arrow_back
கொண்டவன் கொடுத்தானடி அத்தியாயம் 1

அத்தியாயம் 1

visibility 30
star படைப்பை ரேட் செய்யுங்கள்
பகிர்

கொண்டவன் கொடுத்தானடி – 1

கொட்டாம்பட்டி 1974!..

மதுரை மாவட்டத்தில் உள்ள கிராமம் கொட்டாம்பட்டி, அதனைச் சுற்றி இருபதுக்கும் மேற்பட்ட சிறு கிராமங்கள் உள்ளன.மதுரை மண் வாசனை சுண்டி இழுக்க, அதனை நாசிக்குள் நிரப்பிக் கொண்டே, இதோ யார் அந்தக் கொண்டவன் அவன் என்னதான் கொடுத்தான் என்பதைப் பார்ப்போம் வாருங்கள்.

கார்மேகம் இப்பவோ, அப்பவோ என்று கொட்டி தீர்க்க தருணம் பார்த்துக் கொண்டிருந்தது போலும்.குளிர் காற்று மேனியில் மொத அதனை உள்வாங்கி கொண்டே, திண்ணையில் அமர்ந்து வானத்தைப் பார்த்த முனியசாமி, மழை சிறு தூரலாக தொடங்கவும் மனைவியை அழைத்தார்.

“சந்தா!” அவரது அழைப்புக்குப் பதில் வராமல் போக, மீண்டும் குரலை கொஞ்சம் உயர்த்தி அழைத்து வைத்தார் முனியசாமி.

“அடியேய்! சந்தா!”

“இதோ வாரேன் மாமா! இருக” அவருக்கு மேல் குரல் கொடுத்தாள் அவரது மனைவி, அதற்குள் சட சடவெனத் தூறல் போட தொடங்கி விட்டது.

சேலையில் கைகளை தொடைத்து கொண்டே வாசலுக்கு வந்தவள் “என்னங்க மாமா? மழை புடிக்கங்காட்டி மாட்டை இழுத்து கட்டிப்புட்டு வாரேன்” என்றவள் அவருக்கு எதிரில் வந்து அமர்ந்தாள்.

“மழை அடிக்குதுன்னுதேன் வர சொன்னேன் என்ன கூப்பிட வேண்டியது தானே”

“இப்பத்தேன் அசந்து குந்தி இருக்கீக அதேன் நானே மாட்டை கட்ட போனேன்”

“செத்த பேசனும்”

“என்ன சங்கதி சொல்லுக?”

“கந்தசாமி கிட்ட வாடிப்பட்டி பொண்ணைப் பத்தி பேசுனியா? பொண்ணு வீட்டுக்காரய்ங்க நம்பச் சொக்கப்பனை கேட்டு கிட்டே கிடக்காய்ங்களாம்.ஆச்சு, இல்லனு ரெண்டுல, ஒன்னு சொன்னாக்கா அவீங்க பாட்டைப் பார்ப்பாய்ங்க”

“எங்கன! அவன் பேச தோது கொடுக்குறான் விடியலுக்கு போயி பேசலாம்னு பார்த்தா மதுரை வரைக்கும் ஒரு சோலியா போயிருக்கான் போல”

“இராவுக்கு வந்த உடனே பேசிப்புடுவோம் சந்தா விடியலுக்குச் சொக்கப்பனை பார்த்து செய்தி சொல்லிப்புடனும்”

“சரித்தேன்! என்றவள் அப்போது தான் யோசனை வந்தது போல, ஏன் மாமா விவரம் சொல்லுக? பொண்ணுக்கு ஆயி, அப்பன் அவீங்க சோலி, அக்கா, தம்பி யாரும் இருக்காய்ங்களா?” மனைவியின் கேள்வியில் கொஞ்சமாகத் திடுக்கிட்டு.

“ஏய்! சந்தா! என்னபுள்ள விளையாட்டு விளையாண்டு கிட்டு கிடக்க. உம்ம கிட்ட அன்னைக்கு அத்தினி நேரம் பொண்ணு குடும்பத்தைப் பத்தித்தேன் சொல்லிக்கிட்டு கிடந்தேன்.நீ சரின்னு சொல்லவுந்தேன் மவேன் கிட்ட பேச சொன்னேன்” என்றதும் திருத் திருவென முழித்த சந்தா கணவனைச் சமாளிக்கும் பொருட்டு.

“அது! அன்னைக்குப் பேச்சி புள்ள பத்தி எண்ணி கிட்டு கிடந்தானா அதேன் பாதிப் பேச்சு பதியல” என்றதும் அமைதியாகி போன முனியசாமி முகத்தைத் திருப்பிக் கொண்டார்.கணவனது அமைதியை கண்டு தன்னையே நொந்து கொண்ட சந்தா.

“மனிச்சுக்கிடுக மாமா!” என்றதும் சில நொடிகள் அமைதியாக இருந்த முனியசாமி.

“சந்தா நடப்பை புரிஞ்சு, அதுக்கு தக்கன மனசை மாத்திகிடு சொல்லிட்டேன். உம்ம அண்ணங்காரேன் வீராப்பு காட்டி வச்சுத்தேன் அந்தப் புள்ளைய கந்தசாமி வேணான்னு சொல்லிப்புட்டான்.நம்ப எதுவும் செய்யல” என்றதும் லேசாகக் கண்கள் கலங்கியது சந்தாவுக்கு அதனைக் கணவனுக்குக் காட்டாமல் தலையைக் குனிந்து கொண்டாள்.

விரலால் தரையைத் தேய்த்து கொண்டே, “ஆருக்கு எங்கன முடிச்சுனு அந்தக் கருப்பந்தேன் முடிவு செய்வான்.என்ன புள்ளைங்க மனசுல ஆசைய வளர்த்து புட்டேன்.நானும் ஆசையா கிடந்தேன்” என்ற மனைவியைக் கனிவாகப் பார்த்த முனியசாமி.

“சந்தா நீ மூக்கை கசக்கி நிக்கக் கூடாதுன்னுதேன் நான் இந்தக் கண்ணாலத்துக்கே சரின்னு சொன்னேன். இல்லன்னா உம்ம அண்ணன் குணத்துக்கு எனக்கு அங்கன பொண்ணு எடுக்கவே மனசு ஒப்பு கொடுக்கல” என்ற கணவனைப் பாவமாகப் பார்த்து வைத்தாள் சந்தா.அவளது கலக்கம் கண்டு பொறுமையாக பேசி வைத்தார்.

“சந்தா விடு கந்தசாமிக்கு மட்டும் ஆசை இல்லையா என்ன? உம்ம அண்ணன் நாக்கை அடக்கி கிடந்திருந்த நானே சமரசம் பண்ணி கண்ணாலத்தை முடிச்சிருப்பேன்.உம்ம அண்ணங்காரேன் பேசி வச்ச ஆக்கத்துக்கு நம்ம மவேன் அவனை உசுரோட விட்டதே பெருசு”

முனியசாமி சொல்வதும் சரிதான் சந்தாவுக்கு ஒரே அண்ணன் பாண்டியன்.அவர் வாடிபட்டியில் தான் இருக்கிறார்.அவருக்கு இரு மகன்கள் ஒரு மகள் அவள் தான் பேச்சி.அத்தை மகள், மாமன் மகள்களை மனம் முடிப்பதெல்லாம் அங்கு வெகு இயல்பு என்பதால்.

கந்தசாமிக்கு, பேச்சியைப் பேசி முடித்தனர்.தாம்பூலம் மாற்றும் நேரத்தில் வந்த சிறு பேச்சுக்கள் எல்லை மீறி கை கலப்பில் முடிந்தது.அங்காளி, பங்காளி சண்டை, மாமன் மச்சான் கேலி இவையெல்லாம் சகஜம் என்றாலும்.கந்தசாமியை வம்பு செய்வதற்கே பாண்டியனின் இளைய மகன் பேசி வைக்க.அது பெரும் பகையில் முடிந்தது.

ஏனோ பாண்டியனின் இளைய மகனுக்குக் கந்தசாமியை கண்டாலே ஆகாது. அவன் மேல் காரணம், காரியமற்ற வெறுப்பு என்று கூடச் சொல்லலாம்.அதனாலே எங்குச் சென்றாலும் கந்தசாமியை வம்பு செய்து வைப்பான்.இன்று தனது வீட்டுக்கே அவன் மாப்பிள்ளையாக வர போவதை எண்ணி குமைந்தவன், சந்தர்ப்பம் பார்த்து ஒரண்டை இழுத்து விட்டான்.

நடந்ததை எண்ணி இனி என்ன பயன் பெருமூச்சுடன் கணவனை பார்த்த சந்தா, “சரி போனது போகட்டும் மாமா அடுத்து என்ன?” முயன்று அதில் இருந்து வெளி வர பார்த்தாள் சந்தா.

“பொண்ணுக்கு அக்காளுங்க நாலு, தம்பி ஒன்னு” என்றதும் கண்களை பெரிதாக விரித்த சந்தா நெஞ்சில் கையை வைத்து அதிர்ந்தவள்.

“என்ன மாமா சொல்லுதீக? ஆத்தி கண்டிப்பா இந்த புள்ளைய நம்ப மவேன் கட்ட மாட்டான்” கந்தசாமி காரர் பேர்விழி கருமி என்று கூட சொல்லலாம். தோட்டம், காடு, மேடு என்று சொத்துக்கள் இருந்தாலும் எண்ணி, எண்ணி காசை சேர்க்கும் ரகம் என்பதால் இத்தனை பெரிய குடும்பத்தை அவன் ஏற்க வாய்ப்பே இல்லை என்று எண்ணினாள் சந்தா.

“சந்தா! நானும் சொக்கப்பன் பொண்ணு வூட்டை பத்தி சொல்லும் போது ‘என்னடா சொக்கா இம்புட்டு உறுப்படி இருக்குனு அலறி வச்சேன்’ , ஆனா அவன் சொன்ன செய்தித்தேன் என்னை யோசிக்க வச்சுது” என்றதும் என்ன என்பது போல் பார்த்தவளை.

“பொண்ணு நல்ல கருத்து போல சந்தா அப்பன், ஆத்தா கூட உழைச்சு அக்காளுங்களை கரையேத்தி விட்டுருக்கு. சின்ன பிள்ளையா கிடந்தாலும் அதுதேன் குடும்பம் பார்த்து பங்குடு பண்ணுது போல, பொண்ணு கருத்துன்னு சொல்லி வச்சான் அதேன் பேசி பார்க்கலாம்னு சொன்னேன்” என்றதும் சில நொடிகள் அமைதியாக இருந்த சந்தா.

“மாமா?”

“சொல்லு சந்தா!”

“அப்போ பொண்ணு பத்தின எந்தச் செய்தியும் அய்யாவு கிட்ட சொல்லாதீக. நேருல பார்த்துப்புட்டு அவனே முடிவு சொல்லட்டும்.தொடக்கத்துல அம்புட்டு விவரத்தையும் சொன்னாக்கா வேண்டாம்னு சொல்லிப்புடுவான்” மகனை பற்றி அறிந்தவளாகச் சந்தா சொல்ல முனியசாமியும் கேட்டுக் கொண்டார்.

“சரித்தேன் இராவுக்குச் சங்கதிய காதுல போட்டு வை என்ன சொல்லுதான்னு பார்ப்போம்”

“ஹ்ம்ம்!” அதன் பின் கணவன் மனைவி இருவரும் பொதுவாகப் பேசி கொண்டிருந்தனர்.

அங்கு வாடிபட்டியில்!..

“இந்தாருடி இப்போ என்னத்துக்கு ஒப்பாரி வச்சுக்கிட்டுக் கிடக்க” கந்தசாமியுடன் திருமணம் நின்றதை ஏற்றுக் கொள்ள முடியாமல். பேச்சி நித்தமும் அழுது கரைய மகளைக் கடிந்து கொண்டாள் ஆனந்தி.

“மாமாக்கு பொண்ணு பார்க்க போறாய்ங்க தெரியுமா உனக்கு? பொண்ணு இந்த ஊருதேன்”

“அதுக்கு இப்போ என்னத்த செய்யச் சொல்ற?” மகளின் தவிப்புப் புரிந்தாலும் இனி கந்தசாமி தனது மகளைக் கட்டுவது சாத்தியமே இல்லை என்பதை அறிந்த ஆனந்தி, மகளுக்கு எந்த வித பிடிப்பையும் கொடுக்காமல் கடுமை காட்டினாள்.

“என்னம்மா இப்படிப் பேசி வைக்கிற எனக்கு மாமா வேணும்”

“அதுக்கு வாய்ப்பே இல்லை”

“அப்போ நான் செத்துதேன் போவேன்”

“நல்லா செத்து போ சாமி, என்ன காலத்துக்கும் உம்ம எண்ணி கலக்கம் கண்டாலும் தூக்கி வச்சுக் காரியம் பண்ணிப்புட்டு போய்கிட்டே இருப்பேன்” என்ற அன்னையை அதிர்ந்து பார்த்து வைத்தாள் பேச்சி.

“என்ன பகிர்ன்னு கிடக்கா?”

“ஏன்ம்மா! எம்ம மேல உமக்குப் பாசமே இல்லை போ!”

“கூறு கெட்டவளே பாசம் இருக்கப் போயித்தேன் பேசிகிட்டு கிடக்கேன், உம்ம அண்ணங்காரனுக்கு உன் மாமனை கண்டாலே ஆகாது அவனே இங்கன மாப்பிள்ளையா வந்தா சும்மா விடுவானா? அதேன் சமயம் பார்த்து ஆட்டையைக் கலைச்சுப்புட்டான்” என்றதும் அமைதியாகி விட்டாள் தவறு முழுவதும் தங்கள் மேல் என்பதால் தான் இன்று வரை கந்தசாமியை பார்த்து பேச கூட பேச்சி முயற்சிக்க வில்லை.

“மா!”

“மனசை கட்டி வை பேச்சி, நடப்புக்கு வா! நீ எதாவது பண்ண போயி பகை பெரிசாகித்தேன் நிற்கும்.உங்க அப்பனும், அண்ணனும் பேசுன பேச்சுக்கு கந்தசாமி பச்சை தண்ணி கூட நம்ப வூட்டுல குடிக்க மாட்டான்.அப்படியிருக்க நீ வம்பா அவனை கண்ணாலம் பண்ண எண்ணி வைக்கிறது எந்த வகைனு எமக்கு விளங்கள” தண்ணியே தொடாதவன் உன்னுடன் வாழ்ந்து விடுவானா என்ன? இப்படி ஒரு வாழ்க்கை தேவையா உனக்கு? என்பதை ஆனந்தி சுட்டி காட்ட கண்ணில் நீர் வழிய அமர்ந்திருந்தாள் பேச்சி.

 என்ன அறிவுரை சொன்னாலும், நடப்பு புரிந்தாலும் பல நாள் கனவு சுக்கு நூறாக நொறுங்கி நிற்க, அதனை ஏற்க மறுத்து நின்றது அரிவை மனம்.

இரவு வேலையை முடித்துக் கொண்டு வீட்டுக்கு வந்த கந்தசாமி, குளித்து முடித்து உணவுக்கு அமர.அவனுடன் முனியசாமியும் அமர்ந்து கொண்டார்.சாந்த இருவருக்கும் பரிமாறிக் கொண்டே பேச்சை தொடங்கினாள்.

“அய்யாவு!” மகனை செல்லமாக அழைக்க. அவரை ஏறிட்டு பார்த்தான் கந்தசாமி. கருப்பு நிறத்தை உருக்கி ஊற்றிய நிறம் என்றாலும் முகத்தில் அத்தனை கலை, ஓங்கு தாங்கான உடல் வாகு, அதற்கேற்ற அகலம் என்று பெரிதாக இருந்தான்.

“ஹ்ம்ம்!”

“சொக்கப்பன் அண்ணே எதோ பொண்ணு சொல்லுச்சாம் உமக்கு சரின்னா ஒரு எட்டு பார்த்துப்புட்டு வரலாம்” ஆழம் பார்க்க வேண்டி சந்தா சங்கதியை சொல்லிவிட்டு அவனது முகம் பார்க்க. அதில் எந்த வித உணர்வும் இல்லை மகனின் மனதில் என்ன இருக்கு என்பதைக் கணிக்க முடியவில்லை.

அவன் அமைதியாக உண்ண, “என்ன சாமி?”

“ஐயா!” தாயின் கேள்விக்கு பதில் சொல்லாமல் தந்தையை அழைத்தான் கந்தசாமி

“சொல்லு அய்யாவு?”

“பொண்ணு எந்த ஊரு?”

“வாடிப்பட்டி” என்றதும் ஓர், இரு நிமிடம் தாமதித்தவன் மீண்டும் தனது உணவை தொடர்ந்து கொண்டே.

“விடியலுக்கே சொக்கப்பன் மாமாக்கு செய்தி சொல்லிடுக, பொழுது போறதுக்குள்ள பொண்ணை போயி பார்த்துப்புட்டு வருவோம்” என்றவன் தனது உணவை முடித்துக் கொண்டு எழுந்து செல்ல.

“என்னங்க?”

“என்ன சந்தா?”

“படக்குனு வரேன்னு சொல்லிப்புட்டேன் “ என்ன தான் மகனுக்கு வெளியில் பெண் தேடினாலும் இன்னும் பேச்சியை சந்தா எண்ணி வைத்து கொண்டு தான் இருந்தாள். பிறந்தகம் அல்லவா அத்தனை எளிதாக மனம் சமாதானம் ஆக மறுத்தது.

“வேற என்னத்த நீ எதிர்பார்த்த?” மனைவியைக் கூர்மையாகப் பார்த்துவாறு முனியசாமி கேட்க.கப்பெனத் தனது வாய்யை மூடி கொண்டாள் சந்தா. என்ன முயன்றும் சந்தாவுக்கு மகனின் ஆசையை, தனது பிறந்தகத்தை விட்டு கொடுக்க முடியவில்லை போலும். அதனை நன்றாக அறிந்து கொண்ட முனியசாமி.

“இந்தாரு சந்தா உமக்கு மனசு இரண்டு பட்டு போயி கிடக்கு, தேவையில்லாத எண்ணத்தைத் தள்ளி வச்சுப்புட்டு. நம்ப மவனை மட்டும் எண்ணி வை.நீ நோக பெத்தாலும், தவம் கிடந்து நின்னது நாந்தேன் ஒத்த புள்ள நினைவு இருக்கட்டும்” கொஞ்சம் கடுமையாக முனியசாமி சொல்ல சரி என்பது போல் தலையை ஆட்டி வைத்தாள் சந்தா.

முனியசாமி சொல்வதும் சரிதான் திருமணமாகி சில ஆண்டுகள் சென்று பிறந்தவன்.அதுவும் குழந்தை இல்லை என்று மறுமணம் வரை முனியசாமியின் தாய் சென்று விட,சந்தாவை விடவே விட முடியாது என்று பிடிவாதமாக இருந்தவர்.மகன், மனைவி மீது உயிரையே வைத்துள்ளார்.அதனால் தான் இன்று வரை தனது தாய்யை பிரிந்திருக்கிறார்.

முனியசாமியின் தாய் மரகதம்மாள், தந்தை பச்சையப்பன் இருவரும் தற்போது முனியசாமிக்கு எதிரில் உள்ள பூர்வீக வீட்டில் தான் வசித்து வருகிறார்கள்.எதையும் எண்ணி வைத்து மனதை கெடுத்து கொள்ள சந்தா விரும்பவில்லை கணவன் சொல்வது சரிதான் என்ற நிலையில் மௌனமாக ஏற்றுக் கொண்டாள். அவர்கள் இருவருக்குமே மகனை விட எதுவும் அத்தனை முக்கியம் இல்லை அல்லவா.