• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Uravennum oonjal - A short story

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

akila kannan

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Apr 27, 2018
Messages
7,902
Reaction score
46,328
Location
Earth
உறவெனும் ஊஞ்சல்

காலையில் அனைவருக்கும் காபி கொடுத்து விட்டு, "இன்று காலை என்ன டிபன் செய்யலாம் ?", என்று பாரதி தனக்குள் கேட்டுக் கொண்டாள். நடுத்தர வயது. சற்று பூசினாற்போல உடல் தோற்றம். தலையில் மெலிதான நரை அவள் வயதை மெளனமாக கூறியது.

"அடை செய்வோமா?", என்று தனக்கு தானே பாரதி முணுமுணுக்க, அடை என்றதும் அவளுக்கு தன் அம்மா ஞாபகம் வந்து விட்டது. "தன் தாயின் கைப் பக்குவம் வருமா?", என்ற எண்ணம் மேலோங்க, " அன்பிற்குக் கடிவாளம் இட்டுக் கொண்டாலும் மனதின் போக்கை கட்டுப் படுத்தவா முடிகிறது? ",தன்னையே கடிந்து கொண்டாள் பாரதி.

மனதின் போக்கை மாற்றத் தோட்டத்திற்கு வந்தாள் பாரதி. பூத்துக் குலுங்கிய மலர்கள்."பூக்கள் அம்மாவுக்குப் பிடிக்குமே..", என்ற எண்ணம் தோன்ற, தன் முகத்தை வேறு பக்கம் திருப்பிக் கொண்டாள் பாரதி.. சில்லென்ற காற்று முகத்தை வருட மனம் லேசாகியது. வானம் மேகம் சூழ்ந்து கருமையாய் காட்சியளித்தது. மழை வருமோ? என அவள் நினைப்பதற்குள் சட் சட்டென்று மழைத் துளிகள் மண்ணைத் தொட்டன. அவளையும் நனைத்து விட்டன.

தன் தாய் எழுதிய கவிதை அவளுக்கு நினைவு வந்தது..


மழையே,
தரையின் மீது
சட் சட் சட்டென
உன் ஒலி சங்கீதம்..



பூவின் மீது
துளி துளியாய்
உன் நீர் துளி ரம்மியம்...



என் முகத்தில்
முத்து முத்தாய்
உன் முத்துக்கள் குளுமை.


மழைத் துளி பாரதியைத் தீண்ட, "ஏண்டி பாரதி அறிவு இருக்கா?", எங்கிருந்தோ ஒலிப்பது போல் அவள் தாயின் குரல் பாரதியின் சிந்தனையைக் கலைத்தது. குரல் ஓர் பிரமை. ஆனால் அந்த அன்பிற்குத் தான் எத்தனைச் சக்தி? அவள் கண்ணீரும் முத்து முத்தாய் மழை நீரோடு கரைந்தது.


ஜன்னல் வழியாக பாரதியை பார்த்துக் கொண்டிருந்த அவள் கணவன் ரமேஷ், "என்ன அம்மா ஞாபகமா?" என்று ஜன்னல் கம்பியை பிடித்துக்கொண்டு அவளைப் பார்த்தபடி வினவினான்.

"அதெல்லாம் ஒன்றுமில்லை. எல்லாம் முடிந்து விட்டது. அவை முறிந்து போன உறவுகள்", என சிடுசிடுத்துக் கொண்டே சமையல் அறை நோக்கி விரைந்தாள் பாரதி .

இன்று நேற்றல்ல ஐந்து வருடங்களாய் அவளால் ரமேஷிடம் சிடுசிடுக்கத்தான் முடிந்தது. தன் எண்ண ஓட்டத்தைக் கட்டுப்படுத்த முடியவில்லை. கட்டுப்படுத்த முடியாத எண்ண ஓட்டத்தின் விளைவு தான் இந்த சிடுசிடுப்பு. இதைப் புரிந்து கொண்ட ரமேஷின் முகத்தில் ஏளன நகை இழையோடியது .

சிந்தனை ஓட்டத்திற்கு முற்றுப் புள்ளி வைத்து சமையல் அறைக்குச் சென்ற, பாரதி அடை வார்த்துக் கொண்டிருந்தாள். அடையின் மணம் வீடெங்கும் பரவி அனைவரையும் உணவருந்த அழைத்தது. சுடச்சுட அடையைத் தட்டில் வாங்கிக் கொண்டு அதற்கு வெண்ணெய்யையும் தொட்டுக் கொண்டு சிறுசிறு துண்டுகளாய் ருசித்து சாப்பிட்டுக் கொண்டிருந்தாள் மாதுரி, பாரதியின் செல்ல மகள்.

"அம்மா உன் கை பக்குவமே கைப்பக்குவம்... என்ன ருசி என்ன ருசி...", எனச் சிலாகித்தாள் மாதுரி.
"எல்லாம் இங்கிருக்கும் வரை தான்.. திருமணம் முடிந்து விட்டால் எல்லாம் மாறி விடும்.. மறந்தும் விடும்....", என்று கேலி பேசினாள் பாரதி.


" என்ன அம்மா... என்னை உங்களை மாதிரி நினைசீங்களா?", என்று மாதுரி முடிப்பதற்குள் பாரதியின் முகம் சுண்டைக்காயாய் சுருங்கியது. வாடிய தன் முகத்தைப் பார்த்த மாதுரி பதறிவிட்டாள். " அம்மா சாரி. Really I didn’t mean it. Sorry sorry..,", என்று தன் தாயைச் சமாதானம் படுத்தினாள்.


“மாதுரி நீ காலேஜ்க்கு கிளம்பு. I will take care ..." என்றான் ரமேஷ். "அப்பா.. sorry அப்பா..", என்று கூறிவிட்டு அங்கிருந்து சென்று விட்டாள் மாதுரி. ரமேஷ் பாரதியிடம், நீ உன் குழந்தைகளுக்கு ஓர் நல்ல உதாரணமாக இருந்திருக்க வேண்டும் ", என்று அங்கிருந்த நாற்காலியில் அமர்ந்தபடி பாரதியின் முகம் பார்த்து கூறினான்.

பாரதியோ, "குழந்தைகள் என்னிடம் சுயகௌரவம் கற்றுக் கொள்ளட்டும்...." என்று கூறிவிட்டு அடை வார்க்கச் சென்றாள். வீட்டில் நடக்கும் சின்னச் சின்ன பிரச்சனைகளில் கௌரவம் காப்பாற்றப்படுவதில்லை. உறவுகள் காப்பாற்றப்பட வேண்டும். விட்டுக் கொடுத்து வாழக் கற்றுக் கொள்ள வேண்டும்...", என்று தான் சொல்ல நினைப்பதை அழுத்தமாகச் சொல்லி முடித்தான் ரமேஷ்.

சிந்தனையோடு வேலைகளை முடித்து விட்டு ஓய்வாக ஊஞ்சலில் அமர்ந்தாள் பாரதி. ஐந்து வருடங்களாய் அந்தப் பெட்டி அவள் கண்முன்னே சிரித்துக் கொண்டிருந்தது.


முன்பெல்லாம் ரமேஷ் அவளைச் சீண்டினால், பாரதி விடுக்கும் செல்ல மிரட்டல், " நான் என் அம்மா வீட்டிற்குச் சென்று விடுவேன். அப்புறம் நீங்கள் எல்லாரும் தான் கஷ்டப்பட வேண்டும்." அதன்பின், ரமேஷும், மாதுரியும் வேண்டாம் தாயே என்று அவளைக் கெஞ்சுவதும் அடிக்கடி நடக்கும் ஓர் விளையாட்டு. இப்பொழுது புரிகிறது "அது விளையாட்டல்ல.. ஓர் ஆனந்த நிகழ்ச்சி என்று..."

போக்கிடமற்றவள் அல்ல பெண்.

பல உறவுகள் அவளைத் தூண்களாய் தாங்கி நிற்கும் வரை அவள் ஓர் அழியா சாம்ராஜ்யம்...!!!

பாரதியின் எண்ணங்கள் பின் நோக்கிச் சென்றன. நான் தான் தாய் வீட்டில் நடந்த பிரச்சினையில் நிதானம் தவறி விட்டேனோ? தேவை இல்லாமல் வார்த்தைகளைக் கொட்டி விட்டேனோ?

ரமேஷ் அன்று சொன்ன வார்த்தைகள் இன்றும் அவள் காதில் ஒலித்தது. "அவசரப்படாதே பாரதி.. நீ சொல்வது நியாயம். ஆனால் நீ பேசும் வார்த்தைகள் உன்னைத் துக்கத்தில் ஆழ்த்தும்."

பாரதியின் மனம் கேட்பதெல்லாம் ஒரே ஒரு கேள்வியைத் தான்." நான் சண்டையிடுவதே ரமேஷுக்காகத் தானே... ஆனால் இவரே நம்மைக் குறை கூறுகிறாரே... இது ஏன்...?"

அன்று சண்டையிட்டு பெட்டியை எடுத்து வந்தவள் பாரதி. இன்று வரை தாய் வீடு செல்லவில்லை. கொண்டு வந்த பெட்டியை இன்னும் பிரிக்கவில்லை. பெட்டி அவளைப் பார்த்து சிரித்துக் கொண்டிருக்கிறது.. ஐந்து வருடங்களாய்...!!
 




Last edited:

akila kannan

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Apr 27, 2018
Messages
7,902
Reaction score
46,328
Location
Earth
"ஆரம்பத்தில் கணவனுக்காக தாய் வீட்டை எதிர்த்திருக்கிறாள். என்ன பாசம்... என்ன பாசம்?", என்றெல்லாம் ஊர் உலகம் இவளைப் பாராட்ட தான் செய்தது... பாராட்டினார்கள். காலம் செல்லச் செல்ல நரம்பு இல்லாத நாக்கு தானே அது மாற்றித் தான் பேசியது.

ரமேஷ் எதுவும் சொல்ல விட்டாலும், "என்னை விட்டால் உனக்கு வேற கதி ஏது?" , என்று சொல்லாமல் சொல்கிறதோ அவர் நடவடிக்கை என்ற எண்ணம் எழுவதை பாரதியால் தவிர்க்க முடியவில்லை.. தான் செய்தது தவறோ என்று காலம் கடந்த சிந்தனையில் ஆழ்ந்தாள் பாரதி.

பூ வேணுமா பூ! பூவேணுமா பூ!!
மணமான மல்லி
சாமிக்குச் சாமந்தி
மங்களகரமான முல்லை
அழகுக்கு ரோஜா...
பூ வேணுமா பூ! பூவேணுமா பூ!!

எல்லா பூவும் நம்ம கிட்ட இருக்குந்துங்க பூ வேணுமா பூ..

தெருவில் கேட்ட இந்தச் சத்தம் பாரதியை நிகழ் காலத்திற்கு கொண்டு வந்தது. இந்தப் பெண்ணிடம் பாரதி சில வருடங்களாய் பூ வாங்குகிறாள். தினமும் நேரம் தவறாமல் வந்து விடுவாள். ஏனோ, நேற்று வரவில்லை. கேள்வி கேட்காமல் வள வளவென்று பேசுபவள். கணவனின் பூ வியாபாரத்திற்குத் தோதாக பூ வியாபாரம் செய்கிறாள்.

இந்த ஏரியாவுக்கு பொன்னம்மா ஒரே பூக்காரி. வாய் ரொம்ப நீளம். தொழில் சுத்தம்.

பாரதி தினமும் பொன்னம்மாவிடம் பூ வாங்குவதால், பொன்னம்மா நேரடியாக பாரதி வீட்டிற்கு வந்தாள்.
பாரதி பொன்னம்மாவிடம் ஏன் நேற்று வரவில்லை என்று கேட்டாள்..


"அத்த ஏம்மா கேக்கறீங்க? எனக்கும் என் வூட்டுக் காரருக்கும் தகராறு.." - பூ விற்கும் தோழமையில் பேச ஆரம்பித்தாள் பொன்னம்மா.

"ஓ !" என்று கேட்டு வைத்தாள் பாரதி . "

"படித்தவக நீங்களே சொல்லுங்கம்மா நியாயத்த.. " என்று நிறுத்தினாள் பொன்னம்மா..

"ம்ம் .. " கொட்டி வைத்தாள் பாரதி.

"என் தங்கச்சிய பொண்ணு பாக்க வந்துருக்காங்க.. மாப்பிள்ளை நல்ல இடம்... கவுர்மென்ட் ஆஸ்பத்திரில கிளீனிங் வேலை. மாச சம்பளம். எங்கள மாதிரி அன்றாட சம்பளக்கறாங்க இல்லை. வழக்கமா சொல்றவக இந்த தடவ என்கிட்டே சொல்லல. பாத்திருக்க மாப்பிளையோ எம் புருசனுக்கு பங்காளி முறை. அவுக சொல்லிதா இவருக்கு தெரிஞ்சிருக்கு. இவரோ இப்பவே நம்மள மதிக்கல.. அப்பறம் எப்படி நம்மளை மதிப்பாங்கனு ஒரே சண்டை. அம்மா வூட்டுக்கு போகாத வராதான்னு ஒரே கூப்பாடு... இன்னையோட உறவை முறிச்சிக்கோனு ராங்கித் தனம் பன்றாரு .. "

"ம்ம்..அவுங்க சொல்றதும் நியாயம் தானே," என்று கேட்டு வைத்தாள் பாரதி.

"என்னம்மா படிச்சவுங்க நீங்களும் அவுகள மாதிரியே பேசிக்கிட்டு.. இதுல எதோ விஷயம் இருக்கும்னு நானும் எங்க அம்மா வூட்டுக்கு போய் பார்த்தேன். அவுக என்ன சொன்னாங்க தெரியுமா ? நமக்கேத்த இடமே முடியல... இது பெரிய இடம் எப்படி முடியப் போகுதுனு நினச்சேன்... அடிக்கடி பெண் பார்க்க கூப்பிட்டு ஏன் உங்க வியாபாரத்தை கெடுக்கணும்னு தான் கூப்பிடலை. இப்ப பாத்துருக்க மாப்பிள்ளை பெரிய மாப்பிள்ளைக்கு சொந்தமாம். அப்ப நல்ல குணமா தா இருக்கணும்னு ஒரு நம்பிக்கைனு ... சொன்னாங்க ..

இதுக்கெல்லாம் இவர் பேச்சை கேட்டுகிட்டு சண்டை போடலாமா? உறவுகள் என்ன காகிதமா கிழிச்சி போடறதுக்கு.. நமக்கு உறவுங்கிறது நீங்க ஆடுற ஊஞ்சல் மாதிரி....

ஒரு பக்கம் பிறந்த வீடு இன்னொரு பக்கம் புகுந்த வீடு.... ரெண்டு பக்கமும் போய்கிட்டு வரணும்.... ஆடாம இருந்தா தான் நல்ல இருக்குமா...? இல்லனா...! அந்திரத்துல நின்னா தா சரியா இருக்குமா?" , என்று பூக்காரி கேள்வியாய் நிறுத்தினாள்.


"ஆமா ..." என்று தலையை அசைத்து வைத்தாள் பாரதி. "நீங்க படிச்சவங்க, சட்டுனு புரிஞ்சிக்கிட்டிங்க... எம் புருசனுக்கு இத புரிய வைக்க ஒரு நாள் ஆகியிருக்கு.." என்று அங்கலாய்த்த பொன்னம்மா, "பூ வேணுமா பூ" என்று நடையைக் கட்டினாள்.

பாரதியின் எண்ண அலைகள் ஊஞ்சலாய் ஊசல் ஆடியது. உறவெனும் ஊஞ்சலின் ஆட்டத்தை அனுபவிக்க முடிவு எடுத்து விட்டாள் பாரதி. பாரதியின் பட்டறிவு கற்றுத் தராத பாடத்தை, அந்தப் பூக்காரி கற்றுக் கொடுத்து விட்டாள். பாரதியின் முகத்தில் தோன்றிய அழகான புன்னகை அவள் சிந்தனையின் தெளிவைக் காட்டியது. தவறு எங்கு இருந்தால் என்ன? தன்னிடம் என்றால் மன்னிப்புக் கேட்டுவிட வேண்டும். பிறரிடம் என்றால் மன்னித்து விட வேண்டும் என்ற முடிவுடன் பெட்டியை தயார் செய்து கொண்டு தன் தாயை பார்க்கத் தயாரானாள் பாரதி.

தன் சொல்லாலும் செயலாலும் செய்ய முடியாததை ஒரு பூக்காரி செய்ததை மிகவும் ஆச்சரியத்துடன் பார்த்து கொண்டிருந்தான் ரமேஷ். அவன் முகத்தில் அழகான புன்னகை இழையோடியது.

பாரதி அமர்ந்திருந்த ஊஞ்சல் முன்னும் பின்னும் அசைந்து ஆடிக்கொண்டிருந்தது.

- அகிலாகண்ணன்
 




Last edited:

Manikodi

அமைச்சர்
Joined
Jan 20, 2018
Messages
3,747
Reaction score
17,102
Location
Vriddhachalam
வாழ்க்கையில் சாதரணமான மனிதர்கள் பல சமயங்களில் பல சிக்கலான விஷயங்களை சுலமாக கடந்துவிடுவார்கள் படித்தவர்கள் அதனை சிக்கலாக்கிகொள்வார்கள்
 




akila kannan

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Apr 27, 2018
Messages
7,902
Reaction score
46,328
Location
Earth
வாழ்க்கையில் சாதரணமான மனிதர்கள் பல சமயங்களில் பல சிக்கலான விஷயங்களை சுலமாக கடந்துவிடுவார்கள் படித்தவர்கள் அதனை சிக்கலாக்கிகொள்வார்கள்
Correct akka.. :)
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top