• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Thaalikkayiru 9

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

paulrasaiya

நாட்டாமை
Joined
Jun 5, 2018
Messages
36
Reaction score
206
Location
Irenepuram
அத்தியாயம்- 9

காப்பிக்காடு சாலை தார் போட்டு பளிச்சென்றிருந்தது. முன்பு குழித்துறை தாமிரபரணி ஆற்றிலிருந்து தண்ணீர் மிடாலம் குளச்சல் பகுதிகளுக்கு கொண்டு செல்ல சாலையோரம் சிமெண்ட் குழாய் அமைத்து இருந்தார்கள்.

குழாய் இணைப்பு வழியாக தண்ணீர் திறக்கும் போதெல்லாம் குழாய் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் சாலையிலேயே வடிந்து சேறும் சகதியுமாய் கிடந்தது,

உடைப்பு ஏற்பட்ட இடத்தைத் தோண்டி சரிசெய்துவிட்டு திரும்பினால் வேறு இடத்தில் உடைப்பு ஏற்பட்டு மீண்டும் தண்ணீர் சாலையை நிரப்பிக்கொண்டு நிற்கும்.

பல வருடங்களாக பட்ட வேதனைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் அளவுக்கு சாலையில் தாரிட்டு அழகு படுத்தியிருந்தார்கள்.

முன்பெல்லாம் குண்டும் குழியுமாகக் கிடந்த சாலையில் காப்பிக்காடு டாஸ்மாக் கடையில் தண்ணி அடித்து விட்டு இரு சக்கர வாகனத்தில் வரும் பலரும் சாலையின் குழிகளில் விழுந்து எழுவதுண்டு.

இனி அந்தக் கவலை இல்லை என்றாலும் சாலையில் வேகமாய் போகும் இளைஞர்களுக்கு சாலையின் வளைவுகள் ஆபத்தை விலை பேசிக்கொண்டே இருந்தன.

காப்பிக்காடு டாஸ்மாக் கடையில் நிரந்தர ஊழியரைப்போல தினமும் வந்து போனான் பிரபாகரன். அவன் அங்கிருந்து நகர்வது அனேகமாக போதை தலைக்கேறி விழுந்து கிடந்து யாராவது தூக்கி ஆட்டோவில் ஏற்றிச் சென்றால் தான் உண்டு.

போதை தலைக்கேறி வரும் குடிமகன்களை கெட்ட வார்த்தை பேசி வம்பை விலை கொடுத்து வாங்கினான். பணக்கார திமிர் அவனிடம் விளையாடியது.

அவனது குடும்ப பின்னணி தெரிந்து பலரும் அடங்கிப்போனார்கள், இதுவே கேட்க நாதியற்ற அடிமட்டத்து வீட்டிலிருந்து வந்தவன் என்றால் பலரும் தங்கள் பல்த்தை அவன் உடம்பில் காட்டி இருப்பார்கள்.

இரவு ஏழு மணியிருக்கும் பிரபாகரன் அன்று என்னவோ கையில் காசில்லாமல் கொஞ்சமாய் குடித்து அதிகம் போதை ஏற்றாமல் இருந்தான்.

அவன் காப்பிக்காடு அரச மரத்தின் கிளைகளில் வந்தமர்ந்த பறவைகளை வேடிக்கைப் பார்த்தபடியும் அதன் குரல்களையும் ரசித்த படி நின்றான்.

சூர்யா இரு சக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தான். காப்பிக்காடு முக்கில் பிரபாகரன் நிற்பதைப் பார்த்ததும் சட்டென்று வண்டியை நிறுத்தினான்.

”என்ன பிரபாகரன் தண்ணி அடிச்சுகிட்டு வீதி வீதியா அலையுற, வசந்தி மேல ஆசப்பட்ட உனக்கு அவள அனுபவிக்கத் தெரியல, நானா இருந்தா சாந்தி முகூர்த்ததுக்கு எண்ணைய்க்கோ ஏற்பாடு பண்ணியிருப்பேன். நீ சேரியில இருக்கிற வசந்திய காதலிச்ச, கேடி ஜோசப் என்னடாண்ணா வசந்திய கொத்திகிட்டு போயிட்டான், நீ இப்போ தண்ணியடிச்சுகிட்டு வீதி வீதியா அலையிற!” சூர்யா நேருக்கு நேராய் கேட்டான்.

: ” எனக்கு சோகம் அதனால குடிச்சேன், நான் குடிப்பேன், வீதி வீதியா அலைவேன், என்ன வேணுமிண்ணாலும் பண்ணுவேன், என்னக் கேக்கிறதுக்கு நீங்க யாரு”

” சொல்றேன்னு தப்பா நினைக்காத, உன் அப்பா இந்த ஊருக்கே பெரிய மனுஷன், அவரோட புள்ள நீ, இப்பிடி குடிச்சிகிட்டு வீதியில நடந்தா பார்க்கிறவங்க உன்ன மட்டுமில்ல உன் அப்பாவையும் சேர்த்து குறை சொல்வாங்க!”

: ”அப்பாவா, என்ன இந்த நிலமைக்கு ஆளாக்கினதே என் அப்பா தான், பணத்தால எதையும் சாதிக்க முடியுமுன்னு நினைக்கிறாரு, அவரால நான் இண்ணைக்கு என் சந்தோஷத்த இழந்தேன், நிம்மதிய இழந்தேன், அவரு எனக்கு அப்பா இல்ல, விரோதி, வில்லன்.”

”பெத்த மனம் பித்து, பிள்ளை மனம் கல்லுன்னு சொல்வாங்க,அது மாதிரி தான் இருக்கு உன் கதயும்.,ஆயிரம் தான் இருந்தாலும், அவர் உன் அப்பா, அவர் எந்த முடிவ எடுத்தாலும் அது உன் நன்மைக்குத்தான் இருக்கும்.”

: ”எது நன்மை, என் காதலிய தீர்த்துக்கட்ட தீர்மானிச்சி கேடி ஜோசப்ப ஏவி விட்டதே எங்கப்பா தான், அவர் மட்டும் அப்படி செய்யலேண்ணா வசந்திய கல்யாணம் பண்ணி இண்ணைக்கு நான் சந்தோஷமா இருந்திருப்பேன்.”

”ஒரு சேரிப்பொண்ண தேடிப்பிடிச்சி காதலிச்சியே இது உனக்கு தேவைதானா? அப்படியே காதலிச்சிருந்தாலும் கழுவுற தண்ணியில நழுவுற மீனா காரியம் முடிஞ்சதுக்கப்பறம் கை கழுவியிட்டு நழுவியிட வேண்டியது தானே, இது தெரியாம கல்யாணம், கச்சேரி, அது இதுன்னு தேவையில்லாத முடிவ எல்லாம் நீயே எடுத்துகிட்ட, இப்ப ஒண்ணும் குறஞ்சு போயிடல, அந்தப் பொண்ண கேடி ஜோசப் கல்யாணம் பண்ணியிட்டான், அவ்வளவுதான், அவள மறந்துட்டு வேற பொண்ண கல்யாணம் பண்ணிக்கிறது தான் புத்திசாலித்தனம்”.

: ”நீங்க ஆயிரம் சொன்னாலும் நான் என் முடிவ மாத்திக்க தயாரா இல்ல, நான் ஆசைப்பட்ட பொண்ண தான் அடைய முடியல அவ நினைவுகள் என்ன விட்டு பிரியக்கூடாதுன்னு பிடிவாதமா இருக்கேன். அதுக்காகத்தான் நான் குடிக்கிறேன்.”

”நீ குடிக்கிறது தப்பில்ல, உன் கவலைய மறக்கிறதுக்கு நீ தாராளமா குடிக்கலாம், அதுக்கும் ஒரு அளவு இருக்கு, நீ குடிக்க ஆசைப்பட்டா என் வீட்டுக்கு வந்திடு, நாம ரெண்டு பேரும் சேர்ந்தே குடிப்போம்.”

: ”சரி, நாளைக்கே உங்க வீட்டுக்கு வந்திடுறேன், இப்போ அவசரமா என் அம்மாவ சந்திச்சு 5000 ரூபா பணம் வாங்கணும் நான் வர்றேன்!” அவன் சொல்லிவிட்டு நிறுத்தியிருந்த பல்சர் வண்டியில் ஏறிப் பறந்தான்..

அவன் போவதை வேடிக்கை பார்த்தபடி நின்றான். சூர்யா. அவன் மனதில் ஏதேதோ கூட்டல் கழித்தல்கள் வந்து போயின.

தேவி குளத்தின் அருகில் இருக்கும் அவனது வீட்டுக்கு வந்த போது வீடு அமைதியாக இருந்தது. அவனது அப்பா தீப்பொறி திவாகர் வயலங்கரை பங்களாவுக்குச் சென்றிருந்தார்.

அம்மா மகேஷ்வரி டி.வியில் சீரியல் பார்த்துக்கொண்டிருந்தாள். பிரபாகரன் ஓடி வந்து அம்மா கையிலிருந்த ரிமோட்டை வாங்கி சேனல்கள் மாற்றிக்கொண்டிருந்தான்.

ஒரு சேனலில் பழைய சோகப் பாடல்கள் ஒலிபரப்பாகிக்கொண்டிருந்தன. அந்தப் பாடல்களை ரசித்துக் கொண்டிருந்தான் பிரபாகரன்.

”அம்மா...அஞ்சாயிரம் பணம் வேணும்மா!”

”நேத்து தானடா அஞ்சாயிரம் பணம் வாங்கீட்டுப் போன?”

”அது செலவாகிப் போச்சும்மா, “

”ஏண்டா இப்பிடி குடிச்சு குடிச்சு உடம்ப கெடுத்துக்கற?” கேட்டாள் மகேஷ்வரி.

”நான் என்ன பண்றது, அப்பாவுக்கு நான் குடிக்கணுமுன்னு ஆச, நிறைவேத்தியிட்டாரு, அதனால தான் நான் குடிக்கிறேன்!”

”நீ குடிக்கிறதுக்கு அப்பா மேல ஏண்டா பழியப் போடுற?”

”அப்பா என்ன செஞ்சார்ன்னு உனக்குத் தெரியாது!”

”என்னடா அப்பிடி பெருசா செஞ்சிட்டாரு!”

”வசந்தி நம்ம சாதிக்கார பொண்ணு இல்ல தான், நம்ம வசதி இல்ல தான் ஆனாலும் என் மனசுக்குப் புடிச்சிருந்துது அதனால அவள விரும்ப ஆரம்பிச்சேன், அப்பா கேடி ஜோசப்ப ஏற்பாடு பண்ணி வசந்திய தீர்த்துக் கட்ட நினைச்சாரு, ஆனா கேடி ஜோசப் அவ அப்பாவயும் அவளையும் மிரட்டி வசந்தி கழுத்துல தாலியக் கட்டிகிட்டான்!” சொல்லச் சொல்ல சிவந்திருந்த அவன் கண்கள் மேலும் சிவந்து கலங்கியது. கண்ணீர் அடர்த்தியாய் வழிந்தது.

மகேஷ்வரிக்கு என்ன பதில் சொல்வதென்று தெரியாமல் தடுமாறினாள். ஆயிரம் தான் மகன் தவறு செய்தாலும் தாயின் முன்னால் கண்ணீர் வடிக்கும் மகனைப் பார்த்து எந்த தாயும் பார்த்துக்கொண்டு நிற்கமாட்டாள்,

மகேஷ்வரி அவன் தோள்களை ஆதரவாய் பற்றிக்கொண்டு அவன் கன்னங்களில் வடிந்திருந்த கண்ணீரை துடைத்து விட்டாள், குரல் இறுகிக் கிடந்த தனது மகனை மார்போடு அணைத்தாள்.

ஒரு மெளனம் தொடர்ந்தது. அந்த மெளனத்தில் சிறு இலை விழும் சத்தமும் துல்லியமாய் கேட்டது. மகேஷ்வரி அவன் தலை முடிகளுக்குள் விரல் நுழைத்து முடிகளை வாரி விட்டாள்.

”அவ தான் இன்னொருத்தனுக்கு மனைவி ஆகிட்டாளே, அப்பறம் எதுக்குடா அவளையே நினைச்சுகிட்டு, இந்தாப் பார்டா, ஒரு பொண்ணு இன்னொருத்தனுக்கு மனைவி ஆகியிட்டா அவள மனசில கூட நினைச்சுப் பார்க்கக் கூடாது, அது காதலியா இருந்தாலும் சரி, இப்போ அவ அடுத்தவன் பொண்டாட்டி, அவள நினைக்கிறது தப்பு!”

”போம்மா...இல்லாததையும் பொல்லாததையும் சொல்லிகிட்டு...நீ காசு குடு நான் நான் காப்பிக்காடு போகணும், இப்பவே மணி எட்டரை ஆகப்போகுது.!”

”டேய்..சொன்னா கேளுடா!..சாப்பிட்டு தூங்குறதுக்கு வழியப் பாரு!”

”நான் நிம்மதியாத் தூங்கி நீ பார்த்திருக்கிறியா?” அவனது கேள்:விக்கு மெளனமே பதிலாக வந்தது மகேஷ்வரியிடமிருந்து. எழுந்து சென்று பீரோவைத் திறந்து ஐந்து ஆயிரம் ரூபாய் நொட்டுகளை எடுத்து வந்து கொடுத்தாள்.

மகன் போதையாக தாய் பணம் கொடுத்தனுப்பும் பரிதாப நிலை. அவன் மனம் காய்ப்பட்டது உண்மை ஆனால் அந்த பழக்கத்திலிருந்து அவன் மீண்டு வர வேண்டும்.

மகேஷ்வரி பூஜையறைக்குச் சென்று சாமி முன் வேண்டிக்கொண்டாள். கண்களிலிருந்து கண்ணீர் கசிந்தது. பூஜையறையை விட்டு வெளியேறியபோது பிரபாகரன் அங்கு இல்லை.

தன் மகன் மீதான கவலை நாளுக்கு நாள் கூடிக்கொண்டே இருந்தது. வாலிப வயதில் காதல் வருவது சகஜம், அது பலரையும் பிழிந்தெடுக்கும் போது தான் காதல் மீதே வெறுப்பு வந்து விழுகிறது.

ஏக்கப் பெருமூச்சொன்றை விட்டபடி ஷோபாவில் சரிந்தாள் மகேஷ்வரி. தனது கணவன் பணம், அந்தஸ்து, கெளரவம், மானம் என்று அவைகளின் வாலைப் பிடித்துக்கொண்டு நடக்கிறார்.

பணக்காரராக இருப்பதால் விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை அவரை விட்டு என்றோ அகன்றிருந்தது. அவரது இலட்சியம் பணம் என்றானபின் அது வந்து சேர்ந்த போது மீதியும் அவருடன் சேர்ந்து கொண்டது.

அப்பாவுக்கும் மகனுக்குமான உறவு சுருங்கியே இருந்தது. பிரபாகரனுக்கு ஐந்து வயது ஆன போது வெளிநாடு போய் சம்பாதிக்கத் துவங்கியவர் அவனுக்கு இருபத்தி ஐந்து வயது வரை வெளிநாடு தான் அவர் உலகம்.

இனி அவர் வெளிநாடு போவதில்லை என்று முடிவு செய்திருந்தாலும் இழந்த இளமையை அவரால் திருப்பிக் கொண்டு வர இயலுமா? அதைத்தான் பணத்தால் வாங்க முடியுமா?

பிரபாகரனின் ஆசையை நிறைவேற்றி இருக்கலாமோ என்று கூட தோன்றியது. ம்கூம் கிழக்கே உதிக்கும் சூரியன் மேற்கே உதிக்கலாம் ஆனால் தனது கணவர் மாறவே மாட்டார்.

மகேஷ்வரியிடமிருந்து மீண்டும் மீண்டும் பெருமூச்சுகள் வந்து கொண்டே இருந்தன.
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top