Varaga Nathikaraiyoram - 16

Kavyajaya

SM Exclusive
Author
SM Exclusive Author
#1
விமானம் தரை இறங்கியதும் அனைவரும் இறங்கி விமான நிலையத்தில் அவரவர் உடைமைகளை எடுத்துக்கொண்டனர். ருத்ராவும் முகிலனும் வெளியே வர.. அவர்களுக்காக காத்திருந்த காரில் முகிலன் ஏறி அமர்ந்து கொண்டான். ருத்ராவை பார்க்க.. அவள் இவனை முறைத்து பார்த்து பின்... காரின் மறுபக்கத்தில் ஏறி கொண்டாள்.

தான் பேசினால் தான் யாருக்கு வந்த விருந்தோ என்று எந்த எதிர்வினையும் இன்றி தனது சரிபாதி இருக்கிறாளே.. எதற்கு பேசணும் என்று நன்றாக பேசும் அவளிடமும் பேச்சை கட் செய்துவிட்டான் முகிலன்.

ருத்ராவிற்கு தான் என்னவோ போல் இருந்தது.. வரும் போது நன்றாக பேசிக்கொண்டே வந்து.. இங்கு வந்து மூஞ்சியை திருப்பவும் அவளிற்கு கோபம் வந்தது.

அவள் முதன்முதலாக வீட்டை பிரிந்து வரும் துக்கத்தில் பேச்சு வராமல் இருக்க.. அவனது விளக்கம் மற்றும் அக்கறை சிறிது ஆறுதலாக இருந்தது உண்மைதான். ஆனால், ஏனோ அதை அவனிடம் சொல்லி மனதை பகிரவோ ஆறுதல் தேடவோ முடியவில்லை.

நன்றாக தூங்கியதால், இப்போது தூக்கம் வராமல் கண்களும் மூளையும் ப்ரெஷ் ஆக இருக்க... காரின் நிசப்தமும் மனதின் தனிமைக்கு தீனி போட.. அதற்கு மேல் தாக்கு பிடிக்க முடியாமல்,

“நாம இப்போ எங்க போறோம்”

என்று முகிலனிடம் கேட்டாள் ருத்ரா.

இப்போது அவன் அவள் பேசியதை கேட்காதது போல் வெளியே இருட்டில் வேடிக்கை பார்த்துக்கொண்டு வந்தான். அப்போது தான் ருத்ராவிற்கு அவன் கோபமாக இருப்பதே தெரிந்தது.

பின் தயங்கி..

“ஏன் பேசாம இருக்கீங்க”

என்று ஒரு வழியாக கேட்டு விட...

“நான் பேசுனா மட்டும் நீ காது குடுத்து கேட்டியா... அப்புறம் நீ பேசுனா நான் ஏன் காதுல வாங்கணும்...”
என்றான் இருட்டில் இருந்து பார்வையை அகற்றாமல்.


அதை கேட்டதும் இவளுக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை...

“நான் எங்க வீட்ட...”

என்று கூறும் போதே தொண்டையில் பெரிய பந்துபோல் துக்கம் தொண்டையை அடைத்தது...
அவள் அதற்கு மேல் பேசாமல் திரும்பி விட... முகிலன் அவசரமாக திரும்பி பார்த்தான்... முகம் காட்டவில்லை என்றாலும் ருத்ராவின் கண்களில் இருந்து கண்ணீர் வருவதை பக்கவாட்டில் இருந்தே பார்த்துவிட்டான்.


அவன் மனது ஏனோ கசிந்தது... இதுவரை கோபப்பட்டு மட்டுமே பார்த்த அவளது முகத்தில் அழுகை பொருத்தமில்லாதது போல் தோன்றியது.

உடனே அவன்...

“நாம போக போற இடம் சஸ்பென்ஸ்... உனக்கு அந்த இடம் பிடிக்கும் பாரு...”

என்றான்.

“ம்ம்ம்... சரி”

என்றதோடு கண்மூடி கார் கதவில் சாய்ந்தாள் ருத்ரா.

உண்மையை சொன்னால், அவனிற்கு இப்படி அடங்கி போகும் ருத்ராவை பிடிக்கவே இல்லை. வார்த்தைக்கு வார்த்தை எதிர்ப்பேச்சு பேசும் கோவக்கார ருத்ராவை தான் எதிர்பார்த்தான்.

அவள் பேச வந்தா வீம்பு பிடிக்கிறோம்... அவள் பேசவில்லை என்றாலும் மனதை சுருக்குறோம்... கொஞ்சம் ஓவரா தான் போறோமோ என்று அவனிற்கே தோன்றி விட அத்தோடு அவனும் கண்மூடி பின்னால் சாய்ந்துவிட்டான்.

ஏர்போர்ட்டில் இருந்து 2 மணி நேர பயணத்திற்கு பிறகு அதாவது நள்ளிரவு இரண்டு மணி அளவில் கார் ஒரு பிரமாண்ட ஐந்து நட்சத்திர ஹோட்டலில் நின்றது.

முகிலன் ருத்ராவை அழைத்துக்கொண்டு ரிசப்ஷன் நோக்கி சென்றான். ரூமின் சாவி வாங்கி கொண்டு, உள்ளே செல்லாமல் மீண்டும் வெளியே செல்ல...

சிறிது தூரம் நடந்ததும் தான் ருத்ரா அந்த வித்தியாசத்தை உணர்ந்தாள். கால் மண்ணுக்குள் புதைந்து புதைந்து நடக்க.. அது கடற்கரை மணல் என்று தெரிந்தது. பின் நிமிர்ந்து பார்க்க... சற்று தூரத்தில் தனி தனி வீடு போல் வரிசையாக ஒரே டிசைனில் மரத்தாலான காட்டேஜ் நிலத்தில் இருந்து சற்று உயரமாக கட்டப்பட்டிருந்தது.

அதனை நெருங்க, நெருங்க கடல் அலைகளின் ஓம் கார சத்தம் அந்த இரவின் அமைதியை கிழித்துக்கொண்டு காதில் இன்னிசை மீட்டியது.

முகிலன் தன் கையில் உள்ள சாவியை கொண்டு படியேறி கதவினை திறந்தான், பின் அவளை பார்த்து புன்னகைக்க அந்த இடத்தின் ஏகாந்தம் மற்றும் குளிர்ச்சி ருத்ராவின் மனதை ஊடுருவி லேசாக்கியது.

அவளும் புன்னகையோடு உள்ளே நுழைந்தாள்.

உள்ளே சகல வசதிகளோடு அந்த கடற்கரை வீடு அமைதியாக வீற்றிருந்தது. ஹால் மற்றும் அதன் பக்கவாட்டில் இரண்டு அறைகள் மூடி இருக்க, காரில் வந்த பயண களைப்பு தீர ருத்ராவிற்கு குளிக்க வேண்டும் போல் இருந்தது. அங்கிருத்த ஒரு அறையை திறந்து முகிலன் நுழைந்ததும் ருத்ரா எங்கு போவது என்று குழம்பினாள்.

அவன் பின்னால் சென்றால் தப்பாக நினைப்பானோ இல்லை தனியாக சென்றால் தப்பாக நினைப்பானோ என்று யோசித்தவாறு இரண்டு அறைக்கும் செல்லாமல் நடுவில் நிற்க...

உள்ளே சென்று ருத்ரா வரவில்லை என்றதும் அவளை தேடி வெளியே வந்த முகிலன், அவள் வெளியே தயங்கி நிற்கவும்...

“இங்க என்ன பண்ற ருத்ரா...”

என்று கேட்டான்.

அவளோ...

“இல்ல... நான் எங்க... இல்ல... எந்த ரூம்ல தங்கணும்”

என்று கேட்டாள்.

“இப்போ நாம ஹஸ்பன்ட் அண்ட் வைப்... ஒரே ரூம்ல தான் இருக்கனும்... இங்க தனியா இருந்தா அதே தான் எங்க வீட்டுல.... சாரி நம்ம வீட்டுலயும் தோணும்... சோ உள்ள வா...”

என்றான்.
அதை கேட்டு அதிர்ந்த ருத்ரா ஏதேதோ எண்ணத்தோடு அவனை பார்க்க...


அவளது முகபாவத்தில் சிரிப்பு வந்தது முகிலனிற்கு, ஆனால் அதனை மனதினுள் அடக்கியவன்...

“அதுவும் இல்லாம இன்றைக்கு நமக்கு பிரஸ்ட் நைட் வேற எப்படி தனியா படுக்க, கொண்டாட வேண்டாம்”
என்று ஒரு மார்க்கமாக பார்த்தபடி அவளருகே நெருங்க...


அவன் ஆசைப்பட்ட கோவக்கார ருத்ரா வெளிவந்தாள்...

“ஏய்... அங்கேயே இரு பக்கத்துல வராத...”

என்று உள்ளுக்குள் நடுங்கி வெளியே கோபத்தில் சீற...

“வந்தா...”

என்றவாறு நெருங்கியே வந்துக்கொண்டிருந்தான்.

“இப்போ நீ என்னை தொட்ட... அப்புறம் நான் நாளக்கி மீட்டிங் வர மாட்டேன்... எதுக்காக நீ என்னை கல்யாணம் பண்ணுனியோ அதற்கு அர்த்தமில்லாம போயிரும்...”

என்று மனதில் நீண்ட நாட்களாக உறுத்தியதை கொண்டு மிரட்டினாள்.

அவள் அவ்வாறு கூறியதும் அவனது உல்லாசம் வடிந்தது... சும்மா சீண்டி பார்க்க நினைத்தவனை அவள் சீண்டி விட்டாள்.

“ஆமா நான் தான் உன்னை இந்த ப்ராஜெக்ட்காக கல்யாணம் பண்ணுனேன்... அம்மணி எதுக்காக என்னை கல்யாணம் பண்ணுனீங்க... அதுவும் வீராவேசமா நிறுத்த போறேன்னு சொல்லி..”
என்று பதிலிற்கு குத்தி காமித்துவிட்டான்.


அதை கேட்டதும் அவளது கண்கள் கலங்கியது... ச்ச... இது என்ன அடிக்கடி கண் கலங்கிட்டு... என்றவாறு அதனை உள்ளிழுக்க...

அதை பார்த்து முகிலன் ஆயாசமாக தலையை கோதினான்... ஒரு நாளையே ஓட்ட முடியலன்ன... வாழ்நாள் முழுக்க எப்படி இருக்க போறோம் என்று தோன்ற... கொஞ்சம் கடினப்பட்டு தன்னை சமன் செய்தவன்..
அவளருகே சென்று...


“வா பயபடாம வந்து படு... நமக்கு இன்னும் நிறைய காலம் நீண்டிருக்கு... ஒருத்தர ஒருத்தர் புரிஞ்சி அதுக்கப்புறம் நாம வாழ்கையை வாழலாம்...”

என்றான்.

அவளும் பெருமூச்சோடு... அவனை தாண்டி அறையினுள் நுழைந்தாள். பின் மனதின் போராட்டத்தில் உடல் களைப்படைய... அந்த பெரிய கட்டிலில் ஒரு ஓரமாக சென்று படுத்துக்கொண்டாள்.
முகிலனும் விளக்கை அனைத்து அடுத்த பக்கம் படுத்துக்கொண்டான். வெகுநேரம் போராடி அதிகாலை நான்கு மணிக்கே இருவரும் கண் அசந்தனர்.


சிறிது நேரத்தில் ருத்ராவின் போன் “சஷ்டியை நோக்க சரவண பவனார்” என்று கந்த சஷ்டி கவசம் இசைத்தது.
அதன் ஒலியில் விழித்தவள், அதை சட்டென்று அனைத்து திரும்பி பார்க்க... முகிலன் அசைந்து மறுபுறம் திரும்பி படுத்தான்.
 

Kavyajaya

SM Exclusive
Author
SM Exclusive Author
#2
வழக்கமாக அக்கா தங்கை சூர்யநமஸ்காரம் செய்யும் நேரமிது... தங்கை நினைவில் என்ன பண்ணுறாளோ என்று தவித்தவாறு அவளுடன் பேச வெளியே சென்றாள்.

வெளியே வந்ததும் ப்ரெஷ் அப் ஆகி வீடியோ கால் பேசலாம் என்று தோன்ற... பக்கத்து அறையில் நுழைந்து காலைகடன்களை முடித்து சுடிதார் மாற்றி வெளிவந்தாள்.

அதே நேரம் கிராமத்தில் வளர்ந்தவள் என்பதால் அறைக்குள்ளேயே இருக்க மூச்சுமுட்டுவது போல் இருக்க... கதவை திறந்து உப்பு கலந்து வரும் வெளிக்காற்றை சுவாசித்தாள்... பின் மாடியேறும் படிக்கட்டி வெளியே இருக்க... அதில் மாடியேறினாள்...

கடல் காதலியிடம் இருந்து பிரிய மனமில்லாமல் மெதுவே பிரியும் சூர்யனை கண்ணிமைக்காமல் பார்த்துக்கொண்டிருந்தாள் ருத்ரா... பின் அதை கைபேசியில் பதிய வைத்தும் கொண்டாள்.

அதே நேரம் பெரியகுளத்தில் மொட்டை மாடியில் அதே சூர்யனை பார்த்துக்கொண்டு முத்ரா தனியே யோகா செய்ய மனமில்லாமல் இருக்க...

கைபேசியில் வந்த வீடியோ கால் அவள் மோன நிலையை கலைத்தது... ருத்ரா அழைக்கிறாள் என்றதும் பரவசத்துடன் எடுத்தாள் தங்கை.

ருத்ரா எடுத்ததும்,

“என்னடி யோகா செஞ்சி முடிச்சிட்டியா...?”

என்று தான் கேட்டாள்.

அதற்கு பதில் கூறாமல் உதட்டை பிதுக்கிய முத்ரா...

“போ எனக்கு மூட் இல்ல...”

என்று கூறி.. பின் ருத்ரா தலையை தாண்டி கடல் தெரியவும்...

“ஓய்... எங்க இருக்க இப்போ... செம வியு உன் பின்னாடி”

என்றாள்...

பின் தங்கைக்கு அந்த காட்சியை காமித்தவள்...

“நான் போட்டோ எடுத்துருக்கேன்.. உனக்கு அனுப்புறேன் குட்டிமா”

என்றாள்.

“சரிக்கா... இது என்ன இடம்.. ஊர் பேர் என்ன..?”

என்று முத்ரா கேட்க...

அப்போது தான் தனக்கும் இது எந்த இடம் என்று தெரியாது என்பதை உணர்ந்து விழித்தாள் அக்காகாரி.

அப்போது

“சூர்யலங்கா”

என்று முகிலனின் குரல் இருவருக்கும் கேட்டது.

ருத்ரா கிளம்பிய சற்று நேரத்தில் அவளை காணாமல் வீடு முழுவதும் தேடிய முகிலன் கடைசியாக கதவு பூட்டாமல் சாற்றியிருப்பதை அறிந்து வெளியே வந்தான்... கடற்கரையில் ருத்ரா இல்லையெனவும் மாடி ஏறிவர... முத்ராவின் கேள்வியும் அதற்கு மனையாளின் முழியையும் கண்டு இயல்பாக பேர் சொல்லி வந்துவிட்டான். அவனுக்கே ஆச்சரியம் தானா வழிய போய் பேசியது என்று.

“ஸ்ரீலங்கா கேள்விபட்டிருக்கேன் சூர்யலங்கானும் ஊரு இருக்கா மாமா என்று கேட்ட முத்ரா... சரி அக்கா என்ஜாய்... நான் எதுக்கு பூசை வேலை கரடியா இங்க... வெற்றி நமதே... ஆல் த பெஸ்ட் அக்கா அண்ட் மாமா...”

என்று கூறி விடைபெற்றாள்.

பின் முகிலனும்,

“இப்போவே கிளம்பி டிஸ்கஸ் பண்ணுனா தான் பத்து மணிக்கு மீட்டிங் போக முடியும்... போகலாமா ருத்ரா”

என்றான்...

இருவரும் கிளம்பி என்ன என்ன பேசணும் எப்படி பேசணும் பட்ஜெட் எவ்வளவு என்று சுமார் ஒரு மணி நேரம் பேச... ருத்ராவிற்கு பசிக்க ஆரம்பித்தது... தண்ணியை இருமுறை குடித்தவள்... மூன்றாவது முறை குடிக்க போகையில் பாட்டிலை பிடுங்கினான் முகிலன்.

“பசிச்சா வாய திறந்து சொல்றதில்லையா...?”
என்று கூறியவன். மத்ததுக்கெல்லாம் வாய் அண்டார்டிக்கா வர ஓபன் ஆகும் என்று வாய்க்குள் முனங்கினான்.


தேவையானவற்றை எடுத்து விட்டு, காட்டேஜ் விட்டு வெளியேறி ஹோட்டல் நோக்கி இருவரும் நடந்தனர். அங்கு சென்று அமர்ந்து

“என்ன சாப்பிடுற...?

என்று ருத்ராவிடம் கேட்டான் முகிலன்.

அவளும் “எனக்கு தோசை சொல்லுங்க.. போதும்” என்றாள்.

சரி என்றவன்... பேரர் வந்து கேட்டதும்...

“ரெண்டு செட் பேசரட்டு” என்று கூறி ருத்ராவை பார்த்தான்.

அவள் இவனை முறைத்துக்கொண்டிருந்தாள்... “என்ன..” என்று முகிலன் கேட்டதும்,

“இதுக்கு எதுக்கு என்கிட்ட கேட்டிங்க... எனக்கு தோசை தான் வேணும்... நீங்க சொன்ன எதோ
வரட்டி எல்லாம் என்னால சாப்பிட முடியாது”
என்றாள்.


அவன் மீண்டும் உள்ளுக்குள் விழுந்து விழுந்து சிரித்து அவளை வம்பிழுக்க போனான்... பின் நேற்று இரவு நடந்த சண்டையை நியாபகம் வைத்து... இவ கிட்ட மட்டும் ஏன் தான் வம்பிழுக்க தோணுதோ என்று மானசீகமாக கொட்டி,

“இதுவும் நல்லா தான் இருக்கும்.. ஆந்திரா பாமஸ்”

என்றான்.

அதற்குள் பேசரட்டு வந்து விட ருத்ரா உள்ளுக்குள் அசடு வழிந்தாள்... ஏன் என்றால் வந்தது தோசை தான்... ஆனால் பச்சை நிறத்தில் மொரு மொரு வென்று காட்சியளித்தது... தொட்டுக்கொள்ள தேங்காய் மற்றும் ஆந்திரா கார சட்னி இருந்தது.

"பாசி பயிறு தோசை தான் இங்க பேசரட்டு..." என்று மட்டும் கூறி முகிலன் உண்ண தொடங்கினான்.

உனக்கு கொஞ்சம் கூட பொறுமையே இல்ல... என்று தன்னை தானே திட்டி கொண்டாள் ருத்ரா...

பின் இருவரும் அமைதியாக சாப்பிட்டு அரைமணி நேர பயணத்தில் மீட்டிங் நடக்க இருக்கும் ஹோட்டலை வந்தடைந்தனர்.

இங்கேயே ரூம் எடுத்திருக்கலாம்... ஏன் அங்க போனோம் என்று குழம்பிய ருத்ரா... பின் கடற்கரை பக்கம் இருக்கு.. இயற்கைய ரசிக்க கூட அங்க தங்கிருக்கலாம் என்றெண்ணி அந்த யோசனையை தள்ளி வைத்தாள்.

இவர்கள் கால் மணி நேரத்திற்கு முன்பே மீட்டிங் ஹால் சென்று அங்குள்ள நீள்சதுர மேசையில் அமர்ந்து காத்திருக்க ஆரம்பித்தனர்.
 
Last edited:

Advertisements

Top