• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Thanner Vandi Isakki -

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Srija Venkatesh

SM Exclusive
Joined
Jan 17, 2018
Messages
408
Reaction score
4,349
Location
chennai
தண்ணீர் வண்டி இசக்கி

தண்ணீர் வண்டி இசக்கியை உங்களுக்குத் தெரிந்திருக்க வாய்ப்பே இல்லை. நீங்கள் நினைப்பது போல டாஸ்மாக் தண்ணி வண்டி அல்ல அவர். 1990களின் இறுதி வரை மிகவும் பரவலாகக் காணப்பட்ட தண்ணீர் எடுத்துக்கொடுக்கும் தொழிலாளர்களில் ஒருவர் தான் நம் இசக்கி. பிளாஸ்டிக் குடங்களில் ஆற்றிலிருந்தோ, கிணற்றிலிருந்தோ தண்ணீர் சேந்தி அவற்றை வண்டியில் வைத்து கல்யாண வீடு அல்லது பிற விசேஷங்கள் நடக்கும் வீடுகளுக்குக் கொடுப்பார். குடத்துக்கு 50 காசு முதல் ஒரு ரூபாய் வரை கிடைக்கும். விசேஷங்கள் இல்லாத காலங்களில் சில வீடுகளுக்கு நல்ல தண்ணீர் எடுத்துக் கொடுப்பார், விவசாய வேலைகளுக்கும் போவார். நெல்லை மாவட்டத்திலேயே மிகவும் சின்னஞ்சிறிய கிராமத்தில் தான் அவர் பிழைத்து வந்தார். அந்த ஊரில் இருக்கும் ஐந்து தெருக்களில் என்ன நடந்தாலும் தண்ணீர் இசக்கி தான் தர வேண்டும். நல்ல வேளையாக அந்த ஊரில் அவருக்குப் போட்டியாக யாரும் வரவில்லை.

அவர் ஆசைப்பட்டுத் தேர்ந்தெடுத்தாரோ இல்லை வாழ்க்கை அவர் மீது திணித்த கட்டாயத்தால் இந்த தொழிலுக்கு வந்தாரோ தெரியாது. ஆனால் அதனை மிகவும் விரும்பிச் செய்து வந்தார் என்பதை ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும். முதலில் சைக்கிளின் பின் கேரியரின் பக்கவாட்டில் இரு குடங்களைத் தொங்க விட்டுக் கொண்டு சென்றவர் பின்னர் அதனை நாலு சக்கர வாகனமாக மாற்றினார். எதையும் அவர் விலை கொடுத்து வாங்கவில்லை என்பது தான் இதில் கவனிக்க வேண்டிய விஷயம். தனது சைக்கிளின் முன்பாகத்தை அப்படியே வைத்து பட்டறையில் இருக்கும் ஏதேதோ சாதனங்களை கொண்டு குடங்களை வைக்க ஒரு வண்டியை உருவாக்கினார். மற்ற வண்டிகளைப் போல இல்லாமல் இதில் சைக்கிள் கைப்பிடி முன்னால் இருக்கும். பின்னால் சைக்கிளின் பழைய டயர் பொருத்தப்பட்ட அந்த ஏடாகூட வண்டி டகடகவென சத்தம் எழுப்பிக் கொண்டு செல்லும். அந்த வண்டியை அவரைத்தவிர வேறு யார் ஓட்டினாலும் விபத்து நிச்சயம். காரணம் ஹேண்டில் பாரை வலப்புறம் வளைத்தால் பின்னால் வரும் வண்டி நம்மை 40 டிகிரி கோணத்தில் தெற்கே இழுக்கும். அதனால் வேறு யாரும் அதனை ஓட்ட விரும்பவே இல்லை. இருந்தாலும் அவர் அதற்கு செய்யும் பந்தோபஸ்துகள் இன்று பென்ஸ் கார் வைத்திருப்பவர்கள் கூட அப்படிச் செய்வார்களா என்பது சந்தேகம் தான்.

எங்கள் ஊரில் ஏழைக்கேற்ற எள்ளுருண்டையாக கல்யாணம் மண்டபம் ஒன்றும் இருந்தது. சென்னையில் பெரிய தொழிலதிபராக இருக்கும் ஒரு புண்ணிவான் அதனை மிகவும் குறைந்த வாடகைக்கு கொடுப்பதால் அத்தனை விசேஷங்களும் அங்கே தான் நடக்கும். கூரையில் தொட்டி கட்டி தண்ணீரைத்தேக்கி வைக்கும் பழக்கமோ, மோட்டரைப் போட்டு தண்ணீரை மேலே ஏற்றும் வித்தையோ எங்கள் கிராம மக்கள் அறியாதவைகளாகவே இருந்தன. எந்த விசேஷம் என்றாலும் முதல் பத்திரிக்கை இசக்கிக்குத்தான். தண்ணீர்த் தேவை தான் காரணம் அதற்கு. சமையலுக்கு, சாப்பிட்டவர்கள் கை கழுவ, குடிக்க என தண்ணீர்த் தேவைகள் நீளுமே? சிவப்பு நிற கையில்லாத பனியன், காக்கி நிறத்தில் ஒரு அரை டவுசர் அது தான் அவரது சீருடை. எப்பேர்ப்பட்ட கல்யாணமானாலும் சரி, யார் வீட்டு விசேஷம் என்றாலும் சரி இந்த உடை மாறாது.

இசக்கி தொழில் செய்யும் நேர்த்தியை இன்று முழுவதும் பார்த்துக்கொண்டிருக்கலாம். சமையலுக்கு ஒரு தண்ணீர், குடிக்க ஒரு தண்ணீர், கை கழுவ ஒரு தண்ணீர் என்று பிரித்துக்கொள்வார். முதல் நாளே சமையற்காரருடன் பேசி சமையலுக்கு எத்தனை நடை தண்ணீர் தேவைப்படும் என்பதையும் விசேஷம் நடத்துபவரோடு பேசி குடிக்கவும், மற்ற தேவைகளுக்கும் எத்தனை நடை என்பதையும் தெளிவாகத் தெரிந்து கொண்டு விடுவார். ஓரிரு நடைகள் கூடலாம் குறையலாம் அவ்வளவே. இங்கு நடை என்பது சுமார் 10 குடங்கள் கொண்ட அவரது வண்டி ஒரு முறை தண்ணீர் எடுத்து வருவதைக் குறிக்கும்.

முதலில் ஊருக்குக் கிழக்கே இருக்கும் ராம நதிக்குப் போவார். தண்ணீர் வரத்துக்காலமானால் நடு ஆற்றிற்குப் போய் தண்ணீர் மொள்வார். இல்லை வறண்ட காலம் என்றால் ஆற்றின் நடுவே ஐந்து ஊற்றுக்களைத் தோண்டுவார். ஓரடி தோண்டினாலே போதும் இளநீர் மாதிரி தூய நீர் பொங்கி வரும். அதனைக் குடங்களில் நிரப்பிக் கொள்வார். இது தான் குடிக்க. எத்தனை நடை சொன்னார்களோ அத்தனை நடை கொண்டு போவார். குடி நீருக்கு அடுத்து சமையலுக்கான தண்ணீர். இதற்குக் குளத்துக்குப் பக்கத்தில் இருக்கும் தென்னந்தோப்பில் ஒரு கிணறு உண்டு. அதன் பெயரே தோப்புக்கிணறு. அதன் தண்ணீர் உப்பே இல்லாமல் ருசியாக இருக்கும். அதனால் அதன் உரிமையாளர் ஊர்மக்களுக்கு இலவசமாக நீர் எடுக்க அனுமதி அளித்திருந்தார். அதிலிருந்து எடுக்கும் நீரும் சன்னமான வெள்ளைத்துணியால் நன்கு வடிகட்டப் பட்டுக் கொண்டு செல்லப்படும். பின்னர் கை கழுவும் நீர். இருப்பதிலேயே அது தான் சுலபம் அவருக்கு. குளத்திலிருந்து அப்படியே நீரெடுத்துச் சென்று விடுவார். யாராவது கேட்டால் "கை கழுவ இந்தத்தண்ணி போதாதாங்கும்?" என்று பதில் சொல்லி விடுவார்.

வாழ்க்கை ஒரே சீராக ஓடிக்கொண்டிருந்தது. கல்யாணமாகி காலாகாலத்தில் இரு குழந்தைகளும் பிறந்தார்கள். மகளை +2 வரை உள்ளூர்ப் பள்ளியிலேயே படிக்க வைத்து தாழையூத்து சிமிண்ட் தோழிற்சாலையில் வேலை பார்க்கும் மாப்பிள்ளைக்குக் கட்டி வைத்து விட்டார். மகன் சிவசங்கரன் தான் கொஞ்சம் தொல்லை கொடுத்தான். அவனது கனவுகள் அந்தச் சிறிய ஊரைத்தாண்டி பறந்தன. பெரிய பணக்காரனாக ஆகணும் என்ற வெறி அவனை உந்தித்தள்ளியது. அதற்கு ஏற்ற இடம் சென்னை தான் என யாரோ கொளுத்திப் போட பக்கென பற்றிக் கொண்டான் சிவசங்கரன். சென்னையில் படிக்க வேண்டும் என்று அடம் பிடித்தான். "நல்லாப் படிச்சு மெட்ராசுக்கு வேலைக்குப் போயேன்! என்னால அங்க படிக்க வைக்க முடியாது. நம்ம பள்ளியோடத்துக்கு என்னலே குறைச்சலு? மெட்ராசுல படிக்கப் போட உங்கப்பன் என்ன நகைக்கடையாலே வெச்சிருக்கேன்?" என்று சொல்லி அவன் வாயை அடைத்து விட்டார். ஆனால் சிவசங்கரன் சும்மா இல்லை. யார் யாரையோ பிடித்து சென்னையில் ஒரு வேலையில் அமர்ந்து விட்டான். "சவத்து மூதி! படிக்காம வேலைக்குப் போயிருக்கு. இவன் மூஞ்சிக்கு என்ன கலெக்டர் வேலையா கொடுப்பாக? தறுதலை பியூன் வேலைக்குப் போயிருக்கும்" என்று திட்டினார். ஏதோ தண்ணி ஆபீசில் வேலை என்றான் சிவசங்கரன்.

காலங்கள் மெல்ல மாறத்துவங்கின. கிராமத்திலேயே சில வீடுகளில் மேலே ஓவர்ஹெட் டேங்க் கட்டி அதிலிருந்து இணைப்புக் கொடுத்து குழாய்களில் நீர் வர ஆரம்பித்தது. கல்யாணம் மண்டபத்திலும் அதே ஏற்பாட்டை முதலாளி செய்து கொடுத்தார். அதனால் குடி நீர் மட்டுமே அவன் எடுத்து வர வேண்டும் என்றானது. பின்னர் மெல்ல மெல்ல அதுவும் இல்லை என்றானது. காரணம் ஆற்றில் மணல் அள்ள ஆரம்பித்தார்கள். ஆறு தன் உயிரை விட ஆரம்பித்தது. ஆற்றில் ஊற்றுப் போட்டால் வரும் தண்ணீர் ஒரே நாற்றமாக இருந்தது. செத்த ஆற்றின் நீர் தூய்மையாக இல்லை என்று மக்கள் பெரு நகரங்களைப் போல பிளாஸ்டிக் கேன்களில் குடி நீரை விலைக்கு வாங்க ஆரம்பித்தார்கள். இசக்கியால் ஏனோ இந்த மாறுதல்களை ஒப்புக்கொள்ளவே முடியவில்லை. "குடிக்கத்தண்ணிக்குக் காசாவே? இது என்ன காலம் இப்படி ஆயிட்டு?" என்று அங்கலாய்த்துக் கொண்டார். "நீயும் காசு வாங்கிட்டுத்தானேவே குடிக்க தண்ணீ குடுத்த" என்றான் ஒரு இளவட்டம். அதிலிருந்து அந்தப் பேச்சையும் விட்டு விட்டார்.

இந்த நிலையில் ஊருக்கு வந்த அவரது மகன் நல்லதொரு வியாபார வாய்ப்பைக் கண்டான். சென்னையிலிருந்து ஏதேதோ உபகரணங்களை வாங்கி வந்து வீட்டின் பக்கத்திலேயே ஒரு ரூம் கட்டி அதில் பொருத்தினான். அது தண்ணீரை தூய்மை செய்து தரும் என்று சொன்னான். அதன் பெயரும் ஏதோ சொன்னான் ஆனால் இசக்கிக்கு அந்தப் பெயர் வாயில் நுழையவில்லை. மோட்டர் போட்டு வெள்ளமென நீரை ஒரு குழாய் வெளியே தள்ள அந்த உபகரணங்கள் அந்த நீரை தூய்மை செய்தன. மற்றொரு குழாய் வழியே கழிவு நீரும் வெளியேறியபடி இருந்தது. குழாயின் வழியாக வரும் சுத்தமான தண்ணீரைக் கேன்களில் அடைத்து சீல் வைத்தான். "ஏன்ப்பா இப்படி தண்ணி நிறைய வீணாப் போகுதே? இது நல்லதில்லப்பா" என்ற இசக்கியை புன்னகையால் புறந்தள்ளினான் மகன்.

நல்ல தண்ணீர் ஒரு கேனுக்கு 10 ரூபாய் என்று விலை வைத்து விற்பனை செய்தான். வாடிக்கையாளர்கள் ஏராளமாகப் பெருகினர். நீர் நிரம்பிய கேன்களை ஒரு லோடு ஆட்டோவில் சப்ளை செய்தான். நல்ல வருமானம் வந்தது. இசக்கியின் தண்ணீர் வண்டி ஒரு மூலையில் ஒடுங்கி புழுதி படிந்து கேட்பாரில்லாமல் கிடந்தது. அதே நிலை தான் அவரது சீருடைக்கும்.

தண்ணி வண்டி இசக்கி வீடு என்று சொல்வது போய் வாட்டர் கேன் சிவா சார் வீடு என்று அழைத்தார்கள் மக்கள். அழகான சிறிய கார் ஒன்றும் வந்தது. நியாயமாகப் பார்த்தால் மகனின் வளர்ச்சியைக் கண்டு இசக்கி பூரித்துப் போயிருக்க வேண்டும். ஆனால் ஏனோ சீக்குக் கோழி மாதிரி எப்போதும் தலையைத் தொங்கப் போட்டுக்கொண்டு அலைந்தார். தெருவில் பார்ப்பவர்கள் "என்னவே இசக்கியா பிள்ளை? உம்ம மகன் தண்ணி பிசுனசுல கொழிக்கான் போலுக்கே? உம்ம பாடு யோகந்தான். என் மவனும் இருக்கானே? மாசச் சம்பளத்துக்கு வேலை பார்த்துக்கிட்டு காசை எண்ணி எண்ணி செல்வழிச்சுக்கிட்டு ... ஹூம்! எல்லாத்துக்கும் யோகம் வேணும்வே" என்று பாராட்டுவது போல பொருமுவார்கள். அதைக் கேட்டும் அதே நிலையில் தான் இருப்பார் இசக்கி. பதில் சொல்வதோ திருப்பித் திட்டுவதோ பெருமைப்படுவதோ எதுவும் கிடையாது. இசக்கியின் மனைவி அன்னம் தான் கோபப்பட்டாள். "அது என்ன எப்பம் பார்த்தாலும் ஞேன்னு முழிக்கீரு? நாலு இடத்துக்குப் போக வர இருப்போமே? ஊருக்குள்ள நல்ல மரியாதை இருக்கேன்னு சந்தோஷப்படுதீரா? எந்நேரமும் கப்பல் கவுந்தா மாதிரி உக்காந்திருக்கீரு" என்றாள். அதற்கும் அதே நிலை தான். மகனும் மனைவியும் பேசுவதையே விட்டு விட்டார்கள்.

சிவசங்கரனுக்கு வள்ளியூரில் பெண் பார்த்துப் பேசி முடிவு செய்தார்கள். அழகான அன்பான பெண். ஆசிரியப் பயிற்சி முடித்து விட்டு உள்ளூரில் வேலைக்குப் போய்க்கொண்டிருந்தாள். அவளுக்கு ஊரிலேயே அரசுப்பள்ளியில் வேலை 'வாங்கிக்கொடுத்து' விடுவதாகச் சொன்னான் சிவசங்கரன். ஐப்பசி மாதம் கல்யாணம் அதுவும் மாப்பிள்ளை ஊரில் வைத்து தான் நடக்க வேண்டும் என்று முடிவு செய்து பாக்கு வெற்றிலை மாற்றி நாளும் குறித்தார்கள். அப்பாவுக்கு சாண் அகலத்துக்கு சரிகை போட்ட வேட்டியும் பட்டுச் சட்டையும் எடுத்துக்கொடுத்தான் மகன். மறு நாள் கல்யாணம் என்ற நிலையில் வானம் திடீரென மாறியது. பிடித்தது பாருங்கள் மழை. ஐப்பசி மாதம் அடைமழைக்காலம் என்றாலும் இது அடை மழை போலில்லை. பேய் மழை பிசாசு மழை. அதோடு காற்று வேறு. மின்சாரம் துண்டிக்கப்பட்டது. மின் கம்பங்கள் கம்பிகள் சேதமடைந்தன என்பதால் எப்படியும் மழை விட்டாலும் மின்சாரம் வருவதற்கு இன்னும் இரு தினங்கள் ஆகும் என்று சொல்லி விட்டார்கள்.

ஊரிலிருந்து வந்த உறவினர்கள் கல்யாண மண்டபத்தில் தங்கிக்கொண்டார்கள். ஆனாலும் அவர்கள் உபயோகத்துக்குத்தண்ணீர்? சர்ரென நீரை மேலேற்றும் மோட்டர் மின்சாரம் இல்லாமல் அனாதையாகக் கிடந்தது. குடிக்கவும் நீரின்றி திண்டாடினார்கள் மக்கள். "என்னப்பா செய்ய? என்னப்பா செய்ய?" என்று கைகளைப் பிசைந்தான் மகன். அவன் தொழிற்சலையில் தேவையான குடி தண்னீர் இருப்பு இருந்தது. அனால் மற்ற தேவைகளுக்கு நீர்? பெண் வீட்டாரும் வந்து விட்டார்கள். கல்யாணம் என்னவோ நடந்து விடும். ஆனால் தண்ணீர்? என்ற பெருங்கேள்வி அனைவரையும் பயமுறுத்தியது. அப்போது தான் இசக்கியின் முகத்தில் நீண்ட நாட்களுக்குப் பிறகு மென் புன்னகை ஒன்று பிறந்து அது பெருஞ்சிரிப்பாக வெடித்தது. "என்னது? கோட்டி பிடிச்சிட்டா? இப்பம் போயி இப்படி சிரிக்கீரே?' என்று அதட்டினாள் மனைவி. முகமெல்லாம் சிரிப்பாக சென்றார். அவர் திரும்பி வந்த போது காக்கி நிற அரை டவுசரும், சிவப்பு கையில்லாத பனியனும் அவரது உடலில் மீண்டும் இடம் பிடித்திருந்தன. பட்டு வேட்டியும் சட்டையும் சுருட்டி ஒரு மூலையில் அடிக்கப்பட்டிருந்தன. அவரது வண்டி தூசி தட்டி எடுக்கப்பட்டது. பழைய பிளாஸ்டிக் குடங்களை வண்டியில் ஏற்றிக்கொண்டு எதிர்காற்றைக் கிழித்தபடி புறப்பட்டது இசக்கியின் தண்ணீர் வண்டி. அதை ஓட்டிக்கொண்டிருந்த இசக்கியின் கண்கள் நீரைப் பொழிந்தன என்றாலும் உதடுகள் சிரித்துக்கொண்டே இருந்தன.
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top