அத்தியாயம் 1
🙏 கடவுள் துணை 🙏 என் அன்பான வாசகர்களே! ❤️❤️❤️ எல்லாரும் எப்படி இருக்கீங்க? 🥰🫂 கிட்டத்தட்ட இரண்டு வருடங்களுக்குப் பிறகு மீண்டும் உங்களோடு கதைக்குள் பயணிக்க வாறேன்! 🥹💗 இந்த முறை என்னுடைய முழுக்கக் கற்பனையில் உருவான ஒரு கதையோடு உங்களைச் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி! 🎊❤️ வழக்கம்போல உங்களுடைய அன்பையும் ஆதரவையும் எதிர்பார்க்கிறேன். நம்முடைய புதிய கதையோடு கைகோர்க்கும் அனைத்து உறவுகளுக்கும் மனமார்ந்த நன்றிகள்! ❤️❤️❤️
கனி 1
திருநெல்வேலி மாவட்டத்திற்கும் தூத்துக்குடி மாவட்டத்திற்கும் இடைப்பட்ட பகுதியில், பசுமையான வயல்களும், தென்னந்தோப்புகளும், மண் வாசம் நிறைந்த பாதைகளுமாய் அழகாக விரிந்து கிடந்தது திருநள்ளாறு கிராமம். அதிகாலைக் குளிர்காற்று வயல்வெளிகளை வருடிச் செல்ல, அதன் தீண்டலில் வயல்வெளியோர மரங்களின் இலைகளுக்குக்கூட புல்லரித்தன.
காற்றின் தழுவலோடு போராட முடியாமல், நளினமாய் வளைந்து கொடுத்த இலைகள் ஒவ்வொன்றும் தலைகுனிந்து மீண்டும் நிமிர்ந்தன. மாமரக்கிளையில் ஒன்றோடொன்று ஒட்டியபடி அமர்ந்திருந்தன இரு குருவிகள். குளிரின் தீண்டல் அதிகமாகவே, பெண் குருவி லேசாகக் கண்ணைத் திறந்து, தன் தலையைக் கவிழ்த்து, சிறகுகளை உடலோடு சேர்த்து மூடிக்கொண்டது. அதை உணர்ந்த ஆண் குருவி, எதுவும் சொல்லாமல் தன் சிறகை விரித்து, தன்னவளைத் தன் சிறகுக்குள் அணைத்துக்கொண்டது. குளிரைக் காட்டிலும் காதலின் கதகதப்பு பேரின்பத்தைப் பெருக்க, இரு குருவிகளும் ஒன்றோடொன்று அணைத்திருந்தன.
விடியற்காலையின் இருள் இன்னும் முழுமையாக விலகாத நேரம்…
கிராமத்தில் ஒவ்வொரு வீட்டின் வாசலிலும் சிறு மின்விளக்குகள் ஒளிரத் தொடங்கின. மங்கலான இருளுக்குள் மஞ்சள் ஒளியைச் சிந்திய அந்த வாசல் விளக்குகள், ஒவ்வொரு வீட்டின் முன்பையும் ஒரு தனி அழகால் நிரப்பிக்கொண்டிருந்தன.
பெண்கள் ஒவ்வொருவராக எழுந்து, வாசலைத் தெளித்து கோலம் போடத் தொடங்கியிருந்தனர்.
அதிகாலைக் குளிரில் தலைக்குளித்து, இடை வரை நீண்டிருந்த கூந்தலில் நீர்த்துளிகள் சொட்டிட, அதைச் சிறிய துண்டில் அடக்கி, தலையோடு சுற்றி முடிந்து, ஊதா நிறத் தாவணியில், வெள்ளை பளிங்கென மின்னிய முகத்தில் அடர்த்தியான புருவங்களுக்கு மத்தியில் பொட்டு வைத்து, கண்களுக்கு ஒரு கோடு மை இட்டாள். கிளி மூக்கில் இருந்த மூக்குத்தியைச் சரி செய்து, இயற்கையாகச் சிவந்த இதழுக்கு வெண்ணை பூசியவாறு வாசலுக்கு வந்தாள்.
அவளது உடல் லேசாக நடுங்கியது. வெண்மை பற்கள் ஒன்றோடொன்று உரசும் அளவுக்குக் குளிர் தாக்க, உடலெங்கும் மயிர்க்கூச்சம் ஏற்பட்டு, அவளது தேகம் புல்லரித்தது. கோலத்தை முடித்தவள், கிழக்கை நோக்கி உதிக்கும் சூரியனைப் பார்த்துக் கைகளைக் கூப்பினாள்.
“இன்னைக்கு வெயில் அளவா இருந்தாலே போதும் சாமி. ரொம்ப வெயில் கொடுத்து உடம்பெல்லாம் வியர்க்குரு போட்டு பாடா படுத்திட வேணாம்” என்று வேண்டிக்கொண்டாள்.
இந்தக் குளிரெல்லாம் காலை ஒன்பது மணி வரைக்குத்தான். அதற்குப் பிறகு வெயில் தொடங்கிவிட்டால், மாலை ஐந்து மணி வரை வியர்த்து கொட்டிக்கொண்டே இருக்கும்.
பறவைகளுக்காகக் கொஞ்சம் தானியங்களை ஒரு சிறிய பாத்திரத்தில் வைத்துவிட்டு, காலையில் கறந்த பாலில் மணக்க மணக்கத் தேனீர் தயாரித்தாள். அப்போது வெளியிலிருந்து அமிர்தவள்ளியின் குரல் கேட்டது.
“கனி…”
சமையலறையிலிருந்தவள், கையில் இருந்த தேனீருடன்,
“பெரியம்மா… இதோ வந்துட்டேன்…” என்று சொல்லியபடி வெளியே வந்தாள்.
அமிர்தவள்ளியிடம் அவருக்கான தேனீரைக் கொடுத்துவிட்டு, அவருடைய கணவர் திருச்செல்வத்திடம் திரும்பி,
“மாமா… இது உங்களுக்கு” என்று தட்டை நீட்டினாள்.
தேனீரைப் பார்த்த திருச்செல்வம் முகத்தைச் சுளித்தபடி,
“மா… இன்னைக்கும் எனக்கு சக்கரை இல்லாமதானா? கொஞ்சமாச்சும் சக்கரை போட்டு தரலாம்ல?” என்றார்.
அதைக் கேட்ட கனி சிரித்தபடி,
“உங்களுக்குத்தான் ஏற்கனவே நிறையவே சுகர் இருக்கே மாமா. இதில நான் வேற எதுக்கு தனியா சக்கரை போடணும்? சும்மா மேலால கொஞ்சம் கிள்ளித் தூவியிருக்கிறேன். அது போதும்… அதை குடிச்சுக்கோங்க”
“கனி…” என்று அமிர்தவள்ளி கண்டிப்பான குரலில் அழைத்ததும், கனி திரும்பிப் பார்த்தாள்.
அமிர்தவள்ளி இடுப்பில் ஒரு கையை வைத்துக்கொண்டு, ‘சுகர் போடவே இல்லையா?’ என்பதுபோல் அவளைப் பார்த்தார்.
உடனே கனி, எதுவுமே தெரியாத குழந்தையைப் போல முகத்தை வைத்துக்கொண்டு, ‘நான் சக்கரை போடவே இல்லையே…’ என்பதுபோல் சைகை காண்பித்தாள்.
அவளது குழந்தைத்தனமான செயலைப் பார்த்த அமிர்தவள்ளியால் சிரிப்பை அடக்க முடியவில்லை.
“சரி சரி போதும். காலேஜ் கிளம்பு” என்று சிரித்தபடியே கூறினார்.
சமையலறையிலிருந்து காலை உணவின் மணம் வீடு முழுவதும் பரவிக்கொண்டிருந்தது. கனி சமையலறைக்குள் எட்டிப் பார்த்தாள்.
“அம்மா… இன்னைக்கு என்ன டிஃபன்?” என்று கேட்டாள்.
அடுப்பில் சமைத்துக்கொண்டிருந்த கலைவாணி திரும்பிப் பார்த்து,
“இன்னைக்கு பூரி கிழங்கு மசாலா கனி. நீ போய் தயாராகிட்டு வா” என்றாள்.
“அப்பா கால் பண்ணாரா அம்மா?”
“இன்னும் இல்லடீ. கால் பண்ணா தாரேன்”
“சரிம்மா…” என்று சொல்லிவிட்டு கனி அங்கிருந்து நகர்ந்தாள்.
கனியின் தந்தையான மணிமாறன், கோயில்களில் சிற்பம் வடிக்கும் வேலை செய்பவர். தற்போது ஆந்திராவில் உள்ள ஒரு கோயிலில் தனது பணியைத் தொடர்ந்து கொண்டிருந்தார்.
அப்போது கலைவாணியின் அலைபேசி ஒலித்தது. அலைபேசியைப் பார்த்தவள், மணிமாறனின் அழைப்பைக் கண்டதும் சிரித்தாள்.
‘மகள் கேட்ட உடனேயே மனுஷன் கால் பண்ணிட்டாரே…’ என்று மனதிற்குள் நினைத்துக்கொண்டவர், மகளை அழைத்து தொலைபேசியைக் கொடுத்தார்.
“அப்பாஆஆ…”
“கனி… நல்லா இருக்கியா?”
“நான் நல்லாத்தான் இருக்கேன் அப்பா. நீங்க எப்படி இருக்கீங்க? வேலை எல்லாம் நல்லா போகுதா?”
“நல்லாத்தான் போகுது மா. நீ காலேஜுக்குக் கிளம்பிட்டியா?”
“இன்னும் கொஞ்ச நேரத்துல கிளம்பிடுவேன். அம்மா டிபன் செய்றாங்க”
“சரி மா… நல்லா சாப்பிட்டுட்டுப் போ. நேரத்துக்கு சாப்பிடுறதை மறந்திடாத”
“சரி அப்பா. நீங்களும் நேரத்துக்கு சாப்பிடுங்க. வேலையிலேயே நின்னுட்டு சாப்பிடாம இருக்காதீங்க”
“சரி கனிமா… அப்பாவை நீ கவனிக்கிற அளவுக்கு வேற யாரும் கவனிக்கிறதில்ல”
“அதுதான் உங்க மகள் இருக்கேனே அப்பா…” என்று சிரித்தாள் கனி.
“சரி ப்பா… இன்னும் எத்தனை நாளைக்கு வேலை இருக்கு? எப்போ வேலை முடியும்? எப்போ வீட்டுக்கு வருவீங்க?”
“இன்னும் கொஞ்சம் வேலை இருக்கு டா. அதனால இப்போ வர முடியாது. இன்னும் சில நாள் ஆகும். வேலை முடிஞ்சதும் வீட்டுக்கு வந்துடுறேன்”
“சரி அப்பா… சீக்கிரமா வந்திடுங்க. உங்களைப் பார்க்கணும் போல இருக்கு”
“சரி கனி… நானும் சீக்கிரமா வந்துடுறேன். நீ நல்லா படிடா”
“சரி அப்பா…”
இப்படியாகச் சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்த தந்தையும் மகளும், பத்து நிமிடங்களுக்குப் பிறகு அழைப்பை முடித்துக்கொண்டனர்.
அலைபேசியை வைத்துவிட்டு, கனி கல்லூரிக்குச் செல்லத் தயாரானாள்.
சிறிது நேரத்தில் கல்லூரிப் பையை எடுத்துக்கொண்டு கீழே வந்தவள், வீட்டின் முன் நின்றிருந்த காரில் ஏறிக்கொண்டாள்.
அவள் ஏறியதும் கார் மெதுவாக வீட்டைவிட்டு புறப்பட்டு, திருநள்ளாறு கிராமத்தின் மண் வாசம் நிறைந்த பாதையில் கல்லூரியை நோக்கிப் பயணித்தது.
மணிமாறனும் கலைவாணியும் காதல் திருமணம் செய்து கொண்டவர்கள். வேறு ஊரைச் சேர்ந்த இவர்கள், திருமணத்திற்குப் பிறகு அடைக்கலம் தேடி வந்தபோது அமிர்தவள்ளியின் வீட்டில் தஞ்சமடைந்தனர். அவர்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்த அமிர்தவள்ளி, பின்னர் தனது வீட்டுக்குப் பக்கத்திலேயே அவர்களுக்கென ஒரு சிறிய வீட்டையும் கட்டிக் கொடுத்திருந்தார்.
மணிமாறன் வந்தால் மட்டும் உறங்குவதற்கு அவர்களது வீட்டிற்குச் செல்வார்கள், மற்ற நேரங்களெல்லாம் அந்தப் பெரிய வீட்டில்தான் இருப்பார்கள்.
காலேஜ் வாசலுக்கு கனி வந்திருந்தாள். அவளது தோழிகள் இருவரும், வர்ஷினி, சுவேதா, “கனியா…” என்று கத்தினர்.
இவர்கள் கத்துவதைப் பார்த்து படபடப்புடன் அருகில் வந்த கனி,
“எதுக்குடி பத்து ஊரு கேக்குற மாதிரி என் பேரைக் கத்துறீங்க?” என்றாள்.
வர்ஷினியும் சுவேதாவும் கனியை அழைத்துக்கொண்டு வகுப்பறைக்குள் வந்தனர். மூவரும் ஒன்றாகச் சென்று அமர்ந்தனர்.
சிறிது நேரத்தில், வர்ஷினியும் சுவேதாவும் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டு, கனிக்குத் தெரியாமல் குசுகுசுவென்று பேசிக்கொண்டிருந்தனர்.
அதைப் பார்த்த கனி,
“என்னடி… என்னைக் கூட்டிட்டு வந்து, இப்ப நீங்க ரெண்டு பேரும் தனியா குசுகுசுனு பேசிட்டு இருக்கீங்க?” என்று கேட்டாள்.
அதைக் கேட்ட வர்ஷினி, கனியின் அருகில் வந்து, சீனியர் செந்தூரன் தன்னிடம் கொடுத்த கடிதத்தை அவளிடம் கொடுத்தாள்.
“கனியா… இது சரியா வரும்னு எனக்குத் தோணலடி. நீ அவன்கிட்ட பேசிடு, உனக்கு அவன் மேல எந்த விருப்பமும் இல்லன்னு நேராகச் சொல்லிடு. அதுதான் நல்லது” என்றாள் வர்ஷினி.
அதைக் கேட்ட சுவேதாவும்,
“ஆமாடி… நீ இப்படியே பேசாம இருந்தா, நீயும் அவனைப் பிடிச்சுத்தான் வெட்கத்தில பேசாம இருக்கிறன்னு அவன் நினைச்சுக்கப் போறான்” என்றாள்.
“சரிதான்…” என்று சுவேதாவின் பேச்சை வர்ஷினியும் ஆமோதித்தாள்.
இரு தோழிகளும் கூறுவதைக் கேட்டுக் கொண்டிருந்த கனி, தலையை ஆட்டினாள்.
சிறிது நேரத்தில் பேராசிரியர் வகுப்பறைக்குள் வந்து பாடம் நடத்தத் தொடங்கினார். நேரம் செல்லச் செல்ல, அன்றைய வகுப்புகளும் முடிவுக்கு வந்தன.
மாலை மூன்று மணியளவில் கல்லூரி முடிந்ததும், மாணவர்கள் ஒவ்வொருவராக வகுப்பறையிலிருந்து வெளியே வரத் தொடங்கினர்.
கனி தனது தோழிகளுடன் வெளியே வந்தபோது, எதிரே செந்தூரன் வந்து நின்றான்.
“கனி… ஒரு வருஷமா உன்கிட்ட நான் ப்ரபோஸ் பண்ணிட்டு இருக்கேன். நீ எனக்கு எந்தப் பதிலும் சொல்லாம இருக்கிற. அதுக்கு என்ன அர்த்தம்?”
“உங்கள பிடிக்கலன்னுதானே அர்த்தம்” என்று பட்டென கூறினாள்.
“ஆமா… எனக்கு இதுல எந்த இஷ்டமும் இல்ல. தயவுசெய்து இனிமேல் என்னை டிஸ்டர்ப் பண்ணாதீங்க” என்று தெளிவாகச் சொன்னாள்.
அவ்வளவுதான். செந்தூரன் அதற்கு மேல் எதுவும் பேசாமல் அங்கிருந்து சென்றுவிட்டான்.
அன்றைய கல்லூரி நேரம் முடிந்து, வீட்டிற்குச் செல்லும் வழியெங்கும் கனி மிகவும் சோர்வாகவே இருந்தாள். நாள் முழுவதும் நடந்த விஷயங்களால் மனமும் கொஞ்சம் களைப்பாக இருந்தது.
வீட்டிற்கு வந்ததும், கல்லூரிப் பையை வைத்துவிட்டு அப்படியே சோபாவில் அமர்ந்தாள்.
அப்போது கௌரி ஒரு கையில் தேனீருடன் அவளருகில் வந்து,
“கனியா… இதோ டீ. குடிச்சிட்டு கொஞ்சம் ரெஸ்ட் எடு” என்றாள்.
கௌரி ஆத்யா, அமிர்தவள்ளியின் மூன்றாவது பிள்ளை. இரட்டையர்களில் ஒருத்தி. அவளோடு பிறந்தவன் ஸ்ரீ மித்ரன்.
தேனீரை வாங்கிக்கொண்ட கனி, சிரித்தபடி,
“தேங்க்யூ கௌரி அக்கா…” என்றாள்.
அதைக் கேட்ட கௌரி சிரித்துவிட்டு அவளருகில் அமர்ந்தாள்.
“ஏங்கனி… காலையிலேயே என்னை எழுப்பிவிட்டுப் போயிருக்கலாம்ல?” என்று கேட்டாள்.
அதற்கு கனி,
“இல்லக்கா… நீங்க நேத்து நைட் ஷிப்ட் செஞ்சிட்டு வந்து தூங்குறீங்கன்னு தெரிஞ்சது. அதான் உங்களை எழுப்பலக்கா” என்றாள்.
சிறிது நேரம் லாப்டாப் பார்த்துக்கொண்டிருந்த கௌரி, பிறகு கனியைப் பார்த்து,
“அப்புறம் ஸ்டடீஸ்லாம் எப்படி போகுது?” என்று கேட்டாள்.
“பரவால்லக்கா… நல்லாத்தான் போகுது. கொஞ்சம் கஷ்டமாதான் இருக்கு” என்று கனி பதிலளித்தாள்.
அவர்கள் இருவரும் பேசிக்கொண்டிருந்த நேரத்தில், தூங்கி எழுந்து அமிர்தவள்ளி வெளியே வந்தார்.
அப்போது அந்த ஊரைச் சேர்ந்த ஒருவர், திருமணப் பத்திரிகையை ஒரு பெரிய தாம்பாளத்தில் வைத்து எடுத்துக்கொண்டு அமிர்தவள்ளியிடம் வந்தார்.
அந்தப் பத்திரிகையை அவரிடம் கொடுத்துவிட்டு,
“பெரியம்மா… எங்க பையன் கல்யாணம். நீங்களும் உங்க குடும்பத்தோட எல்லாரும் கண்டிப்பா வரணும். அதோட, உங்க கையால தாலி எடுத்து கொடுத்தாத்தான் எங்க பையன் தாலி கட்டணும்னு ஆசைப்படுறோம். நீங்கதான் அந்த தாலியை எடுத்து கொடுக்கணும்” என்று அன்புடன் அழைத்தார்.
அமிர்தவள்ளி புன்னகையுடன் அந்தப் பத்திரிகையை வாங்கிக்கொண்டு,
“சரி… கண்டிப்பா வாறோம்” என்றார்.
இந்தக் கிராமத்தில் அமிர்தவள்ளிக்கும் திருச்செல்வத்துக்கும் தனி மரியாதை உண்டு. கிராமத்தில் யாருக்காவது கஷ்டம் வந்தால், அவர்களைக் கைவிட்டு விலகிச் செல்லும் குணம் அவர்களுக்கு எப்போதுமே இருந்ததில்லை. தங்களால் முடிந்த உதவியைச் செய்து, அவர்களுக்குத் துணையாக நின்றுவிடுவார்கள். அதனால்தான் ஊரில் இருப்பவர்கள் அவர்களை தங்கள் குடும்பத்தில் ஒருவராகவே நினைத்து அன்புடன் பழகினர்.
அந்தக் கிராமத்திலேயே பெரிய வீடு அவர்களுடையதுதான். வீட்டைச் சுற்றிலும் பெரிய தோட்டம் உண்டு. அதோடு தென்னந்தோப்பும், அரிசி மண்டியும் அவர்களுக்குச் சொந்தமாக இருந்தன. வசதியும் செல்வாக்கும் இருந்தாலும், அதைவிட அவர்களுடைய நல்ல மனதுக்காகத்தான் ஊர் மக்கள் அவர்களை மதித்தனர்.
அந்த அழைப்பை ஏற்றுக்கொண்ட அமிர்தவள்ளி, சிறிது நேரம் அங்கேயே அமர்ந்திருந்தார்.
அவர் கையில் இருந்த திருமணப் பத்திரிகையைப் பார்த்துக்கொண்டே, தன் மூத்த மகன் வெற்றியை நினைத்தார். ஊரில் இருக்கும் பிள்ளைகளுக்கெல்லாம் திருமணம் செய்து வைத்து, அவர்களுடைய வாழ்க்கையைப் பார்த்து மகிழ்ந்துகொண்டிருக்கும் நிலையில், தன்னுடைய மகனின் வாழ்க்கை மட்டும் இன்னும் அப்படியே இருப்பது அவருடைய மனதுக்குள் ஒரு சிறிய கவலையை ஏற்படுத்தியது.
‘எப்படியாவது வெற்றிக்கும் சீக்கிரமா கல்யாணம் பண்ணி வைக்கணும். அவனை இந்தியாவுக்கே வரச் சொல்லணும்…’ என்று மனதிற்குள் நினைத்துக்கொண்டிருந்தார்.
அந்த நேரத்தில், கௌரியின் அலைபேசி ஒலித்தது.
அலைபேசியைப் பார்த்த கௌரி, அமெரிக்காவிலிருந்து அழைப்பது தன்னுடைய மூத்த அண்ணன் வெற்றி ஆத்ரேயன் என்பதை அறிந்து, சிறிது நேரம் அவனுடன் பேசிவிட்டு,
“அம்மா… அண்ணா கால் பண்ணிருக்கான்” என்று சொல்லி அலைபேசியை அமிர்தவள்ளியிடம் கொடுத்தாள்.
அமிர்தவள்ளி உடனே அழைப்பை ஏற்றுக்கொண்டார்.
“வெற்றி…”
“அம்மா… நல்லா இருக்கீங்களா?”
“நல்லாத்தான் இருக்கேன் பா. நீ நல்லா இருக்கியா?”
“நல்லா இருக்கேன் மா. வீட்டுல எல்லாரும் எப்படி இருக்காங்க? அப்பா, தம்பி எப்படி இருக்காங்க? தோட்டம் எல்லாம் நல்லா இருக்கா? அரிசி மண்டி எப்படி போகுது?”
“எல்லாரும் நல்லாத்தான் இருக்காங்க பா. தோட்டமும் நல்லாத்தான் இருக்கு. அரிசி மண்டியும் நல்லபடியா போயிட்டு இருக்கு”
இப்படியாக வீட்டைப் பற்றியும், அங்குள்ளவர்களைப் பற்றியும் சுருக்கமாக விசாரித்த வெற்றி, சிறிது நேரம் அமைதியாக இருந்துவிட்டு,
“அம்மா… நான் உங்ககிட்ட ஒரு முக்கியமான விஷயம் சொல்லணும்” என்று தயக்கமாகக் கூறினான்.
“என்னப்பா? சொல்லு”
“அம்மா… நான் ஒரு பொண்ணை விரும்புறேன். அந்தப் பொண்ணை கூட்டிக்கிட்டு நம்ம வீட்டுக்கு வர்றேன். எங்க கல்யாணத்துக்கு ஏற்பாடு பண்ணுங்கம்மா”
அதைக் கேட்ட அமிர்தவள்ளி ஒரு நொடி அமைதியாக இருந்தார்.
“என்னப்பா சொல்ற?”
“ஆமாம்மா. அந்தப் பொண்ணு வீட்டுலயும் சொல்லிட்டேன். அவங்க வீட்டுலயும் சம்மதம் சொல்லிட்டாங்க. நாங்க ரெண்டு பேரும் கல்யாணம் பண்ணிக்க முடிவு பண்ணிட்டோம்”
அமிர்தவள்ளியின் முகத்தில் மெதுவாகப் புன்னகை மலர்ந்தது.
“சரி பா… நீ சந்தோஷமா இருந்தா எனக்கு அதைவிட வேற என்ன வேணும்?”
“தேங்க்யூம்மா…”
சிறிது நேரம் அமைதியாக இருந்த வெற்றி,
“அம்மா… நான் வந்து ஒரு பத்து நாள்தான் இருப்பேன். அந்தப் பத்து நாளுக்குள்ளேயே எனக்கு கல்யாணம் நடந்து முடிஞ்சிடணும். அதுக்கப்புறம் நான் திரும்பி அமெரிக்கா போகணும். ஒரு ப்ராஜெக்ட் இருக்கு. அதனாலதான் எவ்வளவு சீக்கிரமா எல்லாத்தையும் ஃபிக்ஸ் பண்ணுங்கம்மா” என்றான்.
அதைக் கேட்ட அமிர்தவள்ளியின் மனம் முழுவதும் மகிழ்ச்சியால் நிறைந்தது.
இத்தனை நாட்களாகத் தன் மகனின் வாழ்க்கையை நினைத்து மனதுக்குள் வைத்திருந்த கவலைகளுக்கு, இன்று ஒரு முடிவு கிடைத்துவிட்டதுபோல் இருந்தது.
‘என் பையனுக்கு ஒரு நல்ல வாழ்க்கையை கடவுள் பார்த்துப் பார்த்து கொடுத்திருக்கிறார்…’ என்று நினைத்துக்கொண்ட அவருடைய கண்களில் சந்தோஷம் மின்னியது.
அந்த நேரத்தில் ஸ்ரீ மித்ரன், தனது காதலி கிருத்திகாவிடம் சில நிமிடங்கள் பேசிவிட்டு, அழைப்பைத் துண்டித்துவிட்டு வீட்டிற்குள் நுழைந்தான்.
அவன் முகத்தைப் பார்த்த அமிர்தவள்ளி,
“என்னடா? ஏதோ தீவிரமா ஃபோன்ல பேசிட்டு வந்த மாதிரி இருக்கு. ஏதாவது பிரச்சனையா?” என்று கேட்டார்.
ஸ்ரீ மித்ரன் சிறிது நேரம் அமைதியாக இருந்துவிட்டு,
“அம்மா… நான் உங்ககிட்ட ஒரு விஷயம் சொல்லணும்” என்றான்.
“என்னடா, சொல்லு?”
“என்னோட கூடப் படிச்ச கிருத்திகான்னு ஒரு பொண்ணை நான் லவ் பண்றேன்மா. ஆனா அவங்க வீட்டுல இப்பவே கல்யாணம் பண்ணச் சொல்லி அவளை ஃபோர்ஸ் பண்றாங்க. வேற ஒரு பையனைப் பார்த்திருக்காங்க. அதுவும் இன்னைக்கே அவளைப் பொண்ணு பார்க்க வர்றாங்களாம்.”
அதைக் கேட்ட அமிர்தவள்ளி அதிர்ச்சியுடன் அவனைப் பார்த்தார்.
“என்னடா சொல்ற?”
“ஆமாம்மா… எனக்கு என்ன பண்ணுறதுனே தெரியல. நீங்கதான் எப்படியாவது உதவி பண்ணணும். ப்ளீஸ்ம்மா… வாங்கம்மா. நம்ம இன்னைக்கே அவங்க வீட்டுக்குப் போயி, கிருத்திகாவைப் பொண்ணு கேட்கப் போகலாம்…” என்று கெஞ்சும் குரலில் கேட்டான்.
ஸ்ரீ மித்ரன் இப்படியொரு விஷயத்தைச் சொல்லுவான் என்று அமிர்தவள்ளி கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை.
அவருடைய மனதிற்குள் ஏற்கனவே ஒரு திட்டம் இருந்தது. முதலில் தன்னுடைய மூத்த மகன் வெற்றி ஆத்ரேயனுக்குத் திருமணம் செய்து வைக்க வேண்டும். அதற்குப் பிறகு கௌரிக்குத் திருமணம் செய்து வைக்கலாம் என்று நினைத்திருந்தார். ஸ்ரீ மித்ரனை மட்டும் கடைசியாகத் திருமணம் செய்து வைக்கலாம் என்று வைத்திருந்தார்.
அதுமட்டுமல்லாமல், தன் மனதின் ஒரு மூலையில் இன்னொரு எண்ணமும் இருந்தது. ஸ்ரீ மித்ரனுக்கு கனியைத் திருமணம் செய்து வைத்தால், தன்னுடைய கண் முன்னாடியே அவளை வைத்துக்கொள்ளலாம் என்ற எண்ணம் அவருக்குள் இருந்தது.
ஆனால், இப்போது ஸ்ரீ மித்ரன் இப்படியொரு விஷயத்தை வந்து சொல்லியதும், அமிர்தவள்ளியால் உடனடியாக எந்தப் பதிலும் சொல்ல முடியவில்லை.
அவர் அமைதியாக அவனைப் பார்த்துக்கொண்டிருந்தார்.
அங்கே நடந்துகொண்டிருந்த அனைத்தையும் கேட்டுக்கொண்டிருந்த கௌரியும் கனியும் ஒருவரையொருவர் அதிர்ச்சியுடன் பார்த்துக்கொண்டனர்.
அந்த நேரத்தில் சமையலறைப் பக்கத்திலிருந்து வெளியே வந்த கலைவாணியும், அங்கே நிலவிய அமைதியைப் பார்த்து அனைவரையும் குழப்பத்துடன் பார்த்தாள்.
“என்னாச்சு? எல்லாரும் இப்படியே இருக்கீங்க?” என்று கேட்டார்.
அப்போதுதான் மித்ரன் மீண்டும் தன் அம்மாவைப் பார்த்து,
“அம்மா… இவ்வளோ சொல்லுறேன். நீங்க எதுவுமே பேசாம இருக்கீங்க. அப்பாவை ஃபர்ஸ்ட் வரச் சொல்லி, விஷயத்தைச் சொல்லுங்கம்மா” என்றான்.
அமிர்தவள்ளி அவனைப் பார்த்தபடி அமைதியாக இருந்தார்.
அவனுடைய ஆசையை அவரால் மறுக்கவும் முடியவில்லை. பையன் இத்தனை வருடங்களாக மனதில் வைத்திருந்த காதலை இப்போது வந்து சொல்லியிருக்கிறான். அதுவும் கிருத்திகாவைத் திருமணம் செய்துகொள்ள வேண்டுமென்று பிடிவாதமாக நிற்கிறான்.
‘என்ன இருந்தாலும், பையன் ஆசைப்பட்டுட்டான்…’ என்று நினைத்தவர், வேறு வழியில்லாமல் அந்த விஷயத்தை ஏற்றுக்கொள்ள வேண்டிய சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டார்.
“சரி டா… உங்க அப்பாவை வரச் சொல்றேன். அவர்கிட்டயும் பேசிக்கலாம்” என்று உணர்ச்சியற்ற குரலில் கூறினார்.
அதற்குப் பிறகு திருச்செல்வத்திடம் விஷயத்தைச் சொல்ல, பெருமூச்சை விட்டவர், மித்ரனின் விருப்பத்தை அறிந்து அவனுக்காகப் பெண் கேட்கச் செல்ல சம்மதித்தார்.
***** அத்தியாயம் பிடிச்சு இருந்தா உங்கள் விருப்பங்களையும் கருத்துக்களையும் கொடுங்க நன்றி உறவுகளே❤️
அத்தியாயம் நான்கு வரைக்கு படிச்சாதான் கதை புரியும். அதுக்கு அப்பறம் நல்லா விறுவிறுப்பா இருக்கும்





