Urasaathey Usura Thaan -- epi 10

vanisha

SM Exclusive
Author
SM Exclusive Author
#1
வணக்கம் நண்பர்களே,

இன்னிக்கு எபி 10..

படிச்சுட்டு மறக்காம கருத்த சொல்லுங்க. போன எபிக்கு கருத்து கொடுத்து லைக் போட்ட அனைவருக்கும் பெரிய உம்மா :love::love::love:

பெரிய எபி கேக்கறீங்க..முயற்சி பண்ணிருக்கேன் இன்னிக்கு.. ஹிஹிஹி..

UUT-- CV.jpg
 

vanisha

SM Exclusive
Author
SM Exclusive Author
#6
அத்தியாயம் பத்துடிமென்ஷியாவைத் தடுப்பது எப்படி


  • ஆரோக்கியமான உணவு
இனிப்பு, கொழுப்பு மிகுந்த உணவுகளை குறைக்க வேண்டும். நிறைய காய்கறிகள், பழங்கள், மீன் வகைகள், தானிய வகைகளை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். ப்ளேக், ஊலோங்(oolong), க்ரீன் டீ வகைகள் அருந்துவது டிமென்ஷியா வருவதைக் குறைக்கிறது. டாக்டர்களிடம் கேட்டு சரியான விட்டமின்களை சாப்பிட்டு மூளையையும் உடலையும் ஆரோக்கியமாக வைத்துக் கொள்வதால் டிமென்ஷியா வருவதை தடுக்கலாம்.சோம்பலாக கண் விழித்தவன் அருகே படுத்திருந்தாள் அபி. அவன் எப்பொழுதும் அணைத்துப் படுத்திருக்கும் போல்ஸ்டர் கட்டிலின் கீழே கிடந்தது. அந்த ஒற்றைக் கட்டிலில் சற்றே இடைவெளி விட்டு சதாவுக்கு முதுகு காட்டி கீழே விழுந்து விடுபவள் போல் படுத்திருந்தாள் அவள்.

அபியின் வாசத்தை நன்றாக உள்ளிழுத்து தனக்குள் நிரப்பிக் கொண்டவன்,

“அபி” என மெல்ல அழைத்தான்.

“ஹ்ம்ம்”

“இங்க என்ன செய்யற?” கிசுகிசுப்பான குரலில் கேட்டான்.

“ப்ச்ச்! தூங்கறேன் வெட்டு சார்!”

‘அவ்வளவு பெரிய கட்டில இவளுக்காக விட்டுக் குடுத்துருக்கேன். இப்படி இடிக்கற மாதிரி வந்து படுத்துகிட்டு ஏன்னு கேட்டா சலிச்சிக்க வேற செய்யறாளே!’

கட்டில் உள்ளே இன்னும் கொஞ்சம் நகர்ந்துப் படுத்துக் கொண்டவன்,

“நல்லா உள்ள நகர்ந்துப் படுத்துக்கோ அபி. கீழ விழுந்தற போற!” என கிசுகிசுப்பாகவே சொன்னான் சதா.

கண்ணை மூடியவாறே அவன் புறம் திரும்பி கம்பர்டபளாகப் படுத்துக் கொண்டவள்,

“என் மூஞ்ச பார்க்காம தூங்குங்க!” என சொல்லியவாறே தன் கைக் கொண்டு அவன் உடலைத் தடவி, அவன் போர்த்தி இருந்த போர்வையை உருவிப் போர்த்திக் கொண்டாள்.

‘அடிப்பாவி! தடவி பார்த்து உசுப்பேத்தி விட்டுட்டு நல்ல பிள்ளை மாதிரி போர்த்திகிட்டு தூங்கிட்டாளே!’ விடியும் வரை வாசம் பிடித்துக் கொண்டே தூங்காமல் விழித்திருந்தான் சதா. அவள் கொஞ்சம் புரண்டாலாவது கை கால் உரசும் என ஆவலோடு காத்திருந்தவனுக்கு ஏமாற்றம் தான் கிடைத்தது. படுத்த பொசிசனிலேயே கொஞ்சம் கூட அசையாமல் தூங்கினாள் அபி.

‘உனக்கு அபிநயசரஸ்வதின்னு பேரு வச்சதுக்கு பதிலா, அசையாத சரஸ்வதின்னு வச்சிருக்கனும்’ மெல்லிய வெளிச்சத்தில் கண்களால் மட்டுமே அவளைத் தொட்டுத் தடவி சந்தோஷப்பட்டுக் கொண்டான் சதா. அவனது தாழ்வு மனப்பான்மை சொந்த மனைவியைத் தொட்டுப் பார்க்கக் கூட தயங்கியது.

விடிகாலையில் அவள் மெல்ல அசையவும், கண்களை மூடி தூங்குவது போல நடித்தான் சதா.

எழுந்து அமர்ந்து சோம்பல் முறித்தவள், சற்று நேரம் அவன் முகத்தையேப் பார்த்திருந்தாள். மெல்ல கை நீட்டி, விரல் நுனியால் அவனின் தழும்பை காதில் இருந்து நெற்றி வரை தடவிப் பார்த்தாள் அபி. அவனின் உடல் தூக்கத்திலேயே விறைக்கவும், சட்டென எழுந்து குளியல் அறைக்குள் நுழைந்துக் கொண்டாள் அவள்.

அபி எழுந்து சென்றதும் கண் திறந்தவனின் விழிகள் சிவந்து கலங்கி இருந்தன. தழும்பைத் தடவிப் பார்க்கும் போது அவள் என்ன நினைத்திருப்பாள் என மனம் அலைபாய்ந்தது. இப்படிப்பட்ட ஒருவனை மணக்க நேர்ந்த கட்டாயத்தை எண்ணி தவித்திருப்பாளோ என நொந்துப் போனான் சதா. அபியைப் பார்த்தது முதல் கூட்டில் இருந்து மெல்ல வெளியே வந்திருந்த சதா மீண்டும் நத்தையாய் தனக்குள் சுருண்டுக் கொண்டான்.

அபி குளித்து முடித்து வரும் வரை அப்படியே படுத்திருந்தான் அவன். பின் எழுந்து அமர்ந்தவன்,

“அபி, உன் கிட்ட கொஞ்சம் பேசனும். நான் குளிச்சிட்டு வர வரைக்கும் வேய்ட் பண்ணறியா?” என சுவற்றை பார்த்து கேட்டான்.

“விளங்கல!” என தலையைத் துவட்டியவாறே அவனைப் பார்த்தாள் அபி.

சுவற்றிலிருந்து பார்வையைத் திருப்பி அவள் முகத்தைப் பார்த்து,

“வெய்ட் பண்ணு அபி” என்றான் சதா,

“இப்படி முகத்த பார்த்து பேசனாத்தான் விளங்குது!” என்றவள் சம்மதமாய் தலை அசைக்கவும், குளிக்க சென்றான் அவன்.

அவன் வருகைக்கு காத்திருந்த அபிக்கு, கலக்கமாக இருந்தது. அவன் அருகே வெட்கமே இல்லாமல் படுத்ததிற்கு ஏதாவது சொல்ல போகிறானோ என சஞ்சலமாக இருந்தது.

நேற்று இருந்த மனநிலையில் தனியாக படுக்க முடியவில்லை அவளால். ராஜாவின் அறையில் இருந்து வெளியேறும் முன் அவன் சொன்ன வார்த்தைகள் அவள் காதில் விழாமல் போகவில்லை. அவன் குரலில் இருந்த பேரமைதி அவளைக் கலக்கியது. இத்தனை வருடம் அவனை முற்றாக அறிந்திருந்தவளுக்கு அந்த அமைதி புயலுக்கு முன் வரும் அமைதி என நன்றாக புரிந்தது.

மாமா வீட்டுக்கு வந்த புதிதில் தனியறையில் யாரும் இல்லாமல் படுத்திருக்கும் போது விழித்தே கிடப்பாள். போக போக வேறு வழியில்லாமல் கோழி தூக்கம் போட பழகிக் கொண்டாள். பின் ராம் வந்ததிலிருந்து அவனை தன்னுடன் படுக்க வைத்துக் கொள்வாள். குழந்தையாய் இருந்த ராமின் சிணுங்கல்கள், அழுகைகள் கூட அந்த இரவு நேரத்தில் இவளுக்கு தேவகானமாக இருக்கும். தனிமை தந்த அச்சத்துக்கு வடிகால் அல்லவா அவனின் அழுகை.

இரவுகளில் பலர் இளையராஜாவைத் தேடுவார்கள், வேறு சிலர் ரகுமானைப் பிடித்துக் கொள்வார்கள். இவளுக்கு அமைதி கொடுப்பது பக்கத்தில் தூங்குபவரின் மூச்சுவிடும் ஒலி மட்டுமே. தாம் தனித்து இல்லை எனும் உணர்வு கொடுக்கும் சந்தோஷம் கிடைக்கப் பெற்றவர்கள் எல்லாம் அதிர்ஷ்டசாலிகள் அல்லவா! புரண்டு தூங்க முடியாமல் கஸ்டப்பட்டவள், வேறு வழி இல்லாமல் தான் சதாவின் அருகில் வந்துப் படுத்தாள். அவன் மூச்சு சத்தத்தை கேட்டுக் கொண்டே ஆழ்ந்து உறங்கியும் போனாள்.

இரவில் செய்வது எதுவுமே பலருக்கு தப்பாக தெரியாது. ஏகாந்த இரவின் மகிமை அப்படி. ஆனால் விடியல் கொண்டு வருமே ஒரு நியாயப் புத்தி, ஷப்பா அதை சமாளிப்பதற்குள் போதும் போதும் என ஆகிவிடும். அப்படிதான் அபியும் இரவில் தான் செய்த முட்டாள்தனத்தை எண்ணி வருந்தியவாறே காத்திருந்தாள்.

பாத்ரூம் கதவு திறக்கவும்,
 

vanisha

SM Exclusive
Author
SM Exclusive Author
#10
“நான் செஞ்சது தப்புதான் வெட்டு சார். ஏதோ பயத்துல உங்க பக்கத்துல வந்துப் படுத்துட்டேன். சின்ன புள்ள தெரியாம வந்துப் படுத்துட்டனே, இம்மாம் பெருசு வளந்துருக்கீங்களே போடின்னு துரத்தி விட வேண்டியது தானே? எதுக்கு உள்ள தள்ளி நல்லா படுன்னு சொன்னீங்க? அதனால உங்க மேலயும் தப்பு இருக்கு. தப்புக்கு தப்பு சரியா போச்சு. அதை விட்டுட்டு ஏதாச்சும் திட்டுனீங்க, அப்புறம் அமைதியான அபிய ஆங்கார அபியா பார்ப்பீங்க!” என அவனுக்கு சான்ஸ் கொடுக்காமலே பொரிய ஆரம்பித்தாள்.

வார்த்தை வராமல் அசந்துப் போனான் சதா. நெருங்கி அவள் அருகில் வந்தவன், கழுத்தின் வெளியே தொங்கிக் கொண்டிருந்த தாலியைக் காட்டி,

“என்னதிது?” என கேட்டான்.

“அவனை நிமிர்ந்துப் பார்த்தவள்,

“தாலி” என பதில் அளித்தாள்.

“இது உன் கழுத்துல இருக்கற வரைக்கும், எந்த நேரத்துல நீ என் பக்கத்துல வந்துப் படுத்தாலும் தப்பில்லை. அதனால தப்பு செஞ்சிட்டேன்னு இன்னொரு முறை சொல்லாதே!” இதை சொல்லும் போது அவள் கண்களைப் பார்த்துதான் சொன்னான் சதா.

“அப்போ சரி. நீங்க பேசனும்னு சொன்னதுல நான் அப்படியே டர்ராயிட்டேன் (பயந்துட்டேன்). நேத்து நைட் மாதிரியே தினமும் பக்கதுலயே படுத்துக்கவா வெட்டு சார்? நான் உங்களை எந்த தொல்லையும் பண்ண மாட்டேன். உங்க மூச்சு சத்தம் தாலாட்டு மாதிரி என்னை நிம்மதியா தூங்க வச்சது”

‘நீ தொல்லை பண்ணனும்னு தான் நான் ஆசை படறேன் அபி’

பார்வையை மூக்கில் வைத்தவன்,

“நீ கேக்கறதுக்கு நான் சரி சொல்லனும்னா, நான் கேக்கறதுக்கும் நீ சரி சொல்லனும்” என புதிர் போட்டான்.

“என்ன வெட்டு சார்?”

“என் பக்கத்துல நீ படுத்துக்கலாம், ஆனா நான் வாசனைப் பிடிக்க உன் கையைக் குடுக்கனும். சரியா?” (அடேய், மிடிலடா உன்னோட!)

“அடச்சை! இவ்வளவுதானே? நான் கூட என்னம்மோன்னு பயந்துட்டேன். இந்த டீலீங் எனக்கு ஓகே. ஒரு கவிதையோட நம்ம டீலிங்க ஆரம்பிச்சு வைப்போம். ஓகேவா வெட்டு சார்?”

“வேணான்னா விடவா போற? சரி எடுத்து விடு, கேட்போம்”

“அவ்வளவு கஸ்டப்பட்டு ஒன்னும் நீங்க கேக்க வேணாம்!” முறுக்கிக் கொண்டாள் அபி.

“கஸ்டம்லாம் இல்ல அபி. உன் மொக்கை கவிதைய, சாரி சாரி, சக்கைப் போடு போடற கவிதைய கேட்க குடுத்து வச்சிருக்கனும்” என கண்களால் சிரித்தான் சதா.

“கிண்டல் பண்ணுறீங்கன்னு தெரியுது. இருந்தாலும் நான் கவிதை சொல்லுற மூட்ல இருக்கேன். அதனால சொல்லுறேன்.

யானைக்கு இருக்கு தும்பிக்கை

நான் கும்புடற சாமி அம்பிகை

உங்க மேல இருக்கு நம்பிக்கை

மோந்துக்க தருவேனே இந்தக்கை!!!!” என சொல்லி தன் வலது கையை நீட்டினாள்.

அந்த கவிதையால் தன்னையறியாமல், கூட்டுக்குள் சுருண்டிருந்த சதாவை மீண்டும் வெளியே கொண்டு வந்தாள் அபி.

கலகலவென நகைத்தவாறே அவளை நெருங்கி நீட்டிய கையைப் பிடித்தவன் அப்படியே அவளை வாரி அணைத்துக் கொண்டான்.

“யூ ஆர் ச்சான்ஸ்லெஸ் அபி!” சிரித்தவாறே குனிந்து அவள் கழுத்தை வாசனைப் பிடிக்க ஆரம்பித்தான் அவன்.

சதாவின் செய்கையில் நெளிந்தவள்,

“கை மோந்துப் பார்க்கறது மட்டும்தான் நம்ம டீலிங்ல இருக்கு. கழுத்துக்கு நம்ம எந்த அக்ரிமெண்டும் போட்டு கவிதை படிக்கல வெட்டு சார். விடுங்க! “ என தள்ளினாள் அபி.

அணைப்பில் இருந்து அவளை மெல்ல விடுவித்தவன், விட்ட வேகத்திலே மீண்டும் அருகே இழுத்தான்.

“இந்த ஒரு தடவை மட்டும் அபி. அப்படியே ட்ரக் மாதிரி உன் வாசம் என்னை என்னமோ பண்ணுது. ப்ளீஸ் அபி! உன்னை தொடக்கூட மாட்டேன். கழுத்தடியில வாசம் மட்டும் பிடிச்சிக்கறேன்” கிட்டதட்ட கெஞ்சினான்.

அவன் முகத்தை ஒரு நொடி அமைதியாக நோக்கியவள்,

“சரி, ஆனா தொடாம மோந்துக்குங்க. தொட்டீங்கன்னா கை வாசம் டீலிங்க கூட கேன்சல் பண்ணிருவேன்” என மிரட்டினாள்.

அவளைப் பிடித்திருந்த கையை விட்டவன், உடல் உரசாமல் கொஞ்சம் இடைவெளி விட்டு நின்றுக் கொண்டான்.

“தலையை ஒரு பக்கமா சாய்ச்சுக்கோ அபி.” கரகரப்பாக குழைந்து வந்தது அவனின் குரல்.

அவள் தலையை சாய்த்து கழுத்தைக் காட்டவும், மெல்லக் குனிந்து மூக்கு நுனி மட்டும் கழுத்தில் உரச அவள் வாசனையை ஆழ்ந்து உள்ளிழுத்தான். சோப் வாசனையோடு அவளின் பிரத்தியேக வாசமும் சேர்ந்து சதாவை ஒரு மாயலோகத்துக்கு இழுத்து சென்றது.

‘இப்போ செத்து சுண்ணாம்பா போக சொன்னா கூட போயிருவேன் கேசரி! யப்பா என்ன வாசம்டா சாமி, உசுர உரசிப் போற வாசம்!’ (தலைகீழா வந்தாலும் தலைப்பு வந்துருச்சி, ப்ளீஸ் நோட் திஸ் போய்ண்ட்)

அவன் கூர் மூக்கு கழுத்தை தொட்டதும், தேகம் சிலிர்த்து அடங்கியது அபிக்கு. உடம்பில் உள்ள பல நரம்புகள் பின்னி பிணைந்து நாட்டியமாடும் இடமல்லவா மாந்தரின் கழுத்து! ஆண் பிள்ளையாய் சுற்றி திரிந்தவளின், நுண்ணிய உணர்வுகளை அவன் மூக்கின் உராய்வு தட்டி எழுப்பியது.

அவசரமாக சதாவைத் தள்ளி விட்டவள்,

“இனிமே கையோட நிறுத்திக்குங்க வெட்டு சார். இப்ப பண்ணது எனக்குப் பிடிக்கல. மறுபடியும் இப்படி செஞ்சீங்க, மூஞ்சி இருக்கும் ஆனா அதுல மூக்கு இருக்காது” என திட்டியபடி வெளியேற முனைந்தாள்.

அவள் தள்ளியதால், கிரிக்கேட் பார்க்கும் புருஷன் கையில் இருந்த டீவி ரிமோட்டைப் பிடுங்கி விட்டது போல விழித்தவன் சட்டென சமாளித்துக் கொண்டான்.

“நில்லு அபி! நீ பக்கத்துல வந்தாலே நான் பேச வரது மறந்து கவனம் திசை மாறி போயிருது. ஐம் சாரி. இனிமே நீயே கழுத்தக் காட்டாம, நான் வாசம் பிடிக்க மாட்டேன். இப்போ வந்து உட்காரு. நேத்து பேச நினைச்சத இன்னிக்காவது பேசலாம்.” என்றவன் கட்டிலில் போய் அமர்ந்துக் கொண்டான். அவளும் இடைவெளி விட்டு அமர்ந்துக் கொண்டு அவன் முகத்தைப் பார்த்தாள்.

“அபி, அப்பாவ பற்றி தான் உன் கிட்ட பேசனும். நம்ம கல்யாணம் நடந்த அவசரத்துல இதைப் பற்றி நான் விலாவரியா உன் கிட்ட சொல்ல முடியாம போயிருச்சு.”

“அப்பாவுக்கு என்னமோ சரியில்லைன்ற வரைக்கும் எனக்குப் புரியுது. ஏன் இப்படி ஆயிட்டாரு வெட்டு சார்?”

“அபி, அவருக்கு டிமேன்ஷியான்னு ஒரு வகை நோய். அதை எப்படி விளக்கறது! ஹ்ம்ம். அது மனம், உடல் இரண்டும் சம்மந்தப் பட்ட ஒரு வகை பிரச்சனை. நோய்ன்னு சொல்ல வேணாமே, எனக்கு மனசு வரல அபி. இப்போ அவர் ஒரு குழந்தை மாதிரி. அப்படித்தான் அவர நாம பார்த்துக்கனும். சில சமயம் எல்லா விஷயமும் ஞாபகம் இருக்கும், சில சமயம் எல்லாம் மறந்துரும். நல்லா பேசிட்டே இருப்பாரு, திடீர்னு வயலண்டா ஆகிருவாரு. ஒரு தடவை நல்ல மனநிலையில இருந்தப்போ என்னை கல்யாணம் பண்ணிக்க சொல்லி அழுதாரு. சத்தியம் பண்ண சொன்னாரு. அதுக்கு முன்ன என் வாழ்க்கையில ஒரு துணை வேணும்னு நான் நினைச்சதே இல்ல. அவரோட அழுகை என்னை ரொம்ப பாதிச்சிருச்சு அபி. அவருக்காக தான் கல்யாணம் செய்ய முடிவெடுத்தேன்.”

சற்று நேரம் அமைதியாய் இருந்தான் சதா. பின் அவள் கண்களை நோக்கி,

“உன்னைப் பார்த்ததும் தான் எனக்காக கல்யாணம் பண்ணிக்கனும்னு தோணுச்சு” என தொண்டையை செருமிக் கொண்டு சொன்னான்.

சதாவின் முகத்தில் தோன்றிய மென்மையைக் கண்டவளுக்கு, படபடவென வந்தது. அன்று மருந்தின் அரை மயக்கத்தில் இருந்தப் போதே நண்பர்கள் இருவரும் பேசியதை கேட்டிருந்தாள் அபி. காதலா என தெரியாது என்றவனின் கண்களில் வழிந்த காதலை இந்த சில நாட்களில் அடிக்கடி உணர்ந்திருக்கிறாள் அவள். ஆனால்
 

Latest Episodes

Sponsored Links

Top