அன்றில் 1
வணக்கம் சொந்தங்களே🙏❤️ இது என்னுடய ஏழாவது கதை போட்டிக்கான இரண்டாவது கதை முதல் கதைக்கு நீங்க கொடுத்த ஆதரவை நினைக்கும் போது எனக்கு உண்மையா ரொம்ப சந்தோஷமா இருக்கு. அதுக்கு முதல் நன்றியை தெரிவிக்கிறேன்.🙏🙏🙏❤️❤️❤️ இந்த கதைக்கும் உங்களுடைய அன்பையும் ஆதரவையும் தவறாமல் கொடுங்கள். 😍😍😍 வாங்க நம்ம கதைக்குள்ள போகலாம்👇👇👇
அன்றில் 1
வான்மேகங்கள் இரண்டும் காதல் கொண்ட வேகத்தில் நெருங்கி வர, இதழ்கள் ஒன்றோடொன்று உரசிக்கொண்ட உணர்வில் வானமே அதிரும் வகையில் மோதிக்கொள்ள, அந்த மோதலின் நச்சென்ற சத்தம்தான் நம் செவிகளில் இடியாய் எதிரொலித்தது.
சென்னை ரயில் நிலையத்தில் ரயில்களின் சத்தமும், எந்நேரம் வேண்டுமானாலும் மழை பெய்யலாம் என்ற எதிர்பார்ப்பில் பயணிகளின் பரபரப்பும் நிறைந்திருந்தன.
அந்தக் கூட்டத்துக்கு நடுவே, ஏழு பெண்களைத் தன்னுடன் அழைத்துக்கொண்டு மும்பை செல்லும் ரயிலைப் பிடிப்பதற்காக ஓடிக்கொண்டிருந்தாள் கிஷோரி. அவளுடைய முகத்தில் பயணத்தின் உற்சாகம் இருந்தாலும், மனதுக்குள் சிறிய பதற்றம். ஏனென்றால், அவளுடன் வந்த ஏழு பெண்களையும் பத்திரமாக அழைத்துச் செல்ல வேண்டிய பொறுப்பு அவளுடையது.
“சீக்கிரம் ஓடிவாங்க டீ, மழைக்கு முன்னாடி ரயில் ஏறணும்” என்றாள் கிஷோரி.
ரயில் ஆமைபோல மெதுவாக நகர ஆரம்பித்தது. அதற்குள் கிஷோரி வேகமாக ஓடிவந்து ரயிலில் ஏறிக்கொண்டாள். தன்னுடன் வந்த மற்ற தோழிகளுக்கும் கைகொடுத்து ஏற்றிவிட்டாள்.
ஆனால், அனைவரும் ஏறிவிட்டார்களா என்று திரும்பிப் பார்த்தவளுக்கு, ஒரு பெண்ணைக் காணவில்லை என்பது அப்போதுதான் உறைத்தது.
மேகங்களின் இதழ்களோடு இதழ்கள் முத்தம் பரிமாற, அந்த முத்தத்தின் ஆழத்தில் எச்சில் சிந்த, வெட்கம் தாளாமல் துளித்துளியாய்
அதே மழையெனச் சென்னையில் தூறியது…!
“ஏய் கிஷோரி, நர்மதாவைக் காணோம்!” என்று பதற்றத்துடன் கூறினாள் வேணி.
“என்ன…?” என்று அதிர்ந்த கிஷோரி, உடனே ரயிலுக்கு வெளியே தலையை நீட்டிப் பார்த்தாள். அப்போதுதான் நர்மதா ரயிலைப் பிடிப்பதற்காக மூச்சிரைக்க ஓடிவருவதைக் கண்டாள்.
ரயில் வேகம் எடுப்பதற்குள் அவளை ஏற்றிவிட வேண்டும் என்ற பதற்றத்தில், கிஷோரி உடனே கீழே இறங்கினாள். நர்மதாவின் கையைப் பிடித்து முதலில் அவளை ஏற்றிவிட்டு, தானும் வேகமாக ரயிலில் ஏறிக்கொண்டாள். இருவருமே லேசாக நனைந்திருந்தனர். இருவருக்கும் பலமாக மூச்சு வாங்கியது.
“யாரையும் மிஸ் பண்ணலையே?” என்று எதற்கும் இருக்கட்டுமெனத் தன் குழுவினரிடம் ஒருமுறை கேட்டாள் கிஷோரி.
“எல்லாரும் இருக்கோம். நீ ரிலாக்ஸ் ஆகு” என்றாள் வேணி.
தாமதமாக ஓடிவந்த நர்மதையைப் பார்த்து, ஒரு குரல் கொடுத்திருக்கலாமே என்று ஏனைய தோழிகள் அவளைத் திட்டினர்.
அந்தக் குழுவின் தலைவியான கிஷோரி, வீறுகொண்ட வேங்கை! எதற்கும் துணிந்தவள். மீசை இருந்தால் முறுக்கிவிடுவாள் போலும்! அவளுடைய துணிச்சலையும் பொறுப்பையும் நம்பித்தான் மற்ற ஏழு பெண்களின் பெற்றோரும் தங்கள் மகள்களை அவளுடன் அனுப்பி வைத்திருந்தனர்.
ஒவ்வோர் ஆண்டும் மும்பையில், விமன்ஸ்வூட் என்ற யூடியூப் நிறுவனம் பெண் சாதனையாளர்களுக்கான விருதுப் போட்டியை நடத்தி வந்தது. இப்போட்டியில் தங்களது திறமைகளை வெளிப்படுத்தும் நோக்கில், அனைத்து மாநிலங்களிலிருந்தும் வயது வித்தியாசமின்றிப் பல பெண்கள் தனித்தனியாகவும் குழுக்களாகவும் கலந்துகொள்வார்கள்.
ஆயிரம் பேர் போட்டியிடும் இந்த விருதுப் போட்டியில், முதற்கட்டத் தேர்வின் மூலம் நூறு பேர் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். அவர்களில் ஐம்பது பேருக்கு மட்டுமே விருதைப் பெறும் வாய்ப்பு கிடைக்கும். அதிலும் சில நிபந்தனைகளுக்கு உட்பட்டே இறுதித் தேர்வு நடைபெறும்.
ஏற்கெனவே இவர்கள் போட்டிக்காகப் புதிதாக ஒரு குறும்படத்தை உருவாக்கிப் பதிவு செய்து அனுப்பியிருந்தனர். அந்தக் குறும்படத்தின் அடிப்படையில், ஐம்பது குழுக்களில் ஒன்றாகத் தேர்வாகியிருந்தனர். விருது கிடைக்குமா என்பது இன்னும் உறுதியாகாதபோதும், தங்களுடைய குறும்படம் விழா மேடையில் ஒளிபரப்பாகப் போகிறது என்பதே அவர்களுக்குப் பெருமையாக இருந்தது.
சமூக ஊடகங்களின் மீது கிஷோரிக்கு எப்போதுமே தனி ஈர்ப்பு உண்டு. அவற்றை வெறும் பொழுதுபோக்காக மட்டும் பார்க்காமல், தன்னுடைய திறமைகளை வெளிப்படுத்தும் ஓர் அழகான உலகமாகவே அவள் பார்த்தாள். குறிப்பாகக் குறும்படங்களை உருவாக்குவதிலும், புதுப்புது கதைகளைச் சிந்தித்து அவற்றைக் காட்சிகளாக வடிவமைப்பதிலும் அவளுக்கு அலாதியான விருப்பம் இருந்தது. அவளுடைய கனவுகளுக்கும் கலைத்திறனுக்கும் உயிர் கொடுக்கும் ஓர் உலகமாகவே சமூக ஊடகங்களை அவள் நேசித்தாள்.
மும்பை வந்தாயிற்று. விமன்ஸ்வூட் ஏற்பாடு செய்திருந்த நட்சத்திர ஹோட்டலில் இவர்களுக்காக ஒதுக்கப்பட்டிருந்த இரண்டு அறைகளில் தங்கினர்.
அடுத்த நாள், விமன்ஸ்வூட் பெண் சாதனையாளர் விருதுப் போட்டியின் பிரம்மாண்டமான மேடையில் தொகுப்பாளர் பிரசன்னா நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கிக்கொண்டிருந்தார். தனிநடனம், தனிப்பாடல் என்று ஒவ்வொரு சுற்றிலும் போட்டியிட்டவர்களுக்கு விருதுகள் வழங்கி முடித்திருந்தனர்.
அடுத்ததாகக் குழு நடனங்கள் ஆரம்பமாகின. குச்சிப்புடி, கதகளி, பரதநாட்டியம் ஆகிய மூன்று நடனங்களையும் கலந்து ஆடிய குழுவினர் மேடையைப் பிரம்மாண்டமாக்கினர்.
நடனப் போட்டிகள் முடிந்ததும், அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்த குறும்படங்கள் ஒளிபரப்பப்படத் தயாராகின. தேர்ந்தெடுக்கப்பட்ட ஐந்து குறும்படங்களும் தலா பத்து நிமிடங்கள் கொண்டவை. அரங்கில் இருந்த பார்வையாளர்களின் கண்களுக்கு விருந்தாக அவை ஒன்றன்பின் ஒன்றாக ஒளிபரப்பாகின.
முதல் இரண்டு குறும்படங்கள் ஒளிபரப்பான பிறகு, மூன்றாவதாகச் சென்னையிலிருந்து வந்த ஹனிபீஸ் குழுவின் ‘மதில்’ குறும்படம் திரையிடப்படத் தயாரானது.
“அடுத்ததாக, ஹனிபீஸ் குழுவின் மதில்!” என்று தொகுப்பாளர் பிரசன்னா அறிவித்ததுமே, பார்வையாளர்கள் எழுப்பிய ஆரவாரம் அரங்கையே அதிர வைத்தது.
கிஷோரியின் மனமோ திக் திக் என்று அடித்துக்கொண்டது.
பல நாட்கள் உழைத்து உருவாக்கிய தங்களுடைய படைப்பை இப்போது நூற்றுக்கணக்கானோர் பார்க்கப்போகிறார்கள். அவர்களுடைய உழைப்புக்கான அங்கீகாரம் கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பும், குறும்படம் எப்படிப் பார்வையாளர்களைக் கவரப்போகிறது என்ற பதற்றமும் அவளுக்குள் ஒன்றாக எழுந்தன.
ஹனிபீஸ் உருவாக்கிய கதை பழைய கதைக்கருதான். ஆனால், அதனைத் தங்களுடைய பாணியில் புதிதாகத் திரைக்கதை அமைத்து, பார்வையாளர்களின் மனதில் பதியும் வகையில் மாற்றியிருந்தனர்.
அடுத்த பத்து நிமிடங்களும் ‘மதில்’ குறும்படம் திரையில் ஓடியது. ஒவ்வொரு காட்சியையும் மூச்சைப் பிடித்தபடி பார்த்துக்கொண்டிருந்தாள் கிஷோரி. குறும்படம் முடிந்ததும் அரங்கில் எழுந்த கரவொலி, அவளுடைய கண்களில் ஆனந்தக் கண்ணீரை வரவழைத்தது. தங்களுடைய உழைப்புக்குக் கிடைத்த முதல் அங்கீகாரத்தை எண்ணி அவளுடைய மனம் நெகிழ்ந்தது.
இன்னும் இரண்டு குறும்படங்கள் ஒளிபரப்பப்பட வேண்டியிருந்தன. அவையும் முடிவடைய, நிகழ்ச்சியில் சிறிய இடைவேளை விட்டிருந்தனர்.
விமன்ஸ்வூட் அமைப்பாளரான துவாரக்கேஷ், இருபதுகளின் பிற்பகுதியில் இருப்பவன். கிஷோரியிடம் பேசுவதற்காக அவளைத் தனியாக அழைத்திருந்தான். அவளும் ஆர்வத்துடன் சென்றாள்.
தனியாக அழைத்ததும், தங்களுடைய குறும்படத்தைப் பற்றிப் பேசத்தான் அவன் அழைக்கிறான் என்று எண்ணினாள் கிஷோரி.
‘ஒருவேளை ஷார்ட் ஃபிலிம்மை நல்ல விலைக்கு வாங்கக் கேட்டால் கொடுத்துவிடலாம்’
சிரித்த முகத்துடன்,
“ஹலோ, சார்!” என்றவள், அவளுக்காக ஒதுக்கப்பட்டிருந்த இருக்கையில் அமர்ந்துகொண்டாள்.
துவாரக்கேஷ் கிஷோரியையும் அவளுடைய குழுவினரையும் புகழ்ந்து தள்ளினான். குறும்படத்தில் நடித்தவர்கள் அனைவரும் பெண்களா என்றும், ஆண்வேடம் அணிந்திருந்தவர்களை அடையாளம் கண்டுகொள்ளவே முடியவில்லை என்றும் வியந்தான். ஹனிபீஸ் குழுவின் முயற்சியை வெகுவாகப் பாராட்டினான்.
“உங்களுக்கும் உங்க டீமுக்கும் அவார்ட் கொடுக்கலாம்னு பிளான்ல இருக்கோம்” என்று இன்முகத்துடன் அறிவித்தான் துவாரக்கேஷ்.
அவளால் நம்பவே முடியவில்லை. கண்களை அகல விரித்தாள். இத்தனை நாட்கள் பட்ட கஷ்டத்திற்கும் உழைப்பிற்கும் விருது கிடைக்கப்போகிறது என்று எண்ணியதும், துள்ளிக் குதிக்க வேண்டும் போலிருந்தது.
“இட்ஸ் அவர் பிளஷர், சார்” என்று கூறினாலும், அவன் முன்னிலையில் தன்னுடைய மகிழ்ச்சியை அளவுக்கு மீறி வெளிக்காட்டவில்லை.
“இதுக்காக நீங்க ஒண்ணு பண்ண வேண்டியிருக்கும்” என்று துவாரக்கேஷ் இழுத்தடித்துப் பேசினான்.
அவனுடைய பேச்சில் இருந்த தயக்கமும் முகத்தில் மாறிய பாவனையும் கிஷோரிக்கு ஏதோ சரியில்லை என்ற உணர்வைக் கொடுத்தன.
“என்ன பண்ணணும்?” என்று கேட்டவள், புருவங்களைச் சுருக்கினாள்.
“டெஃபினிட்லி யூ கேன் டூ திஸ்…” என்று அவன் கூறியதும், கிஷோரியின் கோபம் உச்சத்தைத் தொட்டது. அவள் பற்களைக் கடித்த சத்தம் அவளுக்கே கேட்டது.
“எங்கூட ஒரே ஒரு நைட்…” என்று கூறியவாறே அவளுடைய தோளில் கைவைக்க முயன்றான்.
அடுத்த நொடியே, அவனுடைய முகத்திலேயே எச்சிலை உமிழ்ந்து துப்பினாள் கிஷோரி. அவனுடைய அநாகரிகமான செயலுக்கு அஞ்சாமல் எதிர்த்து நின்றாள்.
“பிளடி…” என்று கெட்ட வார்த்தையால் அவளைத் திட்டியவன், எழுந்து நின்றான்.
அவளோ ஒரு நொடியும் அங்கே நிற்கவில்லை. கதவை வேகமாகத் திறந்து, அதனை அடித்துச் சாத்திவிட்டு வெளியேறினாள்.
அவளுடைய கண்களில் நீர் மலங்கியது. கண்ணீர் கொட்டாமல் தடுக்க முயன்றவள், தள்ளாடியபடியே வந்து தன் குழுவினருக்கு அருகில் அமர்ந்தாள்.
அவளுடைய முகத்தைப் பார்த்ததும் தோழிகள் என்னவென்று விசாரித்தனர்.
“நமக்கு இந்த அவார்ட் கெடைக்காது. இதுக்குத் தகுதியானவங்க நம்ம கிடையாது” என்றாள் கிஷோரி.
தங்களுடைய திறமையால் கிடைக்க வேண்டிய அங்கீகாரத்துக்காகத் தன்னுடைய தன்மானத்தை விட்டுக்கொடுக்க வேண்டிய நிலை வந்துவிட்டதே என்ற வேதனை அவளை வாட்டியது. கண்களுக்குள் தேங்கியிருந்த கண்ணீர் வெளியேறாமல் நிற்க, மூக்கு சிவந்தது. கீழ் உதட்டை இறுக்கமாகக் கடித்துக்கொண்டாள்.
குழுவிலிருந்த பெண்கள் அனைவரும் குழம்பிப்போயினர். ஏன், எதற்காகக் கிஷோரி இப்படிக் கூறுகிறாள் என்பது அவர்களுக்குப் புரியவில்லை.
ஐந்து குறும்படங்களில் இரண்டு குறும்படங்கள் சிறப்பாக அமைந்திருந்தன. அவற்றில் ஒன்று ஹனிபீஸ் குழுவின் ‘மதில்’. மற்றொன்று சிஎஸ்கே குழுவின் குறும்படம்.
“அவார்ட் பத்திப் பேசுறதுக்காகத்தானே உன்ன உள்ள கூட்டிட்டுப் போனாங்க? ஏய்! நீ எதுவும் பிராங்க் பண்றியா?” என்று பதற்றத்துடன் கேட்டாள் வேணி.
கிஷோரியின் கண்களில் தேங்கியிருந்த கண்ணீர் இமை தாண்டியது. உடனே கண்களைத் துடைத்துக்கொண்டாள்.
அந்த இடத்தில் இனியும் இருக்க விரும்பாதவள், வேணியை மட்டும் அழைத்துக்கொண்டு வெளியேறினாள். இருவரும் தனியாகச் சென்றதும், துவாரக்கேஷ் தன்னிடம் நடந்துகொண்ட விதத்தை ஒன்றுவிடாமல் வேணியிடம் கூறினாள்.
அதைக் கேட்ட வேணிக்கு ஆத்திரம் பொங்கியது. அவன் முகத்தில் எச்சிலை உமிழ்ந்தது மட்டும் போதாது; நான்கு அறைகள் விட்டிருக்க வேண்டும் என்று கோபப்பட்டாள்.
“இவன் எதுக்கு விமன்ஸ்வூட்னு பேரை வச்சுட்டு இப்படிக் கேவலப்படுத்துறான்? அப்போ நாமினேட் ஆகுற எல்லார்கிட்டயும் இதே மாதிரிதான் கேட்பான்போல. யாரு சரின்னு சொல்றாங்களோ, அவங்களுக்கு மட்டும் அவார்ட் கொடுத்துடுவான் போல!” என்று வேணி கொந்தளித்தாள்.
“ஆமா வேணி, ரொம்பச் சீப்பா பண்றான். லாஸ்ட் மினிட்ல அவார்ட் கிடைக்கும்னு ஆசைப்பட்டு அவன் பின்னாடி போயிருவாங்கன்னு நினைப்பு. ச்சே!” என்றாள் கிஷோரி.
‘மதில்’ குறும்படத்தை உருவாக்குவதற்காக எவ்வளவு கஷ்டப்பட்டிருப்பார்கள்! எத்தனை நாட்கள் உறங்காமல் உழைத்திருப்பார்கள்! அந்த உழைப்புக்குக் கிடைக்க வேண்டிய அங்கீகாரத்தைக்கூடத் தன்னுடைய இழிவான ஆசைக்குப் பயன்படுத்திக்கொள்ள நினைக்கிறானே என்ற எண்ணம் கிஷோரியை மேலும் கொதிக்க வைத்தது.
“இந்தப் பேரை இவன் வீணாக்குறதுக்கு, இப்படி ஒரு அவார்ட் ஃபங்ஷன் வைக்காம, படுக்க வரியான்னு கேட்டுட்டுப் போயிடலாம்!” என்று வேணி கோபத்தில் கொந்தளித்தாள்.
அந்த இடம் சரியில்லையென்பதை உணர்ந்த கிஷோரி, வேணியை அமைதிப்படுத்தினாள்.
பெண்கள் இப்படிப்பட்ட இழிவான பேச்சுகளுக்கும் தவறான அணுகுமுறைகளுக்கும் ஆளாகிவிடுவார்கள் என்ற அச்சத்தினாலேயே, பல வீடுகளில் பெண்கள் சமூக வலைத்தளங்களில் காணொளிகளைப் பதிவிடுவதற்குக்கூட அனுமதிக்கப்படுவதில்லை.
அதிலும் வேணி, சாரதா, நர்மதா ஆகியோரின் வீடுகளில் நிலைமை இன்னும் கடினம். தங்களுடைய யூடியூப் சேனலைத் தொடர்ந்து நடத்துவதற்காகவே அவர்கள் தினமும் வீட்டில் போராட வேண்டியிருந்தது.
ஒரு நொடியும் வீணடிக்காமல் தங்களுடைய குழுவினரைக் கிளம்பச் சொன்னாள் கிஷோரி.
அதே நேரத்தில், இன்னொரு குழுவினரும் அங்கிருந்து கிளம்பிக்கொண்டிருந்தனர். அவர்களுடைய முகத்தில் தெரிந்த ஏமாற்றத்தைப் பார்த்ததும், துவாரக்கேஷ் அவர்களிடமும் இதேபோல நடந்துகொண்டிருப்பானோ என்ற சந்தேகம் கிஷோரிக்கு எழுந்தது.
செல்லும் வழியில் மற்ற குழுவின் தலைவியிடம் பேசியபோது, அவளும் அதே விஷயத்தைக் கூறினாள்.
விருதைப் பெறும் மகிழ்ச்சியுடன் வந்திருந்த பெண்கள், தங்களுடைய திறமையை நிரூபிக்க வேண்டிய இடத்தில் தன்மானத்துக்காகப் போராடிவிட்டு, ஏமாற்றத்துடனும் வேதனையுடனும் திரும்பிச் சென்றனர்.
எல்லா நிறுவனங்களும் இப்படியல்ல. ஒரு சில நிறுவனங்களில் மட்டுமே இப்படிப்பட்டவர்கள் இருக்கிறார்கள்.
கிஷோரி பல்வேறு யோசனைகளுடன் மும்பை ரயில் நிலையத்தில் தன் குழுவினருடன் நின்றிருந்தாள்.
“ட்ரெயின் வந்த உடனே சீக்கிரம் ஏறிடணும். இல்லன்னா சீட் கெடைக்காது” என்று வேணி அனைவரிடமும் கூறினாள்.
“நர்மதா, உன் கையில இருக்கிற பேக்கை என்கிட்ட கொடு. நீ சீக்கிரம் ஏறிடு” என்றாள் கிஷோரி.
நர்மதாவால் பையைத் தூக்கிக்கொண்டு வேகமாக ஓடி ரயிலில் ஏறுவது சிரமம் என்பதை அறிந்திருந்தாள் கிஷோரி. அதனால்தான் அவளுடைய பையைத் தானே வாங்கிக்கொண்டாள்.
சென்னை செல்லும் ரயில் வந்து சேர்ந்தது.
பயணிகள் வேகமாகக் கீழே இறங்கிக்கொண்டிருந்தனர். அவர்களை முந்திக்கொண்டு ரயிலில் ஏறிவிட வேண்டுமென்று நினைத்தாள் கிஷோரி. இல்லையென்றால், அமர்வதற்கான இடம் கிடைக்காமல் போய்விடும்.
அந்த அவசரத்தில், தனக்கு முன்னால் இறங்கிக்கொண்டிருந்த ஓர் ஆணை இடித்தாவது ரயிலுக்குள் நுழைந்துவிட வேண்டும் என்று நினைத்தாள்.
வேண்டுமென்றே அவனை இடித்தாள்.
இடித்த வேகத்தில் அவளுடைய நெற்றி அவனுடைய தோள்பட்டையில் மோதியது. அதனால் அவள் பின்னோக்கிச் சரிந்தாள்.
அடுத்த நொடியே அவன் அவளுடைய கையைப் பிடித்து, இடையோடு தாங்கிக்கொண்டான். அவன் பிடித்திருக்கவில்லை என்றால், அவள் கீழே விழுந்திருப்பாள்.
தன்னைச் சமாளித்துக்கொண்ட கிஷோரிக்கு, அழகான ஓர் ஆணின் மீது வேண்டுமென்றே மோதிவிட்டோமே என்ற அவமானம் ஏற்பட்டது.
முன்னால் சென்றுகொண்டிருந்த தோழிகள் பின்னால் திரும்பிப் பார்த்தபடி நடந்து வந்தனர். அங்கே நடந்ததைப் பார்த்தவர்கள், மிரட்சியுடன் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டனர்.
கிஷோரியைவிட உயரமாகவும், அவளைவிட இரண்டு மடங்கு எடை கொண்டவனைப் போலவும் இருந்தான் அவன். அவள் லேசாகத்தான் மோதியிருந்தாள். அவனுக்கு எதுவும் ஆகவில்லை. ஆனால், அவளுடைய நெற்றி சிவந்து வீங்கியிருந்தது.
கீழே விழுந்திருந்த அவளுடைய பொருட்களை எடுத்துக் கொடுத்துவிட்டு, எதுவும் பேசாமல் அவன் அங்கிருந்து சென்றான்.
அவன் அருகில் நின்றிருந்த அந்தச் சில நிமிடங்களில், கிஷோரியின் பார்வையே தடுமாறிப்போனது. அவ்வளவு திடமான தேகத்தைக் கொண்டிருந்தான் அவன்.
அவன் யார் என்று தெரியாமலேயே அவனைப் பார்த்துக்கொண்டிருந்தவள், தோழிகள் அழைத்ததும் அவர்களுடன் ரயிலில் ஏறினாள்.
சென்னை வந்தடைந்ததும், குழுவில் இருந்த ஏனைய ஆறு பேரையும் அவரவர் வீடுகளில் விட்டுவிட்டு, வேணியும் கிஷோரியும் ஹனிபீஸ் யூடியூப் ஸ்டுடியோவை நோக்கிச் சென்றனர்.
“வேணி, பென்டிரைவ் குடு”
கிஷோரியிடம் வேணி பென்டிரைவைக் கொடுக்க, அதை மடிக்கணினியில் பொருத்தினாள். பின்னர், அதிலிருந்த படங்கள் சேமிக்கப்பட்டிருந்த கோப்புறையைத் திறந்து பார்த்தாள்.
அவள் தேடிய காணொளிகள் எதுவுமே அந்தப் பென்டிரைவில் இல்லை. அதற்குப் பதிலாக, ஒரே ஓர் ஆணின் பல புகைப்படங்கள் வரிசையாகக் காட்சியளித்தன.
அதில் ஒரு புகைப்படத்தைத் திறந்தவள், அவனுடைய முகத்தைக் கண்டதும் நெற்றியைத் தேய்த்துக்கொண்டாள்.
“ஏய்! இது ட்ரெயின்ல என்னை இடிச்சானே, அவன்!” என்றாள் கிஷோரி, மூக்கைச் சுருக்கிக்கொண்டு.
“அவன் எங்க உன்னை இடிச்சான்? நீதான் அவனை இடிச்ச!” என்று வேணி உள்ளதை உள்ளபடியே கூறினாள்.
“ஆமா, இப்போ இது ரொம்ப முக்கியம்! நம்ம பென்டிரைவ் இருக்கான்னு பாரு” என்று சமாளித்தாள் கிஷோரி.
வேணி பென்டிரைவில் தங்களுக்குத் தேவையான கோப்புகளைத் தேடிக்கொண்டிருக்க, கிஷோரியின் பார்வையோ திரையில் இருந்தவனிடமே நிலைத்திருந்தது.
நீண்ட, அடர்த்தியான புருவங்கள். நெற்றிவரை உலாவிய கேசம். கூர்மையான கண்களும் அழகான மூக்கும். உயரத்திலும் உடல்வாகிலும் அளவுக்கு மீறிய கம்பீரம். அவனுடைய சிவந்த நிறத்துக்கு மாறாகப் பச்சையாகத் தெரிந்த நாடி நரம்புகள், அவன் உடற்பயிற்சிக் கூடத்துக்குச் செல்பவன் என்பதை உணர்த்தின.
‘எனக்காகவாவது நெத்தியில மட்டும்தான் அடி பட்டிருக்கு. இவனுக்கு உடம்பு முழுக்கப் புடைச்சிருக்கே! டேய், நீ ஹாண்ட்சம் பாபி டா!’
கருப்பு நிறச் சட்டையின் பொத்தான்களைப் பூட்டாமல், வெற்று மார்புடன் அவன் இருந்த புகைப்படத்தைப் பார்த்ததும் அவளுடைய மனம் அவனை மேலும் ரசிக்கத் தொடங்கியது.
ஆண்களை ரசிப்பவள்தான் கிஷோரி. ஆனால், இதுவரை எந்த ஆணையும் இவ்வளவு நேரம் வைத்துக் கண் வாங்காமல் பார்த்ததில்லை. அவனுடைய ஒவ்வொரு புகைப்படத்தையும் பார்க்கப் பார்க்க, அவளுடைய ரசனை கூடிக்கொண்டே போனது.
‘இவன் எத்தனை பேருக்கு ட்ரீம் பாயா இருக்கானோ தெரியல!’ என்று அவள் மனதில் தோன்றியது.
அவளால் தனது ரசனையை அடக்கிக்கொள்ள முடியவில்லை. வேணியிடமும் உளறிவிட்டாள்.
“வேணி, இவனைப் பாரேன்! என்ன அழகா இருக்கான்! சிக்ஸ்பேக்… சான்ஸே இல்ல, பா!”
வேணி அவளை முறைத்தாள்.
“நான் பென்டிரைவ் தேடிக்கிட்டு இருக்கேன். நீ அவனைச் சைட் அடிச்சுட்டு இருக்க!”
“பென்டிரைவ் கெடைக்கிற வரைக்கும் நான் கொஞ்சம் சைட் அடிச்சுக்கிறேனே!”
என்றவள், மீண்டும் அவனுடைய புகைப்படங்கள் இருந்த கோப்புறைக்குள் சென்றாள்.
அவனுடைய பல்வேறு புகைப்படங்களும் அங்கே இருந்தன. ஒவ்வொன்றிலும் அவனுடைய தோற்றம் அவளைக் கவர்ந்தது. அவ்வளவு அழகான ஓர் ஆணைப் பார்த்ததில்லை என்ற வியப்பில், அவனுடைய புகைப்படங்களிலிருந்து பார்வையைத் திருப்ப முடியாமல் இமைக்கவும் மறந்திருந்தாள்.
வேணி தங்களுடைய பென்டிரைவில் தேவையான கோப்புகளைத் தேடி எடுத்துவிட்டு, கிஷோரியின் அருகில் அமர்ந்தாள். அவளும் திரையில் இருந்தவனைப் பார்த்தாள்.
“அப்படியே பாரு. பேரு, ஊரு, போன் நம்பர் எதுவும் இருக்கான்னு பாரு. பென்டிரைவ் ரிட்டர்ன் கொடுக்கணும். பாவம், ஏதாவது இம்பார்ட்டன்ட்டான டாக்குமென்ட்ஸ் வச்சுட்டு தேடுறாங்களோ தெரியல!” என்றாள் வேணி.
கிஷோரிக்கும் அதுதான் தோன்றியது.
அந்தப் புகைப்படங்களில் இருந்தவனுடைய பெயர் வீரா.
அவனுடைய தோற்றத்துக்கு ஏற்ற பெயர்தான் என்று கிஷோரிக்குத் தோன்றியது. ஆனால், அவனுடைய தொலைபேசி இலக்கம் எதுவும் அங்கே இருக்கவில்லை.
வைத்தீஸ்வரன் என்ற பெயரில் ஒருவருடைய தொலைபேசி இலக்கம் மட்டும் இருந்தது. அவருக்கு அழைப்பு விடுத்து, பென்டிரைவ் தங்களிடம் இருப்பதைப் பற்றிக் கூறினர். வீரா இருக்கும் இடத்தைத் தெரிவித்த அவர், அவனுடைய தொலைபேசி இலக்கத்தைக் கொடுக்க மறுத்துவிட்டார்.
“மேம், நான் வீரா பாய் கூடத்தான் இருப்பேன். எனக்கே கால் பண்ணுங்க” என்று கூறிவிட்டு வைத்தீஸ்வரன் அழைப்பைத் துண்டித்துவிட்டார்.
‘வீரா பாய்’ என்றதும் வேணிக்குச் சந்தேகம் வந்தது.
“முஸ்லிமா இருப்பானோ?” என்று கேட்டாள்.
“சான்ஸே இல்ல! பச்சைத் தமிழன் பேரு வீரா!” என்று ஒற்றைப் புருவத்தை இருமுறை அசைத்தபடி, தான் சொல்வது சரிதானா என்பதுபோல வேணியிடம் கேட்டாள் கிஷோரி.
வேணிக்கும்கூட கிஷோரி சொல்வது சரியாக இருக்கலாம் என்று தோன்றியது.
ஹனிபீஸின் பென்டிரைவில் இருந்த தேவையான காணொளிகளைப் பத்திரப்படுத்திய பிறகு, வேணியும் கிஷோரியும் ஸ்டுடியோவை விட்டு வீட்டுக்குக் கிளம்பினர்.
கிஷோரி வசிக்கும் தெருவுக்குப் பக்கத்துத் தெருவில்தான் வேணியின் வீடு இருந்தது. அதனால், இருவரும் எங்கே சென்றாலும் ஒன்றாகவே செல்வார்கள்.
இரண்டு நாட்களுக்குப் பிறகு கிஷோரி வீட்டுக்கு வந்தபோது, அங்கே யாருமே இல்லை. தந்தைக்கு அழைப்பு விடுத்துப் பேசிவிட்டு, பசியெடுக்கவே சமையலறைக்குச் சென்றாள்.
பாத்திரங்களைத் திறந்து பார்த்தபோது, ரசமும் புளிக்குழம்பும் இருந்தன. புளிக்குழம்பைப் பார்த்ததுமே முகம் கோணியது. அதைச் சாப்பிட விருப்பமில்லாமல், ஸ்விக்கியில் பிரியாணி ஆர்டர் செய்தாள்.
பிரியாணி வருவதற்கு முன்னால் குளித்து உடைமாற்றி, தன்னைப் புத்துணர்ச்சியாக்கிக்கொண்டு வந்தாள்.
அவளுடைய அறையில் இருந்த ஒப்பனை மேசையின் மீது இரண்டு புகைப்படங்கள் வைக்கப்பட்டிருந்தன. அவை அவளுக்குப் புதிதல்ல. மகளைத் திருமணம் செய்து கொடுத்து நல்ல வாழ்க்கையில் அமர்த்திவிட வேண்டும் என்ற எண்ணத்தில், கிஷோரியின் அப்பா சுபாஸ் மாப்பிள்ளை பார்த்துக்கொண்டிருந்தார். ஆனால், அவளோ கடந்த இரண்டு வருடங்களாகத் திருமணப் பேச்சை ஏதாவது ஒரு காரணத்தைக் கூறித் தள்ளிப்போட்டுக்கொண்டிருந்தாள்.
பிரியாணி வந்த நேரமும் தந்தை வீட்டுக்கு வந்த நேரமும் சரியாக இருந்தன.
காக்கிச் சட்டையுடன் பிரியாணிப் பொட்டலத்தை எடுத்துக்கொண்டு வந்தார் சுபாஸ்.
இரண்டு நாட்களுக்குப் பிறகு மகளைப் பார்த்தவரின் மனம் மகிழ்ந்தது. மகள் சாப்பிட்டு முடிக்கும் வரை பொறுமையாகக் காத்திருந்தார்.
“நீ இன்னைக்கு வருவேன்னு தெரிஞ்சிருந்தா, நானே பிரியாணி பண்ணியிருப்பேன்மா” என்று நைசாகப் பேச்சை ஆரம்பித்தார்.
“பரவாயில்லப்பா” என்றவள், விமன்ஸ்வூட் நிகழ்ச்சியில் நடந்தது, பென்டிரைவ் கிடைத்தது என ஒன்றுவிடாமல் அனைத்தையும் கொட்டித் தீர்த்தாள்.
கிஷோரிக்கு அப்பாவிடம் எதையும் மறைத்துப் பழக்கமே இல்லை.
அனைத்தையும் கேட்டுக்கொண்டிருந்த சுபாஸ்,
“அம்மா…” என்றார்.
“சொல்லுங்கப்பா” என்றாள் கிஷோரி.
அவர் என்ன கேட்கப்போகிறார் என்பது அவளுக்குத் தெரிந்த விஷயம்தான்.
“போட்டோ வச்சிருந்தேனே, பார்த்தியாம்மா? பிடிச்சிருக்கா உனக்கு?”
கிஷோரிக்கு இருபத்தைந்து வயது ஆரம்பமாகியிருந்தது. தான் இருக்கும்போதே மகளை ஒரு நல்லவனிடம் ஒப்படைத்துவிட்டால் நிம்மதியாக இருக்கலாம் என்று எண்ணினார் சுபாஸ்.
“இல்லப்பா, நான் இன்னும் பார்க்கல. ஃபர்ஸ்ட், யார் யாரு? என்னென்ன வேலை பார்க்குறாங்கன்னு சொல்லுங்க. அதுக்கப்புறம் நான் ஃபோட்டோ பார்க்குறேன்”
அவள் கண்களைச் சுருக்கிப் பார்த்ததும், மகளுடைய மனநிலையைப் புரிந்துகொண்டார் சுபாஸ்.
“ரெண்டு பேரும் போலீஸ்மா. நல்ல பசங்கம்மா, நல்ல ஃபேமிலி…”
அவர் சொல்லி முடிப்பதற்குள் கிஷோரி குறுக்கிட்டாள்.
“போலீஸ்காரனைக் கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்னு எத்தனை வாட்டி சொல்லியிருக்கேன்! நீங்க போலீஸா இருந்து வீட்டுக்கு டைம் ஸ்பென்ட் பண்றதில்ல. வீட்டுல தனியா இருந்து போரடிச்சுப் போச்சுப்பா. ஃபியூச்சர்ல இதே மாதிரி எல்லாம் என்னால புலம்பிட்டு இருக்க முடியாது. ரவுடியைக் கட்டினாலும் கட்டுவேன், போலீஸ் வேணாம்!”
தந்தையிடம் கோபமாகப் பேசிவிட்டு அறைக்குள் சென்றாள்.
சுபாஸ் ஒரு காவலராகப் பணியாற்றி, பல வருடங்கள் இரவு பகலாக உழைத்துத்தான் ஆய்வாளராக உயர்ந்திருந்தார். அந்தப் பணிக்காக அவர் செலவிட்ட நேரம் அதிகம் என்பதால், குடும்பத்துடன் இருக்க வேண்டிய நேரத்தைக்கூட வேலையில் செலவிட வேண்டியிருந்தது.
கிஷோரி சிறுவயதிலிருந்தே தனிமையை அனுபவித்தவள். அவளுடைய தம்பி தியான் பிறந்தபோது, தாய் ராகவி துரதிர்ஷ்டவசமாக இறந்துவிட்டார். அதன் பிறகு இரு பிள்ளைகளையும் சுபாஸ்தான் பெரும்பாடுபட்டு வளர்த்தார். உதவிக்கு என்று பெரிதாக யாருமே இல்லாததால், குடும்பத்தையும் வேலையையும் ஒருசேரச் சமாளிக்க வேண்டிய நிலை அவருக்கு இருந்தது.
தம்பியைப் பார்த்துக்கொண்டு, படிப்பையும் தொடர்ந்தபடி, வீட்டு வேலைகளையும் செய்து கிஷோரி தனது நேரத்தைக் கடத்தினாள். சமையல் வேலைகளைக்கூட சுபாஸ்தான் செய்து வைத்திருப்பார்.
தந்தை தன்னை எவ்வளவு அன்பாக வளர்த்திருந்தாலும், அவருடைய வேலை காரணமாக அவருடன் செலவிடக் கிடைத்த நேரம் மிகக் குறைவு. தான் அனுபவித்த அந்தத் தனிமை, திருமணத்திற்குப் பிறகும் தொடர்ந்துவிடுமோ என்ற பயம்தான் காவல்துறைப் பணியின் மீது அவளுக்கு வெறுப்பை ஏற்படுத்தியிருந்தது. குடும்பத்துக்காக நேரம் ஒதுக்க முடியாத வாழ்க்கை தனக்கு வேண்டாம் என்பதில் உறுதியாக இருந்தாள்.
தியானுக்கு இருபத்தொரு வயது. ஆறு மாதங்களுக்கு முன்புதான் ஒரு முஸ்லிம் பெண்ணுடன் அவனுக்குத் திருமணம் நடந்திருந்தது. அதுவும் பெரும் போராட்டத்திற்குப் பிறகுதான் நடந்தது. தியான் எடுத்த முடிவால் கிஷோரியும் தந்தையும் மொத்தமாக நிம்மதியை இழந்திருந்தனர்.
தனது அறைக்குள் சென்ற கிஷோரி, இரண்டு தலையணைகளுக்கு மேல் தலையைச் சாய்த்துப் படுத்துக்கொண்டாள். பின்னர், வாட்ஸ்அப்பில் வேணிக்குக் குறுஞ்செய்தி அனுப்பினாள்.
“நாளைக்கு மார்னிங் வீராவைப் பார்த்து பென்டிரைவைக் கொடுத்துட்டு வந்துடலாம். சீக்கிரம் ரெடியா இருடீ”
“எனக்குப் பயமா இருக்குடீ” என்று வேணி பதில் அனுப்பினாள்.
“அப்புறம் எதுக்குடீ அவன் போன் நம்பர் இருக்கா, அவன் பெயர் இருக்கான்னு பார்க்கச் சொன்ன? என்னைக் கோர்த்து விட்டுட்டு நீ நழுவலாம்னு பார்க்கிறியா?” என்று கிஷோரி பதில் அனுப்பினாள்.
“ஒரு ஆர்வத்துல சொல்லிட்டேன்டீ. அதையே புடிச்சு நிக்குற!”
வேணி வீட்டிலிருந்து வெளியே வருவதற்கு ஒவ்வொரு முறையும் ஏதாவது ஒரு காரணத்தைச் சொல்லிப் போராட வேண்டியிருக்கும். இப்போதும் அவளுக்கு இந்த வேலை வேண்டாமென்று விலகிவிடத் தோன்றியது.
“அதே ஆர்வத்தோட நாளைக்கு நீ வரணும். அப்படி வரல, ஸ்டுடியோ பக்கம் வந்துடாத, மவளே!” என்று கிஷோரி மிரட்டலாகக் குறுஞ்செய்தி அனுப்பினாள்.
‘நாளைக்கு காலைல சீக்கிரம் வெளியே போறதுக்கு எங்கப்பாகிட்ட என்ன பொய் சொல்லப்போறேனோ தெரியலையே, ஆண்டவா!’ என்று மனதுக்குள் புலம்பினாள் வேணி.
******
படித்துவிட்டு, உங்கள் விருப்பங்களையம் கருத்துக்களையும் பகிருங்கள் அன்பர்களே🙏❤️





