‘வாயே திறக்காம எவ்ளோ அழுத்தமா உட்கார்ந்திருக்கா பாரு!’ என்கிற ஆத்திரம் வெடித்துக் கிளம்ப, “ஏய் விவேகா... கதவை திற!” என்று தன் பலம் கொண்ட மட்டும் கதவை ஓங்கி அடித்தான் விதார்த்.
அதில் தாழிடப்படாத கதவு தன்னால் திறந்துக்கொள்ள, இவன் ஆவேசமாக உள்ளே நுழைந்தான்.
அறையை சுற்றி விழிகளை சுழற்றியவன் அவள் அங்கில்லாமல் இருக்கவும் நெற்றியை சுருக்கிவிட்டு மெதுவாக குளியலறை நோக்கிப் பார்வையை நகர்த்த, அது வெளியில் தாழிடப்பட்டு இருந்ததில் முகம் இறுகிப் போனான்.
இதயம் பெரும் எரிமலையாய் மாறிக் கொந்தளிக்க ஆரம்பிக்க, கைமுஷ்டிகளை இறுக்கியவன் மெல்ல கீழிறங்கி வந்து அங்கிருந்த ஒற்றைச் சோபாவில் அழுத்தமாக அமர்ந்துக் கொண்டான்.
வடித்து வைத்த சிலையென வெளியே சலனமில்லாது உணர்வுகளை தொலைத்த விழிகளுடன் இருந்தாலும் அவன் உள்ளத்தினில் மட்டும் அத்தனைப் போராட்டம் நிகழ்ந்துக் கொண்டிருந்தது. இரு கரங்களை கோர்த்து அதில் முகம் புதைத்தவன் தான் எத்தனை மணி நேரம் அப்படியே இருந்த இடத்தை விட்டு அசையாது அமர்ந்திருந்தானோ...
விவேகா வீடு திரும்பிக் கதவை திறக்கையில் அந்த இடமே இருளில் மூழ்கி தன் வெளிச்சத்தை தொலைத்திருந்தது.
‘காலையில போனவன் இன்னும் வீட்டுக்கு வரலையா?’
மனதில் தோன்றிய கேள்வியுடன் ஸ்விட்ச் போர்ட் தேடி லைட்டை போட்டவள், சிவந்த விழிகளுடன் எதிரே உக்கிரமாய் உட்கார்ந்து இருந்தவனை கண்டு ஒரு கணம் நெஞ்சம் பதைபதைத்துப் போனாள்.
மெல்ல தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டவள், ‘இவன் எப்போ வந்தான்? லைட் கூட போடாம இப்படி இருட்டில் உட்கார்ந்து இருக்கான்...’ என்கிற சிந்தனை தோன்றினாலும் அவனிடம் பேச விருப்பமற்று விழிகளை வேகமாக திருப்பிக்கொண்டு தன் அறைக்குச் சென்று விட்டாள்.
கணவனின் சீற்றம் புரியாமல் மேலும் மேலும் அவனை ஆவேசமாக்கிக் கொண்டிருந்தாள் மனைவி.
போட்டிருந்த ஜீன்ஸ் குர்தியை மாற்றி இலகுவான பருத்தி ஆடை ஒன்றினை அணிந்தவளுக்கு விதார்த்திடம் எண்ணங்கள் தாவியது.
‘எத்தனை மணிக்கு வீடு வந்திருப்பான்? சாப்பிட்டானா இல்லையா...’
அவனருகே சென்றுக் கேட்டிட ஆசைதான்... ஆனால் காலையில் நடந்த நிகழ்வும், அவனுடைய எச்சரிக்கையும் அவளை இழுத்துப் பிடித்து அங்கேயே அமர வைத்தது.
விவேகா வரும்பொழுது எட்டு மணி, இப்பொழுது ஒன்பது மணியை தாண்டி கடிகாரத்தின் முட்கள் நகர்ந்துக் கொண்டிருக்கிறது. இன்னமும் அவன் கீழிருந்து தனது அறைக்கு வரவில்லை.
வெளியே செல்ல மனம் வராமல் உள்ளேயே அடைந்துக் கிடந்தாலும் கதவைச் சாற்றாமல் கணவனின் அசைவுகளை நோட்டமிட வசதியாக திறந்து வைத்திருந்தவள் அவன் இன்னும் வராதிருக்கவும் தன்னை மீறி லேசாய் கவலைக்கொண்டாள்.
அவனளவு அழுத்தத்தை இவளால் கையாள முடியவில்லை, ஒரே வீட்டில் இருந்துக்கொண்டு அவன் எப்படியோ போகட்டும் என்று கண்டுக்கொள்ளாமல் இருக்கப் பெரும்பாடுபட்டு போனாள்.
இறுதியில் அவள் இயல்பு ஜெயிக்க, மெதுவாக எழுந்து வெளியே வந்து ஓசையின்றி கீழ் தளத்தை எட்டிப் பார்த்தாள்.
இருந்த நிலையில் மாற்றமில்லாமல் அப்படியே ஒரு மணி நேரமாக அமர்ந்திருப்பவனை கண்டு அயர்ந்துப் போனவள், சில நொடிகள் செய்வதறியாது குழம்பினாள்.
‘இவனுக்கு என்ன தான் வேண்டுமாம்? ஏன் தான் என்னை இப்படி படுத்தி எடுக்குறானோ... இடியட்...’ என்று பல்லைக் கடித்து தனக்குள் முணுமுணுத்துக் கொண்டவள் பக்கத்தில் போய் கேட்பதற்கும் வழி இல்லாமல் தயங்கிக்கொண்டு நின்றிருந்தாள்.
அதில் மேலும் அரைமணி நேரம் கடக்க, அதன்பின் வேறுவழியின்றி தன் நிலை விட்டிறங்கி மெதுவாகப் படியிறங்கி வந்தாள் பெண்.
மனைவியின் வரவை உணர்ந்தும் விதார்த் தலையை திருப்பவில்லை, லேசாக கோபம் துளிர்த்தாலும் அமைதியாக அவன் முன்னே வந்து நின்றாள் விவேகா.
மெதுவாக புருவங்களை சுளித்தவன், “எங்க போன?” என்றான் அழுத்தமாக, பார்வை அவளிடம் உயரவில்லை.
அவன் அதிகாரத்தில் உள்ளிருந்து சுறுசுறுவென்று எரிச்சல் கிளம்பினாலும் அடக்கிக்கொண்டவள், “பிரெண்ட் வீட்டுக்கு!” என்று பதில் சொன்னாள்.
கோபமாக நிமிர்ந்தவன், “சொல்லிட்டுப் போகத் தெரியாதா?” என்றான் வள்ளென்று.
கணவனின் அரட்டலில் திக்கென்று முதலில் அதிர்ந்துப் பின் தெளிந்தவள், “ஏன் சொல்லிட்டுப் போகனும்? ஒதுங்கி இருக்கச் சொன்னவருக்கு இதை கேட்க மட்டும் என்ன உரிமை இருக்கு?” என்றாள் ஆத்திரமாக.
அவளும் தான் எவ்வளவு பொறுத்துப் போவது? சரி, ஒருவருக்கு ஒருவர் பிடிக்கவில்லை என்றாலும் இரண்டு பேர் மட்டுமே இருக்கின்ற வீட்டில் கொஞ்சம் அனுசரணையாக நடந்துக்கொள்வோம் என்று இயல்பாக பேசிப் பழக முயன்றால் ஒன்று சண்டைப் போடுகிறான் அல்லது உரிமை எடுத்துக்கொள்ள பார்க்கிறான் என்று தனக்குள் பொருமிக் கொண்டாள்.
மனைவியின் ஒதுக்கம், உரிமை ஆகிய சொற்களில் வெடுக்கென்று எழுந்து அவளருகே வந்தவன், “என்ன சொன்ன?” என்று கூர்மையாக கேட்க, இவள் மனதில் லேசாக பீதி பரவியது.
பதில் சொல்வதை தவிர்த்து யோசனையுடன் நிற்பவளை இன்னும் நெருங்கி கதிகலங்க வைத்தவன், “என்ன சொன்னேன்னு கேட்டேன்!” என்றான் வார்த்தைகளை அழுத்தி.
முகம் சுணங்கியிருக்க அவனை நிமிர்ந்துப் பார்த்தவள், “நிஜமா என்ன செய்யனும்னு எனக்கு புரியலை...” என்று பரிதாபமாக சற்றுமுன் மனதில் நினைத்ததை அவனிடம் வார்த்தைகளாக புலம்பினாள் விவேகா.
“ஒரே வீட்ல இருக்கோம்னு ஹவுஸ்மேட் மாதிரி நட்பு பாராட்டலாம்னு நினைச்சு பிரெண்ட்லியா பழகினா அதை தப்பா அர்த்தம் பண்ணிக்கிட்டு என்கிட்ட...” சிறிது திணறி நிறுத்தி, “உரிமை எடுத்துக்க நினைக்கறீங்க. அதுக்கு விருப்பமில்லாம நான் தயங்கி ஒதுங்குனா கோபப்படுறீங்க, உங்ககிட்ட பேசக்கூடாதுன்னு சண்டைப் போடறீங்க. சரி, உங்களுக்கு பிடிக்கலைன்னு பேசாம அமைதியா என் வேலையை பார்த்தாலும் இப்படி அழுத்தமா உட்கார்ந்து இருக்கீங்க? நான் என்ன தான் பண்ணட்டும்?” என்றாள் சோர்வாக.
விதார்த்தின் முகம் அப்படியே மாறிப் போனது, சிறிது நேரம் மௌனமாக தரையை வெறித்து நின்றிருந்தான்.
கணவனின் எண்ணவோட்டத்தை புரிந்துக்கொள்ள முடியாமல் அவன் முகத்தை பார்த்தவள் பின் தயங்கித் தயங்கி கடந்த ஒரு மணி நேரமாக மனதை அரித்த அக்கேள்வியை தன்னை மீறி வாய்விட்டு கேட்டு விட்டாள்.
“சாப்பிட்டீங்களா?”
மெல்லமாக கேட்பவளின் முகத்தை நிமிர்ந்துப் பார்த்தவன், “இப்போ கேட்குறியா... இல்லை மதியம் சாப்பிட்டேனான்னு கேட்குறியா?” என்றான் விட்டேற்றியாக.
சின்னதாக திகைத்தவள் ஒரு கணம் விழித்துவிட்டு, “நீங்க எப்போ வீட்டுக்கு வந்தீங்க?” என்றாள் வேகமாக.
சில நொடிகளை அமைதியில் கழித்துவிட்டு, “ரெண்டு மணிக்கு வந்தேன்!” என்றவன் பார்வையை திருப்பிக்கொண்டு அதற்குமேல் அங்கிருக்க பிடிக்காமல் மாடிப்படிகளின் புறம் திரும்பினான்.
அவன் மனதில் இனம்புரியாத ஏமாற்றம் பரவியது.
‘மதியத்துல இருந்து வீட்டுக்குள்ளேயே இருக்கான்னா... அப்போ இருந்தே சாப்பிடலையா?’
கணவனின் பதிலில் கவலைக்கொண்டது அவளின் உள்ளம்.
ஓய்ந்துப் போனவனாக படிகளை கடந்து அறைக்குச் செல்பவனை தடுத்து நிறுத்த இயலாது தவிப்புடன் பார்த்தவள், பின் முடிவெடுத்தவளாக சமையலறை சென்றாள்.
பத்தே நிமிடங்களில் கேரட், பீன்ஸ், வெங்காயம், தக்காளி என பொடியாக நறுக்கி அவசர உணவாக பாஸ்த்தாவை தயார் செய்தவள் அதை ஒரு கிண்ணத்தில் போட்டு அதனுடன் போர்க் ஸ்பூன் ஒன்றை வைத்தெடுத்துக் கொண்டு அவனறைக்குச் சென்றாள்.
பெயருக்கு இருமுறை கதவை தட்டிவிட்டு விதார்த்தின் அனுமதி கிடைக்கும் முன்னே இவளாக கதவை திறந்துக்கொண்டு உள்ளே நுழைந்தாள்.
உடை கூட மாற்றாமல் அப்படியே கட்டிலில் விழுந்திருந்தவன் அவளின் வரவை உணர்ந்து கண்களை மறைத்திருந்த முழங்கையை விலக்கி அவளை கேள்வியாகப் பார்த்தான்.
“எதுக்கு பட்டினியா தூங்கனும்? எழுந்து இதைச் சாப்பிட்டு தூங்குங்க!” என்று அவனிடம் பாஸ்த்தாவை நீட்டினாள் விவேகா.
அவளை அலுப்புடன் பார்த்தவன், “ப்ச்... வேணாம், எடுத்துட்டு போ!” என்று முகத்தை திருப்பிக் கொண்டான்.
“இதை... இதைத்தான் காலைல சொன்னேன். எங்கேயோ போற எரிச்சலையும், கோபத்தையும் சாப்பாட்டுல காண்பிக்காதீங்க ஒழுங்கா சாப்பிடுங்கன்னு சொன்னதுக்கு, நான் ஒன்னும் பட்டினி கிடக்க மாட்டேன்னு அப்படி துள்ளிக் குதிச்சீங்க... இப்போ என்ன செய்றீங்களாம்?” என்று முறைப்பாக கேட்டாள்.
மனைவியின் உரிமையான அதட்டலில் இதயம் இளகப் பார்க்க வீம்பாக இழுத்துப் பிடித்தவன், “இப்பவும் எனக்கா பசிச்சா, தன்னால சாப்பிட தெரியும். யாரும் வரிஞ்சுக் கட்டிக்கிட்டு அக்கறை காட்டத் தேவையில்ல!” என்றான் சிறு கோபமாக.
“ஓ... உங்களுக்கு பசி எடுக்குறதை பத்தி தான் எனக்கு நல்லா தெரியுதே... ரெண்டு வேளை சாப்பிடாம இருந்தும் சாருக்கு பசிக்கலையாம், இதை நாங்க வேற நம்பனுமாம்!” என்று உதட்டை சுழித்துக்கொண்டவள், “சரி சரி... நான் கதவை சாத்திட்டுப் போய்டுறேன். அப்புறமா கோபம், ரோஷம் எல்லாத்தையும் ஏறக்கட்டி வச்சிட்டு இதை சாப்பிட்டு தூங்குங்க!” என்று துடுக்காக சொல்லி அவனின் ஏய்... என்கிற அதட்டல் காதில் விழும் நேரம் வேகமாக கதவை சாற்றிவிட்டு தன்னறைக்கு ஓடி விட்டாள் விவேகா.
‘இரிடேட்டிங் பெல்லோ!’ என்று முகத்தை சுளித்து முணுமுணுத்தவன் தன் கட்டிலில் அவள் வைத்துவிட்டுச் சென்றிருந்த கிண்ணத்தை உஷ்ணப் பார்வை பார்த்திருந்தான்.
“இன்னும் எவ்ளோ நேரம் தான் அதை முறைச்சுப் பார்ப்பீங்க? சூடு ஆர்றதுகுள்ள எடுத்துச் சாப்பிடுங்க!”
லேசாக திறந்தக் கதவின் வழியே நக்கலாக வெளிவந்தக் குரலில் சீண்டப்பட்டவன், ‘இவளை...’ என பல்லைக்கடித்து ஆவேசமாக எழ, “ஐயோ... நான் ரூம்க்கு போயிட்டேன்!” என்று ஓடி அவள் கதவை சாற்றும் முன்னே இவன் உள்ளே நுழைந்திருந்தான்.
அதில் அரண்டுப் போனவள், “சாரி... சாரி... ப்ளீஸ்... ப்ளீஸ்... நீங்க பல தடவை வார்ன் பண்ணீங்க. நான் தான் நீங்க இப்படி உம்முன்னு அப்செட்டா இருக்குறது பிடிக்காம வந்து வம்புப் பண்ணிட்டேன். இனிமே சாமி சத்தியமா உங்ககிட்ட வந்துப் பேச மாட்டேன், சீண்ட மாட்டேன்!” என்று பதறியவாறு அவன் பிடிக்குச் சிக்க கூடாதென்று அறை முழுக்கச் சுற்றிச் சுற்றி ஓடியவளை கண்டு தன்னை மீறி சிரிப்பு வெடித்துக் கிளம்ப, துரத்துவதை நிறுத்திவிட்டு சிரிக்க ஆரம்பித்திருந்தான் விதார்த்.
“அப்பாடி...” என்று நெஞ்சில் கைவைத்து மூச்சு வாங்கியவள் அவனின் சிரிப்பை புன்னகையுடன் பார்த்திருந்தாள்.
அதைக் கண்டதும் மீண்டும் விறைப்பாக முகத்தை வைத்துக் கொண்டவன், “கொஞ்ச நஞ்சமில்ல ரொம்பவே திமிர்பிடிச்சவளா தான் வளர்ந்திருக்கே!” என்றான் முறைப்பாக.
“ரியலி...” என்று விழிகளை விரித்து ஆச்சரியமாக கேட்பவளை அவன் கண்கள் இடுக்கிப் பார்க்க ஈயென்று அசடுவழிந்து, “சரி சரி... சமாதானம். பிரெண்ட்ஸ்?” என்று கையை நீட்டினாள் விவேகா.
“என்ன?” என்று முகத்தை சுளித்தவன், “நான் உன் புருஷன்!” என்றான் திமிராக.
“சரிங்க புருஷரே... நான் தான் முதலில் பிரெண்டாக இருக்கலாம் என்று சிறிது நேரத்திற்கு முன்னால் ரொம்ப பீலிங்ஸ்ஸோட புலம்பினேனே, அது தங்கள் மரமண்டையில் ஏறவில்லையா... அதற்கான வாய்ப்பை முதலில் கப்பென்று பிடித்துக்கொள்ள பாருங்கள்!” என்று கேலிப் பேசியவளை ஒரே தாவலில் அவள் அசந்த நேரம் உடும்புப் பிடியாக பிடித்துவிட்டான் விதார்த்.
“என்னமா வாய் பேசுற நீ? நானும் ரெண்டு நாளா பார்த்துட்டு தான் இருக்கேன். ரொம்ப ஓவரா தான் போகுது... உன்னை வாயில்லா பூச்சின்னு நம்பிக் கல்யாணம் பண்ணி வச்சிட்டு என்ன பண்றதுன்னு தெரியாம பாட்டி அங்க முழிச்சிட்டு இருக்காங்க!”
கணவனின் தீண்டல் உறைக்காது அவன் வார்த்தைகளில் பெருமையாக சிரித்து விட்டவள், “ஆமா... ஆமா... ரொம்பவே முழிக்குறாங்க தான், நேத்து சாயந்திரம் திங்க்ஸ் எல்லாம் எடுத்துட்டு போய் அங்கே இறக்கி வைக்குறேன்னு ஒரே சண்டை!” என்றாள் மேலும் மலர்ந்தச் சிரிப்புடன்.
“அப்படி என்னடி உனக்கு பாட்டி மேல காண்டு?” என்று அவளை தன்னருகே விதார்த் இழுக்கவும் தான் அவனுடைய நெருக்கத்தை கவனித்தவள், அடக்கடவுளே என்று உள்ளுக்குள் அலறி அவன் கைகளை நாசுக்காகப் பிரித்து விட்டாள்.
மனைவியின் செயலில் எரிச்சல் மூண்டாலும் தற்பொழுது இருக்கின்ற சுமூக மனநிலையை கெடுத்துக்கொள்ள விரும்பாமல் அவள் சொல்படி முதல் அடியாக விவேகாவுடன் நட்பை வளர்த்துக்கொள்ள தீர்மானித்து விட்டான் விதார்த்.