் காலில் நடந்த போது, மதிய வெயில் இறக்கி விட்டுச் சென்ற வெப்பம் பாறைகளின் வழியாக பாதங்களைச் சுட்டது.

கால்களைப் படிக்கட்டில் வைத்த போது வெறும் கால்கள் வெப்பத்தை காந்தமாய் இழுக்க கால் சுடுகிறது என்று தடுமாறினான் பிரபாகரன்.

வசந்திக்கு படிகளில் நடந்த போது அதிகமாய் சுடவில்லை. அவள் கால் பாதங்கள் செருப்பு அணிந்தும் அணியாமலும் நடந்து பழகியதில் சூடு பெரிதாய் தெரியவில்லை.
அங்கிருந்து திருவள்ளுவர் சிலை அருகே சென்று அவன் விரல்களைக் கோர்த்தபடி நடந்தாள். காந்தி மண்டபம் வந்து காந்தியடிகளின் பல்வேறு புகைப்படங்கள் பார்த்து வியந்தாள்.

அந்த நினைவுகள் அவள் மனதிற்குள் ஒரு பரவசத்தை ஏற்படுத்தியது. பிரபாகரன் தன் கழுத்தில் தாலி கட்டுவான் என்று உறுதியாய் சொன்னது அவன் மீது இருந்த மதிப்பை மேலும் உயர்த்தியது.

அன்று நடந்த எல்லா நினைவுகளையும் நினைக்க நினைக்க அவளுக்கு சிரிப்பு வந்தது.

அவள் உலையில் அரிசி போட அடுப்பங்கரை வந்த போது விறகுகள் இல்லாமல் இருந்ததைக்கண்டு பக்கத்திலிருந்த ரப்பர் தோட்டத்தில் விழுந்து கிடக்கும் ரப்பர் தோடுகளை பொறுக்க கடவம் எடுத்துக்கொண்டு நடந்தாள்.
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
:D :p :D
நான்தான் First,
பால்ராசய்யா சார்
 




Last edited:

Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top