Thodu vanam epi 1

Selva sankari

Major
SM Exclusive Author
#1
தொடுவானம் தொடுகின்ற நேரம்'நெடுவட்டம்' நீலகிரி மாவட்டத்தில் உள்ள சிறு கிராமம். மலை வாழ் மக்கள் அதிகம் வசிக்கும் பகுதி. அடிப்படை வசதிகள் கூட வாய்க்கப்பெறாத கிராமம்.அங்கு ஒரு வாரமாக நடைபெற்ற மெடிக்கல் கேம்ப்பில் கலந்து கொண்டு, இன்று அனைவரும் ஊர் திரும்பும் நாள்.


மக்களுக்கு அடிப்படை சுகாதாரத்தையும் சுத்தத்தையும் வேண்டிய மட்டும் எடுத்து கூறியாகிவிட்டது. முழுமையான மருத்துவ பரிசோதனைகளும், சிகிச்சையும் செய்து முடித்து விட்டு,


கேம்ப்பில் கலந்து கொண்ட அனைத்து இளம் மருத்துவர்களுக்கும் ஊர் திரும்ப முறையான ஏற்பாடுகளைச் செய்து வழியனுப்பி வைத்தான் ஆகாஷ்.கீச்….கீச்… என்ற ஒலியுடன் தன் கூட்டுக்குத் திரும்பும் புள்ளினங்களும், சோம்பலாய் ஆரஞ்சு நிறத்தில், “இதோ கீழே இறங்கி விடுவேன்" என்று கண் சிமிட்டும் சூரியனும், சற்று குளுமையேறிய மாலை நேரத்து மலைக் காற்றும், ஆகாஷை அந்த ரம்மியமான சூழலை மிகவும் ரசிக்க வைத்தது.

அந்த கேம்ப்பை ஒருங்கினைத்து, மருத்துவர்கள் தங்குவதற்கும், உணவுக்கும் உதவிகள் பல செய்தவர் , அங்கே உள்ள எஸ்.எஸ்.கே. தேயிலை எஸ்டேட் ஓனர் சண்முக சுந்தரம்.


அவர் ஆகாஷிடம், “வெல்டன்! மை பாய், இந்த முறையும் வெற்றிகரமாக இந்த கேம்ப்பை முடித்துவிட்டாய். வாழ்த்துகள்” என்று கூறினார்.


“அடுத்த கேம்ப் எப்ப அங்கிள்…”


“ அடுத்து இரண்டு மாதங்கள் கழித்து வைத்துக் கொள்வோம், இடமும், சரியான தேதியும் பிறகு சொல்கிறேன்” என்றார் சண்முக சுந்தரம்.


“ஓகே அங்கிள், அப்ப நானும் கிளம்புகிறேன், அத்தையிடம் சொல்லிடுங்க"


“ சரிப்பா… இருட்டிக் கொண்டு வருவது போல் இருக்கிறது, நீ சீக்கிரம் மலையை விட்டு கீழே இறங்குவதுதான் நல்லது” என்று கூறியவர்,


“ வீட்டில் அம்மாவையும் தங்கையையும் விசாரித்ததாகக் கூறு. கோவை வரும் போது உன்னை வந்து பார்க்கிறேன்" என்று கூறினார்.அவரிடம் விடைபெற்றுக் கொண்டு தன்னுடைய ஹோண்டா சிவிக் வண்டியில் ஏறியவன், இளையராஜாவின் இன்னிசைத் தொகுப்பை ஒலிக்க விட்டு, மனதில் தாய் மற்றும் தங்கையின் நினைவுகளோடும், ஒரு வாரம் கழித்து அவர்களை சந்திக்கப் போகும் ஆவலோடும், சீராக மலைப்பாதையில் காரை செலுத்தினான்.


ஆகாஷ் 28 வயது வாலிபன். இளம் மருத்துவன். பொது அறுவையியல் மருத்துவமும், குழந்தையியல் சிறப்பு படிப்பும் முடித்தவன்.கோவையில் புகழ்பெற்ற மருத்துவ மனையில் குழந்தைகள் நல மருத்துவராக பணிபுரிபவன். அன்பான அம்மா மஞ்சுளா தேவி , அழகான தங்கை அபிநயா ஆகியோரைக் கொண்ட சிறு கூட்டுக்குச் சொந்தக்காரன்.
அவனது தந்தை இராணுவத்தில் பணிபுரிந்தவர். கார்க்கில் போரின் போது வீரமரணம் அடைந்தவர். அப்பொழுது அவனுக்கு வயது 9 அவனது தங்கைக்கு வயது 3 . சிறு குழந்தைகளை வைத்துக் கொண்டு கணவரை இழந்து தவித்த மஞ்சுளா அவரது வேதனையை மறக்கும் பொருட்டு, வயதானவர்களையும், ஆதரவற்ற பெண்களையும் ஆதரிக்கும் ஹோம் ஒன்றை நிறுவி, அதனை நல்ல முறையில் நடத்தி வருகிறார்.ஆகாஷின் தாய் வழி தாத்தாவும், தந்தை வழி தாத்தாவும் வசதியுடையவர்களாய் இருந்ததால், பணத்திற்காக சிரமப்படவில்லை அவர்கள்.
வீடு, கடைகளின் வாடகையும், தென்னந்தோப்பு குத்தகைப் பணமும் ஹோமை சிறப்பாக நடத்த போதுமானதாக இருக்கிறது. ஆகாஷின் வீட்டை ஒட்டி இருக்கும் ஹோமில்தான் அவனுடைய தாயின் பகல் பொழுதுகள் கழியும்.ஹோமில் இருப்பவர்களையும் தம் குடும்ப உறுப்பினர்களாகவே கருதி பார்த்துக்கொள்வதால் , அங்கு இருக்கும் அனைவருமே மிகுந்த மகிழ்ச்சியுடன் இருப்பர்.


“ஆகாய வெண்ணிலாவே
தரை மீது வந்ததேனோ!
அழகான ஆடை சூடி
அரங்கேறும் வேளைதானோ!”


கை விரல்கள் தாளம் தட்ட பாடலை ரசித்துக் கொண்டிருந்தவன் , வைப்ரேட் மோடில் வைத்திருந்த செல்பேசி அதிரவும், பாடலை நிறுத்தி விட்டு அழைப்பது யார்? என்று பார்த்தவனின் இதழ்கள் புன்னகை புரிந்தன. அலைபேசியை காதுக்கு கொடுத்து,
“ஹாய்! மாம்…” என்றவனை இடை மறித்தவர்,


“என்னை அம்மான்னு கூப்பிடுன்னு உனக்கு ஆயிரம் முறை சொல்லிவிட்டேன் . நான் சொல்வது எதையும் நீ காதில் வாங்குவதில்லை”


“ கூல்…கூல்… அம்மா! ஓகே … இனி மாம்ன்னு கூப்பிட மாட்டேன்”


“ மதியமே கிளம்பி இருட்டுவதற்குள் மலையை விட்டு இறங்கு என்று கூறினாலும் கேட்காமல், இப்பொழுதுதான் கிளம்பினாயா?”


கோபப்பட்டவரிடம், “ அம்மா… தாயே … மஞ்சுளா தேவி… கேம்ப் முடியவே ஐந்து மணியாகிவிட்டது. நான்தானே என்னை நம்பி வந்த அனைத்து மருத்துவர்களையும் வழியனுப்பி வைக்க வேண்டும்


“அதன் பிறகு சண்முகம் அங்கிளிடம் விடைபெற்று உடனே கிளம்பி விட்டேன்.”


“இன்னும் சிறிது நேரத்தில் மலை அடிவாரம் வந்து விடுவேன்.”
“எனக்காக காத்திருக்க வேண்டாம், நேரத்துடன் சாப்பிட்டு விட்டு மறக்காமல் மாத்திரைகளை போடுங்கள்.”


“ சரிடா… அதெல்லாம் நான் சரியான நேரத்தில் சாப்பிட்டு மாத்திரை சாப்பிட்டு விடுவேன்… ஆனால் இன்று உன்னிடம் பேசாமல் உறங்க மாட்டேன்”


“ கல்யாணப்பேச்சு எடுத்ததிலிருந்து , என்னிடம் பிடி கொடுக்காமல் இருக்கிறாய். இன்று எனக்கு உன் முடிவு தெரிந்தாக வேண்டும்.”


“சரிம்மா… அபி என்ன செய்கிறாள்?” பேச்சை மாற்றினான்.“பேச்சை மாத்தாதேடா… அவள் கல்லூரி அசைன்மெண்ட் எதையோ எழுதிக் கொண்டிருக்கிறாள். நீ நிதானமா வண்டி ஓட்டிக்கிட்டு வா… நான் போனை வைக்கிறேன்”“ஓ… அபி படிக்கிறாளா?... அதனாலதான் இங்க மழை பெய்யுதா?” என்று தங்கையை கேலி செய்தவன்,


“அவகிட்ட சொல்லிடாதீங்கம்மா… என்னை ஒருவழியாக்கிடுவா…” என்று சிரித்தான்.“ரொம்ப பயந்தவன் தான்டா நீ… இந்த வைகாசியோட உனக்கு குருபலன் முடியுதாம், அதனால, ஆறு மாசத்துல உன் கல்யாணத்த முடிக்கனும்ன்னு நம்ம ஜோசியர் சொல்லியிருக்காரு”“நம்ம தரகரும் நாலைந்து ஜாதகம் கொடுத்திருக்காரு… எல்லாமே அருமையான வரன்கள்… உனக்கு யாரை பிடிச்சிருக்கோ சொல்லு, உடனே பூ வச்சிடலாம்.”“அம்மா… சரிம்மா… நான் வீட்டுக்கு வந்ததும் பேசிக்கலாம். இப்ப போனை வைக்கிறேன்”திருமணப்பேச்சு எடுத்ததும் பிடி கொடுக்காமல் போனை கட் செய்த மகனை எண்ணி வருத்தமுற்றவர், அவனுக்காக காத்திருக்கத் தொடங்கினார்.
 

Sponsored

Latest Episodes

Advertisements

Latest updates

Top