• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Thenmazhai 4 (final part)

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

அழகி

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Mar 11, 2018
Messages
8,393
Reaction score
53,985
Location
England
தேன்மழை 4

சோழப் பேரரசின் தூதுவர் வந்து அன்றோடு பத்து நாட்கள் கடந்திருந்தன. நாட்களை எண்ணிக் கொண்டிருந்த வண்டார் குழலி உப்பரிகையில் தன் அறையின் தாழ்வாரத்தில் நின்று கொண்டு எதிரே தெரிந்த காட்டை வெறித்துப் பார்த்தாள்.

கழ்வராயன் கோட்டைக்கு எதிரே தெரிந்த காட்டுப்பகுதி திமிலோகப் பட்டுக் கொண்டிருந்தது. சோழ வீரர்கள் ஆயிரமாயிரமாகக் குவிந்து பாசறைகளை அமைத்துக் கொண்டிருந்தார்கள்.

யானைப்படை குதிரைப்படை என காட்டின் ஒரு புறம் கனைப்பாலும் பிளிறலாலும் கிடுகிடுத்துக் கொண்டிருந்தது. காட்டு மரங்கள் வெட்டப்பட்டு வீழ்த்தப்படும் ஒலி தடால் தடாலென முழங்கிக் கொண்டிருந்தது.

எதிரிகளின் பாசறையை நோட்டமிட்டவள் மனதில் தனது கோட்டைக்குள் கடந்த பத்து தினங்களாக நடக்கும் ஏற்பாடுகளையும் எண்ணத் தவறவில்லை.

போரில் அத்தனை நாட்டம் இல்லாவிட்டாலும் தன் தாயாதியான பாண்டியனுக்குத் துரோகம் இழைக்க முடியாததால் காரியங்கள் யாவையும் கச்சிதமாகவே நடத்தினார் கழ்வராயர்.

பத்து அடி அகலத்திலிருந்த கோட்டை மதில்கள் செப்பனிடப்பட்டு வில்லெய்தும் கூண்டுகள் பழுது பார்க்கப்பட்டன. எண்ணெய்க் கொப்பரைககள் தயார் நிலையில் வைக்கப்பட்டன.

சேனாதிபதி, உபசேனாதிபதி சகிதம் தினமும் மந்திராலோசனை நடைபெற்றது. போருக்கான திட்டங்கள் செவ்வனே நிறைவேற்றப்பட்டன.

ஆனால் எதிலும் குழலி கலந்து கொள்ளவில்லை. வீரர்களுக்குப் பயிற்சி அளிப்பதில் பங்கெடுத்துக் கொண்டவள் போர்த் தந்திரங்கள் எதிலும் ஈடுபடவில்லை.

நாட்டின் நலனுக்காக இதுவரை போர்முனைகளில் வாளேந்தியவள் முதல் முறையாகத் தன் நாட்டின் நலனுக்காக மௌனித்திருந்தாள்.

இருள் ஏறிக் கொண்டிருந்தது. இரண்டாம் ஜாமத்துக் கோயில் மணியோசை அந்த இடத்தையே நிரப்பியது. அல்லி கொண்டுவந்து கொடுத்த வில்லையும் அம்பறாத் தூணியிலிருந்த அம்பையும் கையிலெடுத்த குழலி சரியாகக் குறி வைத்து அதை கரிகாலனின் பாசறைக்கு எய்தாள்.

காற்றைக் கிழித்துக் கொண்டு வந்த அம்பு சரியாகக் கரிகாலன் பாசறையின் உச்சிப் பகுதியில் குத்தி நின்றது. படைத்தலைவர்களுடன் ஆலோசனை நடத்திக் கொண்டிருந்த கரிகாலனைக் கலைத்தது வீரனொருவனின் குரல்.

"இளவரசே!"

"சொல்லும் வீரரே!"

"எதிரி புறமிருந்து அம்பொன்று புறப்பட்டு வந்து தங்கள் பாசறையில் தஞ்சமடைந்திருக்கிறது."

"அப்படியா என்ன?" கூடாரத்தை விட்டு வெளியே வந்த கரிகாலன் வீரன் ஒருவனின் உதவியோடு அந்த அம்பைத் தன்னிடம் கொண்டு வரச் செய்தான்.

அவன் எதிர்பார்த்தது போலவே அம்பின் நுனியில் ஓலைச் சுருளொன்று இணைக்கப்பட்டிருந்தது. புன்னகையோடு நகர்ந்த தங்கள் இளவரசனைச் சுற்றி நின்ற அத்தனை வீரர்களும் கேலி செய்து சிரித்தார்கள்.

வீரர்களோடு எப்போதுமே நல்லுறவைப் பேணும் அந்த இளவரசனும் அவர்கள் கேலிக்கு இடமளித்து சிவந்த முகத்துடன் கூடாரத்திற்குள் நுழைந்து கொண்டான்.

கைகள் பரபரக்க அந்த ஓலைச் சுருளைப் பிரித்தான் கரிகாலன். மணிமணியாக எழுத்துக்கள் வடிக்கப்பட்டிருந்தன.

"அன்பரே!

நலந்தானா? போருக்கான முன்னேற்பாடுகளில் என்னை மறந்து விட்டீர்களா? முதன்முறையாகக் கழ்வராயனின் புதல்வி போர் முனையைத் தவிர்த்திருக்கிறாள். அவள் அன்பருக்கு எதிராக வாள் பிடிக்கும் சக்தி மன்னருக்கு வேண்டுமானால் இருக்கலாம், ஆனால் மகளுக்கு இல்லை. அதிக ரத்தம் சிந்தாமல் இந்தக் கோட்டையைக் கைப்பற்றுங்கள். கழ்வராயன் வீரர்கள் இனி உங்கள் வீரர்களும் கூட. நம் வீரர்கள் எந்த இடத்திலும் கவுரவவின்மையை எதிர் நோக்கக் கூடாது. இது இந்தக் வண்டார் குழியின் ஆக்ஞை. ஏதேனும் சொல்ல நினைத்தால் அம்பை உப்பரிகையின் பெரிய சாளரத்திற்கு எய்து விடுங்கள்.

உங்கள் பேரழகு."

ஓலையைப் படித்த கரிகாலன் மகிழ்ச்சி பொங்க அதில் முத்தமிட்டான். மளமளவென்று ஓலையொன்றை எடுத்து அதில் எழுதியவன்,

"யாரங்கே!" என்றான்.

"சொல்லுங்கள் இளவரசே!"

"வீரனே! அம்பில் ஓலையைப் பிணைத்து உப்பரிகையின் பெரிய சாளரத்திற்கு எய்து விடு."

"ஆகட்டும் இளவரசே!"

அம்பு சரியாக குழலியின் அறையில் 'க்ளிங்' என்ற ஒலியுடன் வந்து வீழ்ந்தது. புன்னகையோடு அம்பை எடுத்த அல்லி ஓலையைப் பிரித்துத் தன் இளவரசியிடம் நீட்டினாள். குழலியின் வதனம் மலர்ந்து போனது.

"பேரழகே!

அப்படியே ஆகட்டும். போரைத் தவிர்க்கத்தான் எவ்வளவோ முயன்றேன், முடியவில்லை. அதற்காக உன்னை விட்டுக் கொடுக்க என்னால் முடியாது. கழ்வராயனுக்கும் அவர் வீரர்களுக்கும் எந்த அவமாரியாதையும் நடக்காது. க்ஷத்திரிய தர்மப்படி கண்ணியமான முறையிலேயே போர் நடக்கும். ஆனால், பாண்டிய வீரர்கள் என்னைத் தாக்கும் பட்சத்தில் அவர்களுக்குச் சரியான பதிலடி கொடுப்பான் இந்த ஆதித்த கரிகாலன். நாளை இரண்டாம் ஜாமத்தில் நந்தவனத்தில் எனக்காகக் காத்திரு. வெற்றிவாகை சூடி வருவான் உன் அன்பன்.

ஆதித்த கரிகாலன்."

ஓலையைப் படித்து முடித்த குழலி அதைத் தனது பவளப் பேழையில் பத்திரப்படுத்திக் கொண்டாள்.

சரியாக மூன்றாம் ஜாமத்தை நெருங்கும் போது சோழ சைனியத்தின் பக்கமிருந்து போர் முரசு கொட்டும் சத்தம் கேட்டது.

கழ்வராயனின் வீரர்கள் போர்க்கோலத்தில் வாளேந்தி அணிவகுத்து நிற்க, குதிரைப்படை முன்னணியில் திகழ்ந்தது.

கோட்டைச் சுவர்களில் பொருத்தப்பட்டிருந்த கொப்பரைகளில் நெருப்பு மூட்டப்பட்டது.

வில்லும் வேலும் ஏந்திய வீரர்கள் சுற்று மதிலில் அணிவகுத்து ஆயத்தமாக நின்றார்கள். கழ்வராயனும் அவர் சேனாதிபதியும் படைத்தலைவர்களும் பூரண போர்க்கோலம் தரித்து அனைத்தையும் மேற்பார்வை இட்டுக் கொண்டிருந்தார்கள்.

இங்கு இத்தனை ஏற்பாடுகளும் நடக்க காட்டுக்குள் இருந்த சோழ வீரர்கள் வெட்டிப் போட்ட நீண்ட மரங்களை ஆயுத வண்டிகளில் பொருத்தி கோட்டையை நோக்கி நகர்ந்து கொண்டிருந்தார்கள்.

கோட்டையைச் சுற்றி பெரிய அகழி வெட்டப்பட்டு அதில் முதலைகளும் வளர்க்கப் பட்டிருந்ததால் பாலம் அமைப்பதற்கென தனியாக மரங்களை வண்டிகளில் கொண்டு சென்றார்கள்.

கோட்டையை மூன்று புறங்களிலிருந்து தாக்க முடிவு செய்திருந்தான் கரிகாலன். சைனியத்தை நான்காகப் பிரித்தவன் காட்டுக்குள் ஒரு பகுதியை நிறுத்திவிட்டு மீதி மூன்று பகுதியைக் கோட்டையைத் தாக்க ஏற்பாடு பண்ணி இருந்தான். பாண்டிய வீரர்கள் ஒருவேளை பின்னால் தாக்கலாம் என்ற ஐயம் இருந்தது.

உப தளபதிகளோடு இரண்டு பகுதி புறப்பட பெரும்பகுதியோடு கோட்டை வாயிலை நோக்கிப் போனான் சோழ இளவரசன்.

மரங்கள் பொருத்தப்பட்ட ஆயுத வண்டிகள் கோட்டைக் கதவில் வேகங்கொண்டு மோத சற்று நேரத்திற்கெல்லாம் ஆவெனப் பிளந்து கொண்டது கோட்டை வாயில்.

இரு தரப்பிலிருந்தும் வீரர்கள் வேலும் அம்பும் எய்தபடியிருக்க மாண்டவர் உடல்கள் அகழியில் வீழ்ந்து முதலைக்கு இரையாயின.

அந்த அர்த்த ஜாமத்தில் வாள்வீச்சுக்கள் பளீர் பளீரென மின்னல் போல ஜொலிக்க அந்தக் கோர யுத்தத்தைக் காணப் பொறுக்காத அந்த முழு நிலாவும் மேகத்துக்குள் ஒளிந்து கொண்டது.

தலையில்லாத முண்டங்கள் கோரத் தாண்டவம் ஆட அந்த நிலப்பரப்பே ரத்த நிறம் கொண்டது.

கொப்பரைகளிலிருந்து ஊற்றப்பட்ட சூடான எண்ணெயில் வெந்த உடல்களின் அலறல் அந்த இடத்தையே அதிர வைத்தது.

சோழ இளவரசன் எத்தனை தார்மீகமாகப் போரை நடத்த முடியுமோ அத்தனை தூரம் தன் வீரர்களை வழி நடத்திச் சென்றான். ஒரு எல்லைக்கு மேல் கழ்வராயன் வீரர்களின் கை நலிவடையத் தொடங்கியது.

அறைத் தாழ்வாரத்திலிருந்து அந்த யுத்தத்தை பார்வையிட்ட படி இருந்தாள் வண்டார் குழலி. இளவரசி என்பதாலும் தன் அன்பிற்குரியவர் வெற்றி வாகை சூடவேண்டும் என்ற அவாவினாலும் அன்று அதிக ஆபரணங்களை அணிந்திருந்தாள் இளவரசி.

தனது நீண்ட ஜடையில் அவள் வைத்திருந்த தாழம் பூக்களின் வாசம் அந்த அறைக்கு அகிலின் தேவையை நிவர்த்தி செய்திருந்தன.

சூரிய உதயத்தின் போது கழ்வராயன் எல்லையே சாந்த சொரூபியாக மாறி இருந்தது. காட்டுக்குள் கேட்ட சலசலப்புக்களும் அடங்கி விட கோட்டை முழுவதும் சோழ வீரர்களின் அணிவகுப்பே காட்சியளித்தது. குழலி தன் அறையை விட்டு வெளியே வரவில்லை. ஆனால், பல்லவராயரை அங்கு அனுப்பி இருந்தான் கரிகாலன்.

ரத்தம் தோய்ந்த தன் உடை வாளை உறைக்குள் போட்டவர் கம்பீரமாகக் குழலியின் அறைக்குள் நுழைந்தார்.

"மன்னிக்க வேண்டும் இளவரசி! அந்தப் புரத்திற்குள் நுழைந்து உங்களுக்குக் களங்கம் கற்பிப்பது எனது நோக்கமன்று. இளவரசரின் ஆணையின் பேரில் நிலவரத்தைச் சொல்லவே வந்திருக்கிறேன்."

"பாதகமில்லை... என் தந்தை..."

"கவலைப்படவேண்டாம். தங்கள் தந்தைக்கு எந்தக் குறைவும் ஏற்படவில்லை. ஏற்படவும் இளவரசர் அனுமதிக்கவில்லை. சொல்லப் போனால் அவர்கள் இருவரும் இப்போது ஒன்றாக சற்றுத் தனிமையில் உரையாடிக் கொண்டிருக்கிறார்கள்."

"அப்படியா?"

"ஆமாம் இளவரசி. தங்கள் சேனாதிபதி, படைத்தலைவர்கள் எல்லோரும் மிகவும் மரியாதையான முறையில் இளவரசால் கவனிக்கப்பட்டார்கள். மீதமுள்ள வீரர்கள் இப்போதைக்குக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்கள்.‌ தங்கள் திருமணம் முடிந்ததும் கழ்வராயரின் சிற்றரசு மீண்டும் அவருக்கே பூரண சுதந்திரத்தோடு வழங்கப்படும். பாண்டியனுக்குக் கட்டுப்பட்டு வாழ வேண்டிய அவசியம் இனி ஒரு போதும் இல்லாதபடி சோழப் பேரரசு அதைக் காத்து நிற்கும். இதுவே இளவரசரின் சேதி."

"இளவரசரை இப்போது..." மேலே தொடர முடியாமல் நாணம் தடுக்கத் தலை குனிந்து கொண்டாள் குழலி. அல்லியும் பல்லவராயரும் புன்னகைத்துக் கொண்டார்கள்.

"நந்தவனத்தில் சந்திப்பதாகச் சொன்னார்."

"சேனாதிபதி அவர்களே!" வெளியேறப்போன பல்லவராயரைத் தடுத்தது குழலியின் குரல். திரும்பிப் பார்த்தவரின் பாதங்களைத் தொட்டு வணங்கினாள் இளவரசி.

"தீர்க்க சுமங்கலியாக நீடூழி வாழ வேண்டும் மகளே!" ரத்தம் தோய்ந்த கையால் ஆசீர்வதித்தார் பல்லவராயர்.
 




அழகி

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Mar 11, 2018
Messages
8,393
Reaction score
53,985
Location
England
இரண்டாம் ஜாமம் நெருங்கிக் கொண்டிருந்தது. கழ்வராயன் கோட்டையெங்கும் மயான அமைதியில் இருந்தது. கழ்வராயரும் அவர் ராஜாங்க உத்தியோகஸ்தர்களும் அவரவர் மாளிகையிலேயே தங்க அனுமதிக்கப்பட்டார்கள். ஆனால், எல்லா இடங்களிலும் சோழ வீரர்களின் கண்காணிப்பு இருந்தது.

மாலை ஸ்நானத்தை முடித்துக் கொண்டு தேவலோக அப்சரஸ் போல நந்தவனத்தில் உலவிக் கொண்டிருந்தாள் வண்டார் குழலி.

அவள் அணிந்திருந்த பாண்டியப்பட்டு அத்தனை கெட்டியான தங்க ஜரிகை வேலைப்பாட்டில் தகதகவென மின்னிக் கொண்டிருந்தது.

கழுத்திலும் கைகளிலும் செம்பவளங்கள் ஜொலித்திருந்தன. நீண்டதொரு முத்து மாலையை இடையை இறுக்கியிருந்த ஒட்டியாணம் வரை தொங்க விட்டிருந்தாள் குழலி. ஒட்டியாணத்தில் கோர்த்திருந்த பொன்முத்து மணிகள் அவள் ஒவ்வொரு அசைவிற்கும் வயிற்றில் நாட்டியமாடின.

தலையில் அணிந்திருந்த நெற்றிச்சுட்டி விளக்கு வெளிச்சத்தில் வர்ணஜாலங்களை அவள் கன்னக்கதுப்புகளில் அள்ளி வீசியது.

இத்தனையும் போதாதென்று தன் நீண்ட ஜடையில் அணிந்திருந்த ஜாதி மல்லிக்குப் போட்டியாக திருகுப்பூ ஒன்றையும் அணிந்திருந்தாள்.

காலில் அணிந்திருந்த சிலம்புகள் தன் தலைவன் வரவிற்காகச் சிணுங்க சிறுகச் சிறுக கோபம் கொண்டாள் குழலி. நந்தவனத்தில் சந்திப்பதாக வாக்களித்திருந்த இளவரசன் கால் ஜாமத்திற்கு மேலாக வராமல் போகவும் அவளுக்கு அத்தனை வேதனையாக இருந்தது.

அண்ணார்ந்து பார்க்க அங்கே பூரண நிலவு புதுப்பெண் போல வானில் நடைபழகிக் கொண்டிருந்தது.

"ஏய் நிலவுப் பெண்ணே! என் அன்பரின் சாமர்த்தியத்தைப் பார்த்தாயா? போர்க்களத்திற்குப் போய்விட்டால் போதும். நானொருத்தி இங்கு காத்துக் கிடப்பதெல்லாம் க்ஷண நேரமும் நினைவில் வராது." ஏதோ சோழ இளவலோடு பல வருடங்கள் குடும்பம் நடத்தியவள் போல பிதற்றிக் கொண்டிருந்தாள் பைங்கிளி.

"அதுதான் எல்லாம் முடிந்துவிட்டதே. இரண்டாம் ஜாமத்திற்கு மேல் என்ன ராஜாங்கம் வேண்டிக் கிடக்கிறது. இங்கொருத்தி தவித்துக்கிடப்பது சற்றேனும் நினைவிருந்தால் இந்நேரம் சட்டென்று புறப்பட்டு வந்திருக்க மாட்டாரா?"

அல்லி அங்கே இல்லாததால் நிலவோடு புலம்பிக் கொண்டிருந்தவள் பின்னோடு வந்த இளவரசனைக் கவனிக்கவில்லை. தன் பாட்டில் பேசிக்கொண்டிருந்தாள்.

"அப்பப்பா! இப்போதே இப்படியென்றால் இன்னும் கொஞ்சம் காலம் போனால் என் நிலைமை என்னவாகும்? ராஜீய விஸ்தாரணம் என்று இவர் பாட்டில் கிளம்பி விட்டால் என் பாடு என்னவாகும்?"

"என்னவாகும்?" அந்தக் குரலில் அலறிப் புடைத்துக்கொண்டு திரும்பினாள் குழலி.

புதுப்பட்டாடை உடுத்தி கழுத்தை ஒன்றிரண்டு முத்து மாலைகள் அலங்கரிக்க ஆஜானுபாகுவான சரீரத்துடன் வாளின்றி வேலின்றி அவளே தஞ்சம் என நிராயுதபாணியாக நின்றான் கரிகாலன்.

கண்களில் மின்னிய குறும்பும் இதழ்களில் தவழ்ந்த இளநகையும் அவன் அழகுக்கு மேலும் அழகு சேர்த்தன. கண்சிமிட்ட மறந்து சிலையாக அவன் வதனத்தில் மிளிர்ந்த தேஜஸில் மெய்மறந்து நின்றாள் வண்டார் குழலி.

"ஏது! இத்தனை நேரமும் வாய் ஓயாமல் பேசிக்கொண்டிருந்த என் பேரழகு இப்போது கற்சிலை ஆகிவிட்டதே!" அவன் கேலியில் அவள் கன்னங்கள் இரண்டும் ரோஜாக்களாகிப் போயின. நாணம் மிக தலைகுனிந்து கொண்டாள் பெண்.

"கோபமா பேரழகே?"

"இருக்காதா இளவரசே! எத்தனை நேரமாகக் காத்திருக்கிறேன் தெரியுமா?"

"இன்னும் இளவரசர் தானா?"

"இல்லை... எனக்கு மட்டுமே சொந்தமான என் அன்பர்." அவள் பதிலில் அவளைத் தன்னருகே இழுத்துக் கொண்டான் கரிகாலன்.

"இப்போது என் பேரழகிற்கு சந்தோஷமா?"

"எதைக் கேட்கிறீர்கள்?"

"இன்று நடந்த யுத்தத்தைக் கேட்கிறேன்?"

"அன்பரே! இதை நீங்கள் கேட்கவும் வேண்டுமா? கழ்வராயரின் பரம்பரைக்கு இதை விட யாரும் மரியாதை செய்ய முடியாது." அவள் நெஞ்சம் விம்மித் தணிந்தது.

"பேரழகே! உன் பொருட்டு எதையும் செய்வான் இந்த ஆதித்த கரிகாலன்."

"ஆனால் என்னைத் தான் மறந்து விடுவார்."

"ஹா... ஹா... உன்னை மறந்தால் என்னை நான் மறந்து விட்டதுக்குச் சமானம் தேவி. எல்லாவற்றையும் ஒழுங்குபடுத்தி விட்டு வரக் கொஞ்சம் தாமதமாகி விட்டது. உன் அன்பனை மன்னிக்க மாட்டாயா?" அவன் பேச்சில் விழிகள் கலங்க அவன் வாயை மூடினாள் குழலி.

"அன்பரே! என்ன பேச்சு இது? பார் போற்றும் சோழ சிம்மாசனத்தின் முடிக்குரிய இளவரசன். போர் முனைகள் பல கண்டு அரசிளங்குமரிகளின் மனதையெல்லாம் கொள்ளை கொண்ட ஆணழகன். இந்தப் பேதைப்பெண்ணிடம் பேசினாலே பாக்கியம் என்பேன். நீங்கள் பெரிய வார்த்தைகள் எல்லாம் சொல்லுகிறீர்களே?"

"பேரழகே! ஆயிரம் அழகிகள் அணிவகுத்தாலும் இந்த ஆதித்த கரிகாலன் மனதில் கொலு வீற்றிருப்பது நீ மட்டும் தானே! பஞ்சணையை அலங்கரிக்க அழகிகள் கிடைக்கலாம். ஆனால் என் வாளுக்குப் பதில் சொன்னவள் நீ மட்டும்தானே! எனை முதலில் வீழ்த்தியது உன் பேரழகல்ல. வாள் சுழற்றிய உன் வீர அழகு. என்னை அடியோடு சாய்த்தது உன் மையிட்ட விழிகளல்ல. நீ வேலை வீசும் போது இலக்குப் பிசகாமல் குறி பார்த்த அந்த வேல் விழிகள் தான். இன்னும் சொல்லவா?" கேட்டபடியே அவன் கைகள் அத்துமீறியது.

வெட்கிச் சிவந்த படி விலகியவள் அவன் கைகளுக்கும் தடை போட்டாள்.

"கோட்டையைக் கைப்பற்றி நந்தவனத்தில் அத்தனை பேரும் அறிய சந்தித்திருக்கிறேனே. இன்னும் என் கைகளுக்குத் தடை தானா?"

"க்ஷத்திரிய தர்மம் இதை அனுமதிக்கலாம். ஆனால் சாஸ்திரிய தர்மம் இதை அனுமதிக்காது." புன்னகையினூடே அவள் சிந்திய வார்த்தைகளில் கரிகாலனும் சிரித்தான்.

"பேரழகே!"

"ம்..."

"இன்னும் இரண்டு திங்களில் அந்த அனுமதியையும் பெற்று விடுகிறேன்."

"அத்தனை நாட்களா?" கேட்ட பிறகே கேள்வியின் பொருளை உணர்ந்தவள் இதழ் கடித்து மௌனமானாள். அவள் அழகில் வாய்விட்டு நகைத்தான் ஆதித்த கரிகாலன்.

"அடியேன் சுந்தரச் சோழரின் தவப்புதல்வன். அதிலும் என் அன்னைக்கு ஆயிரம் அபிலாஷைகள். அத்தனையையும் நடத்திக்கொள்ள நாம் அவகாசம் கொடுக்க வேண்டாமா?"

"சரிதான்."

"என்ன சரிதான்?"

"அவகாசம் கொடுக்க வேண்டும் தான்."

"அதுவரை..."

"அதுவரை?"

"கழ்வராயன் எல்லையில் பாசறை அமைக்க வேண்டும்."

"அமைத்து?"

"வாள் வீச்சையும் வேல் வீச்சையும் தாங்கப் பயிற்சியளிக்க வேண்டும்."

"என்ன? வாள் வீச்சையும் வேல் வீச்சையுமா?"

"ஆமாம் பேரழகே!"

"யார் தாங்க வேண்டும்?"

"இந்த அடிமைதான் தேவி!" கரிகாலனின் பேச்சில் குழம்பிப் போனாள் குழலி. அவளின் அருகே சென்றவன் அவளை இடையணைத்துத் தன்னோடு இறுக்கிக் கொண்டான்.

"இந்தக் கரிகாலனுக்கு வாளும் வேலும் வீசத்தான் தெரியும். இந்த விழியிரண்டும் என் மேல் சதா தொடுக்கும் வீச்சுக்களைத் தாங்கத் தெரியாதே. அதற்கு தேவி அருள் புரிய வேண்டும்."

"வேடிக்கைப் பேச்சு போதும் அன்பரே!"

"நிச்சயமாக தேவி. திருமணப் பேச்சுக்கள் ஆரம்பித்து விட்டது. இப்போது சோழ எல்லைக்குள் கால் வைத்தால் திருமணம் முடியும் வரை கழ்வராயன் எல்லையை நினைத்தும் பார்க்க விடமாட்டார் என் அன்னை. அடியேனால் உன்னைப் பார்க்காமல் இருக்க முடியாது. கருணை காட்டு தேவி."

தன் முன்னால் கெஞ்சிக் கொண்டு நிற்கும் அந்த மாவீரனை விழிவிரித்துப் பார்த்தாள் குழலி.

"ஆகட்டும் அன்பரே!"

"குருதட்ஷணையாக என்ன கொடுக்க வேண்டும் பேரழகே!" முதல் சந்திப்பில் அவன் கேட்ட அதே கேள்வியை இப்போதும் கேட்கவும் அவள் குறும்பாகப் புன்னகைத்தாள்.

"அப்போது சொன்ன பதிலை இப்போதும் சொல்வாயா?"

"அப்போது என்ன சொன்னேன்?"

"உன்னை விடுவித்தால் போதுமென்றாய்."

"இப்போது அப்படிச் சொல்ல மாட்டேன்."

"வேறு என்ன சொல்வாய்?"

"காலம் முழுதும் என் அன்பரின் அன்பில் கட்டுண்டு கிடக்கும் பேறு கேட்பேன். அந்தக் கட்டிலிருந்து என்றைக்கும் விடுபடாத விலங்கு கேட்பேன்."

"பேரழகே!" உணர்ச்சி மேலிட அழைத்தவன் இதழ்கள் மேலும் காதல் மொழி பேச, வரம்பு மீறிய அந்தப் பேச்சில் அவன் மார்பிலேயே முகம் புதைத்துக் கொண்டாள் வண்டார் குழலி.

ஆதித்த கரிகாலனின் வாளுக்கும் வேலுக்கும் துணை நின்றது போல அவன் காதலுக்கும் காமத்துக்கும் காலம் முழுக்கத் துணை நின்றாள் வண்டார் குழலி.
 




Sanshiv

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Apr 13, 2018
Messages
5,212
Reaction score
20,359
Location
USA
அட என்னப்பா அதுக்குள்ள முடிச்சுட்டீங்க... ஆனால் திகட்டத் திகட்ட தேன் மழையில் நனைந்தோம்... முற்றிலும் இது ஒரு புதிய அனுபவம். அதிலும் உங்கள் சொல்லாடல்... சொல்ல வார்த்தைகளே இல்லை.
 




Chitrasaraswathi

முதலமைச்சர்
Joined
Jan 23, 2018
Messages
11,489
Reaction score
29,223
Age
59
Location
Coimbatore
போர் வர்ணனைகள் அருமை. தாங்களே கோட்டையின் காவலர் போல வர்ணனைகள். போர் ஆயத்தங்கள் என்ன சொல்லி பாராட்டுவது அழகியை. நான் அவரைப் போல கவிதாயினியும் இல்லை, கதையாசிரியரும் இல்லை தகுந்த வார்த்தைகள் கொண்டு பாராட்ட. எனக்கு தெரிந்த அளவு அருமை என்ற வார்த்தையை பயன்படுத்துகிறேன்
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top